அன்னையும் பிதாவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 5,278 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சேலம் ஜில்லா கோக்கலையைச் சேர்ந்த அர்த்தநாரி என்ற ஹரிஜன வாலிபன், ஸ்ரீயுத மல்கானியுடன் டில்லிக்குப்போனான். ஸ்ரீயுத மல்கானி அகில இந்திய ஹரிஜன சேவா சங்கத்தின் காரியதரிசி. தென்னாட்டில் சுற்றுப் பிரயாணத்திற்காக வந்தவர், சேலத்தில் இப் பையனைக் கண்டு வெகு சந்தோஷப்பட்டுத் தம் கூடவே டில்லிக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார். அங்கே அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, ஆறு வருஷம் தம் வீட்டி லேயே வைத்துக்கொண்டு அவனை மிக்க அன்போடு பார்த்து வந்தார். பிறகு டில்லியிலேயே ஒரு பிரபல வியாபாரக் கம்பெ னித் தலைவருக்குச் சொல்லி அந்த ஆபீசில் மாதம் அறுபது ரூபாய் சம்பளத்தில் ஓர் உத்தியோகத்தில் அவனைச் சேர்த்தார். பார் வைக்கு ஆள் நன்றாக இருந்ததோடு, வேலையில் யோக்கியமாக வும் சுறு சுறுப்பாகவும் இருந்தபடியால், வெகு சீக்கிரமாகச் சம்பளம் உயர்ந்தது. இருபத்து நாலு வயது ஆகுமுன் மாதம் நூற்றைம்பது ரூபாய் சம்பளமாயிற்று. கொஞ்ச காலத்திற்குப் பிறகு, பெங்களூரில் அதே கம்பெனியைச் சேர்ந்த பெரிய நெசவு மில்லில் ஒரு வேலை காலியாயிற்று. மாதம் இருநூறு ரூபாய் சம்பளம். அதற்கு அர்த்தநாரியை அனுப்பினார்கள்.

பெங்களூர் போய் அந்த வேலையில் அமர்ந்து, அவன் இரண்டு வருஷம் சந்தோஷமாகக் கழித்தான். அர்த்தநாரிக்கு அடுத்த மேல் உத்தியோகஸ்தரின் பெயர் கோவிந்தராவ். இவர் சீமைக்குப் போய் மான்செஸ்டரில் இரண்டு வருஷகாலமிருந்து பயிற்சி பெற்றவர். அவரும் அர்த்தநாரியும் ஏறக்குறைய சம வயது. அர்த்தநாரியின் குணமும் நடத்தையும் அவருக்கு மிக வும் பிடிக்கவே, இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். கோவிந்தராவுக்கு ஒரு தங்கை பங்கஜம்; தமையனும் தங்கையும் வெகு பிரியமாக இருந்தார்கள். பங்கஜம் பத்து வயதாயிருந்த போதே, தாயார் தகப்பனார் இருவரும் இறந்துவிட்டார்கள். இப்போது பங்கஜத்திற்கு வயது இருபது, இன்னும் விவாகமாக வில்லை. அர்த்தநாரி வீட்டுக்குக் கோவிந்தராவ் போகும் போதும், அவர் வீட்டுக்கு அர்த்தநாரி வரும்போதும், பங்கஜமும் கூடவே இருந்து பேசிப் பழகுவாள். பழகப் பழகப் பங்கஜத்திற்கும் அர்த்தநாரிக்கும் சிநேகபாவம் முற்றுவதைக் கோவிந்தராவ் கண்டு, மகிழ்ச்சி அடைந்தார். “ஏன் இவர்கள் இருவரும் விவாகம் செய்து கொண்டு சுகமாய் இவ்விடமே இருக்கக் கூடாது?” என்று பல தடவை யோசிப்பார்.

2

ஒருநாள் கோவிந்தராவ் தங்கையைப் பார்த்து “பங்கஜம், நீ கலியாணம் செய்து கொள்வது பற்றி யோசித்திருக்கிறாயா?” என்றார்.

பலகாலம் “அதற்கென்ன? செய்து கொண்டாலாச்சு” என்றாள் பங்கஜம்.

“அப்படியானால், நம் அர்த்தநாரியைக் கலியாணம் செய்து கொள்ளலாமா?”

இந்தக் கேள்வி பங்கஜத்திற்கு எவ்வித அருவருப்பும் தர வில்லை. ஆனால், பதில் சொல்லாமல் வேறு ஏதோ பேச்சு எடுத்து விஷயத்தை மெள்ள நழுவ விட்டாள்.

சில வாரங்கள் கழித்து, ஒரு நாள் ஏதோ சந்தர்ப்பம் நேரிட்டதையொட்டி, கோவிந்தராவ் இந்தக் கேள்வியை மறுபடி கேட்டதற்கு, “ஏன் கோபு, என்மேல் உனக்கு வெறுப்புத் தோன்றிவிட்டதா? நான் உனக்குப் பாரமாய்ப் போனேன் போல் இருக்கிறது” என்று சிரித்துக்கொண்டு சொல்லிப் பிறகு அழ ஆரம்பித்தாள்.

“பைத்தியமே ! பாரமாவது, வெறுப்பாவது ! யாரை யாவது கலியாணம் செய்துகொள்ளப் போகிறாயா, இல்லையா! உனக்கு அது இஷ்டமில்லாமற் போனால் சொல் ; அதுவும் எனக்குச் சந்தோஷந்தான், நாம் என்றும் கூடவே பிரியாமல் இருக்கலாம்” என்று சொல்லி அவள் கண்களைத் துடைத்தார். மறுபடியும், ”அம்மா செத்துப்போனாள். நான் தானே இதை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்?” என்றார்.

“ஏற்பட்டால் செய்து கொள்கிறேன், அதற்கென்ன இப்போது?” என்றாள் பங்கஜம்.

“நீங்கள் இருவரும் பிரியமாயிருக்கிறீர்களே! நாம் தான், சாதி குலம் கவனிப்பதை விட்டுவிட்டோமே. ஏன் அர்த்த நாரியை நீ விவாகம் செய்துகொள்ளக் கூடாது?” என்றார்.

“சாதியைப்பற்றி, என்ன இருக்கிறது? ஆனால், அவர் மனம் எப்படியோ?” என்றாள் பங்கஜம்.

“அவர் மனம் என்ன? உன்னைப்போல் ஒருத்தி மனைவி யாகக் கிடைக்க அவர் தவம் செய்யவேண்டும்” என்றார் கோவிந்தராவ். தன் தங்கைக்குச் சமானம் உலகத்தில் யாரு மில்லை யென்பது கோவிந்தராவின் அபிப்பிராயம்.

பிறகு, அர்த்தநாரியிடம் விஷயம் சொன்னபோது, அவன் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. ஆனால், ஒரு நிமிஷம் கழித் துத் திடீர் என்று முகம் கறுத்தது. ”இது எப்படி முடியும், கோவிந்தராவ்?” என்றான்.

“ஏன், என்ன தடை?” என்று கேட்டார் கோவிந்தராவ்.

“நான் எந்தச் சாதி. நீங்கள் எந்தச் சாதி!” என்றான் அர்த்தநாரி.

“சாதியைப்பற்றி என்ன பேச்சு” என்று கோவிந்தராவ் சிரித்தார். “முதலியார் என்ன, பிராமணன் என்ன? நாம் இதையெல்லாம் தள்ளிவிட்டு ரொம்ப நாளாயிற்று. நீங்கள் இருவரும் சம்மதித்துப் பிரியப்பட்டு முடித்தால் சாதியைப் பற்றி என்ன கவலை?”

தான் கோயமுத்தூர் ஜில்லா ‘சைவ’ முதலியார் என்று அர்த்தநாரி அதற்குமுன் சொல்லி வந்திருந்தான். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கௌரவத்திற்காக இந்தப் பொய் முதலில் சொல்லி, அதைப் பிறகு மாற்ற முடியாமல் உண்மையை மறைத்தே வந்தான். இப்போது தன் குலத்தை உள்ளபடி சொல்ல வெட்கப்பட்டான். டில்லியிலிருக்கும் போது அங்கே சிலருக்கு அவன் சரித்திரம் தெரியும், பெங்களூரில் யாருக்கும்

அவன் பூர்வோத்தரம் தெரியாது.

“பங்கஜத்தின் மனம் எப்படி?” என்றான் அர்த்தநாரி.

பங்கனும் உம்மிடம் பிரியமாகத்தான் இருக்கிறாள். நான் கேட்டதற்குப் பதில் சொன்னதில் சம்மதித்தவள் போல் தான் தோன்றுகிறது” என்றார்.

“நான் கேட்டுத் தெரிந்து கொள்வதுதானே முறை?” என்றான் அர்த்தநாரி.

“ஆம்” என்றார் கோவிந்தராவ்.

இவ்வாறு விஷயம் ஒத்திவைக்கப்பட்டது. பங்கஜத்தினிடம் உண்மையைச் சொல்லிவிடத் தீர்மானித்து, எவ்வாறு முடிந் தாலும் சரியென்று எண்ணினான், ஆனால் பிறகு அந்தத் தீர் மானத்தை நிறைவேற்றும் தைரியம் வரவில்லை.

“என்னத்திற்காக நான் இதைச் சொல்லவேண்டும் ? சொன்னால் என்மேல் பங்கஜத்திற்கும் கோவிந்தராவுக்கும் வெறுப்பு உண்டாகும். சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஆயினும் நான் பறையன் என்பது தெரிந்தால் ஒருகாலும் சம்மதியார்கள். தவிர, பொய் சொன்ன வனாவேன்” என்றிவ்வாறு தனக்குள் ஆலோசிக்கலானான்.

மறுநாள் மறுபடியும் யோசித்து, உண்மையைச் சொல்லி விடலாம் என்று கோவிந்தராவின் வீட்டுக்குப் போனான். ஆனால் போகும் போது, “நாம் இருவரும் பிரியப்பட்டிருக்கும் போது, இந்தச் சாதிப் பிரச்னைக்கு என்ன இடம்? இந்த அநியாயத்தை நாம் ஏன் இடங்கொடுத்து வளர்க்கவேண்டும்? இந்தச் சாதியை யார் நிர்மாணித்தார்கள்? அது சுத்தப் பொய்யல்லவா? அவளிடம் நான் ஏன் அதை ஒரு பொருளா கக் கருதிச் சொல்ல வேண்டும்? அதைச் சொல்லிக் காரியம் முழுதும் கெட்டுவிடவா செய்வது? அவர்களும் சாதியைப் பற்றிக் கவலையில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதற்குமேல் நான் ஏன் அதைப் பற்றிப் பேச வேண்டும்?” என்று மன தைச் சமாதானப்படுத்திக் கொண்டு உண்மையை மறைக்கத் தீர்மானித்தான்.

“பங்கஜம், உண்மையில் உனக்கு இஷ்டமா? நாமிருவரும்’ கூடி வாழலாமா?” என்று மட்டும் கேட்டான்.

“உங்களுக்கு இஷ்டமா?” என்றாள் பங்கஜம்.

3

அர்த்தநாரியின் தகப்பனார் முனியப்பனும், தமையன் ரெங்கனும், தாயார் குப்பாயியும் கோக்கலைச் சேரியிலேயே இருந்தார்கள். அர்த்தநாரி டில்லியிலிருந்த போதும், பிறகு பெங்களூருக்கு வந்த பின்னும், மாதம் தவறாமல் இருபது ரூபாய் அவர்களுக்கு அனுப்பி வந்தான். அவர்களும் அதைக் கொண்டு வெகு சந்தோஷமாகக் குடும்பம் நடத்தி வந்தார்கள். பையனுக்கு என்ன சம்பளம் என்பது அவர்களுக்குத் தெரியாது. மாதா மாதம் இருபது ரூபாய் அவர்களுக்குப் பெரிய சம்பத் தாக இருந்தது. ஆனால், முனியப்பனுக்கு வெகு நாளாய்க் தடிப் பழக்கம். மாதா மாதம் தவறாமல் பணம்வர, குடி இன்னும் அதிகமாய் விட்டது ; இது ரெங்கனுக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அவனால் தடுக்க முடியவில்லை, தடுத்தாலும் என்ன பயன்? ரெங்கன் ஒரு பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயராக இருந்தான். அவனுக்கு இன்னும் கலியாணமாகவில்லை. ஓர் இடம் பார்த்துச் செய்துகொள் என்று தாயார் வற்புறுத்து வாள். இப்போது வேண்டாம், கொஞ்ச நாள் போகட்டும் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான்.

அர்த்தநாரி பெங்களூருக்கு வந்தபின், வருஷத்திற்கு இரண்டு தடவை கோக்கலைக்கு வந்து தன் தாய், தகப்பன், அண்ணன் இவர்களைப் பார்த்துப் போவான், தகப்பனார் குடிப்பதைப் பார்த்து அர்த்தநாரியின் வெட்கத்திற்கும் வெறுப்புக்கும் அளவேயில்லை. வீட்டிலுள்ள அசுத்தமும் அவனால் தாங்க முடிய வில்லை. வந்து ஓரிரண்டு நாளிருந்து விட்டுச் சீக்கிரம் திரும்பிப் போய் விடுவான்.

“உன் கூட நாங்களும் வந்து விடுகிறோம்” என்பான் தகப்பன்.

“முடியவே முடியாது. உன்னைக் கண்டால் என்னை வேலை யிலிருந்து நீக்கி விடுவார்கள்” என்பான் அர்த்தநாரி.

“ஆமாம் அப்பா, நாமெல்லாம் அங்கே போகப்படாது” என்பான் ரெங்கனும்.

செலவுக்கு அனுப்பி வந்தபடியால் இதைப்பற்றி அதிகம் விவாதம் செய்ய மாட்டார்கள். இப்படியே நடந்து வந்தது.

தான் பங்கஜத்தை விவாகம் செய்து கொண்டு மறுபடியும் வடக்கே போய்விடலாம் என்பது அர்த்தநாரியின் யோசனை.

“இவ்வளவு அன்பாக இருந்தாலும் நான் பறையன் என்று இவர்களுக்குத் தெரிந்து விட்டால் காரியம் நிச்சயமாகக் கெட்டு விடும். ஒருவேளை அப்படியில்லை யென்றாலும், ஐயோ, என் தாயையும் தகப்பனையும் அவர்கள் வாழ்வையும், நடவடிக்கை யையும் இவர்கள் நேராகக் கண்டால், அப்புறம் பங்கஜம் என்னைக் கண்ணெடுத்துக்கூடப் பார்க்கமாட்டாள்” என்று அர்த்தநாரி தனக்குள் சொல்லிச் சொல்லிப் பயந்து தன் பொய்யை உறுதிப்படுத்திக் கொண்டான். சீக்கிரமே விவா கத்தை முடித்துக்கொண்டு வடக்கே எங்கேயாவது ஓர் இடத் துக்குப் போய்விடவேண்டும் என்று தீர்மானித்தான். இது சம்பந்தமாய்த் தன் முதலாளி கம்பெனிக்குக் கடிதங்கள் எழுதி, டில்லிக்காவது, வடக்கே வேறு எங்கேயாவதுள்ள அவர்கள் மில்லுக்கு மாற்றிவிடுமாறு வற்புறுத்திக் கேட்டுக்கொண்டான்.

ஒருநாள் திடீரென்று பங்கஜம், “அர்த்தநாரி, உங்கள் அம்மாவைப் பார்க்கவேண்டும் என்று எனக்கு ஆசை. ஒரு வாரம் ஓய்வு எடுத்துக்கொண்டு எல்லோரும் கோயமுத்தூர், உதகமண்டலம் முதலிய இடங்கள் சுற்றிவரலாம் என்று யோசனை. என்ன சொல்லுகிறீர்கள்?” என்றாள்.

“அடுத்தமாதம் முதல்வாரம் சௌகரியமாகவிருக்கும்; ஆபீசிலும் அதிக வேலையில்லை” என்றார் கோவிந்தராவும்.

அர்த்தநாரிக்கு நெஞ்சு அடித்துக்கொண்டது. அதற்கென்ன, செய்யலாம். ஆனால், எங்கள் ஊரில் இப்போது அதிக காலரா உபத்திரவம் என்று கடிதம் வந்திருக்கிறது” என்றான். எப்படியாவது தப்பித்துக்கொள்ள எண்ணி இவ்வாறு பொய் சொன்னான்.

அதைக் கேட்டதும் பங்கஜம் திடுக்கிட்டு, “ஐயோ காலராவா? உங்கள் ஜனங்களை வேறு ஊருக்குப் போகச் சொன்னீர்களா ? இங்கே வரச் சொல்லுங்களேன்” என்றாள்.

” அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் ‘ என்றான் அர்த்த நாரி .

பிறகு மூன்று நாள் கழிந்தது. அர்த்தநாரிக்கு ஒரு கடிதம் வந்தது, தமையன் ரெங்கனிடமிருந்து.

“தம்பி அர்த்தநாரிக்கு, ஆசீர்வாதம்.

இவ்வூரில் விஷபேதி மிகக் கொடூரமாயிருக்கிறது. பலபேர் இறந்து போய்விட்டார்கள். எங்களுக்கு மிகவும் பயமாயிருக் கிறது. அப்பா பழைய மாதிரிதான். என்ன சொன்னாலும் கேட்கிறதில்லை, நீ இம்மாதம் அனுப்பிய பணமெல்லாம் செல வழிந்து போயிற்று. இப்போது முப்பது ரூபாய் அனுப்பினால் வீட்டைப் பூட்டிவிட்டுச் சேலம் போயிருக்கலாம் என்று யோசனை. இந்த பேதிப்பயம் நீங்கிய பின் திரும்பி வரலாம்.

இவை,
ரெங்கன்”

இதைப் படித்ததும் அர்த்தநாரிக்கு ஆச்சரியமும் திகைப்பும் உண்டாயின. “இதென்ன, நான் எண்ணிய எண்ணமோ, சொன்ன பொய்யோ, இவ்வாறு விபரீதமாக உண்மையாய் விட்டது. இது ஒரு தெய்வ பரீட்சையோ என்னவோ தெரியவில்லை” என்று அர்த்தநாரி தனக்குள் சொல்லி ஒன்றும் தோன்றாமலிருந்தான். மறுநாள் பணம் அனுப்பலாம் என்று எண்ணினான்.

அன்றிரவு அர்த்தநாரிக்குத் தூக்கம் வரவில்லை. கெட்ட எண்ணங்கள், வெட்கப்படக்கூடிய எண்ணங்கள், அவன் மூளையைக் கலக்கிக்கொண்டிருந்தன. தன் தகப்பனாரைப்பற்றி நினைக் கும் போதெல்லாம் அவனுக்கு வெறுப்பு உண்டாகும். அவன் இந்த விஷபேதியில் இறந்து தீர்ந்துபோனால் விசனமில்லை என்று அடிக்கடி அவன் மனத்தில் ஓர் எண்ணம் தோன்றும். சீ! இது பாவம் என்று உடனே மறு எண்ணம் தோன்றும். இப்படி இர வெல்லாம் படுக்கையில் புரண்டு தூக்கமில்லாமல் மறுநாள் காலை எழுந்து பச்சைத் தண்ணீரில் குளித்தான். தபால்காரன் கடிதங் கள் கொண்டுவந்தான். எதிர்பார்த்தபடி ஊரிலிருந்து மற்றொரு கடிதம் வந்திருந்தது. கை நடுங்கக் கடிதத்தைப் படித்தான்.

“அப்பாவுக்குப் பேதி கண்டிருக்கிறது. எப்படியாகுமோ, பயமாயிருக்கிறது. மாரியாயி காப்பாற்ற வேண்டும்! கையில் ஒரு காசுமில்லை.
ரெங்கன்.”

கடிதம் படித்து முடிந்ததும் அர்த்தநாரி முகம் கறுத்தது. வெகுநேரம் வரையில் நாற்காலியில் உட்கார்ந்தபடியே இருந் தான். அன்றும் பணம் அனுப்பவில்லை.

5

மறுநாளும் பணம் அனுப்பவில்லை. ஒரு கடிதமும் வர வில்லை.

“ஊரில் காலரா சமாசாரம் என்ன?” என்றாள் பங்கஜம். “அப்படியேதானிருக்கிறதாம்” என்றான் அர்த்தநாரி.

“காப்பிக்குச் சர்க்கரை போதுமா?” என்றார் கோவிந்த ராவ்.

“போதும், வெகு நன்றாயிருக்கிறது” என்றான் அர்த்தநாரி. பிறகு, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனதும் ஒரு கடிதம் வந்து காத்திருந்ததைப் பார்த்தான்.

“அம்மாவுக்கும் பேதி கண்டிருக்கிறது. நீ பணம் அனுப்ப வில்லை. திக்கில்லாமல் சாகிறோம். உடனே வரவும்.
ரெங்கன்.”

அன்றும் அர்த்தநாரி பணம் அனுப்பவில்லை. இதற்குள் மனத்தைக் கல்லாகச் செய்து கொண்டு விட்டான்! “அவமானத் திற்குக் காரணமாயிருக்கும் என் இழிபிறப்பு இத்துடன் மறைந்து போகும். இது சுவாமியே எனக்குத் தரும் விடுதலை போல் காண் கிறது. அவன் செயலுக்கு மேல் என்ன தருமம், என்ன நியாயம்? அதை நான் ஏன் தடுக்கவேண்டும் ; அப்பாவும் அம்மாவும் இறந்துவிட்டால் நான் பங்கஜத்தைக் கலியாணம் செய்து கொள்ள யாதொரு தடையுமில்லை” என்று அர்த்தநாரி தனக்குள் சொல்லிக் கொண்டான்.

திடீரென்று, “சீ! இப்படி எண்ணுவது மகாபாவம்” என்று யாரோ திட்டியதுபோல் தோன்றிற்று. திரும்பிப்பார்க்க, பங்கஜம் வந்து பின்னால் நின்றாள்! விஷயம் தெரிந்து போயிற்று என்று திடுக்கிட்டான். உடனே மறுபடி மதி தெளிந்தது; சமாளித்துக்கொண்டான். யாரும் பேசவில்லை. தன் மனத்தி லுண்டான பிரமை என்று தெரிந்துகொண்டான்.

“சத்தமில்லாமல் எப்படி வந்துவிட்டாய்?” என்றான்.

பங்கஜம் நகைத்து, “கதவை மூன்று தரம் தட்டித் தான் வந்தேன். ஏதோ யோசனையிலிருக்கிறீர்கள்? நான் வந்தது உங்களுக்குத் தெரியவில்லை” என்றாள்.

“நான் ஊருக்குப் போகவேண்டும். காலரா அதிகமாயிருக் கிறதாம். அப்பா, அம்மாவிற்கு ஏற்பாடு செய்து வரவேண்டும்” என்றான்.

“முந்தியே செய்திருக்கவேண்டும். இப்போ நீங்கள் அங்கே போனால் வெகு ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். அவ்விடம் தண்ணீர் குடிக்கக்கூடாது” என்றாள்.

அன்றிரவே அர்த்தநாரி சேலம் போனான். ஆனால், சேலத் தில் ரயிலிறங்கி, கோக்கலைக்கு உடனே போகாமல் இங்குமங்கும் காலம் கழித்துவிட்டு நாலு நாட்களுக்குப் பின் போனான். இவன் போவதற்குள் தாயார் இறந்துவிட்டாள். கூடவே ரெங்கனும் பேதி கண்டு அவனும் இறந்துவிட்டான். குடிகாரத் தகப்பன் மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்து மிஞ்சினான்.

“என்னைப் பெங்களூருக்கு அழைத்துப்போ. இனி இங்கே நான் என்ன செய்ய முடியும்?” என்று தகப்பன் அர்த்தநாரியை மிகவும் கெஞ்சினான். அர்த்தநாரி கேட்கவில்லை. “முடியாது” என்று ஒரே பிடிவாதமாய்ச் சொல்லிவிட்டான். “உனக்கு வேண்டிய பணம் அனுப்புகிறேன். நீ இந்த ஊரிலேயே இரு. என் கூட வரவேண்டாம். அழைத்துப்போக முடியாது” என்று சொன்னான். தகப்பன் திக்கற்ற குழந்தை போல் அழுதான்.

“இங்கே என்னால் இருக்க முடியாது” என்று சொல்லி விம்மி விம்மி அழுதான். எவ்வளவு அழுதாலும் அர்த்தநாரி கேட்கவில்லை. பங்கஜத்தை விட்டுவிட முடியுமா? என்று அர்த்தநாரி தனக்குள் சொல்லிக் கொண்டு, தகப்பனார் அழுததைக் கவனிக்கவில்லை. மறுநாள் அர்த்தநாரி தகப்பனார் கையில் ஒரு பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டுச் சேலம் போய்விட்டான்.

6

“என்ன செய்து விட்டேன்! பெற்ற தாயையும் அண்ண னையும் கொன்று விட்டேன். ஏன் இப்படிச் செய்தேன்? என் னைப்போல் ஒரு பாவி உலகத்தில் உண்டா? தகப்பனை இப்படி நான் தள்ளிவிடலாமா? பங்கஜத்திற்கு என்ன சொல்வேன்?”

இவ்வாறு பல எண்ணங்களில் மூழ்கி ரயிலில் தூக்கமில்லா மல் அர்த்தநாரி பெங்களூர் போய்ச் சேர்ந்தான். மயக்கம் தட்டின மாதிரி ரயிலடியிலிருந்து வீட்டுக்குக் கால் நடையாகவே போனான். படுக்கை சாமான்களை ஒரு வண்டியில் வைத்து வீட் டுக்குக் கொண்டுபோகச் சொல்லி, தான் நடந்து சென்றான்.

வீட்டுக்குப் போய்க் கதவைத் தாள் போட்டுக் கொண்டு படுத்தான். கோவிந்தராவுக்காவது பங்கஜத்திற்காவது தான் திரும்பி வந்த சமாசாரம் சொல்லியனுப்பவில்லை; ஆபீசுக்கும் போகவில்லை.

ராத்திரி மூட்டைகட்டி, ஒருவருக்கும் சொல்லாமல் மறுபடி யும் ரயிலுக்குப் போய்ச் சேலத்திற்கு டிக்கட்டு வாங்கினான்.

சேலம் போனதும், கோக்கலையில் ஓர் ஆதித்திராவிடன் கிணற்றில் விழுந்து செத்துவிட்டதாகச் சிலர் பேசிக்கொண்

டிருந்த சங்கதி அவன் காதில் பட்டது. கோக்கலை சேர்ந்த தும், இவ்வாறு செத்துப்போனது தன் தகப்பன் தான் என்று தெரிந்தது. போலீஸ் ஸ்டேஷனில் பிரேதத்தை வைத்து எழு திக் கொண்டிருப்பதாக யாரோ சொன்னார்கள். ஆனால், அவ் விடம் போகாமல், சேலம் திரும்பிப்போய், மறுபடியும் ரயில் ஏறினான்.

“பங்கஜம், நீ என்னைப்பற்றி இனி மறந்து விட வேண்டும்” என்றான் அர்த்த நாரி.

“மறந்து விடலாம் பின்னே, இப்போது ஊரில் என்ன சமாசாரம் சொல்லுங்கள்” என்றாள் பங்கஜம்.

“எல்லாரும் இறந்து விட்டார்கள்: நான் செய்ய வேண் டியதைச் செய்யாததால் இறந்துவிட்டார்கள், பங்கஜம்! எனக்கு வாழ்வு பிடிக்கவில்லை. உத்தியோகத்தை விட்டுவிட்டு ஊருக்குப் போகிறேன். நீ என்னை மறந்து விடவேண்டும்!” என்றான்.

அவன் முகத்தை இரண்டு மூன்று தரம் பங்கஜம் பார்த் தாள். பார்த்துவிட்டுப் பயந்து போனாள். உடனே தன் அண் ணனுக்குச் சங்கதி தெரியப்படுத்தச் சென்றாள்.

அர்த்தநாரிக்குச் சுரம் கண்டது. முதலில் டாக்டர் ‘டைபாய்ட்’ என்றார். பத்து நாள் கழித்து ‘மூளை ஜுரம்’ என்றார். பல நாள் படுத்த படுக்கையாக இருந்தான். கோவிந்தராவும் பங்கஜமும் இடைவிடாமல் படுக்கையண்டை இருந்து பார்த்துக்கொண்டு வந்து, நான்காவது வாரம் சுரம் இறங்கிற்று.

“இனிப் பயமில்லை” என்றார் டாக்டர்.

பிறகு சில நாள் கழித்துச் சுரம் முற்றிலும் தணிந்து எழுந்து உட்கார்ந்தான்.

கடை “நான் பறையன், பாதகன், உண்மையில் தீண்டத் தகாதவன், பொய்யன். எனக்கு விவாகம் வேண்டாம். என்னை நீங்கள் மறந்துவிட வேண்டும்” என்றான் அர்த்தநாரி.

பங்கஜம் நகைத்தாள். “நீர் எந்தச் சாதியாயிருந்தால் என்ன?” என்று சமாதானப்படுத்தினாள்.

அர்த்தநாரி ஒப்புக்கொள்ளவில்லை.. “சாதியைப்பற்றி நீ தயங்கமாட்டாய். அது எனக்குத் தெரியும். ஆனால், நான் கொலைபாதகன்.என் தகப்பனையும் தாயாரையும் கொன்றவன்” என்று கதை முழுவதும் சொன்னான்.

பலம் உடம்பு நன்றாய்க் குணமானதும், அர்த்தநாரி, தன் வேலைக்கு ராஜினாமா எழுதிக் கொடுத்துவிட்டுக் கோக்கலைக்குப் போய்விட்டான்.

இப்போது கோக்கலைச் சேரியில், மாரியம்மன் கோயிலில், பள்ளிக்கூடம் வைத்திருக்கும் ‘சாமியார்’ அர்த்தநாரிதான்.

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *