கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 5,270 
 

ஞாயிறு விடுப்பு. காலை மணி 10 .00

எதிரிலுள்ள காம்பௌண்ட் கேட் வாசலைத் திறந்து கொண்டு வேட்டி கட்டிய நடுத்தர வயது கிராமத்து மனிதர் ஒருவர் தயங்கித் தயங்கி வருவதை பார்த்ததும் உள்ளே அமர்ந்து கவனித்த எனக்கு இவரை எங்கேயேயோ பார்த்த முகமாக இருக்கிறதே..! என்கிற யோசனை உள்ளுக்குள் உதித்தது.

சட்டென்று நினைவு வரவில்லை. மூளையைக் கசக்கினேன்.

அதற்குள் அந்த ஆள் படியேறி வாசலில் வந்து செருப்பை விட்டுவிட்டு பவ்வியமாய் உள்ளே வந்து எனக்கு…

“வணக்கம்..” சொல்லி கை கூப்பினார்.

“வ….வணக்கம்…!” நானும் பதிலுக்குச் சொல்லி கை கூப்பி நெற்றியைச் சுருக்கினேன்.

“நா….நான் ராசுங்க..”

அப்படியும் எனக்கு யார் விளங்கவில்லை. முகத்தில் குழப்பம்.. தெளிவு வரவில்லை.

“கோவிந்தன்பட்டிங்க..”

அவர் ஊரைச் சொன்னதும்’ என் அப்பா பிறந்த ஊர் !’ எனக்குள் பட்டென்று ஞாபகம் வந்தது.

சொந்தக்காரர்!

“உட்காருங்க…”

அமர்ந்தார்.

“என்ன விசயம்..?”

கொஞ்சம் சங்கடமாக நெளிந்தார்.

“சொ …சொல்லுங்க..?”

“சொ… சொல்லவே கஷ்டமாக இருக்கு. உங்க அத்தை மக வள்ளி உயிருக்குப் போராடிக்கிட்டிருக்கு. உங்களைப் பார்க்கனும்ன்னு தொண்டைக்கும் நெஞ்சுக்குமாய் உயிர் ஊசலாடிக்கிட்டிருக்கு.. நீங்க வந்து பார்த்தா சரியாகும்னு எல்லாருக்கும் படுது. அதான்… அது புருசனே உங்ககிட்ட விபரம் சொல்லி அழைச்சி வரச் சொல்லி என்னை அனுப்பிச்சு…”

“……”

“நீங்க பழசெல்லாம் மறந்து மனசுல எதையும் வைச்சுக்காம என்னோட புறப்பட்டு வரனும். ஒரு உசுரு விசயம் மறுக்காம புறப்படனும்…”பாவமாகப் பார்த்தார்.

எனக்குள் மனசு இளகி கஷ்டப்பட்டது. ஆனாலும் எப்படிப் போவது..? – சங்கடமாக விழித்தேன்.

அறை வாசலில் நின்று எங்கள் உரையாடல்களைக் கவனித்த என் மனைவி மலர்க்கொடி…

“என்னங்க…! ” குரல் கொடுத்தாள்.

பார்த்தேன்.

“கொஞ்சம் வாங்க…” அழைத்தாள்.

“ஒரு நிமிசம்.!” நான் ராசுவிடம் அனுமதி பெற்று எழுந்து அறைக்குள் சென்றேன்.

“என்ன மலர்..?” கேட்டேன்.

“போய் வாங்க….” கெஞ்சலாக சொன்னாள்.

துணுக்குற்றுப் பார்த்தேன்.

“ஒரு உசுரு விசயம். அவள் கணவரே உங்கள் தேவை தெரிந்து மதித்து ஆள் அனுப்பி இருக்கார். போகாம இருக்கிறது நல்லது இல்லே. நாகரிகமும் கிடையாது. எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம போயிட்டு வாங்க…”

எனக்கு நியாயமாகப் பட்டது.

“சரி “தலையாட்டி சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி வெளியே வந்தேன்.

ராசுவும் எழ…. ஒரு ஆட்டோ பிடித்து இருவரும் பேருந்து நிலையம் வந்தோம்.

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் நினைவு பின்னோக்கிச் சென்றது.

கோவிந்தன்பட்டி அதிகமாய் மனித நாகரீகம் தொடாத குக்கிராமம். அப்பா பிறந்த சொந்த ஊர். விவசாயம்தான் பிரதான தொழில். அங்கிருக்கும் இருபத்தைந்து குடும்பங்களும் ஒரே சாதி, ஒன்றுக்குள் ஒன்று சொந்தம்.

அங்குதான் தன் தாய்மாமனைத் திருமணம் செய்து கொண்டு என் அப்பாவின் தங்கை – என் அத்தை இருக்கிறாள்.

அவளின் ஒரே மகள்தான் வள்ளி. அவள் அத்தை வயிற்றிலிருந்து வெளியே பிறந்து விழுந்த அடுத்த நொடியிலிருந்தே அவள்தான் எனக்கென்று அங்குள்ள அனைவருக்கும் பேச்சு.

அவள் பிறக்கும்போது எனக்கு ஐந்து வயது.

சரியான கரிக்கட்டையாகப் பிறந்து கிடந்தவளை அப்போதே பார்க்க சகிக்கவில்லை. மனசுக்குப் பிடிக்கவில்லை.

அதனால்….

“உன் பொண்டாட்டிடா..! உனக்காகப் பிறந்தவள் . நல்ல பார்…” அருகிலிருந்தவர்கள் பேச்சு, கேலி கிண்டல்கள் என் காதுகளில் நாராசாரமாக தாக்கியது. வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

மேலும் அவள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல்…வளர வளர…முடி குட்டை, குதிரை முகம், மூக்கு ஒழுகல் முன் பற்கள் நான்கு தூக்கி விகாரம்… எனக்கு கட்டோடுப் பிடிக்கவில்லை.

கோவிந்தன்பட்டி குக்கிராமம்தானேயொழிய அழகான கிராமம். சுற்றிலும் பச்சைப் பசேல் வயல்வெளிகள். கரும்புத் தோட்டங்கள், தென்னந்தோப்புகள், மக்காச்சோளம், நிலக்கடலை, இஞ்சி, மஞ்சளென்று நஞ்சை, புஞ்சைகளெல்லாம் செழிப்பு. இவைகளின் மீது எனக்கு அளவில்லாத ஈர்ப்பு, ஈடுபாடு. அதனால் கோவிந்தன்பட்டி எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

மேலும் அத்தை ரொம்ப வசதி. ஏழெட்டு வேலி நிலத்திற்குச் சொந்தக்காரி. தவிர… மாங்கொல்லை, தென்னந்தோப்புகள் என்று நிறைய நிலபுலன்கள் உடையவள்.

நான், என்னோடு பிறந்த தங்கைகள் தலை காட்டி விட்டால் போதும்…’அண்ணன் புள்ளைங்க..!’ ‘அண்ணன் புள்ளைங்க..!’ என்று பாசமாக விளித்து, அழைத்துக் கொண்டாடுவாள்.

“மருமவனே…! “என்று பாசமாக விளித்து என்னை வாஞ்சையாகக் கொஞ்சுவாள். அவளுக்கு என்மீது அளவிலாத பிரியம்.

எனக்கு அவள் மகளைப் பிடிக்காததால் இவளையும் பிடிக்காது. அவள் மேல் வெறுப்பு என்பதால் இவள் மீதும் வெறுப்பு!

ஆனாலும்… கோடைவிடுமுறைகளுக்கு வேறு போக்கிடமில்லாததாலும், எனக்கு அந்த ஊர் பிடிக்கும் என்பதாலும் அவள் பேச்சு, அளவிலாத உபசரிப்புகளைக் கஷ்டப்பட்டுப் பொறுத்துக்கொள்வேன்.

எங்களை அந்த ஊர் மக்கள் என் அப்பா பெயரைச் சொல்லி அவர் பிள்ளைகளென்றுதான் கூப்பிடுவார்கள், கொண்டாடுவார்கள், உபசரிப்பார்கள். அதனால் அத்தை வீடு என்று மட்டுமில்லாமல் எல்லா வீடுகளுக்கும் நாங்கள் சென்று வருவது சகஜம்…

வள்ளியைத்தான் எனக்குப் பிடிக்காது. அவள் மேல் வெறுப்பேத் தவிர…நான் அவளைவிட கூடுதல் நிறம், அழகு என்பதாலும் அவளுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். மாமன் மகன், முறை வேறு என்பதாலும் நான் ஒதுங்கி ஒதுங்கி போனாலும், ஒதுக்கி ஒதுக்கித் தள்ளினாலும் என்னையேச் சுற்றிச் சுற்றி வருவாள். நான் போகுமிடமெல்லாம் வந்து, அமரும் இடமெல்லாம் நெருங்கி அமர்ந்து தொல்லை கொடுப்பாள்.

இவள் தொல்லை பொறுக்காமல் சில சமயங்களில் நான் அவளைப் பேசி, ஏசி, தள்ளி அடித்து விடுவதும் உண்டு. வலியால் வள்ளி அழுவாளேத் தவிர ஆத்திரப்படமாட்டாள்.

அத்தைப் பார்த்தாலும் கோபப்படமாட்டாள். பொறுத்துக்கொள்வாள்.

“அடிக்காதேடா மருமவனே..!” என்று அன்பாய்ச் சொல்வாள்.

“வள்ளி உனக்குப் பொண்டாட்டியை வரப்போறவத்தானே ! கட்டிக்கப்போறவள்தானே ! அடிக்கலாமா..? “என்று என் தாடையைப் பிடித்துக் கெஞ்சுவாள், கொஞ்சுவாள்.

எனக்கு இந்தப் பேச்சும் பிடிக்காது. அவள் தொட்ட இடமும் எரியும்.

வள்ளிக்கும் என் உள்ள மீது கோபம், தாபமெல்லாம் அஞ்சு நிமிடம்தான். வலி இருக்கும்வரைதான். அடுத்த நிமிடம் ஓடிவந்து என்னோடு ஒட்டுவாள்.

அவளுக்கு என்னோடு இருப்பதில் பெருமை, பூரிப்பு. இது அவள் முகத்தில் அப்பட்டமாய்த் தெரியும் மலர்ச்சியாய்.

“மாமா! நீ சோப்பு. நான் கருப்பு !” சேர்ந்து நின்று சிரிப்பாள். என்ன செய்வது…?

வள்ளிக்கு ஐந்து வயதாகும்போது அத்தை தன் குடும்பத்தோடு…வேண்டுதல் காரணமாக சமயபுரம் கிளம்பினாள். அப்பா என்னையும் அழைத்துக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டார்.

நான் முதன் முதலாக அனுபவித்த புகை வண்டிப் பயணம் அது. எல்லோரும் ஒரே பெட்டியில் அமர்ந்து சென்றோம். வள்ளியால் அங்கும் தொல்லை. அவள் அம்மா, அப்பாவோடு அமர்ந்து வராமல் எதிரில் அப்பாவோடு அமர்ந்து வரும் என் பக்கத்தில் வந்து அமர்ந்துதான் பயணம் செய்தாள். அத்தைக்கு நாங்கள் ஜோடியாக அமர்ந்து வருவதைப் பார்க்கப் பெருமை, பூரிப்பு. அடிக்கடிப் பார்த்து மலர்ந்தாள்.

சமயபுரம் கோவிலில் வள்ளிக்கு மொட்டை அடித்து மாலை போட்டு காது குத்தினார்கள். பக்கத்தில் என்னையும் பிடிவாதமாக உட்கார வைத்து மாலை போட்டு மரியாதை செய்து ஒரு மணமேடை நாடகத்தையே நடத்தினார்கள்.

எனக்கோ உள்ளுக்குள் எரிச்சல், கோபம், சங்கடம், சங்கோஜம். அப்பா இருந்தார் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

அத்தை, மாதம் இரண்டு முறை எங்கள் வீட்டிற்கு பேருந்து ஏறி ஐம்பது கிலோ மீட்டர் பயணித்து வருவாள். வரும்போது வெள்ளைக் கரும்பு, சோளம், கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை என்று ஒரு ஆறு மாதங்களுக்குத் தேவையானவைகளை மூட்டைக் கட்டிக் கொண்டு வருவாள்.

அப்பா அவளை அழைக்க பேருந்து நிறுத்தத்திற்குப் பெட்டி வண்டி அனுப்புவார். அத்தை அவைகளை அதில் ஏற்றி வந்து இறக்குவாள்.

எனக்கு, தங்கைகளுக்குத் தனியே அல்வா, காராபூந்தி, சேவு, எல்லாம் வாங்கி வந்து எனக்கு மட்டும் ஒரு பொட்டலம் தனியே கொடுத்து கவனிப்பாள்.

அப்பவே….’இது என்னை வளைத்துப் பிடிக்கும் உத்தி!’ என்று எனக்குப் பிடிக்காது. வளர வளர இது தொடரவும்…

ஒரு நாள் அப்பாவிடம் நான் வெளிப்படையாகவே பேசிவிட்டேன்.

அப்பா சிறிது நேரம் சிலையாக அமர்ந்திருந்தார்.

“விசயம் இதுதானே ! வள்ளியை உனக்குப் பிடிக்கலைன்னா… சத்தியமா யார் விரும்பினாலும் வற்புறுத்தி கட்டி வைக்க மாட்டேன். ! “என்று உறுதியாக சொன்னார்.

அதன் பிறகே என் மனம் சாந்தி அடைந்து. ‘வள்ளி என் மனைவி இல்லை!’ திருப்தி நிம்மதி வந்தது.

நான் கல்லூரியில் காலை எடுத்து வைக்கும் சமயம். ‘வள்ளி ஆளாகிவிட்டாள்!’ என்கிற செய்தி வந்தது.

அம்மா, அப்பா… தாய் மாமன் சீர்வரிசையுடன் தடபுடலாகச் சென்றார்கள்.

அப்பா திரும்பி வரும்போது முகம் தொங்கி வந்தார்.

“என்னம்மா…?”

“அப்பாவைக் கேள் ! “ஒதுங்கினாள்.

“என்னப்பா..?”

“அத்தைக்கும் எனக்கும் சண்டை !”

“ஏன்..??…”

“உனக்கும் வள்ளிக்கும் சட்டுபுட்டுன்னு கலியாணத்தை முடிக்கனும்னு சொன்னாள். அதெல்லாம் முடியாது ! சொன்னேன்.

ஏன்..?? – கேட்டாள்.

என் பையனுக்குப் பிடிக்கலை. படிப்பு, நிறம் எதுவும் ஒத்து வரலை ! – சொன்னேன்.

அதுக்கு அத்தைக்குச் சட்டுன்னு கோபம்.

உன் பிள்ளை அழகு, அந்தஸ்தா இருக்கான் என்கிறதுக்காக என் பெண் இளக்காரம் கிடையாது. என் பொண்ணு அழகில்லேதான் ஒத்துக்கிறேன். அதுக்காக இவள் ஒதுக்கப் பட்டவள் இல்லே என்கிறதை நிரூபித்துக் காட்டறேன். உன் மகனை விட அழகானவனைப் பிடிச்சி கட்டி வச்சி அழகு பார்க்கிறேன். இன்னையிலிருந்து உனக்கும் எனக்கும் உள்ள உறவு அத்துப் போச்சு ! கத்தினாள். – சொன்னார்.

எனக்கே கஷ்டமாக இருந்தது.

அன்றோடு அவள் உறவு, வரவும் முடிந்தது.

அத்தை சவால் விட்டபடி… வள்ளி திருமண வயதைத் தொட்டதுமே உள்ளூரிலேயே நல்ல வாட்டசாட்டமான ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து திருமணத்தை முடித்தாள்.

உறவு முறிந்ததால் எங்களுக்கு அழைப்பு இல்லை. அது மட்டுமில்லாமல் அத்தை, மாமன் இறப்பிற்கெல்லாம் எங்களுக்கு சேதி இல்லை.

சுமார் நாற்பதாண்டுகளுக்குப் பின் இதோ அழைப்பு. !

கோவிந்தன்பட்டியைத் தொட்டு தெருவை நெருங்கும்போது…வள்ளி வீட்டின் முன் சின்ன கூட்டம் தெரிந்தது.

‘செத்துவிட்டாளா…?’ எனக்குள்’ பக்’ கென்றது.

என்னையுமறியாமல் பதற்றம். வேகமாக நடந்தேன்.

என் வருகையைப் பார்த்து கூட்டம் விலகி வழி விட்டது. நான் வீட்டினுள் நுழைய…என் பின்னாலேயே அவள் கணவன், ராசு வந்தார்கள்.

நான் அறையை நெருங்க… கட்டிலைச் சுற்றி அழுத கண்களும், சிந்திய மூக்குகளுமாய் நின்ற பெண்கள் கூட்டம். என் தலையைக் கண்டதும் வெளியேறியது.

வள்ளி கட்டிலில் நீண்டு படுத்து வற்றி, வதங்கி இருந்தாள். கண்களில் மட்டும் உயிர் இருந்தது.

என்னைப் பார்த்ததும் அதில் வெளிச்சம் வந்தது. வாடிய முகத்தில் மலர்ச்சியும் வந்தது.

கலக்கத்துடன் கட்டில் அருகில் அமர்ந்தேன்.

எனக்குப் பின்னால்….ராசு, அவள் கணவன்.

“மா….மா…! “வள்ளி வலது கரம் மெல்ல நகர்ந்து என் வலது கை பிடித்தது.

“… வ…வள்ளி.. “என்னையும் அறியாமல் குமுறினேன்.

“நா…. நான் பொறந்ததிலிருந்து பிஞ்சு மனசுல விதைச்ச ஆசை…மறக்க முடியல. என்னதான் அடுத்த ஆளைக் கலியாணம் பண்ணி குடும்பம் நடத்தி பிள்ளைக் குட்டிகள் பெத்தாலும்…உன் நினைவு மாறல. அடுத்த ஜென்மத்துல நீ என்னைவிட அழகில்லாம பொறந்தாலும், அசிங்கமா பொறந்தாலும், அங்ககீனமாய்ப் பொறந்தாலும் உன்னைக் கட்டிப்பேன் மா….மா…!!! “என்று திக்கித் திணறி சொல்லி என் கையை இறுக்கிப் பிடித்தாள்.

கண்கள் நிலைகுத்தியது.

அறைக்கு வெளியே நின்ற பெண்கள்’ ஓஒ’ என்ற அலறலையும் மீறி…

“வள்ளிஈஈஈ…”என் குரல் ஓங்கி பெரிதாக வெடித்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “அன்பு..!

  1. “கதாசிரியர் காரை ஆடலரசன் எழுதிய சிறு கதை “அன்பு” படித்தவர்களின் மனங்களுக்கு உருக்கத்தைக் கொடுத்தது. ‘வள்ளியின்’ அன்பையும், பாசத்தையும் வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா? இயலாது தான்.

    “ம.கி.சுப்ரமணியன்”
    ஜூலியட் கோர்ட்,
    சேப்பல் ஹில்—27516,
    யு.எஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *