ஓ…பாஞ்சாலியே…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 6,944 
 

மனம் முழுக்க கனம். கணேஷ் வந்து மொட்டை மாடியில் அமர்ந்தான். கூடவே தினேசும் அவன் அருகில் அமர்ந்தான்.

இருவரும் தர்மலிங்கத்தின் சொந்த அக்கா, தங்கை மகன்கள்.

கணேஷ் பத்து வயதாகும்போதே அவன் அம்மா விதவை. அது மட்டுமில்லாமல் ஏழை. கிராமத்தில் தாயும் மகனும் கஷ்டப்பட்டார்கள். கணவனைப் பிரிந்த துக்கம் அவள் கூடிய சீக்கிரமே சீக்காய்ப்போய்… விரைவிலேயே செத்தும் போனாள்.பையன் அனாதை.!

ஆதரவு. .?…..

தாய் மாமன் தர்மலிங்கம் அழைத்து வந்துவிட்டார்.

தினேஷின் கதை இன்னும் பரிதாபம். அம்மா, அப்பா ஊர்ப்பயணம் போக. . சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி கணவன் மனைவி விபத்து நடந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறப்பு. அள்ளி வைத்து விட்டு வந்த தர்மலிங்கம் இவனை அழைத்து வந்து விட்டார்.

இருவருக்குமே முதல் மாடியில் பெரிய அறை. தனித்தனி கட்டில், படுக்கை. கொஞ்சமும் சளைக்காமல் படிக்க வைத்தார். மாமன் ஆதரவில் இருவரும் நன்றாகப் படித்து ஏற்றத்தாழ்வு இல்லாமல் கைநிறைய சம்பாதிப்பு .

” என்ன கணேஷ் யோசனை. .? ” தினேஷ் அவனின் தீவிர சிந்தனையைக் கலைத்தான்.

” அத்தை, மாமா. . அனிதாவுக்கு ஏன் இன்னும் திருமணம் முடிக்கலை சொல்லு. .? ” அவன் கேட்டு தினேசைப் பார்த்தான்.

” தெரியல. ..?…..”

” அவளை, நம்மள்ல யாருக்கு முடிக்கிறதுன்னு குழப்பம் . அவளை எனக்கு கட்டி வச்சா நீ வருத்தப்படுவே. உனக்கு திருமணம் முடிச்சா நான் வருத்தப்படுவேன் நெனப்பு. யாரைத் தேர்ந்தெடுக்கிறதுன்னு வேற திணறல். மாமாவுக்குத் தலை பாரம் தாங்காமல் பெத்தவ விருப்பத்துக்கு விடுவோம்ன்னு அத்தையைத் தொட்டார். ‘ நமக்கு வேணாம் அந்த வம்பு. ரெண்டு புள்ளைங்களும் தங்க கம்பிகள் நீங்க யாரைத் தேர்நதெடுத்தாலும் எனக்குச் சம்மதம் ‘ ன்னு சொல்லி பாரத்தைத் திருப்பி அவர் மேலே சுமத்திட்டு தப்பிச்சிட்டாங்க. சரி. வாழப் போறவள் விருப்பத்துக்கே விட்டுடுவோம்ன்னு நெனைச்சி மாமா தன் ஒரே செல்லப் பெண் அனிதாவைத் தொட்டார். தாய் சொன்னதையே மகளும் சொல்லி தப்பிச்சுட்டாள். நடக்கிறபடி நடக்கட்டும்னு தாயும் மகளும் மௌனமாகிப் போக. .. மாமா பாடு திண்டாட்டம். ” நிறுத்தினான்.

தினேசுக்கு உண்மை நிலவரம் தெரிய என்ன சொல்வது என்று தெரியவில்லை.

கணேசும் சிறிது நேரம் யோசனை. பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு முடிவிற்கு வந்தான். உள்ளம் தெளிவானது.

” தினேஷ் ! ” அழைத்தான்.

” சொல்லு. .? ” இவன், அவனை ஏறிட்டான்.

” அனிதா திருமணத்துக்கு வழி கண்டுபிடிச்சிட்டேன். ”

” என்ன. .? ”

” அதுக்கு முன்னால நம்மைப் பத்தி சுயசோதனை. ! ”

தினேஷ் புரியாமல் பார்த்தான்.

” நாம மனசுல உள்ளதை மறைக்காம பேசறோம். .! ”

” சரி ”

” அனிதாவை நீ விரும்புறீயா. .? ”

” இல்லே ”

” அவளைத் திருமணம் முடிக்க சம்மதமா. .? ”

” நீ முடிச்சாலும் சந்தோசம் ”

” எனக்கும் அதே. .” என்று மனதில் உள்ளதை மறைக்காமல் சொன்ன கணேஷ். ..

” விடு. ! நம்மள்ல அனிதாவை முடிக்க யாருக்குத் தகுதி. .? ” கேட்டான்.

” நம்மை யாரும் குறை சொல்ல முடியாது ! ”

” இந்த சரி சமமான தராசு தட்டுதான் இங்கே சிக்கல். ! ” என்ற கணேஷ்…… ..

” இப்போ மாமா, அத்தை, அனிதா. .. கோயிலுக்குப் போறதுக்கு முன்னாடி என்ன நடந்தது சொல்லு. ..?” என்றான்.

சிறிது நேரம் யோசித்த தினேஷ். ..

” மாமா சட்டைப் பையில இரண்டாயிரம் ரூபாய் பணத்தைக் காணோம்ன்னு சொன்னார். நீ எடுத்தியா ? நீ எடுத்தியா ? ன்னு… வீட்டில உள்ள அத்தனைப் பேரையும் கேட்டார். இல்லேன்னு எல்லாரும் கையை விரிச்சதும் அங்யே இங்கே தேடித் பார்த்துட்டு அத்தை மகளோட கோயிலுக்குப் போயிட்டார். ..!” சிறிது நேரத்திற்கு முன் வீட்டில் நடந்ததைச் சொன்னான்.

” அனிதா திருமணம் முடிக்க இதுதான் துருப்புச் சீட்டு. இதை வச்சு ஒரு சின்ன நாடகம் ! ” கணேஷ் உற்சாகமாக சொன்னான்.

தினேஷ் அவனைப் புரியாமல் பார்த்தான்.

” அந்த பணத்தை நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தர் சுட்டதா மாமா காதுல போடணும். .”

” கணேஷ். .! ” துணுக்குற்று அவனைப் பார்த்தான்.

” அலறாம நான் சொல்லறதைக் முழுசா கேள். இப்படி யாராவது ஒருத்தர் மேலே ஒருத்தர் பழியைப் போட்டு விட்டோம்ன்னா எடுத்தவன் கெட்டவன். எடுக்காதவன் நல்லவன். மாமா எதையும் யோசிக்காம நல்லவனுக்குக் அனிதாவைத் திருமணம் முடிப்பார். ” கணேஷ் தன் திட்டத்தைச் சொன்னான்.

தினேசுக்கு இது பிடிக்கவில்லை. முகத்தைச் சுளித்தான்.

” இப்படி பழியைப் போட்டு அவமானப்படுறதை விட….. நீயோ நானோ ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்துக்கலாம். இல்லே, சீட்டு எழுதி குலுக்கி எடுத்து யாருன்னு முடிவு பண்ணிக்கலாம். ” சொன்னான்.

” அந்த வழியிலேயும் நான் யோசிச்சுட்டேன். அந்த வழியில… போனால் முடிச்சவனை விட்டு முடிக்காதவனை முடிச்சிருக்கலாமேன்னு பின்னால… அத்தை, மாமா, அனிதா மனசுல குறைவருமோன்னு பயமா இருக்கு. இக்கரைக்கு அக்கரைப் பச்சை. நாம இந்த வழி போனால் ஒருத்தன் அயோக்கியன் முடிவாகி மனசு வெறுத்துடும். அக்கரைப் பச்சை சமாச்சாரம் தலை தூக்காது. பிரச்சனை முடிஞ்சுடும். ”

தினேஷ் மௌனமாகி இருந்தான்.

” தினேஷ் !…. நமக்கு அன்பு, ஆதரவு காட்டி… இந்த நிலைமைக்கு கொண்டு வந்த குடும்பப் பொண்ணு திருமணம் நம்மால் தள்ளிப்போறது கொடுமை. இது சரி இல்லே, அதான் இந்த யோசனை. சிக்கலைத் திறந்து சொல்லி ‘மாமா ! எங்களுக்கு அனிதா வேணாம். தாராளமா வெளியில வரன் தேடி முடிக்கலாம் ! ‘ ன்னு சொன்னாலும் அவுங்க மனசு நிம்மதி படாது. எந்த விதத்திலாவது குறை படும். அதனால் இதுக்கு இதுதான் சரியான வழி. இன்னும் சொல்லப் போனால் நம்ம அத்தைப் பெண் காலாகாலத்துல வாழ… நாம செய்யிற ஏற்பாடு. இதை செஞ்சோற்றுக் கடனாக் கூட நாம நினைக்கலாம். நீ என்மேல பழி போட தயாரா. .? நான் ஏற்றுக் கொள்ள தயார் ! ” என்றான்.

நாகமும் சதையுமாய் வளர்ந்து இருந்து விட்டு எப்படி மனசு வரும். .? – தினேசுக்கு சங்கடமாக இருந்தது. நெளிந்தான்.

” விடு. உன் மேல நான் பழி சொல்றேன். உனக்கு சம்மதமா. .? ” கணேஷ் விடாமல் கேட்டான்.

தினேசுக்கு இதற்கும் விருப்பமில்லை. பரிதாபமாக விழித்தான்.

” பிரச்சனையை விடுங்கப்பா. .! ” தர்மலிங்கத்தின் குரல் திடீரென்று பின்னால் கேட்டது.

இருவரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.

அவர், விசாலம், அனிதா. .. சென்ற மூவரும் நின்றார்கள்.

” மாமா. ..ஆ ..! ” மெல்ல கூவி.. கணேஷ் , தினேஷ் எழுந்தார்கள்.

” பணம் இருக்கு. உட்காருங்க. நான் வச்ச சட்டைப் பையை விட்டுவிட்டு, வைக்காத சட்டைப் பையத் தேடி எல்லோரையும் கேட்டுட்டேன் தப்பு. மன்னிச்சுக்கோங்க. ” என்று சொல்லி அமர்ந்தவர்…..

” உங்க அன்பு, அக்கறை, எங்களுக்குத் தெரிஞ்சி போச்சி. உங்க ரெண்டு பேரையும் மாப்பிள்ளையாய் ஏத்துக்க எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க இல்லியே. ஒண்ணா பெத்துட்டோமேன்னு எங்களுக்கு வருத்தமா இருக்கு. இப்பவும் ஒன்னும் கெட்டப் போகலை. என் பொண்ணு மனசு வச்சா உங்க ரெண்டு பேரையுமே மாப்பிள்ளையாக்க வழி இருக்கு. ..” சொல்லி நிறுத்தினார்.

எல்லோரும் அவரைப் புரியாமல் பார்த்தார்கள்.

” அனிதாவை உங்க ரெண்டு பேருக்கும் மனைவியாக்கலாம். .! ” குண்டைப் போட்டார்.

” அப்பா. ..ஆஆ. .!! ” அனிதா அலறினாள்.

” மாமா. ..ஆஆ. !! .” இவர்கள் அதிர்ந்தார்கள்.

” என்னங்க இது. ..?!! ” விசாலமும் அலறி விழித்தாள்.

” எல்லோரும் நான் சொல்றதைக் கவனமா கேளுங்க. அன்னைக்கு…. மக்கள் வாழ்ந்து முடிச்சதைத்தான் இன்னைக்குப் புதுசு புதுசா கன்டுபிடிக்கிறோம். அன்னைக்கு மந்திரவாதி மாயாஜால கண்ணாடி…. இன்னைக்குத் தொலைக்காட்சி பெட்டி!. இன்டெர் நெட் , கம்பியூட்டர்! . அன்னைய புஷ்ப விமானம்.. விமானம்.! ஏன். .? குளோனிங் கண்டுபிடிப்பைக்கூட அப்பவே முடிச்சிட்டாங்க. காந்தாரிக்குக் கலைந்த கர்ப்ப உதிரத்தை வேதவியாசர் எடுத்து நூறு குடங்கள்ல நிரப்பி வளர்ந்தவர்கள்தான் கவுரவர்கள்!. அவுங்க விட்ட வில், அம்பு, பாணமெல்லாம் இப்போ ஏவுகணைகள்.! பாஞ்சாலி கதையை நாம் ஏன் நடைமுறைப் படுத்தக்கூடாது. .? ! ” பார்த்தார்.

” அறிவு கெட்டத்தனமா பேசாதீங்க. .” விசாலம் பாய்ந்தாள்.

” பொறு.! இது நம்ப கலாசாரம், பண்பாட்டுக்கு வேட்டு, சரி இல்லேன்னா… அடுத்த வழிக்கு வர்றேன். ஒண்ணா வளர்ந்த மூணு பேரும் அண்ணன், தங்கச்சிகள். எல்லோரும் திருமண வயசுல நிக்கறதுனால…. மூணு பேருக்கும் வெளியில… பொண்ணு, மாப்பிள்ளை பார்த்து முடிச்சி, நம்ம சொத்தை அவுங்களுக்குப் பிரிச்சி வைக்கலாம். சரியா. .?” முடித்தார்.

” அப்பா. ..” அனிதாவிற்குள் சட்டென்று பரவசம். கூவினாள்.

” அத்தான். .! ” மனசு நிறைய… விசாலம் தழுதழுத்தாள்.

” மாமா. .” கணேஷ், தினேஷ் உருகினார்கள்.

தர்மலிங்கம் எல்லோரையும் அன்பாய் பார்த்து, நேசமாய் சிரித்து, திருப்தியாய் அணைத்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *