திசை தவறி நகரும் நதிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 11, 2019
பார்வையிட்டோர்: 9,264 
 

மருத்துவமனையில் காய்ச்சல் என்று இவனைத் தவிர மேலும் பத்து பேர் அந்த நீளமான அறையில் படுக்கையில் கிடந்தார்கள். காய்ச்சல் சரியானவர்கள் மருத்துவமனையைவிட்டு கிளம்பிப் போவதும், புதிய காய்ச்சல் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதுமாக ஒரு பெரிய தொடர்சங்கிலி நிகழ்வு நடந்து கொண்டே யிருந்தது. திலீபன் வைரஸ் காய்ச்சல் என்று ஏழாம் எண் படுக்கையில் விழுந்து இன்றோடு நான்கு நாட்களாகி விட்டன. தெளிவாகப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் நேற்றே சற்று தெம்பு வந்திருந்தது. இன்று அவனுள் பிழைத்துவிட்டோம் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

இந்த அறையின் நோயாளிகளை கவனித்துக் கொள்வதற்கென்றே இரண்டு செவிலிகள் இருந்தார்கள். இருவரில் ஒரு செவிலி அழகாய் இருந்தபடியால் நேற்று மாலை இவனுக்கான மாத்திரைகளை அவள் தரும் சமயத்தில், “”சிஸ்டர், நீங்கள் என்னைக் கல்யாணம் செய்யுறீங்களா? உங்களை நான் காலையில பிடிச்சு லவ் பண்ணுறன்… எனக்கொரு முடிவு சொல்லுங்கோ என்று கேட்டிருந்தான். மாறாப் புன்னகையுடன் செவிலி இவன் வாய்க்குள் இரண்டு மாத்திரைகளை வீசி வாட்டர்கேன் தண்ணீர் நீட்டினாள்.

“எங்கேயும் எப்போதும் சினிமாவில அஞ்சலி கமர்கெட்டை ஆக்காட்டச் சொல்லி லவ்வர் வாயில மாத்திரை வில்லை வீசுறாப்ல வீசுறீங்கோ சிஸ்டர். என்னை உங்களுக்குப் பிடிக்கேல்லையா? நான் கேட்டதுக்கு ஒண்டும் சொல்லயில்ல.. இவன் சொல்லச் சொல்ல மாறாப் புன்னகையுடன் பக்கத்து படுக்கை நோயாளியிடம் அவள் சென்றாள். “”சாகுமட்டும் உங்கட நினைவோடயே வாழுவன். அவளுக்கு கேட்கும்விதமாய் சொல்லி கண்களை மூடிக்கொண்டான்.

இன்று காலையில் அதே செவிலிதான் இவனுக்கு இன்ஜெக்ஷன் போட கையில் சிரிஞ்சுடன் வந்தவள், “”எப்படி இருக்கிறது திலீபன் உடம்புக்கு? என்று கேட்டாள். “”பதிமூண்டு சைடு ஏக்டர்ஸ் என்ர தலையில ஏறி நிண்டு ஸ்லோ மோசனில் “டான்ஸ் பண்ணுற மாதிரி இருக்கு சிஸ்டர். ஒரு சிகரெட் தாறியோ… என்றான். புன்னகை மாறாமல் இவனுக்கு ஊசி ஏற்றிவிட்டு,””அண்ணே, உங்களுக்குக் கூடிப் போச்சு. எனக் கொரு புரியன் இருக்கிறார். “உன்னில் யாராவது உரசினால் இந்த நகரத்தையே எரித்துப் போடுவன் எண்டுதான் கதைப்பார். அண்ணன் நீர் ஒண்டுக்கும் கவலைப்படாதேயும் உமக்கு ஒரு நல்ல குடும்பத்து பொட்டையா பாக்குறேன். நானல்லோ உமக்கு சோக்கான பொம்புளையா செய்து வைக்கிறது என்று திலீபனிடம் செவிலி சொல்லிவிட்டு அகல, இவன் நிஜமாகவே வருத்தப்பட்டான். தமாசுக்கு இலங்கைத் தமிழ் பேசப் போக… பார்த்தால் நிஜமாகவே அந்தப் பெண் இலங்கைதானோ என்று சங்கடப்பட்டான். ஆனால் அவளும் இவனிடம் இவனைப்போலவே நக்கல் பேச்சு பேசினாள் என்று இவனுக்குத் தெரியாது.

நினைவு தெரிந்த நாளில் இருந்து இப்படி காய்ச்சல் என்றோ தலைவலி என்றோ திலீபன் மருத்துவமனையில் படுத்ததில்லை. இதுதான் முதல்முறை என்பதால், தான் ஒரு நோயாளி என்ற உணர்வு உள்ளுக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது. மரணம் தன் கூர் பற்களைக் காட்டிக் கொண்டு மருத்துவமனை வளாகத்தில் சுற்றிக் கொண்டிருப் பதான உணர்வு இவனுக்குள் பயத்தை விதைத் திருந்தது. இவன் அம்மா பத்து மணிக்குத்தான் இவனுக்கான உணவை எடுத்துக் கொண்டு வந்தாள். மற்ற நோயாளிகள் ஒன்பது மணிக்கே சாப்பிட்டு முடித்து கைகழுவி விட்டார்கள். இன்றுதான் பசி என்பதையே உணர்ந்திருந்தான். அம்மா இட்லிதான் கொண்டு வந்திருந்தது. தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி. அவசரமாய் விழுங்கினதால் விக்கல் எடுத்தது. “”மெதுவா சாப்பிடு என்று சொல்லி அம்மா தண்ணீர் கேனைத் தந்தாள். அம்மாவிற்கு இவன் பதில் ஒன்றும் சொல்லாமல் தண்ணீரைக் குடித்தான்.

அம்மாவிடம் திலீபன் ஆறு மாத காலமாகவே சரியாய் பேச்சு வைத்துக் கொள்வது இல்லை. பல நாட்கள் இரவில் காப்பகத்திலேயே தங்கிக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டான். இதற்கெல்லாம் காரணம் மளிகைக்கடை ஏகாம்பரம்தான். அவரை நினைத்தால்கூட இவனுக்குள் வன்மம் தலைதூக்கிக் கொள்கிறது. திலீபனின் அப்பா இறந்து ஏழெட்டு வருடங் களாயிற்று. வீட்டில் ஒரே பிள்ளை இவன்தான். பெரிதாய் இவனுக்கு சம்பாதித்து வைத்துவிட்டு ஒன்றும் அவர் போய்ச் சேரவில்லை. இவன் அம்மாவைவிட அவர் குடியைத்தான் அதிகம் நேசித்தார். அதனாலேயே ஐம்பது வயதைத் தொடும் முன்பாகவே போய்ச் சேர்ந்து விட்டார். வீட்டுக்கு அடிக்கடி வந்துபோகும் ஏகாம்பரத்தை, “உன் அப்பா மாதிரி என்றாள் அம்மா. இவனுக்கு அம்மாமீதும் புதிய அப்பாமீதும் கோபம் மிகுந்தது.

ஏகாம்பரம் கருங்கல்பாளையத்தில் இருபது வருடங்களாக மளிகைக்கடை வைத்து சம்பாதித் தவர். தன் இரண்டு பெண்களையும் சேலத்திற்கு கட்டிக்கொடுத்து விட்டார். மனைவியை காச நோயில் பத்து வருடங்களுக்கு முன்பே பறிகொடுத்தவர். கடைசிப் பெண்ணையும் கட்டிக் கொடுத்துவிட்ட பின்பு சாப்பாட்டு பிரச்சினைதான் அவருக்குப் பெரிதாய்ப் போய்விட்டது. வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டவருக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை. மரகதத்திடம் பேசப் பிடிக்க இருந்து ஒட்டிக்கொண்டார். மரகதம் தினமும் மூன்று வேளை சாப் பாட்டை அடுக்குப்போசியில் எடுத்துக் கொண்டு இரண்டு வீதி தள்ளியிருந்த மளிகைக் கடைக்கு நடந்தாள். திலீபனுக்குள் தீப்பற்றிக் கொண்டது. இந்த நாடகத்தை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியாமல் போயிற்று.

திலீபன் ஈரோடு திருவள்ளுவர் ஆதரவற்ற குழந்தைகள் நல காப்பகத்தில் நான்கு வருடமாய் பணியில் இருந்தான். காப்பகத்தில் நூறு ஆதரவற்ற மாணவ மாணவிகள் இருந்தார்கள். 1999-ல் சமூக ஆர்வலர்கள் சாதாரணமாக வாடகைக் கட்டடத்தில் இருவரால் துவங்கப்பட்டபோது பத்து மாணவர்களே இருந்தனர். அவர்கள் இன்று கல்லூரி சென்று வருகிறார்கள். மேலும் இரண்டு சமூக ஆர்வலர்கள் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவும் முறையாக இந்த காப்பகம் அறக்கட்டளை சட்டத்திலும், சமூகநலத் துறையிலும் பதிவு பெற்று பத்து வருடங்களுக்கும் மேலாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

காப்பகத்திற்கென்று ஆறு சென்ட் நிலத்தை தொழிலதிபர் ஒருவர் ஈரோடு திண்டல் பகுதியில் வழங்கவும்… நிறுவனர் கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அனைவரையும் சந்தித்து நிதி வசூல் செய்து ஐம்பது லட்சம் மதிப்புள்ள கட்டடத்தைக் கட்டி முடித்தார்கள். பொதுப் பணித்துறை அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த விழாவும் நான்கு வருடங்களுக்கு முன்பாக நடந்து முடிந்திருந்தது.

நிறுவனரின் மகன் சக்திவேல் மருத்துவமனையில் இருக்கும் திலீபனை நலம் விசாரித்துவிட்டுப் போகவந்த சமயம், திலீபன் சாப்பிட்டு முடித்து தட்டில் கை கழுவி யிருந்தான். “”எப்படி இருக்கு? என்று கேட்ட சக்திவேலுக்கு இவனைவிட மூன்று வயது அதிகம். “”பரவாயில்லங்க சார்… இன்னைக்கு ஈவினிங் பெரிய டாக்டரை பார்த்துட்டு வீட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான்… ஆபீஸ்ல மாலினி எல்லா வேலையையும் சரியா பார்த்துக்கறாங்களா சார்… நல்ல சூட்டிகை சார் அந்தப் பொண்ணு… சேர்ந்த இந்த ஆறு மாசத்துல என்னோட சிரமங்களைப் பாதியாய் குறைச் சுடுச்சு சார் அந்தப் பொண்ணு. காய்கறி செலவுல இருந்து டியூசன் மாஸ்டர் சம்பளம் வரை துல்லியமா கணக்கு வச்சுக்குதுங்க சார் என்றான் திலீபன். வந்தவன் திலீபனின் எஜமானரோ என்று மரகதம் கைகட்டி கட்டில் ஓரமாய் நின்றிருந்தாள். அப்போது பார்த்துதான் மளிகைக்கடை ஏகாம்பரம் கையில் பழ வகைகள் நிரம்பிய பையுடன் அறைக்குள் நுழைந்தார். மரகதத்திடம் பையை நீட்டிவிட்டு இவனை பாசமாய்ப் பார்த்தார். இவனுக்குள் எங்கிருந்துதான் அப்படி கோபம் வந்ததோ! நிறுவனரின் மகன் நிற்பதைக்கூட மறந்து பழப்பையை அம்மாவிடமிருந்து பிடுங்கி வீசினான். ஆப்பிள், ஆரஞ்சு என்று தரையில் கிரிக்கெட் பந்துகள் உருண்டு ஓடுவது போன்று ஓடின.

தாராபுரத்தில் திலீபன் ஒருவன் மட்டுமே பேருந்திலிருந்து இறங்கியபோது மணி இரவு இரண்டு. அந்த மதுரைப் பேருந்து தாராபுரம் பேருந்து நிலையத்திற்குள்கூட செல்லவில்லை. நேர் சாலையிலேயே நிலையத்தின் வாயிலில் இறக்கி விட்டுவிட்டுப் போய்விட்டது. பேருந்து நிலையம் இருட்டில் கிடந்தது. சாலையில் மட்டும் சற்று தூர தூரமாய் விளக்கொளிகள் தெரிந்தன.. சைக்கிளில் டீ டிரம்மோடு நடுரோட்டில் ஒருவன் பாட்டுப் பாடியபடி வந்து கொண்டி ருந்தான். திலீபன் அவனை நிப்பாட்டினான்.

“டீ முடிஞ்சு போச்சு சார்… வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்… மதுரை பஸ்சுல வந்து இறங்குனியா சார்… இனி மூணு மணி வரைக்கும் ஒரு பஸ் கிடையாதே… எங்க சார் போகணும்? என்றான் பையன்.

“ஈரோடு போகணும். ஒரு மணி நேரம் பஸ்ஸே கிடையாதா?

“சாமத்துல எவன் சார் ட்ராவல் பண்றான்? நீங்க இறங் கனீங்களே கோவை வண்டி… அதோட டைம் ஒண்ணரை சார்… இன்னிக்கி லேட்… மூணே காலுக்கு பழனி வண்டி ஒண்ணு வரும். அதான் மொதல் வண்டி ஈரோட்டுக்கு. சிகரெட் வேணுமா சார்… இப்படி ரோட்டுல நிற்காதீங்க சார்… அப்படி கடையோரமா தூங்குறாப்டி இருட்டுல உட்கார்ந்துக்கங்க. போலீஸ்காரங்க பைக்குல சுத்திட்டே இருப்பாங்க. திலீபன் அவனிடம் இரண்டு சிகரெட் வாங்கிக் கொண்டான். பையன் பாடியபடி கிளம்பிப் போய்விட்டான்.

புகை ஊதியபடி சாத்தியிருந்த கடை ஓரமாய் திண்டில் சாய்ந்து அமர்ந்தான் திலீபன். இப்படி எங்கு வெளியூர் சென்றும் நடந்ததில்லை. காப்பகத்திற்கான நன்கொடை விஷயமாக பல ஊர்களுக்கும் சென்று வந்திருக்கிறான் திலீபன். இன்றும் ஒரு லட்சத்திற்கான காசோலையைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் காலையிலேயே கிளம்பி னான் மதுரைக்கு. நன்கொடை தரும் பெரும்புள்ளி தஞ்சாவூரில் இருந்து வருவதற்கு தாமதமாகிப் போனதால் இப்படி நடந்துவிட்டது. இரவில் நேரம் போவதே தெரியாது. அவ்வளவு விரைவு என்பார்கள். தூக்கம் வேறு சொக்கிக் கொண்டு வரும்போல தெரிந்தது. சாலையில் எந்த வாகனமும் செல்லவில்லை. இருட்டு உலகத்தில் நுழைந்து விட்ட மாதிரியும், இவன் மட்டுமே சந்தடியில்லாத அந்த உலகத்தில் தனியாளாய் உயிரோடு இருப்பது மாதிரியும் இருந்தது.

ஒரு பிச்சைக்காரன்கூடவா கண்ணில் தட்டுப்படவில்லை. இவன் தோல் பையில் பிஸ்கட் பாக்கெட்டுகளும் தண்ணீர் கேனும் இருந்தன. யாராவது கடை ஓரமாய் வேட்டியை இழுத்துப் போர்த்திப் படுத்திருந்தால் எழுப்பி கொஞ்ச நேரம் பொழுதைப் போக்க பேசலாம். இருட்டுக்குள் கிடந்த பேருந்து நிலையத்தின் உள்ளே இருந்து வெள்ளை நிறத்தில் ஒரு நாய் சாலையில் வாகன பயமின்றி ஓடி வந்தது. இவன் “இஸ்க்கோ, இஸ்க்கோ என்று நாயை அழைத்தான். அது சாலையில் நின்று இவனை உற்றுப் பார்த்துவிட்டுத் தன் போக்கில் இவனை சட்டை செய்யாமல் ஓடிப் போயிற்று. கடைசிக்கு அந்த நாய் தன்னிடம் வந்திருந்தால்கூட பிஸ்கெட் கொடுத்து, அதன் தலையைத் தடவிக் கொடுத்து சிறிது நேரத்தைப் போக்கியிருக்கலாமே என்று நினைத்தான். ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாய்க் கழித்தான் திலீபன். கண்ணயர்ந்து விட்டால் பேருந்தைத் தவற விட்டுவிடுவோம் என்ற கருக்கடையும் மனதில் இருந்தது. பையன் சொன்னதுபோலவே டூவீலரில் இரண்டு காக்கி உடுப்புக்காரர்கள் மெதுவாய் ஊர்ந்து சென்றார்கள். தனிமை திலீபனை பயமுறுத்தி எதை எதையோ யோசிக்க வைத்தது. ஆபீஸில் இருக்கும் மாலினியின் உடல் அழகைப் பற்றி யோசித்தான். அவளது இடது கால் சற்று ஊனம். விந்தி விந்தித்தான் நடப்பாள். அதற்காக இரவு இரண்டே முக்கால் மணிக்கு வருத்தப்பட்டான் திலீபன்.

பையன் சொன்னதுபோல நேரத்திற்கு பழனி பேருந்து வரவில்லை. கால் மணி நேரம் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது. இவனோடு இன்னும் இரண்டு பேர் ஏறிக் கொண்டார்கள். பேருந்தினுள் இருபது தலைகள் இருந்தன. பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்தில் நுழைந்தபோது காலை ஐந்தரை ஆகியிருந்தது. நிறுவனரின் மகன் சக்திவேலை அலைபேசியில் அழைத்து ஈரோடு வந்து சேர்ந்துவிட்ட விஷயத்தைச் சொன்னான். சக்திவேல் பார்க்கில்தான் ரன்னிங் ப்ராக்டீஸ் செய்து கொண்டிருப்ப தாயும், இங்கே வந்துவிட்டால் இருவரும் சேர்ந்தே டூவீலரில் சென்று விடலாம் என்றும் கூறினான். திலீபன் ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து வெளிவந்து பார்க் நோக்கி நடந்தான்.

பார்க்கில் அதிகாலையிலேயே பெண்களும் ஆண்களு மாய் ஓடிக் கொண்டிருந்தார்கள். இதில் டாக்டர் அறிவுரைப் படி எத்தனை வியாதியஸ்தர்களோ என்று நினைத்துக் கொண்டான். சக்திவேல் தன் ஓட்டத்தை முடித்துக்கொண்டு டூவீலர் அருகில் வந்தான். வியர்வைப் பூக்களைத் துண்டால் துடைத்துக்கொண்டு டூவீலரைக் கிளப்பவும், திலீபன் பின்னால் அமர்ந்து கொண்டான். கலெக்டர் அலுவலகம் அருகே சந்தில் நுழைந்த சக்திவேல் ஒரு டீக்கடை முன்பாக டூவீலரை நிறுத்தினான். கடையினுள் கணிசமான கூட்டம் இருந்தது. காலை நேரத்திலேயே பெரிய வடைச்சட்டியில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருக்க ஒருவன் பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்தான். கடை கல்லாவில் முப்பத்தெட்டு வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். கடையினுள் இருந்த ஸ்பீக்கர்கள் கந்தசஷ்டி கவசம் பாடிக் கொண்டிருந்தன. சக்திவேல் இரண்டு டீ ஆர்டர் சொன் னான் பெண்மணியிடம்! “”வா தம்பி என்று புன்னகையுடன் சக்திவேலிடம் பேசியவள் “”ரெண்டு டீ என்று மாஸ்டரிடம் சத்தமாய் ஒலி எழுப்பினாள். திலீபன் “தினத்தந்தி பேப்பரை மேய்ந்தான். ஈரோடு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தை கடத்தல் என்ற செய்தி இருந்தது. தாயார் கண்ணீர் விட்டு அழும் காட்சியை புகைப்படத்தில் பிரசுரித்தி ருந்தார்கள்.

மாஸ்டர் கொண்டு வந்த டீ டம்ளரை பெற்றுக் கொண்டவன் புதிய திரைப்படங்களின் கலர் விளம்பரங் களைப் பார்த்தான். தேவி அபிராமியில் “வழக்கு எண்: 18/9 என்றிருந்தது. நல்ல படம் என்று ஜனங்கள் பேசிக்கொள்வது இவன் காதில் விழுந்திருந்தது. “மாலினியோடுதான் பார்க்க வேண்டும். மாலினி சம்மதம் தெரிவிப்பாளா? இல்லை அவளை வா என்று கூப்பிட தன்னிடம் தைரியம் இருக்கி றதா? தெரியவில்லையே என்று நினைத்துக் கொண்டான். சக்திவேல் இவனிடம் குனிந்து காதில் கிசுகிசுத்தான்.

“அந்த அம்மாளையும், மாஸ்டரையும், பஜ்ஜி போடுறவனையும் நல்லா ஒருமுறை பார்த்துக்கோ என்று சொல்லவும், இவனும் அவர்களைப் பார்த்துக் கொண்டான். டூவீலரில் செல்லும்போதுதான் சக்திவேல் திலீபனிடம் சொன்னான் விசயத்தை. “”பஜ்ஜி போட்டுட்டு இருந்தான்ல… அவன்தான் அந்தம்மாவோட பையன். அப்பா செத்து ஏழெட்டு வருஷம் ஆயிடிச்சு. டீ மாஸ்டரா இருக்கான்ல… அவன்தான் இப்ப அந்தம்மாவோட புருஷன். இந்தம்மா பையனும் அவனும் வாசவி காலேஜ்ல ஒண்ணா படிச்சவிங்க. ஒரு வருஷமோ என்னமோதான் படிச்சாங்க. அந்தப் பையன் தஞ்சாவூரு. இருவரும் நண்பர்களா பழக வீட்டுக்கு அடிக்கடி வரப் போக இருந்திருக்கான். முன்ன வண்டிக்கடை போட்டிருந்தாங்க ரயில்வே ஸ்டேஷன்கிட்ட…. இட்லி, தோசை வியாபாரம்தான். இந்தப் பையனும் உதவிக்கு கூடமாட நின்னான். அந்தம்மாகூட பழக்கமாயிடுச்சு.

“என்ன சார் சொல்றீங்க? பையன் தன்னோட நண்பனை கொலைதான செஞ்சிருக்கணும் நியாயப்படி பார்த்தா! என்றான் திலீபன்.

“அது உன்னைப்போல முட்டாள்கள் பண்ணுற வேலை என்றான் சக்திவேல்.

“என்ன சார் இப்படி சொல்றீங்க? என்று திலீபன் கேட்டபோது வண்டி திருவள்ளுவர் காப்பகத்தின் காம்பவுண்டினுள் சென்று பெரிய வேப்ப மரத்தின் அடியில் நின்றது.

“நீ மதுரையில் இருந்து கடைசி பஸ் பிடிச்சித்தான் தாராபுரம் வந்து சேரணும்னு திட்டம் போட்டேன் திலீபன். அன்னைக்கு உன்னை மருத்துவமனையில் பார்க்க வந்தப்ப ஒருத்தர் வாங்கி வந்த பழங்களை பிடுங்கி வீசினே ஞாபகம் இருக்கா? உன் அம்மா கிட்ட நான் மறுபடி பேசினேன் திலீபன். ரொம்ப அழுதாங்க. நீ சரியா பேசுறதுகூட இல்லைன்னு சொன்னாங்க! ஒண்ணரை மணி நேரம் தாரா புரத்துல ராத்திரில ஈரோடு பஸ்ஸுக்காக காத்திருந்தியே.

அப்போ என்ன நினைச்சே?.

“ஒரு பிச்சைக்காரன் இருந்தால்கூட பேச்சுத் துணைக்கு ஆவானேன்னு நினைச்சேன். சார்… ஒரு நாய் வந்துச்சு சார்… ஆனா என்கிட்ட வரலை! நேரத்தைப் போக வைக்க ரொம்ப சிரமப்பட்டேன் சார் என்றான் திலீபன்.

“ஒண்ணரை மணி நேரத்தைப் போக்க முடியாம, துணைக்கு ஆள் இருந்தால் தேவலைன்னு யோசிச்சு தடுமாறி வந்திருக்கியே… உன் அப்பா இறந்து எத்தனை வருஷம் ஆச்சு? நீயும் காப்பகத்துக்கு வந்து நாலு வருஷம் ஆச்சு. நீ வந்தபிறகு அம்மா தனிமையில எத்தனை நாள் தவிச்சிருப்பாங்க. ஒருநாளாச்சும் நீ சாப்பிட்டயாம்மான்னு உன் அம்மாவைக் கேட்டிருப்பியா? திலீபன் யோசனையில் ஆழ்ந்தான். ஒருநாள்கூட அம்மாவிடம் சாப்பிட்டியா? என்று கேட்கவில்லைதான். என்ன ஒரு மடத்தனம்?

“கேட்டதே இல்லங்க சார். காலையில சாப்பிடுவேன். கிளம்புவேன். நைட்டு போனதும் சாப்பிடுவேன், தூங்கிடுவேன் சார்… தப்பு என்மேலதான் சார். அம்மா பாவம் சார் என்றான் திலீபன்.

“அம்மா பாவம்னு என்கிட்ட சொல்லாதே திலீபன். உன் அம்மாகிட்ட மன்னிப்பு கேளு! அனாதைகளா யாரும் சிரமப்படக் கூடாதுன்னு தான் என் அப்பா பத்து வருஷத் துக்கும் முன்னால காப்பகம் ஆரம்பிச்சாரு. நீ உயிரோட இருந்தும் உன் அம்மா அனாதையா யோசிக்கக்கூட கூடாது இல்லையா! என்று சக்திவேல் சொல்லும்போது திலீபனின் கண்களில் கண்ணீர்

– இனிய உதயம் மாத இதழில் வெளிவந்த கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *