விடவே விடாது!






(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
அத்தியாயம் – 3

எரிக்ப் வான் பானிசன் என்று ஒரு மேல்நாட்டுக்காரர். இவரது ஆய்வுகள் மிக விநோதமானவை. இவரது கண்டுபிடிப்பில் அமெரிக்காவும், ஐரோப்பாவும் அரண்டு போயிருக்கின்றன என்றால் மிகையே இல்லை.
பானிசன், பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் நம்பிக்கொண்டு இருப்பதை மறுக்கிறார்.
நம்மால் அறியப்படாத உலகங்களும் பிரபஞ்ச வெளியில் இருக்கின்றன என்பது அவர் கருத்து. ஒரு வயல்வெளியில் மூன்று கால்களையுடைய பறக்கும் தட்டுகள் இறங்கியதன் தடயங்கள் புகைப்படமாகவே எடுக்கப்பட்டு, அவரால் வெளியிடப்பட்டது.
‘அவை பறக்கும் தட்டுகளாக இருக்காது, இந்தப் பூமியில் வாழ்ந்து உயிரைவிட்ட ஆன்மாக்களின் சேட்டையாக இருக்கும்’ என்று சிலர் அது பற்றிக் கூறியபோது பலரும் சிரித்தனர்.
எது உண்மை?
நள்ளிரவு!
‘லே’ செல்லும் பாதை ஒரு முடிவுக்கு வந்த மாதிரி தோன்றியது. பனிப்புகை ஒரு ராட்சதப் பந்து போல வழியை மறித்தது.
டிரைவரும் இதற்கு மேல் பயணிக்க முடியாது என்பது போல காரை நிறுத்தினான். குளிர் தாங்காமல் கைகளை பரபரவென்று தேய்த்துக்கொண்டான்.
அருணாச்சலா பத்து மணிக்கெல்லாம் உறங்கப் போய் விடுவார். அவர் இரவில் விழித்திருந்த நாட்கள் மிக சொற்பம்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போத ஆர்வம் தாளாமல் டி.வி. முன் எப்படியோ உட்கார்ந்து கவனித்திருக்கிறார்.
அப்படிப்பட்டவரே அன்று காருக்குள் விழித்திருந்தார்.
குளிர் அவரை தூங்கவிடவில்லை.
இந்த அளவுக்கு குளிரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. கார் நிற்கவும் விசாரிக்கத் தொடங்கினார்.
“என்ன கார்த்தி… ஏன் கார் நின்னு போச்சு?”
“அவ்வளவுதான் சார்… இதுக்கு மேல போக முடியாது. ரோடே தெரியலை பாருங்க…”
“இது தெரியாம ஏன்யா என்னைக் கூட்டிக்கிட்டு வந்தீங்க?” அருணாச்சலா குரலில் கணிசமான கோபம்.
“சாரி சார்…. எப்படியும் போயிடலாம்கற நம்பிக்கை…”
“மண்ணாங்கட்டி. இப்ப என்ன பண்ணுறது? பக்கத்துல எதாவது ‘டிராவலர்ஸ் பங்களா’ இருக்கா?”
அவர் கேள்வியை கார்த்திகேயன் காஷ்மீரில் மொழி பெயர்த்து டிரைவரிடம் கேட்டான். டிரைவர், “தனக்கும் இந்தப் பக்கம் புதியது” என்றான்.
“இடியட்… என்னய்யா இப்படி பண்ணிட்டே? இப்ப என்ன பண்ணுறதாம்?”
அவரின் ஆத்திரம் மீண்டும் காஷ்மீரிக்கு மாறியது. டிரைவரிடமும் பதில்.
“பொதுவா ‘லே’வுக்கு தரை வழியில போறது ரொம்ப ரொம்ப கஷ்டம். விமானம்தான் சரியான வழி. அதுவும் ‘சீஸன்’லதான் போகும்….”
“உன்னோட இந்தப் பதிலை நான் இப்ப என் எம்.டி.கிட்ட சொன்னா ஓங்கி அறைவார்”.
“நான் என்ன சார் பண்ண… நீங்கதான் ரொம்ப அவசரம்னு கூப்பிட்டுக்கிட்டு வந்தீங்க”
“எல்லாம் சரிய்யா… குளிர் வேற வாய்ல இருக்கற எச்சிலையே ஐஸா மாத்தப் பாக்குது. இப்ப எதாவது ஒரு நல்ல வழியைச் சொல்லு…”
“எனக்குத் தெரியலை சார். பேசாம கம்பளி இருந்தா போத்திக்கிட்டு காருக்குள்ளேயே படுப்போம். விடியட்டும். சூரியன் வந்துட்டா பனி விலகி கொஞ்சம் பாதை தெரியலாம்.”
“அப்ப கூட தெரியலாம்னுதான் சொல்றே… காலையில் 5 மணிக்கு போனாத்தான்யா நாங்க சந்திக்க ஆசைப்பட்ட அந்த பிட்சுவைப் பார்க்க முடியும்.”
“சாரி சார்… எனக்கு இதுக்கு வழி சொல்லத் தெரியலை…”
“சரி, இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு?”
“மூணு மணி நேரம் பயணிக்கணும் சார். கி.மீ. கல்லைக் கூட பார்க்க முடியல. அவ்வளவு பனி.”
கார்த்திகேயனும், டிரைவரும் மாற்றி மாற்றி காஷ்மீரியில் பேசிக்கொண்டது அருணாச்சலாவுக்கு எரிச்சல் தந்தது.
“என்ன கார்த்தி… என்ன ரப்ச்சர்? என்ன சொல்றான் டிரைவர்.?”
“பக்கத்துல ஒரு ‘டிராவலர்ஸ் பங்களா’ இருக்காம். அங்க தங்கிக்கலாம்கறான்.”
கார்த்திக் தடாலடியாக புளுகினான்.
“அப்ப காரை அங்க விட வேண்டியதுதானே?”
“ஒரு அடிகூட எடுக்க முடியாதுங்கறான். எதிர்ல பாருங்க… கார் ‘பானட்’ கூட தெரியல…”
கார்த்திக் கையைக் காட்ட- அருணாச்சலாவும் பார்த்தார். காரின் ‘டேஷ் போர்டு’ கண்ணாடிக்கு அப்பால் சாம்பிராணி போட்டது போல் பனிப் புகையின் ஆக்கிரமிப்பு.
“நீ ஒரு இடியட்யா.. பேசாம வண்டிய திருப்பு. பால் டாலுக்கே போவோம்…”
“முடியாது சார்… எங்க பார்த்தாலும் பனியா இருக்கும்போது எப்படி சார் வண்டியை எடுக்க முடியும்?”
கார்த்திக் பணிவான குரலில்தான் சொன்னான்.
“இடியட் இடியட்…” அருணாச்சலா முகம் சிவந்து போனது. பெருமூச்சுவிட்டார். அந்த காற்றுக்கே பனிப் புகை, சிகரெட் புகை போல வெளிப்பட்டது.
தன் ‘பிரவுன்’ நிற கோட்டை இறுக்கிக்கொண்டார். டையையும் இறுக்கினார்.
“சரி… ஷால் எதாவது இருக்கா சூட்கேஸ்ல…?”
“டிக்கியில கம்பளியே இருக்கு சார்…”
“முதல்ல இறங்கி எடு…. குளிர் தாங்க முடியல பார். நிச்சயம் நான் நாளைக்கு காய்ச்சல்ல விழப் போறேன். கல்கத்தா கருத்தரங்கு, கன்னியாகுமரியில நம்ம டிப்போ கட்டட கிரகப் பிரவேசம்னு எதுக்கும் நான் போகப் போறதில்லை பார்…”
“இல்ல… போயிடலாம் சார்.”
“ஆமா, பரலோகத்துக்கு போயிடலாம்தான்…”
அவர் அலுத்துக்கொள்ள- காரைவிட்டு இறங்க முனைந்தான் கார்த்தி, காரின் கைப்பிடியே ஐஸாக மாறி கவ்வியது. திறந்த நொடி குபுகுபுவென்று பனி உள்ளே நுழைந்தது. வேகமாக மூடியவன், பின்புறம் சென்று ‘டிக்கி’யைத் திறந்தான்.
உள்ளே தண்ணீர் கேன், ரஜாய், கம்பளி என்று அத்தியாவசிப் பொருட்கள். மளமளவென்று ஒரு சிவப்பு ரஜாயையும், கம்பளியையும் எடுத்தான். திரும்ப ‘டிக்கி’யை மூடிவிட்டு திரும்ப நிமிர்ந்தான்.
‘டிக்கி’யைத் திறந்து மூடிய சப்தத்தைத் தவிர ஒரு குண்டூசி விழும் சப்தம் கூட இல்லாத நிசப்தம். அதற்கு நடுவே டக்டக்கென்று ஷ காலோடு யாரோ நடக்கிற மாதிரி ஒரு சப்தம் கேட்டது.
ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
பார்வை தானாக சப்தம் வந்த திக்கை ஏறிட்டது. மேஜர் சந்தர்பால்தான் தன் ராணுவ உடையில் விரைப்பாக நடந்துகொண்டிருந்தார்.!
“வாவ்…!” கார்த்திகேயனுக்குள் ஒரு புதிய தெம்பு.
‘அருகில் எதாவது ராணுவ குடியிருப்பு இருக்கிறதா என்ன?’
மனதில் எழுப்பிய கேள்வியோடு, “சார்…” என்றான். அதுவும் பலமாக.
ஆனால் அவரோ பனிப் புகைப் படலத்துக்குள் திரும்பவும் மறைந்துவிட்டிருந்தார்.
கார்த்திகேயனும் சில அடி தூரம் ஓடிச்சென்று பார்த்தான்.
இருட்டில் கண்கள் கரித்தன.
அந்த மிதியடி சப்தமும் கேட்கவில்லை!
கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.
மணி பன்னிரெண்டு…
அத்தியாயம் – 4
“ஆய கலைகள் அறுபத்து நான்கு என்பார்கள். இதில் ஜாலவித்தை தனி ரகம். எல்லோருக்கும் இது கைவந்துவிடாது. ஒருவர் ஜாதகத்தில் அதற்கு இடமிருக்க வேண்டும். ஜாதகம் அனுமதிக்கும் ஒருவர் தானாக இந்தப் பாதைக்கு வந்துவிடுவார்.
அவருக்கு ஸ்தூலம், சூட்சமம் எல்லாம் தன்னால் புரியும். மற்றவர்கள் இதெல்லாம் பொய் என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு, ஒதுங்கிச் சென்றுவிடுவார்கள். உலகம் தோன்றிய நாள் முதலாக இப்படித்தான் நடந்துவருகிறது!”
பரப்பளவிலும், கொள்ளளவிலும் பெரியது அந்த மயானம்!
ஊருக்கு தெற்கில் அடர்ந்த மரக் கூட்டங்களுக்குக் கீழே கூம்பு கூம்பான சமாதிகளோடு கிடந்தது.
நான்கைந்து எரிமேடைகள்!
சதா அவையும் கனன்றுகொண்டே இருக்கும். இதனால் ஓரளவு வெளிச்சமும், மிதமான புகையுமாகவே அந்த மயானம் எப்பொழுதும் இருந்தது.
செங்கோட்டுசாமி என்பவன்தான் வெட்டியான். ஆனால் அவனே கூட நள்ளிரவுகளில் அங்கே தங்க அச்சப்பட்டவனாக ஏழு, எட்டு மணிக்கே மயானத்தைவிட்டுக் கிளம்பிவிடுவான்.
வெறிச்சோடிக்கிடக்கும் அந்த மயானத்துக்கு சில மாந்திரீகர்கள் மட்டும் அவ்வப்போது வருவதுண்டு. அவர்கள்கூட காப்பு கட்டிக்கொண்டு… கையில் சக்கைப் பிரம்புடனும், அதன் நுனியில் சதங்கை மணிகளுடனும்தான் வருவார்கள்.
அப்படித்தான் உள்ளே நுழைந்தான் தர்மன் என்னும் ஒரு மாந்திரீகன், கறுப்புப் போர்வையால் உடம்பை மூடியவனாக – கையில் பிரம்புடன். அது அவ்வப்போது சிணுங்க – அவன் நடந்து வரும்போது லேசாய் புழுதி பறந்தது.
காலில் கவனமாக ஜாதிபத்திரி மரத்தின் பாதக்குரடுகளை அணிந்திருந்தான். சில வேர்கள், சில மரங்கள் துர் ஆத்மாக்களுக்கு சிம்ம சொப்பனம், கிட்டவே அண்டவிடாது.
மயான முகப்பில் ராட்சஸர்களின் பம்பைத் தலை போல இரண்டு தூங்குமூஞ்சி மரங்கள்.
இதில் துளிர்க்கும் தேன்- காய்களை சில குருவிகள் கொத்தித்தின்னும். அணில் கூட்டத்துக்கும் இந்த தூங்குமூஞ்சி மரம் என்றால் கொள்ளைப் பிரியம். சவுகரியமாக மரப்பட்டை இடுக்குகளில் புகுந்துகொண்டு தூங்க முடியும். இப்படி அவை தூங்கக்கூடும் என்பது தெரிந்தே சாரைப் பாம்புகளும், பச்சைப் பாம்புகளும் கூட அந்த மரத்தில் இரவானால் ஒரு ஊர்வலத்தை நடத்திப் பார்க்கும்.
சுவர் கோழிகளுக்கும் இந்த மரம் ஒரு அடைக்கல வீடு. இண்டு இடுக்குகளில் உட்கார்ந்துகொண்டு இரவு முழுக்க ரீங்காரமிட்டபடி இருக்கும். பாம்புகளுக்கும் மிகப் பிடித்த உணவு. பாம்போடு போட்டி போட ஆந்தைகள் படை எடுப்பதும் இந்த மரங்களிடம்தான்…
இத்தனை பிரதாபம்கொண்ட மரத்தடியில்தான் மயான நுழைவாயில் சுவரும், கிராதிக் கதவும் அமைந்திருந்தன.
அந்தக் கதவையொட்டி மயான வெட்டியான் செங்கோட்டுசாமி நின்றுகொண்டிருந்தான். ஏழு, எட்டு மணிக்கே ஓடிவிடுபவன் – மாந்திரீகன் தர்மனுக்காகத்தான் காத்திருக்கிறான் என்பது – தர்மன் வரவும் அவன் பணிவாகக் கும்பிடுவதில் தெரிந்துபோயிற்று.
“நல்லா இருக்கியாலே..”- தர்மனின் விசாரிப்பு.
“ஏதோ பொழப்பு நடந்துகிட்டு இருக்குதுங்க சாமி.”
“ஒண்ணும் உபத்திரவமில்லையே…?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. இங்க தங்கினாத் தானுங்களே…”
“ஏண்டா பயப்படுறே… சுட்டுப் பொழைக்கறதுதாண்டா உன்னோட விதி. உன்னை எந்த உசுர் என்ன பண்ணிட முடியும்?”
“அப்படி இல்லீங்க… மனசுக்கு பிடிக்கலீங்க. இப்பல்லாம் முந்தி மாதிரியும் கட்டைங்க வாறதில்ல. எல்லாகும் ‘எலெக்ட்ரிக் சுடுகாட்டு பக்கம் போயிடுறாங்க. பால் தெளிப்பு, பத்தாம் நாள் காரியம் எல்லாமும் ஒரே நாள்ல முடிச்சிடுறாங்க. காலம் ரொம்ப மாறிப் போச்சுங்க..”
*நீதான் அப்படி சொல்றே.. புயைப் பார்த்தா ஒண்ணுக்கு நாலு வெந்துகிட்டு இருக்கற மாதிரி தெரியுதே..?”
“இது இன்னும் சாஸ்திரத்துல நம்பிக்கை உள்ளவங்களோட கட்டைங்க…”
“அந்த நம்பிக்கை உள்ளவங்க எப்பவும் இருப்பாங்க. போகட்டும்…கன்னிக்குழி விழுந்ததா கேள்விப்பட்டுதான் உன்னை காத்திருக்கச் சொன்னேன் எங்க புதைச்சுருக்கே…?”
“நேரா போங்க… ஈசான்ய மூலையில் பாத்தாலே தெரியும்…”
“என்ன வயசு இருக்கும்?”
“ஒரு இருவத்தஞ்சு, முப்பது இருக்கலாம். கல்யாணம் ஆகலைங்கற கவலையில் விஷம் குடிச்சிடுச்சாம்…”
“ரொம்ப சவுகாயமாகப் போச்சு. அப்ப நான் வரட்டா…?”
தர்மன் கேட்க – செங்கோட்டுசாமி தலையைச் சொரிந்தான்.
“உன்னைத் திருத்தவே முடியாதுடா…” என்றபடியே ஒரு நூறு ரூபாயை எடுத்து கையில் வைத்தான்.
“சாமி ஈஈ…”
“என்னடா…?”
“கட்டாதுங்க. நீங்க போன பின்னால அதைத் திரும்ப பழைய மாதிரியே புதைக்கணும். நிறைய வேலை இருக்கு. விடியக்கறுக்கல்லேயே பால் ஊத்த வந்துடுவேன்னு வேற சொல்லிட்டு போயிருக்குறாங்க…”
“எப்பவும் இதே பல்லவியைப் பாடு.”
அலுப்புடன் இன்னொருநூறு ரூபாயை எடுத்து வைத்தான். செங்கோட்டுசாமியும் ஆனந்தமாக பல்லைக் காட்ட – தர்மன் மயானப் பாதையில் நடக்கத் தொடங்கிவிட்டான்.
மணி ஒன்று!
ஆண்டியப்பன் டீக்கடை அந்த வேளையிலும் திறந்திருந்தது.
செங்கோட்டுசாமி கைத்தடியோடு வரவும், ஆண்டியப்பன் ஒரு மாதிரி பார்த்தான்.
“என்னலே பாக்கறே… ஒரு டீயைப் போடு.”
போடுறது இருக்கட்டும். காட்டுல இருந்துதான் வாரீகளோ?”
“அதெல்லாம் உனக்கெதுக்கு…?”
“அது சரி… நான் கொட்டக் கொட்ட முழிச்சுகிட்டு கடையைத் திறந்து வெச்சிருக்கறது இரண்டாவது ஆட்டம் முடிஞ்சு வாரவங்களுக்கு. உன்னை மாதிரி சுடுகாட்டுல பேய் பிசாசோட மாரடிக்கறவங்களுக்குக் கிடையாது.”
“ஆரம்பிச்சுட்டியா… அதெல்லாம் ஒண்ணும் கிடையாது ஆண்டியப்பா. முனிசிபாலிடியில குப்பைங்களப் போட்டு எரிக்கற மாதிரிதான் நான் உடம்புங்களை எரிக்கறேன். பேய், பிசாசுங்கறதெல்லாம் டுபாக்கூர். பொய்யி…”
“டீ குடிக்கறதுக்காக என்கிட்ட புளுகாதே. தர்மர் சாமி போனதை நானும் பார்த்தேன். ஒண்ணும் இல்லாட்டி அவர் எதுக்கு அப்பப்ப சுடுகாட்டுக்கு வர்றாரு…?”
“அந்த ஆள் ஒரு டுபாக்கூர். பேயப் பிடிக்கறேன், குடுவைல அடக்கறேன்னு ஊரை ஏமாத்தத்தான் அந்த ஆளும் இப்படி எல்லாம் பண்ணுறான்.”
“ஊரை ஏமாத்துற ஆள் எதுக்கு அர்த்த ராத்திரியில்… அதுவும் கன்னிப் பெண்ணுங்கள் புதைக்கற அன்னிக்கா பார்த்து வரணும். வீட்ல இருந்துகிட்டே டபாய்க்கலாமுல்ல…?”
“எல்லாம் ஒரு “ஷோ’தான்…”
“நீ என்ன சொன்னாலும் சரி… நான் நம்பமாட்டேன். நீ இடத்தைக் காலி பண்ணு. உன் மேல கூட பொண நாத்தம் அடிக்குது,”
“அட நம்பு ஆண்டியப்பா. அந்த ஆள் ஒரு வகரம் பிடிச்சவன். விபசாரிகிட்ட போற மாதிரிதான் கன்னிப் பொணங்களைத் தேடி வாறான். பூசை, அதை மடக்கிப் பிடிக்கறது என்கறதெல்லாம் சும்மா உதார்…”
‘ஒரு டீக்காக செங்கோட்டுசாமி பேசிய பேச்சை நம்புவதா. இல்லை புறந்தள்ளுவதா’ என்றே ஆண்டியப்பனுக்குத் தெரியவில்லை.
நல்லவேளை….கிணிங் கிணிங் என்று பல சைக்கிள்களின் சப்தம் ஒலிக்க பக்கத்து தியேட்டரில் படம் முடிந்து ஒரு கோஷ்டி. அவன் கடையை நோக்கி வந்தது.
அதற்கு மேல் செங்கோட்டுசாமிக்கும் அங்கு நிற்கப் பிடிக்கவில்லை. முறைத்தபடியே கிளம்பிப் போனான்.
விடிந்துவிட்டது!
கும்முட்டி அடுப்பில் வைத்திருந்த பால் சுண்டிப் போயிருந்தது. பித்தளை வெந்நீர் பாய்லரும் நிறைந்து போய் டொக்கு டொக்கு என்று சொட்டிக்கொண்டிருந்தது. கல்லா மேஜை மேல் உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டிருந்தான் ஆண்டியப்பன்,
சொடேரென்னு முதுகில் யாரோ அடித்த மாதிரி இருந்தது. விழுந்தடித்தபடி எழுந்தான்.
எதிரில் கறுப்புப் போர்வையும், தலைப்பாகைத் தலையுமாக தர்மன்.
“சாமி ஈ…”
“என்ன சாமி ஈ… என்னடா கடை நடத்தற? இப்படியா தூங்கறது…?”
“கொஞ்சம் அசந்துட்டேன் சாமி..”
“சரி, சரி ஒரு டீயைப் போடு…”
“ஆகட்டுங்க….”- அவனிடம் நல்ல வேகம். அப்படியே கேள்வியும்…
“சுடுகாட்டுப் பக்கம் போன மாதிரி தெரிஞ்சிச்சே. பூசை எல்லாம் முடிஞ்சிச்சுங்களா?”
ஆண்டியப்பன் கேள்வி, தர்மரை சிருட்டென்று குத்துப் பார்வை பார்க்கவிட்டது. அந்தப் பார்வையில் ‘உனக்கெப்படித் தெரியும்?’ என்னும் கேள்வி.
“ராவைல அந்த வெட்டியான் பய வந்தான். அவன்தான் சொன்னான்…”- டீயைக் கலக்கியபடியே மென்று விழுங்கினான் ஆண்டியப்பன்.
“என்னன்னு சொன்னான்…?”
“அதான்… சுடுகாட்டுல விடிய விடிய நீங்க ஏதோ பூசை பண்ணுறதா?”
“அவ்வளவுதான் சொன்னானா… இல்லை இன்னும் எதாவது சொன்னானா…?”
“கோவிக்காதீங்க சாமி. உங்க கையால கொடுத்த எந்திரத்தை மாட்டுனதுல இருந்துதான் என் கடைக்கும் நாலு பேர் வர்றாங்க. உங்ககிட்ட நான் பொய் சொல்வேனா…?”- பவிசான பேச்சோடு அந்த அரக்கு வண்ண திரவத்தை தர்மன் எதிரில் நீட்டினான்.
“சமாளிக்காதே… செங்கோட்டுசாமி என்ன சொன்னான்னு நான் இப்ப அப்படியே சொல்லவா?”
“சாமி ஈ…”
“பேய், பிசாசு எல்லாம் டுபாக்கூர்னு சொன்னானா?”
“சாமி..”
“நான் வக்ரம் பிடிச்சவன். விபசாரிகிட்ட போற மாதிரி கன்னிப் பொணத்துகிட்ட வரேன்னானா…?”
“அ… ஆமா! அப்படியே சொல்றீங்களே…?”
“இதென்ன புடலங்கா… என் சடைக்குட்டிகிட்ட கேட்டா உன் கல்லாவுல இப்ப எவ்வளவு சில்லரை இருக்குன்னும் சொல்லிடும்.”
“நிசமாவா…?”
“நம்ப முடியல இல்ல… கொஞ்சம் பொறு…”
தர்மன் தன் கைவசம் உள்ள குச்சியின் நுனியை நெற்றிப் பொட்டருகே கொண்டு சென்றான். எதையோ முணுமுணுத்தான்.
பின் சில நொடிகளுக்குப் பிறகு குச்சியை விலக்கியவனாக “முந்நூத்திப் பத்து ரூபாய் நாப்பது காசு இப்ப உன் கல்லாவுல இருக்கணும். எண்ணிப் பார்த்துட்டு சொல்லு பார்ப்போம்…”
தர்மன் சொன்ன மறுநொடியே ஆண்டியப்பன் கல்லாவை விருட்டென்று இழுத்து எண்ணிப் பார்க்க ஆரம்பித்தான்.
எண்ணி முடித்தவன் முகத்தில் வியப்பின் குதிதாண்டவம்.
“என்ன?”
“கரெக்டா இருக்கு சாமி. எப்படி சாமி… எப்படி சொன்னீங்க?”
“அதான் சடைக்குட்டியோட சக்தி.”
“யார் சாமி அது சடைக்குட்டி?”
“நீ அதையெல்லாம் தெரிஞ்சிக்காதே. உனக்கெதுக்கு அதெல்லாம்? அதேநேரம் அந்த செங்கோட்டு சாமி வந்தா உள்ற விடாதே…”
“நான் எப்பவுமே அவனைகிட்ட சேக்கறது இல்லீங்க. ஆனா பெணம் எரிக்கற அவனே பேய் பிசாசெல்லாம் ஒண்ணுமில்லேன்னு சொல்றதுதான் ஏன்னு புரியல.”
“எல்லார் கண்ணுக்கும் தெரிய அது என்ன எல்.ஐ.சி. கட்டடமா…? எனக்கே அதைப் பார்க்க நாப்பது வருஷம் ஆச்சு. பத்து கோடி தடவைக்கும் மேல ஜெபிச்சு உரு ஏத்திகிட்ட பின்னாலதானே பாக்க முடிஞ்சிச்சு…”
“என்னென்னமோ சொல்றீங்க…?
“நான் எங்கடா சொன்னேன். இன்னும் எவ்வளவோ இருக்குடா இந்த பூமியில. சாத்தானோட பூஜை விளக்கும் ஒண்ணு இருக்கு. அதுமட்டும் எங்க இருக்குன்னு தெரிஞ்சுட்டா போதும். நான் இப்படி சுடுகாடு எங்கேன்னு தேடி வந்தெல்லாம் சிரமப்படவே வேண்டாம். இந்த செங்கோட்டுசாமி மாதிரி பிச்சைக்கார பசங்க. வாய்லேயும் விழுந்து எழுந்திருக்க வேண்டாம்.”
“அந்த விளக்குல என்னங்க இருக்கு… அது என்ன அலாவுதீன் விளக்குங்களா?”
“அலாவுதீன் விளக்கு வேற… இது வேற. அதைத் தேய்ச்சா பூதம் வரும். இதைத் தேய்க்கல்லாம் வேண்டாம். இதோட எட்டு திரியில் விளக்கை ஏத்தி…”
தர்மர் ஆவலாக சொல்ல வாயெடுத்து பிறகு- தப்பு தப்பு என்கிற மாதிரி அப்படியே பாதியில் நிறுத்தியவர், “விடு.. இதெல்லாம் எங்களோட போகட்டும்” என்றபடியே கையைச் சொடக்கி ஒரு எலுமிச்சம் பழத்தை வரவழைத்து, அதை அவன் எதிரில் நீட்டினார்.
“எதுக்கு சாமி?”
“பிடி… இதை இப்படி கடை முன்னால ஒரு நூல்ல கட்டு. வியாபாரம் இன்னும் சூடு பிடிக்கும். இந்த எடம் என்ன வாடகையா?
“ஆமாங்க…”
“மூணு மாசத்துல இதை நீ வாங்கிடுவே…”
அவன் அதைக் கேட்டுப் பரவசப்பட, டீயை ஒரே வாயில் உறிஞ்சியவராக கிளாஸை வைத்துவிட்டு சிரித்தபடியே நகர்ந்தார்.
வித்தியாசமான மாந்திரீகர் தான்!
– தொடரும்…
– ராணிமுத்து, நவம்பர் 1, 2009.