ஃபைட்டர்




இரண்டு வாரம் லீவு முடிந்து ஆபீஸ் வந்தவுடன் என்னை வரவேற்ற செய்தி உத்தரா விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டு விட்டாள் என்பதுதான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. உத்தராவா? அவள் ஃபைட்டர் ஆச்சே!
உத்தரா எங்கள் வங்கியில் பணிபுரியும் அதிகாரி. வயது சுமார் 28 இருக்கும். கணவன் ஒரு மென்பொறியாளன். இரண்டு வயது மகள். இங்கு உத்தரா பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவள் மிகுந்த தைரியசாலி மட்டுமல்லாது சற்று வாயாடியும் கூட. நன்றாக சிரித்துப் பேசிப்பழகும் அவள் தவறு என்று தெரிந்தால் யாரையும் விட்டுவைக்க மாட்டாள். அது மேனேஜராக இருந்தாலும் சரி வாடிக்கையாளராக இருந்தாலும் சரி. சரி தவறு என்பதை ஒரு கோடு கிழித்து பிரித்து வைத்திருப்பாள்.
என் மீது மிகுந்த மரியாதை உண்டு. இருந்தும் ஒரு முறை ஒரு கஸ்டமர் அட்ரஸ் சான்று கொண்டுவர மறந்து விட்டேன். கொஞ்சம் அவசரம். எனக்குப் பாஸ்புக்கில் புது அட்ரஸ் மாற்றித்தர இயலுமா என்று கேட்டார். அவர் முகம் பார்த்து நான் மாற்றியும் தந்தேன். அது அடுத்தகட்ட authorisation க்காக உத்தராவிடம் சென்றது. தகுந்த சான்று இல்லை என்று பார்த்த அவள் authorise செய்ய மறுத்துவிட்டாள்.

நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவள் தன் ஸ்டாண்டை மாற்றிக்கொள்ளவே இல்லை. கடைசியில் கஸ்டமருக்கு வீடு சென்று சான்று எடுத்து வர வேண்டியதாச்சு.
இப்படிப்பட்ட உத்தராவா விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டு விட்டாள் ?
அவளுக்குச் சுமார் நாலு வருஷம் முன்னால் கல்யாணம் ஆனது. காதல் கல்யாணம். நல்ல ஆசையான கணவன். சந்தோஷமான குடும்பம். ஒரு மகளும் பிறந்தாள். நல்ல சூட்டிகையான குழந்தை. சில சமயம் அம்மாவுடன் ஆபீஸ் வரும். அப்போதெல்லாம் அங்கிள் அங்கிள் என்று என்னுடன் ஒட்டிக்கொள்ளும்.
இப்படிப்பட்ட உத்தராவுக்கு ஒரு சோதனை வந்தது. அவள் கணவனின் வேலை போனது. மென்பொறியாளன் என்றாலும் வயது கூடியதால் வேறு வேலை கிடைக்க நாளானது. அப்புறம் அங்கே இங்கே சொல்லி ஒரு வேலை அமைந்தது. பெங்களூரில்.
உத்தராவுக்கு transfer கிடைக்காததால் அவன் மட்டும் பெங்களூர் சென்றான். அவன் வாழ்க்கையிலும் ஸினிமாட்டிக்காக ஒரு ஸீன் வந்தது. அவன் கூட வேலை பார்த்த ஒரு கன்னடப் பெண் அவன் மீது காதல் கொண்டாள்.
இந்த விஷயம் கூட அவனே சொல்லித்தான் உத்தராவுக்குத் தெரியும். ‘நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறோம், அதனால் டைவர்ஸ் அப்ளை செய்யப்போகிறேன் ‘ என்று ஒருநாள் ஹோட்டல் போகப்போகிறோம் என்பதுபோல சாதாரணமாகச் சொன்னான் ஃபோனில்.
உத்தரா நிலைகுலைந்து போய்விட்டாள். ஒரு நாள் இந்த விஷயம் எங்களுக்கும் தெரியவந்தது.
நான் கூப்பிட்டுப் பேசினேன். அழுதாள். என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டேன். நான் ஏதாவது உதவலாமா என்றும் கேட்டேன். அழுகையைத் துடைத்துக்கொண்டு திடமான குரலில் சொன்னாள் “வேண்டாம் சார், நான் அவனுக்கு டைவர்ஸ் தரப்போவதில்லை. கடைசிவரையில் ஒரு கை பார்க்கப்போகிறேன்”
“அவன் செஞ்சது தப்பு. தப்பு செஞ்சுட்டு தண்டனை இல்லேனா எப்படி? கண்டிப்பா அந்தப் பெண்ணோட வாழவிடமாட்டேன்.”
நான் திகைத்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அப்புறம் ஒரு சொந்த வேலையாக நான் இரண்டு வாரம் லீவில் சென்றுவிட்டு இதோ இன்று திரும்பினால் இந்தச் செய்தி!
எப்படி நடந்தது?
சற்றுநேரத்தில் உத்தரா வந்தாள். முகம் நார்மலாக இருந்தது. என்னைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தாள். நலம் விசாரித்தாள். அப்புறம் வேலையில் பிசி ஆகிவிட்டாள் .
லஞ்ச் டைமில் வைத்து அவளிடம் கேட்டு விடுவது என்று முடிவுசெய்தேன். அதற்கு அவசியமே இல்லாதபடி அவளே பேச்சை ஆரம்பித்தாள்.
“சார், நான் டைவர்ஸ் தர்றதா முடிவு செஞ்சு அவனுக்கும் சொல்லிட்டேன்.”
நான் சற்றுநேரம் அவளையேப் பார்த்தேன். பின்னர் “எப்படி ஒத்துக்கிட்டாய்? நீ ஃபைட்டர் ஆச்சே” என்றேன்.
“ஃபைட்டர் தான் நான் இப்பவும். அவனுக்கு டைவர்ஸ் தராமல் என்னால் இழுத்தடிக்க முடியும். அந்தப் பெண்ணோட வாழ விடாமல் செய்யவும் முடியும். ஆனா அந்தப் போராட்டத்துல காயப்படப் போறது நான் மட்டுமில்ல. என் மகளும்தான். அவ தப்பே இல்லாமல் அவள் பல கஷ்டங்கள சந்திக்கணும்.
அதும் இல்லாம ஒரு பெண்ணை வளர்க்கறது கூட ஒரு போராட்டம் தான். அந்தப் போர்ல ஜெயிக்க நான் இந்தப் போர்ல தோற்க வேண்டி வந்தாலும் வரலாம். எப்ப அவன் டைவர்ஸ் வரை போயிட்டானோ அப்பவே நான் காதலிச்சவன் செத்துட்டான் என் வரைல. அவனுக்காக என் மகள் வாழ்க்கைய நான் ஏன் போர்க்களம் ஆக்கணும்? Sometimes you have to lose a battle to win the war. இல்லையா சார்? என்றாள்.
“உத்தரா நீ இப்பவும் ஒரு ஃபைட்டர்தான்” என்றது என் மனம்.