கதையாசிரியர்:
தின/வார இதழ்: சிரித்திரன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 10, 2025
பார்வையிட்டோர்: 644 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இலங்கையின் மலைநாட்டிலே யுள்ள தேயிலை, றபர்த் தோட்டங் ளில் சந்ததி சந்ததியாக உழைத்துவரும் இந்திய வம்சாவழித் தொழிலாளருடைய வாழ்வின் ஒரு கோணத்தைச் சித்திரிப்பது இந்தக்கதை. அந்த மக்களிடையே வாழ்ந்து அவர்களது பிரச்சினைகளைப் புரிந்துகொண்டுள்ளவர், கதைஞர் வடிவேலன். ஆதலால், அவர் சொல்லும் இக்கதையிலே அம்மக்களின் தொடரான துயரங்களின் சோகக் குரலைக் கேட்க முடிகிறது. 


அறைக்கதவை இழுத்துச் சாத்திவிட்டு வெளியே வந்த ரெங்கையாக் கிழவன் பெருமூச்சு விட்டான். இனம்புரியாத சோகம் அவனை வாட்டி எடுத்தது. என்ன செய்வது என்று புரியாது மௌனமாக நின்றான். லயத்திற்கு எதிரே நீண்டு கிடக்கும் மலைகள் அவனது துயரத்தை அங்கீகரிப்பன போன்று உமமென்று இருந்தன. 

தினமும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போனவைகள் தான், இன்று எல்லாமே தன்னைப் பார்த்து அனுதாபப்படு வனபோலக் கிழவனுக்குத் தெரிந்தன. 

லயத்துக் காம்பிராவிற்குமுன் நிறைமாதக் கர்ப்பிணி யாக நிற்கும் ஈரப்பலா மரம் காற்றுக்குச் சலசலத்துக் கொள் கின்றது. வாசலுக்கு இறங்கி, பூவும் பிஞ்சுமாய்ப் பூரண கும் பமாகத் திகழும் மரத்தை ஏக்கத்துடன் அண்ணாந்து பார்த் தான். தான் பெற்ற பிள்ளையைக் கனிவுடன் நோக்கும் குளுமையில் அவனது உள்ளம் நெகிழ்ந்தது. இது அவன் நட்ட மரம், எத்தனையோ பஞ்சங்களில் அவனுக்கு மட்டு மல்லாது முழுத் தோட்டத்திற்குமே கைகொடுத்து உதவிய மரம். இனி அதை அவன் நிரந்தரமாகப் பிரிந்தாக வேண்டும். 

கிழவனுக்கு கு அதற்குமேல் அவ்விடத்தில் நிற்க முடிய வில்லை. படி இறங்கி மெதுவாக நடந்தான் பின் ஏதோ நினைத்தவனாக நின்று திரும்பிப் பார்த்தான். கதவில் கொளு வியிருக்கும் பூட்டில் கண்கள் தரித்தன. சுவரை நோட்ட மிட்டான். புகையாலும் தூசியாலும் அழுக்கேறிக் கறுத் துப்போன அந்தச் சுவரில் கதவுக்கு மேலே ஒரு அடிச் சதுரம் வெள்ளை வெளேரென்று வெண்திரையாகப் பளிச்சிட்டது. 

“அரி… ராமா.. ராமா” என்று முணுமுணுத்துக் கொண்ட கிழவனின் கண்கள் பனித்தன. நேற்றுவரை அந்த இடத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த ஆஞ்சனேய சகித சீதாராம படம் இப்பொழுது அவனுடைய பிரயாண மூட்டையில் அடைக்கலம் புகுந்துவிட்டது. 

ரெங்கையாக் கிழவன் நாளை இந்தியாவுக்குச் செல்கின்றான். புதராய் மண்டிக்கிடக்கும் தேயிலைச் செடிகளுக்கிடையில் நெளியிட்டுக் கிடக்கும் செம்மண் பாதையில் இறங்கிடவுணை நோக்கி நடந்தவனின் மனதில் பல எண்ணங்கள் ஊற்றெடுத்தன. 

தவறணைக்காரர் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் ரெங்கையாக் கிழவன் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இத்தோட்டத்தில் தொழில் புரிந்தான், இளம வயதிலேயே, தன்னுடைய மனைவி காமாட்சியை நெருப்புக் காய்ச்சலுக்குப் பலி கொடுத்த பின்னர் மீதி நாட்களைக் குடும்பப் பற்றில்லாது தன்னந்தனியனாகவே ஒட்டிவிட்டான். 

உழைப்பே நிரந்தர உறவாகிவிட்டது. குன்றுகளிலும், சரிவுகளிலும் பம் என்று மண்டிக்கிடக்கும் தேயிலைச் செடிகள் யாவும் அவன் கைப்பட தவறணையில் வளர்ந்த வைகள்தாம். ஐம்பத்தைந்து வயதில் ஓய்வுபெற முடிந்ததும் தவறணை ரெங்கன் இல்லாத ‘நர்சரி’ ஒன்றினைக் கற்பனை செய்து பார்க்க முடியாத துரை, மேலும் ஒரு ஐந்து வருட வாய்ப்பினை அனுபவசாவி, கைராசிக்காரன் என்ற நற்சாட் சிப்பத்திரங்களுடன் அவனுக்குக் கொடுத்தார். 

கிழவனுக்கு நெருங்கிய உறவினன் என்று ஒருவரும் ல்லை. ஆனால், அந்த நாலு டிவிசன் ஆட்களும் கிழவன்மீது உரிமை கொண்டாடினர். 

கிழவன் எல்லோருக்குமே பொதுவானவன் 

வயசுப் பெண்களுக்கு ‘தவறணை அப்பா.’ லயத்துப் பெண்களுக்கு ‘தவறணைத் தாத்தா’ தோட்டத்திலுள்ள வளர்ந்தவர்கள் ‘பெரியவர்’ என மதிப்புக் கொடுப்பார்கள் ஸ்டோருக்குக் கொழுந்து நிறுக்கச் செல்லும் வயசுப் பெண்கள் அந்த அவசரத்திலும், தவறணைக்குள் புகுந்து பூவாளியுடன் போராடிக்கொண்டிருக்கும் கிழவனின் வெற்றிலைப் பையைக் காலி செய்துவிட்டே செல்வார்கள். கிழவனும் பகிடிசெய்வான். 

மாலையில் கிழவன் சிறுவர்களுக்குக் கதை சொல்வான். சம்பள நாளன்று சிறுவர்களுக்கு மிட்டாய் கிடைக்கும். ஏழு நாடகளுககென்று வழங்கப்பட்ட கூப்பன் அரிசி மூன்று நாட்களில் தீர்ந்துபோக மீதி நான்கு நாட்களுக்கும் எப்படிப் பொழுதை ஓட்டுவது என்று கையைப் பிசைந்து கொண்டு வந்து நிற்கும் குடுமபப்பாரம் மிக்க பெண்களுக்கு “ஏண்டி அம்மா, உன புருஷன் இன்னும் அந்தக் குடிப்பழக் கத்தை விடலியா? சரிதான் போ” என்று சலித்துக்கொண்ட படியே ஐந்தோ, பத்தோ கொடுப்பான். 

இப்படியாகத் தோட்டத்தில் கிழவன் எல்லோருக்குமே பொதுவானவன். சகலரதும் அன்பிற்கும் பொதுவானவன். 

தோட்டத்தில் உத்தியோகத்தரிடை யேயும் கிழவனுக்கு நல்ல மதிப்பு பாத்திகளுக்கு மத்தியில் பவ்வியமாகக் கன்று கிழ களுக்கு நீவி நீவி தண்ணீர் போட்டுக்கொண்டிருந்த வனிடம் கட்டைக் காற்சட்டை போட்டுக்கொண்டு, ‘அது எனை? இது எப்படி?” என்று கேட்டுப் படித்தவர்கள் எல்லாம் இன்று பெரிய துரையாக வேறு தோட்டங்களில் வேலை செய்தாலும், இங்கு வரும்போது, ‘சலாமுங்க தொ ரைங்களே” என்று தலைப் பாகையை உதறிக் கமக்கட்டில் இடுக்கிக்கொண்டு முரசு தெரியச் சிரிக்கும் கிழவனை ஆதரவோடு தட்டிக்கொடுப்பதுடன், ஒரு பத்தோ, இருபதோ கொடுப்பது உண்டு. 

குட்டைக் கவுணில் சின்னப் பெண்ணாகக் காட்சி தரும் சோபனா தனக்குப் புரியாத மொழியில் ஏதேதோ கூறிச் சிரித்தாலும், அதனையும் கிழவன் ஒரு அடக்கமான சிரிப்பில் அங்கீகரித்துக்கொள்வான். அப்படி ஒரு பணிவு. 

இப்படிக் கிழவன் எல்லோருக்குமே பொதுவானவன். ஆனால், இந்தத் தொடர்புகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதுபோன்று. வானவெளியில் நீந்திக்கொண்டிருந்து பட்டம் கயிறறுந்து தவிப்பதுபோன்று, கிழவனது இந்தியப் பயணம் அமைந்துவிட்டது. 

யார் யாரெல்லாமோ தடுத்தும் கேளாது, இந்த ஆத்மா அந்த மண்ணில்தான் அடங்கும் என்று தாய்நாட்டிற்கே மனுப்போட்டு விட்டான். நாலைந்து குடும்பங்கள் குடிபெயர்த் தவுடன் கிழவன் வேட்கையுடன் தீவிரமாகச் செயலாற்றினான். 

கிழவனை ‘இன்று, நாளை, கையொப்பம் பிழைச்சுப் போச்சு’ என்றெல்லாம் இழுத்தடிக்காது சின்னக் கிளாக்கர் சேவைக்காலப் பணம், ஊழியர் சேமலாபநிதி என்பவற்றை யெல்லாம் முடித்துக் கொடுத்துவிட்டார். நூற்றுக்கு பது என்ற அவரின் கமிஷன் கிழவன் விடயத்தில் புறநடையாகப் போய்விட்டது. சந்தோஷம் என்று நீட்டிய இரண்டு பச்சைத்தாள்களைக்கூட வாங்க மறுத்துவிட்டார். 

காதில் கடுக்கன் ஒளிதர இருக்கும் தன் புகைப்படம் ஒட்டிய பாஸ்போட்டை தலைவர் கொடுத்தபொழுது, கிழ வனுக்கு எப்பொழுதோ நினைவிலிருந்து மறைந்துபோன ஆல மரத்துக் கல்லுக்காட்டில் அமர்ந்த பிள்ளையாரும். வயல் வெளியும். தென்னைமரங்களும் நிறைந்த ஆத்தூர்க் கிரா மத்திற்குப் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது! 

பிரிந்து போக இருக்கும் கிழவனைக் கடந்த இரு வாரங்களாக விருந்துபசாரங்களில் திளைக்கச் செய்துவிட்டார்கள் தோட்டத்தவர்கள். நாள் நெருங்க நெருங்க, சோகம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டது. அழுகையும், கண்ணீரும் தான்! பிரியமானவர்களுக்குக் கிழவன் கொடுத்தது போக மீதிப் பொருட்கள் கட்டப்பட்டுப் பயணத்திற்குத் தயாராகிவிட்டன. 

புதன்கிழமைதான் கப்பற்பயணம். தலைவர் கறுப்பையாவும் தொண்டர் தலைவர் சிவனும் தலைமன்னார்வரை கூட வருகின்றார்கள். ‘இனிக்காணவா போகின்றோம்,’ என்ற நினைப்பில் இறுதியாக தோட்டத்தவர் எல்லோருக்கும் இரவில் ஒரு தேநீர் விருந்தளிக்க வேண்டும் என்ற முடிவில் சாப்பாட்டுப் பொருட்களும், பழங்களும் வாங்குவதற்காகக் கிழவன் நகருக்குச் சென்று கொண்டிகுக்கின்றான். 

வட்டிக்கடை செ.மு.பிள்ளையின் கடையைப் பார்த்தவனுக்கு பத்து வருடங்களுக்கு முன்னர் தேயிலை ஸ்டோர் பற்றி எரிந்த சம்பவம் நினைவிற்கு வந்தது. அவனது கால்கள் இயங்க மறுத்தன. 

யாரோ ஒருவர், “ஏய் தாத்தா, என்ன வேடிக்கையா பார்த்துக்கிட்டு இருக்க? சுருக்கா வீட்டுக்குப் போ” என்று விரட்டியது கேட்டது. 

தோளில் கிடந்த சால்வையை உதறி காதை மறைத்துத் தலைப்பாகையாக்கிக் கொண்டவன் ‘சரி வந்தது வரட்டும்’ என்று சந்தைக்குள் இறங்கினான். 

சந்தையில் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டிருக்கும் போது பெரும் இரைச்சல் கேட்டுக் கிழவன் பயந்துபோனான். கம்பு தடிகள் சதிதம் இன்னும் பயங்கரமான ஆயுதங்களையும் ஏந்தியபடி, லொறிகளில் தொற்றிக்கொண்டு ஏதோ கோஷித் தபடி, தியேட்டர்ச் சந்தியில் பிரிந்து தோட்டத்திற்குச் செல் லும் பாதையில் சிலர் விரைந்துகொண்டிருந்தார்கள். 

என்னவாய் இருக்கும் என்று தன்னைத்தானே வினவி, பல பயங்கரமான பதில்களைக் கற்பனை செய்து அதிர்ந்து போனான்.  எனினும் ‘எல்லாம் அந்த முருகன் செயல்’ என்று சமாதானமானான். 

இரண்டு நாட்களுக்கு முன் பக்கத்துத்தோட்டத்தில் நிகழ்ந்த சம்பவம்!… அதை நினைக்கும் போதே பகீரென்றது. தலைவாழைக் குருத்தை வெட்டிச் சரித்தமாதிரி வாழ வேண்டிய வயதில்… 

என்ன நடந்தாலும் லயத்தில் ஒருவரும் இல்லை. எல்லோரும் தூரத்து மலைகளில் வேலை. 

ஆளும் பேருமாக இருந்தாலும் எதைத்தான் பெரிதாகச் சாதித்துவிடி முடியும். 

பாக்குவெட்டியில் வைத்த பாக்கின் அவலநிலை. தாங்க வேண்டிய தரையே குழியாக விழும்போது… 

நடைபாதையில் கடைவைத்திருந்த சிறுவர்கள் வாழைப் பழத்தோலை விசி எறிந்து துவேஷமான வார்த்தைகளைக் கொட்டினார்கள். கிழவன் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை. 

இறக்கமுடியாத மனச்சுமையுடன், தோட்டத்தவர்களை உபசரிக்க வாங்கிய பொருட்களும் கனக்க, தோட்டத்தை நோக்கி விரைவாக நடந்தான். 

நகரைவிட்டு நீங்கித் தார்றோட்டில் நடந்து. தோட்டத் துச் செம்மண் பாதையில் ஏறி, லயத்தைச் சமீபிக்கும் முன் னரே நடந்துவிட்ட படுபாதகச் செயலை ஊகிக்க முடிந்தது. 

லயம் அக்கினி வெள்ளத்தில் குதித்துக்கொண்டிருந்தது! டு மாடுகளை அ.டைத்த பட்டிகள் அக்கினியில் முழுகிக் கொண்டிருந்தன! 

தீ நாக்குகளிற் சிக்கிய மிருகங்களின் ஓலம்!… 

அவலக்குரல் எழுப்பி அழுவோரும், சிதறி ஓடுவோரும்!

பொருட்களை இழந்தோரின் பரிதவிப்பு!… 

செய்வதறியாத பிஞ்சுக் குழந்தைகள்! 

எல்லாமே வெறியாட்டத்தின் விளைவுகள்!…

எங்கும் மனத்தைக் குமட்டும் நெடியும் புகையும்!

நேரம் நிதானமாகக் கடந்து கொண்டிருக்கின்றது.

அக்கினி தேவனின் வெறி தணிந்து கொண்டபோது, 

லயத்தின் தகரங்கள்கூட உருகிக் கிடந்தன! 

விக்கினங்கள் செய்தவர்கள் விரைவாக மறைந்துவிட்டார்கள். 

அசாத்தியத் துணிவில் ஏதேதோ பொருட்களைக் காப் பாற்ற முனைந்த இளைஞர்கள் தீக்காயங்களுடன் எரிந்த வீடுகளிலிருந்து வெளியேறினார்கள். 

காலையில் கிழவன் நம்பிக்கையுடன் பூட்டிச்சென்ற வீடு கோரமாகக் காட்சியளிக்கின்றது! 

“தாத்தா நான் முதல்ல உங்க வீட்டுப் பொருட்களைத் தான் காப்பாத்தப் பார்த்தேன். நாங்கள் என்றாலும் பரவாயில்லை நீங்க ஊருக்குப் பயணமாச்சே. என்ன செய்யப் போறீங்க? அடுக்கிக் கட்டிவைச்ச உங்க பொருட்களெல்லாம் ஒரேயடியாக எரிஞ்சிபோச்சி! உடுதுணிகள் கூட எடுக்க முடியல. உங்க பாஸ்போட், பணம் எல்லாம் வெந்து சாம்பலாப் போச்சி.” கூறியபடியே மயங்கி விழுந்தான் இலட்சுமணன். 

தீக்காயங்களில் அவனது முகம் கருகிப் போயிருந்தது. ரெங்கையாக் கிழவனுக்கு உலகம் தலைகுப்புறப் புரண்டு, வானம் இடிந்து வீழ்ந்ததுபோல் இருந்தது! 

“முருகா! முருகா!… என்ன அநியாயம்! அடுக்குமா?… நான் என்ன குற்றம் செய்தேன்?” என்று முகத்தில் அறைந்து கொண்டான். யாரோ ஒரு பெண், “தாத்தா!..” என்று கட்டிப்பிடித்துக் கதறினாள். 

தானும் அந்த அக்கினியில் மூழ்கிச் சங்கம மாகிவிடலாம் போலிருந்தது கிழவனுக்கு. 

‘இந்த நாட்டிற்கு என்ன நடந்துவிட்டது? ஏன் இந்த அட்டுழியங்களெல்லாம்? நாங்கள் என்ன தவறு செய்தோம்? ஏன் மனிதர்கள் மிருகங்களாகிவிட்டார்கள்?’ கிழவன் புரியாது பொறி கலங்கி நின்றான், 

தவறணையில் நீவி நீவித்தண்ணீர் போட்டு வளர்த்தானே அந்தத் தேயிலைச் செடிகள், அவை ‘நாங்கள் நன்றி மறக்கவில்லை’ என்று கூறுவனபோன்று, லயத்தைக் சுற்றிக் கருகிக்கிடந்தன! 

– சிரித்திரன், 1977.

– தகவம் பரிசுக் கதைகள் (தொகுதி-I), முதற் பதிப்பு: ஒக்ரோபர் 1987, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), யாழ்ப்பாணம், இலங்கை.

மாத்தளை வடிவேலன்

சிறுகதை, நாவல், நாடகம், கவிைன ஆகிய இலக்கியத் துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ள வடிவேலன், இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். கதைகள் சில சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. இவர் எழுதி தமிழகத்தில் வெளியான சில கதைகள் அங்கு மறுபிரசுரமும் செய்யப்பட்டன. 

வடிவேலனின் 12 சிறுகதைகள் அடங்கிய ‘வல்லமை தாராயோ!’ என்னும் சிறு கதைத் தொகுதி மலையக வெளியீட்டகத்தின் பிரசுரமாக வெளிவரவுள்ளது. ‘தோட்டக் காட்டினிலே…’ என்னும் சிறுகதைத் தொகுதியில் இவரது மூன்று சிறுகதைகள் அடங்கியுள்ளன. 

சிறுகதை, நாடகம் ஆகியவை சார்ந்த போட்டிகள் சிலவற்றில் இவருக்கு முதற்பரிசு கிடைத்தது. தொழிற்சங்க, சமூகப்பணி களிலும் தம்மை இணைத்துள்ள வடிவேலன் மலையகக் கலை இலக்கியப் பேரவையின் துணைச்செயலர் ஆவர், 

இவர் ஒரு பட்டதாரி ஆசிரியர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *