வாரிசு
கதையாசிரியர்: நீர்வை பொன்னையன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 24, 2026
பார்வையிட்டோர்: 50
(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கொள்ளி வைக்கிற ஆள் இஞ்சை வா”.
சைவக் குருக்கள்.
மூவர் தலைதோய்ந்து, கோடி வேட்டி சால்வை கட்டி வந்து நிற்கின்றனர். நெற்றி மார்பு, புயங்கள் எல்லா இடங்களிலும் திருநீற்றுப் பட்டைக் குறிகள் பளிச்சிடுகின்றன. அக்குறிகள் மூவரும் அசல் வெள்ளாளச் சைவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் பதைப் பறைசாற்றுகின்றன.
மூவரினதும் தலைமயிர்களிலிருந்து நீர்த்துளிகள் சொட்டுகின்றன.
“நேரம் போட்டுது கொள்ளி வைக்கிற ஆள் கெதியாய் வந்து எனக்குப் பக்கத்திலை இரு”.
சைவக் குருக்கள் அவசரப்படுத்துகின்றார்.
தலைமயிர் மொட்டையாய் சிரைக்கப்பட்டு நாலுமுழக் கோடிவேட்டி இரண்டு முழச் சால்வைத்துண்டுடன் கனகு நிதானமாக சைவக்குருக்களின் பக்கத்தில் அமருகின்றான்.
கூடியிருந்த மக்கள் மத்தியில் சலசலப்பு.
“உடன் பிறந்த உரிமைக்காற சகோதரங்கள் மூண்டுபேர் மலைபோல நாங்களிருக்கிறம்”.
கடைசிச் சகோதரன் செல்லையா.
“எவனுக்கோபிறந்த நளப்பயல் நீ .எங்கடை அண்ணணுக்கு கொள்ளிவைக்க உனக்கென்னடா உரிமை?”
இரண்டாவது தம்பி சின்னையா.
“அங்காலை தள்ளிப்போடா நளப்பயலே”.
மூன்று தம்பிமாரும் அட்டகாசமாய்க் கத்திக்கொண்டே முன்னுக்கு வருகின்றனர்.
கனகு?
ஆறுமுகத்தாருக்கு நான்கு ஆண்பிள்ளைகள், மூன்று பெண்பிள்ளைகள். எல்லாருக்கும் தெரிந்த விசயம்.
ஆறுமுகத்தார் தன்னுடைய சொத்தில் ஒரு பகுதியையும், தனது தமையனுடைய மலட்டுச் சொத்தையும் சேர்த்து மூண்டு பெண்பிள்ளை களுக்கும் பங்காய்ப் பிரித்து நல்ல இடங்களில் கல்யாணம் கட்டி வைத்தார்.
மூன்று பெண்களும் இட்டலிடஞ்சல் இல்லாமல் பின்குட்டியளோடை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆறுமுகத்தார் தன்னுடைய மிகுதிச் சொத்துக்களை ஐந்து பாகங்களாய் பிரித்து, நான்கு பங்குகளையும் நான்கு மகனமார் களுக்கும் கொடுத்து செல்வாக்கான குடும்பங்களில் கல்யாணம் கட்டிவைத்தார்.
ஐந்தாவது பங்கு சொத்து?
மூத்த மகன் செல்லத்துரை பொறுப்புள்ள குடும்பக்காரனாய், தகப்பனாரைப், போல சிரத்தையுடன் கமம் செய்து வந்தார். கனகு பக்கபலம்.
இரண்டாவது தம்பியின் தொழில் தரகு, எந்த நேரமும் குடி, தன் குடும்பத்தைக் கவனிப்பதேயில்லை. அவனுடைய மனைவி தன் சொந்நச் சகோதரங்களின் உதவியுடன் தோட்டச் செய்கையில் கிடைக்கின்ற வருவாயைக் கொண்டு வாழ்கின்றாள்.
மூன்றாவது மகன் கோட்டுப்புலி எந்த நேரமும் யாழ்ப்பாணக் கோட்டடியில் வழக்காளிகளுக்கு புரக்கராசி, அப்புக்காத்துமாரை ஏற்பாடு செய்து கொடுப்பார். அவர்கள் தரகு கொமிசன் கொடுப்பார்கள். இதில் கிடைக்கும் வருமானத்துடன் குடும்பத்தைக் கொண்டிழுக்கின்றார்.
முகத்தாருடைய பூர்வீக வீடுவளவு, கோயில் கிணத்தடித் தோட்டத்தில் பதினாறு பரப்பு செல்லத்துரையருக்கு. மிகுதிப் பதினாறு பரப்புத் தோட்ட வருமானம் பிள்ளையார் கோயில் எட்டாம் திருவிழா, வேட்டைத்திருவிழா செலவும், கந்தசுவாமி கோயில் சூரன் போர் இரவு திருவிழாச் செலவும்.
கோயில் கிணத்தடி பதினாறு பரப்பு தோட்ட வருமானத்தைக்கொண்டு இரண்டு கோயில் திருவிழாக்களையும் செல்லத்துரையர் சிறப்பாக நடத்தி வருகின்றார்.
ஆறுமுகத்தாற்ரை மூத்த மகன் தகப்பனாரைப் போல தேவார திருவாசகம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் போன்றவற்றிற்கு முறையாக உரை சொல்லிவருகின்றார். தகப்பன் ஆறுமுகத்தார்தான் செல்லத்துரை யருக்கு புராணங்களுக்குப் பயன் சொல்லக் கற்றுக் கொடுத்தார்.
செல்லத்துரையரின் குடும்பம் செழிப்பாக வளர்ந்துகொண்டு வந்தது. கனகுவும் செல்லத்துரையருக்குப் பக்கபலமாய் சேர்ந்து உழைத்து வந்தான். செல்லத்துரையரின் ஏனைய மூன்று சகோதரங்களுக்கும் இது பிடிக்க வில்லை. அவர்களுக்கு எரிச்சல் பொறாமை.
செல்லத்துரையருக்கு ஒரு ஆண், இரண்டு பெண்பிள்ளைகள். செல்லத்துரை யரின் மகன் கந்தசாமி தகப்பனாரைப்போல கடும் உழைப்பாளி. தொழிலில் மனப்பூர்வமாய் பாடுபட்டு உழைத்தான். நல்ல வருமானம். தோட்டச் செய்கையுடன் பரீட்சார்த்தமாக ஒரு இனிப்புத் தொழிற்சாலையையும் ஆரம்பித்தான்.
இனிப்புத் தொழிற்சாலை வளர்ச்சி கண்டது. முப்பது இளம் பெண்களும் ஏழு இளைஞர்களும் வேலை செய்கின்றனர். யாழ்குடா நாட்டின் பல பகுதிகளுக்கும் இனிப்புப் பண்டங்களை வினியோகிப்பதற்கு ஒரு ஹயஸ் வானையும் வாங்கினான். கந்தசாமியின் ‘வேல்முருகன் இனிப்பு’ பண்டங்களுக்கு குடாநாட்டில் நல்ல கிராக்கி.
கந்தசாமியின் இனிப்புத் தொழிற்சாலையை இயக்கம் கையகப்படுத் தியது. விரக்தியடைந்த கந்தசாமி வெளிநாடு செல்லமுயன்றான். கந்தசாமியின் பாடசாலை நண்பன, கல்வியங்காடு உண்டியல் மணியன் அவனுக்கு உதவி செய்கின்றான்.
தந்தை செல்லத்துரையரும் கனகுவும் தோட்டச் செய்கையை பொறுப்பேற்பு.
கந்தசாமி கனடா சென்று ஆறுமாதங்களில் தகப்பன் செல்லத் துரையருக்கு திடீரென இரத்த அழுத்த நோய் கண்டது. செல்லத்துரையரின் இடது கையும் காலும் செயலிழப்பு.
கனகுதான் நோயாளி செல்லத்துரையரை நாலு வருடங்களாய்ப் பராமரிப்பு.
நாலு வருடங்களாய் செல்லத்துரையர் படுத்த படுக்கை. அவரின் வலசலமெடுப்பு, குளிப்பு முழுக்கு உணவு தீத்துவது மருந்து கொடுப்பது எல்லாமே கனகுதான்.
செல்லத்துரையரின் சகோதர சகோதரிகள், உறவினர்கள் நான்கு வருடங்களாய் ஒருவர்தானும் ஒருநாளாவது அவரை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
“கனகு”.
கிணற்றிலிருந்துவரும் மெல்லிய குரலோசை கனகுவின் செவியில் ஒலிக்கின்றது.
அதிகாலை. நேரம் சரியாகத் தெரியவில்லை. கனகுவுக்கு சரியான உடல் அலுப்பு.
இரவிரவாய்க் கண் விழித்து சற்றுமுன்னர்தான் கனகுவின் விழிகள் மூடின.
இரவு முழுவதம் துரையரின் உடலுழட்டல், வாய் புலம்பல். கனகுவிற்கு ஒன்றும் புரியவில்லை.
‘எண்டைக்குமில்லாதபடி இவர் உடம்பை உழட்டிறாரே. வாய்புசத்துறாரே’
நான் என்ன செய்ய?
கனகு தவிப்பு.
நேரம் ஆறு மணியாகப் போகிறது சுவரில் உள்ள மணிக்கூட்டில்.
“கனகு. அந்த திருநீற்றை எடுத்து என்ர நெத்தியில பூசு”.
திருநீற்றை சாந்தி பூசுகிறான்.
“கனகு ‘அம்மையே அப்பா’ எண்ட தேவாரத்தைப்படி”. கனகு படிக்கின்றான் கனிவான குரலில்.
‘பாரொடு விண்ணாய்..” பாடுகின்றான் கனகு
“பால்நினைந்துாட்டும், பாலுக்குப் பாலகன்…’
“ஏறுமயில் – திருப்புகழையும் படி”
“இறவாமல் பிறவாமல் பெருவாழ்வு தருவாயே..”
துரையரின் விழிகளில் திடீரென ஜீவஒளி பொங்கிப் பிரவாகிக்கிறது. குரலில் ஒரு எள்ளல்.
விழிகள் நிலைகுத்தி நிற்கின்றன.
கனகு நிதானமாகத் துரையாரின் கண் இமைகளை மூடுகின்றான். அடுத்தவீட்டு செல்லம்மா அக்காவைக் கூப்பிடுகின்றான் கனகு. இருவரும். சேர்ந்து துரையாரின் கை கால்களை நேராக நிமிர்த்துகின்றனர். கால் பெருவிரல்களிரண்டையும் வெள்ளைத்துணியால் பிணைத்துக்கட்டுகின்றாள் செல்லம்மா.
“ஐயோ எண்டு உரத்துக் கத்து மூண்டுதரம்”.
செல்லம்மா கூறுகின்றாள்.
“ஐயோ! என்ரை ஐயோ!'”
“ஐயோ எங்கடை ராசாவே எங்களை விட்டிட்டுப் போட்டியே !”
கனகுவின் அவலக்குரல் காலைவேளையில் அப்பிரதேசத்தில் ஓங்கி ஒலித்து வியாபிக்கின்றது.
துரையரின் வீட்டைச்சுற்றி அனைத்துத் தம்பிமாரினதும் நெருங்கிய உறவுகளினதும் வீடுகள். ஒருவர்தானும் அவலக்குரல் வந்த துரையரின் வீட்டை எட்டிக் கூடப்பார்க்கவில்லை.
செல்லம்மா ஆச்சி துரையரின் வீடுவளவைக் கூட்டி சுத்தம் பண்ணுகின்றா.
ஓன்பது மணியளவில் துரையரின் தம்பிமார் மூவரும் ஒவ்வொருவராக வருகின்றனர்.
“செத்தவீட்டுச் செலவுக்குப் பணம்?”
தமக்குள் கதைக்கின்றனர்.
சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக அவ்விடத்தைவிட்டு நழுவிச் செல்கின்றனர்.
ஏற்கனவே கனகு ஒரு இளைஞனை கல்வியங்காட்டு மணியனிடம் அனுப்பிவிட்டான்.
பகல் பதினொரு மணியளவில் கல்வியங்காட்டு உண்டியல் மணியனின் மோட்டார் சைக்கிள் துரையரின் வீட்டிற்கு வருகிறது.
மணியன் வந்ததை அறிந்த துரையரின் சகோதரங்கள் வந்து கூடுகின்றனர்.
கனகுவின் கைகளில் மணியன் இருபதினாயிரம் ரூபாயை செத்தவீட்டுச் செலவுக்கென்று கொடுக்கின்றான்
“விசாப்பிரச்சனையாலை தான் செத்தவீட்டுக்கு வரேலாதாம். காசைப் பார்க்காமல் செத்தவீட்டை நல்லாய்ச் செய்யட்டாம். அந்தியேட்டி, வீட்டுச் சவண்டி செலவுக்கு பிறகு தான் பணம் அனுப்பிறன் எண்டு துரையரின் மகன் சொன்னதாய்.” மணியம். சொன்னான்.
“எங்கட அண்ணன்ரை செத்தவீட்டை டீங்காய்ச் செய்யவேணும். எங்கடை ஊரிலை இதுக்கு முந்தியோ அல்லது இனிமேலோ எவனும் செய்யாத அளவுக்குப் பெரிசாய் அண்ணற்ரை செத்தவீட்டை நடத்திக்காட்டிறம்.
துரையரின் தம்பிமார் மூவரும் மார்தட்டிக் கூறுகின்றனர்.
“எங்கட ஊரிலயுள்ள ஆறு சோடி பறைமேளம், அதோட அச்செழு நாலு, புத்துார் ஆறுசோடி, கரையூரில இருந்து ஆறுசோடி மேளங்கள் கொண்டுவரவேணும்.”
தின்னவேலி, கல்வியங்காடு இடங்களிலிருந்து இரண்டு சோடி பாட்டுக்காரர் சவக்கிரியை நேரத்தில் தேவாரம் பாடுறதுக்கு.
வீட்டு வாசலிலை இருந்து சுடலைவரை கட்டாடி அப்பாத்துரையின்ர நிலபாவாடை. வண்ணார சீனியன்ரை தண்டிகைப்பாடை, இருபாலை சைவக்குருக்கள் செத்தவீட்டு பிரேதக் கிரியை செய்ய. சீனித்தம்பிக் கட்டாடியின்ரை தண்டிகைப்பாடை, எல்லாம் ஏற்பாடு செய்யவேணும்.”
நாளைக்குப் பகல் ஒரு மணிக்குப் பிரேதம் எடுத்து, பின்னேரம் ஐந்து மணிக்குத்தான் சுடலைக்குப் போய்ச்சேரவெணும் ” மூன்று சகோதரங்களும் கூறுகின்றனர்.
எல்லா ஏற்பாடுகளையும் துரையரின் தம்பிமார் கனகச்சிதமாய் செய்து முடிக்கின்றனர்.
பதினைஞ்சு இருபது போத்தல் தென்னங்கள்ளு நாவலடிச் சம்பரியிட்டை ஓடர். தேத்தண்ணிக்கடை பூதத்தம்பியிட்டை ஆறு போத்தல் தென்னஞ் சாராயத்துக்கும் சொல்லிவைச்சிருக்கு.
மூண்டு சகோதரங்களும் தலை தோய்ந்து கோடி வேட்டி சால்வைகள் கட்டி முனைப்பாய் நிற்கின்றனர்.
இரண்டு தம்பிமார் கள்ளுவெறியில் தள்ளாடுகின்றனர்.
“கொள்ளி வைக்கிற ஆள்வந்து எனக்குப் பக்கத்திலை இரு.” சைவக் குருக்கள் மீண்டும் கூப்பிடுகின்றார்
அவருக்கு முன்னால் கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. மூண்டு சகோதரங்களும் முன்வருகின்றனர்.
மூவரையும் விலக்கிக்கொண்டு, முன்வந்து கனகு சைவக் குருக்களுக்குப் பக்கத்தில் அமர்கின்றான்.
‘நளப்பயலே எழும்படா”. எங்கட அண்ணருக்குக் கொள்ளி வைக்க நீ ஆரடா? உனக்கென்ன உரிமை இருக்கடா?’.
மூவரும் உரத்துக் கத்துகின்றனர்.
அவர்களது கொக்கரிப்பைப் பொருட்படுத்தாது கனகு அமைதியாய் இருக்கின்றான்.
“உங்கட அண்ணன் நாலு வரியங்களாய் கைகால் வழங்காமல் படுத்தப்படுக்கையாய் கிடந்தானே? உங்களிலை ஆராவது ஒருத்தனாவது ஒருநாளாவது எட்டிக்கூடப் பாத்தியளா?”.
சுந்தரம் வாத்தியார் அவர்களைக் கேட்கின்றார்.
“இப்ப எங்கட அண்ணன் எண்டு உரிமை கொண்டாடுறியள். உங்களிலை ஒருத்தராவது ஒருநாள் ஒரு சொட்டுத் தண்ணியாவது உங்கட அண்ணனின்ர வாயிலை விட்டிருக்கிறியளா?”
மூவரும் வாயடைத்து மௌனமாய் நிற்கின்றனர்.
“நாலு வரியங்களாய் இந்தச் கனகுதான் உங்கடை அண்ணரைப் பராமரிச்சவன். அவற்ரை மலசலமெடுத்தாலென்ன, குளிக்க முழுக வாத்தாலென்ன எல்லாம் அவன்தானே செய்தவன். ஆனா இப்ப நீங்கள் எங்கடை அண்ணனென்டு உரிமை கொண்டாட வந்திட்டியள். இதுக்கு நாங்கள் இடம்தரமாட்டம்.”.
சுந்தரம் வாத்தியார் உறுதியாய்க் கூறுகின்றார்.
“ஓய் சுந்தரம் வாத்தி! இதிலை தலையிட நீ ஆர்? அங்காலை போடா.” வெறியில் தள்ளாடிய கடைசித்தம்பி கூறிக் கொண்டு சுந்தரம் வாத்தியாரை நோக்கி வருகின்றான்.
மார்க்கண்டு எண்ட இளைஞன் வெறிக்குட்டியின் கையைப் பிடித்து வெளியே இழுத்துச்செல்கின்றான். மற்றைய இரு சகோதரங்களும் தலையிட முன் வருகின்றனர். இரண்டு வாலிபர் அவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிடு கின்றனர்.
“வாய் பொத்திக் கொண்டு நீங்கள் நில்லுங்கோ. இல்லாட்டி நடக்கிறது வேறை.”
வாலிபர்கள் அவர்களை எச்சரிக்கின்றனர்.
“குருக்கள் கிரியையை துவங்குங்கோ”.
சுந்தரம் வாத்தியார் நிதானமாய்க் கூறுகின்றார்.
குருக்கள் சாந்தியின் கழுத்தில் பூநுாலைப் போடுகின்றார்.
கிரியை தொடங்குகிறது.
– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.
| நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
ஆர்.மணிமாலா
August 28, 2026
மாறாத எழுத்து
ரா.நீலமேகம்
August 28, 2026
பூவரசு பூத்திருக்கு
குரு அரவிந்தன்
August 28, 2026