மௌனப் பிள்ளையார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2021
பார்வையிட்டோர்: 4,824 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசகர்களுக்கு

இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக மங்கள நூலகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். திரு. கோபுலுவுக்கும் மங்கள நூலகத்தாருக்கும் என் நன்றி. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் இவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறோமே ? என்றும், சில இடங்களில் இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்றும் தோன்றியது. இப்புத்தகம் முதன் முறை வெளியானபோது இதைப் படித்த ரசிகமணி டி. கே. சி. அவர்கள் என் எழுத்துத் திறமையைப் பாராட்டி மிக அருமையான கடிதம் ஒன்று எழுதியிருந்தார்கள். எதிர் காலத்தில் நான் ஒரு சிறந்த நகைச்சுவை ஆசிரியராக விளங்குவேன் என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் என்னே வாழ்த்தியிருந்தார்கள். இச்சமயம் அவரை நினைவு கூர்ந்து அஞ்சவி செலுத்துகிறேன்.
மயிலாப்பூர்
சாவி
14-4-1964

மௌனப் பிள்ளையார்

அப்பாசாமி வெகு காலமாகக் காட்டிலேயே வசித்து வந்தான். பிரம்மாண்டமான அந்த வனத்தில் கரடுமுரடான வண்டிப்பாதை ஒன்று வளைந்து வளைந்து சென்று கொண் டிருந்தது. பாதைக்கு இருபுறங்களிலும் அடர்ந்து வளர்ந்த காட்டு மல்லிகைச் செடிகளும் பல விதமான முட் செடிகளும் இருந்தன. அப்பாசாமியைவிட வயது சென்ற விருக்ஷங்களெல்லாம்கூட அங்கே இருந்தன. ஆகையால் அந்தக் காட்டில் சமைத்துச் சாப்பிடுவதற்கு விறகுப் பஞ்சமே கிடையாது.

ஆனால், சாப்பிடுவதற்குத்தான் ஒன்றுமில்லை! என்றாலும் அப்பாசாமி ஒரு சந்தோஷப் பிரகிருதி. “நாளைக்கு என்ன செய்வது?” என்ற கவலையே அவனுக்குக் கிடையாது. அவன் அந்தப் பாதைக்குப் பக்கத்திலிருந்த ஒரு பெரிய அரச மரத்துக்கு அடியில் குடிசைபோட்டு வாசம் செய்து வந்தான். அந்த அரச மரம் அவன் பார்த்து வளர்ந்த மரம். ஆகையால் அவனுக்கு அதன்மேல் அத்தியந்த விசுவாசம் உண்டு. அந்த மரமும் அவனிடத்தில் ஓயாமல் இராப் பகலாய்ச் ‘ சல சல’ வென்று பேசிக்கொண்டேயிருக்கும்.

அவனுடைய குழந்தை பானுமதிக்குப் பேசவே தெரி யாது. குழந்தை பானுவிடம் அவன் அளவு கடந்த அன்பு வைத்திருந்தான். தாயற்ற அந்தக் குழந்தையைப் பார்த்த போதெல்லாம் அவனுடைய குழி விழுந்த கண்களில் ஜலம் ததும்பும். குடிசைக்குப் பின்புறத்தில் அப்பாசாமிக்குச் சொந்தமாக ஒரு வாழைத் தோட்டம் இருந்தது. வயிற்றுக்கு ஒன்றுமே கிட்டாத நாட்களில் அந்தத் தோட்டத்திலிருந்து பழுத்த பழங்களாகக் கொண்டு வந்து, பானுவுக்குக் கொடுத்துத் தானும் உண்பான். பானு வெள்ளாட்டுப் பாலையும் வாழைப்பழத்தையும் சாப்பிட்டு வளர்ந்து வந்தாள்.

ஒரு நாள் அவன் தன் குழந்தை பானுவைத் தூக்கித் தன் தோளில் வைத்துக்கொண்டு ஆறு மைலுக்கப்பாலுள்ள ஒரு நகரத்துக்குப்போய்க் காட்டு மூலிகைகளை விற்றுவிட்டு வந்துகொண்டிருந்தான். அப்போது நல்ல இருட்டு. மூன்றாம் பிறை தினம். அஸ்தமித்து ஒரு ஜாமத்துக்கு மேலாகிவிட்ட தால் வானத்தில் அரிவாளைப் போன்றிருந்த சந்திரனும் மறைந்து போயிருந்தான். நக்ஷத்திரங்களின் வெளிச்சம் அப்பாசாமிக்குச் சிறிதும் பிரயோஜனமற்றதாயிருந்தது. அப்போது ஏதோ ஒரு திசையில் குழந்தை அழும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டான்.

தீக்குச்சியைக் கொளுத்தி, அழுகை எழுந்த பக்கம் நோக்கினான். அழகான ஆண் குழந்தை ஒன்று அங்கே படுத் துக்கொண்டிருந்தது. ஒன்றரை வயதிருக்கும். யாரோ திருடர்கள் கொண்டு வந்து நகைகளைக் கழற்றிக்கொண்டு அதை அங்கே விட்டுப் போயிருக்க வேண்டும் என்று அப்பா சாமி யூகித்தறிந்தான். அந்தக் குழந்தையையும் எடுத்து இன்னொரு தோளில் சாத்திக்கொண்டு குடிசைக்கு வந்து சேர்ந்தான்.

பானுவும் ராஜுவும் வெகு அன்னியோன்னியமாய் வளர்ந்து வந்தார்கள். மனித சஞ்சாரமற்ற அந்தக் காட்டில் அவர்களுக்கு அணில்களும் பறவைகளும் கல்லுப் பிள்ளையாருமே துணை.

அப்பாசாமி – அரச மரத்தின் அடியில் வெகு தூரத்திலிருந்து ஒரு கல்லுப் பிள்ளையாரைக் கொண்டுவந்து வைத்திருந்தான். அந்தப் பிள்ளையாரே அவனுடைய குலதெய்வம்.

பானுவும் ராஜுவும் அந்தக் கல்லுப் பிள்ளையாரைச் சுற்றிச் சுற்றி விளையாடிக் களித்தார்கள் . அவர்கள் விளையாட்டைக் கண்டு அப்பாசாமி சந்தோஷப்பட்டான்.

பானுவுக்கு ஒன்பது வயதாயிற்று. மாநிறமாயிருந் தாலும் சுருட்டை மயிர், பால் வடியும் முகம், முல்லைச்சிரிப்பு; பார்ப்பதற்கு ரொம்ப லக்ஷணமாயிருந்தாள். ராஜுவும் நல்ல அழகுடன் விளங்கினான். அப்பசாமிக்கு இப்போது காட்டு மூலிகைகள் மூலம் செலவுக்குப் போதிய வருமானம் கிடைத்து வந்தது. ராஜு வந்த வேளையின் அதிர்ஷ்டம் என்றே அவன் எண்ணி ஆனந்தித்தான்.

தான் கண்ணை மூடுவதற்குள் ராஜுவுக்கும் பானுவுக்கும் பிள்ளையார் முன்னிலையில் கல்யாணத்தைச் செய்துவிட அப்பாசாமி விரும்பினான். ஆனால் பிள்ளையாருடைய விருப்பம் அப்போது வேறு விதமாயிருந்தது. அந்தப் பாதை வழியாக சில தினங்களுக்கெல்லாம் ஓர் இரட்டை மாட்டு வண்டி வந்தது. அதில் ஒரு தனவந்தரும் அவர் மனைவியும் பக்கத்து நகரத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அப்பாசாமி யின் குடிசையை நெருங்கிய சமயம் இருட்டிவிட்டதால் திருட்டுக் கூட்டத்துக்குப் பயந்து அவர்கள் வண்டிக்காரனை அங்கேயே நிறுத்தச் சொல்லி, இரவு அங்குத் தங்கி மறுநாள் காலை போகத் தீர்மானித்தனர்.

இராத்திரி பூராவும் அவர்கள் அப்பாசாமியின் கதையைச் சொல்லச் சொல்லிக் கேட்டார்கள். அவனுடைய கதை யைக் கேட்கக் கேட்க அவர்களுக்கு ஆச்சரியமும் பரிதாபமும் மாறி மாறி ஏற்பட்டன. அப்பாசாமி தன் கதையைச் சவிஸ் தாரமாகக் கூறி முடித்துவிட்டு, “பாவம், இந்தப் பிள்ளை என்னிடம் வந்து கஷ்டப்படுகிறான். இவன் இங்கே என்ன சுகத்தைக் காண முடியும் ? இவனை நீங்கள் அழைத்துப் போய் வளர்த்தால் உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு” என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டான்.

அவன் அழுததைக் கண்ட ராஜுவும் பானுவும் ஆளுக்கு ஒரு பக்கமாக அவனைக் கட்டிக்கொண்டார் கள். அப்பாசாமி அவர்கள் இருவரையும் மார்போடு அணைத்துக்கொண்டான். வந்தவர்கள் அவன் குழந்தைகளின் பேரில் வைத்திருந்த வாத்ஸல்யத்தைக் கண்டு மனமிரங்கி, “நீங்கள் மூவருமே எங்கள் வீட்டுக்கு வந்து விடுங்கள். நாங்கள் காப்பாற்றுகிறோம். எங்கள் வீட்டுத் தோட்ட வேலையை நீ கவனித்துக்கொள். சொஸ்தமாய்க் கவலையற்று இருக்கலாம்” என்றார்கள்.

அப்பாசாமி பலமாகத் தலையை ஆட்டி, “முடியாது, முடியாது; நான் இந்தக் காட்டைவிட்டு வரவே முடியாது. நான் இந்தக் காட்டிலேயே வளர்ந்தவன். இந்த அரச மரத்தையும் கல்லுப் பிள்ளையாரையும் விட்டு விட்டா என்னை வரச் சொல்கிறீர்கள்? என்னால் இவைகளை விட்டு ஒரு கணமும் பிரிந்திருக்க முடியாது!” என்று கண்டிப்பாகக் கூறினான். வந்தவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்டும், அப்பாசாமி ஒரே பிடிவாதமாகப் பானுவையும் அனுப்ப முடியாதென்று கூறிவிட்டு, “ராஜு, ராஜு, நீ போகிறாயா?” என்று தழு தழுத்த குரலில் கேட்டான். ராஜு ஒன்றும் புரியாமல் அரை மனத்துடன் தலையை ஆட்டினான்.

பொழுது விடிந்ததும், வந்தவர்கள் ராஜுவை அழைத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

பானுமதி ராஜுவைப் பிரிந்த துக்கத்தால் கோவென்று அழுதாள். அவள் ராஜுவிடம் வைத்திருந்த அன்பைக் கண்டு அப்பாசாமி அதிசயித்து அவளுக்கு ஆறுதல் கூறினான். பானுமதி இரவில் தூங்கும்போதெல்லாம், “ராஜு, ராஜு” என்று பிதற்றினாள்.

இவ்வளவையும் பார்த்துக்கொண்டு அந்த அரசமரத்துப் பிள்ளையார் மட்டும் மௌனமாகவே இருந்தார்.

பல வருஷங்களுக்குப் பின்னர் அந்தக் காட்டு வழியாக வண்டிகளின் நடமாட்டம் சிறிது அதிகமாயிற்று. பொழுது போனபிறகு வரும் வண்டிகள் மட்டும் அப்பாசாமியின் குடிசையண்டைத் தங்குவது வழக்கமாயிற்று. அப்படித் தங்குகிறவர்களுக்கெல்லாம் பானு வேண்டிய உதவிகளைச் செய்தாள். அடுப்புப் பற்றவைத்துக் கொடுப்பாள்; ஜலம் பிடித்து வருவாள். தேவையானவர்களுக்குச் சமைத்துப் போடுவாள். பானுமதிக்கு வயது வந்தவுடன் அப்பாசாமிக்குப் பாதி வேலைகள் குறைந்தன. முக்கியமாகச் சமைத்துச் சாப்பிட வேண்டிய சிரமம் நீங்கிற்று. பானுமதி இப்போது முன்னைவிட அழகுடன் விளங்கினாள். நகைநட்டு இல்லாம லிருந்ததே அவளுக்கு ஓர் அழகாயிருந்தது.

சில தினங்களுக்கெல்லாம் அந்த வழியாகத் தினசரி ஒரு பெரிய மோட்டார் லாரி வர ஆரம்பித்தது. சரியாக இரவு ஏழரை மணிக்கெல்லாம் அந்த லாரி ‘கிராவல்’ கற்களைச் சுமந்து கொண்டு கிடுகிடென்ற சத்தத்துடன் அந்தப் பக்கம் வரும். குடிசைக்குச் சமீபம் வந்ததும் ஒரு பெரிய இரைச்சல் போட்டுக்கொண்டு நிற்கும். அதன் டிரைவர் இரவெல்லாம் அப்பாசாமியின் குடிசையில் தங்கி, விடிந்ததும் கிளம்பிப் போய் விடுவான்.

இப்படி லாரி ஒருமாத காலம் தவறாமல் வந்துகொண்டே யிருந்தது. டிரைவரும் அப்பாசாமியும் நெருங்கிய நண்பர்களாயினர். அப்பாசாமி அவனைப்பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக விசாரித்து விவரம் தெரிந்து கொண்டான். பக்கத்து நகரத்தில் ரோட்டுவேலை நடப்பதாகவும் அதற்கு வெகு தூரத்திலிருந்து கற்கள் போவதாகவும், இன்னும் நாலு மாத வேலையிருக்கிறதென்றும் டிரைவர் சொன்னான்.

அந்த டிரைவர் பரம சாதுவாயிருந்தான். அப்பாசாமியிடமும் பானுமதியுடனும் சர்வ சகஜமாகப் பழகித் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தான். அப்பாசாமிக்கு வேண்டிய சாமான்களை அவனே வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பான். இதனால் அப்பாசாமிக்கு நகரத்துக்கு நடந்து போய்வர வேண்டிய வேலையும் குறைந்தது. ஒரு நாள் டிரைவர் பானுமதியைப்பற்றி அப்பாசாமியிடம் விசாரித்தான்.

அதற்கு அப்பாசாமி, “இவள் என் மகள்; குழந்தையாயிருந்தபோதே இவளைவிட்டு இறந்து போனாள் என் மனைவி. அது முதல் இவளை நான் தான் காப்பாற்றி வருகிறேன். அத்துடன் போயிற்றா ? இன்னொரு குழந்தையையும் பகவான் என்னிடம் ஒப்படைத்தார். அந்தக் குழந்தை ராஜா வீட்டுக் குழந்தையாயிருக்கணும்; பாவம், போதாத காலம் என்னிடம் வந்து தவித்தது. கடைசியில் அதை ஒரு புண்ணியவான் வந்து அழைத்துக் கொண்டு போனார். அதற்கப்புறம் அவனைப்பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை. அந்தக் குழந்தை என்னிடம் பத்து வருஷ காலம் வளர்ந்தது. பானுவும் அவனும் இந்தக் கல்லுப் பிள்ளையாரைச் சுற்றிச் சுற்றி விளையாடுவார்கள். நான் சந்தோஷமாய்ப் பார்த்துக் கொண்டிருப்பேன். பானுவும் – அவன் பெயர் ராஜு – ராஜுவும் ரொம்ப சிநேகமாயிருந்தார்கள். இப்போது ராஜுவைப் பிரிந்து வெகு காலமாகிவிட்டது. பானு சதா அவன் ஞாபகமாகவே இருக்கிறாள். எனக்கு அந்தக் கல்லுப் பிள்ளையாரைப் பார்க்கும்போதெல்லாம் அவன் ஞாபகம் வந்து விடும்” என்றான்.

“அப்படியா? அந்தக் குழந்தை உங்களிடம் எப்படி வந்தான்?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான் டிரைவர்.

அப்பாசாமி அந்தக் குழந்தை வந்த கதையைச் சொல்லிப் பெருமூச்சு விட்டான். பானுமதி அதையெல்லாம் கேட்டுக்கொண்டேயிருந்தாள். அவள் முகம் கவலையால் வாடியிருந்தது.

இதையெல்லாம் கேட்ட பிறகு டிரைவர், அப்பாசாமியையும் பானுவையும் ஆறுதல் சொல்லித் தேற்றினான். “ஆண்டவனுடைய அருளால் நீங்கள் எப்படியும் ராஜுவைக் காண்பீர்கள்” என்றான். அதன் பிறகு அவனுக்கு என்னமோ தன் கதையையும் அவர்களிடம் சொல்லவேண்டும் போலிருந்தது. எனவே, தன் கதையை ஒன்றுகூட விடாமல் உள்ளது உள்ளபடியே சொன்னான் .

“முப்பேட்டை முதலியார் தான் என்னை வளர்த்தவர். அவருக்கு ஒரு மனைவி இருந்தாள். தங்கமானவள். ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு அவள் இறந்துவிட்டாள். முதலியார் ஒரு மணிலாக்கொட்டை வியாயாரி. வியாபாரம் நடந்த போது நான் லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு வருவேன். அந்த வியாபாரம் நடந்து கொண்டிருந்த சமயம்தான் முதலியார் ஒரு மோட்டார் லாரி வாங்கி என்னை அதற்கு டிரைவராக்கினார்.

“வியாபாரத்தில் மூன்று வருஷங்களுக்கு முன்பு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு, கம்பெனியை மூடும்படி ஆயிற்று. அவரிடம் மிகுந்திருந்த இந்த லாரியை என்னிடம் கொடுத்து உன்னை வளர்த்ததற்கு நான் ஆஸ்தியாகக் கொடுப்பது இதுதான்” என்றார்.

“அப்போதுதான் நான் அவருடைய வளர்ப்புக் குழந்தையென்று தெரிந்துகொண்டேன். முதலியார் இறந்ததும், நான் லாரியை எடுத்துக்கொண்டு கடப்பை ஜில்லாவுக்குப் போய்விட்டேன். அங்கே லாரிக்கு வேலை கிடைத்தது. அதைக்கொண்டு பிழைத்து வந்தேன். இப்போது கடப்பைக் கல் வியாபாரம் க்ஷணமடைந்து போனதால் இந்தப் பக்கம் வந்தேன்” என்றான். இதைக்கேட்ட அப்பாசாமி ஆச்சரியமடைந்து, “டிரைவர், டிரைவர், உன் பெயரென்ன?” என்று விசாரித்தான்.

“என்னைச் சாமிநாதன் என்று வெளியில் கூப்பிடுவார்கள். ஆனால் அந்த முதலியார் மட்டும் ரொம்பப் பட்சமாக ‘ராஜு, ராஜு!’ என்றுதான் அழைத்து வந்தார்” என்றான் டிரைவர்.

உடனே அப்பாசாமி அவனை அப்படியே கட்டிக்கொண்டான். “ராஜு, நான் வளர்த்த ராஜுதான் நீ!” என்று அப்பாசாமி சந்தோஷ மிகுதியால் சொன்னபோது அவன் நாக்குழறியது.

பானுமதிக்கு ஒன்றுமே தோன்றவில்லை. “ராஜுவா?” என்று அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

சில தினங்களுக்கெல்லாம் ராஜுவுக்கும் பானுமதிக்கும் அரசமரத்தடியில், பிள்ளையார் முன்னிலையில், கல்யாணம் நடந்தது. அப்பாசாமியின் குதூகலத்தைக் கட்டிப் பிடிக்க முடியவில்லை.

அரசமரத்தின் அருகில் இப்போது ஒரு வேப்பமரம் வளர்ந்து அதைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. பிள்ளையார் அரச மரத்துக்கும் கல்யாணம் செய்துவிட்டு, பானுமதிக்கும் விவாகம் செய்து வைத்துவிட்டுத் தான்மட்டும் பிரம்மசரியத்தை அனுஷ்டித்து வருகிறார்.

இப்போதெல்லாம் அரச மரத்தின் சலசலப்புச் சத்தத்துடன் பானுமதி, ராஜு தம்பதிகள் சிரிப்பின் ஒலியும் கலந்து கொள்கிறது. ஆனால், பிள்ளையார் மட்டும் எப்போதும்போல் மௌனமாகவே தான் இருக்கிறார்!

– மௌனப் பிள்ளையார் (சிறுகதைத் தொகுப்பு), இரண்டாம் பதிப்பு : ஏப்ரல், 1964, மங்கள நூலகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *