கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 15, 2021
பார்வையிட்டோர்: 13,156 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதை உறுப்பினர்

ஆடவர்
1. வின்ஸெத்தியோ: வீயன்னா நகர்த்தலைவன் – மாற்றுருவில் – துறவி
2. ஏஞ்செலோ: வின் ஸெந்தி யோவைக் குறை கூறிய கூட்டத்தின் தலைவன் – எஸ்காலஸ் பெருமகன் ஆதரவுடன் நகர்த்தலைவனானவன் – மேரியானா கணவன் – அவளைத் துறந்து போலித் துறவியானவன்.
3. எஸ்காலஸ் பெருமகன் : முதல் அமைச்சன் – வின்ஸெந்தி யோவைக் குறை கூறி ஏஞ்செலோவை ஆதரித்தவன்.
4. கிளாடியோ : நகர் இளைஞன் ஜூலியட்டின் காதலன் – இஸெபெலின் தம்பி.
5. லூஸியோ : கிளாடியோவின் நண்பன்

பெண்டிர்
1. இஸபெல்: கிளாடியோவின் தமக்கை – ஜூலியட்டின் உயிர்த் தோழி – கிளேர் நாச்சியார் மடத்து முதற் பயிற்சித் துறவி.
2. ஜூலியட்: இஸபெலின் எஸ்காலஸ் பெருமகன் உயிர்த்தோழி – கிளாடியோவின் காதலி.
3. மேரியா: ஏஞ்செலோவால் துறக்கப்பட்ட மனைவி.

கதைச் சுருக்கம்

வீயன்னா நகரத்துத் தலைவன் வின்ஸெந்தியோ ஈரநெஞ் சுடையவன். களவான காதலுக்கு அந்நாட்டுச் சட்டம் தூக்குத் தீர்ப்புக் கொடுத்தபோதிலும் அதனை அவன் வலியுறுத்தவில்லை. இதற்காக அவனை எதிர்த்தவருள் தலைவனான ஏஞ்சொலோவைத் தற்காலிகமாக நகர்த் தலைவனாக்கிவிட்டு வெளியேறி அவன் துறவி உருவில் மீண்டும் வந்து மறைவாய்ப் புதிய தலைவன் போக்கைக் கவனித்து வந்தான். அப்போது ஜூலியட் என்ற பெண்ணைக் காதலித்ததற்காகக் கிளாடியோ என்ற இளைஞன் இந்தச் சட்டப் படி சிறைப்பட்டான். அவன் தமக்கை இஸபெல் கிளேர் நாச்சியார் மடத்துப் பயிற்சி நிலைத்துறவி. கிளாடியோவுக்காகப் பரிந்து பேசவந்த அவளிடம் ஏஞ்செலோ உள்ளூரக் காதல் கொண்டு தன்னை மணப்பதாயின் அல்லது விருப்பத்திற்கு இணங்குவதாயின் அவள் உடன் பிறந்தானைக் காப்பதாகக் கூறினான். அவள் அதனை மறுத்துவிட்டபோதிலும், துறவியுறுக்கொண்ட வின்செந்தியோ வின் தூண்டுதலால் இணங்குவதாகக் காட்டி ஏஞ்செலோவினால் துறக்கப்பெற்ற மனைவி கற்பரசியாகிய மேரியானாவை அவனிடம் அனுப்பினாள். இப்படியும் அமையாது ஏஞ்செலோ கிளாடியோ வைக் கொல்ல உத்தரவிடும் அளவில் வின்செந்தியோ தன்னுருக் காட்டி எல்லாம் விளக்கிக் கிளாடியோவைக் காத்து ஜூலியட்டை மணக்கும்படி செய்ததுடன் இஸபெலின் கற்பை வியந்து அவளைத் தானே மணந்து கொண்டான்.

1. சட்டப் பொறி

வீயன்ன நகரம் முன்னாட்களில் ஒரு குடியரசா யிருந்தது. அதன் தலைவன் வின்ஸெந்தியோ அன்பும் அருளும் நிறைந்த உள்ளம் உடையவன். மக்கள் தவறி நடந்தவிடத்துக் கூடிய மட்டும் திருத்த முயலு வானேயன்றிச் சினங்கொள்ளவோ கடுமையாகத் தண்டிக்கவோ மாட்டான். அந்நாட்டுச் சட்டங்களுள் சில அவனுக்கு மிகக்கடுமையாகப்பட்டன. அவற்றை அவன் கையாளாமல் கூடியவரை விலக்கியும் இன்றியமையா இடங்களில் அருமையாக வழங்கியும் வந்தான். அச் சட்டங்களுள் ஒன்று, தம் மனைவிய ரல்லாத பெண்களுடன் உறவு கொண்டவரைத் தூக்கிலிட வேண்டும் என்பது. சொல்லளவில் இச்சட் டம் பிறர்மனை நயப்பவரை மட்டுமல்லாமல் காதல ரையும் உட்படுத்துவதாயிருந்தது. ஆயினும் காத லரைப் பொறுத்த மட்டில் தலைவன் இச் சட்டத்தை நடைமுறையில் வழங்காமலே விட்டுவிட்டான். ஆகவே அதன் குரங்குப் பிடிக்கு அஞ்சி ஓடி ஒளிந்து காதலித்த இளைஞர் இப்போது அச்சமின்றி மங்கையருடன் காதல் கொள்ள முடிந்தது..

இளைஞரும் மங்கையரும் இங்ஙனம் கட்டுப்பா டின்றி வெளிப்படையாகக் காதல் வாழ்க்கை வாழ் வது அந்நகரத்துப் பெருமக்கள் பலருக்குப் பிடிக்க வில்லை. அவர்கள் தலைவனது இளக்க மனமுடைய நடையைக் குறை கூறினர். முதல் அமைச்சனாகிய எஸ்காலஸ் பெருமகனும் இத்தகையோர் பக்கமே நிற் பது கண்ட தலைவன் , ‘நீங்கள் உங்கள் மனப்படி ஒரு தற்காலிகத் தலைவனைத் தேர்ந்தெடுத்து ஆட்சி நடத்துங்கள். நான் போலந்து நாடு சென்று சற்று ஓய்வெடுத்துக்கொண்டு வருகிறேன். உங்கள் ஆட்சி நன்றாக நடப்பதா யிருந்தால் அதனையே நானும் தொடர்ந்து நடத்தலாகும்,’ என்றான்.

தலைவனைக் குறைகூறுவோர் கூட்டத்தில் ஏஞ்செலோ! என்பவன் ஒருவன். அவன் தன் மனைவியைத் துறந்துவிட்டு அதன்மேல் இல்வாழ்க் கையையே நாடாதிருந்தான். ஆதலால் அவனைப் பலரும் துறவி என்றும், ஒழுக்கம் உடையவன் என் றும் போற்றி வந்தனர். அவனது கண்டிப்பு தலை வனது வழவழப்பிற்கு ஒரு மாற்று ஆகும் என்று மக்கள் நினைத்தனர். நினைத்து அவனையே தமக் குத் துணைத்தலைவனாக்கிக் கொண்டனர். அதன் பின் சில நாட்களுக்குள் தலைவன் போலந்துக்குப் போவதாகச் சொல்லிவிட்டுப் பயணமானான். ஆனால் உண்மையில் அவன் வேறெங்கும் போக வில்லை. நகரத்திலிருந்து வெளியே போய் மடத்துத் துறவி என மாற்றுருக் கொண்டு திரும்பி வந்து என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந் தான்.

தலைமை ஏற்ற சில நாளைக்குள் ஏஞ்செலோ தனது கண்டிப்பைக் காட்ட இடம் ஏற்பட்டது. அந் நகரில் கிளாடியோ2 என்ற ஒரு நல் இளைஞன் இருந்தான். அவன் தமக்கையாகிய இஸபெல்’ அங்குள்ள கிளேர் நாச்சியாரது கன்னிமாடத் தில்4 துறவியாகச் சேர விரும்பி அதற்கான முதற் பயிற்சிகளைக் கையாண்டு கொண்டிருந்தாள். அவளு டைய தோழி ஜூலியட் ஓர் அழகிய நங்கை. கிளாடியோ அவளை விரும்பிக் காதலித்தான். அவன் அவளை மணஞ் செய்துகொள்ளும் விருப் பினனாயினும், அந்நகர் வழக்கப்படி அதன் முன்னாகவே அவளுடன் அளவளாவி வாழ்வானாயினன் இதுவரையில் நடைமுறைபிலில்லாமல் இன்று நடை முறையில் திடீரென வர இருக்கும் சட்டம் தவறான காதலைமட்டுமே கண்டிப்பது ஆயினும், சொல் அளவில் தன்னையும் அகப்படுத்தவல்லது என்று அவன் அறியாது அதன் பொறியுட்பட்டான்.

நகர்க் காவலர் ஒரு குற்றவாளியைப் பிடித் துக் கொண்டு போவது போல் அவனைக் கொண்டு போய்ப் புதிய தலைவனாகிய ஏஞ்செலோவின் முன் விட்டனர். தனக்கேற்பட்ட புதிய நிலையையும் மதிப்பையும் எண்ணி வெறி கொண்டிருந்த ஏஞ் செலோ, சட்டத்தின் கண்டிப்பைக் காட்ட இது நல்ல வாய்ப்பு எனக் கொண்டு கிளாடியோவுக்குத் தூக்குத் தண்டனை தரும்படி தீர்ப்பளித்து விட்டான்.

கற்பைக் காக்க வேண்டும் சட்டம் காதலைப் பலி கொள்ளலாயிற்று.

கிளாடியோவின் சிறு குற்றத்திற்குக் கொலைத் தீர்ப்பளிப்பது கொடுமை என்பதைப் பலரும் எடுத் துக் காட்டினர். ஏஞ்செலோ தலைவனாக வரவேண்டு மென்று முயன்ற எஸ்காலஸ் பெருமகன் கூட இத் தண்டனையால் இச் சட்டத்திற்கே கெட்ட பெயர் வரும் என்று கூறினான். ‘ கிளாடியோவுக்காக அன்றாயினும் அவனைக் காதலித்த மங்கைக்காக வேனும் அவனை மன்னித்துத் தண்டனையைக் குறைத்தருளுக,’ என்று அவன் வேண்டினான். ஆனால் ஏஞ்செலோ, ‘ அங்ஙனம் முதல் முதலாகவே இச் சட்டம் வெறும் பூச்சாண்டி யென்று காட்டிவிட்டால் பின் அதனை யார் மதிப்பர்?’ என்றான்.

இன்னொருபுறம் கிளாடியோவின் நண்பனாகிய லூஸியோவும் மன்றாடிப் பார்த்தான். எல்லாம் வீணாபின். காவலர் கிளாடியோவைச் சிறைக் கூடத்திற்குக் கொண்டு போயினர். அரும்பாடு பட்டு லூஸியோ சிறைக் காவலர்களை வசப்படுத்திச் சிறைக் கூடத்திற்குள் சென்று கிளாடியோவைப் பார்த்தான். அப்பொழுது கிளாடியோ, ‘ அன்ப, எனக்காக ஒரு காரியம் மட்டும் இன்னும் நீ செய்ய வேண்டும். கிளேர் நாச்ரியார் கன்னிமாடம் சென்று என் தமக்கையிடம் செய்தி தெரிவிப்பாயாக! ஒரு வேளை அவள் ஏஞ்செலோவிடம் நேரில் சென்று கேட்டால் எனக்கு மன்னிப்புக் கிடைக்கலாம். அவள் சொல் திறமும் நயமும் உடையவள்,’ என் றான். லூஸியோ அப்படியே ஆகட்டும் என்று இணங்கி இஸபெலைக் காண அக் கன்னிமாடத்தை நோக்கிச் சென்றான்.

மாடத் தலைவியின் இணக்கம் பெற்று இஸ பெலை அணுகி லூஸியோ கிளாடியோவுக்கு நிகழ்ந் தவை அனைத்தும் கூறினான். முதலில் இஸபெல் அதனை நம்பக்கூடவில்லை. ‘ ஜூலியட்டும் கிளாடி யோவும் ஒன்றாக வாழ்வதில் தவறென்ன? அவர் கள் தாம் மணம் புரிந்து கொள்ளப் போகிறவர்கள் என்பதை நகரமுற்றும் அறியுமே. கிளாடியோ அவளை மணம் புரிய மறுத்தாலன்றோ அவன் குற் றம் செய்தவன் ஆவான்,” என்றாள் அவள்.

லூஸியோ: அம்மணி! அக்காலம் வேறு; இப் போது வீயன்னாவில் நாமனைவரும் மறந்துவிட்ட ஒரு சட்டம் புதுப்பிக்கப்பெற்று நடப்புக்கு வரு கிறது. உண்மையில் அது கற்பைக் கெடுப்பவரைத் தண்டிக்க எழுந்த சட்டமேயாயினும், சொல் அளவில் மணமாகாதவர் அனைவரையும் குறிக்கிறது. சூதறியாத கிளாடியோவை ஏஞ்செலோ இச் சொற்பொறியிற் பிடித்துத் தண்டித்துவிட் டான். எங்கள் மொழி ஒன்றும் அவனிடம் செல்ல வில்லை. கிளாடியோ ஏதோ தங்கள் திறனிலேயே நம்பிக்கை வைத்திருக்கிறான்.

இஸபெல்: நான் பெண்ணாயிற்றே, அதிலும் துறவி ; நான் என்ன செய்யக்கூடும்?

லூஸியோ: ‘ அம்மணி, தாங்கள் பெண்ணா யிருப்பதனாலேதான் தங்கள் சொல் ஏஞ்செலோ வின் நெஞ்சைக் கனியவைக்கக் கூடும் என்று எண்ணுகிறேன். தாங்கள் துறவியா யிருப்பது அவன் தங்களை இன்னும் மதிக்கவே இடமாகும். தங்கள் சொல் நயத்தாலும் திறத்தாலும் தான் பிழைக்கக்கூடும் என்று கிளாடியோ நம்புகின்றான்.’

இஸபெல்: ‘கடவுள் துணை செய்வாராக. நான் என்னாலாவதைச் செய்கிறேன். நீ போய்க் கிளாடி யோவைக் கண்டு நான் போகும் விவரம் கூறித் தேறுதல் கூறுக.,

2. நடுநிலையா? அருளா?

லூஸியோ போனதும் இஸபெல் தனது முக் காட்டை அந்நாட்டு வழக்கப்படி இழுத்து முகத்தை மூடிக்கொண்டு தலைவர் மாளிகையை நோக்கி நடந் தாள். பொது மன்ற வேலை முற்றும் முடிந்தபின் ஏஞ்செலோ தன் இருக்கை சென்றான். அவனைத் தொடர்ந்து சென்று இஸபெல் அவன் முன் பணிந்து நின்றாள். அடி முதல் முடிவரை வெண் துகில் போர்த்து நின்ற அவளது பொன் வடிவம், வாடி வதங்கித் துயரே வடிவெடுத்து வந்தது போலிருந்தது.

ஏஞ்செலோ: அம்மணி, தங்களைப் பார்த்தால் உயர்குடி மாதராகத் தோற்றுகிறது. உடையோ துறவி உடை. தாங்கள் கண்ணீரும் கம்பலையுமாய்க் காணப்படுகிறீர்களே! தங்கள் போன்ற துறவி களுக்கும் வருத்தந் தரும் துயர் எதுவோ?

இஸபெல் : குடிகள் குறை தீர்க்கும் குடியாண் மைத் தலைவ! துறவிகள் தாமாகக் கவலையை உண்டு பண்ணிக் கொள்ளாதவர்களே யாயினும், பிறப்பால் துயருக்கு உரியவர்களே. அத் துயரைப் பொறுமையுடன் தாங்கவும் வேண்டியவர்கள். ஆனால், இன்று தங்களால் தீரவேண்டும் குறை ஒன்றுடையேன்.

ஏஞ்செலோ : நாட்டின் சட்டத்திற்கும் என் திறனுக்கும் உட்பட்ட எதனையும் நான் செய்யப் பின் வாங்கேன். உமது குறையைக் கூறுக.

இஸபெல் : என்னுடைய தம்பி கிளாடியோ ஒழுக்கமும் நேர்மையும் உடையவன். அவன் ஜூலியட்டிடம் கொண்ட காதலும் உண்மையான காதலே. அவளை மணந்து கொள்ளும் எண்ணமே உடையவன். அப்படி இருக்க அவனை நீங்கள் இச் சட்டத்தின் கீழ்த் தூக்குத் தீர்ப்பளிப்பது கடுமை யன்றோ ? அருள் கூர்ந்து அத் தண்டனையைக் குறைக்க வேண்டுகிறேன்.

ஏஞ்செலோ : அம்மணி, இவ்வகையில் என் தீர்ப்பை மாற்ற வழியில்லை. அவன் இறக்க வேண் டியவனே.

இஸபெல் : இறைவன் கூட நடுநிலையுடன் கருணை யும் உடையவரா யிருப்பதனா லன்றோ நாம் இரு வினைப் பயனாகிய நாகச் சுழலினின்றும் விடுபட முடிகின்றது. ஆகவே, தாங்கள் அருளுக்கெதிராக இந் நடுநிலையை வழங்கலாமா?

ஏஞ்செலோ : அம்மணி, அருள் வழங்குவதற் குத் துறவியருடைய மடங்கள் இருக்கின்றன. நான் சட்டத்தை ஒட்டி அரசியலை நடத்த வேண்டியவன். நான் அதினின்றும் விலக முடியாது. வீணே கேட்க வேண்டாம்.

இஸபெல் இனி நிற்பதில் பயனில்லை என்று திரும்ப விருந்தாள். ஆனால் அச்சமயம் லூஸியோ அவளை வாயிலினருகில கண்டு, அம்மணி , அவர் எவ் வளவு கடுமையாகச் சொன்னாலும், நீங்கள் மனம் உளையக்கூடாது. காரியம் கைகூடும் வரை நீங்கள்

முயன்று அவர் மனத்தில் இரக்கத்தை உண்டு பண்ணவே வேண்டும்,’ என்றான்.

ஏஞ்செலோவிடம் தனக்கேற்பட்ட கசப்பை அடக்கிக்கொண்டு இஸபெல் மீண்டும் ஒருமுறை ஏஞ் சொலோவை அணுகினாள். பற்றற்ற துறவி யாகிய அவள் உள்ளத்தில் உள்ளடங்கிநின்ற சினத் தின் தாக்கினால் அவள் உடல் காற்றிலாடும் தளி ரெனத் துடித்தது. சினத்தினால் பயனில்லை, தன் தம்பியின் உயிர் அவன் கையிலிருக்கிறது என்ற எண்ணத்தினால் துயர் பொங்கி எழுந்தது. கண்ணீர் ஆறாகப் பெருக அவள் அடியற்ற மரம் போல் ஏஞ் செலோவின் காலடிகளில் வீழ்ந்து அவற்றைப் பற்றிக்கொண்டு, ‘இந்நகரத்துக் குயிர்போன்ற காவ லரே! தம்பிக்காக அன்றாயினும் எனக்காகவாவது இத் தண்டனையைக் குறைத்தருள லாகாதா? என் தம்பி மணமாகப் போகும் நிலையிலுள்ள இளைஞன். சாவுக் குரியவன் அல்லன். உணவுக்காக ஆடு கோழி அறுப்பவர்கூட அதனை இத்தகைய பருவத் தில் அறுக்கத் துணியாரே! அண்ணலே, தாங்க

ளும் அவன் போன்ற இளைஞர்தாமே ; தமது நெஞ். சைத் தொட்டுத்தான் பாருங்கள். தாங்கள் துறவு வாழ்வு வாழ்பவரா யிருந்தாலும், தங்கள் நெஞ்சத் தின் உட்கிடக்கையுள் அவன் மனத்துத் தோன்றும் அதே ஆர்வம் இல்லையா ! பார்த்து அதற்காக வேனும் அவனிடம் அன்புகூறுங்கள் ,’ என்றாள்.

இச் சொற்கள் எதிர்பாரா வகையில் அவன் நெஞ்சைப் பிளந்து கொண்டு சென்றன. துறவி எனப் பெயர் தாங்கினும் தன்னலம் துறவாச் சிறி யோனாகிய ஏஞ்செலோவுக்கு இஸபெலின் தூய உள்ளமும் அவள் துன்பத்தின் ஆழமும் தென்பட வில்லை. அவள் மொழிகளைத் தன் சிறுமைக் கேற் பப் பொருள் படுத்திக் கொண்டான். இறைவனது அருளழகு துன்பத்தாலேதான் வெளிப்படும் என்பர். அதுபோல் பெண்களது முழுக் கவர்ச்சியும் அவர்கள் துன்பத்திலேதான் காணப்படும். இஸ பெலின் வடிவழகும் அவள் சொல் நயமும் கல்லையும் கனிவித்து அதிற் கடவுளது அருளை ஊட்டத்தக்கது. ஆனால் ஏஞ்செலோ போன்ற அன்பிலாப் புறத் துறவியர் உள்ளம் கல்லினும் கடுமையான தாதலின் அதற்கு இதுவரை இடந்தர வில்லை. ஆனால் ‘கிளாடியோ இளைஞன் – மணமாக வேண்டும் நிலை யுடையவன் – அவனுக்காக அன்றாயினும் எனக் காக – தாமும் இளைஞர் தாமே ‘ என்ற மொழிகள் அவனது மேற்படையான துறவைக் கிழித்து அவ னுடைய உண்மை விலங்கியல்பைக் கிளறிற்று. எனவே, இஸபெல் எதிர்பாராத வகையில் அவனது மனத்தில் அது தீய எண்ணங்களை உண்டுபண்ணிற்று .

‘தங்கள் நெஞ்சைத் தொட்டுப் பாருங்கள், என்ற மொழிகள் காதில் விழுந்தபோதுதான் அவ னுக்குத் தன் மனத்தில் இஸபெல்மீது தீய பற்று உண்டாய்விட்டது என்று தெரிந்தது.

செய்தி இன்னது என்றறியாமல் ஊழ்வலியால் உந்தப்பெற்று அவள் , மேலும், “தலைவரே ! எனது வேண்டுகோளைப் புறக்கணித்து என்னை விட்டுச் செல்லாதீர் ; என் துயரைப் பாராது முகந் திரும்பு கின்றீர் ! என் பக்கமாகத் திரும்பிப் பார்த்து மன மிரங்குக ! தாங்கள் இன்று எனக்கு நன்மை செய் தால், அதற்கான பயன் உங்களுக்குக் கட்டாயம் கிடைக்கும்,’ என்று மொழிந்தாள்.

‘பயன் ‘ என்ற சொல்லைக் கேட்டதுமே என் னவோ உள்ளம் சட்டென எழுந்து கிளர்ச்சியுற்றது “ஆ, நான் மனத்துட்கொண்ட பயன் எனக்குக் கிட்டுமாயின் ‘ என அவன் மனம் கோட்டை கட்டலாயிற்று. ‘பயனா ! எனக்கு என்ன பயன் கிட்டக் கூடும் ‘ என்று அவனையும் அறியாது அவன் நாக்கு வினவிற்று. அவன் உடல் முழுமையும் அவன் கட்டிலடங்காது துடிதுடித்தது.

இஸபெல் : ஆம்; நற்செய்கை செய்பவர் எவரும் அதனால் வரும் பயனை இழந்ததில்லை. அந் நற்பயன் மனிதர் தரும் வெள்ளி பொன் போன்ற தன்று. அந் நற்செய்கைக்கு ஆளான உயிர்களின் உள்ளத் தடத்தினின்றும் மேலெழுந்து இறைவனை நோக்கி நன்றியுடன் செலுத்தப்படும் பாராட்டு வணக்கம். அவ் இறைவனையே ஆட்டுவிக்க வல்லது.

அதன் விலை அளவிடற் கரியது.

ஒரு பெரிய புயல், அதன் இறுதியில் இஃது ஒரு ஏமாற்றமா?

ஏமாற்றமில்லை ; குறிப்பே என்றது உடல்.

இருநிலைப்பட்ட உள்ளத்தினனாய் ஏஞ்செலோ, இப்போது இதுவகையில் துணிந்து முடிவு செய்யக் கூடவில்லை. நாளை வருக!’ என்றான்.

அன்பு விதை வேரூன்றிவிட்டது’ என்று நினைத்தாள் இஸபெல் . பாவம்! விதை அன்பு விதைதானா, வம்பு விதையா என்பதை அறியாமல் அகத்துள் அருளொளி கொண்ட அந்நங்கை அமைதி யுடன் அன்றைப் பொழுதைக் கழித்தாள்.

அன்பகத்தில்லா இருளொளி கொண்ட ஒரு புறத் துறவிக்கு அந்த நாள் இறவாநாளாயிருந்தது.

3. போலித் துறவி

அவள் போனபின் ஏஞ்செலோ, தன் மனத் துள் எழுந்த பகைப்புயலை எதிர்த்தடக்க முயலுவா னாயினான்! ‘ஆ, என் துறவு அவள் துறவின் முன் பணிந்துவிட்டதா? குற்றவாளியின் சிறு குற்றத் திற்கு மன்னிப்பு வாங்க வந்த அவள், என் மீது அதனிலும் பன் மடங்கு கொடிய குற்றத்தை எழுப்பிவிட்டனளே? பயன் என்ற சொல்லைக் கேட்டு அஞ்சவேண்டும் எனது கண்டிப்பு எங்கே? நினைத்த பயன் கிட்டாதா என்ற ஏக்கமெங்கே? ஆ நான் ஏன் தலைவனானேன்? துறவி என்ற பெயர் எனக்கேன் வந்தது? இத்தகைய பெண்மையின் கவர்ச்சி இல்லாமையா லன்றோ நான் இதுவரை உலகத்தில் பெரியவர் குழாத்தில் எளிதில் சேர்ந் திருக்கமுடிந்தது? ஆ அப்பெருமை எல்லாம் என்ன பயன் உடையது? இவளுடைய கறுத்திருண்ட கண் களின் பார்வை ஒன்றிற்கு அஃது ஈடாகுமா? என் னே அன்பகத்தில்லா வாழ்க்கை ? அவள் நேரிய அன் பிற்காக இரங்கும் பொழுது வன்நெஞ்சனாய் மறுத் தேனே? இப்போது தவறான எண்ணத்திற்கு நான் என்ன செய்வேன் ? இக் கண்டிப்பினால் பயன் என்ன? அவளுக்குத் தம்பி உபிர்வேண்டும், ஆம், அதற்காக அவள் கண்ணீ ர் வடிக்கிறாள், அழுகிறாள் ; ஆம், அவளுக்கு அதைக் கொடுத்து நான் விரும்பிய பயன் பெறுவதாயிருந்தால் – நன்று நன்று, தலைவர் என்ற நிலை எங்கே? கண்டிப்பு எங்கே? குடிகள் என் மீது வைத்த நம்பிக்கை எங்கே? ஆனால் நான் என் செய்வது? இவ்வேட்கை அடக்கக் கூடியதன்று. அடக்கினும் அதன்பின் உயிர்வாழ்தல் முடியாது. எப்பாடு பட்டாயினும், எதைக் கொடுத்தாயினும் அவளை நான் அடையவே முயலவேண்டும் கண்டிப்பு? வெளிக்குக் கண்டிப் பைச் சற்றுக் குறைத்தால் என்ன? எல்லாரும் வேண்டியபடி அருள் காட்டினதாகத்தானே ஆகும். மதிப்பு ! அதுவும் என்ன கெட்டு விட்டது. மறைவில் நடப்பதை யார் அறியப் போகிறார்கள்? அறிந்தாலுங்கூட நான் கவலைப் படப்போவதில்லைதான். இவ் வேட்கை ஒன்று ஒரு தட்டில், உலகில் புகழும் செல்வமும் எல்லாம் ஒரு தட்டில் வைத்தால் கூட எனக்கு வேண்டியது இவ் வேட்கையே. அது நிறைவேறியபின் வாழ்ந்தாலும் சரி, மாண்டாலும் சரி, ஒன்று தான்,’ என்றிவ்வாறு அல்லோல கல்லோலப்பட்டது அவனது உள்ளம்.

நாளை இடப்படும் தூக்குத் தண்டனைக்காகச் சிறையிற் காத்திருக்கும் ஒருவனது உள்ளங்கூட அன்று தலைவனது உள்ளம் பட்ட பாடு பட்டிருக்க முடியாது. ஆனால், இதற்கு நேர்மாறாகத் தூக்குத் தண்டனையே பெற இருக்கும் கிளாடியோவுக்கு அன்று பேராறுதல் கூட ஏற்பட்டது. ஏனெனில், அன்றிரவு பழைய தலைவன் மடத்துத் துறவி உருக் கொண்டு கிளாடியோவை அணுகி, ‘இளைஞனே, உலகின் இருட்சட்டம் உனக்குத் தீங்கிழைத்தது. அதனை நினைத்து இறைவன் அருட்சட்டத்தை மறந்து விடாதே,’ என்று கூறி, ‘உடல் இறந்தாலும் இறவாதது அருள் உடம்பு. அதனை இழந்து வாழ் வதைவிட அதனைப் பெற்று இறப்பது மேல். இறை வன் உன் அருள் உடம்பு கெடாது தன் அடியிற் சேரும்படி உனக்கு அருள் புரிவானாக,’ என்று வாழ்த்தினன். கிளாடியோ அதுகேட்டுச் சாவுக் கஞ்சும் கோழைத்தனத்தை விட்டு, இறைவனை மனத் துள் நினைந்து கொணடே துயிலுள் ஆழ்ந்தான்.

குற்றம் செய்தவன் நெஞ்சில் ஒரு புயல் ; குற்றம் செய்ய எண்ணுபவன் நெஞ்சிலோ இருபுயல் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராடுகின்றன. ஏஞ் செலோ கண் முன் சட்டத்தின் கண்டிப்பு இப்பொ ழுது இருபுறமும் இரு கத்திகள் போல் தொங்கு கின்றன. தன் விருப்பம் நிறைவேற வேண்டு மாயின், சட்டத்தின் கண்டிப்பைத் தளர்த்திக் கிளா டியோவைக் காத்தாக வேண்டும். அப்படிச் செய்து தன் விருப்பத்தை நிறைவேற்றினாலோ, அந்தச் சட்டத்தின் கண்டிப்புக்குத் தானும் ஆளாகவே வேண்டும். அது வெளியில் தெரியாவிட்டால் என்ன? தன் மனச்சான்றின் முன் தான் என்றுங் குற்றவாளிதானே? ஆனால் இவ்வளவும் ஆராய்ந் தால், பின் விருப்பம் நிறைவேறாது போய்விடும் என்ற நினைவு வந்தது. மின்வலியால் தாக்குண்ட வன்போல் அவன் துள்ளி எழுந்தான். ‘நான் என்ன கோழை! காரியமே கண்ணாபினோர் இத் தகைய எண்ணங்களுக்கு இடங் கொடுத்தலாகாது. அவளை அடைவேன். அதற்காகச் சட்டத்தைத் தளர்த்த மட்டுமன்று ; வேண்டுமாயின் அச் சட்டத் தையும் அதனை என்மீது சுமத்தும் இந்நகரையுங் கூடத் துறந்துவிடுவேன்,’ என்று முடிவு கொண் டான் ஏஞ்சலோ.

மறு நாட் காலையில் இஸபெல் வந்தபோது வாயிற் காவலர் அவளை மதிப்புடன் வரவேற்று உள் அனுப்பினர். ஏஞ்சலோவின் ஏற்பாட்டின்படி வேறெவரும் உள்ளே வரக்கூடா தெனத் திட்டம் செய்யப்பட்டிருந்தது. இஸபெல் உள்ளே வேறு யாரும் இல்லாததைக் கவனிக்கவில்லை. ஆனால், இஸபெலுக்கு அவன் வணக்கம் அளித்துச சரி யிருக்கை அளித்தபோது அவளுக்கு அது புதுமை யாகத் தோன்றிற்று. இருக்கையை மறுத்துவிட்டு என் விருப்பத்தைத் தாங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்,’ என்றாள்.

ஏஞ்செலோ : ஆம், ஆனால் நீயும் என் விருப் பத்திற்கு இணங்க வேண்டும்,’ என்று நான் வேண்டு கிறேன்.

இஸபெல் சற்றுத் திடுக்கிட்டு, ‘என்ன! உங்கள் விருப்பமா? தலைவரான நீங்கள் அப்படி என்னிடம் விரும்புவதற்கு என்ன இருக்க முடியும்?’

ஏஞ்செலோ : நான் நகரத்துக்கு மட்டுமே தலைவன் ; நீ அழகுக்குத் தலைவி. உன்னைக் கண்ட பிறகு கிளாடியோவின் குற்றத்தைத் தண்டிக்கா மல் விட்டுவிடவே மனம் வருகிறது. ஆனால், கிளா டியோ செய்யும் குற்றத்தை நானும் செய்ய மனம் நாடுகிறது.

இஸபெல் அவனது இழிந்த நோக்கத்தை ஒரு நொடியில் கண்டுகொண்டாள். அவள் கண்கள் அழலெனச் சிவந்து பொறி வீசின. ‘தலைவரே, தகுதியான காதலுக்குக் கொலைத்தண்டனை தரக் கூசாத நீர், அதில் கண்டிப்பாய் இருக்கவேண்டும் என்று பிடிமுரண்டு கொண்ட நீர், இப்பொழுது என்பாற் செய்த குற்றத்திற்கு யாது சொல்லுவீர்?’ என்றாள் .

விலங்கியல் கொண்டிருந்த ஏஞ்செலோ, பேய் இயல் கொள்ளலானான். ‘ என் தண்டனையைப் பற் றிப் பேச்சில்லை. உன் தம்பியின் உயிர் வேண்டுமா, வேண்டாமா என்பதே பேச்சு. நீ இவ் விரவிற்குள் ளாக என் விருப்பத்திற்கு இணங்கவேண்டும். அன் றேல், உன் தம்பியை மறந்துவிடு,’ என்றான்.

இஸபெல் வியப்புடன், ‘ தலைவ, துறவி என் றும் வீரர் என்றும் பெயர் எடுத்த நீர், இவ்வாறு பேசுவதென்றால் என்னால் நம்பக்கூட வில்லையே. ஒருவேளை என் உறுதியைப் பார்க்க இப்படி நடக்கி றீரோ என்னவோ?

ஏஞ்செலோ : பெண்மணி, உனக்கு அந்த ஐயம் சற்றும் வேண்டாம். நான் எவரையும் அங் ஙனம் நடித்து ஏமாற்றுபவனல்லன்.

இஸபெல் காதிரண்டையும் பொத்திக் கொண்டு, ஐயோ , கடவுளே! இந்தப் பேர்வழி நடிப்பவனே யல்லன். நேற்றுவரை துறவியாக நடித்ததெல்லாம் மறந்து விட்டேனா என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். தெளிப்படத் ‘தலைவரே, உமது பகுத் தறிவை இழந்து நன்மை தீமை தெரியாதவராய் நீர் பேசுகின் றீர். ஆனால் உமக்கு நான் கூறுகி றேன். நீர் இப்போது என்னிடம் கூறியதை யெல் லாம் ஊரிற் சென்று பறைசாற்றி உமக்கு நாலா பக்கமும் நரகத் தீயை என்னால் உண்டு பண்ண முடியும் என்பதை நீர் அறிந்து கொள்ளும். ஆகவே, மறுபேச்சுப் பேசாமல் என் தம்பியை மன்னித்து விட்டேன் என்று எழுதிக் கொடும்,’ என்றாள்.

தான் அச்சுறுத்துவதற்கு அஞ்சாததோடு இப் பெண் தன்னையே ஏமாற்றியது கண்டு முதலில் ஏஞ் செலோ திகில் கொண்டான். ஆனால் மறு கொடியில் அவனது தீய அறிவு அவன் துணைக்கு வந்தது. உடனே அவன், ‘பெண்மணி, என்னை மிரட்டுவதற்கு உன் அறிவைப் பயன்படுத்தாதே. உன் தம்பியைத் தப்ப வைப்பதற்கு அதைப் பயன்படுத்து. நீ வெளியிற் சென்று என்னைத் தூற்றுவையானால் எல்லாரும் என்னையே நம்புவர்; உன்னை நம்பார். ஒருவரிருவர் நம்பக் கூடிய வரும் உன் தூய்மையைத் தான் அவமதிப்பர்’ என்று கூறிப் பேய் போல நகைத்தான். பின் ‘ சரி, உனக்கு ஒருநாள் தவணை தந்தேன். அதற்குள் முடிவு தெரிவி,’ என்றான்.

இஸபெல் அந்த ஒருநாளில் எப்படியும் இவன் வலையை அறுக்க வழி தேட வேண்டும் என்று நினைத்தவளாய் வெளியே வந்தாள்.

4. மறைந்துநின் றருள்புரியும் அண்ணல்

இஸபெல் உடனே நேராகத் தன் தம்பியைக் காணச் சிறைக்கூடம் சென்றாள். மடத்துத் துறவி உருக்கொண்ட பழைய தலைவன் அப்போது கிளா டியோவுக்கு அருளுரை தந்து கொண்டிருந்தான். இஸபெல் வந்ததும், ” அவன் நான் சென்று வருகின் றேன். கடவுள் உன்னைக் காப்பாராக ,” என்று கூறி விட்டு வெளிச் சென்றான். ஆனால் அவன் வேறெங் கும் போகாது மறைவில் ஒளிந்திருந்து அவர்கள் பேசுவதை உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தான்.

கிளாடியோ : இஸபெல், ஏஞ்செலோவைக் கண்ட காரியம் வெற்றிதானோ?

இஸபெல் : உனக்கு உயிர் பெரிதாயின் வெற் றியே; மானம் பெரிதாயின் தோல்வியே.

கிளாடியோ : நீ சொல்வது விளங்கவில்லையே! –

இஸபெல் : விளங்குமுன் இதற்கு விடைசொல் : உனக்கு உயிர் பெரிதா, மானம் பெரிதா?

கிளாடியோ : இதைக் கேட்க வேண்டுமா? மானந் தான் பெரிதென்று நான் நினைப்பேன் என்பது உனக்குத் தெரியாதா?

இஸபெல் : சரி. இப்போதுதான் என் மனம் குளிர்ந்தது. என் மானம் நிற்பதானால் நீ இறக்க வேண்டும். களிப்புடன் இறக்கவேண்டும். ஏனெனில், நீ பிழைக்க வேண்டுமானால் அவ்வொன் றையே விலையாகக் கேட்கிறான் அந்த நீசன் ஏஞ் செலோ?

கிளாடியோ : ஆ! அப்படியும் கேட்பானா? கொடியன்! ஆயினும், அதே குற்றத்தின் பகுதியை நானும் செய்திருக்கிறேன். நான் பிழைப்பதானால் ஜூலியட்டுக்கு நான் செய்த தீங்கையும் அகற்ற

முடியும். இஸபெல்! இருவர் நன்மையை நினைத் தால் – நீ துறவியாகப் போகிறவள் தானே – வெளித் தெரியாத ஒரு தவறு தலை எங்கள் இருவர் நன்மைக் காகக் கடவுள் பொறுக்கமாட்டாரா?

இஸபெல் : ‘ அட, கோழை! உன்னை நான் எவ் வளவு பெரிதாக எண்ணினேன்! இன்றிருந்து நாளைப் போகும் உயிரை வெல்லமாகக் கொண்டு உடன் பிறந்தவள் மானத்தை விற்றுத் தின்னப் பார்க்கிறாய்! நீ உண்மையாகவே என் உடன் பிறந் தவனா யிருந்தால் என் மானத்தை இழக்குமுன் இருபது தடவை சாவ அஞ்சியிருக்கமாட்டாய்!” என்றாள். கிளாடியோ தலை கவிழ்ந்து நின்று, ‘இஸபெல், நீ வீர மாது என்று நான் காண்கிறேன்; என் பிழை பொறுப்பாய், ‘ என்றான்.

அச் சமயம் துறவி யுருக்கொண்ட தலைவன் வந்து இஸபெலின் வீரத்தை மெச்சி, கிளாடியோ வைப் பார்த்து, ‘ இத்தகைய தமக்கைக்குத் தகுந்த தம்பியாய் வீரத்துடன் உன் முடிவை ஏற்பாயாக, ” என்று கூறி அவனை அவன் அறைக்கு அனுப் பினான். அதன் பின் அவன் இஸபெலை நோக்கி, ‘இஸ பெல், நீ பத்தரைமாற்றுத் தங்கம் போன்றவள். உன் வீரத்தை நான் இன்றுதான் கண்டேன். நான் சொல்லுகிறபடி நீ நடந்தால் உனக்குத் தீமையில் லாமலே உன் தம்பி பிழைப்பதோடு நீ இன்னொரு பெண்ணுக்கும் உயிர்’ கொடுத்தவள் ஆவாய், ‘ என்றான். ‘

இஸபெல். துறவுருக் கொண்ட பெருந்தகை யோய், தாங்கள் கூறுவது தக்கதாயின் அங்ஙனமே செய்வேன்.

துறவி : நான் கூறுவது தக்கதா அன்றா என் பதை நீயே மதித்து விடை கூறலாம்.

உன்னை வஞ்சிக்க முயன்ற ஏஞ்செலோ ஒரு போலித் துறவி. அவனால் வாழ்க்கையிழந்து ஒரு பெண் தவிக்கின் கிறாள். அவள் பெயர் மேரியான மேரியானா அவள் இந்நாட்டை யடுத்த தீவின் இறைவனான பிர டெரிக்கின் தங்கை. பிரடெரிக் அவளை இவ் வேஞ்செலோவுக்கு மணம் செய்து கொடுத்தான். தங் கைக்குப் பரிசமாக அவன் பெரும் பொருட் குவையைக் கப்பலில் வைத்துக்கொண்டு கடல் வழியாக வந்தான். வழியில் கப்பல் உடைந்து பொருள் அழிந்ததுடன் அவனும் அவன் நண்பர்களும் இறந் தொழிந்தார்கள். மேரியானா தன் ஒப்பற்ற தமை யனையும் உறவினரையும் இழந்தாள். ஆனால் இவ் வேஞ்செலோ அதனைப் பெரிதாக எண்ணாமல் அவள் பொருள் போனதையே பெரிதாகக் கருதினான். மேலும், பொருளுக்காகவே அவளை அவன் மணந் தவனாதலால் அவளைப் பல கொடுமைகளுக்கு உட் படுத்தி இறுதியில் அவள் தீ நடத்தையுடையவள் என்று பொய்க் குற்றம் சாட்டித் தள்ளிவைத்து விட்டான்.

‘ அப் பேதை மாது தீமையே தரும் அக் கணவ னிடமே உயிர் வைத்து நலிகின்றாள். தன் உயிரைத் தான் மாய்த்துக்கொண்டால் கூட அவனுக்குத் தீவினைப்பயன் வருமே என்று அஞ்சுகின்றாள்.’ ‘ஏஞ்செலோ இத்தகைய கொடியன்.’

ஆனால் இப்போது, நீ அவன் சொல்வதற் கிணங்குவதாக நடித்து இரவு வரும்படி சொன்னால், உ . னக்கு மாறாக அவளை அனுப்ப நான் எண்ணங் கொண்டுள்ளேன்.

இஸபெல் முதலில் இச் சூழ்ச்சிக்கு இணங்க வில்லையாயினும் நால்வழியும் ஆராய்ந்து அது தீமையற்றது எனக் கண்டு இணங்கினாள்.

அதன்படியே இஸபெல் ஏஞ்செலோவை ஏமாற்றி இரவு வந்து சேரும் இடத்தை அறிந்து அதற்கான திறவுகோல்களும் வாங்கி வந்துவிட் டாள். அவற்றின் உதவியால் மேரியானா தன் மனதைக் கொள்ளை கொண்ட கொடியவனை அடைந்து ஓரளவு தன்னை மறந்தாள்.

தீமையில் இறங்க இறங்கத் தீயவர் துணிவும் மிகுதி. தான் நினைத்த காரியத்தை முடித்துவிட்ட தாக எண்ணிய ஏஞ்செலோ ஏன் இஸபெலை முற்றி லும் ஏமாற்றக் கூடாது என்று எண்ணி விடியற் காலையிலே கிளாடியோவைக் கொலைசெய்யும்படி ஆள் அனுப்பினான். அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த துறவியுருக்கொண்ட தலைவன் தனது தலைமை நிலைக்கான குறிகளைச் சிறை காவ லனுக்குக் காட்டி அவனைத் தன் கருத்துக் கிணங்கச் செய்தான். அதன்படி அவன் கிளாடியோவை மறைத்து வைத்து விட்டு, வேறு இறந்துபோன ஒருவன் தலையைக் கொண்டுபோய்க் கொடுத்துக் கிளாடியோவை வெட்டிவிட்டேன்,’ என்றான்.

தன்னையும் ஏஞ்செலோவின் இன்னல்களையும் வெளிப்படுத்தும் சமயம் வந்துவிட்டதெனப் பழைய தலைவன் இப்போது எண்ணினான். ஆகவே, தன் பயணத்தைச் சில காரணங்களால் நிறுத்திவிட்டுத் தான் திரும்புவதாகவும், மறு நாட் காலையிலேயே தனது தலைமை உரிமையைத் தன்னிடம் விட்டுவிட வேண்டு மென்றும் அவன் ஏஞ்செலோவுக்கு எழுதி னான். அதோடு, தன்னிடம் குறை கூறிக்கொள் வோர் நகரத்துத் தெருக்களிலேயே முறையிட்டுக் கொள்ளலாம் என்று முரசறைவிக்கும்படியும் பணித்தான்.

ஏஞ்செலோ இழிகுண முடையவன் என்பது இஸபெலுக்குத் தெரியும். ஆனால் தன் கீழான விருப் பத்தை ஈடேற்றிக்கொண்ட பின்னும் அவன் கிளா டியோவைக் கொல்வான் என்று அவள் கனவிலும் எண்ணவில்லை. எனவே, அதனைக் கேள்வியுற்ற தும் அவள் எண்ணாததெல்லாம் எண்ணி விம்மினாள் ; வெகுண்டாள் ; தன் தீவினையை எண்ணி மனமழுங்கினாள். ஏஞ்சலோ நயவஞ்சகன் மட்டுமன்று; நன்றி யறிதலற்ற பன்றிமகன் என்பதுங் கண்டாள். இதற்கிடையில் பழைய தலைவன் நாளையே வருகி றான் என்ற முரசொலி கேட்டதும் அவள் ஒருவாறு தன்னை அடக்கிக்கொண்டு அவனிடம் முறையிட எண்ணினாள்.

நிழலின் அருமை வெயிலில் அன்றோ தெரியும்? அருள் நோக்குடையார் ஒழுங்கிற்கும், போலி நடு நிலை யுடையார் கண்டிப்புக்கும் உள்ள வேற்று மையை ஏஞ்செலோவின் ஆட்சியில் கண்டுகொண்ட நகர மக்கள், தம் பழந்தலைவன் வருவது கேட்டு இழந்த உறுப்புக்கள் உயிர்பெற் றெழுந்தன என ஆரவாரத்துடன் எழுந்து சென்று வரவேற்றனர். இன்முகத்துடனும், வணங்கிய கைகளுடனும் தலை வன் அனைவர் வணக்கத்தையும் ஏற்றுத் தெரு வழியே வரலாயினான். அச்சமயம் இஸபெல் தலை விரி கோலத்துடன் அவனெதிரே வந்து வழி மறித்து, அருளுருக்கொண்ட எம் ஆருயிரே வருக. நீவிர் இல்லாதபோது இக் கொடியோன் (ஏஞ்செ லோவைச் சுட்டிக்காட்டி) என் தம்பிக்கு உயிர் கொடுக்கும் பொய் உறுதி தந்து என் மானத்தைக் கைக்கொண்டு பின் அப் பழியோடு பழி சேர்த்து அவன் உயிரையும் வாங்கிவிட்டான். என் கண்மணி யையும் இழந்தேன். பெண்களின் உண்மணியை யும் இழந்தேன். இது முறையோ?’ என்று கதறி நின்றாள்.

ஏஞ்செலோ, ‘ தம்பியை இழந்த துயர் இப் புனைவையும் அருளியதுபோலும்!’ என்று கூறி, வலிய முறுவலை வருவித்துக்கொண்டான்.

அப்போது மேரியானா முன்வந்து, ” அரசே. இம்மாது கூறியவை முற்றும் உண்மையன்று ; இவ் உதவித் தலைவர் அவளுக்கு உண்மையில் எத்தகைய தீங்கும் செய்யவில்லை. அவர் செய்த தீங்கு எனக்கே. அவள் பெயரால் அங்கே சென்று அவர் காதலைப் பெற்றவள் நானே,’ என்றாள்.

இப்படி இருவரும் ஒருவருக் கொருவர் எதிராக வழக்காடவே தலைவன், ‘உங்களுக்குச் சான்று உண்டா ‘, என்றான். இருவரும் ஒருங்கே மடத்துத் துறவி ஒருவரே எங்களுக்குச் சான்று என்றனர். ‘சற்று நேரத்தில் அவரை அழைத்து வருக, ‘ என்று தலைவன் அவர்களிடம் கூறிவிட்டு, முதல் அமைச்ச னாகிய எஸ்காலஸ் பெருமகனை அழைத்து, ‘இப் போது ஏஞ்செலோ வழக்காளிகளுள் ஒருவனாய் விட்டபடியால் நான் வருமுன் அவர்கள் சான்று கொண்டுவந்தால் நீயே வழக்காராய்ந்து தீர்ப்பளிப் பாயாக’ என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.

5. கற்பரசிகளின் வெற்றி

வெளியே சென்று அவன் மறுபடியும் மடத் துத் துறவி உருக்கொண்டு மேரியானாவுக்கும் இஸ பெல்லுக்கும் சான்று கூறுவதாக அவர்களையும் உடன் கூட்டிக்கொண்டு வந்தான். தலைவனில்லா ததையும் தன் நண்பனே உதவித் தலைவனாக இருப் பதையும் கண்டு துணிவுற்று ஏஞ்செலோ , ‘ஐயா, இப்பெண்கள் இருவரும் சேர்ந்து, என்மீது பழிகட்டி யிருக்கின்றனர். இத் துறவியும் அவர்களுக்கு உடந்தையானவனே’ என்று கூறினான். அது கேட்டுத் துறவி, ‘நான் சான்று பகர வந்தேனே யன்றி உனக் கெதிராக வழக்காட வரவில்லை. ஆயினும், நீ என்னை இழுத்துவிட்டபடியால் கூறு கிறேன். உன் தகுதி தெரியாமல் தலைவன் உன்னை ஆளவிட்ட வீறு , நீ தலைகால் தெரியாமல் நடக்கிறாய். நீ செய்த கொடுமைகள் பலவும் நான் நேரில் கண் டறிந்தவனே ‘ என்றான். இவனைப் பேச விடுவது தவறு என்று கண்டு எஸ்காலஸ், ‘அடே துறவி, இவர் தலைவரா யிருந்தவர்; இன்னும் உயர் நிலையிலுள்ளவர். இவருக் கெதிராகப் பேசுமுன் உன்னைக் குற்றுயிராகக் குலைக்கும் படி உத்தரவிடுவேன் ‘ என்றான்.

‘உதவித் தலைவன் ஒழுங்கு இதுதானா?’ என்று கேட்டுக்கொண்டே தலைவன் தன் துறவி உடையை அகற்றித் தலைவனுடையில் வெளிப்பட்டான். எஸ் காலஸ் பெருமகன் முகம் சுண்டிற்று. ஏஞ்செலோ முகத்திலோ இருபத்தொரு நரகங்களும் தாண்டவமாடின. தலைவன் முன் தன் சிறுமையனைத்தும் வெளிப்பட்டுவிட்டது எனக் கண்டு அவன் வேரற்ற மரம்போலத் தலைவன் முன் விழுந்து உயிருக்கு மன்றாடினான். தலைவனோ அவன் பக்கம் பாராமல், ‘உன்னை எக் குற்றத்திற்கும் மன்னிக்கலாகும் ; கிளாடியோவின் உயிரைக் கொள்ளைகொண்டதற்கு. மட்டும் மன்னிக்க முடியாது. அவனது முடிவை நீயும் அடைக,’ என்றான்.

அச்சமயம் மேரியானா ஓடி வந்து பணிந்து, ‘அண்ண லே, எனக்கு இவர் கணவர், காதலர். அவர் என்னைத் தள்ளினும் என் உள்ளத்தில் அவர் என்றும் தலைவரே. அவர் இறந்து வாழேன். என் னுயிரைக்கொண்டேனும் அவர் உயிரைக் காப் பாற்றி யருளுவீர் ‘ என்றாள்.

தலைவன் அசையாதது கண்டு, அவள் இஸ பெலை, அணுகி, ‘இஸபெல், இஸபெல், நீ பெரிய மனம் கொண்டவள் என்று எனக்குத் தெரியும், அவர் செய்த பிழை மன்னிக்க முடியாதது என்றும் நான் அறிவேன். அதற்காக நான் என்மீது எத் தகைய தண்டனையையும் ஏற்றுக்கொள்வேன். அவரை மட்டும் காப்பாற்ற வேண்டு மென்று தலை வரை என்னுடன் நீயும் வேண்டிக்கொள்ளுவாயா?’ என்று இரந்தாள்.

இஸபெல் தன் தம்பியைக் கொன்ற பாதகன் மீது தனக்குள்ள சீற்றத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டு, ‘தலைவரே, அவ்வாடவன் செய்த குற்றம் எதுவாயினும், இப் பெண் அவன் மீது கொண்ட காதல் அதனை அழித்துவிடும் தன்மையது. இவள் வேண்டுகோளை நிறை வேற்றி அருள் புரிவீர்’, என்றாள்.

தலைவன் எல்லையிலா மகிழ்ச்சி கொண்டு, மேரி யானா கற்பரசி. அவளுக்கு அவள் கணவன் உயி ரைக் கொடுக்கத் தடையில்லை. ஆனால் அவன் தன் போலித்துறவை ஒழித்து அவள் கணவனானால் மட்டுமே உயிர் பிழைப்பான்’ என்றான். மேலும் அவன் , அவளை விட இஸபெலும் கற்பிற் குறைபடு பவள் அல்லள். அதோடு தம்பியைக் கொன்றவனை மன்னித்த அவள் பெருமை அரிதே. அவளுக்கும் நான் பரிசு கொடுக்க எண்ணுகிறேன்,” என்று கூறி ஒரு வேலையாளைக் குறிப்பாகப் பார்த்தான். உடனே அவன் சென்று கிளாடியோவைக் கூட்டிக் கொண்டு வந்தான்.

இறந்து போவோம் என்று வந்த கிளாடியோ, உயிரையும் பெற்றான். உயிரினும் பன்மடங்கு உய ரிய தமக்கை அன்பையும் பெற்றான் ; இஸபெலின் வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் ஓர் எல்லை இல்லை.

தலைவன் இஸபெலை நோக்கி, ‘ இத்தனைப் பெருந் தகைமையையும் உறுதியான கற்பையும் உடைய நீ துறவறம் பூண்பது தகுதியன்று. உனது பெருமைக்கேற்ற கணவன் இவ்வுலகில் இருக்கமுடி யாது. ஆயினும் உனக்கு நான் செய்த உதவியை எண்ணி என் மீது கடைக்கணிப்பதாயின், அஃது இந்நகரும் யானும் செய்த முன்னை நல்வினைப் பயன் என் றெண்ணுவேன், ‘ என்றான்.

இஸபெல் தன்னை ஈன்ற தாயை நினைப்பவள் போல நிலமாதை உற்று நோக்கினாள்.

அதுமுதல் வியன்னா நகரத்து இளைஞரை அந் நகரத்து மங்கையர் விழிகளே நல்வழிப்படுத்தின. இஸபெலின் முன் மாதிரியே, அவர்களுக்கு எச் சட்டத்திலும் மேலான சட்டமாய் அமைந்தது.

– K.அப்பாதுரைப் பிள்ளை, சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் (நான்காம் புத்தகம்), முதற் பதிப்பு: 1945, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *