விதைக்கப்பட்ட நம்பிக்கை
கதையாசிரியர்: கே.ராஜலக்ஷ்மி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2026
பார்வையிட்டோர்: 137

பர்மா.
அன்று தீபாவளி திருநாள். தெருவெங்கும் பட்டாசுச் சத்தமும், புதுத் துணியின் வாசனையும், இனிப்புகளின் மணமும் நிறைந்திருந்தது.
அந்தத் தெருவில் உள்ள ஒரு சிறிய வாடகை வீட்டில் வசித்து வந்தது அந்த வடஇந்தியக் குடும்பம். பக்கத்து நகரத்தில் உள்ள ஒரு தாபாவில் தலைமைச் சமையல்காரராக வேலை பார்த்தார் வீட்டின் தலைவர். அவருக்கு அன்பான மனைவி, துறுதுறுவென இருக்கும் ஒரு மகனும் மகளும். மொழி தெரியாத புதிய ஊர் என்ற தயக்கம் அவர்களின் முகத்தில் எப்போதும் இருக்கும்.
ஆனால், அதே தெருவில் வசிக்கும் பல்லவிக்கு அந்தத் தயக்கம் எப்போதுமே இருந்ததில்லை.
பல்லவி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை. அதோடு நின்றுவிடாமல், பகுதி நேரமாக எல்.ஐ.சி (LIC) முகவராகவும் செயல்பட்டு வந்தாள். தெருவில் யாருடனாவது சிரிக்கப் பேசி பழகுகிறாள் என்றால், அதில் நட்போடு சேர்த்து, “அக்கா… ஒரு நல்ல பாலிசி இருக்கு, யோசிச்சு பாருங்களேன்” என்ற சின்ன வியாபார நோக்கம் எப்போதும் மறைந்திருக்கும்.
அந்த வடஇந்தியக் குடும்பத்துடனும் பல்லவி மிக விரைவிலேயே நெருங்கிவிட்டாள். பல்லவிக்கு ஓரளவு ஹிந்தி தெரியும் என்பது அவர்களுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.
“நமஸ்தே பையா! காப்ஜி… கைசே ஹோ?” என்று பல்லவி தன் அரைகுறை ஹிந்தியில் நலம் விசாரிக்கும்போதே, அந்த குடும்பத்தின் முகத்தில் ஒரு தனி வெளிச்சம் வந்துவிடும். மொழி தெரியாத ஊரில் சொந்த மொழியில் பேச ஒரு ஆள் கிடைத்த மகிழ்ச்சி அவர்களுக்கு!
ஆனால், வழக்கம் போல பல்லவியின் மனக்கணக்கில், ‘இந்த பையாவிடம் பேசி, அவர் குடும்பத்திற்கு ஒரு ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்துக்கொடுத்துவிட்டால் இந்த மாத டார்கெட் முடிந்துவிடும்’ என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.
தீபாவளி நாளான அன்றும், கையில் ஒரு தட்டு நிறையப் பலகாரங்களுடன் அந்த வடஇந்தியக் குடும்பத்தின் கதவைத் தட்டினாள் பல்லவி…
தீபாவளிச் சுடர்களின் வெளிச்சத்தில் அந்தச் சிறிய வீடே அழகாக மின்னுவது போல் இருந்தது. தட்டில் இருந்த ஸ்வீட்டை எடுத்து பையாவின் குழந்தைகளுக்குக் கொடுத்தபடி, மெதுவாகத் தன் விஷயத்திற்கு வந்தாள் பல்லவி.
“பையா… தீபாவளி அதுவுமா நான் இதைப் பத்திப் பேசக் கூடாதுதான். ஆனா, வாழ்க்கைங்கிறது நிச்சயமில்லாதது. நாம இல்லாதப்போவும் நம் குடும்பம் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்னா ஒரு பாதுகாப்பு வேணும். இன்னைக்கு உங்களுக்குப் போனஸ் பணம் வந்திருக்கும்ல? அதுல ஒரு சின்னப் பகுதியை மட்டும் காப்பீட்டுக்கு ஒதுக்குங்க…”
பல்லவி ஹிந்தியிலும் தமிழிலுமாக மாற்றி மாற்றிப் பேச, பையாவின் மனைவி தன் கணவரைப் பார்த்தாள்.
“அக்கா சொல்றது நம்ம நன்மைக்குத்தானே… யோசிச்சுப் பாருங்களேன்,” என்று மனைவியும் துணையாக நிற்க, பையா புன்னகையுடன் சம்மதித்தார்.
“சரிமா… நீங்க சொல்றபடியே செய்யறேன்,” என்றார் பையா.
“ரொம்ப பெரிய தொகை எல்லாம் வேணாம் பையா. மாசம் மாசம் கட்டக்கூடிய அளவுக்கு, ஒரு இரண்டு லட்ச ரூபாய்க்கான பாலிசி எடுப்போம். இது உங்களுக்குச் சுமையாவே இருக்காது,” என்று கூறி, அன்றே விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்தாள் பல்லவி.
அதை வீட்டின் சாமிப் படத்தில் வைத்து வணங்கி, முதல் தவணைத் தொகையைப் பெற்றுக்கொண்டாள். “நாளைக்கே பாலிசி பாண்ட வாங்கிட்டு வந்து தர்றேன் பையா! ரொம்ப நன்றி!” என்று மகிழ்ச்சியோடு விடைபெற்றாள்.
பல்லவி சென்றதும், “அந்தப் பொண்ணு அடம்பிடிச்சு வாங்கிட்டாளேங்க…” என்றாள் மனைவி.
“பரவாயில்லமா… அவ நம்ம நல்லதுக்குத்தானே சொல்றா, போகட்டும்,” என்று பையா அமைதியாகச் சொன்னார்.
நாட்கள் உருண்டோடின. பல்லவி மிகக் துல்லியமாக, குறிப்பிட்ட தேதியில் வந்து தவணைத் தொகையைப் பெற்று, எல்.ஐ.சி அலுவலகத்தில் கட்டி முறையான ரசீதை அவர்களிடம் ஒப்படைத்து வந்தாள். பல்லவியின் திறமையான பராமரிப்பால் அந்த பாலிசி எந்தத் தடங்கலுமின்றித் தொடர்ந்தது.
புத்தாண்டு பிறந்த அந்த அதிகாலைப் பொழுது.
பல்லவி வழக்கம்போலக் காபியைக் குடித்தபடி செய்தித்தாளையைப் புரட்டிக்கொண்டிருந்தாள். உள்ளூர்ச் செய்திப் பக்கத்தைப் பார்த்தபோது அவள் கை சட்டென்று நடுங்கியது. செய்தியை மீண்டும் மீண்டும் கவனமாகப் படித்தாள்.
“புத்தாண்டு இரவில் சோகம்: லாரி மோதி தாபா சமையல்காரர் பலி!”
புத்தாண்டு கொண்டாட்டத்தால் தாபாவில் வியாபாரம் அதிகமாகி, இரவு 1:30 மணிக்கு வேலைகளை முடித்துவிட்டு டூவீலரில் வீட்டிற்குத் திரும்பும்போது, அதிவேகமாக வந்த கன்டெய்னர் டிரக் மோதி சம்பவ இடத்திலேயே பையா உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி அவள் தலையில் இடியாய் இறங்கியது.
பல்லவி பதறி அடித்துக்கொண்டு பையாவின் வீட்டிற்கு ஓடினாள்.
அங்கே பையாவின் மனைவி கதறி அழுதுகொண்டிருந்தாள். பல்லவியைப் பார்த்ததும் அவள் காலடியில் விழுந்து, “அக்கா… இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் உடம்பை எடுத்துட்டு வருவாங்களாம் அக்கா! எனக்கு ஒண்ணுமே புரியல… கடவுள் ஏன் என்மேல இவ்வளவு கொடூரத்தைக் காட்டினாரு? ரெண்டு சின்னக் குழந்தைகளை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணுவேன்? எனக்கு இந்த ஊரும் தெரியாது, உலகமும் தெரியாது. நான் வீட்டை விட்டுக்கூட வெளியே வந்ததில்லையே அக்கா!” என்று கதறினாள்.
பல்லவி அவள் தோள்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். “கலங்காதேம்மா… நான் இருக்கேன். உனக்கு எல்லாமே நான் பார்த்துக்கிறேன்!” என்று தைரியம் சொன்னாள்.
பையாவின் கைபேசியில் இருந்த எண்களைக் கொண்டு, சொந்த ஊரில் உள்ள உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தாள். தெருப் பெரியவர்களையும், தெரிந்த நண்பர்களையும் அழைத்து, இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தானே முன்னின்று நடத்தினாள்.
எல்லாச் சடங்குகளும் முடிந்த பின், பல்லவி அவளிடம் அமர்ந்து மெதுவாகப் பேசினாள்.
“தங்கச்சி, அடுத்து என்ன பண்ணப் போறேன்னு யோசிச்சியா? சொந்த ஊருக்கே திரும்பிப் போறியா, இல்ல இங்கேயே இருந்து ஏதாவது தொழில் தொடங்கப் போறியா? நீ என்ன முடிவெடுத்தாலும் அதுக்குத் தேவையான பண வசதியை நான் ஏற்பாடு பண்ணித் தர்றேன்.”
அவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “இல்ல அக்கா… சொந்த ஊருக்குப் போனா எனக்கு மனநிம்மதியே இருக்காது. அவர் உழைச்ச இந்த ஊர்லயே இருந்து, எனக்குத் தெரிஞ்ச சமையல் தொழிலை வச்சு என் குழந்தைகளைக் காப்பாத்திக்கிறேன்,” என்றாள் உறுதியோடு.
அடுத்த கணமே பல்லவி செயலாற்றத் தொடங்கினாள். எல்.ஐ.சி அலுவலகத்திற்கு விரைந்தாள். விபத்துக்காலக் காப்பீடு (Accidental Benefit) உள்ளிட்ட அனைத்துக் கோப்புகளையும் விரைவுபடுத்தி, அதிகாரிகளிடம் பேசி தீவிரமாக அலைந்தாள். பல்லவியின் விடாமுயற்சியால், மிகக் குறுகிய காலத்தில் விபத்து இழப்பீட்டுத் தொகையோடு சேர்த்து 10 லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகை (Claim Amount) அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்தது.
அந்தப் பணத்தைக் கையில் பெற்றபோது, அந்த வடஇந்தியப் பெண்ணின் கண்கள் நன்றியால் குளிர்ந்தன.
கணவர் விட்டுச் சென்ற சிறிய கடன்களை உடனடியாக அடைத்தாள். மீதித் தொகையை வங்கியிலும், குழந்தைகளின் எதிர்காலப் படிப்பிற்காகவும் சேமித்து வைத்தாள். கணவர் வேலை செய்த அதே தாபாவில் பேசி, சமையல் பிரிவில் தனக்கான ஒரு பணியையும் பெற்றுக்கொண்டாள்.
“என் பிள்ளைகளை நல்லா படிக்க வச்சு, ஆளாக்குவேன் அக்கா… இது என் புருஷன் மேல சத்தியம்!” என்று உறுதியெடுத்துக் கொண்டு தன் புதிய வாழ்க்கையைத் தொடங்கினாள்.
புதிய பயணத்தைத் தொடங்கும் முன், பல்லவியின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, “அன்னைக்கு அடம்பிடிச்சு நீங்க அந்த பாலிசியைப் போடலைனா… இன்னைக்கு நாங்க நடுத்தெருவுல நின்னிருப்போம் அக்கா. நீங்க எங்களுக்கு முகவர் இல்ல… தெய்வமா வந்து வழிகாட்டியிருக்கீங்க,” என்று கண்ணீருடன் நன்றி கூறி விடைபெற்றாள்.
பல்லவி தூரத்து அமைதியை நோக்கினாள். ஒரு காப்பீட்டு முகவராகத் தான் வாங்கிய கமிஷனை விட, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தைக் காப்பாற்றிவிட்டோம் என்ற மனநிறைவு அவளுக்குள் பேரொளியாய் வீசியது.
தொடர்புள்ள சிறுகதைகள்
ரயில் செல்வியும்… WAP 7 என்ஜினும்…
உரு.வளவன்
September 12, 2026
ராப்பிச்சை
மா.வீ.தியாகராசன்
September 12, 2026
மரணம் நம்மைப் பிரிக்கும் வரை
இரா.துரைமாணிக்கம்
September 12, 2026