பிணைப் பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 8,177 
 

வாசலில் நிழலாடியது.

“யம்மோவ்…” என்று குரல் கேட்டது. பரிச்சயமான குரல். சமையல் வேலையாய் இருந்த நான் வெளியே வந்தேன்.

“என்ன பர்வதம்! இந்த நேரத்துல வரமாட்டியே? என்ன விஷயம்?”

பர்வதம் எங்கள் வீட்டில் வேலை பார்ப்பவள். கணவன் ஏதோ ஒரு வங்கி ‘ஏ.டி.எம்.’மில் ‘வாட்ச்மேன்’. மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளம் என்று சொல்லி இருக்கிறாள்.

இரண்டு மகள்கள். மாலை ஐந்தரை மணிக்கு பர்வதமோ… அவளுடைய மகள்களில் ஒருத்தியோ வந்து வாசல் பெருக்கி, கோலம் போட்டு, பாத்திரங்கள் துலக்கி, காலைச் சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை நறுக்கி வைத்துவிட்டு, மதியச் சமையலில் மீதமான சாதம், குழம்பு, ரசம், கூட்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டு கிளம்புவது வழக்கம்.

பர்வதம் காலை எட்டு மணிக்கு வந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

“ஒண்ணுமில்லேம்மா. ஒரு உதவி கேட்டுத்தாம்மா வந்திருக்கேன்…”

“என்ன பர்வதம்… பணம் ஏதாவது கடன் வேணுமா?”

“அதெல்லாம் இல்லீங்கம்மா! அதைவிடப் பெரிய உதவி. இந்த கமலாப் பொண்ணு இருக்கே… ‘பிளஸ் டூ’வுல அது நல்ல ‘மார்க்’கு எடுத்துருக்குன்னு ஒங்களுக்குத் தெரியும். ‘எஞ்சினீயரிங்’கு படிக்கணும்னு ஒத்தக் கால்ல நிக்கறாம்மா. விண்ணப்பம்லாம் போட்டுட்டா. ‘கவுன்சிலிங்’காமே! அதுக்கு சென்னைக்குப் போவுணும். ஐயாயிரம் ரூபாய்க்கு ‘பாங்கு’ல ‘டிராப்ட்’ எடுத்துக்கிட்டு வரச் சொல்லிக்கிறாங்க. அதை ஒருவழியா சமாளிச்சுட்டேன்னு வெச்சுக்குங்க.

இந்த ‘மார்க்’குக்கு எடம் கெடைச்சிடும்னு சொல்றாங்க. அதுக்குப் பணம் கட்ட வேண்டியிருக்கும். நீங்க கொடுக்க வேணாம்மா. எங்க தெருவுல செட்டியாருகிட்ட கடன் கேட்டுருக்கேன். அம்பதாயிரம் ரூவா தர்றேங்கறாரும்மா. மாசம் கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிடுங்கறாரு. ஆனா, அதுக்கு ஜாமீன் கையெழுத்து போடணும். பொறுப்பானவங்க யாரையாச்சும் இட்டுக்கிட்டு வான்னு சொல்றாரும்மா… அதான் உங்ககிட்டே வந்தேன்.”

பகீரென்றது எனக்கு.

‘ஜாமீன் கையெழுத்தா?’

“பர்வதம்… வழக்கமா இதெல்லாம் நான் போடுறதில்லை. எதுக்கும் ஆபீஸ்லேருந்து அவர் வந்ததும் கேட்டுட்டுச் சொல்றேன். சரியா?”

“யம்மோவ். ஒங்களைத்தான் மலை போல நம்பிக்கிட்டு இருக்கேன். ரெண்டு பொம்பளப் புள்ளைங்களையும் கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறதே… பின்னால அவங்க என்னை மாதிரி பத்துப் பாத்திரம் தேய்ச்சு, வூடுகள்ல வேலை பாக்காம… நல்லா ‘ஆபீசுல’ வேலை செஞ்சு, நல்லபடியா வாழணுங்கிறதுக்காவத்தான்ம்மா.
அதனாலத்தான் கடனை ஒடனை வாங்கி, நாலு வூட்டுல வேலை செஞ்சு அவுங்களைப் படிக்க வைக்கிறேன்.. அதுங்களும் நல்லாப் படிக்குதுங்கம்மா. நீங்கதான் இப்ப மனசு வெக்கணும். வாங்கற கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக் கட்டாயம் திருப்பிக் கொடுத்துடுவேம்மா. என்னை நம்புங்க!”

கைகூப்பி, கண்களில் நீர் கசிய பரிதவிப்போடு பர்வதம் என் முன் நின்றபோது, சங்கடம் மனசைப் பிசைந்தது.

“சார் வரட்டும் பர்வதம். சாயங்காலம் நீ இங்கே வரும்போது ‘உண்டு; இல்லை’ன்னு பதில் சொல்லிடுறேன். ‘ஓக்கே’வா… போயிட்டு வா!”

இரு கையையும் கூப்பியபடி கண்களின் அழுகை தெரியாதபடி தலை குனிந்து பர்வதம் மெல்லத் திரும்பி நடந்தாள்.

***
பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது…

சிதம்பரத்தில் வசிக்கும் என் அக்கா சுமதி வந்து தன் கணவன் தொடங்கும் ‘ஃபைனான்ஸ் கம்பெனி’க்காக 8 லட்ச ரூபாய் கடன் வாங்க… அதற்கான பத்திரத்தில் ஜாமீன் கையெழுத்துப் போட்டேயாக வேண்டும் என்றார்.

‘ஓகோ’வென்று நிதி நிறுவனத்தில் வருமானம் வரும் என்றும், கடனை முறையாக செலுத்திவிடுவார் தன் கணவர் எனவும் அக்கா உறுதியளித்தாள். அதனை நம்பிப் போட்ட கையெழுத்துக்கு… வாங்கிய கடனில் ஒத்தை ரூபாயைக்கூட அவர் திருப்பிச் செலுத்தவில்லை. பிடியே கொடுக்கவில்லை.

கடன் கொடுத்த நிறுவனம், ஜாமீன் கையெழுத்துப் போட்ட என்னை நெருக்கத் தொடங்கிற்று. என்ன செய்வதென்று தெரியவில்லை. அக்காவிடம் கேட்டால், “நான் என்னடீ செய்வேன்? ‘ஃபைனான்ஸ் கம்பெனி’யில அவர் கொடுத்த ஏராளமான கடன்கள் வசூலே ஆகல. அவரும் ¬யில இருக்கிறப்போ கன்னா பின்னான்னு செலவு பண்ணிட்டு, இப்ப சரியா வீட்டுக்கே வர்றதில்ல” என்று நீலிக் கண்ணீர் வடித்தாள்.

வழக்கு, கோர்ட்டு என்று போகாமல் இருக்க… சொந்த வீட்டை விற்று… அந்தக் கடனை அடைத்தேன். வாடகை வீட்டில் வாசம் தொடங்கியது. சொந்த அக்காவும், அவர் கணவரும் இப்படிச் செய்வார்கள் என்று கொஞ்சமும் நான் எதிர்பார்க்கவில்லை.

வீட்டை விற்ற வேதனை மனதை அரித்தது.

எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த ஒரு நண்பர், மகள் திருமணத்துக்கு அழைத்திருந்தார்.

கையைவிட்டுப் பறிபோன வீடு இருக்கும் தெருவில் நடந்து சென்று, அந்தத் திருமணத்தில் பங்கேற்க மனம் இடம் கொடுக்கவில்லை.

ஏமாற்றம் தந்த வலி. அந்தத் திருமணத்துக்கு நான் போகவே இல்லை.

எத்தனையோ இரவுகள் ‘திடுதிடு’மென உறக்கத்தில் எழுந்து உட்கார்ந்து, விடியும் வரை கண்ணீர் விட்டிருக்கிறேன். ‘இப்படிக்கூட உடன் பிறந்தவள் துரோகம் செய்வாளா? எப்படி மனம் வருகிறது?’

ஐந்தாண்டு ஓடிற்று. என் மகன் பூபதி ‘கம்ப்யூட்டர் என்ஜினீயர்’ ஆகி, மலேசியாவுக்கு வேலைக்குப் போனான். அவன் சம்பாத்தியத்தில் பணம் மிச்சம் பிடித்து, ஒரு வைராக்கியத்துடன்…நாங்கள் விற்ற வீட்டையே அதிக விலை கொடுத்து வாங்கியபோது, உலகையே விலைக்கு வாங்கிச் சொந்தமாக்கிக் கொண்ட மகிழ்ச்சி!

அந்த வீட்டை ஒழுங்குபடுத்தி, புதிய வர்ணம் பூசி, மீண்டும் இங்கு வந்து குடியேறி வசிக்கத் தொடங்கியபோது… மனதில் அதீத உற்சாகம். என்றாலும்… கூடப் பிறந்த அக்காவே செய்த துரோகம் மனதில் இருந்து அகலவில்லை.

வாழ்க்கையில் மிகப் பெரிய துரோகம்…நம்பிக்கைத் துரோகம். ‘இதைச் செய்தவர்களுக்கு உய்வில்லை’ என்கிறார் வள்ளுவர். ஆனால், அக்கா மேலும் மேலும் சொத்துகள் வாங்கி சிதம்பரத்தில் வளமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

என் கடந்தகால அனுபவம், ஒரு குறும்படமாக மனதில் ஓடியது. ‘ஒரு தடவை பட்டது போதாதா?’ என்று உச்சந்தலையில் குட்டியது.

வீடுகளில் வேலை செய்யும் பர்வதம், கணவனின் குறைவான சம்பளத்தில் எப்படிக் கடனை அடைப்பாள்? ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு… கடன் தொகை
ஐம்பதாயிரத்தையும், வட்டியையும் என்னால் அடைக்க முடியும் என்றாலும்… ஏமாந்த வேதனை, முள்ளாய் குத்தியது.

மனதில் பாரம், மலையாக வந்து உட்கார்ந்துகொண்டது. ஏழையானாலும் பர்வதம் நேர்மையானவள்தான். பொய் கிடையாது. வீட்டில் திருட்டு புரட்டு செய்தது
இல்லை. வயதுக்கு வந்த அவளுடைய மகள்கள் மூத்தவளும், சின்னவளும்கூட நல்லவர்கள். தாய் பற்றுப் பாத்திரம் தேய்ப்பது பற்றியோ…வேலை செய்கிற வீடுகளில் தருகிற மிச்சம் மீதிச் சாப்பாட்டை அவள் வாங்கிச் செல்வதையோ அவமானமாகக் கருதுவதில்லை. ‘இதுதான் நம் தலைவிதி!’ என்று அடக்க ஒடுக்கமாக செயல்படுவதாகவே எனக்குத் தோன்றும்.

‘இப்போது என்ன செய்வது… என்ன செய்வது?’

தவித்தேன்.

மாலை ஐந்து மணிக்கு கணவர் வந்தார்.கை & கால் & முகம் கழுவி, பூஜையறைக்குப் போய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்து அமர்ந்தவர் முன் காப்பித் தம்ளரை வைத்தேன்.

எதிரில் அமர்ந்தேன்.

காப்பியை எடுத்து பருகியபடியே, “என்ன தாரிணி! காப்பியை வெச்சிட்டு வழக்கமா சமையல்கட்டுக்கு ஓடிடுவே. இன்னிக்கு சாவகாசமா உக்கார்ந்திருக்கே? ஏதாவது விசேஷமா?” என்று சிரித்தபடி கேட்டார்.

“ஆமாங்க. . . ” என்றபடி, பர்வதத்தின் கோரிக்கையைச் சொன்னேன். அவர் முகம் யோசனையில் ஆழ்ந்தது.

“தாரிணி, கஷ்டப்படுறவங்களைப் பார்த்தா…உன் மனசு உருகிடுது. அது தப்புன்னு சொல்லலை. நாம இப்பதான் ஒரு பெரிய துரோகத்துலேருந்து மீண்டு, ‘அப்பாடா…’ன்னு நிம்மதிப் பெருமூச்சு விடுறோம். நம்ம பிள்ளை மட்டும் அந்த கஷ்டத்தை நினைச்சு பணம் அனுப்பி, வீட்டை மீட்கலேன்னா இன்னும் நாம வாடகை
வீட்லதான் இருந்துகிட்டிருப்போம் இல்லையா? அதனாலதான் சொல்றேன்… எதுக்கெடுத்தாலும் இரக்கப்படுறதைக் கொஞ்சம் தள்ளி வைம்மா! நமக்கும் குடும்பம் இருக்கு. நம்ம நெத்தியில ‘ஏமாளிங்க’ன்னு எழுதியா வெச்சிருக்கு?” என்றார்.

அவர் சொல்வதும் நியாயமாகத்தான் இருந்தது. ரத்தப் பந்தமான சொந்த அக்காவே…வசதியாக வாழ்ந்தும், மனசாட்சி இல்லாமல் ஏமாற்றிவிட்டாள். எங்கிருந்தோ வந்து…வறுமையில் உழன்று, வீட்டு வேலை செய்து பிழைக்கும் பெண் ஏமாற்றமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?

பெருக்கும் சத்தம் கேட்டது.

பர்வதம் வந்துவிட்டாள் என்பது புரிந்தது.

வாசலுக்குப் போனேன். கூடவே பர்வதத்தின் மகள் கமலா. வயதுக்கு வந்த சிறுமி. இவளுக்கு என்னமாய் படிப்பு வருகிறது? ‘பிளஸ் டூ’வில் 1,152 மதிப்பெண் வாங்கி, ‘என்ஜினீயரிங்’தான் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாகச் சொல்லும் அவளின் உறுதி எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இருந்தாலும் ஜாமீன் கையெழுத்து..?

அதை நினைத்தாலே ‘குப்’பென்று வியர்த்தது.

அக்காவின் துரோகம், முதுகில் குத்திவிட்டு அலட்சியமாகப் போன நிர்தாட்சண்ணியம்…

இது நமக்குத் தேவையா?

வாசலில் கோலம் போட்டுவிட்டு உள்ளே வந்தார்கள் பர்வதமும், மகளும். கமலா, சமையல்கட்டுக்குப் போய் எச்சில் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, கழுவுவதற்காக தோட்டத்துப் பக்கம் போனாள்.

பர்வதம் தயக்கத்துடன் என் முன் வந்து நின்றாள். தலை குனிந்தபடி சொன்னாள்:

“காலையில கொஞ்சம் வந்துட்டுப் போனா போதும்மா. செட்டியார் வீட்ல கடன் பத்திரத்துல ஜாமீன் கையெழுத்துப் போட்டுட்டு, சுருக்கால திரும்பிடலாம்னு சொன்னாரும்மா” என்றாள் கம்மிய குரலில்.

‘ஹாலில்’ உட்கார்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்த என் கணவர்… திரும்பி என்னைப் பார்த்தார். ‘ஒத்துக்காதே. . .!’ என்பதாக ‘சைகை’ செய்தார்.

யோசித்த நான்…

“இதோ பாரு பர்வதம்! என் சொந்த அக்காவுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டு எட்டு லட்சம் ரூபா அசலும், வட்டி ஒரு லட்சமும் கட்ட வேண்டியதாப் போய்… இந்த
வீட்டை வித்த கதை உனக்கும் தெரியும்தானே? ‘இனி எந்த ஜென்மத்துலேயும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து மட்டும் போடுறதில்லை!’ன்னு மனசுக்குள்ளாற ஒரு முடிவு எடுத்திருக்கேன். அதனால உனக்கு ‘பிணை’க் கையெழுத்துப் போடுறதா இல்ல.”

“அ…ம்…மா…” என பதறினாள்.

“ஆனா, கவலைப்படாதே! உனக்கு தேவைப்படுற பணத்தை, உன் மக படிக்கிற வரை என் சொந்தப் பெண்ணைப் படிக்க வைக்கிறதா நினைச்சு இலவசமாவே தர்றேன். நீ யார்கிட்டேயும் கடன் வாங்க வேண்டாம்! சரியா?” என்றேன்.

கணவர் திக்பிரமையோடு என்னைப் பார்த்தார். பிறகு மெல்ல புன்முறுவல் புரிந்தார்.

என்னைப் புரிந்துகொண்ட அகமகிழ்ச்சியின் வெளிப்பாடு அது! சொந்தப் பணம் போனால்… இழப்பு.

‘பிணை’க் கையெழுத்துப் போட்டால். ..நாம் கைதி. பின்னதுக்கு முன்னது தேவலை அல்லவா?

நான் இக்கட்டில் இருந்து தப்பித்ததாக ஆசுவாசமாக நிற்க… என் காலடியில், பர்வதத்தின் மகள் கமலா. கைகளைக் கூப்பியபடி, நன்றிப் பெருக்கால் தேம்பிக்கொண்டிருந்தாள்.

‘பிணை’க் கையெழுத்துப்
போட்டால்… நாம் கைதி!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *