வசந்தங்கள் வரும் நேரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 4,396 
 

பொன் அந்தி மாலையும் தென்றல் காற்றை மெதுவாக பூமிக்கு அனுப்பி வெப்பம் குறைந்துள்ளதா என வேவுபார்த்து வர அனுப்பியது. ஆதவன் தன் வேலை நேரம் முடிந்து விட்டதென ‘டாட்டா’ காட்டி விட்டு பூமிக்குள் ஓடி ஒளிய முயற்சி செய்து கொண்டிருந்தது.

தன்னருகே கதிரவன் வருவதாக கற்பனை செய்து நீல வானமும்மேகக் கூட்டங்களும் செம்மை படர்ந்த கன்னத்தோடு சொக்கி நின்றது. இன்னும் வீட்டிற்கு சரியன நேரத்தில் திரும்பி வராத மகனைத் தேடி எங்கே போவது என யோசித்துக் கொண்டிருந்தாள் உமா.

வேலைக்குப் போயிருந்த கணவனுடைய அலுவலகத்திற்கு போன் பண்ணிய ‘போது அப்போதே கிளம்பி விட்டாரே ராஜன்’ என்ற பதில்தான் கிடைத்தது. இனி ராஜன் தனது நண்பர்களோடு சேர்ந்து தண்ணி அடித்து விட்டு வீட்டிற்கு வர பொழுது விடிந்து விடும். என் மகன் விக்னேஷை இப்போது எங்கே போய்த் தேடுவது? என் உமா தவித்துக் கொண்டிருந்தாள்.

விக்னேஷ் படிக்கும் பள்ளிக்கும் அவளது நண்பர்கள் வீட்டிற்கும் போன் பண்ணி அலுத்துப் போனாள் உமா. நான்கு மணிக்கு பள்ளி முடிந்தும் உற்சாகமாக வீட்டிற்கு ஓடி வந்து ‘அம்மா’ என்று கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொள்ளும் அன்பு மகன் விக்னேஷை இப்போது எங்கே போய்த் தேடுவது?

நேரம் போகப் போக அவளுக்கு பயம் வர ஆரம்பித்தது. ‘அண்ணன் வீட்டிற்குப் போன் பண்ணி வின்னேஷை காண வில்லைஎன்று சொல்லலாமா? சே! ஐம்பது கிலோ மீட்டருக்கு அப்பால் தங்கி இருக்கும் அவரை இப்போது தொந்தரவு பண்ணி என் பயத்தை அவரிடமும் தொற்றிக்கொள்ளச் செய்ய வேண்டுமா? என்று அவள் மனம் எண்ணியது. வேறு வழியும் தெரியவில்லையே கடவுளே! இந்தப் பட்டணத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் கூட அதிகமாகப் பழக்கமில்லாமல் போனதில் கோபமும், எரிச்சலும்தான் மேலோங்கியது உமாவிற்கு.

ராஜனிடம் சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் விட்டது. இந்தக் குடிப் பழக்கத்தை விட்டு விடுங்கள் என்று. ஆனால் அவனோ தினமும் குடித்து விட்டு இரவு பதினோருமணிக்குப் பிறகு வீட்டிற்கு வந்து இங்கே என்ன நடக்கிறது என்று கூட கவனிக்க முடியாமல் “சே” உங்களுக்கெல்லாம் குடும்பம் குட்டி எதற்கு? என்று கூட சண்டை போட்டு அவளுக்கு அலுத்துப் போய் விட்டது.

அழுது அழுது கன்னமெல்லாம் கண்ணீர் காய்ந்துப் போக, வேறு வழி தெரியாமல் பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டினாள். “அண்ணா அவர் இன்னும் வேலைக்குப் போய் விட்டு வரவில்லை. விக்னேஷ் ஸ்கூலுக்குப் போனவன் இன்னும் திரும்பி வர வில்லை. இந்த சிட்டியிலே எனக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. கொஞ்சம் அவனைத் தேடிப் பார்க்க வழி சொல்ல முடியுமா?” என்று அழுகையோடு பக்கத்து வீட்டு சுமனிடம் கேட்டாள் உமா.

“கொஞ்சம் இருங்கள் சிஸ்டர். என் நண்பர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் வேலை செய்கிறார். அங்கே ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்து விடுவோ.” என்றான் சுமன்.

“ஸ்டேஷனுக் கெல்லாம் போக வேண்டாம். என் விக்னேஷ் ஸ்கூலிலிருந்து வந்தவன் எப்படியோ எங்கோ வழிமாறிப்போய் விட்டான். அவனைத் தேடித்தான் பார்க்க வேண்டும். “ என்று சொன்னபோது அவளுக்கு மீண்டும் அழுகை எட்டிப் பார்த்தது. “உங்கள் விருப்பப்படி வேண்டுமானால் பள்ளிக்குச் செல்லும் வழியெல்லாம் தேடிப் பார்க்கலாம். ஆனால் என்னிடம் ஸ்கூட்டர் தானிருக்கிறது. என்னோடு இந்த இரவு வேளையிலே நீங்கள் ஸ்கூட்டரில் வரமுடியாதே”

“கொஞ்சம் ஆட்டோவிலே போய்த் தேடிப் பார்க்கலாமே”

“சரி, கொஞ்சம் இருங்கள்” என்றபடி சுமன் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு உமாவோரு புறப்பட இருவரும் ஆட்டோவில் ஏறி பள்ளி செல்லும் வழியிலிருந்து விக்னேஷின் நண்பர்கள் வீடு என ஒவ்வொரு இடமாகத் தேடிப் பார்த்து சலித்துப் போனார்கள். உமா வேறு வழியின்றி முந்தனையை வாய்க்குள் வைத்துக் கொண்டு அழுகையை அடக்கிக் கொண்டே வீட்டிற்குத் திரும்பினாள். அங்கே கையில் காலில் சின்ன சிறாப்புக் காயங்களுடன் இரத்தம் சட்டையில் சிதறியிருக்க சீருடை முழுவதும் மண்ணாக கண் சிவந்து அழுது கொண்டிருந்த விக்னேஷைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் உமா.

“என்னடா! கண்ணா என்னாச்சு?” என்று கேட்டபடி உமா ஓவென்று அழ ஆரம்பித்தாள். பக்கத்து வீட்டுக் காரர்கள் எல்லாம் ஓடி வந்து என்னவென்று துக்கம் விசாரிக்க முயல விக்னேஷ் திரு திருவென்று விழித்துக் கொண்டிருந்தான்.

“சிஸ்டர் நீங்கள் வீட்டிற்குப் போங்கள். விக்னேஷ் வீட்டிற்கு திரும்ப வந்து சேர்ந்து விட்டானல்லவா?” என்றான் சுமன்.

பக்கத்து வீட்டு மனிதர்களைக் கூட்டமாகப் பார்த்ததும், தயங்கி வீட்டிற்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு “எங்கே கண்ணா போய் விட்டே?” என்றாள் அவனை அணைத்துக் கொண்டே. “மம்மி, ஒரு காரிலே ரெண்டு பேர் என்னை இழுத்துக் கொண்டுப் போனார்கள். வீட்டிலே போனிருக்கா? என்றார்கள். இல்லைண்ணேன் உன்னை வச்சிச் சம்பாதிகப் போறோன்ண்ணாங்க”

“எனக்கு ஒரே அழுகையா வந்துச்சு. நான் அங்கேயிருந்து தப்பிச்சு ஓடி வரும் போது நம்ம ஸ்கூலுக்கு வரும் அங்களோட ஆட்டோவிலே மோதிட்டேன். நல்ல காயம். அவர்தான் என்னைப் பாதுகாத்து கூட்டிக் கொண்டு வந்து விட்டுட்டுப் போனார்” என்றான். இன்னும் பயம் நீங்காதவாறு.

இன்னும் வீட்டிற்கு வராத ராஜனை நினைத்து உமாவுக்கு கோபம்தான் அதிகரித்தது. “அம்மா பசிக்குது” என்றான் விக்னேஷ்.

“இதோ சாப்பாடு போடறேண்டா” என்ற போது கதவைத் தட்டும் சப்தம் கேட்க கதவைத் திறந்தாள் உமா.

போதையோடு உள்ளே வந்த ராஜன், விக்னேஷின் கோலத்தை பார்த்து பதறிப் போய் என்னவென்று கேட்க, உடைந்து போய் அழ ஆரம்பித்தாள் உமா.

அவளைத் தேற்றி எல்லாம் விஷயங்களையும் கேட்ட ராஜன். “ஸாரி உமா இனி இப்படி உன்னைத் தவிக்க விட மாட்டேன். இந்தக் குடிப் பழக்கத்தை இன்னியோட விட்டுடறேன். நீ விக்னேஷைத் தேடி எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பாய்? ஸாரி. நான் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்திருந்தால்.. நீ தொடர்பு கொள்ளும் இடத்திலிருந்தாவது நான் உனக்கு உதவி செய்திருக்க முடியும்.ஸாரி உமா. ஐ யாம் வெரி ஸாரி. இனி அலுவலகம் விட்டால் நேராக வீடுதான். என்னை மன்னித்து விடு.” என்று அவளைத் தட்டிக்கொடுத்தான். பிறகு முதல் உதவி பெட்டியை எடுத்து வந்து விக்னேஷுக்கு மருந்து போட அரம்பித்தான். உமாவின் மனத்தில் பட்ட காயத்திற்கு கூட அது மருந்தாக தெரிதது அவளுக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *