இராஜகுமாரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 2,534 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அந்தப் பெண்ணின் குரல் எனது காதில் விழுந்ததும் திடுக்கிட்டுப் போனேன். இரண்டாவது முறையாக இப்போது அவளின் குரலைக் கேட்கின்றேன்.

கணீரென்ற கம்பீரமான குரல், சுற்றாடலையே சற்று அச்சுறுத்தி தன்னைக் கவனிக்கின்ற உணர்வை உண்டாக்கு கின்ற குரல். எவரையும் தன் சுட்டுவிரல் அசைவுக்குத் தலை யசைக்கிற விதத்தில் ஒலிக் கின்ற குரல். அதிக வார்த்தைகள் பேசமாட்டாள். நாலைந்து வார்த்தைகளுக்குள்ளேயே சொல்ல வேண்டிய அனைத்துமே சொல்லப்பட்டு விட்டாற் போல கேட்கிறவர் முடிவு செய்து விடுவார்கள். அத்தகைய மந்திரச் சொற்கள்.

இத்தனைக்கும் இராஜ குமாரிக்கு புரட்டாசி மாதம் பிறந்தால் இருபத்தியொரு வயதுதான் ஆகும். ஆனாலும் வயதை மீறிய வளர்த்தி.

நேராக ஒரு கோடிழுத்தாற் போன்ற கம்பீரமான தோற்றம். நடையிலே எதையுமே புறந்தள்ளி விடுகிறாற் போன்ற மனதை வசீகரிக்கின்ற அலட்சியம். புன்னகையிலேயே முழுமையாகச் சிரிப்பு பரிமளிக்கின்ற யௌவன கர்வம்.

சூழ்ந்து நின்றவர்களை விலக்கிக் கொண்டே, இராஜகுமாரியின் குரல் வந்த பக்கமாகப் போனேன்.

இராஜகுமாரி கையில் செருப்போடு நின்றாள். முகத்தில் கொப்பளிக்கின்ற கோபம். என் மனதில் திகைப்பு சீறிற்று,

அவளின் எதிரே அரை வட்டம் அடித்து நின்ற பல்வேறு வயதினரான ஜனங்களின் முகத்திலே ஆச்சரியம். அவளின் முன்னே திகைத்துப் போய் நிற்கின்ற மூன்று இளைஞர்கள். விலையுயர்ந்த ஆடையணி, பணக்கார வீட்டு இளைஞர் களென்பதைச் சொல்லிற்று. கழுத்திலணிந்திருந்த தங்கச் சங்கிலிகள் வெய்யில் வெளிச்சத்திலே மினுங்கின. இவையெல்லாம் அவர்களின் திகைப்பிலே தமது இயல் பிழந்தாற் போல பார்த்தவர்களுக்குத் தோன்றியதென்பதை இவர்கள் மீது தொட்டு நின்ற அவர்களின் ஏளனப் பார்வை தெரியப்படுத்திற்று. இராஜகுமாரியை வியப் போடு பார்த்தவர்கள், அவளிற்காக நேயப் புன்னகையை முகத்தில் விளங்கச் செய்தனர்.

“உங்களுக்கு பஸ்ஸில் வைத்தே நான் செருப்பாலே அடித்திருக்க வேணும். பிழைவிட்டிட்டன். மூன்று பேர் ஒன்றாய்ச் சேர்ந்தால் ஒரு பெண்ணை என்னவும் செய்யலாம் என்று நினைச்சியளோ…. நாங்கள் இப்ப உள்ள நிலைமையிலை இப்படிக் காவாலித்தனம் செய்ய உங்களுக்கெல்லாம் எப்படி மனம் வருகுது?… இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லுற காலம் வராதென்று நினைக்காதீங்க…”

எரிச்சலோடு காறித் துப்பினாள்!

“பஸ்ஸால இறங்கினால இவளை வெருட்ட வேணுமென்று சொன்னது நீதானே.. உன்னாலை முடியுமென்றால் ஓரடி முன்னாலை வைச்சு வா பார்க்கலாம்..”

செருப்பை, முஷ்டி போல ஆட்டினாள்.

“இப்பிடியான காவாலிகளுக்கு ஆட்களுக்கு முன்னாலை வைச்சு செருப்பாலை அடிக்கிறதுதான் சரியான தண்டனை…” என்றாள் நடுத்தர வயதான பெண் ஒருத்தி.

அதையே சரியான தருணமாக எண்ணி அங்கிருந்து நழுவினார்கள் அவர்கள்.

“இஞ்சை பாருங்க.. இனி இந்த மாதிரிச் சேட்டை விடுகிறதை நிறுத்தி விடுங்க.. இல்லாவிட்டால் இதைவிட இன்னும் அவமானப்பட வேண்டிவரும்….” என்று கூறிக் கையிலிருந்த செருப்பை காலிலே அணிந்து கொண்டாள் இராஜகுமாரி.

என்னைக் கண்டு புன்னகையோடு அருகே வந்தாள்.

“எப்பிடி இருக்கிறீங்கள்?” என்றாள் கோபம் விடுபட்ட கனிந்த குரலில்.

“நல்லா இருக்கிறேன்…” சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன்.

“அன்றைக்கு அந்த விஷயம் என்ன மாதிரி முடிஞ்சுது…”

கையை லேஞ்சியால் துடைத்துக் கொண்டே சொன்னாள்: “பெரியம்மாவுக்குச் சரியான பயம். நான் மறுக்க மறுக்க தனியார் மருத்துவமனையில் கொண்டுபோய் நெஞ்சு நோ என்று சேர்த்திட்டா. இரண்டு நாள் ‘வார்ட்லே’ இருந்தது. மூவாயிரத்து இருநூறு ரூபா கட்டினது. அநியாயந்தானே…”

அந்தச் சம்பவம் நடந்த நாளை நினைவு மீட்டெடுத்து என் கண்களின் முன்னே நிறுத்திச் சென்றது.

“காசு அப்போ பெரிய விஷயமில்லை . ஏதேனும் அநியாயம் நடந்திருந்தால் நிலைமை எப்பிடி ஆகிப் போயிருக்கும்? அதுவும் பொம்பிளைப் பிள்ள… வெறிபிடிச்ச மிருகங்களுக்கு நடுவிலை அகப்பட்டால்… பெரியம்மா நல்ல புத்தியான வேலைதான் செய்திருக்கிறா…”

இராஜகுமாரி ஒன்றுமே பேசாமல் வழமையான புன்னகையுடன், பஸ்ஸை நோக்கி நடந்தாள்.

பல காலமாகவே எனக்கு அந்த அரசியல்வாதியைத் தெரியும். எல்லாரையும் அனுசரித்துப் போய் அவர்களைத் தனது கையில் போட்டுக் கொண்டு காரியங்களைச் சாதித்து வருபவர்… எனது நண்பன் குணசேகரன் ஸ்கூட்டரில் வரும்போது விபத்தில் சிக்கி மந்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தான். அவனது மகனது உத்தியோக விஷயமாய் அரசியல்வாதியைப் பார்த்துப் பேசும்படி என்னைக் கட்டாயப்படுத்திக் கேட்டிருந்தான். மறுக்க இயலவில்லை. அரசியல்வாதியிடம் சென்றிருந்தேன்.

அரசியல்வாதி பலதும் பத்துமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த போதுதான் இராஜகுமாரி தனது பெரியம்மா வுடன் அங்கே வந்தாள். நான் இராஜகுமாரியைக் கண்ட முதல் சந்தர்ப்பம் அதுதான்.

அரசியல்வாதி உடனேயே பேச்சைத் தொடங்கினார்: “என்ன, ஏதாவது பிச்சினையை மகள் தேடிக் கொண்டாளா? முகத்திலை சந்தோஷத்தையே காணேல்லை…”

தயவான குரலியே சொன்னாள் பெரியம்மா:

“அதெல்லாம் இல்லை. வீட்டுக்குப் பக்கத்திலை ஒருத்தன் இருக்கிறான்… மனக் கோளாறு உள்ளவன். இராஜத்தைப் பார்த்து எந்த நாளும் சிரிச்சு, விளங்காமல் என்னவோ சேட்டைக் கதைகள் சொல்லுவானாம். ‘அது’வும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்திருக்கு. முடியேல்லை. ஒருநாள் கன்னத்தைப் பொத்தி அடிச்சிட்டுது. அவன், ‘இவள்’ இயக்கம் என்று மொட்டைக் கடுதாசி எழுதிப் போட்டிட்டான். இரண்டு நாளிலை ஆர்மியும் பொலிசும் வந்து இதைக் கொண்டு போயிட்டுது. படிச்சுக் கொண்டிருந்த பிள்ளை … எல்லாப் பதிவும் வைச்சிருந்தது. நான் அழாத ஆட்களும் இல்லை. தொழாத இடமும் இல்லை. கடைசியிலை மூன்று நாட்களுக்குப் பிறகு பேதலிச்சுப் போய் வெளியிலை வந்துது…”

அரசியல்வாதியின் குரல் அவசரப்பட்டது:

“ஏன் என்னாவது பிழைபாடு நடந்ததோ?’

உறுதியாக மாறிற்று பெரியம்மாவின் முகம்.

“இல்லை… நிறைய பொம்பிளைப் பிள்ளைகளைப் பிடிச்சு வைச்சிருந்ததாம். நல்லா வெருட்டினதோடை சரி…”

அரசியல்வாதியின் முகம் சோர்ந்தது.

“அதெல்லாம் முடிஞ்சு போச்சுதென்றால் இப்ப என்னத் துக்காக வந்தனீங்கள்?”

“இன்றைக்கு அந்தக் கோளாறு பிடிச்சவன் இந்தப் பிள்ளையைக் கண்டதும், இரவைக்கும் இவளைத் தேடி ‘ஆர்மி’ வரும் என்று எச்சரிக்கை பண்ணி இருக்கிறான்… நீங்கள் இதை மேலிடத்திலை உள்ளவங்களுகுச் சொல்லி இதைக் காவாந்து பண்ண வேணும்…”

பெரியம்மாவின் குரல் இரந்தது. அந்தக் குரல் மேலும் தொய்வுற்று அரசியல்வாதியை மன்றாடிற்று:

“அத்தோடை இன்னொரு கஷ்டமும் நடந்திட்டுது… அதையும் நீங்கதான் சரிப்பண்ணித் தரவேணும்…”

“என்னது?”

“நேற்றுப் பின்னேரம் பஸ்ஸில் இந்தப் பிள்ளை வாறபோது, இதின்ரை ‘ஹான்ட்பாக்’கை அறுத்து, அதுக்குள்ளை இருந்த ‘ஐடெண்டிற்ரிகார்ட்’, ‘பொலிஸ்பதிவு’, காசு எல்லாத்தையும் ஆரவோ களவெடுத்திட்டாங்கள்…”

அரசியல்வாதியின் முகம் சிவந்தது. கோபத்தோடு எழுந்து, ஆவேசமாகக் கத்தினார்: “இங்கை நிற்காமல் உடனே போயிடுங்க. உங்களை இங்கை நிற்கவிட்டால் எனக்கும் கரைச்சல் வந்திடும். வேறே யாரவேனிட்டப் போங்க….”

நான் அரசியல்வாதியை அமைதிப்படுத்தினேன். மௌனம் விரிந்து பரவிற்று. தற்செயலாக இராஜகுமாரியைப் பார்த்தேன். அமைதியை இழந்து போயிருந்தது அவளது முகம். வலுக் கட்டாயமான பொறுமையோடு நின்றாள்.

“நிலைமைக்குத் தக்கமாதிரி நீயுண்டு உன்பாடுண்டு என்று இருக்காமல் எதுக்கு மோனை அப்பிடி இப்பிடித்திரியிறாய்?”

முதல் முறையாக வாயைத் திறந்தாள் இராஜகுமாரி:

“நான் அப்பிடி இப்பிடி என்று திரியேல்லை. ‘கொம்ப்யூட்டர்’ கிளாசுக்குப் போட்டு வந்தனான்…”

“கண்டறியாத கொம்ப்யூட்டர். மோனை உன்னைத் தெருவிலை வழியிலை ஐ.சி… பொலிஸ் பதிவு இல்லாமல் பிடிச்சுக் கொண்டு போனால் மீட்சி இல்லை. உனக்குத் தெரியுமோ? பெரிய பெரிய அரசியல்வாதிகளையே நடுரோட்டிலை வைச்சுப் பிடிச்சிடுறாங்கள்… இதெல்லாம் உனக்குத் தெரியுமோ?”

எனக்கு அவர்கள் இருவரையும் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அரசியல்வாதியைப் பணிவோடு கேட்டேன்:

“இதற்கு நீங்கள் நினைத்தால் ஏதாவது செய்யலாம்…” என் வார்த்தைகள் முடியும் முன் சள்ளென்று விழுந்தார் அவர்: “இவையளை என்ரை வீட்டிலை வைச்சு பாதுகாப்புக் கொடுக்கச் சொல்றீரோ நீர்?”

அவரைப் பற்றி வைத்திருந்த கொஞ்சநஞ்ச நல்லபிப் பிராயமும் எனது மனதிலிருந்து உடைந்து நொறுங்கிச் சிதறிப் போய்விட்டது.

அவர்களைப் பார்த்து, “ஐ.சி. தொலைந்து போனதை மூன்று போட்டோக்களைக் கொடுத்து பொலிஸில் ‘கொம் பிளையின்ட்’ கொடுங்கள். அந்த நேரம் அவர்கள் போட்டோ ஒட்டிய ‘ரிசீற்’ தருவினம். அது ஐ.சி கிடைக்கும் வரை பெறுமதியாக இருக்கும். பொலிஸ் பதிவு பெரியம்மாவின்ரை பேரிலை உள்ளதுக்கு கொப்பி கேட்டால் தருவினை….” என்று சொன்னேன்.

அரசியல்வாதி இறுகிப்போன முகத்தோடு இருந்தார். பின்னர் அடைத்த குரலிலே, “என்னால் ஏதாவது செய்ய முடியுமோ என்று யோசித்துப் பார்க்கிறேன்” என்றார்.

பெரியம்மாவைப் பார்த்தாள் இராஜகுமாரி.

“பெரியம்மா வாருங்க போவம்…”

இராஜகுமாரி வெளியே நடந்தாள். ராணுவ அணிவகுப்பு அணிநடையில் செல்பவள் போல இருந்தது அவளது கம்பீரமான நடை.

வெளியே வந்தவுடன் இராஜகுமாரி சொன்னாள்: “பெரியம்மா, இவையளென்ன என்ரை கழுத்தையோ வெட்டிக் கொண்டு போகப் போகினை… பயப்பிடாமல் இரவைக்கு நான் வீட்டிலை இருக்கப் போறன்… நீங்க ஒன்றுக்கும் யோசனை செய்யாதேங்க. என்ன வருகுதென்று பார்ப்பம்…”

பெரியம்மாவின் கண்கள் கலங்கி, குரல் அழுகையிலே நனைந்து தோய்ந்தது:

“தாய் தகப்பன் இல்லாத என்ரை குஞ்சு, உன்னை நான் எவ்வளவு கஷ்டப் பட்டு வளர்த்தனான்… போனமுறை அவங்கள் உம்மைக் கொண்டு போனபோது என்னாலை ஒரு கண் நித்திரை கொள்ள முடியயேல்லை. அந்த மூன்று நாளும் நெஞ்சு நோவோடைதான் நான் அலைஞ்சனான். நீர் வெளியாலை வந்த மூட்டம் உம்மடை முகம் அதைச்சு மாறிப் போயிருந்தது. இனி இப்பிடி நிலைமை வரவேணாமடா…”

பெருமூச்செறிந்தாள் இராஜகுமாரி.

அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

அதன் பின்னர் இராஜகுமாரியை, கொம்ப்யூட்டர் கண்காட்சி ஒன்றிலும், யாப்பா புத்தகக் கடையிலும் சந்தித்தேன். இராஜகுமாரி தனது சினேகிதி வசந்தமலரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தான்.

“இவ கலாக்ஷேத்ராவில் சங்கீதம் படிச்சவ. இங்கிலிஷ் சாஸ்திரிய சங்கீத நோட்டைப் போல, கர்நாடக சங்கீதத் திற்குச் செய்ய முடியுமென்றும், கொம்ப்யூட்டர் மூலம் சில ஒழுங்கமைப்பில் கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக் கொள்ளலாமென்றும் சொல்றா. எனக்குக் கொம்ப்யூட்டரிலை நல்ல நம்பிக்கை. ஆனால் சங்கீதம் நுண்கலை, கற்பனையில் மேலும் சிறப்பைத் தருகிற சாரம் இராது… சக்கைதான் இருக்கும்…”

அவள் முகத்தில் அறிவு பெருமிதமாய் மலர்ந்தது. அந்த இருபத்தொரு வயது நங்கை என் எதிரே பன்முகத் திறமையின் அடையாளமாய் விஸ்வரூபமெடுத்தாள். பிரமிப்போடு அவர்கள் இருவரையும் பார்த்தேன். அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

இருமாதங்களின் பிறகு கொள்ளுப்பிட்டிச் சந்தியில் நின்றபோது மறுகரையிலிருந்து எனக்குக் கைகாட்டிய ஒரு பெண்ணைத் தற்செயலாகக் கண்டேன். வசந்தமலர் அவள்.

அவள் நின்ற இடத்திற்கு ஆர்வமாகப் போனேன்.

“இராஜகுமாரி…” என்று நான் தொடங்க வசந்தமலர் குறுக்கிட்டாள்:

“போனமாதம் அவளைத் திடீரெனக் கூட்டிச் சென்றார்கள். ஐந்து நாளாகியும் விடவில்லை. எங்கே என்றும் தெரியவில்லை. பெரியம்மாவும் நானும் அலைந்து திரிஞ்சம்… ஞாயிற்றுக் கிழமை பெரியம்மாவுக்கு நெஞ்சடைப்பு வந்தது…”

விம்மினாள் வசந்தமலர்.

“என்ரை மடியிலை தலைவைச்சுப் படுத்தவ… எழும் பேல்லை. போயிட்டா…”

வாயை மூடியவாறு விசும்பினாள்.

“ஒருவாரம் சென்றபின் இராஜகுமாரி திடமான மனத்தோடை வெளியிலை வந்தா. நான் தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னேன். அழுகை, கதறல் ஒன்றுமில்லை. பெரியம்மாவின்ரை போட்டோவை மட்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தா…. யாரோடையும் கதைக்கேல்லை…”

என் மனம் பரபரத்தது.

“இப்ப இராஜகுமாரி எங்கை இருக்கிறா?” என்று கேட்டேன்.

வசந்தமலர் அமைதியாக என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் எனக்குத் தெளிவான பதிலைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

– 1998

– விநோதினி (பதினொரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, விண்மீன் பப்ளிகேஷன், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *