அகதியின் பயணம்




கண்வெட்டாமல் அவன் இருட்டையே பார்த்தபடி படுத்துக்கிடந்தான். நேரம் என்னவென்று கூட உத்தேசி்க்க முடியவில்லை. பக்கத்துக்குடிசையில் ஒரு குழந்தையின் அழுகுரல் ஒரு குட்டிப்பூனை கத்துவதுபோல ஈனஸ்வரமாக கேட்டது.
அந்தக்குழந்தை ஏன் அழுகிறது என நினைத்தான். குழந்தை பசியில் அழலாம். அதன் தாய் பாலூட்டமுடியாமல் இருக்கலாம். காய்நத பாண்துண்டையும் சீனியில்லாத வெறுந்தேநீரையும் அந்தத்தாய் உணவாக உட்கொண்டிருக்கலாம். எப்படி அழுகின்ற குழந்தைக்கு அவள் பாலூட்ட முடியும்.
அவனுடைய குழந்தைகள் இரண்டும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தன. அஅவனுடைய மனைவி ஐானகி இன்னும் இரண்டு மாதங்களில் இன்னொரு குழந்தையை பிரசவிக்கப்போகின்றாள்.
அவனைப்பொறுத்தவரைக்கும் அவளுடைய இந்தப்பிரசவம் மகிழ்ச்சியானதல்ல என்று உணர்ந்தான். சீரான இருப்பிடமில்லை. சத்தான உணவில்லை. நோய்த்தடுப்பு மரந்துகளில்லை. ஒழுங்கான மலசலகூடவசதியில்லை. இந்த இலட்சணத்தில் இந்தப்பிரசவம் தேவைதானா என்று தன்னையே கடிந்துகொண்டான்.
ஐானகியும் மூன்றுமாதம்வரை இதை இல்லாமற் செய்வதற்கு பல முயற்சிகள் செய்து தோற்றாள். ”சரி ஏதோ வாறது வரட்டும்” என விட்டாயிற்று.
சிலவேளைகளில் அவள் எரிந்து விழுவாள். சிலவேளைகளில் தேம்பித்தேம்பி அழுவாள். இன்னும் சில வேளைகளில் எதுவும் பேசாமல் மௌனமாகத்திரிவாள்.
சிலநாட்களாக ஒழுங்கான வேலைகூட இல்லாதிருந்தது அவனுக்கு. பல நாட்கள் காலையில் போய் …மாலையில் வெறுங்கையோடு வந்து மூலைக்குள் முடங்கும்போது மனம் குறுகுறுக்கும். காலைமுதல் அவன் ஒருஇடமும் போகவில்லை.
மதியம்போல் வாசலில் நாய்குரைக்க …எட்டிப்பார்த்தான். காந்தியண்ணை நின்றுகொண்டிருந்தார்.
” வாங்கோ அண்ணை….” என்றான்.
” நான் இருக்கிறதுக்கு வரேல்லை….உதிலை கொஞ்சம் தள்ளி எந்த கோயிலடியிலை ஒரு தெரிஞ்சாக்கள் வீட்டலை இருக்கிறம்….கடையிலை கடன்வாங்கினவங்கள் எல்லாம் அவனவனை போயிட்டாங்கள்…ஆக்கள் எங்கையெண்டும் தெரியாது…உன்ரை கணக்கும் ஒரு ஆயிரத்தி முன்னூற்றி சொச்சம் கிடக்கு…எப்ப தாறாய்?….
”……………………”
”கடையிலை கிடந்ததுகளை சும்மாதூக்கி குடுத்துப்போட்டு இப்ப வீடுவீடா அலையவேண்டிக்கிடக்கு ….எப்ப தாறாய்?….“
” ரெண்டு மூண்டு நாளிலை தாறன்….”
”சொல்லிப்போட்டன் …எனக்கு நடைபழக்கக்கூடாது…சொன்ன தவணைக்கு தந்திடவேணும்…..” சொல்லிவிட்டு திண்ணையிலிருந்த ஐானகியை பார்த்தார்.
” மனுசியும் விசேசம் போலை கிடக்கு…உதுக்குமட்டும் குறைவிடாயள்…..” புறுபுறுத்தபடி போனார்.
”இண்டைக்கு சாப்பிடுறதுக்கு ஒண்டுமில்லை..என்னெண்டு ரண்டொரு நாளிலை தரலாம் எண்டு சொல்லுவியள்?….ஐானகி அவனைப் பார்த்தாள்.
”நாங்கள் கேட்ககேட்க ஒரு மறுப்புமில்லாம தந்த மனுசன்…என்னபாடுபட்டும் குடுக்கத்தானே வேணும்”
” அதுதான் எப்பிடிக் குடுப்பியள் எண்டு கேக்கிறன்…”
” எப்பிடியாவது குடுக்கத்தானே வேணும்…”
பின்பக்கமாக கைகளை ஊன்றி இளைத்தாள் அவள். அவளின் நெற்றியிலும்…நெற்றிப்பக்கங்களிலும் வயர்வை பூத்திருந்தது.
இரண்டு கால்பாதங்களும் வீங்கியிருந்தன.
அவனுக்கு மனதில் துயரம் பொங்கியது.
பிற்பகல்வரை அப்படியே மூலைக்குள் படுத்துக்கிடந்தான். நித்திரையில்லை. கண்களை வெறுமனே மூடிக்கொண்டு படுத்திருந்தான்.
ஐானகிக்கு கிளினிக்கில் கொடுத்த திரிபோசா மாவை சுடுதண்ணீர்விட்டு குழைத்து உருட்டி பிள்ளைகளுக்கு கொடுத்தாள். அவனுக்கும் ஒரு உருண்டையை கொண்டுவந்து நீட்டினாள். அவன் மறுக்கவில்லை. வாங்கிச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மூலைக்குள் சுருண்டான்.
ஏழுமணியிருக்கும். சோறு கொதிக்கும் வாசனை மூக்கில் நுழைந்தது.
”ஐானகி…என்ன சமைக்கிறியே…..”
”ஓம்..சுமதியக்கா ரெண்டுசுண்டு அரிசியும் கிழங்கும் தந்தவ…அதுகளிட்டையும் எத்தினைநாள் கடமைப்பட்டாச்சு…” வார்த்தைகள்சுட மனதுவலித்தது.
சுவர்மூலைக்குள் ரயர்துண்டுஒன்றை கொளுத்திப்போட்டுவிட்டு அந்தவெளிச்சத்தில் ஐானகி உணவுபரிமாறினாள்.
”நீதான் வடிவாச் சாப்பிடவேணும்…சாப்பிடு…”
தன்தட்டிலிருந்த சோற்றை அள்ளி அவள்தட்டில் போட்டான். அவள் மறுக்கவில்லை.
குழந்தைகளும் ஊதிஊதி சோற்றை உண்டன. ரயர்துண்டு எரிந்தமணம் வயிற்றைக் குமட்டியது. அவன் கையை துடைத்துவிட்டு திண்ணையில் இருந்தான். அவள் பாத்திரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு வந்தாள்.
”கால் வீங்கிறது கூடாது…இப்பிடியே கொஞ்சத்தூரம் நடந்திட்டுவாவன்…”
”ஐயோ அம்மாளாச்சி …என்னால ஏலாது….”
திண்ணையில் அமர்ந்தாள். அவள் மூச்சிழுக்கும் ஒலி அவனுக்கு கேட்டது. ”இனிமேல் இப்பிடி ஒருபாவத்தை பண்ணக்கூடாது….” மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
”காந்தியண்ணைக்கு எப்பிடிக் காசு குடுக்கிறது….”
”நீ ஒண்டுக்கும் யோசிக்காதயம்மா…நான் குடுப்பன்….”
இருட்டில் அவள் கண்களில் நீா் துளிர்த்திருப்பது அவனுக்கு தெரிந்தது. அவள் கண்ணரைத் துடைத்துவிட்டான்.
”எங்களுக்கு மட்டுமே இந்தக்கஷ்டம்…ஊரெல்லாம் தானே கஷ்டப்படுது…கொஞ்சநாளையிலை எங்கடை ஊர மீண்டிடும்…நாங்கள் போகலாம்….”
”……………………..”
”தலைவருக்கு சனம் படுகிற கஷ்டமெல்லாம் தெரியும்…அவங்களை கனநாளைக்கு விட்டுவைக்கமாட்டார்…”
”எனக்குநித்திரை வருது…பாயைப்போடுங்கோ…..”
அவன் எழுந்துபோய் யுனிசெப் கொடுத்த அந்த நீலப்பாயை விரித்தான்….வெறுந்தரையில் தூங்கிக்கிடந்த பிள்ளைகளை பாயில் தூக்கி கிடத்தினான். போர்வையால் மூடிவிட்டான்.
”ஐானகி….”
அவள் எழுந்தாள். இருளில் அவள் தடக்குப்படாமல் பார்த்து கூட்டிவந்து படுக்கவிட்டான்.
அவனுக்கு தூக்கம் வரவில்லை. அவள் உடனேயே தூங்கிவிட்டாள்..
ஐானகி அவனுடைய மாமாமகள். சிறுவயதில் மாமி இறந்துவிட்டா. அண்ணன்கள் இரண்டுபேரும் தங்கை ஒன்றும். அண்ணன் ஒருவன் யேர்மனியில்.
ஐானகி இவனை விரும்பியபோது வீட்டில் பூகம்பம் வெடித்தது. ஐானகிக்கு வெளிநாட்டில் திருமணம் பேசினார்கள். இவன் கூட்டிக்கொண்டு வந்துவிட்டான்.
”ஓடுகாலி” என்று அவர்களும் கைவிட்டுவிட்டார்கள். ஐானகியும் அவர்களிடம் வலிந்துபோவதை விரம்பவில்லை. இவன் அவள்மேல் உயிரையே வைத்திருந்தான்.
” என்ரை ராசாத்தி…”
அவள் நெற்றியில் முத்தமிட்டான் மெதுவாய்…அவள் தலையை அசைத்தாள். இடதுகையால் அவனைத்தொட்டு ”காந்தியண்ணைக்கு என்னெண்டு காசு குடுப்பியள்…? ” தூக்கக்கலக்கத்திலும் கேட்டாள்.
” அதைப்பற்றி நீ யோசிக்காதை….எப்பிடியும் நான் குடுப்பன்…”
அவள் தூங்கிப்போனாள். மெல்லிய குறட்டை ஒலி கேட்டது…
”சிவமண்ணை…உருத்திரபுரத்துக்கை வீட்டுச்சாமான் ஏத்தவேணுமாம்…வாறியளே விடியப்போவம்…..”
”அங்கையோ….”
”பயப்பிடாதேங்கோ அண்ணை….அங்கை ஆமி இல்லை…போனா கடகடவெண்டு சாமானை ஏத்திக்கொண்டு வாறதுதானே….”
” மனுசி சுகமில்லாம இருக்கிறாளடா…ம்……”
”என்ரைபாடும் அப்பிடித்தானண்ணை….வாங்கோ…போனா கையில கொஞ்சம் புழங்கும்…”
”சரி..போகேக்கை கூப்பிடு வாறன்……”
காலையில் அவன் வந்தான்.
”எங்கை போறியள்?….”
”தடுக்காதை ரெண்டுபேரும் ஒரு வேலைக்கு போறம்…பின்னேரம் தான்வருவம்…..”
”தூரவோ….”
”கிட்டடிதான்….விறகொண்டும் கொத்தாதை…தண்ணி நிரப்பி வைச்சிருக்கு குளி…உடுப்புகளை நான் வந்து தோய்க்கிறன்…”
சொல்லிச் சொல்லி வாசலுக்கு போனான்.
”போட்டு வாறன்….பிள்ளையள் கவனம்…”
உருதத்திரபுரம் பத்தாம் வாய்க்காலடி வெறிச்சோடிக்கிடந்தது….
”உனக்கு இடம் தெரியுமேயடா….?”
”ஓமண்ணை பேசாமல் வாங்கோ….”
பற்றைகளை மெதுவாக விலக்கி நடந்துகொண்டிருந்தார்கள். இன்னும் இருவர் அவர்களோடு நடந்தார்கள்.
”இது கார்த்திகேசு மாஸ்ரற்றை வீடு…இந்த வீட்டிலை இருந்து இன்னும் ஒரு நூறுயார் தானண்ணை….”
அமைதி பயமுறுத்தியது.
”எனக்கு நடைபழக்கக்கூடாது…சொன்ன தவணைக்கு தந்திடவேணும்…..”
”என்னெண்டு காந்தியண்ணைக்கு காசு குடுப்பியள்…”
காந்தியண்ணையினதும் ஐானகியினதும் குரல்கள் மாறிமாறி காதுகளில் ஒலித்தன….
” அந்தா…அதுதான் வீடு…முழுத்தளபாடங்களையும் ஏத்தவேணும்….”கூட்டிவந்தவன் பரபரத்தான்.
வீட்டின் முற்றத்தில் மாஞ்சருகுகள் நிறைந்து கிடந்தன…மாமரத்தில் இருந்து இரண்டு குருவிகள் கீச்சிட்டபடி பறந்தன.
பக்கத்துவளவில் ஏதோ செத்துப்போயிருக்கவேணும்…துர்நாற்றம்
காற்றில் கலந்திருந்தது.
”தம்பியவை பயப்பிடக்கூடாது….சந்தியிலை ரைக்டா் வந்து நிக்கும்….மளமளவெண்டு எல்லாத்தையும் தூக்கி ஏத்தவேணும்…பின்னாலை தேங்காயள் விழுந்துகிடந்தா…அதுகளையும் பொறுக்கி உரபாக்கிலை கட்டவேணும்…..விளங்குதோ….”
கூடவந்தவர்கள் தலையாட்ட இவன் தாடையை சொறிந்தபடி வீட்டை அண்ணாந்து பிரமிப்புடன் பார்த்தான்.
ஐம்பதுவருட பழைமைகொண்ட நாச்சார்வீடு….ஐன்னல் கதவுகளெல்லாம் சித்திரவேலைப்பாடுகளுடன் கூடியனவாய் இருந்தன….
வாழைகள் சில தண்ணீரில்லாமல் எரிந்து கிடந்தன…வாழைகளுக்கு அருகே கொடியில் பழைய உடுப்பொன்று கிடந்தது.
” படீர்…..படபட்…பட்பட்…..”
கூடவந்தவர்களில் ஒருவன் நிலத்தில் விழுந்துகிடந்து துடித்தான்.
”ஆமியண்ணை….ஓடுங்கோ….”
ஓடினார்கள் இருவர். இவனும் ஓடினான். பாதைபிடிபடவில்லை. தாறுமாறாக ஓடினான்…
”படீர்…பட்பட்…பட்…………”
முதுகில் ஏதோ அடித்தமாதிரி இருந்தது. தலை சுற்றியது. முதுகிலிருந்து கால்வழியாக ரத்தம் வழிந்தது.
”ஜா…ஜான….ஜான…கிகிய்ய்ய்ய்…..”
அவன் சுருண்டுவிழுந்தான். மயங்கிக்கொண்டிருந்தபொழுதில் புரியாத மொழிப்பேச்சுக்கள் மிக அருகில் கேட்டன….
– எனது ”மனிதர்கள் ” சிறுகதைத்தொகுதியில் வெளியான எனது சிறுகதைகளில் ஒன்று இது. 31.06.2005 ஈழநாதம் வெள்ளி நாதத்தில் வெளிவந்திருந்தது.
நல்ல கதை