கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 14, 2026
பார்வையிட்டோர்: 168 
வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அறிமுகம்

சந்திரனும் வேலய்யனும் இளமை நண்பர்கள். இருவரும் இளமையில் ஒரே வகுப்பில் பயின்று, ஒன்றாகவே விளையாடி, ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ஆனால், பத்தாவது வகுப்புக்குப் பின்னர், அவர்கள் வாழ்வில் பிரிவு ஏற்பட்டது. பிரிவு விரிந்து பரந்து ஒருவரை ஒருவர் எட்டாத அளவிற்குக் கொண்டு சேர்த்துவிட்டது.

சந்திரனுடைய வாழ்வு மேடு பள்ளம் நிறைந்தது. வேலய்யனுடைய வாழ்வு சமவெளியில் அமைதியாகச் செல்லும் பெரிய ஆற்றை ஒத்தது.

சந்திரனுடைய வாழ்க்கை அரளிச் செடியைப் போல், ஒருபுறம் கண்ணைக் கவரும் அழகும் நறுமணமும் உடைய மலர்களைக் கொண்டு, மற்றொருபுறம் அவற்றிற்கு மாறான இயல்புள்ள இலைகளைக் கொண்டிருப்பது. வேலய்யனுடைய வாழ்க்கை துளசிச் செடியைப் போன்றது. துளசிச் செடியில் அழகிய மலர்கள் இல்லை, வெறுக்கத்தக்க பகுதியும் இல்லை. மலரும், இலையும், தண்டும், வேரும் எல்லாம் ஒத்த ஒரே வகையான மணம் கமழ்வது அது.

சந்திரனைப் போல் நல்ல அழகும், கூரிய அறிவும் பெற்று அதனால் செருக்கடைந்து சீரழிந்து தாமும் கெட்டுப் பிறர்க்கும் சுமையாக வாழ்வதைவிட வேலய்யனைப் போல் அறிவு குறைவாக இருந்தாலும் சிறந்த பண்புகளைப் பெற்று அடக்கமான வாழ்வு வாழ்ந்தாலே போதும் என்ற உயர்ந்த வாழ்க்கைக் குறிக்கோள் இக் கதையைப் படிக்கின்றவர்கள் உள்ளத்தில் உருவாகும்.

“ஒரு குடும்பத்தின் தலைவியாக, பல மக்களுக்குத் தாயாக விளங்க வேண்டிய கட்டான உடம்பும், ஈரமான நெஞ்சும் படைத்த ஊழ் அந்த அம்மையார்க்குத் தனிமைத் துன்பத்தையே வாழ்வின் பரிசாக அளித்து விட்டது” என்ற வரிகளைப் படிக்கும்போது துக்கம் நம் நெஞ்சை அடைக்கிறது; வாய்விட்டுக் கதறி அழவேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது.

அத்தகைய துக்கத்தைப் பெற்ற பாக்கிய அம்மையார் தம் துன்பங்களை எல்லாம் மறந்து ஆற்றியிருந்து திருக்குறளையும், திரு.வி.க. போன்ற பெரியார்களின் நூல்களையும் படித்துப் பயன்பெற்று ஒளிவிளக்காய்த் திகழ்கிறார். அந்த விளக்கின் ஒளிபட்ட கற்பகமும் கயற்கண்ணியும் மணிமேகலையும் நற்பண்புகள் பல பெற்று வாழ்க்கைச் சிக்கலில் உழலாமல் உயர்கின்றார்கள்.

அறிவொளியை அளிக்கும் கல்வியைப் பயின்றும் மூட நம்பிக்கைகள் பலவற்றை வளர்த்துக் கொண்ட மாலன் குறுக்கெழுத்துப் போட்டியிலும், குதிரைப் பந்தயங்களிலும் பணத்தை இழந்து மனம் ஏங்குகிறான். உழைப்பு இல்லாமலும் எளிதாகவும் செல்வத்தைச் சேர்க்க மனம் எண்ணுகிறது. செம்பைப் பொன்னாக்கும் ரசவாத வித்தை காட்டும் சாமியார்களின் பின் சென்று அலைகிறான். அவன் வாழ்வில் இரக்கம் கொண்ட வேலய்யன் “எனக்கு உழைப்பில் நம்பிக்கை உண்டு, அறத்தில் நம்பிக்கை உண்டு” என்று கூறி மாலனுடைய தவறான நம்பிக்கைகளைப் போக்கும் முயற்சி பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.

“என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவு கொண்டு பழகவில்லையா? … ஆண்கள் இருவர் பழகும்போது அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் பெண்ணும் பழகும் போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம், ஏமாற்றம் எல்லாம்?” …. இமாவதியின் ஆழ்ந்த உள்ளத்திலிருந்து எழுந்த இந்தக் கேள்வியை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் எண்ணி எண்ணி விடை காண முடியுமானால், சமுதாயம் பண்பாடு மிக்கதாய் எளிதில் முன்னேற்றம் எய்தலாம்.

சீரழிந்த சந்திரன் தொழுநோயின் பிணிப்பிலேயே உழன்று வருந்திக் கடைசியாக உணர்வுபெற்று உண்மைகளையெல்லாம் வெளியிட்டு ஆத்திரத்துடன் பேசும் பேச்சுகள் உள்ளத்தை உருக்குகின்றன.

“நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பளபள என்று மின்னினேன். என் அழகையும், அறிவையும் அப்போது எல்லாரும் விரும்பினார்கள், பாராட்டினார்கள், என்ன பயன்? வர வர எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது, சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது, மங்கிவிட்டேன், நீதான் நேராகச் சுடர்விட்டு, அமைதியாக எரியும் ஒளிவிளக்கு” என்று வேலய்யனிடம் சந்திரன் கூறும் கருத்துகள் கதையின் கருப்பொருளாக அமைகின்றன.

“டே எப்போதும் இதில் வேகம் வேண்டாம்டா, வேகம் உன்னையும் கெடுக்கும், உன்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்கும்” என்று சைக்கிளில் செல்பவன் கூறும் மொழிகள் நம்மைத் தடுத்தாட் கொள்கின்றன.

“விளையாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப்படவேண்டும். தெரியுமா? நீயே அரசன் என்று எண்ணிக்கொண்டு, உன் விருப்பம் போல் ஆட முடியாது, தெரிந்து கொள்” என்று பந்தாட்டக்காரன் சொல்லும் சொற்கள் நமக்கு அறன் வலியுறுத்தலாக எண்ணிக் கொள்ளவேண்டும்.

“படிப்பு எங்கே? பண்பு எங்கே? அழகுக்கு அழகு, அறிவுக்கு அழகு, அன்புக்கு அழகு என்று விலைபோக வேண்டிய நல்ல வாழ்வுகள் பணத்துக்கு அழகு, பணத்துக்கு அறிவு, பணத்துக்கு அன்பு, என்று விலை போகும் கொடுமையை நன்றாக உணர்ந்தேன்… படித்த இளைஞர்களும், பண்புள்ள அழகிகளும் பணத்துக்காக விலைபோகும் கொடுமை வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மலிந்துள்ளதாகக் கூற முடியாது” என்று வரும் பகுதிகளைப் படிக்கும் போது, இன்று தமிழ்ச் சமுதாயத்தில் வளர்ந்து மூடியுள்ள சீர்கேடுகளை எண்ணி எண்ணிப் பண்புடையார் உள்ளத்தில் பொங்கி எழும் குமுறலையே காண்கின்றோம்.

“கோவலனுடைய தவறு நன்றாகத் தெரிந்திருந்தும் எதிர்த்துப் பிரிந்து வாழ்வதை விட, அந்தத் தவறான வாழ்வுக்கும் துணையாக இருந்து சாவதே நல்லது என்ற துணிவு கண்ணகியிடம் இருந்தது. அதனால்தான், பொருள் இழந்து வருந்திய கணவனுக்குத் தன் கால் சிலம்பைக் கொடுக்க முன் வந்தாள். கணவனைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாதபோதும் அந்த வாழ்வுக்குத் துணையாக இருந்து விட்டுச் சாகத் துணிந்த மனம் அது. அந்த மனம் எளிதில் வராது. தியாகத்தில் ஊறிப் பண்பட்ட மனம் அது. குடிகார மகனாக இருந்தாலும் அவனுக்குக் கொடுத்துக் கொடுத்துச் செல்வத்தை அழிக்கத் துணியும் தாயின் மனம் அது. அதற்கு எவ்வளவு அன்பு வேண்டும்! எவ்வளவு தியாகம் வேண்டும்!” என்ற பகுதி துறவியான இளங்கோவடிகள் கண்ணகியின் கதையைக் காப்பியமாகப் பாடிய பெருமையைப் பேசுகிறது.

தமிழ் மொழியின் ஒலிவளம், தமிழ் நாட்டின் நான்கு வகை நில அமைப்பு முதலான சிறப்புகளையெல்லாம் ஆசிரியர் எடுத்துச் சொல்லும் போது யாருக்குத்தான் மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் உண்டாகாமல் போகும்?

இன்னும் ஆசிரியரின் பொன்னான கருத்துகள் எத்தனையோ, இந்நூலில் கற்கின்றோம். வெறும் பொழுது போக்கிற்காகவே கதைகளைப் படித்துக் காலத்தை வீணாக்கிய தமிழ் மக்களை, படிக்கத் தெரிந்த இளைஞர்களை இத்தகைய கதை நூல்கள் அல்லவோ கருத்துலகத்தில் ஈர்த்து, வாழ்க்கையின் அடிப்படையில் உள்ள சிக்கல்களை எண்ணச் செய்து வருகின்றன?

கா.அ.ச. ரகுநாயகன்
திருப்பத்தூர், வ.ஆ.
31-1-1958

அத்தியாயம் – 1

பாலாற்றங்கரையில் நானும் சந்திரனும் கைகோத்து உலாவிய நாட்கள் எங்கள் வாழ்க்கையிலேயே பொன்னான நாட்கள். நானும் அவனும் ஒரே வயது உள்ளவர்கள்; ஒரே உயரம் உள்ளவர்கள். அந்த வயதில் எடுத்த நிழற் படத்தைப் பார்த்தால் நான் கொஞ்சம் தசைப்பற்று உள்ளவனாக இருந்தது தெரிகிறது. சந்திரன் அப்படி இல்லை, இளங்கன்று போல் இருந்தான். கொழு கொழு என்றும் இல்லாமல் எலும்பும் தோலுமாக இல்லாமல், அளவான வளர்ச்சியோடு இருந்தான். அப்படி இருப்பவர்கள் சுறுசுறுப்பு மிகுந்தவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். சந்திரனைப் பொறுத்தவரையில் அது உண்மையாகவே இருந்தது. அவன் மிகச் சுறுசுறுப்பாக இருந்தான்; என் தாய் என்னைப் பார்த்து அடிக்கடி கூறுவது உண்டு. “நீ சோம்பேறி, இந்தக் குடும்பமே அப்படித்தான். சந்திரனைப் பார். எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறான்! அவன் முகத்தில் இரண்டு நாள் விழித்து எழுந்தால் எந்தச் சோம்பேறிக்கும் சுறுசுறுப்பு வந்துவிடுமே. நீ நாள்தோறும் அவனோடு பழகுகிறாய்; உனக்கு ஒன்றும் வரவில்லையே!” என்பார். உடனே நான், “மெய்தான் அம்மா! பழகினால் வராது. நீ சொல்கிறபடி அவன் முகத்தில் இரண்டு நாள் விழித்து எழ வேண்டும். அதற்கு வழி இல்லை. ஒன்று, நானாவது அவன் வீட்டுக்குப் போய், அவன் பக்கத்தில் படுத்திருந்து அவன் தூங்கி எழுவதற்கு முன் எழுந்து அவன் முகத்தில் விழிக்க வேண்டும். அல்லது அவனை இங்கே நம் வீட்டுக்கு வரவழைத்து உறங்கச் செய்து, எனக்குமுன் எழாதபடி செய்ய வேண்டும்” என்று சொல்லிச் சிரிப்பேன்.

என் தாய் சொல்லியபடி உண்மையிலேயே சந்திரனுடைய முகத்தில் தனிக்களை இருந்தது. பால் வடியும முகம் என்பார்களே, அதை சந்திரனிடம் கண்டேன். பள்ளிக் கூடத்துப் பிள்ளைகள் எடுத்த நிழற் படங்களில் சந்திரன் மிக மிக அழகாகத் தோன்றுவான். என் முகமோ, என் பார்வைக்கே அழகாக இருக்காது. அப்போது சந்திரனுக்கு வயது பதின்மூன்று இருக்கும். அந்த வயதில் அவனுடைய முகம் ஒரு பெண்ணின் முகம்போல் அவ்வளவு அழகாக இருந்தது. அவனுடைய தங்கை கற்பகத்தின் முகத்திற்கும் அவனுடைய முகத்திற்கும் வேறுபாடு தெரியாதபடி அவ்வளவு அழகு அவனுக்கு இருந்தது. இரண்டு ஆண்டு கழித்து மீசை கரிக்கோடு இட்டு வளர்ந்த பிறகுதான், சந்திரனுடைய முகத்தில் மாறுதல் தோன்றியது.

அவன் நிறம் சிவப்பு, என் நிறமோ கறுப்பு. அந்த நிற வேறுபாட்டால் தான் அவன் அழகாகத் தோன்றினான் என்று அப்போதெல்லாம் எண்ணினேன். நாம் போற்றுகிற சிவப்புக்கும் தூற்றுகிற கறுப்புக்கும் அவ்வளவு வேறுபாடு இருப்பதாக ஐரோப்பியர் எண்ணுவதில்லை என்பதை வளர்ந்த பிறகு தெரிந்து கொண்டேன். நம் நாட்டுச் செம்மேனியர் கருமேனியர் ஆகிய இரு திறத்தாரையும் சேர்த்துக் கறுப்பர் என்று ஐரோப்பியர் குறிப்பிடுகிறார்கள். இது அந்த இளம் வயதில் எனக்குத் தெரியாது. ஆகையால், அவன் சிவப்பாகப் பிறந்தது அவனுடைய நல்வினை என்று எண்ணிப் பொறாமைப்பட்டேன். நான் என்ன தீமை செய்து கறுப்பாகப் பிறந்தேனோ என்று கவலையும் பட்டேன்.

அவனுடைய அழகுக்குக் காரணம் நிறம் மட்டும் அல்ல, அவனுடைய முகத்தில் இருந்த ஒரு பொலிவு பெரிய காரணம். அந்தப் பொலிவு அவனுடைய பெற்றோர்களின் நோயற்ற நல்வாழ்விலிருந்து அவன் பெற்ற செல்வம் எனலாம். பிற்காலத்தில் அவனுடைய பெற்றோர்களைப் பற்றியும் பாட்டனைப் பற்றியும் பிறர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவைகள் எல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன. அவர்கள் ஊர்ப் பெரியதனக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்; காட்டிலும் மேட்டிலும் முரட்டு உழைப்பு உழைக்காமல் நிழலில் இருந்து அளவாக உண்டு அறிவாக வாழ்ந்தவர்கள்; உழுவித்து உண்பவராகையால், மென்மையான உடலுழைப்பு மட்டும் உடையவராய், உடலின் மென்மையும் ஒளியும் கெடாமல் காத்துக் கொண்டவர்கள். பாட்டனார் ஊர் மணியக்காரர். தகப்பனார் ஊர் மன்றத்துத் தலைவர்; நிலபுலத்தை மேற்பார்வை பார்த்தலே தொழிலாகக் கொண்டவர். தாயாரும் அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தைச் சார்ந்த அழகான அம்மையார். அதனால் அந்தக் குடும்பத்தில் எல்லோருமே அழகாக விளங்க முடிந்தது.

என் குடும்பத்தை அப்படிப்பட்டதாகச் சொல்ல முடியாது. என் தாய்வழிப் பாட்டனார் உழுது பாடுபட்ட உழைப்பாளி, என் தந்தைவழிப் பாட்டனார் செல்வ நிலையில் வாழ்ந்தவர் என்றாலும், இளமையில் ஒழுங்காக வாழ்க்கை நடத்தாமல் குடியிலும் காமக் கொள்ளையிலும் ஈடுபட்டு, பொல்லாத நோய்க்கு ஆளானவர். ஆகையால் குடும்பத்தில் இருந்த அழகும் இழக்கப்படுவதற்குக் காரணம் ஆயிற்று. தவிர, குடும்பம் அவ்வப்போது உற்ற இடுக்கண்கள் பல. அதனால் உடலுக்கு ஏற்ற நல்லுணவு கொடுத்து மக்களை வளர்க்கும் வாய்ப்புப் போயிற்று. இளமையிலேயே அரைகுறை அழகுடன் பிறந்தவர்களைத் தக்க உணவின் மூலமாகவாவது திருத்தலாம். அதுவும் இல்லாமற் போகவே, இட்ட வித்திலும் குறை, வளர்த்த நிலத்திலும் குறை என்ற நிலைமை ஆயிற்று.

இவ்வளவு உண்மைகளையும் உணரக்கூடிய அறிவு எனக்கு அந்த இளமைக்காலத்தில் இல்லை. பதின்மூன்று வயதுள்ள சிறுவனாக இருந்த எனக்கு இவ்வளவு பெரிய உண்மைகளை யாரேனும் சொல்லியிருந்தாலும் விளங்கி இருக்க முடியாது. அதனால், சந்திரனை என் தாய் பாராட்டிய போதும் ஏங்கினேன்; மற்றவர்கள் பாராட்டிய போதும் பொறாமைப்பட்டேன்.

சந்திரன் சுறுசுறுப்பாக இருந்ததாக என் தாய் அடிக்கடி பாராட்டிக் கூறினார். உண்மையான காரணம் சுறுசுறுப்பு அல்ல; என்னுடன் படித்த வேறு சில மாணவர் சுறுசுறுப்பாக இருந்தார்கள். அவர்களும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்தார்கள். அம்மாவிடம் அவர்களுக்குப் பழக்கம் உண்டு. அவர்களைப் பற்றி அம்மா பாராட்டிக் கூறியதே இல்லை. ஆகையால் சந்திரனுடைய அழகின் கவர்ச்சியே அம்மாவின் பாராட்டுக்குக் காரணம் என்று சொல்ல வேண்டும். அம்மாவுக்கு என்மேல் இருந்த அன்புக்குக் குறைவில்லை. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல், அழகு குறைவாக இருந்தாலும் சுறுசுறுப்புக் குறைவாக இருந்தாலும் என்னைத்தான் தம் உயிர் போல் கருதிக் காப்பாற்றினார்; அன்புமழை பொழிந்தார். சந்திரனுடைய இளமையழகு எவ்வளவு கவர்ச்சியாக இருந்தது, என் தாயின் மனத்தையும் அந்த அழகு எப்படிக் கவர்ந்தது என்பதைப் பிறகு நன்றாக உணர்ந்தேன்.

என் தாய் மட்டும் அல்ல, சந்திரனோடு பழகிய எல்லோருமே அப்படி இருந்தார்கள் என்று சொல்லலாம். ஒருநாள் சந்திரனும் நானும் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய போது, வழியில் நெல்லிக்காய் விற்பதைக் கண்டோம். ஓர் ஏழை சாலையோரத்தில் ஒரு கோணிப்பையின் மேல் நெல்லிக்காய்களைக் கூறுகட்டி விற்றுக் கொண்டிருந்தாள். காலணாவுக்கு எட்டுக்காய்கள் என்று விற்றுக்கொண்டிருந்தாள். தோப்பு நெல்லிக்காய்கள் சத்து மிகுந்தது என்று அதற்கு முந்திய வாரம் தான் வகுப்பில் ஆசிரியர் சொல்லியிருந்தார். அது நினைவுக்கு வந்தது. நெல்லிக்காய் வாங்கலாம் என்றேன். சரி என்று சந்திரனும் வந்தான். என் சட்டைப் பையிலிருந்து ஒரு காலணா எடுத்தேன். சந்திரனும் எடுத்து நீட்டினான். கூடைக்காரி என்னிடம் எட்டுக் காய்களை எடுத்துத் தந்தாள்; சந்திரனிடமும் அவ்வாறே கொடுத்தாள். பிறகு ‘கொசுறு’ என்றேன். என் கையில் ஒரு சின்னக் காயைக் கொடுத்தாள். சந்திரன் கேட்கவில்லை, அவனுடைய முகத்தைப் பார்த்தாள் கூடைக்காரி, உடனே தனியே ஒரு மூலையில் மூடி வைத்திருந்த காய்களிலிருந்து ஒரு நல்ல நெல்லிக்காயை – தேறிய காயைப் – பொறுக்கி எடுத்து “இந்தா! குழந்தை!” என்று சந்திரன் கையில் கொடுத்து, அவனுடைய முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள். “உன்னைப் போல் எவ்வளவு அழகாக இருக்கிறது பார் இந்த நெல்லி” என்று பாராட்டும் மொழிந்தாள். “எனக்கும் அப்படி ஒன்று கொடு” என்றேன். “அய்யோ! விலை கட்டாது அப்பா!” என்றாள்.

திரும்பி வந்தோம். என் வாய் காய்களைத் தின்பதில் ஈடுபட்டபோதிலும், சந்திரனுக்கு ஏற்பட்ட சிறப்பை நோக்கி மனம் வெட்கப்பட்டது. அவனைக் குழந்தை என்று அன்போடு அழைத்த கூடைக்காரி என்னை அப்பா பட்டியலில் சேர்த்து விட்டாள். கேட்டாலும் எனக்குக் கிடைக்கவில்லை. அவனுக்குக் கேளாமலே கிடைத்தது. அதுவும் அருமையான ஒன்று கிடைத்தது. இவற்றை எல்லாம் எண்ணி வெட்கப்பட்டேன்.

மூன்றாம் வீட்டில் பாக்கியம் என்று ஓர் அம்மா இருந்தார். அவருடைய தம்பி பெட்ரோல் கடையில் கணக்கு எழுதுபவர். அந்த அம்மா இளமையிலேயே கணவனை இழந்தவர். குழந்தையும் இல்லை. அதனால் அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். குழந்தையாக இருந்த என்னோடும் என் தங்கையோடும் அன்பாகக் கொஞ்சுவார். ஆட்டங்களில் கலந்து கொள்வார். வீட்டில் ஏதாவது அடம் பிடித்து அழுதுகொண்டிருந்தால், எங்கள் அழுகுரல் கேட்டு விரைந்து வருவார். எங்களைத் தூக்கிக்கொண்டு கொஞ்சு மொழி பேசித் தேற்றுவார். வீட்டில் ஏதாவது தின்பண்டம் இருந்தால், மறக்காமல் எடுத்துக் கொண்டு வந்து எங்களுக்குக் கொடுப்பார். எங்களுக்காகவே தின்பண்டங்கள் செய்து கொண்டு வருவார் என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். பாக்கியம் செல்லம் கொடுத்து என்னை கெடுத்து விட்டதாக அம்மா அடிக்கடி சொல்வது உண்டு.

நான் செய்யும் இடக்குக்காக அம்மா என்னை அடித்தால், நான் உடனே பாக்கியத்தின் வீட்டுக்கு ஓடிப் போவேனாம். பாக்கியம் என்னை வழியிலேயே பார்த்துத் தூக்கி கொண்டு வந்து, அம்மாவை அடிப்பது போல் பாசாங்கு செய்வாராம். அதனால் நான் சில சமயங்களில் அம்மாவை எதிர்த்துப் பேசி, “இரு இரு, பாக்கியம்மாவிடம் சொல்லப் போகிறேன்” என்று மிரட்டுவேனாம். இப்படியெல்லாம் என் குழந்தைப் பருவத்தில் ஈடுபட்டிருந்த பாக்கியம், நான் பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கிய பிறகும் வரும்போதும் போகும் போதும் என்னைக் கண்டு என்னைத் தட்டிக் கொடுத்து அனுப்புவது உண்டு. வளர வளர, நான் போய்ப் பழகுவது குறைந்ததே தவிர. அந்த அம்மாவின் அன்பு குறைந்ததாகத் தெரியவில்லை. “வேலு முன் போல் குழந்தையாகவா இருக்கிறான்? என் மார்மேலும் தோள்மேலும் அழுது தூங்கியது அவனுக்கு நினைவிருக்குமா? எங்கள் வீட்டுத் தயிருக்கும் முறுக்குக்கும் ஆசைப்பட்டு என்னைத் தேடி வந்தது நினைவிருக்குமா? இப்போது பெரியவன் ஆகிவிட்டான். மீசை முளைக்கப் போகிறது. ஆனாலும் நான் மறக்கப்போவதில்லை. வேலுக்குப் பெண்டாட்டி வந்த பிறகு அவளிடமும் இவனுடைய கதையைச் சொல்லப் போகிறேன்” என்று என்னைப் பார்த்துச் சிரிப்பார். நானும் பதிலுக்குச் சிரிப்பது போல் நடித்து வெட்கப்படுவேன். நான் ஏழாம் வகுப்பில் படித்தபோது கொஞ்சம் உயரமாக வளர்ந்து விட்டேன். அந்தக் காலத்தில் பாக்கியம் என்னைப் பார்க்கும்போது புன்சிரிப்புக் கொள்வதோடு நின்றார். தட்டுவதும் பழைய கதையைச் சொல்லிச் சிரிப்பதும் இல்லை. அன்பு கைகளின் அளவில் வரவில்லை; கண்பார்வையளவிலும் புன்சிரிப்பின் அளவிலும் நின்றது. உள்ளத்தில் அன்பு இல்லாமற் போகவில்லை. வீட்டில் எனக்கென்று முறுக்கு முதலிய தின்பண்டங்கள் செய்யாவிட்டாலும், சில நாட்களில் ஏதேனும் சிறப்பான உணவு வகை செய்தால், ஒரு கிண்ணத்தில் வைத்து என் தாயிடம் கொடுத்து. “தம்பி சாப்பிடும்போது மறக்காமல் கொடு அம்மா” என்று சொல்லிவிட்டுப்போவார். அடுத்த ஆண்டில் சந்திரன் எங்கள் தெருவுக்குக் குடிவந்தான். அவன் என்னோடு நெருங்கிப் பழகியதும் அப்போதுதான். சந்திரனும் நானும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கூடம் போகும் போதும் வரும் போதும், பாக்கியம் எங்களைப் பார்த்துப் புன்முறுவல் கொள்வது உண்டு. வரவர, அந்த அன்பு எங்கள் இருவர் மேலும் பொதுவாக இருந்தது போய், சந்திரன் மேல் மிகுதியாக வளர்ந்தது. சில நாள் மாலையில் எங்கள் இருவரையும் அழைத்து உட்காரவைத்து பேசிக் கொண்டிருப்பார். அப்படிப் பேசும் போதும் சந்திரனைப் பார்த்தே மிகுதியாகப் பேசிக் கொண்டிருப்பார். நானே வலியக் கலந்து கொண்டு பேச வேண்டியிருக்கும். சில நாட்களில் சந்திரன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பேசுவார். அவனுடைய தலைமயிரை அடிக்கடிக் கோதுவார்; கன்னத்தைத் தட்டுவார்; கிள்ளுவார்; அவனுடைய கையை எடுத்துத் தன்கையில் வைத்து கொள்வார். அவ்வாறு செய்வன எல்லாம் என்னை அடியோடு புறக்கணிப்பன போல இருக்கும். வேறு யாராவது சந்திரனிடம் அவ்வாறு பழகினால் நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் என்னைக் குழந்தைப் பருவம் முதல் பாராட்டிப் போற்றியவர் இப்படி என்னைப் புறக்கணித்து வேறொருவனைப் பாராட்டத் தொடங்கியது எனக்கு மிக்க வருத்தம் தந்தது.

இந்த நிலையில் வேறொருவனாக இருந்தால் அவனை அடியோடு பகைத்துக் கைவிட்டிருப்பேன். ஆனால் சந்திரனை அவ்வாறு பகைக்க முடியவில்லை. அவன் பாக்கியத்தின் பாராட்டுச் சீராட்டுகளுக்கு மகிழ்ந்து என்னைப் புறக்கணிக்கவில்லை. மேன் மேலும் என்னிடம் அன்பு செலுத்தி வந்தான். என்னைப் பிரிந்து ஒரு வேளையும் அவன் பொழுது போக்கியதில்லை. அதனால் அவனுடைய நல்ல பண்பு என் மனத்தை அவனிடம் ஈர்த்து வைத்தது.

நெல்லிக்காய் விற்றவளும் பாக்கியமும் மற்றப் பெண்களும் இவ்வாறு அன்பு செலுத்தியது பற்றி மனம் வருந்தியது ஒரு பக்கம் இருக்க, ஆண்களிலும் பலர் அவனிடம் அன்பு காட்டியதும் எனக்கு வருத்தமாக இருந்தது. சிற்றுண்டிக் கடையில் பரிமாறுபவன் முதல் பஸ் விடுபவன் வரையில், பள்ளிக்கூட ஆசிரியர் முதல் கல்வி அதிகாரி வரையில் சந்திரனிடமே மிக்க அன்பு செலுத்தியதைக் கண்டேன். வந்த சில நாட்களுக்கெல்லாம் சிற்றுண்டிக் கடைக்காரன் அவனுக்கு நண்பன் போல் ஆகிவிட்டான். விளையாடும் இடத்திற்குச் சென்றாலும் அவனுக்கு ஆதரவு மிகுதியாகக் கிடைத்தது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களோ அவனிடத்தில் தனிநோக்கம் செலுத்தினர்; சந்திரனுடைய குற்றங்களும் அவரவர்களுக்குக் குணங்களாகவே தோன்றின போலும். போதாக் குறைக்கு அவனுடைய கையெழுத்தும் மிக நன்றாக அச்சுப் போல் அழகாக ஒழுங்காக இருந்தது. என் கையெழுத்துத் திருத்தமாக இருந்தாலும் அவ்வளவு அழகாக இல்லை. அதனாலும் அவனுக்குத் தேர்வுகளில் மிக்க எண்கள் கிடைத்து வந்தன. இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, ஆண்டுக்கு ஒருமுறை வந்து வகுப்பறையைச் சுற்றிவிட்டுச் செல்லும் கல்வியதிகாரியும் சந்திரனைத் திரும்பி நோக்கினார். வகுப்பறையிலிருந்து வெளியே சென்ற போது, சந்திரனுடைய தோள் மேல் கை வைத்துத் தட்டிக் கொடுத்து, வகுப்பு ஆசிரியரைப் பார்த்து, “இவன் படிப்பில் எப்படி இருக்கிறான்?” என்றார். “மிக நன்றாகப் படிக்கிறான்” என்று ஆசிரியர் மறுமொழி கூறியதும், “பார்த்தீர்களா? நான் அப்படித்தான் நினைத்தேன். பார்த்தாலேயே தெரிகிறது. குடும்பத்தார் நன்றாகப் படித்தவர்களாக இருக்க வேண்டும்” என்றார். “அப்படிக் காணோம்” என்று ஆசிரியர் சொன்னதைக் காதில் வாங்காமலே, சந்திரனை மறுபடியும் பார்த்துப் புன்முறுவல் பூத்துச் சென்றார்.

அதற்கு அடுத்த வாரத்தில் வரலாற்று வகுப்பில் ஆசிரியர் திருமலைநாயக்கன் வரலாற்றைக் கற்பித்துக் கொண்டிருந்தபோது, அதை விட்டுவிட்டுப் பொதுவாக மனிதப் பண்பைப் பேசத் தொடங்கி எங்கெங்கோ சென்றார். இடையில் வடிவழகையும் நிறத்தையும் பார்த்து ஓர் ஆளை விரும்புவதோ வெறுப்பதோ தவறு என்றார். டாக்டர் ஜான்சன் என்ற ஆங்கிலப் புலவரின் தோற்றம் வெறுக்கத்தக்கது என்றும், ஆனால் அவருடைய உள்ளத்தின் அழகைக் கண்டே பாஸ்வெல் முதலான அறிஞர் பலர் அவரை எந்நேரமும் சூழ்ந்து நட்புக் கொண்டு மகிழ்ந்தார்கள் என்றும் கூறினார். அம்பு நேரானது யாழ் வளைவானது. ஆனாலும் யாழையே எல்லாரும் விரும்புகிறார்கள் என்று சொல்லி ஒரு குறளையும் மேற்கோளாகக் காட்டினார். உடலின் அழகைவிட உள்ளத்தின் அழகே போற்றத்தக்கது என்றும், வடிவ அமைப்பைவிட அறிவின் நுட்பமே பாராட்டத் தக்கது என்றும் முடித்தார். கல்வியதிகாரியின் பாராட்டுக்குக் காரணம் என் நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து ஆசிரியரிடம் குறிப்பிடலாம் என்று எண்ணினேன். ஆனாலும் வாய் திறக்காமல் இருந்தேன். அந்த நினைவோ என்னைவிட்டு நீங்கவில்லை. அதிலேயே சுழன்று கொண்டிருந்தேன். வரலாற்று ஆசிரியரோ மக்கட்பண்பை விட்டுத் திருமலைநாயக்கனின் தொண்டுகளை விளக்கிக் கொண்டிருந்தார். இடையே என் முகத்தைப் பார்த்துப் பாடத்தைக் கவனிக்காமலிருந்ததை உணர்ந்தார் போலும், “வேலய்யன்!” என்றார். நான் அலறி எழுந்தேன். “நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? எங்கே எந்த சினிமாவைப் பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருக்கிறாய்?” என்றார். நான் திகைத்தேன்; விழித்தேன். “ஏன்’பா இப்படிக் காசைச் செலவழித்துப் படிக்க வருகிறீர்கள்? இங்கே வந்து சினிமா நட்சத்திரங்களைப் பற்றிக் கனவு காண்கிறீர்கள்?” என்றார். “இல்லை அய்யா!” என்றேன். “எப்படியாவது கெட்டுத் தொலையுங்கள்” என்று எனக்கு ஒரு பொதுவான சாபம் கொடுத்துவிட்டுச் சந்திரனை நோக்கிக் கேட்டார். அவன் திருமலைநாயக்கன் தொண்டுகளை ஒன்றுவிடாமல் கூறி முடித்து, ஆசிரியரின் பாராட்டுகளைக் குறைவில்லாமல் பெற்றான்.

வகுப்பை விட்டு வெளியே வந்ததும், “வேலு, உனக்கு என்ன கவலை? ஏன் பாடத்தைக் கவனிக்கவில்லை?” என்று சந்திரன் கேட்டான்; என் தோள்மேல் கை போட்டவாறு அன்போடு கேட்டான். அதனால் நானும் மறைக்காமல் உண்மையைச் சொன்னேன். சந்திரன் ஒரு பெருமூச்சு விட்டு, “அது நடந்து ஒரு வாரம் ஆச்சே! இன்னும் மறக்காமல் மனத்தில் வைத்திருந்து இவ்வளவு கவலைப் படலாமா? அந்தக் கல்வியதிகாரி என்னுடைய சிவப்புத் தோலைக் கண்டு மயங்கித்தான் அவ்வாறு சொல்லிவிட்டுப் போனார். ஆசிரியரும் அதற்கு ஏற்றாற் போல் தாளம் போட்டார். விட்டுத்தள்ளு” என்று சொல்லி என் தோள்களைப் பற்றிக் குலுக்கினான்.

“இன்றைக்கு ஆசிரியரிடம் சாபமும் கிடைத்தது” என்று வருந்தினேன்.

“ஆசிரியர்கள் என்ன; முனிவர்களா? முனிவர்களே இப்போது வந்து, சாபம் கொடுத்தால் பலிக்குமா? ஆசிரியரின் சாபத்துக்கு வருந்தலாமா? அம்மா திட்டவில்லையா? ‘நாசமாய்ப் போ, பாழாய்ப்போ’ என்று எத்தனை தாய்மார்கள் வைகிறார்கள். அவை பலிக்குமா? உண்மையாகத் தம் பிள்ளைகள் கெட்டுப்போக வேண்டும் என்றா வைகிறார்கள்? இல்லவே இல்லை, ஆசிரியர்களும் இப்படித்தான்” என்று சொல்லி என்னைத் தேற்றினான்.

அத்தியாயம் – 2

சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா, பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்தவர். சந்திரனுடைய பாட்டனார், இருந்த நிலங்களோடு இன்னும் பலகாணி நிலங்களைச் சேர்த்துக் குடும்பத்திற்குப் பெருஞ்செல்வம் வைத்துச் சென்றார். சாமண்ணா குடும்பத்தில் பெரியபிள்ளை; அவருடைய தம்பி – சந்திரனுடைய சிற்றப்பா – தமக்கு வந்த சொத்தை வைத்துக் காக்கும் ஆற்றல் இல்லாதவர்; நில புலங்களைக் கவனிப்பதை விட்டுவிட்டு, நகரங்களைச் சுற்றி அங்குள்ள ஆடம்பர வாழ்வில் பற்றுக் கொண்டார். வாரத்தில் மூன்று நாட்களாவது நகரத்தில் கழித்துவிட்டு மற்ற நாட்களைத் தம் கிராமத்தில் சலிப்போடு கழிப்பார். அப்போதும் நிலம் எப்படி தோப்பு எப்படி என்று கவனிக்காமல், ஓர் ஆலமரத்தடியில் தம் தோழர்களோடு புலிக்கோடு ஆடிக் கொண்டிருப்பார்; புலிக்கோடு மாறிச் சீட்டாட்டம் வந்தபோது, அவர் கையில் சிகரெட்டும் வந்து சேர்ந்தது. சாராயத்தோடு மேனாட்டுக் குடிவகைகளும் வந்து சேர்ந்தன. சந்திரனுடைய சின்னம்மா நல்லவர் ; நல்லவராக இருந்து பயன் என்ன? பெண் என்றால் கணவன் சொன்னதைக் கேட்டு வாய் திறக்காமல் பணிந்து நடக்க வேண்டுமே தவிர, கணவன் சீரழியும் நிலையிலும் அன்பான இடித்துரையும் சொல்லக்கூடாது; தன் உரிமையை நிலைநாட்டித் தற்காப்பு முயற்சியும் செய்யக்கூடாது. உரிமையே இல்லாத பெண் கணவன் கெடும்போது தானும் சேர்ந்து கெடுவது தவிர, வேறு வழி இல்லாதவளாக இருக்கிறாள். சந்திரனுடைய சின்னம்மா அப்படித்தான் குடும்பம் கெடுவதைப் பார்த்து, உள்ளம் நொந்து கொண்டிருந்தார். நீந்தத் தெரிந்தும், கைகால்களை மடக்கிக் கொண்டு கிணற்றில் மூழ்குவது போல் இருந்தது அவருடைய நிலைமை. கடைசியில் சிற்றப்பாவின் நிலங்கள் ஏலத்துக்கு வந்தபோது, சந்திரனுடைய தகப்பனாரே ஏலத்தில் எடுத்துக் கடன்காரனை அனுப்பிவிட்ட பிறகு தம்பியின் குடும்பத்துக்கென்று ஐந்து காணி நன்செய் நிலங்களை ஒதுக்கிவிட்டு, மற்றவற்றைத் தம் சொத்து ஆக்கிக் கொண்டார். அந்த ஐந்து காணி நிலங்களையும் தம்பியின் பொறுப்பில் விடாமல், தம்பி பெயரில் வைக்காமல், தம்பி மக்கள் இருவர்க்கும் பொதுவாக எழுதி வைத்தார். தம் பொறுப்பில் பயிரிட்டு விளைந்ததை அந்தக் குடும்பத்திற்குக் கொடுத்து வந்தார். அந்தச் செயலைப் பெருந்தன்மையானது என்று ஊரார் போற்றினார்கள். தம்பி மனைவியோ, அந்த உதவிக்காகத் தம் மூத்தவரைத் தெய்வம் போல் போற்றி அவர் கொடுத்ததைக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

தம்பி கெட்டுப் போனதற்குக் காரணம் நகரத்துப் பழக்கமே என்பது சாமண்ணாவின் உறுதியான எண்ணம். அந்த எண்ணம் சந்திரனுடைய படிப்புக்கே இடையூறாக நிற்கும் போல் இருந்தது. அந்தக் கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரையில் படிப்பதற்கே பள்ளிக்கூடம் இருந்தது. சந்திரன் எட்டாவது படித்த ஆண்டில், வீட்டுக்கு வந்தவர்கள் பலர், அவனுடைய தந்தைக்கு மேற்படிப்பைப் பற்றி வற்புறுத்தினார்கள். “இந்தப் படிப்பே போதும், நமக்கு இந்தக் கிராமத்தில் வேண்டியது என்ன? கடிதம் எழுதவும் செய்தித்தாள் படிக்கவும் வரவு செலவுக் கணக்குப் போடவும் தெரிந்தால் போதும். பையன் எட்டாவது படித்து முடித்தால் அதுவே போதும், நல்ல அறிவோடு இருந்தால், இருக்கும் சொத்தை வைத்துக்கொண்டே சீமானாக வாழலாம். நான் நாலாவது வரையில்தான் படித்தேன். அந்தப் படிப்பை வைத்துக் கொண்டே நான் இந்தக் கிராமத்திலும் பக்கத்து ஊர்களிலும் நல்ல மதிப்போடு வாழவில்லையா? இந்தப் படிப்புப் போதும்” என்று அவர் மறுமொழி கூறுவார். அவர்களோ, காலம் மாறிவிட்டது என்பதை வற்புறுத்தி, பக்கத்து நகரத்துக்கு அனுப்பிப் பத்தாவது வரையில் படிக்க வைக்க வேண்டும் என்றும், இந்தக் காலத்தில் அதற்குக் குறைவாகப் படித்த படிப்புக்கு மதிப்பு இல்லை என்றும் சொல்லி வற்புறுத்தினார்கள். நகரம் என்று சொல்லக் கேட்டதும், அவர்க்குத் தம் தம்பியின் சீர்கேடு நினைவுக்கு வரும். உடனே அவர்களைப் பார்த்து, “நீங்கள் சொல்கிறீர்கள், நானும் பார்த்திருக்கிறேன், பட்டணத்துப் பக்கம் போனால் பிள்ளைகள் கெட்டுப்போகாமல் திரும்புவதில்லை. அங்கே போய்ச் சில நாள் தங்கி வந்தால் போதும், சினிமா, ஓட்டல், கச்சேரி, ஆட்டக்காரிகள், குதிரைப் பந்தயம் இப்படிப் படிப்படியாகக் கெட்டுப்போய்க் கடைசியில் ஓட்டாண்டியாவதற்கு வழி தேடிக்கொள்கிறார்கள். அந்தப் பட்டணத்து வாழ்வும் வேண்டா; அதனால் வரும் படிப்பும் வேண்டா” என்று மறுத்துவிடுவார்.

அந்தக் கிராமத்துக்கு ஆபீசர் யாரேனும் வரும்போது இந்தப் பேச்சு, நிகழும்; கிராமத்தார்களின் உறவினராக யாராவது நகரங்களிலிருந்து வரும்போதும் இந்தப் பேச்சு நிகழும். அவர்களில் சிலர் விடாமல், “அப்படியானால் நாங்கள் எல்லாம் நகரங்களில் இருந்து படித்து முன்னுக்கு வரவில்லையா? நாங்கள் கெட்டுப் போய்விட்டோமா? நாங்கள் குடும்பத்தில் அக்கறையாக வாழாமல், ஆட்டக்காரிகளையும் குதிரைப் பந்தயங்களையும் பிடித்துக்கொண்டு அலைகிறோமா?” என்பார்கள். “நீங்கள் எல்லாம் வேறு; குளத்து மீன்கள் கடல் மீன்களைப் பார்த்து வாழ முடியுமா? கடலுக்குப் போனாலும் அந்தப் பெரிய அலைகளில் நீந்திப் பிழைக்க முடியுமா? புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையாய் முடியும்” என்று சாமண்ணா ஒரே அடியாய் மறுத்துவிடுவார்.

இந்த உறுதி நெடுங்காலம் நிலைக்கவில்லை. ஆண்டு முடிவில் எட்டாவது தேர்வு நடத்துவதற்காகப் பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். அவர் மாணவர்களின் திறமையை ஆராய்ந்தறிவதில் மிக வல்லவர். எட்டாவது வகுப்பு மாணவர்களில் சந்திரன் மிகத் திறமையாக விடைகள் எழுதியதைக் கண்டு வியந்தார் ; சிறப்பாகக் கணக்குத் தேர்வில் சந்திரன் ஒன்றுவிடாமல் போட்டு முடித்து நூற்றுக்கு நூறு எண்கள் வாங்கும் வகையில் எழுதியிருந்ததைக் கண்டு வியந்தார். அன்று மாலையில், பள்ளிக்கூடத் தலைமையாசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சந்திரனைப் பற்றியும் அவனுடைய மேற்படிப்பைப் பற்றியும் கேட்டார். ஆண்டுதோறும் இப்படிச் சில பிள்ளைகள் தேர்ச்சி பெற்று வெளியூருக்கும் சென்று மேற்படிப்புப் படித்து உயர்ந்தால்தான் ஒரு கிராமம் முன்னுக்கு வரமுடியும் என்பது அவருடைய நம்பிக்கை. அதன்படியே அவர் தணிக்கைக்குச் சென்ற ஒவ்வொரு கிராமத்திலும் அவருடைய அறிவுரையைக் கேட்டுச் சில பெற்றோர்கள் தம் பிள்ளைகளை மேற்படிப்புப் படிக்கவைத்து மகிழ்ந்தார்கள். இந்த ஆண்டில் சந்திரனைப் பற்றி நல்லெண்ணம் கொண்ட அவர், அவனுடைய மேற்படிப்பைப் பற்றித் தலைமையாசிரியரிடம் கேட்டார். தலைமையாசிரியர் சாமண்ணாவின் மனநிலையைப் பற்றியும் உறுதியைப் பற்றியும் சொன்னார். இன்ஸ்பெக்டர் வியந்தார் ; “கிராமத்தில் பொதுவாக இவ்வளவு அறிவு நுட்பம் வாய்ந்த பிள்ளைகளைக் காண்பதே அரிது. இந்தப் பிள்ளையின் கல்வியைப் பாழாக்குவதா! அது என்ன பிடிவாதம் ! போகலாம் வாருங்கள். நான் போய் அவனுடைய தந்தையிடம் பேசுவேன்” என்று சொல்லி எழுந்தார்.

சந்திரனுடைய தந்தையாரைக் கண்டதும், “உங்கள் குடும்ப நன்மைக்காக வந்திருக்கிறேன். தவறாக எண்ணக்கூடாது. நான் சொல்வதைப் பொறுமையாக எண்ணிப் பார்க்க வேண்டும். ஒன்றும் அவசரம் இல்லை. ஒரு வாரம் இரண்டு வாரம் கழித்து முடிவுக்கு வரலாம்” என்று அடிப்படையிட்டுப் பேசத் தொடங்கினார். தம் நோக்கத்தை எடுத்துரைத்தார்.

சாமண்ணா பொறுமையோடு கேட்டிருந்து, முடிவில் பழையபடி தம் தத்துவத்தை விளங்கினார். இன்ஸ்பெக்டர் சிரித்தார். “கலைமகள் வலிய உங்கள் வீட்டைத் தேடிக்கொண்டு வருகிறாள். நீங்கள் திரும்பிப் போகுமாறு சொல்லி வழியடைக்கிறீர்கள். உங்களுக்குத்தான் இந்த ஊரில் எல்லோரையும்விட நிலபுலம் மிகுதி என்று கேள்வி. நீங்களே இப்படிச் சொல்லிப் பயந்தால்…” என்று நிறுத்தினார்.

“இந்தக் காலத்தில் எப்படி அய்யா நம்புவது? நம் குடும்பத்தில் நம் வசமாக இருக்கும் வரையில்தான் நம்முடைய பிள்ளை. வெளியே போனால் அப்புறம் சொல்ல முடியாது” என்று சாமண்ணா கொஞ்சம் நெகிழ்ந்தாற்போல் பேசினார்.

அவருடைய பேச்சின் நெகிழ்ச்சியைக் கவனித்த இன்ஸ்பெக்டர் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு, “நான் உறுதியாகச் சொல்லுகிறேன், நீங்கள் ஒன்றும் பயப்படவேண்டியதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். பையன் ஒருகாலும் அப்படிக் கெட்டுப் போகமாட்டான். படிப்பு வராத மக்குப் பிள்ளைகள்தான் அப்படிக் கெட்டுப் போவது வழக்கம். உங்கள் பையன் சந்திரன் ஒருநாளும் அப்படிக் கெட்டுப்போக மாட்டான், உறுதியாய்ச் சொல்லுகிறேன். ஆடு மேய்க்கிறவனுக்குத் தான் ஆட்டைப் பற்றித் தெரியும். ஊர் ஊராய்ப் போய்ப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் திறமையைப் பார்க்கிறவன் நான். உங்கள் பிள்ளையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, எனக்குத் தான் தெரியும். இந்த ஆண்டில் எத்தனையோ பள்ளிக்கூடங்களைப் பார்த்திருக்கிறேன் ; எத்தனையோ பிள்ளைகளைப் பார்த்து வருகிறேன். அவர்கள் எல்லோரிலும் சந்திரனைப் போல் ஒருவன் இல்லை. அவன் நாக்கில் கலைமகள் வாழ்கிறாள். நான் சொன்னால் நம்புங்கள். தனியே அனுப்பிப் படிக்கவைத்தால் கெட்டுப்போவானோ என்ற பயம் இருந்தால் அப்படி வேண்டா. கடவுள் உங்களை ஏழையாகப் படைக்கவில்லை. செல்வமும் கொடுத்திருக்கிறார். செலவு ஆனால் ஆகட்டும், நகரத்தில் ஒரு சிறு வீடு பார்த்துப் பையனுடைய அம்மாவையோ யாரையோ அனுப்பிச் சமைத்துப் போடச் செய்யுங்கள். அவர்கள் பையனைக்கூட இருந்து கவனித்துக் கொள்வார்கள். எப்படியோ பையன் படிக்க வேண்டும். அதுதான் வேண்டியது. செல்வம் இன்றைக்கு இருக்கும்; நாளைக்குப் போகும். கல்வி அப்படிப்பட்டது அல்ல. யாரோ ஒருவரைத்தான் கலைமகள் தேடி வருவாள். உங்கள் குடும்பத்தை இப்போது தேடிவந்திருக்கிறாள். அவளை அவமதிக்க வேண்டா, சொன்னால் கேளுங்கள். உங்கள் பையன் படித்துப் பட்டம் பெற்று, நாளைக்கு ஒரு கலெக்டராக வந்தால், உங்களுக்கு எவ்வளவு பெருமை! ஊருக்கு எவ்வளவு பெருமை! எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு ஈடு ஆகுமா?” என்று சாமண்ணாவின் நெஞ்சைத் தொடும்படி எடுத்துச் சொன்னார்.

சாமண்ணாவின் நெஞ்சில் ஏதோ புத்துணர்ச்சி பிறந்தது. உடம்பிலே ஒருவகைக் குளுமை நாடி நரம்பெல்லாம் பாய்வதுபோல் உணர்ந்தார். ஒன்றும் பேசாமல் தலை குனிந்திருந்தார். “சரி என்று சொல் அப்பா” என்று தொலைவில் யாரோ ஒரு குடியானவனுடைய குரல் கேட்டது. சாமண்ணா தலை நிமிர்ந்து, அவன் யார் என்று பார்த்தார். இரண்டு ஆட்கள் பேசிக் கொண்டு போவதைக் கண்டார். வீட்டின் முகப்பில் ஒரு பல்லி டிக் டிக் என்றது. அது என்ன திசை என்று கவனித்து உள்ளே எழுந்து சென்று பஞ்சாங்கக் குறிப்பைப் பார்த்தார். அந்த வேளையில் அந்தத் திசையில் பல்லி சொன்னால் என்ன பலன் என்று பார்த்தார். “யோகம்” என்று இருந்தது. தம் மனைவியிடம் சென்று ஒரு பெரிய தட்டில் பழங்களும் வெற்றிலை பாக்கும் கொண்டுவரச் சொன்னார். வேலையாளை அழைத்து நான்கு தேங்காய் உரித்துவரச் சொன்னார். இன்ஸ்பெக்டரை நோக்கிப் புன்முறுவலோடு சென்று அவரெதிரே உட்கார்ந்தார்.

“ஒன்றும் அவசரம் இல்லை. பத்து நாள் பொறுத்து முடிவு செய்யலாம். பையனுடைய படிப்பு உங்களால் கெட்டதாக ஏற்படக் கூடாது. அதைச் சொல்லிவிட்டுப் போகவே வந்தேன். அவ்வளவுதான்” என்று எழுந்தார்.

“இருங்கள், வெற்றிலைபாக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும்” என்று சாமண்ணா தடுத்தார். “நீங்கள் தெரிந்துதான் சொல்கிறீர்கள். உங்களைப்போல் பெரியவர்கள் சொன்னால், அதை ஏற்றுக்கொண்டு நடக்க வேண்டியது தான்” என்றார்.

வெற்றிலை முதலியன வந்த பிறகு, இன்ஸ்பெக்டர் அவற்றில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, “நான் வந்த காரியம் முடிந்தது என்று தெரிந்து கொண்டேன். பையனுடைய நல்ல காலம்” என்று சொல்லிக் கொண்டே விடைபெற்றார்.

“அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிச் சாமண்ணா கை கூப்பினார்.

வேனில் விடுமுறை முடிந்தது. ஆனி மாதத்தில் சந்திரனும் அவனுடைய அத்தையும் வேலையாள் ஒருவனுமாக மூவரும் எங்கள் தெருவில் ஒரு வீட்டில் குடிவந்தார்கள்; சந்திரன் கிராமப் பள்ளிக் கூடத்தை விட்டு நகரப் பள்ளிக் கூடத்து மாணவன் ஆனான்.

அத்தியாயம் – 3

எங்கள் ஊர் இப்போது ஒருவகைச் சிறப்பும் பொலிவும் இல்லாமற் காணப்பட்டாலும், சிறப்போடு இருந்த பழைய ஊர்களில் அது ஒன்று. முப்பது ஆண்டுகளுக்கு முன் வாலாசாப்பேட்டை என்றால் தென்னிந்தியா முழுவதற்கும் தெரியும். தென்னிந்தியாவில் ஏற்பட்ட பழைய நகராட்சி மன்றங்களில் வாலாசா நகராட்சி மன்றமும் ஒன்று என்றால், அதன் பழைய பெருமை தானே விளங்கும். இன்று உள்ள மிகப் பழைய உயர்நிலைப் பள்ளிகளில் வாலாசாப்பேட்டை உயர்நிலைப் பள்ளியும் ஒன்று. அது ஏற்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த ஊர் எங்கள் ஊர். அதன் பழம் பெருமைக்கு வேறு இயற்கைச் சான்றுகள் வேண்டுமானால், இரண்டு சொல்லலாம், ஒன்று, நெடுங்காலமாக மக்கள் வாழ்ந்த ஊர் ஆகையால் எந்தக் கிணற்றிலும் நீர் உப்பாக இருக்கும். மற்றொன்று, மிகப் பழங்காலத்து ஊரமைப்பு ஆகையால் தெருக்கள் எல்லாம், அகலமாக அமைந்து, ஒவ்வொரு வீட்டின் முன்பும் மிகப் பழைய வேப்பமரங்கள் காலத்தை அளந்து காட்டுவனபோல் பருத்த அடிமரங்களோடு நிற்கும்.

அந்த அழகான ஊரில் எங்கள் தெரு தெற்கு வடக்காக அமைந்திருந்தது. எங்கே இருந்து பார்த்தாலும் வேப்பமரங்கள் வரிசையாய் உயர்ந்து நிற்க, வீடுகள் ஏறக்குறைய ஒரே வகையாய் அமைந்து அழகான காட்சியாக இருந்தன. இப்போது அதே தெரு பாழடைந்த காட்சியைத் தருகிறது. அந்தக் காலத்தில் பட்டு நெசவு எங்கள் ஊரில் மிகுதி. நெய்யும் தொழிலாளர்க்கு நல்ல வருவாய் இருந்தது. வயிற்றுப் பிழைப்பைப் பற்றிக் கவலையே இல்லை. பட்டுநூல்காரர் பெருகிய ஊர் அது. அதன் அடிப்படையில் வியாபாரமும் நன்றாக நடந்து வந்தது. எங்கள் தெருவின் தென்கோடியில் குதிரை வண்டிகள் நாற்பது ஐம்பது நிற்கும். ஒரு பெரிய மண்டபம் ஒன்று உண்டு. அந்த மண்டபம் ஒன்றுதான் இப்போது அழகாக உள்ளது. அதை அடுத்துச் சென்றால், காவேரிப்பாக்கத்திலிருந்து ஆர்க்காட்டுக்குச் செல்லும் பாதை குறுக்கிடும். அதன் மறு பக்கத்தில் தாலுகா நிலையமும் பதிவு நிலையமும் இருந்தன. அதனால் கிராம மக்களும் மணியக்காரர் கணக்கரும் மற்ற ஊழியர்களும் எந்நாளும் எங்கள் தெருப்பக்கம் போய் வருவார்கள். எங்கள் தெரு வழியாகத்தான் வாலாசா ரயில் நிலையத்துக்குச் செல்ல வேண்டும். ஒரே நேர்வழி. அம்மூர், சோழசிங்கபுரம் முதலிய ஊர்களுக்கும் எங்கள் தெரு வழியாகவே வண்டிகள் போகும். அதனால் இரவும் பகலும் ரயிலுக்கும் கிராமங்களுக்கும் செல்லும் மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் போனது போனபடி இருக்கும். இப்போது பஸ் போக்குவரத்து மிகுந்துவிட்டபடியால், குதிரை வண்டிகளின் தொகை குறைந்துவிட்டது. வண்டிக்காரர்க்கு இப்போது வருவாய் குறைந்துபோனதால் அவர்கள் குதிரைகளை நன்றாக வைத்திருப்பதில்லை. ஆகையால் இப்போது உள்ள குதிரைகளும் முன்போல் பார்ப்பதற்கு அழகாக இல்லை. தாலுகா நிலையத்துக்கு வருவோரும் பதிவு நிலையத்துக்கு வருவோரும் தவிர, வேறு யாரும் இப்போது எங்கள் ஊர்க்கு வருவதில்லை. நெசவுத் தொழிலும் குன்றிவிட்டது ; அதனால் வியாபாரமும் குறைந்துவிட்டது. இந்தப் பக்கத்தில் இந்த ஊரில் மட்டுமே முன்பு உயர்நிலை பள்ளி இருந்தது. அதனால் வெளியூரிலிருந்து மாணவரும் பெற்றோரும் படிப்பை நாடியும் வந்தார்கள். இப்போது பக்கத்து ஊர்களிலும் உயர்நிலைப்பள்ளிகள் ஏற்பட்டு விட்டபடியால் கல்வி காரணமாக வருவோரும் குறைந்து விட்டார்கள். முன் இந்தக் குறை எல்லாம் இல்லாத படியால், எங்கள் தெரு கண்ணுக்கு இனிய காட்சியோடு பெருமை பெற்று விளங்கியது.

இந்தத் தெருவில் எங்கள் வீடு கிழக்குப் பார்த்து அமைந்திருந்தது. நான் ஒருநாள் காலையில் வேப்பமரத்தை அடுத்த பெரிய திண்ணையின் மேல் உட்கார்ந்து, சில குச்சிகளும் நூலும் காகிதமும் பசையும் வைத்துக்கொண்டு காற்றாடி செய்து கொண்டிருந்தேன். அதற்கு வால் வேண்டுமே என்று எண்ணித் திண்ணையைவிட்டு எழுந்த போது, “தம்பி” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பினேன்.

ஐம்பது வயது உள்ள ஓர் அம்மையாரும் என் வயது உள்ள பிள்ளைகள் இருவரும் எங்கள் வீட்டெதிரே நின்றிருந்தார்கள். அந்த அம்மையார் என்னைப் பார்த்து, “23ஆம் எண் உள்ள வீடு எது அப்பா!” என்றார்.

“இது 20, இன்னும் மூன்று வீடு கழித்து இதே போல ஒரு வீடு இருக்குது பாருங்கள்” என்று வடக்குப் பக்கம் காட்டினேன்.

“எல்லா வீடும் ஒரே மாதிரி; வேப்பமரம், நீளமான திண்ணைகள் எல்லாம் ஒரே வகையாக இருந்தால் எப்படிக் கண்டு பிடிப்பது?” என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தார் அந்த அம்மையார்.

“வீட்டு எண் பார்த்தால் தெரியுமே! வா அத்தை, போகலாம்” என்று ஒரு பையன் முன்னே பரபரப்பாகச் சென்றான்.

உடனே நான் வீட்டிற்குச் சென்று ஒரு மூலையில் கொடியில் தொங்கிக் கொண்டிருந்த பழம் புடைவையில் நீளமாக ஒரு துண்டு கிழித்துக் கொண்டு வெளியே வந்தேன். வீடு கேட்டவர்கள் எங்கே என்று பார்த்தேன். நான் காட்டிய நான்காம் வீட்டின் எதிரே ஒரு மாட்டு வண்டி நின்று கொண்டிருந்தது. முன் பேசிய பையன் மட்டும் வெளியே இருந்தான். மற்றொரு பையனும் அந்த அம்மையாரும் வண்டியிலிருந்து சில சாமான்களை எடுத்துச்சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்தவர்கள் என்று தெரிந்து கொண்டேன். சரி யாரோ, போகட்டும் என்று நான் காற்றாடிக்குச் சூத்திரம் அமைக்கத் தொடங்கினேன். அளவு பார்த்துச் சூத்திரம் அமைத்த பிறகு, கிழித்து வந்த புடைவைத் துண்டை அதற்கு வாலாகக் கட்டினேன். ஒரு பெரிய வேலையைச் செய்து முடித்ததாகப் பெருமிதம் கொண்டேன்.

உடனே வீட்டிற்குள் சென்று என் வேலைத்திறமையை எல்லோருக்கும் காட்டினேன். என் தம்பி பொய்யாமொழி “அண்ணா ! அண்ணா ! எனக்குக் கொடு அண்ணா” என்று கெஞ்சினான். தங்கை மணிமேகலையோ என் திறமையைப் பாராட்டாமல், “ஓஓ ! அம்மா புடைவையிலிருந்து வால் கிழித்துக் கொண்டாயா? தெரிந்து போச்சு! இரு, அம்மாவிடம் சொல்லிவிடுகிறேன்” என்று என்னை மிரட்டினாள். அதற்குள் அம்மாவே வந்து பார்த்து, புடைவை கிழிக்கப்பட்டிருந்ததையும் பார்த்து, என் முதுகில் இரண்டு வைத்தார். அதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் என் பெருமிதம் சிறிதும் குன்றாமல், பெட்டியிலிருந்து நூலுருண்டையை எடுத்துக் கொண்டு காற்றாடியுடன் வெளியே வந்தேன்.

வீட்டுத் திண்ணை மேல் ஏறி நின்று கொண்டு காற்றாடியைச் சிறிது விட்டுப் பார்த்தேன். இரவெல்லாம் அடித்த மேல் காற்று நின்று விட்டிருந்தது. திண்ணையை விட்டு இறங்கித் தெருவில் நின்று காற்றாடியை விட்டு மெல்ல மெல்ல நூலை விட்டவாறே சிறிது ஓடினேன். காற்றாடி உயர எழுந்து பறந்தது. என் உள்ளமும் உயர்ந்து பறந்தது. வடக்கு நோக்கி மெல்ல நடந்து நூலை உயர விட்டுச் சென்றேன். எதிரே ஒரு குதிரை வண்டி வரவே, ஓரமாக ஒதுங்கினேன். ஒதுங்கியபோது காற்றாடியைப் பார்க்கவில்லை. அது ஒரு வேப்பமரத்தின் கிளையில் சிக்கிக்கொண்டது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். அந்த வேப்பமரம் 23ஆம் எண்ணுள்ள வீட்டின் முன் புறத்தில் உள்ளது. அங்குத்தான் புதிதாக வந்தவர்கள் இருந்தார்கள். திகைத்துக் கொண்டிருந்தபோது, முன் கண்ட அந்தப் பையன் வெளியே வந்து “காற்றாடியா? கிளையில் அகப்பட்டுக் கொண்டதா?” என்று சொல்லிக்கொண்டே சிறிதும் தயங்காமல் என்னைக் கேட்கவும் கேட்காமல், என் கையில் இருந்த நூலைப் பற்றி வெடுக்கென்று இழுத்தான். நூல் அறுந்ததே தவிர, காற்றாடி வரவில்லை, எனக்குக் கோபம் வந்தது. “யாரடா நீ! உன்னைக் கூப்பிட்டேனா? எனக்கு இழுக்கத் தெரியாதா?” என்று உரக்கச் சொல்லி, “மடையன், கழுதை” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அதற்குள் அவனுடன் வந்த அம்மையார் வெளியே வந்து, “என்ன அப்பா அது?” என்றார்கள்.

“ஒன்றும் இல்லை. அத்தை! காற்றாடி சிக்கிக் கொண்டது. இழுத்தேன். நூல் அறுந்துவிட்டது” என்றான் அந்தப் பையன்.

“பார்த்தாயா! உன் குணத்தைக் காட்டிவிட்டாயே! அவன் காற்றாடியை நீ ஏன் இழுத்தாய்? எதிலும் இப்படித் தானே முன்னேபோய் விழுந்துவிடுகிறாய்!” என்று பையனைப் பார்த்துச் சொன்னார். என்னைப் பார்த்து, “இரு தம்பி, எங்கள் வீட்டு வேலைக்காரப் பையனையாவது வேறு யாரையாவது கொண்டு எடுத்துத் தரச் சொல்வேன்” என்றார்.

இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த வீட்டுக்கார அம்மா வெளியே வந்து, “என்ன? காற்றாடிச் சண்டையா? ஆனிமாதம் பிறந்து விட்டதே! இன்னும் பள்ளிக்கூடம் திறக்கலையா?” என்றார். என்னைப் பார்த்ததும், “ஓ! வேலுவா? சண்டை போடாதேப்பா, இவனும் உன்னைப் போல் உங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்க வந்தவன்தான்” என்றார். உடனே அந்தப் பையனுடைய அத்தையைப் பார்த்து, “அம்மா! இந்தப் பையன்தான் வேலு. இவனைப் பற்றித்தான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நாலாம் வீட்டுப் பையன். அந்தப் பள்ளிக் கூடத்தில் தான் படிக்கிறான். போகவரத் துணையாக இருப்பான். நல்ல பையன், ஒரு கெட்ட பேச்சு வாயில் வராது” என்று என்னைப் பற்றி நற்சான்றும் கொடுத்தார்.

இப்படி அவசரப்பட்டு நூலை அறுத்த அந்தப் பையன் தான் சந்திரன். அந்த வீட்டுக்கார அம்மா என்னைப் புகழ்ந்த புகழ்ச்சியால் என் மனத்தில் இருந்த சினம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று. சந்திரனுடைய அத்தை என்னை பார்த்த கனிவான பார்வையும், பேசிய கருத்தான பேச்சும் என் மனத்தில் அன்பை விளைத்தன. வேலைக்காரப் பையன் மடமட என்று வேப்பமரத்தில் ஏறிக் காற்றாடியை என் கையில் கொடுத்தவுடன், சந்திரன் பக்கத்திலேயே உட்கார்ந்துவிட்டேன். அன்று அந்தத் திண்ணையில் தான் எங்கள் நட்பு மெல்லத் தொடங்கியது. அது ஆயுள் நட்பாக வளர்ந்துவிடும் என்று அப்போது நான் எதிர்பார்க்கவேயில்லை.

சந்திரனுடைய ஊர் பெருங்காஞ்சி என்பதும் ஊரில் எட்டாவது படித்து முடித்தான் என்பதும், உயர்நிலைப்பள்ளியில், சேர்ந்து படிப்பதற்காக வாலாசாவுக்கு வந்தான் என்பதும் நல்ல எண்கள் வாங்கி வகுப்பிலேயே முதல்வனாகத் தேறி இன்ஸ்பெக்டரிடம் நற்சான்று வாங்கி வந்தான் என்பதும் ஆகிய எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர்களோடு வந்த மாசன் என்ற அந்தப் பையனுக்குப் படிப்புத் தெரியாது என்றும் வேலைக்காக அழைத்து வந்தார்கள் என்றும், மரம் ஏறுவதில் கெட்டிக்காரன் என்றும் எல்லாவற்றையும் சந்திரனே சொன்னான். அவனுடைய தந்தை பயிர்த்தொழில் உடையவர் என்பது முதலான குடும்பச் செய்திகளை அவன் சொல்ல, என் தந்தை மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்தல் முதலான எங்கள் குடும்பச் செய்திகளை நான் சொன்னேன். அத்தை விதவை என்றும், குழந்தை இல்லாதவர் என்றும் சொன்னான். நான் பேச்சை நிறுத்துவதாக இருந்தாலும் அவன் மேலும் வளர்த்துக் கொண்டிருந்தான். புதிய இடம் புதிய ஆட்கள் என்ற தயக்கமே இல்லாமல் சந்திரன் எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான். அதனால் நானும் அவ்வாறு பேசிப் பழகினேன்.

மறுநாள் காலையில் 9 மணிக்குப் பெருங்காஞ்சிப் பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் வந்து சந்திரனை அழைத்துக் கொண்டு உயர்நிலைப் பள்ளிக்குப் புறப்பட்டார். அன்று உயர்நிலைப்பள்ளி திறக்கும் நாள் ஆகையால், நான் புதிய ஆடை வேண்டும் என்று அம்மாவிடம் போராடிக் கொண்டு வீட்டினுள் இருந்தேன். “வேலு” என்று குரல் கேட்டது. பல நாள் பழகியவன் அழைத்த குரல்போல் இருந்தது. எட்டிப்பார்த்தேன். சந்திரன் அந்தத் தலைமையாசிரியரோடு நின்று கொண்டிருந்தான். “நான்தான் கூப்பிட்டேன். நீயும் வருகிறாயா?” என்றான்.

“இதோ வந்து விடுகிறேன், இரு” என்று சொல்லி, அம்மா கொடுத்த உடையை உடுத்துக்கொண்டு புறப்பட்டேன். பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தபோது சந்திரனுடைய கை என் தோள்மேல் இருந்தது. ஆனால் அவ்வாறு அவனுடைய தோள்மேல், கைவைத்துச் செல்லும் அளவிற்கு என் மனம் துணியவில்லை.

– தொடரும்…

– மு.வரதராசன் இந்நாவலை 1958-ல் எழுதினார். அவருடைய ‘தாயகம்’ பதிப்பகம் வெளியிட்டது. இந்நாவலுக்கு 1961-ல் சாகித்ய அகாதமி விருது அளிக்கப்பட்டது.

நன்றி: https://www.projectmadurai.org/

மு.வரதராசன் மு.வரதராசன் (மு.வ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் மு. வரதராசனார்) இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அறிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் ஏப்ரல் 25, 1912 இல் பிறந்து அக்டோபர் 10, 1974 இல் இயற்கை எய்தினார். எளிய தமிழ் நடையில் திருக்குறளுக்கு இவர் எழுதிய தெளிவுரை தமிழக மக்களிடையே இன்று வரை மிகவும் பிரபலமாக உள்ளது. டாக்டர் மு.வ. பற்றிய முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *