என்னைக் கொலை செய்பவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 18,704 
 

மீண்டும் அப்பாவின் அறை ஒளியில் உயிர்பெற்றிருந்தது. கணினித் திரையை அடைத்துவிட்டு அப்பாவின் அறைய நெருங்கினேன். கதவு தாழ்ப்பாள் இடப்படாமல் சிப்பியில் வாய்போல லேசாக பிளந்திருந்தது. அப்பா அம்மாவின் பொட்டுவைத்த நிழல் முகத்தை அசையாது பார்த்தபடி இருந்தார். தான் இழந்த புற உலகை நினைத்து பெருமூச்செரியும் சுயசோகம் கசியும் நோக்கு. வலது கையைச் சுவரில் முட்டுக்கொடுத்தபடி. கொசுறாக சோகம் இழையோடும் முனகல். அம்மா தவறியதிலிருந்து உடல் இளைத்து பழைய முகப் பொலிவை இழந்துவிட்டிருந்தார். முதுகு கூன் விழத் துவங்கியிருந்தது. அஜானுபாகுவான உடல் அமைப்பு கூனை வலிந்து காட்சிப்படுத்தியது. ஆண் தினவு உடைந்து நொறுக்கிவிட்டதன் புற அடையாளமாகத்தான் அந்தக் கூன். கண்களுக்குக் கீழ் கரு வளையம். அப்பாவின் இருப்பு முற்றிலும் அடையாளம் இழந்துகொண்டிருந்தது. தினமும் பின்னிரவு மணி மூன்றுக்குக் கூட சிறுநீர் கழிக்க கதவு திறக்கும் சந்தடி விழிக்கச் செய்துவிடும். தூக்கம் கெட்டுப்போய் சதா அச்சம் அப்பிய முகம். சில சமயம் வைத்த கண் மாறாமல் நிலைத்துவிடும் நினைவு மரித்த பார்வை. தன் சுற்றுப்புறத்தில் நடக்கும் எந்தக் கேளிக்கைக்குள்ளும் மனம் லயிக்கவில்லை.

அம்மாவின் பிம்பத்தைப் பார்த்து அழுதிருக்கக் கூடும். அசையாது நிழற்படாமாகி போன தோற்றம் அசைத்துவிட்டிருக்கிறது அவரை.

அப்பா அம்மாவின் முகத்தையே பார்த்தபடியே நிலைகுத்தி இருப்பது அம்மா உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் போதும் நிகழ்ந்தது. திடீரென உடல் நிலை சரிந்து அம்மாவுக்கு மார்பகப் புற்றுநோய் என்று இரண்டாவது அபிப்பிராயமும் உறுதிபடுத்தியபோது அப்பாவின் உடைவுதான் பேரதிர்ச்சியாக இருந்தது. அம்மா கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த காலத்தில் அப்பாவின் குண மாற்றத்தால் குடும்பத்தில் எல்லாரும் அவரை முற்றிலும் வேரொரு மனிதராய் அவதானிக்கத் தொடங்கினர். அப்பாவின் ஆணவம் குலையத் தொடங்கியது அப்போதிருந்துதான்.

“ஆமா, இப்ப மட்டும் பக்கத்துல ஒக்காந்தி உத்து உத்து பாருங்க, புதுப் பொண்டாட்டிய பாக்குற மாரி”. அம்மா இப்படி சொல்லும்போது அதில் அவளுடைய நெடுநாள் தேக்கி வைத்திருந்த கோபம் வெளிப்பட்டது. வாழும் நாளில் அவளிடம் காட்டப்படாத கரிசனத்தை சுட்டிக்காட்டி பகடி செய்வதான வெளிப்பாடு. அவர் அப்படித்தான் கண்மாறாமல் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தார். அவளின் இறுதிப் பயணம் சர்வ நிச்சயமாகிவிட்டதைக் குறித்துக் காட்டும் பச்சாதாபம் நிறைந்த பார்வை. பக்கத்து இருக்கையில் அமர்ந்து அம்மா பக்கம் திரும்பி கைமுட்டியை இருக்கையின் பக்கவாட்டில் ஊன்றி தாடையில் உள்ளங்கைப் பதித்து, அம்மாவையே பார்த்தபடி இருப்பார். பிள்ளைகள் மருமகள்கள் சுற்றி அமர்ந்திருந்து, இவரின் அபூர்வச் செயலை விநோதத்தோடு நோக்கும் பிரக்ஞையைக் கூட பொருட்படுத்தாமல் அப்பா அம்மாவின் கவனத்தைத் திருப்பியிருந்தது சமீபமாக அவருக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம். அவர் அம்மாவின் மேல் திடீர் கரிசனை செலுத்துவதை மாகா நடிப்பு என்றே சிலாகித்தனர். ஆனாலும், அம்மாவுக்குத் நியாயமாய்த் திரும்பியிருக்க வேண்டிய கவனத்தில் பாதியை இவரின் திடீர் சுபாவ மாற்றம் மீட்டுக்கொண்டிருந்தது.

அம்மா ஆரோக்கியமாய் இருந்த நாட்களில் அப்பா பருத்த கடல் நண்டுகளும், கால் பெருவிரல் அளவுக்கு வளர்ந்த மஞ்சள் இறால்களும், ரத்தம் கசிய, சூடு தணியாத, தோல் பளபளக்கும் வஞ்சனையும் வாங்கி வந்து உரைப்பாகப் பிரட்டச்சொல்லி, நல்ல பாட்டுக்கு சுருதியும் தாளமும் சரியாக இணைந்ததுபோல பதமாக நறுக்கிய மீன் துண்டுகளின் மேல் தளரத் தளர சாந்து பூசி ‘மற மற’ வென பொறித்த துண்டுகளைச் சாப்பிடும்போது அம்மாவைச் “சாப்ட்டியா” என்று ஒருவார்த்தை கூட கேட்காமல் அரைமணி நேரம் உணவுச் சுவையில் ஒருமையாகி, முயங்கி, உய்த்து உண்டபடியே இருப்பார். மோன நிலைக்குள் அடைக்களமான தருணம். அவர்தான் முதலில் சாப்பிடவேண்டும். அவர் நண்டு சாப்பிட உட்காரும்போது, ஒரு சின்ன மரச்சுத்தியல், தட்டி உடைக்க தடித்த பலகை, நொருங்கிய மேலோட்டை வைக்க பழைய துண்டு பேப்பர் எல்லாம் அம்மா தயாராய் மேசை மேல் வைத்திருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் உணவு பரிமாறப் பட்டுவிட வேண்டும். அந்த அதிகார ஒழுங்கில் ஒன்று தப்பினாலும், அம்மாவுக்கு மூன்று நான்கு ‘மசிறா’வது வன்மமேறிய வார்த்தை அபிசேகம் கிடைத்துவிடும். உணவு பரிமாற தாமதமாகும் பட்சத்தில் அவர் அன்றைய உணவைப் புறக்கணித்துவிடுவார். அதில் பெருவாரியான தண்டனையை அம்மா அனுபவிக்க வேண்டும் என்பதற்குத்தான்! நான்கு பக்கங்களும் திறந்திருக்கும் உணவு விடுதிகள் வலைவிரித்து வைத்திருக்க , உணவு வகைகளுக்கா பஞ்சம்?

செல்விக்கும் சேர்ந்தே வசைகள். அவளின் பெற்றோர்கள் இறைவனடி போய்ச் சேர்ந்தபின் வேறு விதியற்று இங்கே அகதியானவள். உயிரைப்பிடுங்கி வெறும் உடல் மட்டும் எஞ்சிவிடுவது போல ,வார்த்தைகள் பிடுங்கப்பட்டு வெறும் வாயை மட்டுமே கொடுத்திருந்தான் வையம் போற்றும் கருணாமூர்த்தி. உறவினர் மகள் என்ற அந்தஸ்து பறிபோய் முழுநேர வேலைக்காரியாகி இடுப்பொடிந்தவள். மனைவிக்கு கிடைக்கும் அர்ச்சனையில் அவளுக்கு குறைந்தபட்சம் ஒரு ‘மசிர்’ இழையாவது கிடைத்துவிடும். ‘நல்லாருக்கு’ என்ற வார்த்தை சுவை ஊறிய எச்சிலாகக்கூட ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை அவர்.

சினிமா பார்ப்பதெல்லாம். நண்பர்களோடுதான். நள்ளிரவைத்தாண்டி மோட்டார் சைக்கில் சத்தம் வாசலில் உறுமும்போது அம்மா கதவைத் திறந்திருக்கவேண்டும். அம்மா ஹாலில் காத்திருந்து காத்திருந்து, கோழி உறக்கம் போட்டு, ஐந்தாறு முறை மோட்டார் சைக்கில் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து, அவருடையது இல்லையென்றானதும் மீண்டும் காத்திருந்து உறங்கி உறங்கி எழுந்து, கால் நீட்டி கட்டையைச் சாய்க்க உந்தும் உடல் வேட்கையை அப்புறப்படுத்திக் கண் சிவக்கக் காத்திருப்பாள். அம்மா அவரில்லாமல் தொலைகாட்சி பார்க்கமுடியாது. அவர் விரும்பித் திறந்து பார்க்கும் நிகழ்ச்சிகளையே அம்மா பார்க்கவேண்டும். அம்மா சுயமாய் தொலைக்காட்சித் திறந்து நான் பார்த்ததில்லை. பார்க்கக்கூடாது! வேலைவிட்டு வந்ததும் அப்பா காலணியை வாசலில் உதறிய கையோடு, தொலைகாட்சிப் பெட்டியின் சூட்டை கையால் தொட்டுணர்ந்த உறுதிகொண்ட பின்னர்தான் சட்டையையே கழட்டுவார்.

அறையில் அப்பா விசும்பும் சத்தம் கேட்டது.

வேண்டாம் ஆறுதல் வார்த்தைகளுக்கான தருணங்கள் கடந்துவிட்டன. ஆறுமாதங்கள். அப்பா இந்நேரம் மீண்டிருக்கவேண்டும்! அழட்டும். அழுது தீர்க்கட்டும். அப்பா தன் சுயத்தை மெல்ல இழந்துகொண்டிருக்கும் தருணங்கள் பல சந்தர்ப்பங்களில் தன்னிச்சையாய் வெளிப்பட்டன. தாலி கட்டிய உறவு அந்நியோன்யமோ, இல்லையோ, இனி அந்தத் துணையும் இல்லையென்றானவுடன் ‘கணவன்’ அகங்காரம் உலுக்கப்பட்ட கிளைப் பழங்கள்போல சட சடவென உதிர்ந்தே விடுகிறது போலும்! மனைவியின் இல்லாமையால் உறவு முறை எதுவுமே பொருளற்றதாகிவிடுகிறது- பெற்ற பிள்ளைகளும் இதில் சேர்த்தி!

“அப்பா பல் வளக்கி பசியாறிட்டீங்க.. ஏன் மறுபடியும் பல் வளக்குறீங்க?”

“பல் வளகிட்டானா.. எப்போ?. ஆமா….ல! இப்படித்தான் குளித்துவிட்டு சில நொடிகளில் மீண்டும் குளிப்பதும், சாப்பிட்டுவிட்ட மறு நொடி பசிக்கிறது என்பதும் அவரின் நினைவு தப்பி வழக்கத்துக்கு மாறாக நடந்தபடி இருந்தது..

அப்பா அவர் ஆசையாய் கட்டிய வீட்டுப்பக்கம் போவதே இல்லை. முன்புள்ள பழைய வீட்டை இடித்து ஒவ்வொரு செங்கல்லையும் தட்டிப்பார்த்தே தேர்ந்தெடுத்தார். அவரே மரக்கடைக்குச் சென்று பலகைகளின் தரம்பார்த்த, கோணல் சட்டங்களை நீக்கிப், பின்தான் லாரியில் ஏறும். கூரையிலிருந்து அடித்தளம் வரை அவர் கூட இருந்தே பிள்ளையாய் வளர்த்தெடுத்தார் வீட்டை. அம்மாவின் இறுதிச்சடங்கு அங்கேதான் நடந்தது. எட்டாம் துக்கம், கருமக்கிரிகை, என நினைவு தினங்களில் மட்டும் குடும்பத்தோடு போனதோடு சரி. தனி ஆளாக அங்கே போவதே இல்லை. அம்மா இறப்புக்கு முன் ஆறேழு மாதங்களுக்கு முன்னர் செல்வி எதிர்பாராது மரணமடைந்திருந்தாள். அவள் இறந்த கையோட வீட்டில் அகால வேளையில் அவள் நடமாட்டம் இருந்ததாக அப்பா சொல்வார். வெண்மையான நிழல்கள் தோன்றித் தோன்றி பீதியூட்டியிருக்கின்றன. அவர் ஒவ்வொரு கண்மும் அருகிருந்து, கட்டி எழுப்பி அரவணைத்திருந்த வீடே அவரைக் கைவிடத் தொடங்கியிருந்தது.

அப்பாவின் கார் சாலையில் இறங்குவது மிக அபூர்வம். மிகக் கட்டாயத்தின் பேரில் மட்டுமே அதன் சக்கரங்கள் மண்ணில் ஓடும். தூசு அதன்மேல் படியும். மழை நாட்களில் அதனை வெளியே எடுப்பது அருதியாய் இல்லை. கார் வீடு திரும்பியவுடன் அதனை கழுவி மெருகேற்றி அகன்ற துணியால் பாதுகாப்பாக மூடிவைப்பது செல்வியின் வேலை. கார் டையர் இடுக்குகளில் செருகியிருக்கும் கற்களை நீக்குவது செல்விக்குப் பிடிக்காத ஒன்று. உள்ளே சிக்கி உடும்பாய் இறுகப்பற்றி இருக்கும் எல்லா கற்களை நீக்குவது லேசான வேலையல்ல. டையர்களில் கீறல் விழாமலும் செய்யவேண்டும். காரில் புதிய கீறல்களோ, டையர் இடுக்குகளில் நீக்கப் படாத கல்லோ இருந்தால் அவளுக்கென்று வாங்கி வைத்த பிரம்பால் விசுக் விசுக்கென்று அடி விழும். அநேக நேரங்களில் அவள் எதிர்பாராத வேளையில். ஒரு முறை அவள் தூங்கும்போது கூட பின் தொடையில் விலாசி இருக்கிறார். இரண்டு தொடையிலும் ஒரே திசையை நோக்கிய இரண்டிரண்டு தழும்புகள். ஒன்றை இன்னொன்று துரத்தம் பூராண் வடிவில். சிவந்து வெளிக்கிளம்பி நின்ற பூராண்கள். அன்றிலிருந்து செல்வி தொடை தெரிய பாவாடை கட்டியதில்லை. கண்ணாடியில் திரும்பித் திரும்பி தழும்பு மறைந்துவிட்டதா என்று பார்த்தவண்ணம் இருப்பாள். அந்தத் தழும்புகள் அவள் இறக்கும் வரை மறையவே இல்லை. அசந்து தூங்கிய ஒவ்வொரு முறையும் அவள் திகில் கொண்டு எழுந்து , வெட வெடத்து , அகலக் கண் விரித்து பின்னர் சுதாரித்து மீண்டும் படுத்துறங்க முயன்றிருக்கிறாள். பலமுறை தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.

‘செல்வி என்னைத் தூக்கத்தில் அறைந்து மிரண்டு எழச்செய்கிறாள். அகால வேளையில் என் அறையின் கட்டிலில் அமர்ந்திருக்கிறாள். கைகளை மெல்ல என் மென்னியருகே கொண்டு வருகிறாள’ என்ற புகார்கள் வீட்டில் பழையதாகிவிட்டது. அவருடன் இதே அறையில் நான் படுத்துறங்கினேன். அவர் திடுக்கிட்டு எழுந்து என்னை எழுப்பி ‘தோ தோ’ என்பார். எங்கள் கண்களில் ஒன்றுமே தட்டுப்பட்டதில்லை. அவர்’ கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. திகில் ஏறி வெளிறிய முகம். தோள்பட்டை நெஞ்சு எல்லாம் வியர்வையில் நனைந்திருந்தது. இருள் அவரைக் காவு கொள்ளத்துடிப்பதுபோல பீதியோடு, மிரண்டு மிரண்டு பார்த்தார். அவரை வேறு அறைக்கு மாற்றிப்பார்த்தும் புலம்பல்கள் கூடியதேயொழிய குறைந்தபாடில்லை. செல்வியும் அம்மாவும் விடாது விரட்டியபடியே இருந்தார்கள்.

அவருடைய இருப்பே பெரும் சுமையாகிப்போன தருணத்தில்தான் அவர் ரகசியமாய்ப் ஒரு டாக்டரைப் போய் சந்தித்திருக்கிறார். அச்செய்தி கசியத் துவங்கியபோது எல்லாரும் பதற்றதுக்குள்ளானோம். அம்மாவை இழந்த துயரத்தைவிட, அம்மா உயிரோடிருக்கும்போது அவரை அனுசரனையோடு பார்த்துக் கொள்ளாததும், செல்வியை வன்ம குணத்தோடு துன்புறுத்தியதுதான் தன்னுடைய இந்த வேதனைக்குக் காரணம் என்று சொல்லி அழுது தீர்த்திருக்கிறார். டாக்டரின் ஆறுதல் மொழி அவரின் திகிலடைந்த நிலையை மாற்றிவிடவில்லை.

சிறிய தம்பி வீட்டுப் பிள்ளைகள் வந்துவிட்டால் பார்க்கவேண்டும். அவர்கள் விரும்பி உண்ணும் சமையல். அதை சாப்பிடச்சொல்லி காட்டும் எல்லையற்ற கரிசனம். கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்று கேட்டதெல்லாம் வாங்கித்தந்து உவகையால் துள்ளும் மனம். சினிமாவுக்கு கூட அழைத்துச்சென்று அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்கும் இவர், செல்வியையும் மனைவியையும் ஒருபோதும் இப்படி அனுசரனை செய்ததே இல்லை. செல்வி தம்பி பிள்ளைகளுக்கு நடக்கும் இந்த கரிசனத்தை, பாவனையற்ற அன்பை, தன் கண் முன்னால் நடந்தேறுவதை ஒரு ஓரமாக நின்று பார்க்கும் அவலம் ஏன் அரங்கேறித் தொலைக்கிறது? அவளிடம் சொற்கள் இல்லை. ஆற்றாமைகள் வெளிப்பட வாய்ப்பில்லை. உள்ளே வார்த்தைகள் செத்துப்போகும் தருணத்தில் தன் உள் வேதனையை, இயலாமையை , உடல் அசைவுகளின் மூலமே வெளிப்படுத்துவாள்.

எக்கி, குனிந்து, நிமிர்ந்து சன்னல்களைத் துடைக்கும்போதும், அழுக்குத் துணிகளை துவைத்தெடுக்கும்போதும், விட்டத்திலிருந்து தரைவரை தூசற்று தூய்மை செய்யும்போதும், இரவு வரை வேலைகள் அனுமர் வாலை நீளும் போதும், அவருக்கும் அன்புக்கண் இமியளவு திறந்துகொண்டதுபோல அவள் விரும்பிக் கேட்கும் ’ இன்னிக்கு டௌனுக்குப் போய் உனக்கு மீ வாங்கித் தாரேன்’ என்று சைகை மொழியில் சொல்லிவிட்டால், அதற்காக அவள் எச்சில் ஊறி, நெடுநேரம் விழித்திருந்து பார்த்து, அந்த அபூர்வம் நடக்க வாய்ப்பே இல்லையென்று நிச்சயமாகி விடும். இந்த ஆசையை ஏன் வளர்த்துக் கொண்டோம், என்று ஏமாற்றத்தோடு படுக்கப் போகும்போது அன்று செல்விக்கு இருள் மேலும் கனத்துத் தொங்கத் தொடங்கிவிடும். செல்விக்கென்று தனி உணவுத் தட்டு. அதனை வைக்கத் தனி இடம். விருந்தினர் வீட்டுக்கு வந்தால் அவள் எல்லாம் சாப்பிட்ட பின்னர்தான் சாப்பிட வேண்டும். நல்ல நாள் பெருநாட்களில் அவளுக்கு புத்தாடைகள் இல்லை. உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு அவளை அழைத்து போனதில்லை. அவள் வீட்டையும் நாயையும் காவல் காக்க வேண்டும். திரும்பி வரும்போது மீந்த உணவைக் கொண்டு வந்து கொடுத்தால், அவளுக்குண்டான ஆற்றாமையில் ‘அதனையும் நீயே சாப்பிடு’ என்று சைகை மொழியில் சொல்லிவிட்டு அகன்று விடுவாள்.

அம்மா இறந்த ஈமக் கடனெல்லாம் முடிந்த பிறகு அப்பாவை நான் வீட்டோடு இருக்கும்படி அழைத்துவந்துவிட்டேன். செல்வி இறந்துபோனதும் அவளுடைய சேட்டை இரவு வேளைகளைக் கலங்கடித்தது ஒரு காரணம். நான்கே மாதத்தில் அம்மாவின் இறப்பு. வீடு பீதியால் நிறைந்து விட்டது, என்ற ஆப்பாவின் பூகார்கள்தான் அவரைக் கடத்தியதற்குக் காரணம்.

ஆனால், மூன்றாம் நாள் பொத்தல் இலை கதைதான் மகன் வீட்டில். ‘எடுத்து வச்சாச்சி போட்டு சாப்பிடுங்க,’ என்ற குசினியிலிருந்து கேட்கும் மருமகளின் ஒற்றைக்குரலோடு விருந்தோம்பல் ஒரு நிறைவு கண்டுவிடும். இதையெல்லாம் மனைவி பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள். அப்போது ஓரிரு சொட்டுக் கண்ணீர் திரையிட்டு ஒழுகப்பார்க்கும். யாரும் அறியா வண்ணம் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் கலைய புறங்கை காபந்து செய்துவிடும். இந்த விருந்தோம்பல் உணவு வேளையில் ஒலிக்கும் சிறையின் மணியோசை போல, அல்லது உணவுக்காய் வாசலில் காத்திருக்கும் தெருநாய்க்கு சமமாய் தன்னை வைத்துப் பார்த்துக்கொள்ளும். உணவின் காரம்தான் கண்களை ஈரமாக்குகிறது என்று நினைப்பது அவருக்கு நேரும் அகவெடிப்பை சிறுமைப்படுத்துவதாகிவிடும்.”நீ இதெல்லாத்தையும் பாத்துக்கிட்டுதான் இருக்கியா?” உள்மனம் வெடித்து நீர்த்த்வலைகளை வடியாமல் உள்ளெயே பதுக்கிக்கொள்வார்.

அம்மாவே ரகசியமாய் கூட்டு போட்டு தனக்குத் தேவையானதை வாங்கிக்கொள்வார். அதெல்லாம் அப்பாவுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டார். கலயாண வைபவத்துக்கோ, திருவிழாக்களுக்கோ அம்மாவை உடன் அழைத்துச் செல்வதை அவர் விரும்புவதில்லை. வாசல் வழி பார்க்கக் கிடைக்கும் உலகம் மட்டுமே அம்மாவுடையதானது.

ஒருநாள் இரவு நள்ளிரவைத் தாண்டிய அகால வேளையில் “செல்வியும் பாமாவும் என்னை மென்னியை நசுக்கி கொன்னுட்டாங்க,’ என்று வெகுநேரம் கத்திக்கொண்டே இருந்தார். கழுத்தைப் பிடித்தபடி கட்டிலைவிட்டு சுவரில் சாய்ந்து முகம் வெளிறி, வியர்த்து, வெடவெடத்து கால் நடுங்க நின்றுகொண்டிருந்தார். வியர்வையின் ஒவ்வொரு துளியின் நுனியும் அவர் ஒடுங்கிப் பதுங்கியதைப் பிரதிபலித்தது. விழிப்படலங்கள் பெரும்பயங்கரத்தை வரைந்திருந்தன. விரல்கள் துடித்தன. நாங்கள் வந்தது கூட உணராமல் விழிகள் கட்டிலில் நிலைத்த வண்ணம் இருந்தது. கட்டிலைவிட்டு செல்வியும் அம்மாவும் நகராமல் புகை உருவங்கள் போல மிதந்தார்கள் போலும். கண்கள் மிரட்சியில் நடுங்கி பீதி நிலைகொண்டுவிட்டிருந்தது. ‘செல்வி’ ‘பாமா’ என்று மூச்சிரைத்தபடி இடை இடையே அரற்றிக்கொண்டிருந்தார். இப்போதைக்கு அவர் ஆசுவாசப் படுத்துவது முடியாத செயல்.

அப்பாவின் நிலை நாளாக நாளாக மோசமாகிக் கொண்டிருந்தது.

“மாரிமுத்து அறவத்தஞ்சு வயசுல செத்துப்போயிட்டாண்டா..ஆறுமொவம் செத்து புல் மொலச்சிருக்கும்,” இப்படி அவருக்குத் தெரிந்தவர் மரணப்பட்டியலை சொல்லியபடியே இருப்பார். அப்போது ஒருசேர இரு கைகளையும் உயர்த்தி, வானத்தை அந்நாந்து நோக்கி யிருக்கும்.” ராமசாமி படுத்த படுக்கையா இருக்கானாம், கணேசன் இனி பொழைபான்னு நம்பிக்கையில்லியாம்” என்று சாவை எதிர்நோக்கி இருக்கும் நண்பர்கள் பட்டியலும் அவரிடம் இருக்கும்.

இப்போதெல்லாம் அடிக்கொருதரம் புதுப் புது மரணப்பட்டியலைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

(2014 ஆண்டுக்கான மத.எ.சங்கத்தின் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. ரிம 3000.00)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *