அருகருகே வெகு தொலைவில்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2019
பார்வையிட்டோர்: 8,245 
 

வேல எல்லாம் முடிச்சாச்சா. போகும் போது ஞானத்துக்கிட்ட சொல்லிட்டுப் போ. பக்கத்து வீட்டு மாமி பாக்கணும் னு சொல்லிச்சின்னு.

உங்க ரெண்டு பேருக்கும் வேற பொளப்பில்ல போ. வருசக் கணக்குல இதே பாட்டு தான்.

வேலைக்காரி சலித்துக் கொண்டே சென்றாள்.

கோமளி மாமி ஈசிச் சேரில் சாய்ந்த படியே யோசிக்க ஆரம்பித்தாள். அவளுக்கும் ஞானத்துக்கும் தான் எத்தனை ஒற்றுமை. எண்பது வயதாகி விட்டது. இருபது வயதில் திருமணத்திற்கு பின் குடி வந்த சொந்த வீடு இது.

பக்கத்து வீட்டு ஞானம் இரண்டு மாதங்களுக்குப் பின் குடி வந்தாள் போல. இரண்டு கணவர்களும் வேலைக்குச் சென்றவுடன் தினமும் வெட்டி அரட்டைதான்.

வீடு ஆதம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்ததால் கோவிலுக்கு தினமும் போக முடிந்தது. பாவம் ஞானத்துக்குத் தான் சர்ச் ரொம்ப தூரம்.

வரிசையாகக் குழந்தைகள் பிறந்த பிறகு அந்த அளவு நேரம் கிடைக்காவிட்டாலும் இரவு உணவுக்குப் பின் தினமும் ஒருமணி நேரம் வாசலில் குழந்தைகளின் அட்டகாசம் தான்.

நானும் ஞானமும் எத்தனை முறை துணி காயப் போட்டுவிட்டு மொட்டை மாடியிலேயே மதிய உணவு சாப்பிட்டிருக்கிறோம். அவளுக்கு ரோஜாப் பூ ரொம்பப் பிடிக்கும் என்பதால் வாசலிலேயே தோட்டம் போட்டிருந்தாள். எங்கள் வீட்டு சைட் கனகாம்பரம்.

காய்கறிக்காரி, கீரைக்காரி, பூக்காரி எல்லோரும் அவள் வீட்டுகேட்டினுள் தான் கூடையை இறக்கி விப்பார்கள்.

இருவர் வீட்டு வாசலில் உள்ள தோட்டத்தையும் ஒரு சிறிய முள் கம்பி வேலி தான் பிரிக்கும். அதுவும் அவர்கள் வீட்டில் ஜானி (நாய்க்குட்டி) வந்த பிறகு தான். எல்லாம் இந்த சகாயம் பயலின் வேலை தான்.

மாமி மன ஓட்டத்தை வாய் விட்டு புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

அவ மூத்த பொண்ணு மேரி ரொம்ப சமத்து. எப்ப பாத்தாலும் உஷா கூடவே விளையாடிண்டு இங்கெயே கெடையா கெடக்கும். காயத்ரிக்கு சகாயம் லெட்டர் கொடுத்துட்டான்னு கோச்சிண்டு எழுப்பின காம்பவுண்ட் சுவர் இப்போ வரைக்கும் யமனா நிக்கறது.

நம்ப வீட்டுவாசல்ல நின்னு கூப்பிட்டா கூட அவளுக்கு காதும் கேக்கறதில்ல.

கொழந்தேள் எல்லாம் அவா அவா வேல கல்யாணம் னு கிளம்பி போயாச்சு. கடைசியா ஞானத்தோட ஆத்துக்காரர் ஜோசப் சார் சாவுக்குப் போனது. ஆச்சு இதோட நாலு வருஷம் ஓடிப் போச்சு.

ஞானத்துக்கு ரெண்டும் ஆபரேசன் ல பொறந்த குழந்தைகள். பிரசவத்துக்கப்பறம் அவள் ரொம்பவே குண்டாயிட்டா. எனக்கு என்ன குறைச்சல். நன்னா ஓடி யாடி வேலை செஞ்சிண்டிருந்தவதான். இப்போ அஞ்சாறு வருசமா தான் முட்டிவலி அதிகம் ஆனதால வாசப்படியத் தாண்ட பயமா இருக்கு.

நான் மட்டும் தனியா சமச்சு சாப்பிடறது கஷ்டமாத் தான் இருக்கு. என்ன பண்ணறது. உஷா கூட வெளி நாட்டுக்கு போக மனசு ஒப்பல. காயத்ரிகூட பாம்பே போலாம் னா அவா வீடுகள் லாம் சுத்தி சுத்தி வர மாதிரியே இருக்கு. சமயல் கட்டுலேர்ந்து இந்த பக்கம் நாலு எட்டு நடந்தா ஹால். ரெண்டு எட்டுல பெட் ரூம். அத ஒட்டியே கழிப்பறை. அதுவே குளிக்கிற இடமும்கூட. இந்த வீடு மாதிரி நீளமா இருந்தா தேவல.

எனக்கு புத்தி போற வர இங்கேயே இருக்கேன். அப்புறமா உங்க வீடுகள்ல கொண்டு வச்சிக்கோங்கோன்னு சொல்லிட்டேன். பிடிவாதம்னு திட்டிட்டு மாசா மாசம் மைலாப்பூரிலேருந்து மச்சுனன் அம்பிய சாமான் கொண்டு போடச் சொல்றா.

காலம்பற எந்திரிச்ச வுடனே பண்றது தான் வேல. ஏதோ சமச்சு நார்க் கட்டில் பக்கத்துல வச்சிடுவேன். அதுக்கப்புறம் ஈசிச் சேரும் நார்க்கட்டிலும் தான் இருப்பிடம். மாடிப்படி ஏறி மொட்டை மாடிக்கு போனதெல்லாம் கதையா போன ஜென்மத்துல பண்ணினாப்புல இருக்கு.

பாவம் ஞானம் என்ன பண்றாளோ. வேலக்காரி சொல்ற தகவல்தான். அவளால சமக்கவே முடியலயாம். இவளுக்குதான் காசு கொடுத்து சமயலுக்கு வச்சிருக்காளாம்.

வாசலில் யாரோ வருவது தெரிந்தவுடன் மெதுவாக எழுந்துபார்த்த கோமளி மாமிக்கு சந்தோஷம். வந்திருப்பது ஞானத்தின் பெண் மேரியல்லவா.

மேரி ஆரம்பித்தாள். மாமி இப்பல்லாம் நானும் சகாயமும் போனில் பேசும்போது அம்மாவின் புலம்பல் தாங்க முடியவில்லை. ஒரே பிடிவாதம். உடம்பு முடியாமல் தனியாக ஏன் அவஸ்தை பட வேண்டும் என .கூப்பிட்டால் வர மறுக்கிறாள்.

மாமிக்கு தான் என்ன பத்தி நல்லா தெரியும். அவங்க கிட்ட கேளு சொல்லுவாங்க என்கிறாள். அவளாலும் இங்கு வர முடியாது. உங்களாலும் எங்க வீட்டுக்கு போக முடியாது. அதனால் நானும் சகாயமும் தீர்மானித்து விட்டோம். இரண்டு வீட்டு ஹால் நடுவிலுள்ள சுவரில் கதவு போடுவது என்று.

உஷா காய்த்ரிக்கு இதில் சம்மதமானால் உடனே செய்து விடலாம் என்றாள்.

தேன் குடிக்க கசக்குமா என்ன. யார்கிட்டயும் கேக்க வேண்டாம். வேலயத் தொடங்கு. கோமளி மாமிக்கு புத்துணர்ச்சி வந்து விட்டது.

இனிமே கதவத் திறந்து வச்சு படுக்கைல படுத்துண்டாவது அவா அவா வீட்லேர்ந்து பேசிண்டிருப்போம். நினைப்பே சந்தோஷத்தைத் தந்தது.

(நன்றி. முத்துக்கமலம் இணைய இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *