கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 25, 2021
பார்வையிட்டோர்: 17,626 
 

பிரபு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தான்.. பேருந்துகளின் வித்தியாசமான வேகமான ஹாரன் சத்தங்கள்.. இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் சீட்டில் இருந்தபடியே வெளியே தலைநீட்டி திட்டிக்கொண்டிருந்தார்கள்.. ஒரு குள்ளமான பெண் பரிதாபமான கண்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்.. எதிரும் புதிருமாக அரக்க பரக்க “அந்த பஸ்ஸூ வந்துருச்சா பாரு..?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.. பிரபு ஆட்டோ ஸ்டேண்ட் போகலாம் என்று நினைத்தபோது அந்தாள் வந்து நின்று..;ஆட்டோவா சார்..?” என்றார்..

அவரை மாதிரி பேருந்து வெளியே போகும் கேட்டில் வரிசை போட்டு நின்றிருந்தார்கள் ஆட்டோக்காரர்கள்.. ;அந்தாளுக்கு வாடக கெடைச்சாச்சு.. அடுத்தது போப்பா..” என்கிற சத்தம் கேட்டது.. இவர் திரும்பி..”இருப்பா.. இன்னும் பேசல.. சார் ஆட்டோ.?”

“ராசி வீதி..?”

“போகும் வாங்க.. “ திரும்பி “அடுத்தது வாப்பா..”

***

அந்தப் பாதையில் பெரும்பாலும் மூடியிருந்த கதவுகள்.. சன்னல்கள்.. கலைந்திருந்த கோலங்கள்.. மாடிகளில் துணிகள் பறந்தது.. ஒரு சில காலி இடங்களில் பையன்கள் மொபைலோடு இருந்தார்கள்.. அவ்வபோது ஆட்டோவின் பீப்.. பீப் சத்தம்.. ஆட்டோ ஓட்டி வயதானவர்.. உர்…ரென்று இருந்தார்.. கண்ணாடியில் அவர் முகத்தில் வாழ்க்கையின் அசதி தெரிந்தது.. புளிச்.. புளிச்.. சென்று வெளியே துப்பினார் அவ்வபோது.. எதிர்புறம் தள்ளி அமர்ந்தான்.. “நீங்கள் அத்தனைப்பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்..” கடந்து சென்றது.. ஆட்டோவின் இரைச்சல் குறுகலான பகுதிகளில் காதுகளை அடைத்தது..

“எந்த இடம்னு சொன்னீங்க.. ?” திடீரென ஆட்டோக்காரர் கேட்டார்..

“ராசி வீதி…”

“ஆமாமா.. “அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார்.. இவனுக்கு சரியா கொண்டுபோய் சேர்ப்பாரா என்கிற எண்ணம் எழுந்தது,, பசங்கள் சுமார் பத்துப் பேர் எதிரில் பைக்கில் கடந்தார்கள்.. ஒரே சத்தம்.. ஒரு பெண் அவர்களை திரும்பி திட்டினாள்.. ஆட்டோ வேகம் குறைந்து இடது பக்கம் திரும்பி மெயின் ரோடில் கலந்தபோது ஒரு அரசியல் ஊர்வலம் போனது.. காத்திருந்து மறுபடியும் வேகம் பிடித்து ஒரு உள்ளூர் பேருந்தின் வேகத்தை கடந்து பாலத்துக்கடியில் வலதுப்பக்கம் திரும்பி அந்த பெரிய வட்டமான பூந்தொட்டத்தை வட்டமடித்து ராசி வீதி நெருங்கும்போது ஒரு பெரிய கல் ஆட்டோவை கடந்து இடது பக்கமாக பறந்தது..

எதிரில் நான்கைந்து நபர்கள் குறுக்கே ஓடினார்கள்.. ஒரு புளியமரத்தடியில் வியாபாரம் கலைந்திருந்தது. .இரண்டு பேர் வேகமாக ஒரு கடையின் ஷட்டரை மூடினார்கள்,, அவசர அவரசமாக அந்த குடும்பம் ஒரு சந்தில் பதுங்குவது தெரிந்தது.. ஏதோ உடையும் சத்தம்.. ஒரு பேருந்து காலியாக நிற்க சுற்றிலும் கற்களும் கட்டைகளும் விழுந்திருந்தது..

“சார் .. என்னவோ பிரச்சனை..” ஆட்டோ திரும்பியது.. ஏதோ ஒன்று கீழே டயரில் மோத.. “என்னத்தையோ அடிக்கிறானுங்க.. பரதேசிங்க.. “

“போய்டுங்க.. போய்டுங்க.. “

கொஞ்சம் முன்னாடி குழந்தையுடன் இருந்தவள் பதட்டமாக ஆட்டோவை கைக்காட்ட,, “அடப்போம்மா.. “ என்றார் அவர்.. உர்… உர்..ரென்று ஒரு பக்கமாக சீறியது.. பதட்டமாக அந்தப் பெண் தொடர்ந்து “நில்லுங்க.. நில்லுங்க.. “ என்றாள்..

“ஏம்பா.. நிறுத்துப்பா..”

“கம்முனு வா சாரே.. “

“அட நிறுத்துப்பா.. “அவன் போட்ட கூச்சலில் அவர் திரும்பி ஆட்டோவை நிறுத்தி “நீ எறங்குய்யா கீல..”

அதற்குள் அவள் வந்து வேகமாக குழந்தையுடன் நுழைந்து “போங்க… போங்க.. “ என்றாள்..

ஆட்டோ முறைத்தபடி கிளம்பியது.. பெரியவர் மறுபடி வெளியே துப்பினார்.. அந்தக்குழந்தை அழுதது.. அவள் முதுகை அணைத்து “ஆச்சுப்பா.. ஆச்சுப்பா.. “ என்றாள்.. கண்களில் கண்ணீர் தெரிந்தது..

“என்னாச்சு..?” என்றான் பதட்டத்துடன்

“ஏதோ செலய ஒடைச்சுட்டாங்களாம்.. ரண்டுக் கோஷ்டிக்குள்ள பிரச்சனை.. ஒரே அடிதடி.. பாவம்.. ஒரு அப்பாவியை புடுச்சு தல மண்டய ஒடைச்சுட்டானுங்க.. “ அவள் கண்களை துடைத்துக்கொண்டாள்..

ஆட்டோவின் முன்புறம் ஒரு கல் விழுந்து பெரிய சத்தத்துடன் ஓரமாக பறக்க இவள் “அய்யோ… என் குழந்தை… குழந்தை.. “ என்று கத்தினாள்..

***

ஆட்டோ ஒரு ஓரமாக வழுக்கிக் கொண்டு நின்றது.. குழந்தை ஏற்கனவே அழுதுக்கொண்டிருந்தது கத்த ஆரம்பித்து விட்டது.. அந்த சந்தின் கடைசியில் ஒரு கும்பல் ஒரு பைக்கைப் பிடித்து ஓட்டி வந்தவனை கீழே தள்ளி மிதித்துக் கொண்டிருந்தார்கள்.. டிரைவர் பின்னாடி பார்த்தார்.. நான்கு பேர் ஓடி வந்துக் கொண்டிருந்தார்கள்.. முன்னாடி இடதுபுறம் ஒரு திருப்பம் இருந்தது.. சர்ரென்று அதில் திரும்பியவர் இரண்டு வீடுகள் தாண்டி மீண்டும் ஒரு திருப்பத்தில் வளைத்து “அடச்சே..” என்று நிறுத்தினார்.. ஆட்டோவை அனைத்து “தள்ளு சாரே பின்னாடியிருந்து.. “ என்று கிசுகிசுத்தார்..

அது ஒரு முடிவு.. இரண்டு வீடுகளின் காம்பவுண்டு சுவர் இடித்தது.. பின்னாடி புளியந்தோப்பு,, இடதுபுறம் ஒரு ஒற்றை வழி மட்டும் இருந்தது.. ஒரு வீட்டின் சன்னல் கதவு திறந்து ..”ஏம்மா.. வந்திரு.. வந்திரு ..” என்றார்கள்..

இவன்.. “போய்டும்மா.. போய்டு..”

“கொழந்தைய அழ வக்காத.. சீக்கிரமா போ.. “ டிரைவர்

அவள் இறங்கி ஓடினாள்.. குழந்தையின் அழுகுரல் மங்கி காணமல் போனது.. கதவை சாத்திக்கொண்டார்கள்.. ஒரு இடுக்கு மாதிரியான அந்த வீட்டின் பின்புறத்தில் ஓலை போட்டு நான்கைந்து பழைய டயர்களை அடுக்கி வைத்திருந்தார்கள்..

“தள்ளூங்க.. தள்ளுங்க..”

வேகமாக தள்ளினான்.. ஆட்டோ ஓலைக்குல் நுழைந்துக்கொண்டது.. ஏதோ கெமிக்கல் வாசனை.. கூடவே அழுகின முட்டை வாசனை.. ஒரு ஓரத்தில் நான்கைந்து துணிகள் விழுந்திருந்தது.. ஓலை மட்டைகளில் நிறைய பிளாஸ்டிக் கவர்கள் செருகியிருந்தன.. பச்சை நிறத்தில் ஆங்காங்கே பெயிண்ட் மாதிரி விழுந்திருந்தது..

டிரைவர் “வாடகை ஆட்டோ.. என்ன நடக்கப்போதோ தெரியலையே..”

“ஒண்ணும் ஆகாதுங்க..”

“நாம அங்க ஒரு பஸ்ஸைப் பாத்தோமே..”

“ஆமாமா..”

“மொல்ல பேசுங்க.. அதுக்கு நெருப்பு வச்சிருப்பானுங்க..”

“ஒண்ணும் ஆகாது.. யாரும் வராம இருந்தா சரி..”

“நாலுப் பேரு ஓடி வந்தாங்கல்ல.. அவனுங்க இன்னும் காணலை.. பைக்கைப் பாத்து ஓடியிருந்தா தப்புச்சோம்.. இந்த எடத்துல ஒரு முடிச்சு இருக்குது.. ஆட்டோ இல்லன்னா தோப்பை பாத்து ஓடியிருக்கலாம்.. “அவர் நின்று நிதானித்தார்.. இவன் அவர் வாயை அடைத்தான்.. இரண்டுப் பேர் படபடப்பாக வந்த வேகத்தில் “காணோம்.. காணோம்..” என்று திரும்ப ஓடினார்கள்..

“இப்படித்தானே வந்தது ஆட்டோ.. “ ஒரு முரட்டுக்குரலுடன் அவர்கள் திரும்ப ஓடி வருவது கேட்டது..

***

“இப்படித்தான் வந்தது ஆட்டோ.. இதுக்கு மேல போறதுக்கு வாய்ப்பில்லை..” அந்த ஓடி வந்த நான்கு பேர் இருந்தார்கள்.. இரண்டு பேர் கையில் எதையோ வைத்திருந்தார்கள்.. நெட்டையாக இருந்த ஒருத்தன் “அந்த வீட்டுக்கு பின்னாடி வழி போகுதுப் பாரு..”

“ஆனா ஆட்டோ போகாதே.. “

“போ… போய்ப்பாரு.. “

சிவப்பு சட்டைக்காரன் குதித்து ஓடினான்.. அந்த வீடுகளின் கேட்டில் ஏதோ வாசகங்கள் இருந்தது.. ஒரு நாய் எங்கிருந்தோ குறைத்தது.. ஒத்தையடி பாதையில் போன சிவப்பு சட்டை திரும்ப வந்து “அண்ணே.. இல்லைண்ணே.. “ என்றான்..

ஆட்டோ டிரைவர் “எட்டிப்பாக்காதே.. “ என்றார் கிசுகிசுப்பாக

“கைல என்னவோ வச்சுருக்காங்க..”

“கத்தியா இருக்கலாம்.. அல்லது பாட்டல்.. தூக்கி வீச..”

“போலிஸ் என்ன பண்ணும்..?”

“திடீருன்னு நடந்திருக்கலாம்.. வந்துட்டிருப்பாங்க.. ஏரியா பெருசு.. “ அவர் சட்டென்று வாயை மூடிக்கொண்டார்.. இவனை நெஞ்சு மீது கையை வைத்து சிக்னல் செய்தார்.. குரல்கள் அடங்கி அமைதியாக இருந்தது.. ஆனால் என்னவோ சத்தம்.. கிட்டே காலடி ஓசை.. அந்த சிவப்பு சட்டைதான் எட்டிப்பார்த்தான்..

“அண்ணே.. இங்க இருக்காங்க.. “ பட்டென்று பெரியவர் மீது பாய்ந்து அவர் கையை பிடித்தான் பிரபு பிடித்து இழுப்பதற்குள் அந்த மூன்று பேர் ஓடிவந்து இவர்களை சுற்றிக் கொண்டார்கள்.. “எங்கடா எங்கக்கா..? கொழந்தையோட இருந்ததே..”

பிரபு “அவுங்களா.. எதுக்கு கேக்கறீங்க..?”

நெட்டையன் “அது எங்கக்கா.. எங்கைய்யா.. எங்க..?”

பெரியவர் ;அட வுடுங்கய்யா.. பயந்தேப் போய்ட்டோம்.. முன்னாடி வீட்ல இருக்காங்க.. “

“கொழந்த..?”

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையல்ல.. நல்லாத்தான் இருக்காங்க.. “

“அப்பாடா.. “ என்றான் நெட்டையன்.. பதபதவென்று முன்னாடி வீட்டுக்கு போய் கேட்டைத் தட்டி “அக்கா.. அக்கா.. தாஸ் வந்திருக்கேன்.. அக்கா.. அக்கா..” என்றான்..

ஒரு சன்னல் திறந்து அவள் “ தம்பி.. நீயா.?. உள்ளாற வந்திரு..”

“அக்கா .. கொழந்த..?”

“நல்லாயிருக்கான்.. இங்கப்பாரு.. “ சன்னல். வழியாக தூக்கிக் காட்டினாள்.. அது சிரித்தது.. “பயமா போயிடுச்சு தம்பி.. இந்த வீட்டுக்காரம்மா ரொம்ப நல்லவங்க.. “

“அக்கா.. ஜன்னலை மூடிக்க.. நானே வந்து மறுபடியும் கூட்டிக்கிட்டுப் போறேன்.. “ பின்னாடி தெரிந்த அந்தப் பெண்ணிடம் “ரொம்ப நன்றிம்மா..” என்று ஆட்டோவிடம் வந்தான்..

பிரபு அப்போதுதான் சரியாக கவனித்தான்.. அவர்கள் கையில் வைத்திருந்தது சவுக்கு கட்டைகள்.. முகத்தில் கோபம் மறைந்து ஒரு ஆசுவாசம் தோன்றியிருந்தது.. ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.. நெட்டையன் கிட்டே வந்து “அநியாயமா அந்த பைக்க எரிச்சுட்டானுங்களே.. “ என்றான்..

***

அவர்கள் சோர்ந்து போய் ஆளுக்கொரு பக்கமாக உட்கார்ந்தார்கள்.. எல்லோருக்கும் வயது இருபத்து ஐந்துக்குள் இருக்கலாம்…கொஞ்சம் தெலுங்கு வாடையடித்தது.. உருட்டுக்கட்டைகளை தூர எறிந்தார்கள்..

“ஒரு சிகரெட் கொடு ..” என்றான் ஒருத்தன்..

“நாலு பேருக்கும் சிகரெட் கை மாறியது.. பிரபுவை பார்த்து ஒருத்தன் நீட்ட “வேணாம்” என்றான்.

பெரியவர் ஆட்டோவுக்குள் உட்கார்ந்துக் கொண்டார்.. மூச்சுக்காற்று சூடாக வந்தது.. தண்ணீர் தாகம்.. பெயிண்ட் வாசனை.. அனல் கூரையில் உரைத்தது.. இருப்பதிலேயே சிறியவனாக இருந்த ஒருவன் சிகரெட் புகையை அண்ணாந்து விட்டான்.. இரண்டு.. மூன்று முறை அவ்வாறு செய்தான்.. அநேகமாக பிளஸ் டூ படிக்கிறவனாக இருக்கலாம்.. இன்னொருத்தன் சிகரெட்டை பாதியிலேயே அணைத்து மூக்கில் புகையை கக்கினான்.. சிவப்பு சட்டைதான் இன்னும் கோவம் தணியாமல் இருந்தான்.. சிகரெட் சீக்கிரம் கரைந்து அவ்வபோது சிவப்பு நுணி தெரிந்தது.. நெட்டையன் பிரபுவைப் பார்த்து “எங்கக்கா ஆட்டோவுல ஏறினதைப் பாத்தேன்.. அதான் தொறத்திட்டு வந்தோம்.. “ என்றான்..

“நாங்க பயந்துட்டோம்..” என்றான் மெதுவாக பிரபு.

பெரியவர் ஆட்டோவின் முன்புறம் தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடித்தார்.. காதுகளை அகல விரித்து உன்னிப்பாக கவனித்தார்.. துணியை எடுத்து முன்புறம் கண்ணாடியை துடைத்தார்.. வெளியே மெதுவாக இறங்கி பின்னாடி தோப்பை கவனித்தார்.. தன்னுடைய மேல் பாக்கெட்டை தன்னிச்சையாக தடவிப் பார்த்துக்கொண்டார்.. பிரபுவை மேலும் கீழும் பார்த்தார்..

சிவப்பு சட்டை உஷ்ணமாக “அந்த பைக் தம்பி நம்மாளு” என்றான்.

நெட்டையன்.. “புரியுது.. புரியுது..”

“கண்ணு முன்னாடியே எரிச்சுட்டானுங்க.. நாம வெடிக்கை பாக்கறோம்..”

“நாம நாலுப் பேரு.. அவனுங்க இருபதுப் பேரு.. தாங்குவோமா..?”

“நாம பயந்தாங்கோலிப் பசங்களா?”

“வாய அடக்கிப்பேசு.. நமக்கு அக்காதான் முக்கியம்.. அக்கா பத்தரமா இருக்கா.. அதுப் போதும்.. “

“அக்கா.. பெரிய அக்கா.. நம்மாளுங்களை பத்தி யோசனை பண்ணியா போய் உங்கக்கா கூடவே நீயும் ஒலிஞ்சுக்க…”

“என்னடா சொன்ன..” நெட்டையன் சிவப்பு சட்டை மேல் விழுந்தான்.. முகத்தின் மீது குத்தினான்.. மற்ற இருவரும் “வுடுங்க.. வுடுங்க..” என்பது போல அவர்கள் அருகில் செல்ல பிரபு பெரியவரிடம் “ஆட்டோவை எடுங்க.. எடுங்க.. இவனுங்க சரியில்லை..”

பெரியவர் “வெளியே போனா ஆட்டோ மாட்டிக்கும்..”

சிவப்பு சட்டை திமிறி விடுபட்டு “என்னையவே அடிக்கறியா..?” என்று நெட்டையனை திரும்ப குத்த நெட்டையனுக்கு உதடு கிழிந்து ரத்தம் தெரிந்தது.. மற்று இருவரும் ஆளுக்கொரு பக்கமாக இழுக்க சிவப்பு சட்டை ஆட்டோவின் மீது விழுந்தான்.. கையில் உருட்டுக்கட்டையை எடுத்து நெட்டையனின் மண்டை மீது போட்டான்.. “அய்யோ.. “ என்று நெட்டை கீழே சாய மற்ற இருவரும் சிவப்பு சட்டை மீது பாய்ந்தார்கள்.. அவன் கீழே சரிய முதுகு .. தலை.. கால் என்று உருட்டுக்கட்டையால் பதம் பார்த்தார்கள்..

“டேய்.. நான் உங்காளுடா… உங்காளுடா.. “ என்றான் அவன்..

பிரபு நெட்டையனை ஆட்டோவில் ஏற்றினான்.. தலை மண்டை பிளந்து ரத்தம் முகத்தில் வழிந்து பிரபுவின் சட்டையை நனைத்தது. பெரியவர் “என்னடா இது.. இப்ப எப்படி..?”

“எடுங்க.. எடுங்க.. வேற வழியில்ல..”

“ஆட்டோ மாட்டிக்கும்..”

“போலிஸ் வந்திருக்கும்.. இந்தாளை காப்பாத்தனும்..”

“இவனுங்க நாசமா போறானுங்க.. நாய்ங்க.. எனக்கு ஆட்டோ முக்கியம்.. வாடகை ஆட்டோப்பா.. வாடகைதான் எனக்கு வாழ்க்கை.. ஏதாவது ஆச்சுன்னா ஆயிரக்கணக்குல துட்டுக்கு எங்கப் போறது.. இழுத்திட்டு ரோடுக்கு போவோம்.. போலிஸ் வந்திருந்தா தப்பிச்சோம்.. “

அதற்குள் அந்த சின்னவன் ..”ஆட்டோவை எடுக்கப் போறியா.. இல்லையா.. “ என்றான்..

சிவப்பு சட்டை ஒரு மூலையில் கொத்தாக விழுந்திருந்தான்.. மற்று இருவரும். மேல் மூச்சு.. கீழ்மூச்சு வாங்கி.. “டேய்.. அண்ணனுக்கு என்னாச்சுன்னுப் பாரு..”

பிரபு “மயக்கமாயிட்டாரு.. உடனே ஆஸ்பிட்டலுக்குப் போகனும்..”

“ஆட்டோவைக் கெளப்பு..”

“முடியாது “ என்றார் பெரியவர்.. சின்னவன் கையில் வைத்திருந்து உருட்டுக் கட்டையால் முன்புறம் கண்ணாடியில் அடித்தான்.. அது அந்த இடத்தில் சிதறாமல் பளிச்சென்று விரிசலடைய.. இன்னொரு அடியில் சல்லியாக நொறுங்கியது.. பெரியவர் “நாய்ங்களா..” என்று அந்த சின்னவனை கீழே தள்ளி பக்கத்திலிருந்து மற்றொரு கட்டையால் ஒரு போடு போட்டார்.. ஏதும் அசைவில்லை அவனிடமிருந்து..

“அச்சச்சோ.. கொலை.. கொலை..” என்றான் மற்றொருவன்.. பெரியவர் அவனை பளார் என்று அறைந்தார்.. அவன் சுதாரிப்பதற்குள் அவனை பிடித்து ஆட்டோவில் முட்டினார்.. கீழே கிடந்த கட்டையால் அவன் முகத்தில் இறக்கினார்.. முனுக்.. முனுக்.. கென்று சத்தம் வந்தது அவனிடமிருந்து.. அடிபட்ட புலிப் போல சற்று ஒதுங்கி பெருமூச்சு விட்டார்.. பிரபு “போச்சு.. எல்லாம் போச்சு.. “

பெரியவர் கிட்டே வந்து “எறங்குடா மொதல்ல.. “

“அய்யா.. வந்து.. “

“எறங்குடா மொதல்ல.. “

பிரபு கீழே இறங்கினான்..

“அந்தாளையும் இறக்குடா.. சே.. ரத்தம்.. ரத்தம்.. “

பிரபு நெட்டையனை கீழே இழுத்துப்போட்டான்.. அவன் ஏதோ முனகினான்.. “உயிரோடதான் இருக்கான்.. இவனுங்கேல்லாம் சாகமாட்டானுங்க.. நாய்ங்க..” பெரியவர் ஆட்டோவை கிளப்பி உர்ரென்று பின்னால் திருப்பி ஒரு வட்டம் போட்டு வலதுபுறம் திரும்பி காணாமல் போனார்.. சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து காணாமல் போனது.. பிரபு அப்படியே உட்கார்ந்து சுற்றி முற்றியும் பார்த்தான்.. நான்கு பேரும் நான்கு விதமாக கிடந்தார்கள்.. வேறு வழியில்லாமல் நெட்டையனை மட்டும் தூக்கிக்கொண்டு அவசர அவரசமாக அந்த திருப்பத்தைக் கடந்து மெயின் ரோடுக்கு வந்தான்..

அந்த ரோடு ஆங்காங்கே கற்களும் கட்டைகளூமாக கிடந்தது. இரண்டு மரங்கள் கீழே விழுந்திருந்தது.. அந்தப் பெரியவரின் ஆட்டோ சுமார் அரை கிலோ மீட்டரில் கீழே ஒரு பக்கமாக விழுந்துக்கிடக்க.. ஏழெட்டு நபர்கள் அவரை கீழே இழுத்துப்போட்டு “நீ அவங்காளா..?” என்று உருட்டிக் கொண்டிருந்தார்கள்,.,

இரண்டுப் பேர் பிரபுவைப் பார்த்து அவனை நோக்கி ஓடி வந்தார்கள்.. அவர்கள் பின்னாடி இன்னும் இரண்டுப் பேர்.. பெரியவர் அகலமாக விழுந்துக் கிடந்தார்.. ஒருத்தன் ஆட்டோவின் பின்புறம் கத்தியால் கீறிக்கொண்டிருந்தான்..

பிரபு நெட்டையனை சரியாக தூக்கிப் பிடித்தவாறு அவர்களை நோக்கி நடந்தான்..

“யேய்.. நில்லு.. நில்லு.. யார்றா நீ.. ?”

வயிறு பெருத்த ஒருத்தன்.. “மாமு.. இவன் நம்ம ஏரியா இல்ல.. “

“அது யாரு மேல.. எறக்கு.. ?”

பிரபு..”இல்லீங்க.. அடிச்சுட்டாங்க.. அந்த ஆட்டோலதான் நான் வந்தேன்.. ராசி வீதிக்குப் போக.. “

“அப்புடியா.. இவன எறக்கு.. யாரு அடிச்சது..எப்ப நடந்தது.?.”

பிரபு நெட்டையனை கீழே படுக்க வைத்தான்.. “உசுரு இருக்குதுங்க.. அந்த ஆட்டோ டிரைவரு நல்லவருங்க.. வுட்டுடுங்க.. காப்பாத்திடலாம்”

வயிறு பெருத்தவன் கிட்டே வந்து அவன் நெட்டையனின் முகத்தைப் பார்த்து “மாமு.. இவன் வந்து.. இங்கப் பாரு.. அந்த வீடியோவுல வர்றான்பா.. தலீவரு தல மேல கல்ல தூக்கி போடுவானே.. இவன்தான்.. டேய் .. எழுந்துரு”

பிரபுவை இரண்டுப் பேர் கொத்தாக ஒரு பக்கம் தள்ளினார்கள்.. “ஓடிரு.. ஓடிரு.. “

“வுட்டுருங்க.. வுட்டுருங்க.. பாவங்க.. அவங்கக்கா வந்து.. “

“வந்தாவது.. போயாவது.. ஒடிரு..”

“டேய்.. இவனையும் விடாதீங்கடா.. தலீவரு செலய ஓடைச்சது இல்லாம ஜம்பமா வீடியோ வேற எடுத்து வுட்டீங்க இல்ல.. “

“இல்லீங்க.. வேணாங்க.. விட்டிருங்க.. “ “

“ஓட்றான்னு சொன்னோமில்ல.. ஓடிரு.. “

“திரும்பிப் பாக்காம ஓடு.. “

பிரபு ஓடினான்.. அழுதுக்கொண்டே ஓடினான்.. குழுந்தையின் அழுகுரல்.. சிரிப்புக் குரல்..

“கொழந்த..?”

“நல்லாயிருக்கான்.. இங்கப் பாரு.. “

மூச்சு வாங்க ஓடினான்.. பொண்டாட்டி.. அப்பா.. அம்மா.. கடைக்குட்டிச் செல்லம்.. ஆட்டோ டிரைவர்..

“வாடகைதான் என் வாழ்க்கை.. “

தடுமாறி அப்படியே மல்லாக்க விழுந்தான்.. மூச்சு உதறலெடுத்தது.. வயிறு மடங்கி கால்களில் நடுக்கம் தெரிந்தது..

“இவனுங்க நாசமா போறானுங்க.. நாய்ங்க..”

மீண்டும் எழ முடியவில்லை.. கைகளும் நடுங்க ஆரம்பித்தது.. மூச்சை இழுக்கும்போது நடுவில் நின்று விடுமோ என்று தோன்றியது..

“வாடகை ஆட்டோப்பா..”

தூரத்தில் அந்த ஆட்டோ எரிந்துக்கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *