தனிமையிலே இனிமை காண முடியுமா…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 19, 2020
பார்வையிட்டோர்: 3,399 
 

“செல்வம் அண்ணா ! சீக்கிரம் வண்டிய எடுங்க.. வகுப்புக்கு நேரமாகுது….போன வாரமே நானு போறதுக்குக்குள்ள பாடம் ஆரம்பிச்சிட்டாங்க…

இனிமே லேட்டாக வந்தா வகுப்ப மிஸ் பண்ண வேண்டியதுதான்னு சொல்லிட்டாங்க…..”

“ஒரு நிமிஷம் வெயிட் பண்ணும்மா….தாத்தா பாத்ரூமில இருக்காரு….இப்ப வந்திடுவாரு…”

“இந்த தாத்தா ஏன் எப்பவும் கிளம்பற சமயம் பாத்துதான் பாத்ரூம் போணுமா …?”

“வயசானவர் இல்லையா பானும்மா…? நாமதான் கொஞ்சம் பொறுமையா இருக்கணும் …”

“சுத்த போர்… முதல்ல எங்கள இறக்கிவிட்டு வந்தப்புறம் தாத்தாவ பீச்சுக்கு கூட்டிட்டு போனா என்ன …???”

“பரத் … அம்மா கோவிப்பாங்க…. பெட்ரோல் வேஸ்டுதானே ….”

தாத்தா ஒருவழியாக கிளம்பி விட்டார்..

“சாரி ….கண்ணுங்களா…. தாத்தா உங்கள காக்க வச்சிட்டேன்னு கோபமா ??….”

பானுவுக்கும் பரத்துக்கும் தாத்தா மேல் ரொம்ப கோபம்….

தாத்தாவால் எப்பவும் டான்ஸ் கிளாசுக்கும் கராத்தே கிளாசுக்கும் லேட்தான்..

“பானு…. டான்ஸ் கிளாசில இன்னிக்கு என்ன ஆடப்போற……??”

பானு வாயே திறக்கவில்லை….

“பரத்…. உனக்கும் தாத்தா மேல கோவந்தானே ….?’”

“பின்ன என்ன தாத்தா …! கிளம்பற சமயம் பாத்துதான் பாத்ரூம் போறேன்னு லேட் பண்றீங்க…”

“பரத்…தாத்தாவ அப்படியெல்லாம் பேசக்கூடாது…”

செல்வம் அவர்களை கிளாசில் இறக்கிவிட்டுவிட்டு தாத்தாவைக் கூட்டிக்கொண்டு பீச்சுக்கு கிளம்பினான்.

“செல்வம் …..எதுக்குக்குப்பா எனக்கு பீச்சும் கீச்சும் எல்லாம்…?? பாவம் என்னால குழந்தைகளுக்கு தொந்தரவு…

நான் பாட்டுக்கு வீட்ல இருந்திருக்கலாம்….”

“தாத்தா… அப்படியெல்லாம் பேசாதீங்க…அம்மா கேட்டா வருத்தப்படுவாங்க….

பவித்ரா உண்மையிலேயே வருத்தப்படுவாள்… அவளைப் போல ஒரு மருமகள் கிடைக்க கொடுத்து வைக்கணும்…

‘ அப்பா…அப்பா…’ என்று அத்தனை ஆசையாய் கூப்பிடுவாள்…..

ஆனால் ஒரு டாக்டரானதால் அதிக நேரம் வீட்டில் இருக்க முடிவதில்லை…

ஆனால் பையன் மோகன் அவரிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வதில்லை…

பேசினால் எப்பவுமே அது சண்டையில் தான் முடியும்….

ஜெகன்னாதன் வாயை மூடிக்கொண்டிருப்பதே உத்தமம் என்று இருந்து விடுவார்..

ஜெகன்னாதன் அரசு பள்ளி தலைமை ஆசிரியராய் ஆக இருந்து ஓய்வு பெற்றவர்…..

நல்ல ஓய்வுதியம் வாங்குபவர்..

சொந்த மகனானாலும் யாருடைய பணத்திலும் வாழக்கூடாது என்பதில் உறுதியாய் இருப்பவர்….

பவித்ரா மோகனைவிட அவரிடம் ரொம்பவே ஆசையாயிருப்பாள்.

வாரம் இரண்டு தடவை டிரைைவர் செல்வத்திடம் அவரைக் கண்டிப்பாக பீச்சுக்கு கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று சொல்லியிருக்கிறாள்….

பானுவுக்கும் , பரத்துக்கும் நடனம் , கராத்தே வகுப்பு இருக்கும் போது அவர்களை விட்டு விட்டு அவரை பீச்சில் உட்கார வைத்து விடுவான்..

ஒரு மணிநேரம் கழித்து வந்து கூட்டிக்கொண்டு போவான்..

ஜகன்னாதனுக்கு இந்த வருஷம் எண்பத்தைந்து முடிந்து எண்பத்தாறு ஆகிறது…

கண்மங்கல்… ஒரு காது சரியாகக் கேட்பதில்லை… நடக்க கைத்தடி…. ஆனாலும் சமாளித்துக் கொள்கிறார்…

கௌரி இருந்த வரை அவர் தனக்கு வயதாகி விட்டதாய் நினைக்கவில்லை..

அவள் போய் இரண்டு வருஷம் தான் ஆகிறது.என்னவோ பத்து வயது கூடினமாதிரி……!!!!

தனிமை..தனிமை…தனிமை..

அவருடன் பொறுமையாய் உட்கார்ந்து பேச யாருக்கு நேரம் இருக்கிறது…..?

காலையில் குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் போது …

ஒருகுட்மார்னிங் தாத்தா….”

ராத்திரி படுக்கும்போது …

ஒரு ‘ குட் நைட் தாத்தா…’

இதுவே அவரது காதில் தேன் வந்து பாய்வது மாதிரி தோணும்..

‘ பாவம்…. குழந்தைகள்….படிக்கவே நேரம் போறல…இதில எங்கூட பேசுன்னா எப்படி….’ அவரே சமாதானப் படுத்திக் கொள்வார்…..

நாதனுக்கு அலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது பிடித்துத் தான் இருந்தது…

தனியாக எழுந்திருந்து நடக்க முடியாது… பேச்சுத் துணைக்கு ஆளிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்…..

***

ஒரு நாள் ….

“ஸார்…. சுண்டல் வாங்கிக்கிறீங்களா ….?? நல்ல சுத்தமா செஞ்சது…. உடம்புக்கு நல்லது ஸார்..”

கையில் ஒரு அலுமினிய பாத்திரம். … ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டிக் குடுக்க கொஞ்சம் பேப்பர்…

பையனுக்கு பத்து பன்னிரண்டு வயதிருக்கும்… கொஞ்சம் மெலிந்த உடல்…. பழைய ஜீன்ஸ் பேன்ட்…நீல நிற சட்டை….

அடர்த்தியான கேசம் காற்றில் அலைபாய்ந்தது….

என்னவோ பரத் ஞாபகம் வந்தது….

“இப்போ சுண்டல் சாப்பிட்டா உடம்புக்கு ஒத்துக்குமா தெரியலையே தம்பி….”

“ஆமா ஸார்….. அப்புறம் வீட்ல எதனாச்சும் சொல்லிட்டாங்கன்னா…?? நாளைக்கு வரும்போது வீட்ல கேட்டுகிட்டு வாங்க…”

“பரவாயில்லையே… ஒண்ணும் பண்ணாதுன்னு சொல்லாம , கேட்டுட்டு வாங்குங்கன்னு சொல்றியே….”

“ஸார்…..உன்ன மாதிரி எனக்குக் கூட ஒரு தாத்தா இருந்திச்சு…அதனால என்ன சாப்பிடலாம்….. கூடாதுன்னு எனக்கு தெரியும்…”

“இருந்திச்சுன்னா….இப்ப இல்லியா….?”

“காணாம போயிடிச்சு ….ஒரு வருஷமாச்சு…”

பையன் அழுது விடுவான் போலிருந்தது…..

“ஸார்… எனக்கு நேரமாச்சு…. அம்மா தேடுவாங்க…. நாளைக்கு வருவீங்களா….??”

“இல்லப்பா….. புதன் கிழமையும் சனிக்கிழமையும் மட்டும் தான் வருவேன்….”

“வர சனிக்கிழமை கண்டிப்பாக வந்திடுங்க….நா வரேன்…”

நாதனுடைய மனதில் ஒரு பூ பூத்த மகிழ்ச்சி..

“சனிக்கிழமை கட்டாயம் வந்திடுங்க ஸார் “

பையனின் அன்புக்குக் கட்டளை அவரது காதுகளில் எதிரொலித்துக்கொண்டேயிருந்தது….!!!

அவசரத்தில் பையனின் பேரைக் கேட்காமல் வந்துவிட்டது ஞாபகத்தில் வந்தது…

சனிக்கிழமை முதல் வேலையாக அவனுடைய பேரைக் கேட்க வேண்டும்….!!!!!

அன்று அவர் வழக்கத்துக்கு அதிகமான உற்சாகத்தில் இருந்தார்.

சனிக்கிழமைக்காக காத்திருந்தார்….

“தாத்தா…!! எப்போதும் போல லேட் பண்ணாதிங்க… எனக்கு இன்னைக்கு சீக்கிரம் போகணும்…”

“பானு….தாத்தா எங்கன்னு பாரு… நமக்கு முன்னாடி கார்ல உக்காந்திருக்காரு…”

செல்வம் குழந்தைகளைக் கிளப்பினான்….

பீச்சில் எப்போதும் உட்காரும் இடத்தில் உட்கார்ந்து கொண்டார்… கண்கள் அந்த பையனைத் தேடின..

அதோ வந்துவிட்டான்….

“ஸார்… வந்து நேரமாச்சா ?? இன்னைக்கு சுண்டல் செய்ய நேரமாச்சு ஸார்…. வீட்ல பேஜாராகிப் போச்சு…”

“ஏன் என்னப்பா..???”

“எப்பவும் போல எங்கப்பா ரகளை பண்ணிட்டாரு…

அத்த வுடு ஸார்…. நீங்க எப்பவும் தனியா வந்து உக்காந்திருக்கீங்களே….வூட்டுலயாருமில்ல…??”

“முதல்ல உம்பேரச் சொல்லு….”

“கதிரேசன்….கதிர்னுதான் எல்லாரும் என்னை கூப்பிடுவாங்க…”

“கதிர்….நீ ஏன் பள்ளிக்கூடம் போகாம சுண்டல் விக்கற…..”

“பள்ளிக்கூடம் போறேன் ஸார்….ஆறாப்பு படிக்கிறேன்…

பள்ளிக்கூடம் முடிச்சதும் அம்மா பண்ணி வைக்கிற சுண்டல பீச்சில் வித்திட்டு அப்புறம் போய் வீட்டுப்பாடம் எல்லாம் பண்ணனும்..”

“இப்போ சுண்டல் விக்காம எங்கிட்ட பேசிக்கிட்டு இருக்கியே… அம்மா அப்பா திட்ட மாட்டாங்களா…”

“ஸார்….ஒண்ணு சொல்லட்டா.. எனக்கு என் தாத்தான்னா உயிரு…

அவரு காணாமப் போனப்புறம் எனக்கு பீச்சுக்கு வரவே பிடிக்கல.. உங்களைப் பாத்ததுமே எங்க தாத்தா மாதிரி இருந்திச்சு…

உங்க கூடவே இருக்கணும் போல தோணுது…

நா உங்கள தாத்தான்னு கூப்பிடலாமா…..??

நாதனுக்கு தொண்டை அடைத்தது…

“கதிர்…. இனிமே நாந்தான் உன்னோட தாத்தா….”

கதிர் தாத்தாவை அப்படியே கட்டிக் கொண்டான்….

நாதனுக்கு புதனும் சனியும் சொர்க்கவாசல் கதவை திறந்து வைத்தது…

“கதிர் …நீ எங்கூட பேசறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…ஆனா உனக்கு என்னால ரொம்ப நஷ்டம்… நான் மொத்தமா எல்லா சுண்டலுக்கும் பணம் குடுத்திடறேன்…ஆனா சுண்டல வீட்டுக்கு கொண்டு போக முடியாது….. அதான் யோசிக்கிறேன்…நீ போகும் போது வழில வித்திடு…விக்காட்டாலும் நஷ்டம் வராது….!!!”

“தாத்தா … நீங்க ரொம்ப நல்ல தாத்தா…. ஆனா ஒரு சுண்டலுக்கு இரண்டு தடவை பணம் வாங்கமாட்டேன்….போற வழியில பாலவாடி இருக்கு… அவங்க கிட்ட கொடுத்துட்டு போயிடுவேன்…”

நாதனும் கதிரும் நிறையவே பேசினார்கள்…

***

கதிரேசனின் அப்பாவும் அம்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்….

கதிரின் அம்மா கலைச்செல்வி பத்தாவது வரை படித்தவள்.. மாணிக்கம் டிரைவராக வேலை பார்த்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் பள்ளிக்கூடம்…

அப்பா அம்மா சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்து கடலூரிலிருந்து சென்னைக்கும் பிழைக்க வந்து விட்டார்கள்…

மாணிக்கம் டிரைவராக நல்ல வேலை பார்த்துக் கொண்டிருந்தான்…

கலை நன்றாகப் படித்துக் கொண்டிருந்தாள்.. படிப்பை பாதியிலேயே நிறுத்தியது அவளுக்கு பிடிக்கவேயில்லை…

கதிரும் ஜோதியும் பிறந்தவுடனேயே அவர்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டாள்.ந

நல்லபள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டாள்…. கதிர் அம்மா மாதிரி படிப்பில் படு சுட்டி… எப்பவுமே வகுப்பில் முதல் மாணவன்.

திடீரென்று அவர்கள் வாழ்க்கை தடம் புரண்டது….

இரண்டு நாட்களாக தூங்காமல் கார் ஓட்டியிருந்தான்..

அன்று வேலைக்கு போக வேண்டாம் என்று நினைத்த போது அவசரமாய் காரை எடுத்துக் கொண்டு வரச்சொல்லி அவனுடைய ஓனர் சொல்லி விட்டார்…

பெரிய விபத்திலிருந்து தப்பித்தான்….. ஆனால் இரண்டு காலையும் விலையாய்க் குடுக்க வேண்டியிருந்தது…..

“அப்பா காலு போனதும் நிறைய மாறிட்டாரு….கோவத்தில கைல கிடக்கிறதெல்லாம் தூக்கி எறிவாரு……

அம்மா வேலைக்குப் போக ஆரம்பிச்சுது…

ஒரு வீட்ல குழந்தயப் பாத்துக்குற வேல…காலைல நேரத்தில எந்திரிச்சு போகணும்..

நானும் தங்கச்சியும் பள்ளிக்கூடம் போவணும்… அப்பாவையும் வேற பாக்கணும்…

அப்பத்தான் எங்க தாத்தா உதவிக்கு வரதா சொன்னாரு….

அப்பாவுக்கு அவங்கப்பாவ பிடிக்கவே செய்யாது… ஆனா அம்மா சரின்னுச்சு…

தாத்தா வீட்ல எல்லா வேலையும் செய்வாரு….

அப்பா நெறய குடிக்க ஆரம்பிச்சாரு…

வெளிய போக முடியாது… என்னதான் அனுப்பி சரக்கு வாங்கியாரச் சொல்லும் ..

‘சின்னப் பயல ஏண்டா அனுப்பறன்னு ‘ தாத்தா சண்ட போடும்….

எனக்கு அப்பாவப் பாத்தா பாவமாயிருக்கும்..

எப்படி இருந்தாரு தெரியுமா… ????

அதால ‘பரவாயில்லை தாத்தா ‘ ன்னு சொல்லிட்டு போய் வாங்கிட்டு வருவேன்…

ஒரு நா அம்மா வேலையிலிருந்து லேட்டா வந்திச்சு… சாப்பாடு போடும்போது அம்மாவோட முடியப் பிடிச்சு இழுத்து தலைய சுவத்தில மோதிட்டாரு… ரத்தம் வந்திருச்சு..

தாத்தா தடுக்கப்பாத்தாரு…. அவரையும் அடிச்சிட்டாரு..

‘ நானே தண்டச்சோறு.. .நீ வேற சேந்துட்ட… அவளுக்கு வந்த திமிரப்பாரு…. நேரம் காலமில்லாம திரிஞ்சிட்டு வரா…. முதல்ல உன்னத்துரத்தணும்….வெளிய போ…’ன்னு சொல்லி விரட்டி விட்டுட்டாரு….

பாவம் தாத்தா…. எங்க போனாருன்னே தெரியல…

விக்கி விக்கி அழுதான் கதிரேசன்….

***

ஒரு நாள் கதிர் அவனுடைய பாட புத்தகத்தை கொண்டுவந்தான்…

“தாத்தா ! நீங்க ஹெட்மாஸ்டரா இருந்தவர்தானே … எனக்கு ஆங்கிலம் வரமாட்டேங்குது…

ட்யூஷன் வைக்கிற அளவுக்கு வசதி இல்ல… நீங்க கத்து குடுக்கிறீங்களா …???

“Daffodils “poetry க்கு அர்த்தம் சொல்லிக் குடுங்க தாத்தா…..

தாத்தாவால் தன் காதுகளை நம்ப முடியவில்லை…

அன்று ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி இன்னும் மறக்கவில்லை…!!!??

***

பானுவுக்கு ஷேக்ஸ்பியர் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது.அப்பாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

நாதன் ஷேக்ஸ்பியரில் ஒரு அத்தாரிட்டி என்றே சொல்லலாம்…

“பானு.என்ன எழுதணும்.. இங்க வா.. சொல்லி தரேன்….”

மோகன் உடனே குறுக்கிட்டான்…

“அப்பா… இப்போ ஸிலபஸ் எல்லாம் வேற…அவ படிப்பு விஷயத்தில தலையிடாதிங்க… ட்யூஷன் வகுப்பில சொல்லித் தருவாங்க…”

அத்தோடு வாயை மூடிக்கொண்டு விட்டார்….

பள்ளியில் நடந்த ஒரு சம்பவம்…. மறக்க முடியாதது….

வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தின்

“Daffodils “கவிதை …

“I wandered lonely as a cloud ”

என்று ஆரம்பித்து ஒவ்வொரு வரியாக அவர் அர்த்தம் சொல்லிக் கொண்டே போவார்…

மொத்த வகுப்பும் மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல மயங்கி கிடந்தது..

சட்டென்று நிறுத்தியவர் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து இருந்த மூன்று பேரையும் எழுந்து நிற்கச் சொன்னார்….

“மூணு பேரும் முன்னால் வாங்க…..”

இந்த வகுப்பில் உங்கள நான் பார்த்ததில்லலையே….”

“ஸார்…மன்னிச்சிடுங்க….. நாங்க VII B ஸார்.. நீங்க ‘ Daffodils ‘ poem எடுத்தா கேட்டுக்கிட்டே இருக்கலாம்னு VII A பசங்க சொல்லுவாங்க…

அதனாலதான் ஒரு நாள் டீச்சர் கிட்ட சொல்லாம இங்க வந்து உக்காந்தோம்….ஸாரி ஸார்…”

“இந்த முறை மன்னித்து விட்டேன்… இது ரொம்ப தப்பு…

எப்போ வேணும்னாலும் வகுப்பு முடிஞ்சு வாங்க… நான் கத்துக் குடுக்கிறேன்….”

அனேகமாய் Wordsworth ன் ‘ Daffodils ‘ கவிதையைப் பள்ளியில் படிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்…

வொர்டஸ்வொர்த் தனது தங்கை டாரதியுடன் ‘ English lake district ‘ன் Ullswater என்னும் இடத்தில் நடந்து போய்க்கொண்டிருந்ந பொழுது பிறந்த அருமையான கவிதை….!!!!!!

தனிமையில் இருக்கும் போதேல்லாம் நாதன் அந்தக் கவிதையை அசைபோடுவார்…

“தாத்தா….’ vacant or in pensive mood ‘ தான் அர்த்தம் புரியல…”

“கதிர்…. சிலசமயம் நாம் தனியாக இருக்கும் போது ஒரு வெறுமையை உணருவோம்….

ஒன்றையும் நினைக்காமல்…..சில சமயம் வருத்தமாய்….. அந்த மாதிரி அவருக்கும் தோணியிருக்கு..

“தாத்தா … உங்களுக்கு எப்பவாச்சும் அப்படி தோணியிருக்கா ….?? ….”

“சில சமயம் தோணும்..”

“எல்லோரும் பிஸியா இருப்பாங்களா தாத்தா……???

…..உங்களோட பேச யாருக்கும் நேரமில்லையா….?”

“ம்ம்ம்ம்……”

“”எனக்கும் சிலசமயம் எல்லாரும் இருந்து கூட தனியா இருக்கா மாதிரி இருக்குதே தாத்தா …. வருத்தமா இருக்கு…… ஏன் தாத்தா…?

“நீயே சொல்லு….”

“ம்ம் ம்ம்…அப்பா அம்மாவ நினச்சு….தாத்தாவை நெனச்சு….தங்கச்சிய நினச்சு ….

தாத்தா போனமாதிரி எல்லாருமே என்னை தனியா விட்டுப் போயிடுவாங்களோன்னு நினச்சு பயம்மா இருக்கு….”

“கதிர்….நீ புத்திசாலி பையன்… எத நெனச்சும் வருத்தப்படாத ….என்னவேணும்னாலும் எங்கிட்ட கேளு….

நீ நல்லா படிக்கணும்… உன் படிப்புக்கு என்ன உதவி வேணுண்னாலும் கேளு….. நீயும் எனக்கு பிரபு மாதிரிதான்…..”

“நீங்களும் என் தாத்தா தானே…..”

நாதன் அவனுக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார்…

***

ஒரு வாரமாய் கதிர் வரவில்லை…. தாத்தாவுக்கு இருப்பே கொள்ளவில்லை…

“செல்வம்…. என்னோடே ஒரு பையன் உட்கார்ந்து படிப்பானே… பாத்திருக்கியா…? “

“தெரியுமே ….”

“அவன ஒரு வாரமா கண்ணுலயே காணமே… வீடு தெரியுமா …???”

“எல்லாம் இங்க பக்கத்து குப்பத்தில் இருக்கிறவங்க தான்…கேட்டா சொல்லுவாங்க…”

“செல்வம் கொஞ்சம் போய் கேட்டுப்பாரேன்… சொல்லாம இருக்க மாட்டானே ….”

“தாத்தா !!! கதிர் வீட்டு வாசல்ல ஒரே கூட்டம் !! அவங்கப்பா இறந்திட்டாராம்…”.

“செல்வம் …. எனக்கு அவன உடனே பாக்கணுமே….என்ன அவன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறயா …..”

“அம்மா கோவிப்பாங்களே….”

“நான் சொல்லிக்கிறேன்…. போலாம் …வா…”

கதிர் வீட்டு வாசலில் அந்த குப்பமே திரண்டிருந்தது …..

“தாத்தா ….!! தாத்தா !!! கதிர் ஒடி வந்து அவரைக் கட்டிக் கொண்டான்….”

கதிரேசனின் அம்மாவாயிருக்க வேண்டும்.. சின்னப் பெண்ணாகத் தெரிந்தாள்..

“வாங்கய்யா…. கதிர் உங்களைப் பத்தியே தான் நிதம் சொல்லிகிட்டே இருக்கும்…”

“தாத்தா … ஒரு வாரமா அப்பா முடியாம கிடந்தாரு….

ஆஸ்பத்திரிக்கு வரவே முடியாதுன்னிட்டாரு…. உங்க கிட்ட வந்து சொல்லக் கூட முடியல….”

நாதன் செல்வத்தை ஒரு ஓரமாய் கூப்பிட்டார்.

“செல்வம்…கையில எவ்வளவு ரூபா இருக்கு …..?”

“ஒரு ஆயிரம் ரூபா இருக்கு தாத்தா…”

“இப்ப குடு.. வீட்டுக்கு போய் எடுத்து தந்திடுறேன் ….”

பவித்ரா எப்போதும் செல்வம் கையில் ஆயிரம் ரூபாயாவது கொடுத்து வைத்திருப்பது வழக்கம்…

செல்வம் மறு பேச்சு பேசாமல் எடுத்துக் கொடுத்தான்.

“கதிர்… அம்மா கிட்ட கொடுத்து செலவுக்கு வச்சிக்க சொல்லு… இப்ப கைல இவ்வளவு தான் இருக்கு..

காலைல வீட்டுக்கு வா…. எவ்வளவு செலவானாலும் வாங்கிக்கோ…”

கலை ஆனமட்டும் மறுத்துப் பார்த்தாள்.. ஆனால் தாத்தா பிடிவாதமாய் கதிர் கையில் திணித்து விட்டுத் தான் கிளம்பினார்…

அடுத்த ஒரு வாரத்தில் என்னென்னவோ நடந்து விட்டது….

தாத்தாவுக்கு B.P. கூடிய விட்டது.. I.C.U. வில் சேர்க்க வேண்டியதாயிற்று….

தாத்தா ‘ கதிர்….. கதிர்…!!’ என்று பிதற்ற ஆரம்பித்து விட்டார்….

பவித்ரா செல்வத்தைக் கூப்பிட்டாள்…

“செல்வம் !! யாருப்பா கதிர்.. மூச்சுக்கு மூச்சு கதிர் பேரைத்தான் சொல்றார்….”

செல்வம் கதிர் பற்றிய எல்லா விவரமும் சொன்னான்….

“செல்வம்… ப்ளீஸ் ..

அந்த கதிரைக் கொஞ்சம் கூட்டிட்டு வரியா ….??

அப்பா ஒரு வாரம் கூட தாங்குவாரான்னு சந்தேகமாக இருக்கு… கதிர் கூட பேசணும்னு நினைக்கிறார் போலிருக்கு……”

கதிர் ஒரு வாரமாய் ஸ்கூலுக்கு போகவில்லை… செல்வம் போகும்போது வீட்டில் தான் இருந்தான்…

பவித்ரா கதிரை ICU வில் அழைத்துப் போனாள்…

“தாத்தா…. தாத்தா… நீயும் என்ன விட்டுப் போயிடாத தாத்தா…”

தாத்தா கதிரின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்…

இரண்டு நாளில் வார்டுக்கு டிஸ்சார்ஜ் பண்ணிவிட்டார்கள்…

ஒரு வாரமும் கதிர் தாத்தா பக்கத்திலிருந்து நகரவேயில்லை….

பள்ளிக்கும் போகவில்லை…

தாத்தா வீட்டுக்கு வந்து ஒரு வாரமிருக்கும்…

செல்வம் கதிரையும் அவனுடைய அம்மாவையும் தாத்தா பார்க்க வேண்டும் என்று சொல்லி கூப்பிட வந்தான்.

“தாத்தா எப்படிம்மா இருக்காரு….?”

“கதிர்….வாப்பா….தாத்தா உன்னைப் பாக்கணும்னு சொன்னாரு….கலை… இந்தக் கவரைப் பிடி….”

“அம்மா….இது….???”

“ஒண்ணுமில்லை….பயப்படாத… தாத்தா தன்னோட சேமிப்பெல்லாம் கதிர் பேருக்கு மாத்தியிருக்காரு….

இதில் பத்து லட்சம் ஃபிக்ஸட் டெபாசிட் கதிர் பேருக்கு போட்டிருக்கிறாரு…

ஆனா ஒரு கண்டிஷன்…. அவன் இருபந்தஞ்சு வயசு வரை எடுக்க முடியாது…நல்லா படிச்சு ஒரு வேலைக்கு வந்ததும் அதை எடுத்து எப்படி வேணா செலவு பண்ணலாம்…

இதில வர வட்டிய படிப்புக்கு உபயோகிக்கணும்னு எழுதி இருக்காரு….இந்தா பிடி…”

“அம்மா…வேண்டாம்மா … தாத்தா கதிரவனுக்கு எவ்வளவு பாடம் சொல்லிக் கொடுத்திருக்காரு தெரியுங்களா…அதுவே போதும்மா..”

“கலை…. எல்லாத்துக்கும் மேல உம்பையன் அப்பாவோட எவ்வளவு நேரம் துணையாக இருந்திருக்கான் …

இந்த உலகத்திலேயே விலை மதிப்பில்லாதது பலனை எதிர்பார்க்காம மத்தவங்க சந்தோஷத்துக்காக செலவழிக்கிற நேரம் தான்….

நாங்க கூட அவர சரியா புரிஞ்சிக்கல.. கதிர் ….உள்ள வா…. தாத்தாவ பாரு…”

தாத்தா கண்ணை மூடிப் படுத்திருந்தார்.. கதிரின் குரல் கேட்டதுமே கண்ணைத் திறந்து “கதிர்…வாப்பா..கிட்ட வா…”

அவனைக் கட்டிக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டார்…. அவருக்கு தெரியும்…. கதிர் அவனை ஏமாற்றமாட்டான்….

…. .. . ………. …….. …. ……. …… ……. ……… …… .. . . ….. ….. .

வகுப்பில் முழு அமைதி….. கதிரேசன் ஆங்கில வகுப்பு எடுக்கிறான் என்றால் கேட்கவா வேண்டும்………???

Wordsworth ன் ‘ Daffodils ‘ …..

“For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward
Which is the bliss of solitude;

“எப்போதெல்லாம் தனிமையாக உணர்கிறாரோ அப்போதேல்லாம்
“அவர் பார்த்த பொன்னிற Daffodils பூக்கள் கண்முன்னால் தோன்றுமாம்…..”

“ஸார்.. நாம அந்த மாதிரி பாக்கலைன்னா…”

“நாம பாக்குற எத்தனையோ காட்சிகள்… பிடித்த பாடல்கள்… நமக்கு ரொம்ப பிடித்த மனிதர்கள்….

யாரை வேண்டுமானாலும் நினைத்துப் பார்க்கலாம்…”

“நான் என்னோடே பாட்டியத்தான் நினைப்பேன்….”

“என்னோடே ரோஜா செடி….”

“எங்க பப்பு… எங்க வீட்டு நாய்க்குட்டி…”

“என்னோட friend விஜய்…”

“ஸார்… ஒரு தடவை நான் லீவுக்கு எங்க அத்தை வீட்டுக்குப் போயிருந்தேன்..

அங்க ஒரு குளம்….அது நிறைய நீல நிறத்தில் பூப்பூவா இருந்திச்சு…தண்ணியே தெரியல…. இப்ப கூட கண் முன்னாலேயே நிக்குது…”

“கேட்டீங்களா பிரகாஷ் சொன்னத…. நமக்குத் தெரியாம நம்ப வகுப்பில் ஒரு கவிஞர் இருக்காரு….”

வகுப்புக்குள் ஒரே கைதட்டல்….

“ஸார்…நீங்க எப்பவாச்சும் தனியா, வருத்தமா இருந்திருக்கீங்களா …. ..??”

“ஓ … நிறைய தடவை….!!!”

அப்போ நீங்களும் உங்களுக்குப் பிடிச்ச யாரையாவதுதானே நினச்சு பாப்பீங்க….??

“கண்டிப்பா…..”

“ஸார்…. அது யாருன்னு சொல்றீங்களா …….???

( நமக்கு தெரியும்தானே…..)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *