அசலும்…நகலும்…!
மயில் கழுத்து நிறத்தில் உடல் எங்கும் சரிகை பூப்போட்டு தகதகவென கண்ணைப் பறித்தது பட்டுப் புடவை…
அரக்கு நிற பார்டர்..அதில் சரிகை வேலைப்பாட்டில் தோகை விரித்தாடும் மயில்கள்..!
தலைப்பில் இரண்டு மயில்கள், ஜோடியாக ஒன்றையொன்று பார்த்தபடி…!
“ஏனுங்க..? வச்ச கண்ணு வாங்காம எம்புட்டு நேரம் பொடவைய பாத்துக்கிட்டே இருப்பீக….?
நெசமாலுமே சொல்லுதேன்.. இம்புட்டு வருச வாழ்க்கையில இப்படி ஒரு புடவைய நானு எங்கண்ணால பாத்ததேயில்ல..
ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு வீராப்பு ஆவாதுங்க…ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆயிருந்திச்சுனா…இந்த செங்கமலம் உசிரோட நாண்டுகிட்டு செத்திருப்பேன்…
“செங்கமலம்..வாயக் கழுவு..நல்ல நாளும் அதுவுமா..!இது வீராப்பு இல்ல.. வைராக்கியம்..!”
பூசையில் வைத்து எடுத்த பட்டுப்புடவையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஆதிமூலம்….
செங்கமலம் கூறியது உண்மைதான்…உயிரைக்குடுத்து அல்லவா நெய்திருக்கிறார் இந்தப் புடவையை…
ஒவ்வொரு இழையிலும் அவரது நரம்பும் பின்னிப் பிணைந்திருக்கிறது…
தறி ஓடும்போது அவரது இதயமும் சேர்ந்து லப்டப்பென்று அடித்துக் கொண்டது அவர் காதுக்கு மட்டுமே கேட்டது…
காதுக்குள் அஞ்சலியின் குரல்..!
மிகவும் இரகசியமாக..!
“ஆதி…!சொன்னத செஞ்சுபுட்டீங்களே…! உங்கள கட்டிக்கபோற நானு நிசமாலுமே பாக்கியசாலி….“
கண்களைத் துடைத்துக் கொண்டார் ஆதிமூலம்…
“ஏனுங்க..என்னிய சொல்லிப் போட்டு நீங்க அழுவுறீங்க….!
உங்களுக்கு குடுத்த வாக்க மீறக்கூடாதுன்னிட்டு வாயப் பொத்திகிட்டு கெடந்தேன்…இப்பவாச்சும் சொல்லுங்க….!
இந்த புடவைக்கு ஏன் இத்தன மவுசு.! மருவாதை..!
எம்புட்டோ புடவைங்கள உங்க கையால நெஞ்சு பாத்தவ..
ஆனா ஒத்த ஆளா, பத்து நாளா பாத்து பாத்து நெஞ்சிருக்கீங்கன்னா இதுக்கு பின்னாடி பெரிய கதையே இருக்கும்..!
இப்போ நீங்க சொல்லியே தீரோணம்…சொல்லுங்க சாமி…!
செங்கமலம் அவரது காய்த்து, தழும்பேறிய கைகளைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு கண்ணில் ஒற்றிக் கொண்டாள்..!
ஆதிமூலம் கண்களை மூடியபடி தூணில் சாய்ந்து கொண்டார்..
***
வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம்..
கிணற்றடியில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த செங்கமலம் போட்டது போட்டபடி எழுந்து முந்தானையில் கையைத் துடைத்தபடி வாசலில் எட்டிப் பார்த்தாள்.
காரின் கதவை டிரைவர் திறந்துவிட ஒரு குடும்பமே அதிலிருந்து இறங்கியது..!
“ஏம்ப்பா …பெருமாள்..இந்த வீடு தானே! நிச்சியமா தெரியுமில்ல.!”
“சார்…கண்டிஷனா தெரியும்! வழியில எத்தினி வாட்டி விசாரிச்சிட்டோம்…!
பட்டு ஆதிமூலம் ஐயா வீடு எதுன்னு கேட்டா கொழந்த கூட கையக்காட்டுதே !
ஒரு காலத்துல காஞ்சீபுரத்துல கொடிகட்டி பறந்தவருதானுங்களே..!”
“சரி..எல்லா பொருளையும் மறக்காம எடுத்துக்குங்க…!
சங்கீதா..! நீ மொதல்ல தட்ட எடுத்துட்டு போம்மா…!”
செங்கமலத்துக்கு ஒன்றுமே புரியவில்லை..இந்த ஊருக்கு காரில் வருபவர்களே அபூர்வம்..அதுவும் தங்கள் வீட்டு முன்னால்….? ஏதாவது விலாசம் தப்பி..?”
“ஏனுங்க..இங்கிட்டு கொஞ்சம் வரீகளா..?”
தறியில் ஆதிமூலம் உட்கார்ந்து விட்டால் பூகம்பமே வந்தாலும் தெரியாது..
ஒரு நாளும் அவரை செங்கமலம் தொந்தரவு செய்ததேயில்லை..
“என்ன பிள்ள..? எதுக்கு இந்த கூப்பாடு…?”
“நம்ம வீட்டு வாசல்ல பிளசர் வந்து நிக்குது…தட்டத்த தூக்கிட்டு …பெரிய மனுசங்களாட்டம் தெரியுது..”
தறியை நிறுத்தி இழுத்து கட்டிவிட்டு வாசலுக்கு வந்தார்…
வந்தவர்களில் வயதில் மூத்தவர் பட்டு வேட்டியும் பட்டு அங்கவஸ்த்திரமும் போட்டுக்கொண்டு கொஞ்சம் கெத்தாகவே பெரிய குரலில்..
“இது பட்டு ஆதிமூலம் ஐயா வீடு தானே…?”
“வாங்க ஐயா..! ஆதிமூலம் நான்தான்….உள்ளார வாங்க..!”
“செங்கமலம் அந்த பாய எடுத்துப் போடு…!
அய்யா..நீங்க இந்த நாற்காலியில உக்காருங்க…
நீங்கெல்லாம் யாரு..? இம்புட்டு தூரம் வண்டியோட்டிகிட்டு எனனியத்தேடி வந்திருக்கீங்கன்னா… விசயம் இல்லாம இருக்காதுங்களே….!
“சொல்றேன்…சங்கீதா..! அந்த தட்ட எடும்மா…!
எம்பேரு சுந்தரேசன்…தஞ்சாவூர்ல வக்கீலா இருக்கேன்…
இது பெரிய பையன் நவநீதகிருஷ்ணன்.. டாக்டரா இருக்கான்…மருமக சங்கீதா..!
எனக்கு ஒரே பொண்ணு அனுராதா….இந்த ஐப்பசியில முகூர்த்தம்..!
வீட்ல அவளுக்கு கொஞ்சம் மேலுக்கு சொகமில்ல…! அதான் வரமுடியல…!
பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் செஞ்சதும் அவ சொன்ன மொத வார்த்தை என்ன தெரியுமா..?
கல்யாணப்புடவைய ஆதிமூலம் அய்யாதான் நெய்யணும்….புடவ கலரு, டிசைன் எல்லாமே அவரு விருப்பத்துக்கு விட்டிடுங்க..!
இது ஒண்ணுதான் கல்யாணத்துக்கு நான் போடுற கண்டிஷன். “
இவ்வளவு நாள் நாங்க வாழ்ந்த வாழ்க்கையில அவ விரும்பி கேட்ட ஒரே விசயம்.. ஒரு வேளை இதுவே அவளோட கடைசி ஆசையாக்கூட இருக்கலாம்….
இப்போ எப்பவோன்னு கெடக்கா….!அவ விருப்பத்த நெறவேத்தாட்டி நானு மனுசனே இல்ல….!
இந்தாங்க .. !அட்வான்சு பணம் அம்பதாயிரம்…!
“அம்மா..சேந்து நில்லுங்க…இந்த கல்யாணப் பத்திரிகைய வாங்கிக்குங்க.! எவ்வளவு டைம் என்ன வேணாலும் எடுத்துக்குங்க…பணத்த பத்தின கவலையே வேண்டாம்..
வேல முடிஞ்சதும் ஒரு போனப் போடுங்க…நானே வந்து வாங்கிக்கிறேன்…
அம்மா..! குடிக்க மோரு மட்டும் குடுங்க..அவசரமா ஒரு இடம் போகவேண்டியிருக்குது….!”
மூச்சு விடாமல் பேசி விட்டு கிளம்பிவிட்டார் சுந்தரேசன்..
ஆதிமூலம் நடந்தது கனவா அல்லது நிஜமா என்று புரியாமல் பிரமை பிடித்தது போல் அந்த தட்டையே வெறித்து பார்த்தபடி தூணில் சாய்ந்து கொண்டார்…
***
ஒரு மாதமாகிறது ஆதிமூலம் இப்படி காலை நீட்டி விச்ராந்தியாய் கட்டிலில் படுத்து…
செங்கமலம் அவரது கால்களை பிடித்து விட்டுக்கொண்டே கேட்கிறாள்..
“மாமா..காலு ரொம்ப வலிக்குதா..? வாயத் தொறந்து எதுவும் சொல்லவும் தெரியாது…இல்ல…சொல்லக்கூடாதுன்னு இருக்கீகளா..!”
“செங்கமலம்….! மனசுபாரம் முழுசும் எறங்கி காலுக்கு வந்திருச்சி…! அம்புட்டுதான்! நீ இருக்கையில எனக்கென்ன வெசனம்…?
நமக்கு கலியாணம் முடிச்சு எத்தினி வருசம் இருக்கும்?
சரியா சொல்லு பாப்பம்…!”
“என்ன ஒரு இருவத்தஞ்சு….?”
“உனக்கு இருவது…எனக்கு முப்பது…!என்ன கணக்கு சரியா…?”
“ம்ம்ம்…”
“எல்லாந்தெரிஞ்சும் என்னத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நின்னவதானே! “
***
கல்யாணப் பத்திரிகையைப் பிரிக்கும் போதே ஆதிமூலத்தின் கைகள் நடுங்கின…
“ஏங்க…! காரப்போட்டுகிட்டு தஞ்சாவூர்லேயிருந்து வந்ததிருக்காகளே…
காஞ்சிவரத்துல இல்லாத கடையா..? பட்டா…? திருபுவனத்துல….உங்களைத் தேடி…!
அதுவும் உங்க கையால நெஞ்சு குடுக்கணும்னு அந்தம்மா கண்டிஷன் போட்டு, இம்புட்டு அட்வான்சு வேற குடுத்திருக்குன்னா…!
உங்களப்பத்தி நல்லா தெரிஞ்சவங்களாத்தான் இருக்கணும்னு என் உள்மனசு சொல்லுது…”
ஆதிமூலத்தின் கண்கள் பத்திரிகையை மேய்ந்து ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றது..
இப்படி கூட நடக்குமா..? அவள்தான்…! அவளேதான்…!
“திருமதி அஞ்சலி.. சுந்தரேசன் அவர்களின் குமாரத்தியான சௌபாக்கியவதி அனுராதாவை…..”
அவளேதான்..!
அவள்..! அஞ்சலி…அவருடைய அஞ்சலி…!
மயில் கழுத்து பட்டுப்புடவை…!’
ஆதிமூலத்துக்கு தலைசுற்றுவது போலிருந்தது…!
“மாமா….என்ன செய்யுது…?”
“குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டா செங்கமலம்….!”
ஒரு வாரம் யாரோடும் பேசவில்லை…செங்கமலம் எவ்வளவு வற்புறுத்தியும் ஒரு வார்த்தை… ம்ஹூம்…’
அவரே ஒருநாள் மௌனத்தைக் கலைத்தார்…
“செங்கமலம்… நீ சொல்லுத மாதிரி எத்தனையோ புடவைங்கள நெஞ்ச கையி…பணத்துக்காக மயங்கி சொல்லுத வார்த்தையில்ல…!
நானு தவமா தவமிருந்து கெடச்ச பொதையலு!
பத்து நாளாகும் இத முடிக்க..
என்னிய நிம்மதியா விட்று..!
வேல முடிஞ்சதும் உனக்கு எல்லாம் வெவரமா சொல்லத்தானே போறேன்…!”
****
பதினைந்து வயது ஆதிமூலம்…
மதுரையில் உள்ள ஆண்கள் தனியார் பள்ளியில் பத்தாவது வகுப்பு மாணவன்..
துருதுருவென்ற முகம். மாநிறத்துக்கும் கொஞ்சம் கீழே..ஒல்லியான தேகம்…!
நடந்தே தான் பள்ளிக்கு வருவான்..அதிகமாக யாருடனும் பேசமாட்டான்..
அவனது பள்ளிக்கு நேர் எதிரில் இருந்தது அந்த பெண்கள் பள்ளி..
அஞ்சலி….! பள்ளிக்கு சைக்கிளில் வரும் ஒரே மாணவி..
வசதி படைத்தவள் என்று பார்த்தும் தெரியும் பளபளப்பு.. கைக்கடிகாரம்…ஆனால் அமைதி எனும் சொல்லுக்கு மறுபெயர்..
இருவரையும் இணைத்தது இந்த குணமாயிருக்குமோ…?
இருவர் பார்வையும் அடிக்கடி மோதும்..ஒரே கணம்… சிக்கிக் கொண்டு மீளமுடியாமல் தவிக்கும்..
இரண்டு மூன்று முறை தெருமுனையில் சைக்கிள் தானாகவே நின்றுவிடும்.. எதிரில் ஆதி….!
கண்களால் மட்டுமே வளர்ந்த காதலுக்கு இவ்வளவு பெரிய சக்தி இருக்குமென்று இருவருமே நினைக்கவில்லை..
ஆதி இறுதி ஆண்டு…பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது..
“அஞ்சலி…நிச்சியமா உங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க..
உங்க உயரத்த எட்ட இந்த ஜென்மத்துல என்னால முடியாது….!
உன்னத் தவிர வேற பொண்ணு என் வாழ்க்கையில கெடையாது..சொல்லு..அஞ்சலி…நாம என்ன செய்யலாம்…?”
“ஆதி..எங்கப்பா பணவெறி பிடிச்சவரு இல்லை…ஆனா படிப்பு முக்கியம்னு நெனைக்கிறவரு…
நல்லா படிச்ச மாப்பிளையா இருந்தா நிச்சயம் சரின்னு சொல்வாரு..
நல்லா படி… இன்னும் மூணு வருஷத்துல வந்து பொண்ணு கேளு…. அப்புறம் என்ன நடக்குதுன்னு பாக்கலாம்..!”
பணத்தை விட சாதி அல்லவா காதலுக்கு முதல் எதிரி..ஆதி எப்படி அதை மறந்தான்….?
மூன்று வருடத்தில் மதுரை பாலிடெக்னிக்கில் டிப்ளோமா இன் டெக்ஸ்டைல்ஸ் டிசைன் முடித்தான்..
அஞ்சலி மதுரையில் ஒரு பெண்கள் கல்லூரியில் பி.ஏ..பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்தாள்..
“அஞ்சலி..இதுக்குமேல எனக்கு பொறுமையில்ல..பொண்ணு கேக்க வரப்போறோம்…
உனக்கு பிடிச்ச கலர் சொல்லு..!”
“எதுக்கு ஆதி….?”
“எதுக்கா…? முதல் தடவையா உனக்கு என் கையால பட்டுப் புடவ வாங்கப்போறேன். நானே டிசைன் பண்ணப்போறேன்…!”
“ஆதி.. நான் குடுத்துவச்சவ..மயில் கழுத்து கலர்..பார்டர்ல இரண்டு ஜோடி மயில்.. நீயும் நானும்..!
கனவில் வந்து போன புடவை நிசமாகி ஆதியின் கைகளில்..
மார்போடு அணைத்துக் கொண்டான்..
நல்ல நாள் பார்த்து தட்டில் புடவை தகதகக்க சீர் வரிசையுடன் அஞ்சலி வீட்டுக் கதவைத் தட்டினான் ஆதி.. பெற்றோருடன்…
*****************************
உள்ளே நுழைந்த ஆதி இத்தனை பணக்காரத்தனத்தை எதிர்பார்க்கவில்லை..
அவர்களது மொத்த வீட்டையும் உள்வாங்கும் வரவேற்பரை..
வசதி படைத்தவர்கள் வீட்டிற்கே உரிய அழுத்தமான அமைதி.
வாசல் கேட்டு திறக்கும் சத்தம் கேட்டதுமே மொத்தக் குடும்பமும் வாசலில் வந்து”வாங்க..!வாங்க! என்று அழைக்கும் இரைச்சல் கேட்டே பழகிய காது..
இந்த நிசப்தம் அசௌகரியம்..இந்த அமைதி பயமுறுத்தியது..
திரைப்படங்களில் வருவது போல் ஒரு பணிப்பெண் ஏதோ ஒரு மூலையிலிருந்து வந்தாள்..
“யாருங்க வேணும்….?”
“சோமசுந்தரம் ஐயாவ பாக்கணும்….”
“இருங்க…!”
பத்து நிமிட காத்திருப்புக்குப் பின் ஒரு நடுத்தர வயது பெண்மணி…
“யாருங்க….?”
“சாரப் பாக்கணும்…”
ஒரு வழியாக கீழே இறங்கி வந்தார் சோமசுந்தரம்….
“நீங்க எல்லாம் யாரு? முன்னப்பின்ன பாத்த மொகமா இல்லியே….வீடு மாறி வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்..”
இப்போது ஆதிமுலத்தின் தந்தை பேசும் சமயம்..
“மன்னிக்கணும்.. எம்பேரு கருணாகரன்.இது என் பையன் ஆதிமூலம்..அம்மா கார்த்தியாயினி…
எந்த அறிவுப்புமில்லாம வந்தது தப்புதான்..!
பையன் டெக்ஸ்டைல் டிப்ளோமா முடிச்சிருக்கான்..உங்க மக அஞ்சலிய பொண்ணு கேட்டு வந்திருக்கோம்..”
“என் பொண்ணு அஞ்சலியவா..?”
“ஆமாங்க… இரண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்க…”
“அஞ்சலி..அஞ்சலி…அஞ்சலி இறங்கி வந்தாள்..
இந்த பையன உனக்கு தெரியுமா..?”
அஞ்சலி மிரண்டு போய் நின்றாள்..
‘ என்ன ஆதி.இப்படி பண்ணிட்டியே..’ கண்கள் கேட்காமல் கேட்டன..
“அப்பா..அது வந்து…!”
“நான் கேக்குற கேள்விக்கு ஒத்த வார்த்தைதான் பதிலா வரணும்..!”
“தெரியும்..”
“இவன பழக்கமா…?”
“ஆமாம்….”
“இவனோட வாழணும்னு தீர்மானம் பண்ணிட்டியா…?”
“அதிலப்பா..வந்து…”
“ஒரே வார்த்த….!”
“ஆமாம்….”
கருணாகரனிடம் திரும்பினார்..
“நாங்க சௌராஷ்ட்டிரர்..! நீங்க..?”
“சாதியென்னங்க…பிள்ளைங்க ஆசப்பட்டப்புறம்…?”
“ஒரே வார்த்த….”
“வன்னியர் …”
அடுத்தடுத்து நடந்த ரசாபாசமான நிகழ்வுகள்…காலத்துக்கும் மறக்குமா…?
***
“செங்கமலம்..! வா.. இப்படி வந்து உக்காரு…இந்தா சாவி..உங்கையாலியே இந்த பூட்டத் திற…!
“ஏனுங்க..பெட்டியில ஏதாச்சும் புதையல் கிதையல் இருக்குதாங் காட்டியும்..!”
“ஆமாம், இதுநா வரைக்கும் கட்டிக் காத்த பொதையலு…”
“உம்மையாலுமா..? இல்ல சும்மா சீண்டி பாக்குறீங்களா..?”
“அட..தெறங்கிறேன்…!என்னமோ ஞாயம் பேசிகிட்டு திரியவுற…”
ஆதிமூலம் ஏதோ கிறக்கத்தில் இருக்கிறார் என்று செங்கமலத்துக்கு புரிந்து விட்டது..
எப்போதாவது ஒரு முறை செங்கமலத்தை சீண்டிப்பார்ப்பது அவருக்கு பிடிக்கும்.
பெட்டியைத் திறந்தாள் செங்கமலம்..
“உள்ளாற ஒரு மஞ்சப்பை இருக்குதா…?”
“ஆமாம் மாமா..!”
“அத வெளியே எடு…!”
“பிரிச்சு பாரு….”
மயில் கழுத்து நிறத்தில் உடலெங்கும் சரிகை பூக்கள் போட்ட பட்டுப் புடவை தகதகவென கண்ணைப் பறித்தது..
அரக்கு நிற பார்டர்..தோகை விரித்தாடும் மயில்கள்..
தலைப்பில் இரண்டு ஜோடி மயில்கள்….
ஒன்றையொன்று பார்த்தபடி…
புதுக்கருக்கு அழியாமல்..சரிகை அத்தனையும் சுத்த தங்கம்…!
“மாமா.. நீங்க நெஞ்ச சேலய பெட்டிக்குள்ளாற வச்சு பூட்டியிருக்கீங்களா…””
“அட மக்குப் பொண்ணே.. புதுப் புடவ அங்கனுக்குள்ளதான் வெச்ச மேனிக்கு இருக்குது..போய்ப் பாரு..!”
“அப்போ இது…?”
“இது ஒரிஜினல்..அது டூப்ளிகேட்..”
“மாமா.. கொஞ்சம் வெளங்குற மாதிரி பேசுங்க…! இந்த பூடக பேச்செல்லாம் எனக்கு புரியாது…”
“வா…வந்து பக்கத்துல உக்காரு..வெவரமா சொன்னாதான் உனக்கு வெளங்கும்..
ஆதிமூலம் செங்கமலத்தின் கைகளைக் கெட்டியாகப் பற்றிக் கொள்கிறார்..
***
மறுபடியும் பெண்ணைப் பார்க்கிறார் சோமசுந்தரம்…
“இருபது வருசமா உங்கப்பன பாத்துகிட்டு இருக்க…
என்னப்பத்தி உன்னவிட அதிகம் தெரிஞ்சவுங்க யாருமில்ல.
இந்த பையன எம்புட்டு நாளா தெரியும்…? மூணு வருசம் இருக்குமா..?
அவனோட போகத் தயாராயிட்ட…”
“அப்பா….!”
“உனக்கு உன் ஆதி முக்கியம்.எனக்கு என் சாதி முக்கியம்…!
இரண்டில ஒண்ணுதான் நடக்கும்..!
நீ அவனோட போயி வாழ்ந்துக்க..நானு குறுக்க நிக்கமாட்டேன்..ஆனா எங்கள மறந்துடு…. வீட்டுப் படி மிதிக்கக் கூடாது..!
இல்ல! அவன போகச் சொல்லு…இந்த நிமிசத்தோட அவன் நெனப்ப உதறிடு…
சோமசுந்தரத்துக்கு எப்பவுமே வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு…!”
ஆதியின் அம்மா வாயைத்திறந்தாள்…
“திடுதிப்புன்னு வீட்டுல நொழஞ்சு இப்பிடி நடந்துக்கிட்டது பெரிய தப்பு…
பையனோட படிப்புக்கும் பிள்ளைங்களோட பிரியத்துக்கும் மரியாத குடுப்பீங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டோம்.
பெத்தவுங்க கிட்டயிருந்து பிள்ளையப் பிரிச்சு கூட்டிட்டுப்போயி குடும்பம் நடத்துற கேடுகெட்ட செயல செய்யுற மாதிரி எங்கபையன நாங்க வளக்கல..
உங்க பொண்ண உங்க மனசுக்கேத்த எடத்துல கட்டிக் குடுங்க…
ஆதி..ஐயா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டுபுட்டு கெளம்பு ராசா..!“
தட்டை மேசையில் வைத்துவிட்டு கீழே குனியப்போனவனின் முகத்தில் வேகமாக எறியப்பட்ட புடவையின் வீச்சில் திக்குமுக்காடிப் போனான் ஆதி..
கருணாகரன் வாயடைத்து நின்றார்..
மகனுக்கு நேர்ந்த அவமானம் தாய்க்கு பொறுக்குமா…?
“ஐயா.. நாங்க எங்க மருவாதிய காப்பத்தணும்னுதான் உசுருக்கு உசுரா காதலிச்ச சின்னஞ்சிறுசுகளோட மனசு நொறுங்கினாலும் சரி, பெத்தவங்க மனசு நோவக்கூடாதுன்னு முடிவுக்கு வந்தோம்..
ஆனா நீங்க இப்போ செஞ்ச காரியத்துக்கு மன்னிப்பே கெடையாது…
காலம் பதில் சொல்லும்..!
இதே புடவைக்காக ஆதி வீட்டு வாசப்படிய நீங்க மிதிக்குற காலம் வரத்தான் போகுது…! பாக்கத்தான் நாம இருப்போமான்னுதெரியல…!
கார்த்தியாயினி அருள் வாக்கு சொல்பவள் போல வார்த்தைகளை உமிழ்ந்தாள்..
***
“ஏங்க…! நீங்க ஒரு நாள் கூட இந்தப் புடவைய எடுத்து வச்சு பார்த்ததேயில்லையே..அச்சு அசல் இதே மாதிரி…! எப்படிங்க?”
“செங்கமலம்…மனசுல ஒரு சித்திரம் வரஞ்சுபுட்டோமுன்னா அத யாராலையும் அழிக்க முடியாது..!
“சரி..இப்போ இரண்டு பொடவைங்க இருக்குதே…! இத என்ன செய்யப்போறீங்க…?”
மனதில் நினைத்ததை செங்கமலத்திடம் சொன்னால், என் வாயைப்பொத்தி,
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க மாமா ! என்று உருகிப்போவாள்..
“நான் உசிரோட இருக்கிறவரைக்கும் எங்கிட்டயே இருக்கட்டும்..
என் உசிரு போனபின்ன….!…,
ஆதிக்கு அந்த வார்த்தையை முடிக்க தைரியம் வரவில்லை..