பாப்பாவின் இண்டர்வியூ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 5,993 
 

இன்னிக்கு பாப்பாவோட ஸ்கூல்ல இண்டர்வியூ நல்லா போச்சுல்ல. எனக்கு நம்பிக்க வந்துருச்சு இந்த ஸ்கூல்ல இடம் கெடைச்சிரும்னு.

டேய் கைய பிடிச்சிட்டு ஒழுங்கா நடடா. காலுக்கு குறுக்க குறுக்க ஏன் வர. ஏதோ சொல்ல வரும் ஏழு வயது மகன் அருணை மடக்கி விரட்டிக்கொண்டே பாப்பா பாவம் டயர்டாகி தோள்லயே தூங்கிருச்சு. இன்னிக்கு ஸ்கூல்ல நல்லா கோஆபரேட் பண்ணிச்சு. வீட்டுக்கு போனவுடனே அது கேட்ட ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துற வேண்டியதுதான். ஒரு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிடலாம் என்றார் மணி.

அம்மா நீயாது கேளேன். நேத்து டி.வி. ல சர்கஸ் பாத்தோமே…

அட போடா நீ வேற. நீ நல்லபடியா ஸ்கூல்ல சேந்து படிக்கிற. நாளைக்கு பைனல் இண்டர்வியூ ல பாப்பா நல்லா பண்ணணும்ல. அப்ப தானே அவளும் உன்கூட தினமும் ஸ்கூல் வர முடியும். அதுக்காக தான் நானும் அப்பாவும் டிஸ்கஸ் பண்ணறோம். கொஞ்ச நேரம் சும்மா இரு. என்றாள் ரம்யா.

அந்தப் படத்தில் வரும் தையூ என்ற இளைஙனும் அவன் அப்பாவும் இப்டிதான் சிங்கத்த பழக்குவாங்க. டக் டக் ரெண்டு தட்டு தட்டினா முன்னால வரும். கம்ப தரைல ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் னு தேச்சா பின்னால போகும். கம்ப சுழட்டி சுழட்டி தரைல தட்டினா குதிக்கும்.வெரி சிம்பிள்.

டேய் வீடு வந்தாச்சு வாய மூடிட்டு இறங்கு. உங்க அம்மா கொடுக்குற செல்லம். எவ்ளோ கஷ்டப்பட்டு சீட்டு வாங்கறோம் பாத்தல்ல. பாடத்த படிக்காம ஆக்சனோட சினிமா கதை.

அப்பா அந்த படத்துக்கு ஸ்கூல்லேந்துதான் கூட்டிட்டு போனாங்க. சொல்லிக்கொண்டே இறங்கி விளையாட ஓடினான்.

பாப்பா தூங்கி எழுந்தவுடனே இன்னிக்கு பூரா ரெயின் ரெயின் கோ அவேயும்., கைவீசம்மா கைவீசு பாட்டும் சொல்லிக்கிட்டே இரு. நாளைக்கு இண்டர்வியூ வரைக்கும் அவள யார் கிட்டயும் அதிகம் பேச விடாத. டி.வி. போடாத. புரிஞ்சிதா. எனக்கு அரை நாள் தான் லீவு. நான் போயிட்டு லேட்டாதான் வருவேன்.

கொஞ்ச நேரத்தில் வாசலில் ரம்யாவின் அப்பா. என்னம்மா. இண்டர்வியூ எல்லாம் முடிஞ்சிதா. அம்மா குழம்பு கொடுத்து விட்டாங்க. நான் போஸ்ட் ஆபீஸ் வர போயிட்டுவரேன். பாப்பா தூங்கறாளா. உம்மகன் ஆச்சி கம்பு கொடுங்கனு கொடக் கம்ப தூக்கிட்டுவந்துட்டான். யாரையும் அடிச்சிகிடிச்சி வச்சிறாம பாத்துக்க.

சொல்லிவிட்டு போய்விட்டார். நல்ல வேளை வாசற்படியிலேயே அருண் குடைக்கம்புடன். கீழ்ப் படியில் இரண்டு நண்பர்கள். அனைவரும் கன்னத்தில் கை வைத்தவாறு ஆழ்ந்த யோசனையுடன் அமர்ந்திருந்தனர்.

தினசரி வேலைகளில் மூழ்கிய ரம்யாவுக்கு நேரம் போனதே தெரியவில்லை. துணி துவைத்து காயப்போட்டு ,பாத்திரம் கழுவி, வீடு சுத்தம் செய்து வேலைகள் நடந்து கொண்டே இருந்தாலும் மனம் மட்டும் காலை நிகழ்ச்சிகளையே அசை போட்ட வண்ணம் இருந்தது.

போனவுடன் அனைத்து பெற்றோர்களுக்கும் பள்ளியின் பெருமைகளை எடுத்துரைத்தபின் தகுதியான குழந்தைகளை நர்ஸரி அட்மிஷனுக்கு எப்படி தெரிவு செய்கிறார்கள் என்ற இறுதித் தேர்வுக்கான செய்முறை விளக்கப்படம் காண்பிக்கப் பட்டது.

குழந்தைகள் நாம் சொல்வதை புரிந்துகொண்டு செயல்படுத்துகிறார்களா என்பதை அறிவதற்கான சிறு சிறு தேர்வுகள். அந்தப் படத்தில் ஆசிரியரின் சொல் கேட்டு எவ்வளவு அழகாக குழந்தைகள் செயல்படுகின்றன. பாப்பாவும் நாளைக்கு சொல்படிநடந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். இன்றைக்கு பெற்றோர்களுக்கான தேர்வில் நாங்கள் நன்றாகச்செய்து விட்டோம். உளவியல் கேள்விகளுக்கு நன்றாகவே பதில் அளித்தோம். உங்கள் குழந்தைகளிடம் இருக்கும் பொம்மையையே திரும்பவும் வாங்கித்தருமாறு கடையில் அடம் பிடித்தால் எப்படி சமாளிப்பீர்கள் போன்ற இருபது கேள்விகள். நாளைக்கு பாப்பாவுக்கு தான் தேர்வு. நமக்குத் தேவையான போது அவள் தெய்யாது என்று விடுவாள். அவளுக்கு விருப்பமான நேரத்தில் வாய் ஓயாமல் தானாகவே பாடிக்கொண்டிருப்பாள்.

எல்லா வேலைகளும் முடிந்து அயர்வாக உட்காரும்போது

அம்மா அம்மா எல்லாம் ரெடி. சீக்கிரம் வா. பாப்பா வெயிட் பண்ணறா. கத்திக்கொண்டே ஓடும் அருணை குழப்பத்துடன் தொடர்ந்தாள் ரம்யா.

அப்பொழுது தான் உள்ளே நுழையும் தாத்தாவை நீங்களும் உக்காருங்க என இருவரையும்கட்டிலில் அமரச்செய்தான்.

இப்போ யாரும் பேசக்கூடாது. பொஸிஷன் ப்ளீஸ் என்றவுடன் அவன் நண்பர்கள் பாப்பாவின் இருபுறமும் நின்று கொண்டனர்.

தரையில் கம்பால் ஒரு தட்டு தட்டியவுடன் பாப்பா கைகளை பின்னால் கட்டிக் கொண்டாள். இரு நண்பர்களும் ஒரு முறை கைதட்டியவுடன் பாப்பா ரைம்ஸ் பாடத் தொடங்கினாள். கம்பால் இரண்டு தட்டு தட்டியவுடன் முன்னாள் நடந்தாள். ஸ்ஸ்ஸ்ஸ் என்று தேய்த்தவுடன் பின்னாள் நடந்து பழைய இடத்தை அடைந்தாள். கம்பை சுழற்றித் தட்டியவுடன் குதித்தாள். அவ்ளோதான் டிரைனிங் முடிந்தது. இதத்தான் நான் காலைலேருந்து சொல்ல ட்ரை பண்றேன்.

ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ரம்யாவிடம் என்னமோ போ என்ன இண்டர்வியூவோ, பள்ளிக்கூடமோ. கோவில் யானைய பழக்கற மாதிரி கம்ப தட்டறான். அதுவும் கேக்குது. நான் வரேன் நடக்க ஆரம்பித்தார் தாத்தா.

தாத்தா தப்பா சொல்றீங்க அது கோவில் யானையில்ல. சர்கஸ் சிங்கம்.

யானையோ சிங்கமோ நாளைக்கு பாப்பா நல்லா சொன்னா சரிதான். மனதிற்குள் சொல்லிக்கொண்டே ரம்யா பாப்பாவிடம்

பாப்பா உனக்கு ஐஸ் கிரீம் வச்சிருக்கேன். எங்க அம்மாக்கு செஞ்சிகாட்டு பாக்கலாம். இப்போ யாருமில்ல. நானும் நீயும் தான் சரியா. எங்க ரைம்ஸ் சொல்லு. .

…தெய்யாது….

பரவாயில்ல. ஜம்ப் ஜம்ப் என ரம்யா அவள் முன் குதித்துக் கொண்டிருந்தாள்.. அவள் அண்ணாவையும் கம்பையும் தேட ஆரம்பித்தாள். எதுவும் புரியாமல் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார் மணி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *