அக்கரைப்பச்சை
கதையாசிரியர்: லட்சுமி ராஜரத்னம்
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2026
பார்வையிட்டோர்: 4,291
(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வாசல்படி ஏறும்போதே தலை சுற்றியது ராம சர்மாவுக்கு. சட்டென்று நிலையைப் பிடித்துக் கொண்டார். இதை மருமகள் வனஜா பார்த்து விட்டாள். சுரீரென்று வார்த்தைகள் வீச்சுக்களாய்ச் சுழன்றன.
“இப்ப வாக்கிங் போகாட்டா என்ன? ரிடையர் ஆனா பேசாம வீட்டிலே இருக்கணும். சும்மா இருக்கிறதில்லே. ஊரைச் சுத்தறது. அப்புறமா தலையைச் சுத்தறது… வயத்தைப் பிரட்டறதுன்னு சொல்றது. டாக்டர் கிட்டப் போறதுக்குக் கொட்டியா கெடக்கு?”
பதில் பேசாமல் வராத்தா மஹிச் சேரில் சாய்ந்து கொண்டார். ‘சீ… என்ன வாழ்க்கைடா’. வனஜா உள்ளே போய் என்ன சொன்னாளோ என்னமோ பிள்ளை ஸ்ரீதர் வந்து தன் பங்கிற்குச் சொல்லிவிட்டுப் போனான்; இந்தக் களேபரத்தில் குழந்தைகள் மிரண்டு போய் ‘டாட்டா’ காட்டாமல் கான்வெண்டிற்கு நகர்ந்ததுகள்.
“எல்லாம் டைனிங் டேபிளில் எடுத்து வச்சிருக்கேன். போட்டுக் கொண்டு சாப்பிடுங்க. வெளியே போக வேண்டாம். எங்கேயாவது விழுந்து கிடந்தா எங்க மண்டை உருளும்” என்று கூறிய வனஜா அலுவலகத்திற்குக் கிளம்பினாள்.
கீ கொடுத்த பொம்மை கணக்காக ஸ்கூட்டர் சாவியைச் சுழற்றியபடி ஸ்ரீதர் அவள் பின்னால் போனான். சீ… இவனெல்லாம் பிள்ளைகள்?
”அப்பா, டேபிள்லே டிபன் வச்சிருக்கேன். பிளாஸ்கிலே காப்பி இருக்கு. பச்சை தண்ணீரைக் குடிக்காதீங்கோ, ஆறின வெந்நீர் இருக்கு…ம்…. மாத்திரைகளும் வச்சிருக்கேன். சாப்பிட்டானதும் மறக்காம போட்டுக்கோங்கோ” என்று பின்கட்டிலிருந்து வந்த குரலைக் கேட்டுத் தன்னை யறியாமல் ஜன்னல் வழியே பார்த்தார்.
பின் பக்கத்துப் போர்ஷன் மாலதிதான் மாமனாருக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“நீ கவலைப்படாமப் போம்மா மாலு. நான் என்ன சின்னக் குழந்தையா? நல்ல பெண்ணம்மா” என்று சிரித்த வெங்கட்ராமன் தள்ளாடியபடி சுதவருகில் வந்தார்.
“நீங்க இப்ப எதுக்கு வெளியே வரேள். பச்சைக் குழந்தைதாம்ப்பா. உள்ளே போங்கோ. மழைக் காத்து அடிக்கிறது. மார்ச் சளி கட்டிக்கும். என்னப்பா நீங்க? அப்பறம் உங்க பிள்ளைக்கு யார் பதில் சொல்றது?” என்று கடிந்து கொண்ட மாலதி கிழவரைப் பிடித்துப் படுக்கையில் படுக்க வைக்கிறாள்.
“முரளி இன்னிக்கு வந்துடுவான் இல்லே”
“வந்துடுவார். நான் வரட்டுமா?”
புடவை மடிப்பு கால்களைத் தழுவ, மாலதி கைப்பையுடன் நடக்கிறாள் . அவன் கணவன் முரளிக்கு டூர போகும் உத்தியோகம். கல்யாணமாகிப் பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இன்னும் இல்லை. இந்தப் போர்ஷனுக்குக் குடி வந்து இரண்டு வாரங்கள்தான் ஆகின்றன.
தன் மருமகள் வனஜாலையும், மாலதியையும் எடை போட்டுப் பார்த்த ராம சர்மாவுக்கு சாப்பாடு இறங்களில்லை. அவருக்குப் பிடிக்காத குழம்பு வேறு. இப்படி மருமகள் கிட்ட அல்லாடக் கூடாது. பின் போர்ஷன் கிழவரைக் கண்டு பொறாமையாக இருந்தது. நாலு பிள்ளைகள் இருந்தும் கிழவர் மாலதியிடம் இருக்கிறார். இதை வெங்கட்ராமனிடம் பேசியதில் தெரிந்து கொண்டார்.
”எனக்கு ஒண்ணுன்னா முரளிக்குத் தாங்காது. மாலதி ரொம்ப நல்ல பொண்ணு. கொஞ்ச நாளாப் பாருங்கோ உடம்பு படுத்தறது. அதுவோ ஆபீஸ் போற பெண்” என்றார் வெங்கட்ராமன்.
“நீங்க ஏன் மத்த பிள்ளைகள் கிட்டப் போய் இருக்கக் கூடாது?” என்று யதார்த்தமாய் ராம சர்மா கேட்பார்.
வெங்கட்ராமன் சிரிப்பாரே தவிர பேச மாட்டார். இரவு பூராவும் வாய் ஓயாத இருமல் ராம சர்மாவுக்கு. மகன், மருமகள் தூக்கம் கெடக் கூடாது என்று எண்ணினாலும் முடியவில்லை.
“ஃபிரிட்ஜ் வாட்டாரக் குடிக்காதீங்கன்னா கேட்கிறதில்லை. குழந்தைகள் கூடச் சொன்னாக் கேட்கிறதுகள். உங்கப்பா இருக்காரே….'” என்று பொரிந்தாள் வனஜா.
“ஏம்பா இப்படி? நாங்க ஆபீஸ் போறதா வேண்டாமா? நீங்க படுத்துண்டா லீவு கூடப் போட முடியாது” என்று ஸ்ரீதர் முனகினான்.
அடை தின்ற தாகம் தீர ஃபிரிட்ஜ் வாட்டரைக் குடித்து விட்டார். அது தன் வேலையைக் காட்டுகிறது. இறந்து போன தன் மனைவியை நினைத்துக் கண்ணீர் முட்டுகிறது.
“இந்தாங்க பிளாஸ்கிலே வெந்நீர் இருக்கு குடியுங்க” என்று வைத்து விட்டுப் போனாள் வனஜா.
ஒரு வாரம் ஓடியது. மருமகளின் வாய்க்குப் பயந்து கொண்டு ராம் சர்மா வெளியே போகவில்லை. நடுப் பகல் டிபனை முடித்துக் கொண்டு ஈஸிச் சேரில் புத்தகம் ஒன்றுடன் சாய்ந்தபொழுது பின் பக்கம் பலப் பல குரல்கள் ஒலித்தன.
“ஒரு மணி நேரமா மூச்சு விட முடியல்லே. நல்ல காலம் பக்கத்து வீட்டுப் பையனை அனுப்பி என்னைக் கூப்பிட்டு விட்டார்.” என்று மாலதி கூறிக் கொண்டிருந்தாள்.
முரளி ஸ்கூட்டரில் வர டாக்டர் காரில் வந்து விட்டார் பின்னாலேயே. இதை எல்லாம் பார்த்த ராம சர்மா வெங்கடராமனுக்கு ஏதோ என்று ஓடினார். வெங்கட்ராமன் உயரமாக அடுக்கிய தலையணைகள் மீது முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு திணறிக் கொண்டிருந்தார்.
”முரளி, முரனி. என் பக்கத்திலேயே இருப்பா. என்னவோ பண்றதே. அம்மா, பரதேவதை என்னைக் கஷ்டப்படுத்தாம எடுத்துக்கோம்மா. நான் வரத் தயார் ஆகிட்டேன்.” என்ற புலம்பல் சுற்றி நின்றவர்களின் கண்களில் நீரை வரவழைத்தன.
இப்படி முரளியும், மாலதியும் கிழவருக்குப் பண்ணுகிறார்களே. தான் படுத்தால் வனஜாவும் ஸ்ரீதரும் இப்படிப் பண்ணுவார்களா என்று எண்ணித் தனக்குள் கலங்கினார் ராம் சர்மா.
“வயது ஆகிவிட்டது. எந்த நேரமும் எதுவும் ஆகலாம். யாருக்காவது தந்தி கொடுக்கலாம் என்றால் கொடுத்து விடலாம்” என்று டாக்டர் கூறிவிட்டார்.
முரஸி பறந்தடித்துக் கொண்டு தந்தி அலுவலகத்துக்கு ஓடினான். மாலதி கண்ணீர் விட்டுக் கொண்டு கிழவரின் அருகில் உட்கார்ந்திருந்தாள். தந்தியைக் கண்டு மகன்களும், மகள்களும் பறந்து வந்தனர். அப்பா, அப்பா என்ற கூப்பாடு வீட்டை நிறைத்தன.
”முரளி, அப்பாவுக்கு அவ்வா பிடிக்கும். வாங்கிக் கொடுத்தியோ?’ என்று, பெரியண்ணா நாராயணன் கேட்டான்.
”அவியல்னா அப்பாவுக்கு உயிராச்சே. மாலதி நீ பண்ணிப் போடுவியோ?” என்று பெரிய பெண் விமலா கேட்டாள்.
”நீ நல்ல டாக்டர் கிட்டக் காட்டியிருக்கலாம் முரளி. இப்ப எல்லாம் தாண்டியாச்சு. எனக்கு ஒரு கால் போட்டிருக்கக் கூடாதோ?” என்று கேட்டான் சின்னண்ணா ரமணி.
இதையெல்லாம் வெங்கட்ராமன் காதுகளில் போட்டுக் கொள்ளாமல் போய்ச் சேர்ந்து விட்டார். வீடு அமர்க்களப்பட்டது. கல்யாணச் சாவு. தலைக்குத் தலைபேசிவிட்டு அமர்க்களமான சமையலும், சாப்பாடும். பேச்சுமாக…
“மாலதி, குழந்தைகள் ராத்திரி பால் குடிக்கும், ரெண்டு லிட்டர் பசும் பால் கூட வாங்கு” இரண்டாவது நாத்தி மீனா உத்தரவிட்டாள்.
“முரளி, பசுமாடு தானம் பண்ணணும், நல்ல மாடா வாங்கு. விலையைப் பத்திக் கவலைப்படாதே.”
பெரியவரின் காரியங்கள் ஜாம் ஜாம் என்று நடந்தேறியது. அப்பாடா! இத்தனை பிள்ளைகள் பெண்கள்… வெங்கட்ராமன் கொடுத்து வைத்தவர், பத்துக்கும் கிரேக்கி யத்துக்கும் சாப்பாடுன்னா சாப்பாடா அது! கல்யாணத்தில் கூட இப்படிப் போட மாட்டார்கள்.
ராம சர்மா பின் பக்க அறையில் அமர்ந்து ஜன்னல் வழியே முரளியின் குடும்பத்தையே கவனித்துக் கொண்டு ஏக்கப் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். அன்று அனைவரும் கிளம்பப் போனார்கள். ஒரே பேச்சும் சப்தமுமாக வீடே அமர்க்களப்பட்டது. இந்தக் கூட்டம் நகர்ந்து விட்டால் வீடு வெறிச்சிட்டுப் போய்விடும். பாவம், முரளியும் மாலதியும்… வெங்கட்ராமன் கொடுத்து வைத்தவர். தன்னைப் போல் ஒரு பிள்ளையைப் பெற்று அவர்களிடம் இப்படிப் பிடுங்கல் பட்டுக் கொண்டு…
”எல்லாவற்றையும் இங்கேயே பிரித்துக் கொண்டு விடலாம்'” என்ற பெரியண்ணாவின் குரல் ராம் சர்மாவை நிமிர வைத்தது.
முரளிக்கு அதிகப் பங்கு இருக்கும் அல்லவா? பெரியவரை முகம் சுளிக்காமல் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டு வந்தவனாச்சே!
“அம்மா நகைகளை லாக்கரிலிருந்து எடுத்துண்டு வந்தியேண்ணா, அதையும் பிரிச்சுடு, என் பெண் கல்யாணத்துக்கு வசதியா யிருக்கும். இத்தனை நாள்தான் கிழம் பூதம் காக்கற மாதிரி காத்தது” என்றாள் விமலா.
“சரியா இருக்கா இல்லே முரளி கிட்ட தூக்கிக் கொடுத்துதோ!” என்று எரிச்சல் பட்டான் ரமணி.
“எனக்கு ஒரு பைசா கூட வாண்டாம். பைசாவுக்காக நான் அப்பாவுக்குச் செய்யலை. நீங்க கொடுத்தாக் கூட எனக்கு வேண்டாம்.” என்ற முரளியின் குரல், இவனல்லவா பிள்ளை! வெங்கட்ராமன், நீங்கள் ரொம்பக் கொடுத்து வைத்தவர். தசரதனுக்கு ஸ்ரீராமன் கிடைத்தது போல! என்று ராம சர்மாவைப் பாராட்ட வைத்தது.
அவர்களுக்குள் பங்கு வைத்துக் கொண்டிருக்க வேண்டும். கசமுசவென்று பேச்சு வார்த்தைகள் ராம சர்மாவின் காதுகள் வரை எட்டவில்லை. அவர்கள் கட்டாயப்படுத்தி முரளியைப் பெற்றுக் கொள்ளச் செய்திருப்பார்கள் என்று நம்பினார்.
***
அனைவரும் கிளம்பிப் போய் விட்டார்கள். ஞாயிற்றுக் கிழமை என்பதால் வனஜாவும் ஸ்ரீதரும் குழந்தைகளுடன் சினிமாவுக்குப் போய்விட்டார்கள், முரளியுடன் பேசும் ஆவல் ஏற்பட்டது ராம சர்மாவுக்கு. கதவைச் சாத்திக் கொண்டு பின்பக்க வீட்டுக்கு நடந்தார்.
“மாலு, அப்பா ஹார்ட் அட்டாக்கில் படுத்த அன்றிலிருந்து கணக்கு எழுதிட்டேன். ஒரு பைசா விடலை. கிட்டத்தட்ட பதினைந்தாயிரம். மாடே இரண்டாயிரத்து ஐந்நூறு. பெரியண்ணு கடைக்குப் போய்வர எல்லாம் காருக்கு என் கணக்கில் பெட்ரோல் போட்டது அது ஒரு ஐந்நூறு…”
ராம் சர்மாவால் பேசாமல் இருக்க முடிவில்லை. ”உன் பங்கிற்கு வந்தது எவ்வளவு முரளி?”
முரளி திடுக்கிட்டு நிமிர்த்தான்.
“வாங்க ஸார், வாங்க!”
”அப்பா காரியத்தை ஜம்முன்னு நடத்திட்டே. நீ ஒருத்தனாவா செலவழிச்சே? அண்ணாக்கள் பங்கு போட்டுக்கல்லே? உன் பங்குப் பணம், நகை எல்லாம் எவ்வளவு வந்தது?”
ஆவலை அடக்க மாட்டாமல் கேட்டார் ராம சர்மா, முரளியின் பார்வை பெரியவர் படுத்துக் கிடந்த கட்டிலின் அடியில் சென்றது. கிழவர் உபயோகித்த செருப்பு.
“பரதனுக்கு ராம் பாதுகை போல எனக்கு இதுதான் அப்பா விட்ட சொத்து,”
“என்ன அநியாயம்? நீ ஏன் சும்மாவிட்டே நீயும் உள் அப்பா வயிற்றில் பிறந்த பிள்ளை தானே?” என்று சீறினார் ராம சர்மா.
”இல்லை சார், நான் வளர்ப்புப் பிள்ளை தான், பெற்ற பிள்ளைகள் அவரை பாரம்னு நினைச்சு ஒதுக்கினார்கள். என்னை ரெண்டு வயசிலிருந்து எடுத்து வளர்த்தார். அந்த நன்றியைத் தெரிவிச்சுக்க இதை விட வேற வழி எனக்குத் தெரியல்லை. இன்னும் கொஞ்ச நாள் அவர் இருந்திருக்கலாம். அவரைக் கேட்காம நான் ஒண்ணும் பண்ணினதில்லை” என்ற முரளி சிறு குழந்தையாக மாறி அழுதான்.
தான் வளர்த்ததற்குப் பலன் இவன் தன்னை வைத்துப்போஷிக்கட்டும் என்று தான் வெங்கட்ராமன் தன் அந்திமச் செலவுக்காக கூட ஒன்றும் தராமல் இறந்து போனாரா? ராம சர்மாவால் பேச முடியவில்லை.
“ஏண்டா ஸ்ரீதரா இவ்வளவு நாழி?” என்ற அவரது குரலைக் கேட்க விடாமல் வனஜா அதட்டிக் கொண்டே வந்தாள்.
”நாங்க என்ன சின்னக் குழந்தைகளா வாசல்லே பனியிலே எதுக்காக வந்து நிக்றீங்க? உங்களுக்குச் சொன்னாலே புரியாது அப்பா, நாலு பேர் எங்களை என்ன சொல்லுவாங்க? உங்கப்பா குழந்தைகளைவிட மோசம்” என்று வனஜா கத்தியபோது-
வெங்கட்ராமனின் மகன்களை விட அவர் மகன் மேலானவன். அன்பைக் கொடுத்து, கண்டிப்பைப் பெறும் அவரல்லவா அதிரஷ்டசாலி! ராம சர்மாவுக்குப் பெருத்த நிம்மதி ஏற்பட்டது முதன் முதலாக.
– 01-01-1983, மங்கையர் மலர்.