குத்துச்சண்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 21, 2019
பார்வையிட்டோர்: 7,386 
 

“சான் அண்டேனியோ” என்னும் ஊரில் பச்சை பசேல் என்று காணப்பட்ட அந்த பூங்கா நடைவாயிலில், சுயீங்கத்தை மென்று கொண்டே சென்று கொண்டிருந்த பிரபல குத்து சண்டை வீரன் ராபர்ட் “ஹாய் அங்கிள்” என்ற கோரசான குரல்கள் கேட்டு தலையை திருப்பி பார்த்தான். “ஹாய்” இவனும் மகிழ்ச்சியுடன் கை காட்டியவன் இங்க என்ன பண்ணறீங்க எல்லாரும்? கேள்வியை கேட்டவனை அந்த சிறுவர் கூட்டம் ஓடி வந்து சூழ்ந்து நினறனர்.

அங்கிள் எங்க ஸ்கூல்ல இருந்து டூர் வந்திருக்கோம்.நீங்க எப்படி இங்க நின்னுகிட்டு இருக்கறீங்க, ஆச்சர்யமுடன் கேட்ட குழந்தைகளை, குட்டீஸ் இது தான் என்னுடைய ஊர், ஒரு கிலோ மீட்டர் தள்ளி என் வீடு இருக்கு. இப்ப நீங்க வர்றீங்கன்னு சொன்னீங்கன்னா உங்களை நான் என்னோட கார்ல வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். அங்க என்னோட செல்ல குட்டி நாய் பப்பி இருக்கு, என்னோட அப்பா அம்மா இருக்காங்க, அவங்க உங்களை வரவேற்பாங்க. என்ன சொல்றீங்க?

சிறுவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டவர்கள், மெல்ல இவன் பக்கம் திரும்பி ஸாரி அங்கிள், கண்டிப்பா இன்னொரு நாள் உங்க வீட்டுக்கு வருவோம். இப்ப நீங்க எங்களுக்கு உங்க ஆட்டோ கிராப் போட்டு கொடுங்க என்று ஒவ்வொருவராய் ஒரு சிறிய நோட்டு புத்தகத்தை கொண்டு வந்தனர். ராபர்ட் சளைக்காமல் அவர்களுக்கு கையெழுத்து போட்டு கொடுத்துக்கொண்டிருந்தவன் சற்று கண்ணை தாழ்த்தி பார்த்த பொழுது ஒரு சிறுவன் இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் தனித்து நிற்பதை கண்டான்.

ஹேய் பாய் ஏன் தனியா அங்க நின்னுட்டே? கமான் பாய்..ஹூஹும், அந்த பையன் இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்று கொண்டிருந்தான். ராபர்ட் கொஞ்சம் புதிராய் அவனை பார்த்தவன், சிறுவர்களுக்கு கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு அந்த சிறுவனின் அருகில் சென்றான். மெல்ல அவன் தோளை தொட்டு, ஏன் தம்பி சோகமாய் இருக்கிறாய்? அவன் இவன் தோளை தொட்டதால் அசுவாசியமாய் தோளை திருப்பி நீங்கள் பெரிய குத்து சண்டை வீர்ர்தானே?

ஹா ஹா அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, நான் சாதாரண குத்து சண்டைவீரன் தான், சொல்லிவிட்டு சிரித்தான். உங்க பேர் ராபர்ட் தானே, யெஸ்,சொல்லிவிட்டு அவன் முகத்தை பார்த்தான். நீங்க ஒண்ணும் எங்கப்பாவை விட பெரிய குத்து சண்டை வீரன் கிடையாது.சொன்ன பையனை சற்று நேரம் உற்று பார்த்த ராபர்ட், மெல்ல புன்னகையுடன் உங்கப்பா பேரை சொல்லவேயில்லையே?

“ஹென்ரி” கேட்டிருக்கீங்களா? அவர்தான் எங்கப்பா. பெரிய குத்து சண்டை வீர்ராக்கும், தெரியுமா? கேட்டவனின் குழந்தைதனமான முகத்தை பார்த்தவன், மெல்ல புன்னகையுடன் ஓ ஹென்ரி பையனா நீ. உங்கப்பா பெரிய குத்து சண்டை வீர்ராச்சே, சொல்லிவிட்டு அவன் முகத்தை பார்த்தான்.

அந்த சிறுவனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிவது போன்ற மகிழ்ச்சி, பாத்திங்களா எங்கப்பா பேரை சொன்னவுடனே எப்படி பயப்படறீங்க, அதுதான் எங்கப்பா. பெருமையுடன் சொல்லிவிட்டு மோகனமாய் புன்னகைத்தான். இப்பொழுது அந்த சிறுவன் ராபர்ட்டுடன் சினேகிதமாகிவிட்டான்.ஒரு சிறிய நோட்டை எடுத்து எதுக்கும் இதுல கையெழுத்து போட்டு கொடுங்க. எங்கப்பா கிட்ட காட்டுறேன். சொன்னவன் இவன் கையெழுத்து போட்டு கொடுத்த நோட்டை பத்திரப்படுத்திக்கொண்டான்.

“பை அங்கிள்” சிறுவர்கள் ராபர்ட்டுக்கு கையை ஆட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு பறந்தனர். கடைசியாக நின்று கொண்டிருந்த அந்த ஹென்ரி மகனும் அவனுக்கு கையை ஆட்டி எங்கப்பா கிட்ட உங்களை பத்தி சொல்றேன், அவன் சொன்னது இவன் காதுக்கு சரியாக கேட்காவிட்டாலும், உற்சாகமாய் இவனும் அவர்களுக்கு கையை ஆட்டினான்.

பயிற்சியாளர் டிசெளசா ராபர்ட் பயிற்சி செய்து கொண்டிருந்த போது பக்கத்தில் வந்தவர் “பஞ்ச்” செய்யும் போது எதிராளியின் கவனத்தை சிதறடிக்க இப்பொழுது செய்து கொண்டிருக்கும் யுக்தியே போதும்.சொன்னவர் அவன் தோளை தட்டி பயிற்சி முடிந்தவுடன் என்னை வந்து பார். சொல்லிவிட்டு அவர் அறைக்குள் சென்று விட்டார்.

ராபர்ட் பயிற்சிகளை முடித்தவன் மெல்ல குளியலறைக்கு சென்று அலுப்பு தீர குளித்து விட்டு உடை மாற்றிக்கொண்டு பயிற்சியாளர் டிசெளசா அறைக்குள் சென்றான்.

ஏதோ யோசனையில் உட்கார்ந்திருந்தவர் இவன் உள்ளே வருவதை பார்த்தவர் எழுந்து இப்பத்தான் உன்னை பத்தி நினைச்சுகிட்டு இருந்தேன், வந்துட்டே, சொல்லிக்கொண்டே உட்கார் என்று சைகை காட்டினார்.அவர் காட்டிய நாற்காலியில் உட்கார்ந்தவன் அவர் முகத்தை பார்த்தான். டிசெளசா மெல்ல கனைத்து அடுத்த மாசம் “லாஸ் வேகாஸ்’ஸில் அமெரிக்கன் குத்து சண்டை அகாடமி நடத்தும் போட்டியில், உனக்கு ஒரு போட்டி இருக்கு, ஞாபகம் இருக்கா?

இருக்கு சார், ஆனா எங்கூட மோத போறது யாருன்னுதான் தெரியாம இருந்துச்சு.

பேர் வந்துடுச்சு, மில்லராம். அந்த கலிபோர்னியாவிலயே பெரிய குத்து சண்டை வீரனாம். கொஞ்சம் முரடன், பார்த்து ஹாண்டில் பண்ணனும், உன்னால முடியும். இருந்தாலும் அவனோட வீக்னஸ் என்னங்கறதை சொல்றேன்,புரிஞ்சுக்க.

அவர் ஆட்டத்தில் அந்த மில்லரின் ஆட்டங்களை திரையில் ஓட விட்டு அவனின் பலவீனங்களை சொல்லிக்கொண்டே வந்தார். இவன் உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வந்தான். கடைசியாக ஒரு வார்த்தை சொன்னார், அவன் மிகவும் முரடன், சின்ன சின்ன விசயங்களுக்கு கூட தன் மனைவியை போட்டு அடித்து விடுவானாம்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்து விட்டு வீட்டுக்கு வந்த ராபர்ட் தன் படுக்கை அறையில் படுத்தவாறு டிசெளசா சொன்னதை அசை போட்டுக்கொண்டிருந்தவன் அப்படியே தூக்கத்திற்கு சென்று விட்டான்.

குத்து சண்டை மைதானம் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. முதல் ரவுண்டு ஆரம்பிப்பதற்கான மணி அடித்தது. ஆக்ரோசமாய் கைகளை வீசினான் மில்லர்.

ராபர்ட் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு மில்லரின் குத்துக்களை லாவகமாய் தவிர்த்தான்.

இவன் தப்பிக்க தப்பிக்க மில்லரின் வேகம் கூட ஆரம்பித்தது. ராபர்ட்டுக்கு இப்பொழுது இவனின் வேகம் புரிய தொடங்கியது. நாம் விலக விலக இவன் வேகம் கூட்டுவதால் ஒன்றிரண்டு சுற்றுக்களிலே சோர்ந்து விடுவான். அதை புரிந்து கொண்டவன் மில்லர் மீது எதிர்க்குத்துக்களை விடாமல் தற்காப்பு முறையிலேயே விளையாட ஆரம்பித்தான்.

சொன்னது போலவே நான்காவது சுற்றிலேயே மில்லர் களைப்படைய ஆரம்பித்து விட்டான். அவனின் களைப்பை பயன் படுத்திக்கொள்ள ஆரம்பித்தான் ராபர்ட், இப்பொழுது தனது பாணியில் குத்துக்களை வேகமாக வீச ஆரம்பித்தான். அந்த குத்துக்களை தவிர்க்கவே மிகவும் போராடினான் மில்லர்.

கடைசி சுற்றுக்கு முந்திய சுற்றில் ராபர்ட்டுக்கு ஒரு அருமையான வாய்ப்பு வந்தது.

இவன் மில்லரின் முகத்தில் குத்தப்போகும் தருணம் சட்டென ஐயோ என்ற ஒரு மெல்லிய அலறல் கேட்டவன் தன் கவனத்தை அந்த பக்கம் திருப்ப அங்கு அன்றொரு நாள் ராபர்ட்டிடம் தன் அப்பாவை பற்றி பெருமையாக சொன்ன ஹென்ரி மகனும், அவனை கட்டி பிடித்தவாறு அவனது அம்மாவாகத்தான் இருக்க வேண்டும், இருவரும் விழிகளில் மிரட்சியுடன் நிற்பதை கண்டான்.

அப்படியானால் அந்த சிறுவன் சொன்ன குத்துச்சண்டை வீரன் இவனாகத்தான் இருக்கவேண்டும், அவன் “ஹென்ரி என்றுதானே சொன்னான், இவனை மில்லர் என்று அறிமுகப்படுத்தினார்களே? தன் யோசனையை தவிர்க்க தலையை உதறிக்கொண்டான்.

கடைசி சுற்று வரை நீடித்த இந்த போட்டி புள்ளிக்கணக்கில் “மில்லர்” வெற்றி பெற்றி விட்டார் என்று நடுவர் அறிவித்தார். தோல்வியை வணக்கத்துடன் ஏற்றுக்கொண்டான் ராபர்ட். “மில்லர்” இந்த வெற்றியை நம்ப முடியாமல் இவனது தோளை அணைத்து விலகினான்.

போட்டி முடிந்து பயிற்சியாளர் டிசெளசா அவனை வந்து பார்த்தவர் எதற்காக அவனை ஜெயிக்க வைத்தாய்?

இவன் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, அவன் நன்றாக விளையாடினான்.

நீ தோற்று போனது அவனது மனைவி பயந்து கத்தியதற்கா? நான் அவன் மனைவியை அடிப்பவன் என்று உன்னிடம் சொன்னது தவறாக போயிற்று.

இல்லை ! தன் தகப்பன் தோற்றுப்போவதை எந்த குழந்தையும் விரும்புவதில்லை. சொல்லிவிட்டு சிரித்தான் ராபர்ட்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *