அசரீரி…!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 21, 2026
பார்வையிட்டோர்: 3,972
செல்லைப் பொழுது போகாமல் பார்த்துக் கொண்டிருந்தவனை அந்தப் பதிவின் வார்த்தைகள் அதிசயிக்க வைத்தன!.
‘கண்டிப்பாக இந்த மாசம் முடிவதற்குள் கல்யாண ராசி உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்…!’
ஒண்ணும் புரியாமல் குழம்பிப் போய் உட்கார்ந்திருந்தான் உமா சங்கர்.
‘எப்பர்றா..?’ என்ற சிறுவனனின் அதிசயிக்கும் குரல் அவனுக்குள்ளும்.
‘நம்ம குழந்தைகளுக்கே கல்யாணம் ஆகி பத்துப் பதினைந்து வருஷத்துக்கும் மேல ஆச்சே?! அப்படி இருக்கையில், மறுபடியும் எப்படி அது?!’
கதவு தட்டப்படும் சப்தம். கதவைத் திறந்தால்…
மகன் மனைவியியோடும், மகள் அவன் கணவனோடும் சொல்லாமற் கொள்ளாமல் வந்திருந்து கதவைத் தட்டி நின்று கொண்டிருந்தார்கள்.
“அட, என்ன சொல்லாமற் கொள்ளாமல் எல்லாரும் சேர்ந்து வந்திருக்கீங்க? என்ன விசேஷம்? உள்ள வாங்க வந்து உட்காருங்க..!” உட்கார வைத்து விவரம் கேட்டார் உமாசங்கர்.
“வர்ற பதினைந்தாம் தேதி வந்தா உனக்கு அறுபதாகுதே?! உன் அறுபதாங் கல்யாணத்தை சிம்பிளாவாவது நடத்திடலாம்னு நானும் அண்ணனும் பேசி முடிவு பண்ணினோம்! உனக்கு ‘சர்ப்ரைஸா’ இருக்கட்டுமே நேர்ல சொல்லிக்காலாம்னு வந்தோம்! செலவெல்லாம் எங்களோடது! நீ அதைப் பத்திக் கவலைப் படாதே!” என்றாள் மகள் ‘படபட’ வென!
உமாசங்கர் விழித்தபடி நிற்க, அண்ணனைப் பார்த்து மகள் “எப்பர்றாஆ?” என்றாள் மகிழ்ச்சியில்! அது அசரீரி போலிருந்தது உமா சங்கருக்கு!. செலவு தன் தலையில் விழாத மகிழ்ச்சியில்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
