ஜன்னல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 5,336 
 

(இதற்கு முந்தைய ‘பயம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

சபரிநாதன் பயத்தில் உழன்று கொண்டிருந்தார். ஆனால் சுப்பையாவோ பக்கத்து வீட்டில் ராஜலக்ஷ்மி பற்றிய சில யோசனைகளோடு உலவிக் கொண்டிருந்தான்.

போனில் பேசியபோது, இண்டர்வியூ வந்தபோது அவன் உணர்ந்த ராஜலக்ஷ்மிக்கும் இன்று அவன் பார்த்த ராஜலக்ஷ்மிக்கும் இடையில் பெரிய வித்தியாசம் தென்பட்டாற் போல இருந்தது. இன்று அவளிடம் தெரிகின்ற உற்சாகம் அவனுடைய வருகையை ரொம்பவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால்தான் சாத்தியம்.

அவனின் வருகையை அவள் இத்தனை தூரம் எதிர் பார்த்துக் கொண்டிருப்பதின் காரணம்? அவன் அறிவில் மின்னல் வெட்டியது. முன்பு அவன் பார்த்த ராஜலக்ஷ்மி சபரிநாதனின் இளம் மனைவி. இன்று அவன் பார்க்கும் ராஜலக்ஷ்மி ஸ்படிகமான இளம் நங்கை! சுப்பையா இந்த வேறுபாட்டை யோசித்துப் பார்த்தான். முரண்பாட்டில் கசட்டுத்தனம் எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. ரொம்ப யோசிப்பதை நிறுத்திக் கொண்டான்.

இடது பக்க அறையின் இடது சுவற்று ஜன்னல்களைத் திறந்துவிட்டான். சற்றுத்தள்ளி சபரிநாதனின் வீட்டுச் சுவரிலும் ஒரு ஜன்னல் திறந்திருந்தது. ஆனால் அவருடைய வீட்டில் எங்கோ ஒரு மன ஜன்னல் மூடிக்கிடப்பதாக தோன்றியதில் சுப்பையாவின் மனம் சின்னதாக ஒரு பெருமூச்சு விட்டது. எதற்கோ அவனின் மனம் கசிந்தது. அறைக்குள் நடந்துகொண்டே பாடினான்.

“அம்பரமே தண்ணீரே சோறே யறஞ் செய்யும் எம்பெருமான் நந்த கோபாலா! எழுந்திராய்….”

பதமான தொனியில் மிருதுவான குரலில் சுப்பையா பாடிய திருப்பாவை தன் வீட்டுச் சாப்பாட்டு அறைக்குள் காரட் சாம்பார் சாத்தை உருட்டி வாயில் போட்டுக் கொண்டிருந்த சபரிநாதனின் காதுகளில் விழுந்ததும் அவரின் உலகம் அப்படியே ஆடாமல் அசையாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டது! பாட்டும் சங்கீதமும் ராஜலக்ஷ்மிக்கு வெல்லம்! இது ஒரு அடுத்த சோதனை சபரிநாதனுக்கு!

சபரிநாதன் இந்தத் திருப்பாவையை பெருமாள் கோயிலில் மார்கழி மாதங்களில் கேட்டிருக்கிறார். ஆனால் பெருமாள் பாட்டுத்தானே பாடுகிறான் என்றெல்லாம் அவரால் சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை. முதலில் இப்படித்தான் யோக்கியமாக ஆரம்பிப்பான்கள், பிறகு இருக்கவே இருக்கிறது காதல் சினிமாப் பாட்டு!

சபரிநாதன் அவதி அவதி என்று சாப்பாட்டை அள்ளிச் சாப்பிட்டார். சுப்பையாவும் விடாமல் பாடிக்கொண்டே இருந்தான். அவர் எவ்வளவு பதட்டமானாரோ அதே அளவு அமைதியின் சொருபமாக ராஜலக்ஷ்மி இருந்தாள். பாட்டு அவளுக்குப் பக்கத்து வீட்டில் கேட்கவில்லை. அவளுடைய வாழ்க்கையில் கேட்டது.

அவசரமாக சாப்பிட்டு முடித்த சபரிநாதன் முதல் வேலையாக சமையல் அறையின் ஜன்னல் ஓரம் போய் நின்றார். சுப்பையாவுக்காக ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருந்த அறை ஜன்னலின் மேல் கதவுகள் திறந்திருந்தன. ஆனால் சுப்பையாவின் உருவம் தெரியவில்லை. அந்த ஜன்னல் ஓரமாக அவன் வந்து நிற்கும்போது, இந்த ஜன்னல் ஓரமாக ராஜலக்ஷ்மியும் எதேச்சையாக வந்து நின்றால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியும். ‘கிழுஞ்சது லம்பாடி லுங்கி’ என்றாகிவிட்டது சபரிநாதனுக்கு. இதை அவர் நினைத்தே பார்க்கவில்லை. உடனே அவருடைய ரத்தக் கொதிப்பு கொஞ்சம் அதிகமானது. உச்சந்தலையை நோக்கி ஒரு பயம் எழும்பியது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை!

இதை ஒரு பெரிய விஷயமாக நினைக்காமல் இருந்து விடலாம். ஆனால் அவரின் இயல்புக்கு இது ஒரு உலக மஹா விஷயம். இனிமேல் அவருடைய நினைப்பு பூராவும் ஜன்னலைத்தான் வட்டம் போட்டுக் கொண்டிருக்கும். வட்டம் போட்டுப் போட்டு வேதனையில் உழலும். வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாது! என்கிற பழமொழிதான் சபரிநாதனின் மனநிலை!

மாப்பிள்ளையைப் பார்க்க சபரிநாதன் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தார். பாடிக்கொண்டே சுப்பையா வெளியில் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான்.

“என்னலே, பாட்டா பாடுத நீ?” என்று கேட்கத்தான் சபரிநாதனுக்கு மனசுக்குள் ஆசை. ஆனால், “என்ன மாப்ள ஒரே மார்கழி மாசப் பாட்டு சத்தமாய் இருக்கு?” என்றார்.

“வாங்கோ மாமா… ஜஸ்ட் திருப்பாவை சொல்லிண்டிருந்தேன்.”

“எதை வேணுமானாலும் சொல்லு, ஆனா ஒத்தையில சொல்லாத. இந்த ஊர்க்காரனுங்க ஒரு மாதிரியா நெனைப்பானுங்க! பாடணும் போல இருந்தா இருக்கவே இருக்கு நம்ம பெருமாள் கோயில். அங்க போயி பாடு, புண்ணியமாவது கிடைக்கும்!”

“எனக்கு அவ்வளவு புண்ணியமெல்லாம் வேணாம் மாமா.” இதை சுப்பையா வேடிக்கையாகத்தான் சொன்னான். ஆனால் சபரிநாதனை இது லேசாக காயப்படுத்தியது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். உடனே கோபத்தை வெளிப்படையாகக் காட்டினால் அவருக்குத்தான் கெளரவக் குறைச்சல். நேரிடையான தாக்குதல் கூடவே கூடாது! நீர்மூழ்கிக் கப்பல்போல மறைந்து கிடந்து சரியான நேரத்தில் மர்ம அடி தரவேண்டும்! சபரிநாதன் பெரிசாகப் பசுத்தோல் போர்த்திக்கோண்டார்.

“வெளியிலேயா கிளம்பற?”

“ஆமா, ஜங்க்ஷன் வரை போயிட்டு வரலாம்னு…”

“உங்களோட அறை ஜன்னலைப் போய் திறந்து வச்சிருக்கே… அதைச் சொல்றதுக்குத்தான் வந்தேன்! அதை எப்பவுமே மூடி வைங்க மாப்ள. அது வழியா படை படையா ஏகப்பட்ட கொசு வரும்.”

“நோ ப்ராப்ளம் மாமா… ஊர்ல இருந்து கொசுவலை எடுத்திண்டு வந்துட்டேன்!”

மறைவாக நின்றபடி ராஜலக்ஷ்மி இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தாள். கிழசிங்கம் எந்த வேலையாக சுப்பையாவைப் பார்ப்பதற்காக போயிற்றோ அதில் தோல்விதான்! கிழச்சிங்கம் இளம் சிங்கம் பாடுவதை தடை செய்யப் பார்க்கிறது… ஜன்னலை மூடிவிடுவதற்கு முயற்சி பண்ணுகிறது! ஆனால் கிழச் சிங்கத்தின் பாச்சா எதுவும் பலிக்கவில்லை! இதில் ராஜலக்ஷ்மி என்ற புள்ளி மானுக்கு ஒரே சந்தோஷம். சந்தோஷம் இதனால் மட்டும்தானா?

முதலில் சுப்பையா ராஜலக்ஷ்மிக்கு முழு இளைஞனாகத் தெரிந்தான்; பிறகு மென்மையான நண்பனாகத் தெரிந்தான்; அப்புறம் கதை எழுதுகிற எழுத்தாளனாக; இப்போது அழகாக பாடுபவனாக… ராஜலக்ஷ்மிக்குள் ரொம்ப அழகாக ஒரு குஞ்சு பொரிந்து அதன் சின்ன இறக்கைகளை சிறகடித்துக் கொண்டது!

சுப்பையா மிம நேர்த்தியாக உடையணிந்திருந்தான். வெளியேவந்து மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்தான். அந்த சப்தம் கேட்டு பல வீட்டுத் திண்ணைகளிலும் ஜன்னல்களிலும் ஆண்களும் பெண்களும் எட்டிப் பார்த்தார்கள். காந்திமதியும் திண்ணையில் வந்து நின்றாள். சுப்பையா சின்னப் பையன்களைப் பார்த்து அன்புடன் கையை அசைத்துக்கொண்டே மோட்டார் பைக்கை ரொம்ப மெதுவாகச் செலுத்தினான். அவன் இயல்பாகத்தான் சபரிநாதன் வீட்டு வாசலைப் பார்த்தான். ஆனால் அதுவே சபரிநாதனுக்கு தப்பாகப் பட்டது.

“பாக்கான் பாரு” என்று முனகினார்.

அப்போது திடீரென காந்திமதியின் அப்பா கோட்டைசாமி சுப்பையாவை நிறுத்தி ஏதோ கேட்பதும் அதற்கு சுப்பையா ஏதோ பதில் சொல்வதும் தெரிந்தது. உடனே கோட்டைசாமி வீட்டிற்குள் வேகமாகப் போய் எதையோ எடுத்துக்கொண்டு வந்து மோட்டார் பைக்கில், சுப்பையாவின் பின்னால் ‘தக்கிமுக்கி’ ஏறி உடகார்ந்து கொள்ள, பைக் கிளம்பிச் சென்றது. அந்தக் காட்சியை தெருவே குதூகலத்துடன் பார்த்தது. காந்திமதியும் சுப்பையாவைப் பார்த்து நன்றியுடன் சிரித்தாள்.

சில சின்னப் பையன்கள் பைக்கின் பின்னேயே சிறுது தூரம் ஓடிவிட்டு வந்தார்கள். விட்டால் காந்திமதியே ஓடினாலும் ஓடுவாள் போல! சுப்பையா ஓட்டிச் செல்வதை அவள் பார்த்த பார்வை அப்படி…

சுப்பையாவின் பின்னால் உட்கார்ந்துகொண்டு இருபத்திநான்கு பல்லையும் காட்டிக்கொண்டு கோட்டைசாமி எங்கே கிளம்பிவிட்டான் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் வீட்டுக்குள் போக சபரிநாதனுக்கு இஷ்டமே கிடையாது. ஆனால் இந்த அல்ப விஷயத்தைப் போய் கேட்பதா என்ற சுய மரியாதையை விட்டுத் தரமுடியாமல் எரிச்சலோடு வீட்டிற்குள் போய் கதவை சப்தமாக சாத்திக்கொண்டார்.

சுப்பையா கோட்டைசாமியை பைக்கின் பின்னால் உட்காரவைத்து அவருடைய விருப்பப்படி ஜங்க்ஷன் கூட்டிக்கொண்டு போனது ரொம்ப ரொம்ப சின்ன விஷயம். சுப்பையா இல்லாவிட்டால் கோட்டைசாமி பஸ் பிடித்து ஒருமணி நேரத்தில் ஜங்க்ஷன் போய்ச் சேர்ந்திருப்பார். ஆனாலும் சுப்பையாவுடன் அவர் போனது திம்மராஜபுரம் வாசிகளுக்கு ரொம்பப் பெரிய விஷயமாகிவிட்டது.

சுப்பையா எல்லோருக்கும் மிக நல்லவனாகத் தெரிந்தான். இதுதான் சபரிநாதனுக்கு எரிச்சலை அதிகமாக்கியது. வந்து சேர்ந்த அன்றே பாகதகத்திமவன் பேமஸ் ஆகிவிட்டானே! இந்தக் கடுப்பை வாய் திறந்து காட்டவும் முடியாமல் இருந்ததுதான் சபரிநாதனின் பெரிய கடுப்பு. கடுப்பை ராஜலக்ஷ்மியிடம் காட்டலாம். ஆனால் இப்போதே அதைக் காட்டினால் அது அவரைக் காட்டிக்கொடுத்து விடும். அது தெரிந்திருந்தும் அவரால் காட்டிக் கொள்ளாமலும் இருக்க முடியவில்லை. திடீரென்று தண்ணீர் குடிக்க வருகிற மாதிரி சமையலறைக்குள் அவர் வந்தால் பக்கத்து வீட்டு ஜன்னலில் சுப்பையாவின் முகம் தெரிகிறதா என்று கவனிக்க வந்திருக்கிறார் என்று அர்த்தம்!

சபரிநாதன் இப்படி தண்ணீர் குடிக்கிற மாதிரி வரும்போதெல்லாம் ராஜலக்ஷ்மியின் வயிற்றுக்குள் சின்னதாக தீ எரியும். இத்தனைக்கும் சபரிநாதன் அவளுக்கு ஒரு உத்திரவு போட்டிருந்தார். சுப்பையா பக்கத்து வீட்டிற்குள் இருக்கின்ற நேரங்களில் அவள் சமையல் அறை ஜன்னல் பக்கம் தலையைக்கூடக் காட்டக்கூடாது. உத்திரவுதான் போட்டாகிவிட்டதே! நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதானே… அதென்ன அவ்வப்போது ‘குத்து வயித்து வலிக்காரன்’ போல முக்கலோடும் முனகலோடும் சமையலறைப் பக்கம் எட்டு நடை நடப்பது? அதனால் ராஜலக்ஷ்மி சமையலறை ஜன்னலை திடீரென பூட்டி வைத்துவிட்டாள். சபரிநாதன் சளைத்தவரா என்ன?

ஜன்னல் பூட்டப் பட்டிருந்ததை கண்டுகொண்டதாக காட்டிக்கொள்ளவே இல்லை! ராஜலக்ஷ்மிக்கு வேறொரு கதவு திறந்து கொண்டாயிற்று. அது இப்போதைக்குப் போதும் அவளுக்கு. ஆனால் அதேநேரம் சுப்பையாவின் அறை ஜன்னல் திறந்தே கிடந்ததில் அவ்வப்போது அதன் வழியாக சுப்பையாவின் இசை வெள்ளம் பாய்ந்து கொண்டேயிருந்தது. சில நேரங்களில் அவன் பாடாமல், மதுரை சோமு; மஹாராஜபுரம் சந்தானம்; விஜய் சிவா; சுதா ரகுநாதன் போன்ற வித்வான்களின் ஆடியோ சிடிக்களைப் போட்டு கேட்டுக்கொண்டிருந்தான். இதன் விளைவு, அவன் திம்மராஜபுரம் வந்து சேர்ந்த மூன்று நாளும் சபரிநாதன் பெரும்பானமையான நேரங்களில் வீட்டுத் திண்ணையில் ஒரு வாட்ச்மேன் மாதிரி உட்கார்ந்திருந்தார்! அதுவும் பகல் வாட்ச்மேன்!

அன்று ஞாயிற்றுக்கிழமை.

குளித்துவிட்டு அழகாக உடையணிந்து கொண்டு, சுப்பையா கேமிராவுடன் கேசவ பெருமாள் கோயிலுக்கு கிளம்பினான். கோயிலினுள் மணவாள மாமுனிகளுக்கு சின்னதாக தனிக்கோவில் இருப்பதைப் பார்த்து அதை போட்டோக்கள் எடுத்தான். தென்கலைக்காரர்கள் அத்தனை வசதியாக இல்லை என்பதை கோயிலின் நிலையைப் பார்த்து புரிந்துகொண்டான்.

கோயில் பட்டாச்சாரியார்கள் அவனை அன்போடு வரவேற்றார்கள். முதலில் பெருமாளை பாதாதி கேசம் சேவித்துக்கொண்டான். பிறகு கோயிலின் தனிச்சிறப்புகள்; முக்கிய உற்சவங்கள்; ஸ்தல புராணம்; போன்றவைகளைப் பற்றி பட்டாச்சாரியார்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டான். பிறகு கோயிலை அவனாகவே சுற்றிப் பார்த்தான். ஸ்தல விருட்சமான வில்வ மரத்தை போட்டோ எடுக்க கேமிராவை போகஸ் செய்து கொண்டிருந்தான்.

அப்போது, “என்னையும் ஒரு போட்டோ எடுப்பீங்களா?” என்று அழகிய மிருதுவான பெண்ணின் குரல் கேட்டது. சுப்பையா திரும்பிப் பார்த்தால் அங்கு ராஜலக்ஷ்மி புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *