உள்ளங்கள்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 3,223 
 

வைத்தி சொன்னதைக் கேட்ட சிங்காரவேலுவிற்கு அவமானம் தொற்றி ஆத்திரம் பற்றியது.

“அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டாங்களா…?!….” என்று வெளிப்படையாகவே உறுமி…. எரவானத்தில் இருந்த வீச்சரிவாளை எடுத்து தன் இடுப்பில் சொருகிக் கொண்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.

அதற்குள் காரியம் மிஞ்சிவிட்டது. சிங்காரவேலு கணிப்பு தவறி விட்டது.

இவன், அவர்களை அடையுமுன்னேயே…. அவர்கள் நாட்டாண்மை நடராசன் வீட்டில் படியேறி விட்டார்கள்.

‘வரட்டும்!’ கறுவி இடுப்பில் சொருகி இருந்த அரிவாளை தயாராக எடுத்து வைத்துக் கொண்டு அவர் பக்கவாட்டு சுவரோடு சுவராக ஒதுங்கினான்.

திண்ணையில் அமர்ந்திருந்த நாட்டாமை நடராசன் தன் வீட்டிற்கு வந்தவர்களை வியப்பாகப் பார்த்தார்.

முப்பது வயது அருண் அவரைப் பார்த்து….

“வணக்கம்!” சொன்னான்.

அடுத்து…. அவனோடு வந்திருந்தவளும் தன் பங்கிற்கு அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

“வணக்கம்!” என்று உரைத்து பதில் மரியாதை செய்த நடராசன் அவர்களை உற்றுப் பார்த்தார்.

“நாங்க இந்த ஊரு. நான் ஆறுமுகத்தோட மகன். இது சிங்காரவேலுவோட முதல் மனைவி மைதிலி !” அருண் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டான்.

“ஓஓ…. நீதான் அந்த பி.ஏ. பட்டப் படிப்பு படிச்ச பையனா..” கேட்ட நடராசன் அவனை வியப்பாய்ப் பார்த்தார்.

காரணம்…ஊரில் பையன் இப்படி ஒரு படிப்பு படித்திருக்கிறான் என்று கேள்வி பட்டாரேயொழிய ஆளைப் பார்த்ததில்லை.

“உட்காருங்க…” – எதிர் திண்ணையைக் காட்டினார்.

அமர்ந்தார்கள்.

“என்ன விசயம் சொல்லுங்க..?” ஏறிட்டார்.

“நானும் இவளும் சேர்ந்து வாழ நீங்க உதவனும், சம்மதிக்கனும்…” அருண் சுற்றி வளைக்காமல் நேரடியாவே விசயத்திற்கு வந்தான்.

கேட்ட இவளுக்குள் இடி இறங்கியது.

“என்னப்பா சொல்றே…?” அதிர்ந்தார்.

“ஆமாம் சார். சிங்காரவேலு அண்ணன் இவளை விலக்கி வைச்சு இன்னொரு கலியாணம் செய்து இன்னையோட அஞ்சு வருசமாகுது. அவர்… தன் பொண்டாட்டி, புள்ளைக்குட்டின்னு துணையோடு குடும்பமாய் இருக்கார். அனாதையாய் ஒரு குடிசை வீட்டுல இருக்கிற இவளுக்கு நான் துணையாய் இருக்கிறதாய் முடிவு பண்ணிட்டேன்.” அருண் எந்தவித தட்டுத் தடங்கல் பிசிறுமில்லாமல் தெளிவாய்ச் சொன்னான்.

கேட்ட இவருக்குள்தான் கலவரம் ! மறைத்துக் கொண்டு….

“இவளை இவ கணவன் எதுக்காக உருக்கி வேறொரு திருமணம் செய்திருக்கான் தெரியுமா…?” கேட்டார்.

“தெரியும் சார். பத்து வருசமா இவ உண்டாகலைன்னு அப்படி செய்திருக்கார். இதுக்கு நீங்கதான் பஞ்சாயத்து பண்ணி இருக்கீங்க…” என்றான்.

“ஆமாம். அந்த நிலை வராதுன்னு என்ன நிச்சயம்..?”

“குழந்தை இல்லாதது பெரிய குறை இல்லே சார். மேலும் அதுக்குக் காரணம் பெண் மட்டுமில்லே. ஆம்பளைக் குறையுமிருக்கு.!”

“ஆம்பளைக் குறையா…? இப்போ சிங்காரத்துக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கு.”

“இருக்கலாம். மருத்துவ ரீதியில் அவருக்குள் இப்போ மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். அதாவது…. ஆண் விந்து உயிரணுக்கள் எண்ணிக்கையில் குறைபாடு இருந்தால் பெண் கர்ப்பம் தரிக்க வாய்ப்பில்லே. அவர் இப்போ மருந்து மாத்திரை எடுத்து குணமாகி இருக்கலாம். அது வேற விசயம். !எனக்கு குழந்தை பிரச்சனை இல்லே. இருந்தா ஏத்துக்குவேன். இல்லேன்னா வருத்தப்படமாட்டேன்.” சொன்னான்.

நடராசனுக்குப் புரிந்தது.

“சரி. நான் இப்போ என்ன செய்யனும்…?” இருவரையும் பார்த்து கேட்டார்.

“நாங்க சேர்ந்து வாழ சம்மதிக்கனும். சிங்காரவேலு அண்ணன் குறுக்கே வரக்கூடாது.”

“உங்க ரெண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் இருக்கும் போலிருக்கே..?”

“ஆமாம். என்னைவிட இவள் ஆறு வயசு மூத்தவள்”

“இது உனக்கு உறுத்தலாய்த் தெரியலையா..?”

“இல்லே. காந்தி செய்திருக்கார். சச்சின் டெண்டுல்கர் செய்திருக்கார். இன்னும் கண்ணுக்குக் தெரியாமல் நிறைய பேர் இருக்காங்க…”

“சரி. இந்த விசயம் சிங்காரவேலுக்குத் தெரிஞ்சா விபரீதமாகுமே… !”

“அப்படி ஏதும் ஆகக் கூடாது என்கிறதுக்காகத்தான் உங்களிடம் சரண்”

புரியாமல் பார்த்தார்.

“ரெண்டு பேருக்கும் குழந்தை இல்லேன்னு புகார் வந்ததுமே…. ஊர் நாட்டாமை என்கிற ரீதியில் நீங்க ரெண்டு பேரையும் அழைச்சி விசாரிச்சு…தாலியைக் கழற்றி, விலக்கி வைச்சு, தனிக்குடித்தனம் வைச்சு விவாகரத்து வேலையை முடிச்சிட்டீங்க.

இது சட்டப்படி செய்யவேண்டிய காரியம். தவறுதலாய் செய்துட்டீங்க.

இன்னைக்கு இவள்… எனக்கு இப்படி ஒரு துரோகம் நடந்திருக்குன்னு போலீஸ்ல புகார் கொடுத்தாலோ, இல்லை சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலோ நீங்க, இவள் முதல் பகணவன் எல்லாரும் குற்றவாளி. உங்களுக்கு சிறை.

நீங்க இவங்க ரெண்டு பேர்கிட்டேயும் எத்தனை பேர் முன்னிலையில் சாட்சியோட எது எழுதி வாங்கி இருந்தாலும் செல்லாது.” நிறுத்தினான்.

“என்னப்பா சொல்றே…?!” நடராசனுக்குள் வயிற்றில் புளியைக் கரைத்தது.

“ஆமாம் சார். இதுதான் உண்மை. இப்போ அந்த விசயத்துக்கு நாம போக வேணாம். நாங்க போகப் போறதுமில்லே. இப்போ விசயம் என்னன்னா…. நாங்க அவருக்கு முறைப்படி விவாகரத்து நோட்டிஸ் அனுப்பி சட்டப்படி திருமணம் செய்துக்கிறதாய் முடிவெடுத்திருக்கோம். அதுவரை இவள் தனியாய் இல்லாமல் துணையாய் நாங்க சேர்ந்து தாலிகட்டாம வாழறதாய் இருக்கோம். அதுக்கு உங்க சம்மதம் வேணும். அண்ணன் சிங்காரவேலுவிடம் விசயத்தைச் சரியாய், பக்குவமாய் சொல்லி…ஆள் பிரச்சனை பண்ணாமல் அவர் முன் கோபத்தைத் தணிக்கனும்.” நிறுத்தினான்.

நடராசன் ஆடாமல் அசையாமல் அவர்களைப் பார்த்தார். பிறகு…

“உன் அம்மா, அப்பா சம்மதம்…..?” இழுத்தார்.

“அதெல்லாம் முடிச்சாச்சு. அவுங்களுக்குப் பரிபூரண சம்மதம். எந்த பிரச்சனையும் கிடையாது.”

இவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“சார் ! நாங்க உங்களிடம் வராமல் நேரடியாய் போலீஸ்ல சரணடையலாம். அவுங்க குப்பைகளைக் கிளறுவாங்க. விவகாரம். சங்கடம். இதை தவிர்க்கத்தான் நாங்க உங்களிடம் வந்திருக்கோம். நீங்க சம்மதிச்சி சிங்காரவேலு அண்ணனை சாந்தப்படுத்தீட்டீங்கன்னா…நான் சொன்ன இந்த விவாகரத்து எங்கள் திருமணமெல்லாம் முறைப்படி நடக்கும்.!” சொன்னான்.

“சரி !” நடராசன் மெல்ல தலையசைத்தார்.

மறைந்திருந்த சிங்காரவேலு சாந்தமாகி அரிவாளை சொருகிக்கொண்டு திரும்பி நடந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *