கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2026
பார்வையிட்டோர்: 65 
வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்

(1946ல் வெளியான நவீனம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27

22. முருகன்

    நான் மூன்று வருஷங்களுக்கு முன் இருந்த நிலைமையையும், இப்பொழுதிருக்கும் நிலைமையையும் யோசித்துப் பார்த்தால், எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. அப்பொழுது தாயார் இறந்த வருத்தம் பணக்கஷ்டம், தங்கையைப் பிரிந்திருக்கவேண்டியதால் ஏற்பட்ட கவலை, தந்தையின் மனக்கஷ்டம், என் வேலைக் கஷ்டம். எல்லாம் ஒரே சோக நாடகமாக இருந்தது. கடவுள் செயலால் நான் இப்பொழுது சுகவாசியாக இருக்கிறேன். 

    அப்பொழுது நான் ஒரு வேலையாளாக இருந்தேன். போது ஒரு பூக்கடையின் முதலாளி ஸ்தானத்தில் இருக்கிறேன். என்னிடமே நாலு வேலையாட்கள் இருக்கிறார்கள்.என் தகப்பனாருக்கு இப்பொழுது தோட்டத்தில் வேலையே கிடையாது. வீட்டில் அமைதியாக இருந்து, புராணங்களை வாசித்துக் கொண்டிருக்கிறார். அவ ருக்கு இந்த மாதிரி ஓய்வு கொடுத்தது என் மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. இடைவிடாத உடலுழைப் பினாலும், மனக் கஷ்டத்தினாலும் அவர் ரொம்பவும் இளைத்துப் போய்விட்டார். அதனாலேயே இருமல் நோயும் அவரைப் பிடித்துக் கொண்டு விட்டது. ஆனாலும், அவர் மனக்கவலையில்லாமல் சந்தோஷமாக இருக்கிறார். அதுவே போதுமானது. 

    தங்கை மோகனா இப்பொழுது என்னோடு இல்லையே என்று எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட்டேன். சமையலுக்கும் ஆள் வைத்திருக்கிறேன். இப்பொழுது மோகனா இங்கிருந்தால் ஒருவருக்குமே கஷ்டமிராது. உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கலாம். தகப்பனாரும் இம்மாதிரி சொல்லிச் சொல்லி அடிக்கடி என் தங்கையைப்பற்றி ஏக்கமடைவார். 

    ஒரு சமயம் என் தங்கையைப் பார்ப்பதற்காக அவர் திருவனந்தபுரத்திற்குப் போயிருந்தார். அனாதாஸ்ரமத்துத் தலைவி மோகனாவைப் பார்ப்பதற்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார்களாம். மோகனா தன் பெற்றோர்களை மறந்து சந்தோஷமாக இருந்து வருகிறாளாம். இந்தச் சமயத்தில் தகப்பனாரைக் கண்டு பேசிப்பழகினால் அவளுடைய மனம் நிலைகுலைந்து விடுமாம். படிப்பில் புத்தியே செல்லாமல் தகப்பனையே நினைத்து வருந்திக் கொண்டிருப்பாளாம். அவள் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால் அவளைச் சேர்ந்த மனிதர்கள் ஒருவருமே அங்கு வந்து அவளைப் பார்க்கக் கூடாதென்றும் சொல்லி அனுப்பிவிட்டார்களாம் அந்த ஆஸ்ரமத்துத் தலைவி. என் தகப்பனாருக்கும் அந்த அம்மாள் சொன்னது சரியென்று பட்டதனால் மோகனவைப் பாராமலே திரும்பி வந்துவிட்டாராம். எனக்கும் கூட ஆசையாகத் தானிருக்கிறது மோகனாவைப் பார்க்க வேண்டுமென்று. ஆனால் ஆஸ்ரமத்துத் தலைவி அனுமதிக்க மாட்டார்களே என்ன செய்வது! ஆகையால் தங்கையைப் பார்த்துவர வேண்டுமென்ற ஆசையும் நிராசையாகிவிட்டது. விதியிருந்தால் எப்பொழுதாவது சந்திப்போம். இல்லையானால் நாங்கள் அவளை விட்டுப்பிரிந்த அன்றே என் உலகமும் அவள் உலகமும் வேறாகிவிட்டது என்று நினைத்து நான் ஆறுதல் அடைய வேண்டியது தான். நான் அவளைப் பிரிந்தபோது ஆறுவயதுக் குழந்தை. இப்போது ஒன்பது வயதுப்பெண்ணாக இருப்பாள். அதாவது எதிர் வீட்டுப் பெண் லட்சுமியின் உயரம் இருப்பாள். ஆனால் லெட்சுமி யைப் போல அசடாக இருக்க மாட்டாள் என் தங்கை! தகப்பனார் கூடச்சொன்னாரே மோகனா மிகவும் கெட்டிக்காரியாகப் படித்து வருகிறாளென்று ஆஸ்ரமத்துத் தலைவி சொன்னதாக. நன்றாகப் படித்துப் பெரியவள் ஆகி ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்து உபாத்தியாயினி ஆவாள். அப்போதாவது அவள் இருக்குமிடத்தை அறிந்து அவளைச் சந்திக்க முடியுமா என்று பார்ப்போம். அந்தச் சமயம் நான் அவளுடைய அண்ணன் என்று சொன்னாலே அவள் ஆச்சரியமடைவாள். சிறு வயதில் நடந்ததெல்லாம் அவளுக்கு நினைவிருக்கவா போகிறது. அப்பொழுது நான் அவளைச் சந்திக்கும்படியான ஒரு ஆச்சரிய சம்பவம் நடக்கிறதோ என்னவோ பார்க்கலாம். 

    தகப்பனாருக்கும் என் தங்கையைப்பற்றி இப்பொழுது அவ்வளவாகக் கவலை இல்லை. அவளைப் பார்க்க முடியாதென்று நிச்சயமாகி விட்டபின் அதைப்பற்றிச் சிந்திப்பானேன் என்று மறந்து வருகிறார். சொல்லப் போனால் அவர் இப்பொழுது கவலையேயின்றி ஆனந்தமாகவே இருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். பூஜையெல்லாம்கூட ஆரம்பித்திருக்கிறார். காலையில் வெகு சீக்கிரமாக எழுந்து வெந்நீர் ஸ்நானத்தை முடித்துக்கொண்டு பூஜை செய்ய உட்கார்ந்துவிடுவார். பூஜை முடிந்த உடனே சாப்பாடு. நானும் அவரோடு உட்கார்ந்து சாப்பிட்டால்தான் அவருக்குத் திருப்தி. சாப்பிடும்போது அரசியலைப்பற்றிக்கூட அவர் ஏதாவது தமாஷாகப் பேசுவார். ஏனென்றால் இப் பொழுது அவர் மூக்குக்கண்ணாடி மாட்டிக்கொண்டு தின மும் பத்திரிகை படித்துவருகிறார். குடும்பக் கவலையை ஓரளவுக்கு மறந்தால்தானே நாட்டைப்பற்றி நினைக்க முடிகிறது. 

    சாப்பாடு முடிந்ததும் நான் கடைக்குப் புறப்பட்டு விடுவேன். அவர் ஈசிச்சேரில் உட்கார்ந்து பத்திரிகை படிக்க ஆரம்பித்துவிடுவார். சில நாட்களில் நான் மத்தியானச் சாப்பாட்டிற்கு வரும்போதுகூடப் பத்திரிகை அவர் கையில் இருக்கும். பத்திரிகை படிப்பதில் அவருக்கு அவ்வளவு ஆசை! ஒரு எழுத்து விடாமல் படித்து விடுவார். விளம்பரங்களைக்கூட விடுவதில்லை. பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் வேறு அவரிடம் வந்து தாத்தா தாத்தா என்று பிரியமாகப் பேசி விளையாடிக் கொண்டிருப்பார்கள். பிள்ளைகளோடு விளையாட்டுப் பேச்சுக்கள் பேசுவதில் அவருக்கு எவ்வளவோ ஆனந்தம். அவர்கள் வீட்டில் அம்மா அப்பா ஏதாவது சண்டை பிடித்தால் இந்தத் தாத்தாவிடம்தான் வந்து முறையிடுவது வழக்கம். பிள்ளை களுக்கு இவர் சொல்லும் ஆறுதல்தான் ரொம்பப் பிடித்த மாயிருக்கும். தெருவில் தின்பண்டங்கள் விற்றால் இவர் அந்தப் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுப்பார். 

    மத்தியானம் சிறிது நேரம் தூங்கிவிட்டுப் புராணங் களை ராகம் போட்டு வாசிக்க ஆரம்பித்து விடுவார். சாயங் காலம் ஆனதும்,வீட்டுத் தோட்டத்தில் போய் ஏதாவது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருப்பார். உட லோடு ஒட்டிய வழக்கம். சிறு காய்கறித் தோட்டம் ஒன்று வீட்டுக்குப் பின்னால் போட்டிருக்கிறார். அதில் விளைந்த காய்கறியென்றால் அவருக்கு ரொம்பப் பிரியம்: பூப்பறிக்கும் பழைய வழக்கமும் அவரை விடவில்லை. வாசல் பக்கம் ரெண்டு மல்லிகைச்செடி, ரோஜாச்செடி இவை களையும் வைத்து வளர்க்கிறார். 

    சில நாள் மாலை வேளையில் கைத்தடியை ஊன்றிக் கொண்டு உலாத்தப்போவார். எங்கள் கடைக்கும் அடிக்கடி வருவார். தான் கஷ்டப்பட்ட அதே கடைத்தெருவில் அவர் மகனாகிய நான் பெரிய புஷ்பக்கடை வைத்து நடத்தி வருவது அவருக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அவர் அடிக்கடி சொல்வார் “இதே கடைத்தெருவில் மாதம் 20 ரூபாய்கூட சம்பாதிக்க முடியாமல் நான் திண் டாடினேன். இப்போது ஏதோ கடவுள் செயலால் நமக்கு நன்றாக வியாபாரம் நடந்து வருகிறது” என்று. நான் மூன்று பூந்தோட்டங்களைச் சொந்தமாகவே வாங்கியிருக்கிறேன். இன்னும் நான்கு தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறேன். இந்த ஏழு தோட்டத்துப் பூக்களும் காலை 10 மணிக்குள் வர்ணபேதமுடைய மலைகள்போல என் கடையில் வந்து குவிந்துவிடும். தோட்டங்களுக்கு என் அனுபவத்தின் மூலமாக உரம் வைத்துப் பாதுகாப்பதனால் திரட்சியான பூக்கள் ஏராளமாகக் கிடைத்து வருகிறது. 

    வெளித்தோட்டங்களிலிருந்தும் பூக்கள் வரும். பூக்கொண்டுவந்து போடுபவர்களுக்கும் என் வேலையாட்களுக்கும் என் மேல் ரொம்பப் பிரியம். நான் அவர்களுடைய கூலியைக் குறைப்பதில்லை. நானும் கூலிவேலை செய்து கஷ்டப்பட்டவன் தானே. வேலைக்காரர்களுடைய கஷ்டங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் அவர்களை என்னால் கூடியவரை திருப்தி செய்வேன். வியாபாரத்தில் கொள்ளை லாபமடிக்க வேண்டுமென்று நான் எண்ணுவதில்லை. அதனால் சின்ன வியாபாரிகள் வாடிக்கைக்காரர்கள் எல்லோரும் புஷ்பம் வாங்குவதற்கு என் கடையைத்தான் தேடி வருவார்கள். வெளியூர்களுக்கும் அடிக்கடி ஏராளமாகப் பூமாலைகள் கட்டி அனுப்பி வருகிறேன். நான் முதலாளி ஸ்தானத்தில் அமர்ந்திருந்தாலும் நெருக்கடி ஏற்படும்போது நானும் வேலையாட்களுடன் உட்கார்ந்து மாலை கட்டுவேன். இதனால் வேலைக்காரர்களுக்கு என்னிடமிருந்த மதிப்பும் பிரியமும் அதிகமாவதை நான் கண்டிருக்கிறேன். 

    கோவில்களில் திருநாள் வந்துவிட்டாலோ அல்லது பெரிய வீடுகளில் கல்யாணங்கள் வந்துவிட்டாலோ இந்த முருகன் தன் வீட்டுக்குப் போகக்கூட நேரமிராது. நானே நேரில் போய் பூ ஜோடனை செய்தால்தான் அவர்களுக்குத் திருப்தி ஏற்படும். நான் என்னுடைய அசௌகரியத்தைக் கூடப் பாராமல் அவர்களைத் திருப்திப்படுத்த முயற்சிப்பேன். புஷ்பரதம், அல்லது புஷ்பப்பல்லக்கு அலங்கரித்து விட்டு எதிரே நின்று பார்த்தேனானால் எனக்கே ஆனந்தமாக இருக்கும். நூதனமான சித்திர வேலைகளையும் அமைத்து நான் அவர்களை மகிழ்விப்பேன். வாடிக்கைக்காரர்களின் திருப்திதான் எனக்குமேலான ஆஸ்தி. அவர்கள் என் வேலைத் திறமையைப் பார்த்துவிட்டு புஷ்பவிலை, ஜோடனைக் கூலி இவைகளோடு சந்தோஷத்தினால் எனக்குத் தனியாகச் சன்மானமும் கொடுப்பார்கள். 

    எனக்கு வியாபாரத்தில் மாதம் சராசரி ஐந்நூறு ரூபாய் வரை கிடைத்து வந்ததென்றால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். வருஷ ஆதாயத்தை என் கடைக்கணக்குப் புஸ்தகத்தில் பார்த்தபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நாகர்கோவிலில் மற்றப் புஷ்ப வியாபாரிகளைவிட எனக்குத்தான் அதிக லாபம். இதனால் சிலருக்கு என் மேல் பொறாமைகூட ஏற்படும். ஆனால் அவர்கள் பொறாமைப் படும்படி விடுவது கிடையாது. அவர்களுக்குப் பொறாமை ஏற்படுவது சகஜம். ஆகையால் அவர்களிடமே வலியச் சிநேகிதம் பண்ணிக்கொண்டு அவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வழிகளைச் சொல்வேன். இதனால் அவர்களும்கூட என்னிடம் பிரியமாக இருந்தார்களே யொழிய என்னை வெறுக்கவில்லை. பிறரிடம் இனிமையாகப் பேசினால், அவர்கள் நம்மீதுப் பிரியமாக இல்லாமல் வேறு எப்படி இருக்கமுடியும்? ‘அன்பின் வழியது உயிர் நிலை’ என்று வெகு அழகாகத்தான் குறளாசிரியர் கூறி யிருக்கிறார். நல் வாழ்க்கைக்கு இன்றியமையாத வழி காட்டி, திருக்குறள்தான். குறள் மூலமாக நாம் உலகத்தையே காணமுடிகிறது. மக்களின் உள்ளங்களையே காண முடிகிறது. 

    அப்பாவிடம் சில அருமையான குறள்களை எடுத்துச் சொல்லுவேன். நான் திருக்குறளை இவ்வளவு கவனமாகப் படிப்பதைப்பற்றி அவருக்கு ரொம்ப திருப்தி. “மகன் தந்தைக்காற்றும் உதவி” யை நான் பரிபூர்ணமாகச் செய்து விட்டேனாம். இன்னும் ஒன்றே ஒன்றுதான் பாக்கியிருக்கிறதாம். அதாவது அவர் சொற்படி நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டுமாம். இருபது வயதிற்குள்ளாகவா கலியாணம்! இன்னும் நாலைந்து வருஷங்கள் கழித்துத்தான் நான் கலியாணம் செய்துகொள்ளப் போகிறேன். இப்பொழுதே இங்கு பெண்ணைப் பெற்றிருப்பவர்கள் என்னிடம் கலியாணப் பேச்சை பேச வருகிறார்கள். 

    23. சாரதாம்பாள்

      வைத்தியர் சொல்லியபடி பல ஊர்களைச் சுற்றிப் பார்த்துவருவது மனதிற்கு எவ்வளவோ ஆறுதலாகத்தான் இருக்கிறது. புதிய புதிய காட்சிகள். புதிய புதிய மனிதர்கள்! புதிய புதிய பழக்கவழக்கங்கள்; மனோபாவங்கள். பல ஊர்களை பார்த்தாகிவிட்டது. முக்கடலும் சேர்ந்து கொந்தளிக்கும் கன்னியாகுமரியின் காட்சி என் மனதிற்குள்ளேயே நிற்கிறது. அங்கு மூன்று நாட்கள் தங்கினேன். அங்கேயே இருந்துவிடலாமா என்று கூடத் தோன்றுகிறது. சூர்யோதயமும் சந்திரோதயமும் அங்கு தனியழகுடன் விளங்குகிறது. அங்கு வீசும் காற்றும் கடலலைகளும் இந்தியநாட்டை ஆவலோடு வந்து தழுவு வதுபோல இருக்கிறது. கடலோரம் குமரி அன்னையின் கோவில் அமைந்திருப்பது கண்கொள்ளாக்காட்சி. 

      அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு வந்து நான்கு நாட்கள் ஆகிறது. இங்கும் பல அதிசயங்களைப் பார்த்தேன். பெரிய மிருகக்காட்சிசாலை! அழகான கடற்கரை. எங்கும் தோப்பும் துரவுமாகப் பச்சைப் பசேலென்றிருக்கிறது. மேற்குக் கடற்கரைப் பிரதேசம் முழுவதுமே மிகவும் செழிப்பாகத்தானிருக்கிறது. மலைவளமும் கடல்வளமும் சேர்ந்துவிட்டால் கேட்பானேன்! இங்குள்ள ஜனங்களின் மனப்பாங்கும் பளிங்கு போலக் கபடமற்றதாக இருக் கிறது. எளிய வாழ்க்கை! இங்குள்ள சாதாரணப் பெண் கூட ரதிபோல அழகாயிருக்கிறாள். இந்தப் பெண்களின் தந்தம் போன்ற உடலழகைப் பளீரென்று எடுத்துக் காட்டுவதற்குக் கன்னங்கரேலென்று பள பளப்பான கூந்தலும் அமைந்திருக்கிறது. சுந்தரியின் கூந்தலும் இப்படித்தான் ரொம்ப அழகாக இருந்தது. அதைப்பற்றியெல்லாம் நான் இப்பொழுது நினைத்து என்ன பயன்? 

      நேற்று அந்த அனாதாஸ்ரமத்திற்குப் போய்விட்டு வந்த பிறகு எனக்கு இதைப் பற்றியே நினைப்பாக இருக்கிறது. அந்தப் பெண்ணைப் பார்த்தது முதல் ஆஸ்ரமத்தில் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் பெயர் மோகனாவாம். இப்படிப்பட்ட அழகான குழந்தை அனாதையாகவா இங்கு கொண்டு வந்து சேர்க்கப்பட வேண்டும். யோக்யதையும் செல்வமும் உள்ள உயர்ந்த குடும்பத்தில் இருக்க வேண்டிய பெண் அனாதாஸ்ரமத்தின் ஆதரவில் வளர்கிறது. யாரோ நாகர் கோவிலிலுள்ள ஒரு பண்டாரம், வளர்க்க வழியில்லை என்று கொண்டு வந்து விட்டானாம். அவன் இந்தக் குழந்தைக்குச் சொந்தக்காரனாக இருக்க மாட்டான். எங்கேயோ பணக்காரர் வீட்டிலிருந்து நகையோடு குழந்தையைத் திருடிக் கொண்டு வந்திருப்பான். மேலே கிடக்கும் நகையைக் கழட்டிக்கொண்டு இந்த மாதிரிப் பொய் சொல்லி அதை அனாதாஸ்ரமத்தில் தள்ளி விட்டுப் போய்விட்டான் போலிருக்கிறது. குழந்தைக்கு ஒன்றும் கெடுதல் செய்யாமல் ஆஸ்ரமத்திலாவது கொண்டு சேர்த்தானே! அந்தமட்டில் அவன் நல்லவன்தான். 

      மோகனா! பெயரே மனோகரமாக இருக்கிறதே! என்ன அழகாகப் பேசுகிறது அந்தப்பெண். குரல் கணீரென்று இருக்கிறது. அதன் பேச்சு என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எல்லாவற்றையும்விட அதன் முகமும், கைகளும், கைவிரல்களும் நாட்டியத்திற்கு ஏற்ற மாதிரி மிருதுவாகவும் துடி துடிப்புடனும் அமைந்திருக்கின்றன. விரல்களெல்லாம் தந்தக் குச்சிகள் போல ஒன்றுசேர்ந்து உணர்ச்சியோடு துவளுகின்றன. அவள் என்ன பேசினாலும் அத்தனை பாவத்தையும் காட்டியல்லவா பேசுகிறாள். அவள் பேசுவதையும் ஒடி விளையாடுவதையும் பார்த்துக்கொண்டே சாயங்காலம் வெகுநேரம் மோகனா வரை ஆஸ்ரமத்திலேயே இருந்து விட்டேன். தன் வாத்திச்சியம்மாளிடம் கதை சொன்ன போது, பயங்கரம், கோபம், சாந்தம், ஏளனம் இந்த மாதிரி உணர்ச்சிகளை யெல்லாம் எவ்வளவு சரளமாக வெளியிடுகிறாள்! பூர்வ ஞானம் இருந்தாலொழிய ஒரு பெண் இவ்வளவு கெட்டிக்காரத்தனமாக இருக்க முடியாது. 

      ஆஸ்ரமத்திலுள்ள ஆசிரியைகள் தலைவி எல்லோருமே மோகனாவிடம் ரொம்பப் பிரியமாகத்தான் இருக்கிறார்கள். நான் திரும்பத் திரும்ப அந்தப் பெண் மோகனாவைப் பற்றியே ஏதாவது சொல்லிக்கொண்டிருந்ததைக்கண்டு ஆஸ்ரமத்தலைவி ரொம்ப ஆச்சரியப்பட்டாள். கடைசியில் அந்த அம்மாளே கேட்டுவிட்டாள் “நீங்கள் அந்தப் பெண்ணினுடைய அபிநயங்களைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்களே. உங்களுக்கு அபிநயத்தில் ஆவல் அதிகமோ?” என்று. நான் என் கதையைச் சுருக்கமாகச் சொன்னேன். சுந்தரி என்னைப் பரிதவிக்க விட்டுவிட்டு ஓடிப்போனதையெல்லாம் நயமாக மறைத்து “அவள் ஒரு கணவனை மணந்து கொண்டு நாட்டியக் கலையையே விட்டு விட்டாள். அதனால் என் நாட்டியக் கலையை ஒரு பெண் ணுக்குக் கற்றுக்கொடுத்துவிடவேண்டும் என்று ஆவல்” என்று என் உள்ளத்தில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டேன். ஆஸ்ரமத் தலைவிக்கும் நாட்டியக் கலையில் ரொம்ப ஆர்வம் உண்டென்று தெரிந்தது. நான் என் பெயரைச் சொன்னவுடனேயே “அந்தக் காலத்தில் உங்கள் நாட்டியத்தைப் பற்றி நான் ரொம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று சந்தோஷப்பட்டு என்னை மிகவும் உபசரித்தாள். நாளை வருவதாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். இன்று சீக்கிரமாகவே அங்கு போகவேண்டும். 

      நேற்று நான் சொல்லியதிலிருந்து மோகனாவை நான் நாட்டியக்கலை பயிற்றுவிப்பதற்காக விரும்பி வேண்டுகிறேன் என்பதை ஆஸ்ரமத்துத் தலைவி நன்றாகப் புரிந்து கொண்டிருப்பாள். ஆஸ்ரமத்திலுள்ள பிள்ளைகளை மற்றவர்கள் எடுத்துக் கொண்டு போய் வளர்த்துக் கொள்வதற்கு அனுமதி உண்டா என்றெல்லாம் பொதுப்படையாகவே நான் விஷயங்களைக் கிரகித்தேன். 

      குழந்தையே இல்லாதவர்கள் எத்தனையோ பேர் வளர்ப்பதற்குக் குழந்தைகள் வேண்டுமென்று கேட்டதுண்டாம். அவர்களுக்கெல்லாம் கொடுக்க முடியாதென்று கண்டிப்பாகவே சொல்லி விடுவார்களாம். செல்லப் பிள்ளைகளாக வளர்த்து அவர்களைக் கல்வியறிவற்ற மூடமாக்கி விடுவார்கள் என்பது ஆஸ்ரமத்திலுள்ளவர்களின் எண்ணம். 

      ரொம்ப அபூர்வமாக, தகுந்த முகாந்திரத்தின்மேல், அவர்களுக்குச் சரியென்று தோன்றும் பட்சத்தில், ஆஸ்ரமத்திலுள்ள பிள்ளைகளை மற்றவர்களிடம் கொடுப்பதும் உண்டு என்று அந்த அம்மாள் சொன்னது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. அது போல ஒன்றிரண்டு குழந்தைகளை ஆஸ்ரமத்திலிருந்து அனுப்பியும் இருக்கிறார்களாம். யாரோ ஒரு ஜமீன்தார் தனக்குப்பின் வாரீசு இல்லையென்று ஆஸ்ரமத்தாரிடம் அனுமதி பெற்று இங்குள்ள ஒரு பிள்ளையை ஸ்வீகாரமாக எடுத்துக் கொண்டு போய் வளர்த்து வருகிறாராம். அந்த ஜமீன்தார் ஏற்கனவே ஆஸ்ரமத்திற்கு ஏராளமான நன்கொடை கொடுத்திருந்தாராம். இதை உத்தேசித்தே தங்கள் ஆஸ்ரமத்திலுள்ள ஒரு பிள்ளையை ஜமீன்தாருக்குக் கொடுத்தார்களாம் அவர்கள். 

      ஒரு குழந்தையை ஆஸ்ரமத்திலிருந்து மற்றவர்களிடம் கொடுக்க வேண்டுமானால் அவர்கள் பல தடவை கூடி ஆலோசிப்பார்களாம். ஆஸ்ரமத்தைச்சேர்ந்த யாவரும் சம்மதித்தால் தான் குழந்தையை அனுப்புவார்களாம். இதெல்லாம் ஆஸ்ரமத்தின் சட்டங்கள் என்று அந்த அம்மாள் பொதுப்படையாகவே எடுத்துச்சொன்னாள். 

      நாளைக்கு ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றி உங்களோடு வெகு நேரம் பேசவேண்டுமென்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேனல்லவா! என் குறைகளையெல்லாம் இன்றும் அந்த அம்மாளிடம் எடுத்துச்சொல்லி எப்படியாவது மோகனாவை இங்கிருந்து வாங்கிக் கொண்டு போய் வளர்க்க வேண்டும். இதற்காக நான் எத்தனை நாள் தங்கவேண்டி யிருந்தாலும் பரவாயில்லை. ஆஸ்ரமத்திற்கு நான் ஐயாயிரம் ரூபாய் நன்கொடையளித்தாலாவது என் ஆவலை அவர்கள் தெரிந்து கொள்ள மாட்டார்களா! தலைவி மிகவும் கருணையுள்ளவளாக இருக்கிறாள். நான் நாட்டியக் கலையைப் பயிற்றுவிப்பதற்காகத் தானே மோகனாவைக் கேட்கிறேன். நாட்டியக்கலைக்கென்றே அந்தப் பெண் ணின் உடல்கட்டு அமைந்திருக்கிறது. புத்திசாலியாகவும் இருக்கிறாள். சுந்தரியைவிட விரைவாகவே இந்தப் பெண் நாட்டியத்தில் பயிற்சி பெறுவாள் என்று தெரிகிறது. நான் எவ்வளவு காலம் நாட்டியம் ஆடியிருக்கிறேன். எவ்வளவு காலம் நாட்டியத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறேன்! இந்த அனுபவங்களின் மூலம்தான் நான் இவ்வளவு துணிவாகச் சொல்கிறேன் என் நாட்டியத் திறமையைப் போதிக்க மோகனாவைப்போல வேறு பெண் கிடைப்பது அரிது என்று. அந்தப்பெண் என்னோடு எவ்வளவு பிரியமாகப் பேசினாள். கிளி கொஞ்சுவது போல இருக்கிறது அவள் பேச்சு! இப்பொழுது பத்துப்பதினோரு வயதுதான் இருக்கும். இன்னும் இரண்டு மூன்று வருஷத்திற்குள் நன்றாக நாட்டியமும் சங்கீதமும் கற்றுக் கொண்டு விடுவாள். அப்புறம் எனக்குக் கவலையே இல்லை. சுந்தரியைப் பற்றி எனக்கு நினைப்பு வராது. நான் தலையைக் கீழே போடும்வரை நிம்மதியாக வாழலாம். என் கலையை வரப் போகும் தலைமுறையிலுள்ள ஒரு தகுந்த பாத்திரத்தினிடம் ஒப்படைத்து விட்டேன் என்ற ஆத்ம திருப்தியும் ஏற்பட்டு விடும். 

      மோகனாவை எண்ணிக்கொண்டு நான் என்னவெல்லாமோ மனக்கோட்டை கட்டுகிறேன். ஒரு வேளை ஆஸ்ரமத்துத் தலைவி அவளை எனக்குக் கொடுக்க முடியாதென்று மறுத்துவிட்டால்! மறுப்பதற்குக் காரணமே இல்லை. அவர்கள் சொன்ன நிபந்தனையின்படி ஒரு கலையைக் கற்றுக்கொடுப்பதற்காகத்தானே அந்தப் பெண்ணைக் கேட்கிறேன். ஆஸ்ரமத்திற்குத் தாராளமாக நன்கொடையும் கொடுக்க உத்தேசித்திருக்கிறேன். அந்த அம்மாளும் என் நடனத்தைப் பற்றி முன்னமே நன்றாகக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். “நாளை அவசியம் வரவேண்டும். உங்கள் அபிப்பிராயங்களை என்னிடம் தாராளமாகச் சொல்லலாம்” என்றெல்லாம் கூடச் சொன்னார்களே. என்னோடு வந்து வசிப்பதற்கு அந்தப் பெண்ணுக்கும் இஷ்டம் இருக்கலாம். சிறுபெண்தானே! ஆஸ்ரமத்திலேயே இருப்பதைவிட வெளியுலகத்தில் சேர்ந்திருக்க ஆசைப்படத்தான் செய்யும். நான் காட்டப்போகும் அன்பிலிருந்து அதுவும் என்னுடன் பிரியமாக இருக்கும். இப்பொழுது சொந்தக்காரர்களை மறந்து விட்டுத்தானே ஆஸ்ரமத்தில் இருக்கிறது. இதுபோல் ஆஸ்ரமத்தை மறந்துவிட்டு என்னுடன் சந்தோஷமாக இருக்காதா?  


      என் நம்பிக்கை வீண்போகவில்லை. நான் இன்று ஆஸ்ரமத்திற்குள் போனவுடனேயே தலைவி என்னைப் பிரமாதமாக வரவேற்று உபசரித்தார்கள். மோகனாவும் என் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டாள். நான் தயங்கித் தயங்கித்தான் பேச முடிந்தது. “மோகனாவை நான் வளர்ப்புக் குழந்தையாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று ஆரம்பிப்பதற்குள்ளேயே “அம்மா, இன்று இதற்காகவே நீங்கள் வருவீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். நான் இங்குள்ள ஆசிரியைகளிடமெல்லாம் இதைப்பற்றித் தனியாக அபிப்பிராயம் கேட்டேன். மோகனாவைத் தங்களுக்குக் கொடுப்பது பற்றி ஒருவருமே ஆக்ஷேபிக்கவில்லை” என்று தலைவி சொன்னார்கள். உடனே என் உடம்பு ஆனந்தத்தால் சிலிர்த்தது. மோகனாவிடம் கூட இதைப்பற்றிக் கேட்டார்களாம். தலைவியின் சொல்படி கேட்பதாகச் சொன்னாளாம் அவள். சிறு வயதிலேயே எவ்வளவு அருமையான குணம். நான் போய் உட்கார்ந்தவுடன் மோகனா என்னையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததன் காரணம் இப்பொழுது தான் புரிந்தது. அவள் இந்த மாதிரி பதில் சொன்னாள் என்று கேட்டதும் அவளை வாரியெடுத்து முத்தமிட்டேன். ஏழைக்குப் புதையல் கிடைத்ததுபோல இருந்தது நான் மோகனாவைப் பெற்றது. என்ன பேசுவது, அவர்களுக்கு எப்படி நன்றி செலுத்துவது என்றே எனக்கு விளங்கவில்லை. “என் ஆவலைப் பூர்த்திசெய்த தாங்கள் நீடூழிகாலம் வாழவேண்டும். இந்த ஆஸ்ரமம் பெருகித் தழைத்து வளரவேண்டும். ஊருக்குப்போன மறுநாளே ஆஸ்ரமத்திற்கு நன்கொடையாக நான் ஐயாயிரம் ரூபாய்க்குச்செக் அனுப்பப் போகிறேன்.” என்று படபடவென்று சொன்னேன். அவ்வளவு சந்தோஷ ஆவேசத்தை நான் ஒரு போதுமே காட்டியது கிடையாது. நான் இந்த உலகத்தில் இருப்பதாகவே உணரவில்லை. மோகனாவைப் பெறுவதன் மூலம் என் லட்சியமே கைகூடிவிட்டதென்று. சொல்லலாம். என் சொத்துக்களை யெல்லாம் மோகனாவின் பேருக்கே எழுதி வைக்கப் போகிறேன். 

      மோகனா நாட்டியம் கற்றுப் பெரியவளாகி ஒரு அரங்கில் நாட்டியமாடுவதை என் கண்களால் பார்க்க வேண்டும். அவ்வளவு தான் நான் இந்த ஜென்மத்தில் விரும்புவது. இதை மோகனா நிச்சயமாக நிறைவேற்றி வைப்பாள். 

      மூன்று நாளில் மோகனாவை என்னோடு அனுப்பி விடுவார்களாம். நான் அதுவரை ஆஸ்ரமத்திலேயே இருக்கப் போகிறேன். 

      24. முருகன்

        பணக்காரன் ஆனால், கஷ்டங்களும் அதிகமாகத்தான் வரும்போலிருக்கிறது. இந்த வருஷம் எனக்குக் கல்யாணம் நடத்திவிட வேண்டுமென்று பெண் வீட்டுக்காரர்கள் என்மீது வலை வீசி நெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். யூனியன் போர்டுக்கு நானே தலைவனாக வேண்டுமென்று ஊராரின் ஏகோபித்த வேண்டுதல். பெரிய இடங்களில் தங்களுக்குக் காரியம் ஆகவேண்டுமென்று என்னிடம் சிபார்சுக்காக வருகிறவர்களின் தொல்லை வேறு. என் கடையைப்பற்றி விளம்பரப்படுத்த வேண்டுமென்று வரும் பத்திரிகாசிரியர்களின் கோஷ்டி வேறு. பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு? 

        என்னுடைய நல்ல குணம் கூடக் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டு வருவதாகத் தோன்றுகிறது. இல்லையென்றால் நான் இரண்டொரு நண்பர்களை அப்படிக் கோபித்திருப்பேனா! முதலில் கோபித்து விட்டு அப்புறம் வருந்தினேன். கோபப்படாமலே இருந்திருந்தால் இந்த வருத்தம் எதற்கு? 

        என் தகப்பனார் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் போது பெண் வீட்டார்கள் என்னிடம் வந்து கல்யாணப் பேச்சைப் பேசினதால் எனக்குக் கோபம் வரத்தான் செய்தது. என் கல்யாணத்தைப் பாராமலே தகப்பனார் காலமாகி விட்டார். எனக்குப் போன வருஷமே கல்யா ணம் செய்து வைத்துவிட வேண்டுமென்று அவர் துடி துடித்தார். இவ்வளவு சீக்கிரமாக அவர் இறந்து விடுவார் என்று முன்னமே தெரிந்திருந்தால், அவரைத் திருப்திப் கல்யாணம் படுத்துவதற்காகவாவது இதற்குள் நான் செய்து கொண்டிருப்பேன். இருமல் வியாதி திடீரென்று அவர் தொண்டையைப் பிடித்து இப்படிக் கொன்று விடு மென்று நான் எதிர்பார்க்கவில்லை. வைத்தியரும் எவ்வளவோ முயற்சி செய்துதான் பார்த்தார். போகிற உயி ரைத் தடுத்து நிறுத்த முடியுமா? இறப்பதற்கு நாலு நாட்களுக்கு முன்பு தான் கடைக்குக்கூட வந்திருந்தார். ஏதோ தொண்டையை அடைக்கிறதென்று படுத்தார். மூச்சுவிட முடியாமல் திணறினார். அவ்வளவுதான். அந்த மூச்சடைப்பே அவருடைய கடைசி வியாதியாக அமைந்து விட்டது. 

        தன் உயிர் போய்விடுமென்று அவருக்கு நன்றாகத் தெரியும் போலிருக்கிறது. கடைசி நாளன்று தழதழத்த குரலில் என்னோடு ஒரு மணி நேரம் பேசினார். அவருடைய மனம் திருப்தியடைந்து விட்டதாம். அடுத்த வருஷமாவது நான் கட்டாயம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமாம். நான் எந்தப் பெண்னை மணந்து கொள்ள வேண்டுமென்பதைக்கூடச் சொல்லி விட்டார். 

        கடைசியில் என் தங்கை மோகனாவைப்பற்றி அவருக்கு எண்ணமுண்டாயிற்று. கூடுமானவரை முயற்சி செய்து நான் அவளை அனாதாஸ்ரமத்திலிருந்து அழைத்து வந்து தகுந்த புருஷனைப் பார்த்து மணம் செய்விக்க வேண்டுமாம். ஆஸ்ரமத் தலைவி அவளை அனுப்பச் சம்மதிக்காவிட்டால் அதற்காக வருத்தப்பட வேண்டாம் என்றும் சொன்னார். 

        தகப்பனார் இறந்த அன்று பழையகால நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக என் மனதில் தோன்ற ஆரம்பித்தது. நான் சிறுவனாகப் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தது. மோகனா பிறந்தது. தந்தை பணக்கஷ்டத்தினால் படாத கஷ்டம் பட்டது. தாயார் இறந்தது. தங்கையைக் கொண்டு அனாதாஸ்ரமத்தில் சேர்த்தது. பின்பு நானும் தந்தையும் கஷ்டப்பட்டு உழைத்துப் பணம் சேர்த்துக் கடன் அடைத்துக் கடை வைத்து வீடு தோட்டங்கள் வாங்கினது. இப்பொழுது நான் உழைக்காமலே ஏராள மாகப் பணம் சம்பாதிப்பது. எல்லாம் கோர்வையாக என் மனத்திரையில் தோன்றி மறைந்தன. ஊரார் என் தகப்ப னாருக்குச் செய்ய வேண்டிய கிரியைகளையெல்லாம் விமரிசையாகச் செய்ய வேண்டுமென்றார்கள். வயதான கிழவரானதால் அவருடைய சாவை ஒரு கொண்டாட்டம் போல நடத்த வேண்டுமென்பது அவர்களுடைய விருப்பம். 

        என் மனம் அவரைக் கிழவராக எண்ணவில்லை. எத்தனையோ வருஷகாலம் வறுமையோடும் கவலைகளோடும் போரிட்ட மனிதர் இன்னும் சில காலத்துக்காவது சுக வாழ்க்கையில் இருந்து அனுபவிக்காமல் போய் விட்டாரே என்று எனக்கு மிகவும் வருத்தம். நான் கடை வைத்து ஐந்தாறு வருஷமாகிறது. இந்த ஐந்தாறு வருஷமாகத் தான் அவருக்கும் வாழ்க்கையில் ஒரு அமைதி கிடைத்தது. இன்னும் நாலைந்து வருஷம் இப்படியே அவர் சுகமாக இருந்தாரானால் எனக்கு எவ்வளவோ திருப்தியாக இருக்கும். ஆனால் விதியென்று ஒன்றிருக்கிறதே! 

        அன்று இந்த மாதிரி நான் பல விதமாக வருத்தப் பட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதற்குள் என் தகப்பனார் சாவைக் கொண்டாடுவதற்காக வீட்டுக்கு வெளியே மேள தாளங்களும் கும்மாளங்களும் சேர்ந்து ஏகப்பட்ட இரைச்சலாக ஆகிவிட்டது. 

        நண்பர்களுடைய இஷ்டத்திற்கு மாறாக நடக்க நான் விரும்புவதே இல்லை. “உங்கள் தகப்பனாருடைய சாவைப் பிரமாதமாகக் கொண்டாடவேண்டும். நான் அதற்கு ஏற்பாடு செய்யட்டுமா?” என்று ஒரு நண்பர் கேட்டார். “உங்கள் இஷ்டம்போல் செய்யுங்கள்” என்று சொல்லி விட்டேன். அவ்வளவுதான். அவர் இழவு வீட்டைக் கல்யாண வீடு மாதிரி ஆக்கிவிட்டார். நான் பணக்காரனான பிறகு என் வீட்டில் இதுதானே முதல் விசேஷம். என் நண்பர்களையெல்லாம் என் வீட்டிற்குமுன் பார்த்த போதுதான் அவர்கள் என்மீது வைத்திருந்த அன்பு நன்றாகத் தெரிய வந்தது. என் நண்பர்கள் விரும்பியபடியே என் தகப்பனாரின் சவத்தைச் சிறப்பாகவே அடக்கம் செய் தேன். 

        இப்பொழுது என் வீட்டைப் பார்த்தால் வெறிச் சென்றிருக்கிறது. எனது ஒரே உறவான தந்தையும் காலமாகிவிட்டார். தற்சமயம் நான் ஒரு அனாதை. என் தங்கையும் ஒரு அனாதையாக அனாதாஸ்ரமத்தில் வளர்கிறாள். தந்தை இறந்ததைப்பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியாது. இப்பொழுது எங்களைப்பற்றிய நினைப்பே அவளுக்கு இராது. அவள் உலகம் வேறாகிவிட்டது. ஐந்து வயதில் பிரிந்தவளுக்கு எங்களைப்பற்றி என்ன நினைப்பு இருக்கும். தங்கையின் பாசம் எனக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு அழைத்து வர வேண்டுமென்று ஆவலாக இருக்கிறது. தந்தையின் கடைசி விருப்பமும் அதுதானே! “மோகனாவை அனாதாஸ்ரமத்திலிருந்து அழைத்து வந்து அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்க முயற்சி செய்” என்கிறார் 

        கடை திறந்து பதினைந்து நாளாகிறது. கடை விஷயமான கணக்குகள் எல்லாம் குழம்பிப் போயிருக்கிறது. யூனியன் போர்டு தேர்தல் வேலை வேறு இருக்கிறது. ஊரைச் சீர்படுத்துவதற்கு என்னைப் போன்ற யோக்கியன் தான் போர்டு தலைவராக இருக்க வேண்டுமாம்.. இதற்காக என் நண்பர்களெல்லாம் சேர்ந்து என்னை வற்புறுத்தினார்கள். பொதுஜனப் பணிசெய்யவேண்டு மென்பதற்காகவே நான் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இந்தத் தேர்தல் வேலைகளெல்லாம் தீர்ந்தவுடன் ஆஸ்ரமத்துத் தலைவியிடம் கேட்டு என் தங்கையை மீட்டுவர முயற்சிக்க வேண்டும். இப்பொழுது இந்த முருகன் பணக்கார முருகனல்லவா. எவ்வளவோ கௌரவம் வேறு. இதைக்கொண்டாவது என் தங்கையை மீட்க முடியுமா என்று பார்ப்போம்.

        – தொடரும்…

        – வளர் பிறை (நவீனம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1946, கார்த்திகேயினி பிரசுரம், புதுக்கோட்டை ஸ்டேட்.

        சிற்பியின்-கனவு சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம்  தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.   நன்றியுரை  "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க...

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *