கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 4,935 
 

எங்கள் தெருவிற்கு எங்கிருந்தோ இளமையான, நல்ல வாலிபமான மெருன் நிறத்தில் ஆண் நாய் ஒன்று அடுத்த வீட்டிற்கு வந்து சேர்ந்தது.

அவர்கள், ஒரு வருடம் அந்த வீட்டில் வசித்து காலி செய்து விடடு போன பிறகு அந்த நாய் அவர்களோடு செல்லாமல் எங்கள் தெருவின் அனைத்து வீடுகளிலும் உண்டு உறங்கி செல்ல நாயாக மாறியது.

எங்கள் தெரு ரொம்ப சின்னது. எண்ணி பத்தே பத்து வீடுகள். இந்த பத்து வீடுகளிலும் அந்த நாய்க்குத் தட்டு வைத்து சோறு போடுவார்கள்.

தட்டில் சோற்றை எடுத்துக் கொண்டு வாசலில் வந்து நின்று, ‘சிங்கம்!’ என்று குரல் கொடுத்தால் போதும் அது எந்த வீட்டில் படுத்துக் கிடந்தாலும் வாசல் வழியாகவோ அல்லது அடுத்த பக்கத்து வீடுகளின் வேலியைப் பொத்துக் கொண்டோ விரைந்து வந்து நிற்கும். அதற்கான தட்டில் சாதத்தைக் கொட்டுவiரை வாலாட்டிக் கொண்டு நிற்குமேயொழிய பறக்காது. சோற்றை கொட்டினாலும் மற்ற நாய்களைப் போல் உடன் கவ்வி அவசர அவசரமாக விழுங்காது.

கொட்டி முடித்து நிமிர்ந்து, ‘சாப்பிடு’ என்றால்தான் தட்டில் பொறுமையாக வாயை வைக்கும். அது அளவுக்கு மீறி சாப்பிடாது. குறைத்து வைத்தாலும் சாப்பிட்டு அடுத்து வேண்டுமென்று எதிர்பார்த்து நிற்காது.

குடும்பமே வாசலில் உட்கார்ந்து சாப்பிட்டாலும் என்னவோ காவலுக்கு இருப்பது போல அருகில் சாதுவாக உட்கார்ந்திருக்கும் அல்லது படுத்திருக்குமேத் தவிர சாப்பிடும் தட்டுகளையோ சாப்பிடுபவர்களையோ ஆசை, ஆவல், ஏக்கமாய்ப் பார்க்காது. சில நாய்களைப் போல் சாப்பிடுபவர்கள் தொடையைத் தொட்டு சுரண்டி கவனம் ஈர்த்து, ‘சாதம் போடு, கொடு’ கேட்காது.

அந்த நேரத்தில் அக்கம் பக்கம் வீடுகளில் யாராவது சாப்பிட சிங்கம் குரல் கொடுத்தால் சாப்பிடுவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் கொஞ்சம் நகர்ந்து, ‘நான் இந்த வீட்டில் இருக்கிறேன்!’ என்பதைக் காட்டும் அறிகுறியாய் குலைத்து இருப்பிடத்தைக் காட்டுமேத் தவிர….அவசரப்பட்டு எழுந்து அழைத்த இடத்திற்கு ஓடாது. இங்கு சாப்பிட்டு முடித்து, மறந்து சாப்பாடு போடாமல் விட்டால்தான்; அழைத்தவர் வீட்டு வாசலில் நிற்கும். ‘நான் வந்திருக்கிறேன்!’ என்று கேட்டை உரசி சத்தம் எழுப்பும். இப்படி அறிவுள்ள ஒரு நாட்டு நாயை யாரும் எங்கும் பார்த்திருக்க முடியாது.

சிங்கம் மனிதர்களைப் போல் மூன்று வேளை மட்டும் சாப்பிடும். ஓரிடத்தில் சாப்பிட்டுவிட்டால் அடுத்த இடத்தில் சாப்பிடாது.

எந்த வீட்டிற்கு விருந்தாளி வந்தாலும் குலைக்காது. அவர்கள் வாசலில் உட்கார்ந்தால் பழகியவர்கள் போல் அருகில் நிற்கும். ‘பழகுவோம்’ என்று கை கொடுக்கும். அணைக்கரையிலிருந்து வந்த என் தங்கை இதன் குணாதியம் தெரியாமல் முதலில் அரண்டு உருண்டு பின் இதன் குணம் தெரிந்து கை கொடுத்து…”.இதுக்கு வாய் ஒன்னுதான் இல்லே.மத்தப்படி மனுசாள்தான் .!” என்று ஆச்சரியப்பட்டுப் பாராட்டினாள். அதன் பிறகு அவள் எத்தனைத் தடவை என் வீட்டிற்கு விருந்தாளியாக வந்தாலும் அதை காணவில்லை என்றால், ”எங்கே சிங்கத்தைக் காணோம் ?!” கேட்பாள்.

அவள், இது வந்ததைக் கவனிக்காமல் நின்றால், காலடியில் நிற்கும் சிங்கம் சும்மா இருக்காது. அவள் புடவையைக் கவ்வி இலேசாக இழுத்து தான் வந்திருப்பதை அறிவுறுத்தும். அதையும் அவள் கவனிக்காதவள் போல் போக்குக் காட்டினால் அவள் காலை தன் காலால் சுரண்டி திருப்பும்.

இவளும் சும்மா இருக்க மாட்டாள்.

”ஏன்! நான் வந்தா உன்னைப் பார்க்கனுமா பேசனுமா?” என்று சத்தமாக கேட்டு அதனிடம் வம்படிப்பாள்.

சிங்கம் அவளுக்குப் பதில் சொல்லும் விதமாய்… ‘ ஊஊஊ…’ என்று ஊளையிட்டு வாலையும் உடம்பையும் ஆட்டி உற்சாகமாக ஆமாம் சொல்லும்.

அவளென்ன பார்க்கும் அனைவருமே…அதன் அறிவில் சொக்கிப் போவார்கள்.

குழந்தைக் கையில் பிஸ்கட்டைக் கொடுத்து இது உட்கார்ந்திருக்கிறதே நாம் கவலைப் படத் தேவையே இல்லை. குழந்தைக் கொடுத்தாலும் கையைக் கவ்வாது. தூக்கிப் போட்டாலும் தின்னாது. உனக்கு நான் காவல் என்பது மாதிரி அசையாது உசும்பாது அப்படியே உட்கார்ந்திருக்கும்.

இதனால் எங்கள் தெருவில் எல்லாருக்கும் இதன் மேல் பாசம், வாஞ்சை.

இதன் குணம், குணாதிசயம் புரிந்த என் வீட்டு மாடிக்கு வாடகைக்கு குடி வந்த பெண் கூட….எங்களில் ஒருவராகி அதைக் கவனித்து….

”இது செத்தா பாடைக் கட்டித்தான்ங்க தூக்கனும். செத்தா நான் இந்த வீட்டை விட்டு வேறிடம் போனாலும் சேதி சொல்லுங்க. மாலையோடு வர்றேன்.” சொல்வாள். அந்த அளவிற்கு சிங்கத்தின் மேல் அவளுக்குப் பாசம், ஈடுபாடு.

நான் தினம் அதிகாலை ஐந்து மணி;க்கெல்லாம் எழுந்து நடைப்பயிற்சி செல்வேன். சிங்கம் யார் வீட்டு வாசலில் படுத்திருந்தாலும் என் காலடி சத்தம் கேட்டு எழுந்து இதுவும் என் பின்னால் வரும். இதனால் ஆரம்பத்தில் எனக்குத் தொல்லை. அந்தந்த ஏரியா நாய்கள் இதன் தலையைக் கண்டால் குரைக்கும். அருகில் வந்து இதன் வாலிப்பான உடலைப் பார்த்து தூர நின்று குரைக்கும். கூட்டமாய்த் தொடரும். அதே சமயம் இதன் வலிமை தெரியாமல் சண்டைக்கு வந்தால்தான் அதற்கு ஆபத்து. ஒரே பாய்ச்சலில் அதன் குரல்வளையை முரட்டுப் பிடியாய்க் கவ்வி உடும்புப் பிடியாய்ப் பிடித்து குதறி சாகடிக்கும்.

இதன் முரட்டுப் பிடியைப் பார்த்த என் சின்ன மகன்தான் இதற்கு சிங்கம் என்று பெயர் சூட்டினான்.

சிங்கம் வலியப் போகாது. வந்த சண்டையையும் விடாது.

இதன் முரட்டு உருவம், வெறித்தனமானத் தாக்குதலையும் உணர்ந்த பெரும்பாலான நாய்கள் தெரியாத்தனமாக குரைத்துவிட்டால் கூட இது பாய்ந்து வரும் வேகத்தைக் கண்டு வாலை பின்னங்கால்களுக்கிடையில் ரொம்ப அதிகமாக ஒட்டி, நுழைத்து, கூனி குறுகி…. ‘ஆளை விட்டுடு சாமி!’ என்று அப்படியே சுருண்டு படுக்கும். இப்படி பயந்து சரணாகதி அடையும் கோழைகளை சிங்கம் ஒன்றும் செய்யாது. மாறாக பல்லை இளித்தால்தான் விபரீதம்.

ஏரியா விட்டு ஏரியா வரும் இந்த நாயை எல்லா நாய்களும் தூர இருந்தே குலைத்து ஊரை எழுப்பும் தொல்லையிலிருந்து விடுபடவும், சிங்கம் வாகனப் போக்குவரத்தில் அடிபட்டு இறந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்திலும் திரும்பி கைவீசி, கல்லெடுத்து துரத்துவேன். அடிக்கமாட்டான் என்கிற தைரியத்தில் நின்று பின் வரும். அடித்து துரத்த மனமில்லாமல் பயமுறுத்த அதை ஒட்;டி கற்களை வீசினாலும் விலகி நின்று தேங்கி வருமேத் தவிர வருவதை நிறுத்தாது.

தெரு…பெண்டு, பிள்ளைகளில் யார் தனியே கடைக்குச் சென்றாலும் துணைக்குப் போகும்.

எல்;லா வீடுகளிலும் இதற்குக் கவனிப்பு என்றாலும் என் வீட்டில் சனி ஞாயிறுகளில் இதற்குத் தனி கவனிப்பு.

எங்கள் வீட்டில் அந்த கிழமைகளில் அசைவம். சனிக்கிழமை மீன். ஞாயிறு ஆடு அல்லது கோழி இறைச்சி கட்டாயம். அலுவலகம், பள்ளிக்கூடம் விடுப்பு என்பதால் அப்படி விசேசம். மீனை வறுத்தாலும், பொரித்தாலும், குழம்பு வைத்தாலும் என்னை மனைவி வள்ளி அதற்கென்று ஒரு துண்டு ஒதுக்கி சோறு போடுவாள். இறைச்சியைச் சுத்தம் செய்யும்போது அதிலிருந்து கொழுப்பு, ஜவ்வு, மேலும் வேண்டாதவைகளையெல்லாம் சேர்த்து, கூடவே சுத்தம் செய்த இரண்டொரு துண்டுகளையும் ஒன்றாக்கி ஒரு கிண்ணத்தில் அரிசி, உப்பு, மிளகாய்த் தூள், புளி என்று குழம்பிற்குத் தேவையான அனைத்தையும் ஒன்றாக்கி வேக வைத்து சோறாக்கிப் படைத்து விடுவாள்.

இந்த சிங்கத்தின் மற்றொரு சிறப்பு குணம். மற்றத் தெரு நாய்களைப் போல் பெண் நாய்க்கு அலையாது. அதன் பின் ஓடாது. அப்படி சுற்றும் நாய்கள் பின்னும் சுற்றாது. பெண் நாயே வலிய வந்யத பக்கத்தில் வந்தாலும், நின்றாலும், படுத்தாலும், சென்றாலும் ஏறெடுத்துப் பார்க்காது. இது தெருவிலுள்ள அனைத்து ஆண் பெண்களுக்கும் ஆச்சரியம்.

”என்னடி! நம்ம சிங்கம் சாமியாராய் ஆகிடுச்சு! வாரிசில்லாமல் போகுமே!” என்று வள்ளியிடம் வருத்தப்படுவது போல் நடித்து சீண்டுவேன்.

அவள் முறைப்பாள்.

பெரும்பாலும் பெண்கள் இப்படியான பேச்சுகளை விரும்பமாட்டார்கள் ! உணர்ந்து நான் கப்சிப்.

இந்த சாமியாரையும் மயக்க ஒரு பெண் வந்ததுதான் ஆச்சரியம்.

என் வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்கு குழந்தைக் குட்டிகளுடன் ஒரு குடும்பம் குடி வந்தது. கூடவே கட்டையான சிறு உருவத்தில் ஒரு குட்டி நாயையும் அவர்கள் எடுத்து வந்தார்கள்;. அதை வெளியே விடாமல் வாசலில் கட்டிப் போட்டு வளர்த்தார்கள். குட்டியைக் கட்டிப் போட்டுத்தானே வளர்க்க வேண்டும் என்று நானும் அதை பெரிதாகக் கவனிக்கவில்லை.

அவர்கள் வந்த இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின் வாசலில் கட்டி இருந்த குட்டியையும் காணவில்லை. அடுத்து பத்து நாட்கள் கழித்து ஆச்சரியம்! அது வழக்கமாய் கட்டி இருக்கும் இடத்தில் படுத்து நாலைந்து குட்ட்ட்டி(!) குழந்தைகளுக்கு ஒருக்களித்துப் படுத்துப் பால் கொடுத்துக் கொண்டிருந்தது.

என்னப்பா இது ? வாசலில் நின்ற அதை வளர்த்தவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

”பப்பி குட்டி போட்டிருக்கு சார்.” சொன்னார்.

”அது குட்டி இல்லியா ?!” என் ஆச்சரியம் அடங்கவில்லை.

”இல்லே சார். உயர் சாதி. பொறப்பு அப்படி.”

”நாட்டு நாய் மாதிரி இருக்கு.”

” கிடையாது சார். நாய்கள் கண்காட்சியில் இதை டி.வியில பார்த்திருக்கலாம். கழுத்துல ரிப்பன் கட்டி, உடம்புல சட்டையெல்லாம் போட்டு, காதுகள் விடைச்சு இருக்க… கையில வைச்சிருப்பாங்க. நான் வேலை செய்த இடத்தில் பணக்காரர் இது சினையாய் ஆகிட்டுன்னு என்கிட்ட கொடுத்தார்.” சொன்னார்.

நான் அப்போதுதான் அதைக் கவனித்தேன். கால்கள் நான்கும் ஒரு ஒட்டைக்குக் குறைவு. நீள அஞ்சலகக் கவரில் பஞ்சடைத்தது போல் சின்ன உடல். கூர் முகம். காதுகள் இரண்டும் விடைப்பு. கண்கள் சிறிது பெரிதாய் அழகு. மூக்கு நுனி கருப்பு. உடலின் நிறம் செம்மை. பின் தொடையில் வெள்ளை. குட்டியோண்டு வால். அது அதிக வளைவாக வலைந்து….நுனியில் வெள்ளை, கருமை. அந்த ஆள் சொன்னது போல் இந்த நாயை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். இருப்பவர்கள் கையில் விழித்துக்கொண்டு இருக்கும்.

”தலை பிரசவமா ? ”

”ஆமாம் சார். நாலு குட்டி, மூணு கிடா ஒன்னு பொட்டை.”

ஆச்சரியம் பத்தே நாட்களில் அத்தனை குட்டிகளும் இல்லை.

”எங்கே ? ” அவரையேக் கேட்டேன்.

”என் கூட்டாளிங்களெல்லாம் ஆசைப்பட்டு ஆளுக்கொன்னாய்த் தூக்கிக்கிட்டுப் போய்ட்டானுங்க சார்.”

”அட!”

அதன் பிறகு பப்பியை அவர்கள் கட்டிப் போடவில்லை. சுதந்திரமாய் விட்டார்கள். அது எங்கள் தெருவில் குடுகுடுவென்று ஓடி பின் வளர்ப்பவர்கள் வீட்டில் ஒதுங்கிக் கொள்ளும். அதன் குரைப்பும் வீரியமாக இருக்காது. பொதுவாய் பெண் நாய்களின் குரைப்பு ஆண் நாய்களின் குரைப்பைப் போல் தடிப்பாய் இருக்காது. கொஞ்சம் சன்னக் குரலில் மென்மையாக இருக்கும். பப்பி….குட்டியைப் போல் இருப்பதால் உருவத்திற்கு ஏற்றாற்போல் தன் சின்ன வாயால் இன்னும் சன்னமாய்க் குரைக்கும்.

இந்த பப்பி, சிங்கத்தை எப்படி மடக்கி மயக்கியதோ தெரியாது. ஒரு நாள் அதிகாலை நான் வழக்கம்போல் நடைபயிற்சிக்காக வீட்டை விட்டு வெளிவந்து நடந்த போது…..சிங்கம் வரவில்லை. நான் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. ஆனால்……தெரு வளைவில் திரும்பி கொஞ்ச தூரம் நடந்து சாலையோரம் உள்ள ஒதியன் மர அடியில் இருள் பிரியும் மங்கலான மசக்கை வெளிச்சத்தில் இவைகள் இரண்டும் பிரிக்க முடியாதபடி சேர்ந்திருந்ததை என் கண்கள் கண்டதுதான் ஆச்சரியம். பப்பி கட்டை. சிங்கம் நெட்டை. இணைப்பு சேர்ப்பிலும் ரொம்ப வித்தியாசம்.

பார்த்த எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.

வீட்டிற்குத் திரும்பியதும் ..”வள்ளி! நம்ம சிங்கத்துக்கு வாரிசு வந்துடுச்சுடி !” கூவினேன்.

”அப்படியா !? ” அவள் ஆச்சரியப்பட்டாலேயொழிய அதிர்ச்சியடையவில்i.

”நிசம்டி. பொண்டாட்டி யார் தெரியுமில்லே. எதிரே வளரும் பப்பி!”

”நிசமா நம்ம சிங்கத்துக்கும் பொண்ணாசை வந்துடுச்சா !!”

”ஆமாம்டி. அதை கண்ணால பார்த்தேன்.!”

அவ்வளவுதான்! வள்ளி என்னை முறைத்தாள். அடியேன் கப்சிப்.

அந்த சேர்க்கைக்குப் பின் சிங்கம் – பப்பி இருவரும் கணவன் மனைவியாகவே சேர்ந்து திரிந்து உண்டு படுத்து குடும்பம் நடத்தினார்கள். ஆமாம், சிங்கம் என் பின்னால் வருவதை நிறுத்தி பப்பியோடே இருந்தது.

அந்தப் பிரசவத்தில் பப்பிக்குச் சிங்கம் நிறத்தில் ஆறு குட்டிகள். அத்தனைகளும் கண் விழித்து காணாமல் போயிற்று. வளர்த்த வீட்டிற்கு வேண்டியப்பட்டவர்ளெல்லாம் எடுத்துச் சென்றார்களோ, விற்கப்பட்டதோ தெரியவில்லை.

பின்……….அடுத்த பிரசவத்தில் ஐந்து.

அதற்கு அடுத்து இவர்கள் மூன்றாவது சேர்க்கையில்தான் சிக்கல்.

பப்பி அடுத்தப் பருவத்திற்குத் தயாராகி…..சிங்கத்தின் முகத்தை முகர்ந்து முகர்ந்து பார்த்தது.

சிங்கம் அதனோடு இரு தடவை உறவு வைத்ததின் அலுப்பு, சலிப்பு, அலட்சியமோ… இல்லை, தன் பப்பி தன்னைத் தாண்டி எங்கும் போய் விடாது என்கிற துணிவோ என்னவோ….ஆர்வம் காட்டாமல் அலட்சியப் படுத்தியது. ஒப்புக்கு அதன் முகத்தை முகர்ந்து கூட பார்க்காமல் திருப்பியது. பப்பியும் விடாமல்…. அதன் முன் பின் மணிக்கணக்காக நிற்பதும், முகர்வதும், முயல்வதுமாக இருந்தது.

பார்த்த எனக்கே இது சங்கடமாய் இருந்தது.

”இதுங்களுக்குள் என்னடி சண்டை, ஊடல் ? ” என் வாய் சும்மா இருக்காமல் இதையும் வள்ளியிடம் உளறினேன்.

”ஏங்க! உங்களுக்கு அதுங்களைக் கவனிக்கிறதுதான் வேலையா, வேற வேலையே இல்லையா? ” அவள் திருப்பித் தாக்கினாள்.

இன்று காலை வழக்கம் போல் ஐந்து மணிக்கு எழுந்து நடைபயிற்சி மேற்கொண்டு வீட்டை விட்டு வெளி வந்து தெருவில் நடந்தேன்.

அதிக நாட்களாக என்னோடு வராத சிங்கம் இன்றைக்கு கடைசி வீட்டிலிருந்து வந்து என்னைத் தொடர்ந்தது.

கொஞ்ச நாளாய் இது வராமல் வெளி நாய்கள் குரைப்பு, தொல்லை, தொந்தரவில்லாமல் இல்லாமல் இருந்தது. இப்போது இதன் வரவால் இனி தொல்லை, தொடக்கம். நான் நொந்தபடி நடக்க… அந்த ஒதியன் மரத்தடியில் அதிர்ச்சி.

பப்பி அந்த மரத்தினடியில் வேறொரு நாயோடு பிரிக்க முடியாத சேர்க்கையில் நின்றது.

பார்த்த எனக்கே சொரக், பக்.

சிங்கம்!!!

அடுத்த விநாடி கண் மண் தெரியாத வேகத்துடன் ஓடி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அந்த ஆண் நாயின் குரல்வளையைக் கவ்விப் பிடித்து அது கத்தக்கூட முடியாமல் துடிக்க முடியாமல் சாய்த்து தலைரயில் அழுத்திக் குதற….

பப்பி மிரண்டு பிரிந்து ஓட…

நான் உறைந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *