கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 6,953 
 

(இதற்கு முந்தைய ‘சுப்பையாவின் வருகை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

சுப்பையா அசத்தலாக அவனுடைய மோட்டார் பைக்கில் திம்மராஜபுரம் வந்து சேர்ந்தபோது சபரிநாதன் வீட்டில் இல்லை.

நடவு ஆதலால் வயலில் நின்றார். அவருடைய அந்தஸ்த்துக்கு இப்படியெல்லாம் வந்து வயலில் நிற்க வேண்டியதில்லை. ஆனாலும் உடையவன் நிற்காவிட்டால் ஒரு முழம் கட்டைதான்! சபரிநாதனின் அபிப்பிராயம் இது.

வந்து சேர்ந்துவிட்ட நாற்றுக் கட்டுக்களை எண்ணிப் பார்க்கச்சொல்லி வெயிலுக்கு குடையை விரித்து அவர் நின்று கொண்டிருந்த நேரத்தில்தான் சுப்பையாவின் ஹீரோஹோண்டா வாசல் கதவு சாத்தப் பட்டிருந்த அவரது வீட்டின் எதிரில் கம்பீரமாக வந்து நின்றது.

எல்லா வீடுகளிலும் ஆண்களும் பெண்களும் அவரவர் வாசல்களுக்கு வந்துவிட்டார்கள். காந்திமதியும் விழுந்தடித்து ஓடிவந்து வாசலில் நின்றாள். மோட்டார் பைக் அதற்குள் அவள் வீட்டைத்தாண்டி சபரிநாதனின் வீட்டின் எதிரில் போய் நின்றது. என்ஜினை உடனே அணைக்காமல் மோட்டார் பைக்கின் மேல் வசீகரமாக அமர்ந்திருந்த சுப்பையாவைப் பார்த்து சொக்கிப்போனாள் காந்திமதி.

பைக் சப்தம்கேட்டு சமையல் அறையில் வேலையில் ஈடுபட்டிருந்த ராஜலக்ஷ்மி வேலைகளை நிறுத்திவிட்டுக் கவனித்தாள். சட்டென்று மோட்டார் பைக்கின் ஓசை அணைந்தது. அடுத்த நிமிஷம் வாசல் கதவு சன்னமாக தட்டப்படுகிற சப்தம் கேட்டது. ராஜலக்ஷ்மி வேகமாகப் போய் கதவைத் திறந்தாள்.

அவளுடைய கண் எதிரில் சுப்பையாவின் வடிவத்தில் மொத்த இளைஞர் உலகமும் நின்று கொண்டிருந்தது. எல்லா ஜன்னல்களும் பூட்டப் பட்டிருந்த வீட்டின் எல்லா ஜன்னல்களும் விரிய திறந்து விட்டாற்போல இருந்தது. ராஜலக்ஷ்மி மனசெல்லாம் பூரித்துப்போய் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

பின்பு சுதாரித்துக்கொண்டு, “வாங்க, வாங்க; உள்ளே வாங்க” என்றாள். காத்துக்கிடந்த அத்தனை உணர்வுகளோடும் சுப்பையாவை வரவேற்றாள்.

“மாமா இல்லையா?” சுப்பையா தயக்கத்துடன் கேட்டான்.

“அவங்க வயலுக்குப் போயிருக்காக. யாரையாவது அனுப்பி கூட்டியாரச் சொல்றேன். நீங்க உள்ளார வந்து மொதல்ல உக்காருங்க…” அவளின் அவசரம், சபரிநாதன் வந்து சேர்வதற்குள் சுப்பையா வீட்டிற்குள் வந்து ஆற அமர உட்கார்ந்து விடவேண்டும்! அப்போதுதான் ஆரம்பமே முதுமைக்கு சூடு பிடிக்கும்!

“நீங்க எனக்கு பக்கத்து வீட்டு சாவியைக் கொடுத்தாக்கூட போதும்.”

“அதைக்கூட நான் தேடித்தான் பாக்கணும். நீங்க உள்ளே வந்து ஒக்காருங்க..” ராஜலக்ஷ்மியின் அழைப்பில் இருந்த மென்மையான, அதேநேரம் அவசரமான தொனியைக் கொண்டிருந்த நட்பு அவனுக்குப் புரிந்தது. அந்த நட்பை அங்கீகரிக்கும் விதத்தில் “தேங்க்ஸ்” என்று சொல்லிய சுப்பையா வீட்டிற்குள் நுழைந்து கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.

“ஒரு நிமிஷம் இருங்க, இப்ப வந்திருவேன்” ராஜலக்ஷ்மி நீலாக்கா வீட்டிற்கு அவசரமாகப் போனாள். அவளுடைய பையனிடம் விஷயத்தைச் சொல்லி வயலுக்குப் போய் சபரிநாதனை கூட்டியாரச் சொன்னாள். அவன் ஆடி அசைந்து போய் விஷயத்தைச் சொல்லி சபரிநாதன் வீடுவந்து சேர எப்படியும் அரைமணி நேரமாவது ஆகும். பாவம் கெழம்; முதல் நாளே முதுமையின் மூஞ்சி அஷ்ட கோணலாகப் போகிறது!

ராஜலக்ஷ்மி நீலாக்காவின் வீட்டிற்கு வந்ததையும் போனதையும் தன் வீட்டுத் திண்ணையில் இருந்து பார்த்த காந்திமதிக்கு உடனே சபரிநாதன் வீட்டில் இல்லை என்பது புரிந்தது. பாரேன் இந்தக் கொடுமையை! அவளுக்கு சுப்பையாவுடன் கிடைக்க வேண்டிய தனிமை வாய்ப்பு இப்போது ராஜலக்ஷ்மிக்கு… காந்திமதி பொறாமையுடன் முகத்தை ஒரு நொடிப்பு நொடித்துக்கொண்டாள். சுப்பையாவின் மோட்டார் பைக்கை கொஞ்சம் பரவசத்துடன் பார்த்தாள். பிறகு மெதுவாக அதன் அருகில் வந்து நின்று அதன் பெட்ரோல் வாசனையை ஆசையுடன் நுகர்ந்தாள். பின்பு ஒரு சிறு குழந்தையைப்போல் அதன் ஹாண்டில்பாரை ஒரு விரலால் அன்புடன் தொட்டுவிட்டு வீட்டிற்குள் ஓடினாள்.

“பையன அனுப்பிச்சிருக்கேன். இப்ப வந்திருவாங்க… நீங்க உக்காந்திருங்க. சாவியை நானும் தேடிப் பாக்கிறேன்…” சொல்லிவிட்டு ராஜலக்ஷ்மி சமையல் அறைக்குள் போனாள். ஆனால் அவள் சாவியை எல்லாம் தேடவில்லை. வேகமாக சுப்பையாவுக்கு காபி போட ஆரம்பித்தாள். சமையல் அறையில் அவள் குறுக்கும் நெடுக்குமாக போய்க் கொண்டிருந்ததை கூடத்தின் நாற்காலியில் அமர்ந்தபடியே சுப்பையா கவனித்துக் கொண்டிருந்தான்.

அவனுள் ரொமான்டிக் பீலிங் தீயாய் மூண்டது.

பழுத்த பப்பாளி நிறத்தில் இருக்கும் இவளுக்கு அதிகமாகப் போனால் இருபத்தியேழு வயதுக்கு மேல் இருக்காது. ரசனை உள்ள எந்த ஆண் மகனும் இவளுக்காக கண்டிப்பாக ஏங்குவான். இத்தனை அழகான இளம்பெண் தன் மாமனாரை மணந்துகொண்ட பின்னணி என்னவாக இருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தான். அப்போது ஒரு சொம்பில் ராஜலக்ஷ்மி காபி எடுத்து வந்தாள்.

அவளுடைய கண்களில் சுப்பையா என்ற இளைஞனுக்கு முதல் முறையாக காபி போட்டுத் தருகிற பரவசம் நிறைந்து கிடந்தது. கையில் வைத்திருந்த இரண்டொரு பத்திரிகைகளை கீழே வைத்துவிட்டு, காபியை வலது கையால் வாங்கிக்கொண்டான். பத்திரிகைகளின் பெயர்களைக் கவனித்த ராஜலக்ஷ்மியின் மனம் ‘அட’ என்று ஆச்சர்யப்பட்டது.

“இதெல்லாம் எப்பவும் படிப்பீங்களா?”

“ஆமா ரெகுலராகவே வாங்குவேன்.”

“அப்படீன்னா இதயல்லாம் நான் படிச்சிட்டு உங்களுக்குத் தரேன்.”

“தாராளமா… ஏப்ரல் மாத இஷ்யூல என் கதை ஒண்ணுகூட பப்ளிஷ் ஆகியிருக்கு.” ராஜலக்ஷ்மிக்கு மற்றொரு ‘ஆஹா’… ஓ இவர் கதைகூட எழுதுவார்…

சுப்பையா, “கதைப் புத்தகம் எது வாங்கினாலும் எனக்கும் குடுங்க… நான் படிச்சிட்டுத் தரேன். வீட்ல நீங்க என்ன பத்திரிக்கை வாங்குறீங்க?” என்று கேட்டான்.

“மொதல்ல கொஞ்ச நாள் பத்திரிகை வாங்கிட்டு வந்து தந்தாங்க.. பொறவு வாங்கித் தர்றதை நிறுத்திட்டாங்க.”

“ஏன்?”

“இப்பத்தான வந்திருக்கீங்க… நேரம் வரும்போது நானே சொல்றேன்.”

சுப்பையா அவளிடமிருந்து இந்த பரிமாற்றங்களை எதிர்பார்க்கவில்லை. ஆனால் தான் வரப்போவதை ஒருவித எதிர்பார்ப்புடன் விரும்பிக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.

“ஹைதராபாத்திலிருந்தா பைக்ல வர்றீங்க?”

“நோ நோ… ட்ரெயின்லதான் வந்தேன். பைக்கையும் கூடவே லக்கேஜ் வேன்ல புக் பண்ணிப் போட்டு எடுத்து வந்திட்டேன். கையோட டெலிவரி எடுத்தேன். வழிலேயே பெட்ரோல் போட்டு எடுத்திட்டு வந்தேன்.”

“சரி, சாப்பாட்டுக்கு என்ன பண்ணப் போறீங்க?”

“இரண்டு வேளை கேண்டீன்ல சமாளிச்சிருவேன். சாப்பாடு ஒரு பெரிய விஷயமே கெடையாதுங்க…”

சாப்பாடு ஒரு பெரிய விஷயம் கிடையாது என்று சொன்ன ஒன்றுக்காகவே சுப்பையாவை அழைத்து ஒருநாள் பிரமாதமான சாப்பாடு ஒன்றைப் போடவேண்டும்… என்று நினைத்துக்கொண்டாள்.

“நீங்க கொஞ்ச நேரம் இருங்க.. அவங்க இப்ப வந்துருவாங்க. நான் போய் சமையல் வேலையை கவனிக்கிறேன்…”

காலியான காபி சொம்பை எடுத்துக்கொண்டு ராஜலக்ஷ்மி சமையலறைக்குள் விரைந்து விட்டாள். வீம்புக்காக இவரிடம் இன்னும் பேசிக்கொண்டு நிற்கலாம். ஆனால் முதல் நாளே இத்தனையையும் தாங்க மாட்டார் சபரிநாதன்! ராஜலக்ஷ்மிக்கு இருக்கிறது இன்னும் ஏகப்பட்ட அவகாசம்.

சுப்பையா ரிஸ்ட் வாட்ச்சில் மணி பார்த்தான். சரியாக பன்னிரண்டு. சபரிநாதன் சீக்கிரம் வந்தால் தேவலை போலிருந்தது. சபரிநாதன் வயலிலிருந்து வேக வேகமாக வந்து கொண்டிருந்தார். அசாத்திய கோபம் அவருக்கு. மாப்ளை ஒரு போன் கூடப் பண்ணாமல், அவர் பாட்டுக்கு கிளம்பி வந்துட்டாரு… என்னவோ மாமியார்(?) வீட்டுக்கு வருகிற மாதிரி!

தெருமுனையில் அவர் திரும்பியதுமே பார்வையில் பட்டது சுப்பையாவின் மோட்டார் சைக்கிள்தான். அதைச் சுற்றி சின்னப் பையன்கள் சிலர் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்தார்கள். ஆமா, பெரிய பென்ஸ் கார் நிற்கிறது! இதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம். பசங்களை வெறுப்புடன் விரட்டினார்.

அதே வெறுப்புடன் வீட்டிற்குள் நுழைந்தார். மாப்பிள்ளையிடம் அன்பாக எதுவும் பேசாமல், “பக்கத்து வீடு சும்மாதான் சாத்தியிருக்கு… அதுல போய் நீங்க இருந்துக்கலாம். ஏதாவது வேணும்னா நான் இருக்கும்போது என்னை வந்து கேளுங்க. அதுக்காக சும்மா சும்மா வந்து நிக்கவேண்டாம். நான் ஆயிரத்தெட்டு ஜோலிக்காரன்…!” என்றார்.

சுப்பையா நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தான். வீட்டிற்குள் ராஜலக்ஷ்மி தென்படுகிறாளா என்று ஒரு நோட்டம் விட்டுவிட்டு சபரிநாதன் வாசலிலேயே விறைப்புடன் நின்று கொண்டிருந்தார். எதேச்சையாக அழகர்சாமியின் வீட்டுப் பக்கம் பார்த்தார். திண்ணையில் காந்திமதி ரொம்ப ஒயிலாக நின்று கொண்டிருந்தாள். அவரைப் பார்த்தாலே நொடித்துக்கொண்டு வீட்டுக்குள் போய் விடுகிற சிறுக்கிக்கு இன்று வந்திருக்கிற கொழுப்பைப் பாரேன்! சுப்பையாவை ‘சைட்’ அடித்துக் கொண்டிருக்கிறாள்.

தோளில் கிடந்த துண்டை எடுத்து ஒரு உதறு உதறிவிட்டு வீட்டிற்குள் எரிச்சலுடன் சபரிநாதன் நுழைந்தார்.

சுப்பையா எவ்வளவு நேரம் வீட்டிற்குள் உட்கார்ந்த்திருந்தானோ தெரியவில்லையே! சபரிநாதனுக்கு ஆரம்பமே பிடிக்கவில்லை. காலையில் அவர் சொல்லிவிட்டுப் போயிருந்த காரட் சாம்பார் மணம் அவரது நாசியைத் துளைத்தது. ஆனால் அந்த வாசனையை அனுபவிக்கிற மன நிலையில் அவர் இல்லை. ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டே “ராஜி” என்று அழைத்தார். அவள் உள்ளே இருந்தபடியே “என்னங்க” என்றாள்.

“இங்க நீ வந்திட்டுப் போனா தேவலை.”

வியர்வையை ஒற்றிக்கொண்டே ராஜலக்ஷ்மி வேகமாக வந்தாள்.

“எப்ப வந்தான் அவன்?”

“எவன்?” வேண்டுமென்றே அப்பாவியாக எதிர் கேள்வி கேட்டாள்.

“எரிச்சலை கெளப்பற பாத்தியா! நூறு பயலா இங்கன வந்திட்டுப் போறான்? மாப்ள எப்ப வந்தான்னு கேக்கேன்…”

“மணியெல்லாம் பாக்கலை. பைக்ல வந்தாரு. உட்காரச் சொல்லிட்டு நீலாக்கா மவனை உடனே அனுப்பிச்சேன்.”

“நீ அவன்கிட்ட ஒண்ணும் பேசலையா?”

“அவருகிட்ட எனக்கென்ன பேச வேண்டிக் கெடக்கு?”

“எதுக்கு வீட்டுக்குள்ள உக்காரச் சொன்னே? திண்ணையில இருக்கச் சொல்ல வேண்டியதுதானே?”

“ஊர்ல இருந்து வர்ற ஒங்க மாப்ளையை அப்படிச் சொல்றது மரியாதையா தெரியலை எனக்கு.”

“ரொம்பத்தான் மரியாதை குடுத்தாகுது போல!”

“குடுக்க வேண்டியவங்களுக்கு மரியாதை குடுத்தாத்தான் நமக்கும் அது மரியாதை…”

“அப்படிப் போடு அரிவாளை! பேச்செல்லாமே ரொம்ப வேகமா வருது!”

சபரிநாதன் இதற்குமேல் பேச்சை வளர்க்காமல் நிறுத்திக் கொண்டுவிட்டார். ஆனால் அவருடைய மன இயக்கம் நிற்கவில்லை. அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் சுப்பையா வந்துவிட்ட பதட்டமும், பதட்டம் தந்த பயமும் மனசுக்குள் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அவனுடைய மோட்டார் பைக் வேறு இளமையின் உருவமாக அவரின் பயத்தை அதிகப் படுத்தியது. வாழ்க்கையில் இரண்டு பெரிய தப்பைச் செய்துவிட்ட வேதனையும் ஏற்பட்டது.

முதல் தப்பு ராஜலக்ஷ்மியை கல்யாணம் செய்து கொண்டது. இரண்டாவது தப்பு மகளுக்காக தாட்சண்யம் பார்த்து சுப்பையாவை பக்கத்து வீட்டில் தங்க வைத்திருப்பது. அவருடைய இந்தத் தப்புக்களால் வேற தப்பு ஏதாவது நடந்து விடக்கூடாதே! அந்தப் பயம்தான் பிசின் மாதிரி அவர் மனசில் ஒட்டியிருந்தது. பள்ளத்தில் விழுந்து கிடக்கும் யானையைப் போல இந்தப் பயத்துக்குள்ளேயே சபரிநாதன் சுப்பையா வந்து சேர்ந்த முதல் நாளே விழுந்து கிடந்தார்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *