கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 2,680 
 

பக்கத்து வீட்டு இளம்பெண் குறிஞ்சி இறந்து போனதாகச் செய்தி வந்த போது அடித்துக் கொண்டு ஓடினான் கணேசன்.

ஓலைக்குடிசையின் குறுக்குக் கம்பில் தூக்குப் போட்டு பிணமாகத் தொங்கினாள். அவளின் அம்மா “ஓ” வென்று அலறித் துடித்து அழுது கொண்டிருந்தாள்.

மரணித்து விட்ட போதும் குறிஞ்சியின் அதரங்கள் கணேசனைப் பார்த்துக் கேலியாகச் சிரிப்பது போல தோன்ரியது.

உறவினர்கள் ஒவ்வொருவராய் வந்திகொண்டிருக்க, பெண்கள் குறிஞ்சி யின் தாயோடு சேர்ந்து ஓலமிட்டு அழ ஆரம்பித்தார்கள்.

“போலீஸுக்குத் தெரிந்தால் கண்டிப்பாக பிரச்சனை வரும். குறிஞ்சியை வெட்டி கூறு போட்டுத்தான் தருவாங்க. அதற்கு முன்னால் உடலை எரிச்சிடலாம்” அழுது கொண்டிருந்த குறிஞ்சியின் அப்பா குமரேசனிடம் ஒரு பெரியவர் சொன்னார்.

“ஏற்கனவே அவர் நொந்து போயிருக்கார். அவரைப் போட்டுத் தொந்தரவு பண்ணி எதற்கு? நம்மூர் வழக்கப்படி காரியத்தை சீக்கிரமா முடிச்சிடலாம்” என்றார் இன்னொருவர்.

“வெளி நாட்டுல இருக்கிற அவள் கணவன் வரவேண்டாமா? அவனுக்குத் தெரியப் படுத்த வேண்டாமா?” குமரேசன் கேட்க “சும்மா இரு பெரிசு அவன் துபாயிலிருந்து எப்போது வந்து கட்டைய எப்போது தூக்குவது?” அலுத்துக் கொண்டார் ஊர்ப் பெரியவர்.

“சும்மா பேசிகிட்டே இருக்காதங்கப்பா. முதலிலே பிணத்தை கீழே இறக்குங்க” என்று பஞ்சாயத்து தலைவர் சொல்ல, மற்றவர்களோடு சேர்ந்து குறிஞ்சியின் கழுத்திலிருந்து கயிற்றை கழற்றினான் கணேசன்.

அப்போது மூலையில் கிடந்த பெட்டியின் மேல் ஒரு காகிதம் படபடத்தது. அதை வேக வேகமாக எடுத்தான். அதன்மேல் ‘கணேசனுக்கு’ என்று எழுதி இருந்தது.

ஒரு கணம் விக்கித்துப் போனான். மனசு டமாரம்போல் வேகவேகமாக அடித்துக் கொண்டது. பொங்கி வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டான்.

வெளியே உறவினர்கள் துக்கத்தோடு ஈமக்கிரியைகள் செய்து கொண்டிருக்க, குறிஞ்சியின் தங்கையும் அங்கு வந்து விட அழுகை அதிகமானது.

அந்தக் காகிதம் நெஞ்சை சுட்டுக் கொண்டிருந்தது. ‘இதற்காகவா குறிஞ்சி தற்கொலை செய்து கொண்டாள்.உன் சாவிற்கு நானே காரணமாக இருந்து விட்டேனா?’ என்று எண்ணிய கணேசனுக்குத் தலையைச் சுற்ற ஆரம்பித்தது.

மெதுவாக வெளியே வந்து பக்கத்து வீட்டில் கொஞ்சம் தண்ணீர் வாங்கிக் குடித்தான்.

‘முழுமையாய் என்ன எழுதியிருப்பள் குறிஞ்சி?’ யோசித்தவன் அருகிலிருந்த குடிசையின் மறைவில் நின்று படித்தான்.

“கணேசா… உன்னை என் சகோதரனாக நினைத்துதான் நீ கல்லூரியில் அடித்த லூட்டிகளையும் கதைகளையும் சொல்லும்போது வெகுவாக ரசிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் நீ என்னை வேறு பார்வையில் பார்த்திருகிறாய் என்பதை நேற்றுதான் உணர்ந்தேன்.

வெளிநாடு போயிருக்கும் என் கணவர் நிறைய சம்பாதித்து முடிந்து ஊர் வரும்போது மாடி வீடு கட்ட வேண்டும், நிறைய தோப்புகளும் வயல்களும் வாங்க வேண்டும். ஒரு பெரிய பால் பண்ணை வைக்க வேண்டும் என்ற கற்பனைகளோடு அவருடைய வருகைக்குக் காத்திருந்தேன்,

உடம்பும் மனதும் ஒத்துப்போகாத சலனங்கள் ஏற்படுவது சாதாரணம் தான். எப்போது உன் பார்வைகள் என் உடம்பில் படுகிறது என்று உணர்ந்த போது நான் உன்னை என் கணவரோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றி விட்டது. பாழாய்ப்போன இந்த இளமையும் தனிமையும் என்னை சலனப்படுத்தி விட்டது.

எப்போது இன்னொருவனோடு என்னை இணைத்துப் பார்க்க மனது சம்மதித்து விட்டதோ அப்போதே தாலிகட்டிய கணவனுக்குத் துரோகம் செய்து விட்டதாக நினைத்தேன்.

இந்தத் தவறுக்கு முழுக்க உன்னைக் குறை சொல்ல முடியாத போதும் இனி என் கணவனுக்கு நான் துரோகம் செய்ய விரும்ப வில்லை என்ற காரணத்தால்தான் இந்த உலகை விட்டுப் போகிறேன்.

இருந்தாலும் கணேசா உனக்கும் தண்டனை உண்டு. என்னைச் சலனப் படுத்தியதற்கு உனக்குத் தண்டனைத் தர வேண்டாமா?

என் தற்கொலைக்கு காரணம் நீதான் எழுதி வைத்து விட்டு நான் இறந்திருந்தால் ஊராரால் நாம் இருவரும் கொச்சப் படுத்திதான் பேசப் படுவோம்.

அதனால், நீ எதைப் படித்தாலும், கடிதம் வாசித்தாலும் குறிஞ்சியின் மரணத்துக்குக் காரணமானவன் நான்தான் என்று உன் மனசாட்சி உன்னை வாட்ட வேண்டும், வதைக்க வேண்டும். இதை விட பெரிய தண்டனை தரமுடியாது. இனி நீ எந்தப் பெண்ணையும் ஏரெடுத்துப் பார்க்காதே…

குறிஞ்சி”

படிக்கப் படிக்க கணேசனுக்கு பதற்றம், பயம் வாட்டியது. தன் தவறுக்கு பிராயசித்தம் கேட்டு அங்கேயே மண்டியிட்டு அழுதான். அங்கு நிலவிய மரண ஓலத்தோடு கணேசனின் அழுகுரலும் சேர்ந்தது.

ஆனாலும் மனசாட்சி அவனை மன்னிப்பதாக இல்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *