மறுபக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 4,770 
 

அது, தைப்பிங் நகரிலுள்ள பெயர் பெற்ற தனியார் மருத்துமனை. சிறப்புப் பிரிவு அதாவது முதல் வகுப்பு. பள்ளியில் முதல் வகுப்பு என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். இங்கு வேறு மாதிரி. இறுதி வகுப்பில் படித்த மாணவன் எந்நேரமும் புறப்பட்டுப் போய்விடவேண்டுமே அப்படியான ஒரு சூழல். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ‘பஸ்ட் கிளாஸ் வார்டு’ என்றே எல்லாரும் சொல்கிறார்கள்.

அந்த அறையில் ஒரே ஒரு படுக்கை. மிகவும் நேர்த்தியான வடிவமைப்பு. அதன் பக்கத்தில் பல வகையான கருவிகள்.. எந்நேரமும் விழுப்புநிலை தாதி ஒருத்தி. அவளுக்கு முன்னால் மேலும் கீழுமாக நெளிந்து நெளிந்து கோடுகள் ஒடிக்கொண்டிருக்கும் கணினி ஒன்று. அப்போது, அந்த உடலுக்குப் பக்கத்தில் பலர் நின்றிருந்தார்கள். தலைமை மருத்துவரோடு சிறப்பு மருத்துவர்களும் இருந்தார்கள். தலைமைத் தாதியும் மற்றும் பல தாதிப் பெண்களும் ‘வார்டு’ மருத்துவர் சொல்வதை மிகவும் உன்னிப்புடன் கவனிப்பவர்களாக நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள்ளும் மிகத் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தரின் பேச்சு நின்று போய் பல மணி நேரமானது. மூச்சு..! உச்ச நிலைக்குச்செல்வதும் சொல்லிக்கொள்ளாமல் சடக்கென்று கீழிறங்குவதுமாக ஒரு நிலையிலில்லாமலிருந்தது. அவர்கள் அதற்காகத்ததான் இவ்வளவு நேரம் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

இவையெல்லாம் நடந்தது இன்று காலைவரை.

இப்போது எல்லாமே தலை கீழாகிவிட்டன.

ஐயா எப்படி இருக்கிறார். கண்ணைத் திறந்து பார்க்கிறாரா..? கை, கால்களை அசைக்கிறாரா… பேசுகிறாரா… போய்ப்பார்த்தால் அடையாளம் கண்டுக்குவாரா…?

சரியான ‘மெடிகல் செண்டர்லதான் அட்மிட்’ ஆகியிருக்கிறாரு.. கூடிய சீக்கிரமே வீட்டுக்கு வந்திடுவாரு பாருங்களேன். யார் வாக்கு பலிக்காட்டியும் என் வாக்கு பலிக்குங்க.. ஏன்னா என்னோடது கருநாக்கு…

நம்ம ஐயா இந்த சமுதாயத்துக்கு செய்யாத உதவியாங்க மற்றவங்க செய்துட்டாங்க… தர்ம தேவத அவரோட தலையையே சுத்திக்கிட்டிருக்கா… நல்லா கவனச்சீங்களா… அதனால, அவரு கருங்கல்லாட்டமா எழுந்து வூட்டுக்கு திரும்புவாரு பாருங்க…

ஒரு நா பாருங்க நானும் நம்ப கூட்டலிங்களும் மாமா கடையில வுக்காந்து டீ குடிச்சிக்கிட்டுருந்தோம்… நம்ம தலைவர் ஐயா நாலு பேரோட வந்தவரு எங்கள பார்த்துட்டாரு… உடனே வந்து எங்களுக்கெல்லாம் கை குடுத்தாரு பாருங்க… அதுதாங்க தலைவருக்கு லட்சணம்… அதுமட்டுமில்லீங்க… எங்க அத்தன பேருக்கும் அவரு தாங்க காசு கட்டுனாரு…அப்படிப்பட்ட தங்கக் கம்பிங்க அவரு…

பாருங்க… நா அவரு கைய தொட்டதும்.. ஒருக்க சிலிர்ப்பு சிலித்தாரே… அவரு ஒடம்பு லேசா அசஞ்சு குடுத்திச்சே கவனிச்சீங்களா… நம்மமேல அவருக்கு ரொம்ப ஒரு இதுங்க… கட்டாயமா நாளைக்கோ நாளன்னிக்கோ வீட்டுக்கு வந்திடுவாரு பாருங்களேன்..

அந்த ஐயாவுடைய கண்ணுக்குக் கண்ணாகவும் காதுக்குக் காதாகவும் இன்னும் மேலே போனால் கைகளாவும் தேவைப்படும்போது இறுதிக்கட்ட அரிவாள்களாவும் செயல்பட்ட ஒருவர் எந்த நேரத்திலும் எழுந்து விடுவார் என்னும் தீவிர நம்பிக்கையில் சொன்ன வார்த்தைகள் அவை.

அந்த பிரமுகரைப் பற்றிய அத்தனை கற்பனைக்கு எட்டாத ஆரூடங்களும் அளவுகோலுக்கு அடங்காத கணிப்புக்களும் பலிதமாகாமல் அவ்வளவும் பொய்த்துப் போய் இறுதியாக ஒரு தடவை இலேசாக உடல் மேலும் கீழும் குலுங்கி வெட்டி உதறி உலுக்க கோணிய வாய் மூட மறந்து நிரந்தரமாகக் கண்களை மூடியே மூடிவிட்டார்.

ஐயா, முதன்முதலில் மருத்துவமனை வார்டு கட்டிலில் வந்து படுத்த போது காட்டிய மதிப்புமிகுந்த மரியாதைகள், பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் அத்தனையும் உடனடியாக மீட்டுக் கொள்ளப்பட்டிருந்தன. பூட்டப்படிருந்த நவீனமயமான எல்லா கருவிகளும் உடனடியாச் செயலிழந்து போயின. அதாவது அவற்றின் காரியமாற்றுதலிலிருந்து உயிர் விட்டிருந்தன.

செயல்பாட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அதன் நாக்குகளைக் கவனமாக அகற்றிக் கொண்டிருந்தாள் தாதி ஒருத்தி. அவற்றை அந்த உடலின் உறுப்புக்களில் பொருத்தும் போதிருந்த வேகம் விவேகம் நிறைந்த கவனமான இலாவகம் அப்போது காணாமற் போயிருந்தது..

அதன்பின்பு, உடல் வெண்மையான துணி போர்த்தப்பட்டு இன்றுதான் புனிதமாகியதுபோல் கட்டிலில் கிடத்தி வைக்கப்பட்டு விட்டது.

அப்பாவோட ‘பாடி’ இன்னும் மருத்துவமனையிலேயே கெடக்குதாம். நாம எப்ப வந்து எடுத்துக்கிட்டு போவப்போறோம்னு போன் பண்றாங்க… அதுக்கு என்ன பதில் சொல்லணும்…

மகன் கேட்க, ஏன் நாம போய் கொண்டாரணும்.. அதுக்குதான் ஒன்னுக்கு ரெண்டு பேரு இருக்காளுங்களே.. அவளுங்கள யாராவது ஒருத்தி போயி அவளுங்க வீட்டுக்கு கொண்டு போயி அடக்கம் செஞ்சிக்கிடட்டும்.. நமக்கு ஏன் தொல்ல…

என்னம்மா பேசுறீங்க நீங்கதான் அவரோட முதல் மனைவி… அவருக்கு புள்ளைங்கன்னு சொல்லிக்க நாங்க மூனு பேரு இருக்கோம்… நம்ம வீட்ல கொண்டாந்து முறையா எடுத்து அடக்கம் செய்யணும். அதுதான் முறையா இருக்கும்.

தற்போது சடலமாகிப் போயிருந்த அந்த முன்னாள் செல்வந்தரும் தலைவர் ஐயா என அவருடைய அடிவருடி அன்பர்களால் அழைக்கப்பட்ட பிரமுகரின் முதல் மனைவிக்கும் அவருடைய மகனுக்கும் காரமும் சாரமும் கலந்த உரையாடல் நடந்து கொண்டிருந்தது.

உனக்கு ஒன்னும் தெரியாது… விவரமும் போதாது. நான் ஒருத்தி குத்துக் கல்லாட்டம் இருக்கைக்க அந்த ஆளு என்னோட சம்மதம் இல்லாமலியே அவரோட செல்வாக்க பயன்படுத்தி இன்னொருத்திக்கு தாலி கட்டனாரு…இன்னொருத்திய வைச்சுக்கிட்டாரு… அது மட்டும் இல்லப்பா, எனக்கு ஒரு வீட்ட மட்டும் எழுதி வச்சிட்டு அவளுங்களுக்கு பங்களா, கார் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்காரு…இது நமக்கு செஞ்ச துரோகம் இல்ல..

என்னதான் இருக்கட்டும்… இப்ப அவரு செத்துப் போயிட்டாரு… இந்த நேரத்தில அதெல்லாம் பார்க்க முடியாது இல்ல…அவரு வாழும்போது ரொம்ப பெருமையாத்தான் வாழ்ந்தாரு… இன்னைக்கு அவரு யாரும் இல்லாதவரா விட்டுட முடியுமா..

நீ சொல்றது சரிதாம்பா… இன்னைக்கு ஒரு மகனா இருந்து பேசுற… முன்ன ஒரு தடவ நீ படிக்க ‘லோன்’ கெடைக்காம அவர் கிட்ட பணத்துக்கு போய் நின்னயே… என்ன என்ன எல்லாம் சொல்லி தட்டிக் கழிச்சாரு… வெரட்டாத கொறையா அந்த ரெண்டாவது பொம்பளயோட வீட்லேயிருந்து கூனிக்குறுகி வெளிய வந்தமே மறந்துட்டியா…நீ மறக்கலாம்; நான் மறக்க முடியுமா..?

அவரோட ஒரு பக்கத்ததான உனக்குத் தெரியும். அடுத்த பக்கம் ரொம்பவும் புழுத்துப் போனது. அத நீ தெரிஞ்சிக்க வேண்டாம். தடுக்கி விழுந்த எடத்திலயெல்லாம் தாவணிகளத் தேடுனவரு… வெளிய சொன்னா வெட்கம்… நமக்குதான் அவமானம்..

மகனால் பதில் சொல்ல முடியாமல் அமைதியாகி விட்டார்.

அப்போது..! மீண்டும் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.

இது நிச்சயமா அந்த ‘பிரைவேட் ஹாஸ்பிட்டல்’ல இருந்துதான் கூப்பிடறாங்க. எடுக்க வேண்டாம். வேணும்னா எந்த வீட்டுக்காவது கூப்பிட்டு பொணத்த கொண்டு போவ சொல்லிக்கிடட்டும். நாம இதல எல்லாம் தலையிட வேண்டாம்.

பிரமுகரின் முதல் மனைவி மகனுக்குக் கட்டளை இட்டார்.

***

இப்போது..!

ஐயாவின் இரண்டாவது மனைவியின் வீடு. தனியார் மருத்துவமனையிலிருந்து அதே தொலைபேசித் தொடர்பு.

தொலைபேசித் தொடர்புக்குப் பின் தன் அந்தரங்க ஆலோசகர்களும் நகரத்தில் பெருமையுடன் வாழ்ந்து இன்று சடலம் என பெயர் சூடிக்கொண்டவரிடம் நேற்றுவரை நகமும் சதையுமாகச் செயல்பட்டவர்களும் அவர் நெஞ்சுவலி என சொன்னவுடன் அழுத கண்ணும் சிந்தாதமூக்குமாக ஓடோடிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தவர்களுடனும் மந்திராலோசனைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அவர்கள் மண்டைகளைக் குடைந்து பலவிதமான ஆலோசனைகள் செய்து இறுதியாகத் தங்களுக்குள் போட்டுக் கொண்ட தீர்மானங்கள் இவ்வாறு இருந்தன:

என்ன இருந்தாலும் நீங்க ரெண்டாவதுதான். சட்டப்படி முதல் மனைவிதான் எல்லா செலவும் செய்து அடக்கம் செய்யணும்.
அதோட, அவங்களுக்குதான் சொத்துல முழு பங்கும் இருக்கு. அதனால, ‘ஹாஸ்பிட்டல் பில்’ எவ்வளவுன்னு கேட்டா நீங்க மயக்கம் போட்டு விழுந்துடுவீங்க..

சமீபத்திலதான் மிச்ச சொச்ச சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி எழுதிக் கொண்டதை அந்த அம்மாள் மூச்சுவிடவில்லை.

இங்க கொண்டு வந்தா எல்லா செலவையும் நாமதான் செய்யணும். குறைந்தபட்சம் ரெண்டு நாளாவது வெச்சிருக்கணும். ‘கேமா’ போடறதிலேயிருந்து வர்ற முக்கிய பிரமுகர்களுக்கு காலை பசியாற மதிய சாப்பாடு ராத்திரி இடியப்பம் சாம்பார் வரைக்கும் செய்யணும். ரெண்டு நாள் செலவ கணக்குப் பார்த்தா தலை சுத்திப் போயிடும்.
இன்னும் பல செலவுகள் இருக்கு. அதையும் கணக்கில எடுத்துக்கிடணும். உயிர் விட்ட மூனாம் நாள் பால் ஊத்தணும்..எட்டாந் துக்கம், கருமாதி… அதுக்கான செலவுகள கணக்கில எடுத்துக்கிட்டா…
நல்லவேள கொண்டு சேர்க்கும்போது நாஞ்சொன்னமாதிரி மொத பொண்டாட்டியோட நெம்பர கொடுத்துட்டு வந்தீங்க..

அவர் தனது அல்லக்கைகளுக்கு ஒரு பாராட்டும் தெரிவித்துக்கொண்டார் அந்த தர்மபத்தினி.

தம் ஆலோசகர்களின் முடிவுப்படி இரண்டாவது இல்லக்கிழத்தியான அந்த அம்மாள் மருத்துவமனைக்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமலும் அந்தப்பக்கமே போகாமலும் வீட்டைப் பூட்டிக்கொண்டு தலைமறைவாகி விடுவதென ஏகமனதாக முடிவும் செய்து கொண்டார்.

இந்தச் செலவும் முதல் மனைவியோடு சேர்த்து இன்னொன்றும் மனதைக் குடைந்து உடல் முழுதும் வெப்பம் ஏற்படச் செய்து கொண்டிருந்தது.

அதுதான், சமீபகாலமாக அவர் இன்னொருத்தியைச் சேர்த்து தனிக்குடித்தனம் நடத்திக்கொண்டிருப்பது.

சட்டப்படி கணக்கில் வராத அந்த மூன்றாவது அம்மாளும் என்னென்ன முறையில் தனக்குச் சேர்க்க வேண்டுமோ அதையெல்லாம் அவரிடம் சிரித்துக் கொண்டே வலை வீசிச்சேர்த்துக் கொண்டாள்.

இப்போது, ஐயாவுக்கு சொத்து என எடுத்துக் கொண்டால், அவருடைய உடம்பு மட்டுமே மீந்து இருந்தது. அவர் இருந்தவரை அதை வைத்துக்கொண்டு செய்ய முடிந்ததை எல்லாம் செய்து கொண்டிருந்தார்.

***

ஒருமணி நேரத்துக்கு முன்னாள் ஐயாவாகவும் முக்கிய பிரமுகர்களில் ஒருவராகவும் இருந்து தற்போது உயிரற்ற உடலாகிப்போனதின் காரணத்தினால் இரண்டு மனைவிகளின் வீடுகளுக்கும் தொடர்பு கொண்டு அலுத்துப் போனார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.

அந்த உடலுக்கு வேண்டிய அத்தனை விசயங்களும் முடிக்கப்பட்டு விட்டன. யாராவது வந்து மருத்துவமனை செலவுத் தொகை கட்டணத்தைக் கட்டிவிட்டால் முறைப்படி ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி விடலாமென காத்திருந்தார்கள்.

இதுவரை யாரும் வந்து சேரவில்லை. கோரவில்லை.

குளிப்பாட்டுவதிலிருந்து வாகன வசதி செய்து வீட்டுக்குச் சடலத்தைக் கொண்டு செல்வதுவரையிலும் அதன்பின்பு மின்சுடலையில் அடக்கம் செய்வது மட்டுமல்லாது மூன்றாம் நாள் பால் ஊற்றி கருமக்கிரியை வரை செய்யும் ‘பேக்கேஜ்’ முகவர்கள் இதையெல்லாம் கண்ணும் காதும் வைத்ததைப் போல் அறிந்து தெரிந்து கொண்டு மருத்துவமனை வளாகத்திலிருந்தே காணாமற்போயிருந்தார்கள்.

ஐயா வார்டில் அனுமதித்தபோது கட்டிய வைப்புத் தொகையை நீக்கிக் கணக்கிட்டபோது பல ஆயிரங்களில் வந்து நின்று கொண்டிருந்தது…

அப்போதும்… முருக்கமரத்திலிருந்து வேதாளத்தை வெட்டி வீழ்த்திச் சுமந்து சென்ற விக்கிரமாதித்தனைப் போன்று தன் முயற்சியில் மனம் தளராத மருத்துவமனை காசாளர் அறையிலிருந்த பாவமான ஊழியர் ஒருவர் மூன்றாவது மனைவியின் இல்லத் தொலைபேசிக்குக் காதும் வாயும் வலிக்கத் தொடர்பு கொண்டிருந்தார்.

இப்போது… வெண்மை உடை போர்த்தப்பட்ட அந்த உயிரற்ற உடல் தற்காலிகத் தங்குதலுக்காக ‘மோர்சுவரி’க்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தது.

அதன்பின்பு…! ..?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *