கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2022
பார்வையிட்டோர்: 13,914 
 

வெறுமையில் வெளிறிய வானம், தன்னில் எதுவுமே இல்லை என்று கைவிரித்துக் கிடந்தது. மொட்டை மாடியின் கட்டைச் சுவர் ஈரக் கரும்பச்சை நிறத்தில் இந்த உச்சி வெயிலிலும் தண்மை உள்ளோடியிருந்தது. “பானு…” என்று வட்ட விளிம்பில் பெயர் பொறித்த வட்டிலில் பருப்புச் சாதமும், பட்டாணிப் பொரியலும் வைத்து என்னை மாடிக்கு ஏற்றிவிட்டிருந்தாள் அம்மா. ஆரம்பப்பள்ளி நாள்களில் ஸ்கூல் மெஸ்ஸூக்குக் கொண்டு போகவென்று, அம்மா தினமும் காலையில் புதிது போல் துலக்கிய வட்டிலையும், டம்ளரையும் அவரவர் பையில் எடுத்து வைப்பாள். வரிசையாக எங்களைப் புகுந்த வீடு அனுப்பிய பிறகும் அந்த வட்டில்கள் எங்கள் பெயர்களோடு அம்மாவின் சமையலறையில் தங்கிவிட்டன.

இந்த வெறிச்சென்ற வெயில், உலகத்தில் பறவைகளே இல்லை என்று எண்ண வைத்தது. ஆனால் அம்மா மிகுந்த நம்பிக்கையோடு கைசொல்லியிருந்தாள். அது வரும் – சரியாக மதியம் பன்னிரண்டே முக்கால் மணிக்கு. அடுப்பில் குக்கரின் விசில் அடங்கி இருக்காது. கொதிக்கும் குழம்பின் மேல் எண்ணெயின் ஏடு படியச் சற்றுக் காத்திருக்க வேண்டியிருக்கும். அதற்குள்,

“அம்மா பசிக்குது, பசிக்குது” என்று பானு தவித்துவிடுவாள்.

“என்ன அதிசயம் பாரு, தினமும் அதே பனிரெண்டே முக்காலுக்கே அந்தக் காக்காவும் வந்திடுது, என் கைச் சோற்றைச் சாப்பிட.” அம்மா முகம் கலங்கி நிலைக்கச் சொன்ன போது எனக்கு அதில் சிறிதும் நம்பிக்கை வரவில்லை.

“நீ தினமும் அதே நேரத்துக்கு மாடிக்குப் போவதால் அதுவும் வருது” என்று சொல்ல நினைத்தேன். இது இழந்துவிட்ட மகளின் இருப்பை எதிலோ காண அம்மா செய்யும் பலவீனமான முயற்சி. அதில் அவள் அடையும் மெல்லிய ஆறுதலை நான் எதற்காக அழிக்க வேண்டும்?

மாடிச் சுவருக்குக் கீழாக வரிசையாகச் செந்நிறத் தொட்டிகளிருந்தன. சிறு பூச்செடிகளும், குரோட்டன்களும். அவற்றில் அந்தச் சாமந்தி பானு நட்டது. அது இன்னும் செழிப்பாக, பூத்துச் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நீண்ட கம்பிக் கொடிகளில் நானும், அவளும் சேர்ந்து எத்தனையோ நாள்கள் துவைத்த துணிகளை உதறி உலரப் போட்டிருக்கிறோம்; துணிகளின் விளிம்புகளைச் சேர்த்துச் சேர்த்துச் சீராக்கி க்ளிப் மாட்டி நகரும் அவள் விரல்கள் இப்போதும் கம்பிக் கொடி மீது தத்திக் கொண்டிருப்பதாகத்தான் உணர்கிறேன்.

கோடைக்கால அதிகாலைகளில் அம்மா வடகத்திற்காக மாவரைத்து, கூழ் காய்ச்சி, வீட்டு வேலை பார்க்கும் தாயக்காவிடம் பானையைக் கொடுத்து மாடிக்கு அனுப்புவாள். நாங்களும் அடம் பிடித்து பின்னாலேயே ஓடுவோம். இந்த நீர்த்தொட்டியின் நிழலில் அம்மாவின் புடவையை விரித்து, நாற்புறமும் கற்கள் வைத்து, கிண்ணங்களில் அம்மா ஊற்றித் தந்த வடகக் கூழைச் சின்ன ஸ்பூனால் சீரான வட்டங்களாக ஊற்றி வைத்திருக்கிறோம் எவ்வளவோ முறை.

“வெயில் வர்ரதுக்கு முன்னாடி மடமடன்னு ஊத்திட்டு இறங்குங்க.” – அம்மா குரல் கொடுப்பாள் கீழேயிருந்து. தாயக்காவின் விரல்கள் வேகம் பிடிக்கும். நானும், தங்கைகளும் கீழே கொஞ்சம், மேலே கொஞ்சம், வாயில் கொஞ்சம், சேலை விரிப்பில் கொஞ்சம் என்று ஊற்றி விளையாடுவோம். இளவெயில் ஆரம்பித்திருக்கும். ஊற்ற, ஊற்ற வடகம் மெல்லிய கண்ணாடித் தாள் துண்டங்களாக உலர்ந்துகொண்டே வரும். அதன் மினுமினுப்பில் சீரகம் பதிந்து தெரியும். யார் கிண்ணம் முதலில் தீருமென்று போட்டி போட்டுக்கொண்டு ஊற்றுவோம். எல்லாப் போட்டிகளிலும் முதலில் ஜெயிப்பவள் பானுதான்.

இப்போதெல்லாம் இது போன்ற ஞாபகங்களை யாரோ எழுதிய பக்கங்களைப் போல வறண்ட விழிகளோடு வாசிக்க முடிவது ஆச்சர்யம்தான். தங்கைக்குப் பிடித்த நிற உடைகளை அணிகையிலும், தின்பண்டங்களை ருசிக்கும் போதும் ஏற்பட்ட கடுமையான குற்ற உணர்வு வரவர மங்கித் தேய்ந்து வருகிறது. “நான் அவளை மறந்து விடுவேனோ?” என்று நடுக்கத்தோடு நினைத்துக் கொள்கிறேன்.

“வந்ததா?”

படிக்கட்டிற்குக் கீழிருந்து கேட்ட அம்மாவிடம், “இன்னும் வரலைம்மா” என்றேன் சலிப்போடு.

“மணி இப்பதான் பனிரெண்டு நாற்பது” என்றாள் அம்மா. சொல்லி வாய் மூடியிருக்கமாட்டாள். அவள் குரலின் கடைசி ஒலித்துணுக்கு என் காதுகளுக்குள் இறங்கிக் கொண்டிருக்கும் போதே வானில் ஒரு கதவு திறந்துகொள்ள அது உதித்தது. பூமியிலிருந்து வானத்துக்குப் போனதா அல்லது வானத்தில் வசித்துக்கொண்டு எப்போதாவது பூமிக்கு வருதா என்று அதிசயித்தேன்.

அதன் கரிய இறக்கைகள்; அசையாத கண்கள்; சுவர்த் திட்டில் உட்கார்ந்ததும் அது காட்டிய சவத் தன்மை என்னை அண்ட விடாமல் அச்சுறுத்தியது. கோயிலில் நவக்கிரகச் சந்நிதியை அம்மாவோடு சுற்றும் போது,

“ஹை, கல் காக்கா” என்றுவிட்டு, தலையில் குட்டு வாங்கி,

“கன்னத்தில் போட்டுக்கோ. சனி பகவான் அது” என்று அம்மா அறிவுரை சொல்வாள்.

பசிப் பரபரப்போ, இரையையடைந்த பரபரப்போ சற்றுமின்றி அது சாதத் தட்டை உற்றுப் பார்த்தது. இருள் தகடுகள் போன்ற இறக்கைகளை விரித்து இறங்கி, தனக்கான நிவேதனத்தை ஏற்கிற நிதானத்தோடு ஒரேயொரு பருக்கையை நாசூக்காகக் கொத்திக் கொண்டது.

நான் அதை வெறித்தபடி இருந்தேன். சற்றுச் சாய்ந்த கழுத்து, உயிரற்றதோவென்று திகைக்க வைக்கும் கோலிக்குண்டுக் கண்கள். காகம் நளினமாகச் சுவர்த் திட்டில் நடை பயின்றது. ஒரு நீண்ட உரையாடலைத் துவக்கப் போவதுபோல் தொண்டையைச் செருமிக் கொண்டது. இறக்கைகளை விரித்துப் படபடவென்று அசைத்தது. அந்தச் செயல் தன்னைத் தழுவ வேண்டுமெனத் தரையிலிருந்து தாவும் பிள்ளையை நினைப்பூட்டியது. ஏதோ ஒரு உறவுக்கான ஏக்கம் அதன் அசைவுகளில் கசிந்து கொண்டிருக்கையிலேயே நான் சகிக்க முடியாத ஒரு நாடகத்திலிருந்து வெளியேறுபவளாக உணவுத் தட்டை அங்கேயே விட்டுவிட்டுப் படிகளுக்கு ஓடினேன். என் கண்கள் ஏனோ கசிந்தன. எரிபட்ட காகிதச் சுருளென அந்தக் காகத்தின் பறப்பு தாழ்வாரத்திலிருந்து மேலே பார்த்த போது தெரிந்தது.

உடனடியாக இந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றிருந்தது எனக்கு. எந்த மூலையிலிருந்தாலும் பானுவின் பூஜையறைப் புகைப்படத்திலிருந்து நீண்டு வந்து தொடும் புன்னகை. உயிர் பொங்கும் வாசனை. தரையில் உலராமல் கண்ணீர்த் துளிகள் சிதறிக் கிடப்பதாகவே பிரமையேற்படுகிறது.

அம்மா, “இருந்துவிட்டுப் போயேன் ஒரு இரண்டு நாளாவது” ஏக்கமாய்ச் சொன்னாள்.

“இல்லைம்மா, கிளம்பறேன். இங்கிருந்தா என்னென்னவோ ஞாபகம் வருது.” துணிகளைப் பெட்டிக்குள் திணித்துக் கொண்டே சொன்னேன்.

அவசரமாகக் காரிலேறிப் பயணம் துவங்கியதும் நிம்மதியாக உணர முடிந்தது. சாலையை அகலப்படுத்தவென்று வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்கள். பிரேதங்களைப் பார்க்கும் போது ஏற்படும் துயரத்தை அவற்றின் பிளந்த சதையைக் காண்கையில் அநுபவித்தேன். எல்லாவற்றையும் கடந்து கார் வேகமாகப் போய்விட வேண்டும் என்று பதைபதைத்தேன். வேகமாக, இன்னும் வேகமாக, மிகமிக வேகமாக. உருவற்ற எதிலிருந்தோ ஓடித் தப்பி விடுகிறதாக இருந்தது என் பதற்றம்.

வயல்களின் பசுமை; மலைகளின் நீலம்; மலர்களின் மஞ்சள்; அந்தி வானின் ஆரஞ்சு. நல்லவேளை, உலகம் வர்ணக் கோலாகலங்களாலானது. கறுப்பின் துக்கம் மட்டுமே அதை ஆக்ரமித்திருக்கவில்லை. இருக்கையில் நிதானமாய்ச் சாய்ந்து, நீண்ட மூச்சுக்களை ஆழமாக இழுத்து விட்டேன்.

ஜன்னல் கண்ணாடி வழியாக, வருடக்கணக்காய்ப் பார்த்துப் பழகிய இந்தப் பாதையை இன்றுதான் புதிதாக – முதல் முறையாகப் பார்ப்பது போல் விழி விரிய ஆர்வத்துடன் கவனித்த போது அதைப் பார்த்தேன். அதுவேதான்.

வானின் துல்லியமான வெறுமை. கரிய அலையொன்று நடுவில் மடிக்கப்பட்டு நீண்டு உடலாகி, இருபுறமும் சிறகுகள் விரிய, தலையும் அலகும் முளைத்தாற்போல் அது ஒன்றுமின்மைக்குள்ளிருந்து தோன்றியது. உலகத்தின் அத்தனை துன்பங்களையும் மொத்தமாகத் தன் சிற்றுடல் மேல் சுமப்பது போல் கவிழ்ந்து காரின் ஓட்டத்திற்கு இணையாகப் பறந்து கொண்டிருந்தது. இல்லை, இது எப்படி அதே காகமாக இருக்க முடியும்? ஆனால் அதே சாய்ந்த பார்வை. கழுத்தடியில் அதே சிறு வெண்திட்டு. அதை அடையாளப்படுத்துவதாக. எனக்குள் அச்சம் பெருகியது. அதன் பார்வை என்னை நோக்கித் திரும்பியது. மூடிய ஜன்னல் கண்ணாடியைத் துளைத்துக்கொண்டு உள் நுழைந்த அதன் மன்றாடல்கள் எனக்குள் எரிச்சலையே விளைவித்தன.

இடைவிடாத அதன் தொடரலைக் கவனியாதது போல், கண்டுகொள்ளாதது போல், நிராகரிப்பது போல் பாவனை செய்வது வசதியாக இருந்தது. அது ஏன் என்னையே பின் தொடர வேண்டும்? சலிக்காமல். சிறகடிப்புகளில் உரத்து ஒலிக்கிற இறைஞ்சல்களுடன் பிடிவாதமாக. என்னவோ ஒரு செய்தியை ஏந்தி வருகிற தூதுவன் போல். என்னிடம் எதையோ சொல்லத் தவிப்பது போல. நான் விரும்பாவிட்டாலும் அந்தத் தகவல் என் மனதில் ஊன்றப்படப் போகிறது ஆழமாக.

ஒரு சிறிய இடைவெளியில் அது விலகி, என் கண்ணில் படாமல் காணாமல் போனபோது பெரும் ஆசுவாசத்தையடைந்தேன். ஊர் நெருங்கிவிட்டது. இந்த ஊருக்குள் அது வராது என்று எனக்கு நானே உறுதி செய்துகொண்டேன் ஏனோ. விரிந்த கதவுகளோடிருந்த வீட்டின் அரவணைப்பை இதமாக உணர்ந்தேன்.

இரண்டு நாட்கள். நான் வீட்டுக்குள்ளேயே பதுங்கிக் கொண்டேன். முற்றம், ஜன்னல், வாசல், தோட்டம் என்று காகங்களைச் சந்திக்கும் இடங்களைக் கவனமாகத் தவிர்த்தேன். கறுப்பு நிறப் புடவைகள், ஸ்டிக்கர் பொட்டுகள், கறுப்பு அட்டையுள்ள புத்தகங்கள் எல்லாவற்றையும் மறைத்துவிட்டால் மரணத்தின் நிச்சயத்தன்மையையும் தவிர்த்து விடலாமென நம்பினேன் அபத்தமாக. சீரான ஒழுங்கமைதியோடு ஓடுகிற தின வாழ்க்கை அலுப்பூட்டுவது, திருப்பங்களில்லாதது. ஆனால் அபாயங்களற்றது.

நாட்களின் நகர்வில் அந்தக் காகத்தை நான் மறந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். பானுவின் பிறந்த தேதியன்று சமைக்கும் போதும், துணிகளை மடித்து அடுக்குகையில், புத்தகத்தில் என்னைப் புதைக்க முற்படும்போதும் அவள் நினைவுகள் வேதனை தந்தன. அப்படியே அடுத்த பிறவியிருந்தாலும் பானு ஒரு காகமாகவா பிறப்பாள்? சே… இல்லவே இல்லை. அவள் ஒரு புறாவாகப் பிறந்திருக்கக் கூடும். அல்லது மயிலாக; இல்லை, ஒரு சிட்டுக்குருவியாகவாவது. பட்டாம்பூச்சியாகப் பூக்களுக்கிடையில் திரிந்து கொண்டிருப்பாள் என்று நினைக்கப் பிடித்திருந்தது. உடனே “மறுபிறவியாவது ஒன்றாவது” என என்னையே மறுத்துக்கொண்டேன்.

புழுங்கிக் குமைந்த பகலைக் கோடைமழை ஊடுருவியது. ஜன்னல் கண்ணாடியில் வழியும் மழைத் தாரைகளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அது வரப்போகிறது என்பது என் உள்ளுணர்வுக்குத் தெரிந்தே இருந்தது. அது மழையில் நனைந்து சொட்டும் சிறகுகளோடு வந்து ஜன்னல் மரச் சட்டத்தின் வெளித்திட்டில் உட்காந்தது. அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது அது ஒருமுறையேனும் மற்ற காகங்களைப் போல் கரையவேயில்லை என்பது. அது சிறகுகளைச் சிலுப்பி நீரை உதறிக்கொண்டது.

அந்த வரிகளை எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேனா என்ன?

“ஆத்மா என்ற நிலையில் அனைவரும் அழிவற்றவர்கள். உடல் அழிவதால் ஆத்மா நாசமுறாது. அது நித்யமானது. எப்படி ஜீவாத்மாவுக்கு இந்த உடலில் இளமையும், முதுமையும் வருகின்றனவோ அவ்வாறே வேறு உடலும் வந்து சேர்கிறது.”

தலையை உலுக்கிக் கொண்டேன். ஜன்னலை விட்டு நகர்ந்து படுக்கையில் விழுந்தேன். மனம் காகங்களை நான் வெறுப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுக் காட்டியது. உலர்ந்த துணிகளை எடுக்க மாடியேறினால் உச்சந்தலையில் அலகால் கொத்துவது. ஒரு நாள் ரத்தமே வந்துவிட்டது. பல வருடம் முன்பு இருந்த தாத்தாவின் குட்டி ஆக்ஸ்ஃபோர்டு டிஸ்னரியைப் பத்தாம் வகுப்பு படிக்கும்போது வைத்திருந்தேன். அதைப் பால்கனியில் வைத்துவிட்டு, வீட்டுக்குள் போய்த் திரும்புமுன் கீறிக் கிழித்துக் குதறியிருந்தது ஒரு காகம். இந்தக் காகங்கள் வழக்கமான மீனின் தலையையோ, கோழியின் எலும்பையோ கோலத்தின் மீது போட்டுவிட்டுப் போகும். யோசித்தபடியே தூங்கிவிட்டேன்; இருளின் ஆழத்திலிருந்து எழுந்த காகத்தின் பாதங்கள் என் மேல் நடக்கின்றன. அதன் இறக்கைகள் படபடக்கின்றன. அந்தக் கூர்மையான அலகு என் உடலைக் கிழிப்பதற்குள் விழித்துவிட்டேன்.

விடிந்ததும் வானில் சூரியனுக்குப் பதில் ஒரு காகம்தான் உட்கார்ந்திருக்கும் என்று வெறுப்போடு ஜன்னலைத் திறந்தேன். சூரியனின் ஒளி கண்ணைக் கூசச் செய்தது. நிறையக் காகங்கள்; எதற்காகவோ இப்போதே விழித்து, என்ன தேடியோ எங்கெங்கும் பறந்து “கா…கா…” வென்ற குரலால் உலகை நிறைத்து… நல்லவேளை இதில் எந்தக் காகத்திற்கும் கழுத்தில் வெண்திட்டு இல்லை.

அது கண்ணில் தென்படாமலேயே சில நாட்கள் கடந்தன. அதன் வருகைக்காகக் காத்திருக்கத் துவங்கிவிட்டதாக உணர்ந்தேன். இல்லை; அது வரவேண்டும் என நான் விரும்பவில்லையென்றும் எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

“என்னவோ போகட்டும்; அது ஒரு சாதாரண ஜீவன். அடுத்த முறை வந்தால் அதற்கு ஒரு கவளச் சாதத்தை வைத்தால் போயிற்று” என் தீர்மானம் எனக்கு வியப்பாயிருந்தது.

கனவென்றுதான் சொல்ல வேண்டும். இரவின் கருமை முழுவதும் ஒரே புள்ளியாகக் குவிந்தது. பிறகு அந்தச் சிறு புள்ளி என் நெற்றியில் தொற்றிப் பதிந்து, மூக்கு, உதடு, கழுத்து என்று நகர்ந்தது. அது மார்பில் நிலை கொண்டுவிடும் என்று நினைத்த போது நிதானமாகித் திரண்டு கருப்பைக்குள் புகுவதைக் கண்டேன். நொடியில் எண்ணற்ற பறவைக் குஞ்சுகள் பொரிந்து சிறகு பெற்று என் அடிவயிற்றில் நீந்தின.

மிகவும் அவசரமாக விடிந்துவிட்டது போலிருந்தது. காலையின் குளிர் என் சருமத்தில் ஊசி முனைகளாகப் பதிந்தது. வாசலின் முதல் படியை விட்டு இறங்கியபோது பாதத்தில் எதுவோ பட்டது. வெதுவெதுப்பான, மிருதுவான, விலுவிலுவென்ற என்னவோ. குனிந்து பார்த்தபோது முதலில் அது ஒரு கறுப்புத் துணியாகத்தான் தெரிந்தது. திறந்த விழிகளும், விறைத்த உடலுமாக அது உயிரற்றுக் கிடந்தது. பெருக்குமாற்றால் அந்தச் செத்த காகத்தைப் புரட்டினேன். என் கை நடுங்கியது. மெல்லிய ரோமங்கள் விலக, அதன் கழுத்திலிருந்த அந்த வெண்திட்டு வெளிப்பட்டது.

நன்றி: தினமணிகதிர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *