வளர் பிறை
கதையாசிரியர்: மாறன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2026
பார்வையிட்டோர்: 104
(1946ல் வெளியான நவீனம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24
19. முருகன்

வீடே அருள் மாறிப்போய் விட்டது. தாயார் இருக்கும் போது வீடு எவ்வளவு கலகலப்பாக இருந்தது. இன்று சோபையிழந்து விட்டது. எனக்கு இந்த வயதிலேயே இப்படி ஒரு துயரம் ஏற்படுமென்று எதிர்பார்க்கவில்லை.
பணக் கஷ்டத்தினால் படிப்பை நிறுத்தினேன். கஷ்டப்பட்டு வேலையும் பார்த்து வருகிறேன். ஆனாலும் இதைப்பற்றியெல்லாம் எனக்கு வருத்தம் அவ்வளவாகத் தோன்றவில்லை. தகப்பனாருக்குப் பாரமாக இராமல் எதோ சம்பாதிக்கிறோம் என்ற திருப்தியிருந்தது. வேலைகளைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தால் தாயின் ஆதரவும் தங்கையின் பேச்சும் என் களைப்பையெல்லாம் போக்கிவிடும். இப்படி மகிழ்ந்திருந்த எங்கள் வீட்டில் தாயின் ஆதரவு போய்விட்டது. தங்கை ஓயாது அழுவதைத்தான் பார்க்க முடிகிறது. தகப்பனாருக்குத் துக்கம் தாங்கவே முடியவில்லை. மனமுடைந்து போனார். நானும் துக்கத்திலேயே மூழ்கியிருந்து விட்டால் டாக்டர் கடனையும் மளிகைக் கடைப் பாக்கியையும் எப்படித் தீர்ப்பது? தினசரிச்செலவுக்கு என்ன செய்வது? ஆகையினால் தாய் இறந்து பத்து தினங்கள் கழிந்தவுடன் நான் ஒழுங்காக வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். மனம் வேலையில் ஈடுபட் டிருந்தாலாவது துக்கத்தை ஓரளவுக்கு மறந்திருக்க முடி கிறது. முன்பெல்லாம் வீட்டுக்கு வந்தால் இன்பமாக இருக்கும். இப்பொழுது வீட்டை நினைத்தால் துன்பமாகவே இருக்கிறது. வேலை முடிந்து வீட்டுக்குப் புறப்பட்ட வுடனேயே தகப்பனார் எப்படிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ ; தங்கை அழுது கொண்டிருக்கிறதோ; தூங்குகிறதோ என்ற எண்ணங்களே மனதில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.
தகப்பனார் தினமும் தானே சமையல் செய்து விடுகிறேன் என்று தான் சொன்னார். இத்தனை துக்கத்தையும் மனதில் அடக்கிக்கொண்டு சமையல் வேலையில் வேறு அவர் கஷ்டப்பட வேண்டுமா? நான் வீட்டுக்குப் போகும் போதே மூன்று பேருக்கும் கிளப்பிலிருந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் விடுவேன். என் வற்புறுத்தலின் பேரில் தகப்பனார் இரண்டு உருண்டை சாதம் சாப்பிடுவார். தங்கைக்குச் சாதம் கொடுப்பதற்குள் எங்களுக்குப் பெரிய தொந்தரவாகப் போய்விடும். இப்படியாகச் சாப்பாட்டு விவகாரம் பெரிய கூப்பாட்டு விவகாரமாகவே முடியும்.
தோட்டத்தில் வந்து எனக்கு உதவியாக வேலை பார்க்கிறேன் என்று தகப்பனார் தினமும் புறப்படுகிறார். தோட்டத்தில் அவர் ஏதாவது லேசான வேலைகளைப் பார்த்து வந்தால் எனக்கு எவ்வளவோ நேரம் மிச்சப்படத்தான் செய்யும். ஆனால் தங்கையை அடுத்த வீட்டில் விட்டு விட்டு வருவது சரியான காரியமல்ல. தாயை இழந்து ஏங்கிப்போயிருக்கிற குழந்தையின் அருகில் தகப்பனும் இல்லையென்றால் அதற்கு எப்படி இருக்கும்! ஆகையால் என் தகப்பனாரை வீட்டிலேயே தங்கையைக் கவனித்துக் கொண்டிருக்கும்படி சொல்லியிருக்கிறேன். நான் தனியாகவே அத்தனை வேலையையும் கவனித்து வருவது அவருக்குப் பிடிக்கவில்லை.
எங்களுக்கு இந்த மாதிரியெல்லாம் துன்பங்கள் வருவதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை. நாங்கள் மனமறிய ஒருவருக்கும் கெடுதல் எண்ணவில்லையே. எல்லாம் விதி என்று சொல்லிக் கொள்கிறார்களே! அப்படித் தான் இருக்குமோ! விதியென்றால் அது அநீதியாகவும் மனிதர்களை நடத்துமோ! இதுவும் எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். நமக்கு வரும் துன்பங்களுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாமல் மண்டையை உடைத்துக் கொண்டு திண்டாடுவதைவிட, எல்லாம் நம்முடைய விதி என்று நினைத்துக் கொள்வதில் எவ்வளவோ ஆறுதல் கிடைக்கிறது. உலகத்தில் சுக சௌகர்யங்கள் வந்தால் மனிதன் விதியைப்பற்றி அதிகமாகச் சிந்திப்பதில்லை. கஷ்டப்படும்போதுதான் விதியின் மீது பாரத்தைப் போடுகிறான். விதியென்பது துக்கச் சுமைகளைத் தாங்குவதற்கு ஒரு சரியான சுமைதாங்கிதான். இந்தச் சுமைதாங்கி மட்டும் இல்லாவிட்டால் மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் துக்கச் சுமையைச் சுமந்து கொண்டே யல்லவா கஷ்டப்பட வேண்டியிருக்கும். நானும் இந்த மாதிரிஆறுதல் அடைய வேண்டியது தான். வேறு வழியில்லை. விதி எங்களை இன்னும் எப்படியெல்லாம் நடத்தப் போகிறதோ! அதன் கைப்பொம்மைகள்தானே நாம்.
விதி எங்களுக்கு என்னவேண்டுமாயினும் செய்து விட்டுப் போகட்டும். சிறு பெண்ணான மோகனாவிற்குமா இத்தனை துன்பங்களைக் கொடுக்க வேண்டும். தாயற்ற குழந்தை எப்படி நன்றாக வளர முடியும்! நாங்கள் எவ்வளவு தான் சீராட்டிப் பாராட்டினாலும் தாய் இருந்தது போல் ஆகுமா? அதன் ஏக்கத்திற்கு உலகில் என்ன மருந்து இருக்கிறது? அது கஷ்டப்படுவதனால் எங்களுக்கும் கஷ்டமாக இருக்கிறது. பத்துப் பன்னீரண்டு வயது ஆனாலாவது ஒருவாறு தன் புத்தி கொண்டு அது ஆறுதல் அடைய முடியும். இப்பொழுது அது அம்மாவைப் பார்க்க வேண்டுமென்று பிடிவாதம் பண்ணுகையில் நாங்கள் என்ன சமாதானம் சொல்லி அதைத் தேற்றுவது!
தங்கையை வளர்ப்பதற்குத் தகப்பனார் எத்தனையோ திட்டங்களைப் போடுகிறார். ஆனால் கடைசியில் எல்லாமே சரியில்லையென்ற முடிவுக்குத்தான் வருகிறார். அவரும் நானும் சேர்ந்து பாடுபட்டு உழைத்து ஏராளமாகப் பொருள் தேடவேண்டுமென்று அவருக்கு ஆசை, பொருளில்லாத காரணத்தினாலேயே பல கஷ்டங்கள் குடும்பத்திற்கு நேரிட்டிருக்கிறதென்பது அவருடைய எண்ணம். இனியும் இப்படியிருக்காமல் நிறையப் பொருள் சம்பாதித்து முன்னேற வேண்டுமென்று அவர் என்னிடம் எத்தனையோ தடவை சொல்லிவிட்டார்.
இதற்காகவே தங்கை மோகனாவைத் திருவனந்தபுரத்திலுள்ள அனாதாஸ்ரமத்தில் கொண்டு சேர்த்துவிட்டுக் கவலையில்லாமல் இரண்டு பேரும் உழைக்கலாமென்கிறார். இந்த ஏற்பாடுதான் எனக்குப் பிடிக்கவில்லை. இந்தத் திட்டம் அவருக்கும் தான் பிடிக்கவில்லை. இதைப்பற்றிச் சொல்லும்போதே அவர் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகப் பாய்ந்தது. ஒரு விதத்தில் பார்க்கப்போனால் அத னால் நன்மைதான் ஏற்படுமென்று தோன்றுகிறது. தாஸ்ரமத்திலுள்ள பெண்மணிகள் யாவரும் அன்பே உரு வானவர்கள்.மோகனாவை எவ்வளவோ பிரியமாக வைத்து வளர்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மோகனாவும் அங்கு காட்டப்படும் ஆதரவினாலும், பிள்ளைகளோடு விளை யாடுவதனாலும் தாயைப்பற்றி நாளடைவில் மறந்துவிடு வாள். எங்களுக்கும் எவ்வளவோ நிம்மதி கிடைக்கும். ஆனால் சொந்த சகோதரியை எப்பொழுதுமே பிரிந்து விடுவதென்றால் மனம் கேட்கவில்லை. அவளை அனாதாஸ்ர மத்தில் விட்டுவிட்டால் அவள் எங்கள் குடும்பத்தை விட்டுப் போய்விட்டாள் என்றுதானே அர்த்தம். எங்கே யாகிலும் அவள் சௌகரியமாக இருந்தால் சரிதானே என்று மனம் சாந்தியடைய மாட்டேனென்கிறது. இங்கே இருந்தால் அவள் மிகவும் சீரழிந்து விடுவாள் என்பதுவும் நன்றாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் தகப்பனாரின் இஷ்டம் போல வீட்டுவிடுவதுதான் நல்லது. தாயை மறந்து இருக்கிறேனல்லவா! தங்கையையும் மறந்துவிட வேண்டியதுதான் போலிருக்கிறது. ஆனால் மோகனாவைப் பிரிந்திருப்பதில் ஒரு ஆறுதல் உண்டு. மோகனா இங்கிருப் பதை விட இன்னொரு இடத்தில் மிகவும் சந்தோஷமாகவே இருப்பாள் என்று மனச்சாந்தி அடையலாம்.
தகப்பனார் இன்னும் இதைப்பற்றி என்னிடம் சொல் வார் என்று நினைக்கிறேன். அவர் இதைப்பற்றி என்னிடம் சம்மதம் கேட்டால் என் மனதை அடக்கிக்கொண்டு சரி யென்று சொல்லிவிடவேண்டியதுதான். அவருக்கும் இது மிகவும் ஆறுதலளிக்கும். ஏதாவது வேலையில் ஈடுபட்டிருந்தால் தான் அவரும் தன் துக்கத்தைக் கொஞ்சம் கொஞ்ச மாக மறக்கமுடியும். இன்று மோகனாவிற்கு வேண்டிய தின்பண்டங்களையெல்லாம் வாங்கிக்கொண்டு போகவேண்டும்.
- வடிவேலு
மோகனாவை அனாதாஸ்ரமத்தில் கொண்டு விட்டு சரியாக இன்று ருபது நாளாகிறது. மக்கள் பாசம் மனதை என்ன பாடுபடுத்துகிறது. இப்பொழுது நாலு நாளாகத்தான் ஏதோ தோட்டவேலை பார்த்து வருகிறேன். எனக்கு எப்பொழுதும் மோகனாவின் நினைவாகவே இருக்கிறது. அவள் அங்கு எப்படி எப்படி இருக்கிறாளோ தெரியவில்லை.
தகப்பனாகிய நான் இருக்கும்போது, என் குழந்தையை அனாதாஸ்ரமத்தில் கொண்டுவிடும் நிலைமை ஏற்பட்டதென் றால், என் வயிற்றுக் கொடுமைதானே இதற்குக் காரணம். இப்பொழுது நான் மோகனாவை வளர்க்க வேண்டிய கவலை யில்லாமல் வேலை பார்க்கலாம். ஆனால் பாசம் அகன்று விடுகிறதா? சில சமயங்களில் நான் மோகனாவை அங்கு விட்டது சரியல்ல என்றே தோன்றுகிறது. எவ்வளவோ யோசனை செய்த பிறகுதானே இந்த முடிவுக்கு வந்து மோகனாவைக் கொண்டு சேர்த்தேன். இப்பொழுது ஏன் எனக்கு இம்மாதிரி சபலம் தட்டுகிறது? மோகனாவைக் கொண்டு அனாதாஸ்ரமத்தில் சேர்ப்பதை முருகன் விரும் பவே இல்லை. அவனிடம் எவ்வளவு நியாயங்கள் சொல்லிச் சமாதானம் செய்ய வேண்டியிருந்தது. இப்பொழுதுதான் என்ன? அறிவு சொல்கிறபடி பார்த்தால் நான் மோகனா வைக் கொண்டு அனாதாஸ்ரமத்தில் சேர்த்ததன் மூலம் என் இரண்டு குழந்தைகளுக்கும் நன்மைதான் செய்திருக் கிறேன். இதில் சந்தேகமே இல்லை. ஏழெட்டு நாளாக முருகனுக்கு வேலையில் மிகவும் ஊக்கம் ஏற்பட்டிருக்கிறது. தோட்ட வேலையை நான் பார்த்துக் கொள்வதனால் அவன் கடைகளில் அதிகமாகப் புஷ்பங்கள் கட்டிக் கொடுத்து முன்னிலும் அதிகமாகவே பணம் கொண்டு வருகிறான். அவன் கொண்டு வரும் பணத்தில் எங்கள் சாப்பாட்டிற்கும் போக எவ்வளவோ மிச்சம் இருக்கிறது. தினமும் இந்த மாதிரி வரும்படி வந்து கொண்டிருந்தால், ஒரே மாதத்தில் என் கடனை அடைத்து விடலாம். இரண்டு மூன்று வரு ஷங்களில் எவ்வளவோ பணமும் சேர்த்து விடலாம். இதைவிட அதிகமாகப் பணம் வருவதற்கு வழிகள் தேடி யிருப்பதாக முருகன் சொல்கிறான். புத்திசாலியல்லவா! எங்கள் தோட்டத்துப் பூக்களையும் அவனே மாலையாகக் கட்டி விற்பதற்குக் கடைத்தெருவில் ஒரு சிறு கிடைத்திருக்கிறதாம். பூவாக விற்பதை விட மாலையாகக் கட்டி விற்பதில் அதிக லாபம் கிடைக்கும். இதோடு பிற கடைகளுக்கும் மாலை தொடுத்துச் சம்பளம் வாங்கி வருவான்.
தோட்டமும் முன்னைப்போல இல்லாமல் இப்பொழுது அதிகமாகவே பூவைக் கொடுக்கிறது. பாடுபட்டால் பல னுண்டல்லவா ! தண்ணீர் அதிகமாக எடுத்துப் பாய்ச்சு கிறேன். அங்கு இங்கு கிடைக்கும் உரங்களையும் பூச்செடி களுக்குப் போட்டு வருகிறேன். புதுப்பதியன்களும் வாங்கி நட்டிருக்கிறேன். இந்தப்புது முயற்சிகளால் என் பொருளாதாரக் கஷ்டம் ஒருவாறு நீங்கி வருகிறது. முருகனும் சந்தோஷமாக வேலை பார்த்து வருகிறான். தினமும் காலை யில் அவன் தோட்டத்திற்கு வருவதற்குள்ளாக நான் புஷ்பங்களைப் பறித்து வைத்து விடுவேன். நான் தோட்ட வேலையையும் சமையல் வேலையையும் கவனித்துக் கொள்கிறேன்.
மோகனாவிற்குத்தான் இப்பொழுது என்ன குறையிருக்கப் போகிறது. சிறு பிள்ளை தானே. அனாதாஸ்ரமத்திலுள்ள புதுமைகளைக் கண்டு நாளாவட்டத்தில் என்னைப் பற்றியும் தாயைப்பற்றியும் மறந்து விடுவாள். குழந்தையை வளர்ப்பதில் அவர்களைவிடவா நான் அதிகக் கவனம் எடுக்க முடியும்?
அந்த அனாதாஸ்ரமத்துத் தலைவி என்னிடம் எவ்வளவு அன்பாகப் பேசினார்கள்! நான் என் கதையெல்லாம் அந்த அம்மாளிடம் சொல்லியபோது என் நிலமைக்காக எவ்வளவு வருத்தப்பட்டார்கள்! அவர்கள் எப்பொழுதும் க்ஷேமமாக இருக்க வேண்டும். மோகனாவை எவ்வளவு பிரியத்தோடு எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சினார்கள். ஒரு தாய் தன் சொந்தக் குழந்தையை எடுத்து அணைத்துக் கொள்வது போலல்லவா அவளை எடுத்துச் சீராட்டினார்கள். மோகனா அவர்களிடம் போனவுடன் சாந்தமாகத் தான் இருந்தாள். அவளுக்கும்கூட அந்த அம்மாளைப் பிடித்துக் கொண்டது போலிருக்கிறது
அங்கு உத்தமமான குணங்களையும் நல்ல படிப்பையும் மோகனாவிற்குப் புகட்டுவார்கள். அன்போடு உணவு கொடுப்பார்கள். நோய் நொடியென்றால் பெற்ற தாயினும் பன்மடங்கு கவலையெடுத்துப் பார்ப்பார்கள். இவ்வளவு காரியத்தையும் நம்மால் செய்ய முடியுமா? கையால் நான் மோகனாவை அனாதாஸ்ரமத்தில் கொண்டு சேர்த்து விட்டது மிகமிக நல்ல காரியமென்றே படுகிறது.
ஆனால் ஒன்று. ஆஸ்ரமத்தின் விதிகளின்படி, அங்கு சேர்க்கப்பட்ட பிள்ளைகளைத் சொந்தக்காரர்கள் திரும்ப வந்து கேட்டால் அனுப்பவே மாட்டார்களாம். இதுதான் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாளை ஒரு காலத்தில் மோகனாவை வீட்டுக்கு அழைத்துவர வேண்டு மென்றால் முடியாது. இதற்காக ஆஸ்ரமத்தார்மீது நான் குறை கூறவில்லை. அவர்கள் இந்த மாதிரிச் சட்டம் போட் டிருந்தால்தான் ஆஸ்ரமத்தின் லட்சியத்தை நிறைவேற்ற முடியும் என்பதும் எனக்குத் தெரிந்ததுதான்.
அனாதைப் பிள்ளைகளை எடுத்து வளர்த்துக் கல்வியறிவு புகட்டி, ஆசிரியர்களாகவோ ஆசிரியைகளாகவோ ஆவ தற்கு பயிற்சி கொடுத்து, நாட்டில் கல்வியைப் பரப்புவதற் காக அனுப்புகிறார்கள். இது நாட்டுக்குச் செய்யும் சிறந்த சேவைதானே. இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த லட்சியத் துடன் நிர்வாகம் பண்ணிவரும் ஒரு ஸ்தாபனத்தில் நமக்கு அசௌகரியப்படும்போது பிள்ளைகளை அவர்களிடம் கொண்டு விடுவது; நமக்கு செளகரியம் ஏற்பட்டவுடன் அவர்களை வீட்டிற்கு அழைத்துக் கொள்வது என்று இருந் தால் ஆஸ்ரமத்தினால் நாட்டுக்கு என்ன பயன் ஏற்பட முடியும்.
ஆஸ்ரமத்தலைவி இதையெல்லாம் என்னிடம் தெளி வாக எடுத்துச் சொன்னார்கள். முன்பு இரண்டொரு பிள்ளைகளின் சொந்தக்காரர்கள் பால்ய வயதுள்ள பிள்ளை களைக் கொண்டு வந்து விட்டார்களாம். பின்பு அந்தப் பிள்ளைகள் வாலிபப்பருவம் அடைந்தவுடன் அந்தப் பெற் றோர்கள் சண்டையிட்டுத் தங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டுபோய் விட்டார்களாம். அதிலிருந்தே ஆஸ்ரமத் தில் இந்தச் சட்டத்தை ஏற்படுத்திப் பிள்ளைகளைக்கொண்டு வந்து விடுபவர்களிடம் உறுதிமொழிப்பத்திரத்தில் கையெ ழுத்து வாங்கி விடுகிறார்களாம். நானும் மோகனாவை அங்கு கொண்டு சேர்த்தவுடன் அந்த உறுதிமொழிப் பத் திரத்தில் கையெழுத்துப் போட்டு விட்டுத்தான் வந்தேன். இனி மோகனா எங்களுடையவள் அல்ல. ஆயினும் அவள் தன் தாயினுடைய லட்சியத்தைக் காப்பாற்றுவாள். நாட் டுக்கும் சேவை செய்வாள். இது நிச்சயம்! எப்படியா வது அவள் சுகமாக இருந்தால் சரிதான் என்று என்மட் டில் திருப்தி உண்டாகி விட்டது. சுந்தரி அடிக்கடி சொல்வதுபோல கவலைப்படும் நேரத்தைக் காரியத்தில் கழித்தால் எவ்வளவோ பலனுண்டு. ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல துன்பங்கள் தொடர்ந்து வந்ததனால் துன்பங்கள் எனக்குப் பழக்கமாகி விட்டன. புதிய துன் பங்கள் பழைய துன்பங்களை அலட்சியமாக எண்ணும்படி செய்து விட்டது. மனம்மட்டும் திடமாக இருந்து விட் டால் துன்பங்களை வெகு எளிதாக எதிர்த்து நிற்கலாம். சுந்தரி செய்து வந்த உபதேசத்தின் பயனாக நான் திடமான மனதைப் பெற்று விட்டேன். நடந்து போனவைகளைப் பற்றி இனிக்கவலைப்படவே கூடாது. நடக்க வேண்டிய தைப் பற்றித்தான் சிந்தித்துக் காரியங்களைத் திறமையாக முயற்சி செய்ய வேண்டும்.
நான் மோகனாவை அனாதாஸ்ரமத்தில் கொண்டு சேர்த்து விட்டதைப் பற்றி என் நண்பர்களும், அக்கம்பக் கத்திலுள்ளவர்களும் பலவிதமாகச் சொல்கிறார்கள். சிலர் நான் செய்ததுதான் சரி என்று என் யோசனையைப் புகழ்ந்து பாராட்டுகிறார்கள். இன்னும் சிலர் அப்படிப் பட்ட அழகான குழந்தையை விட்டுப் பிரிவதற்கு எனக்கு எப்படித்தான் மனம் வந்ததோ என்று வருத்தப் படுகிறார் கள். குழந்தையை எங்களிடம் விட்டு வைத்தால், நாங் கள் கவனித்துக் கொள்வோமே” என்று சிலர் அனுதாபப் படுகிறார்கள். என்மீதும், என் குழந்தையின் மீதும் உள்ள அன்பினால்தான் அவர்கள் இவ்வாறெல்லாம் சொல் கிறார்கள்.
கழுதையை விற்கப் போனவர்கள் கதைபோல, எல் லோருடைய யோசனையின்படி நடப்பதென்றால், காரியம் விபரீதமாகத்தான் முடியும். எல்லோருடைய எண்ணத் தின் படியும் நாம் நடக்க முடியாதுதானே! ஏதோ சில ருக்கு நாம் செய்யும் காரியம் சரியென்று படாமலிருக்கலாம். அதற்கு நாம் என்ன செய்வது! அவர்களையும் நாம் நம் முடைய நயமான வார்த்தைகளால் நம் யோசனை சரிதா னென்று ஒப்புக் கொள்ளும்படி செய்வதுதான் நல்லது. அவர்கள் நமது யோசனையை ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அதற்காக நாம் வருத்தப்பட்டோ கோபப்பட்டோ என்ன பயன்! பிறருடன் பழகுவதே ஒரு கலை. விதவிதமான எண்ணங்களுடைய மனிதர்களோடு, அவர்கள் மனம் கோணாதபடி, நம் மனதிலுள்ளதைச் சொல்லிக் கொள்வ தென்றால் லேசான காரியமா? சுந்தரி இந்த வித்தையில் மகா சாமார்த்தியசாலியென்றே சொல்ல வேண்டும்.
எங்கள் தெருவிலேயே பொல்லாத பெண்கள் என்று பேர் வாங்கின இரண்டொருவர்கள் சுந்தரியிடம் மட்டும் சுமுகமாகப் பேசிப் பழகிவந்ததைக் கண்டால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். தெருவில் எல்லாருடனும் சண் டையிடுவதையே தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்ட அவர்கள் என் சுந்தரியிடம் மட்டிலும் ஏன் சண்டை போடாமல் அன்போடு பழகி வந்தார்கள்? இதைப்பற்றி என் மூளை ஆராய ஆரம்பித்தது. அவரவர்கள் போக்கின் படி நாமும் பேசிப் பழகக் கற்றுக்கொண்டால் எவருடைய மனதையும் நம் வசப்படுத்திவிடலாம் என்பதை லிருந்து நான் தெரிந்துகொண்டேன்.
இவ்வாறு பண்பட்ட மனமுடைய என் சுந்தரியினால் வளர்க்கப்பட்ட முருகனுக்கும் இந்தக் கெட்டிக்காரத்தனம் தானாகவே அமைந்துவிட்டது. கடைத்தெருவில் அவ னுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது! முப்பது வயது மனிதன்கூட இவனை “அண்ணா என்று அழைக்கிறான். இவனை எல்லோரும் மரியாதையாக நடத்துகிறார்கள். இவன் சொன்னபடி கேட்கவும், இவனுடைய நண்பர் கள் தயாராக இருக்கிறார்கள். இவனுடைய வேலைத் திறமையை நேகர் மெச்சுகிறார்கள். தகப்பனுக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுக்கும் இப்படிப்பட்ட பையனை மகனாகப்பெற்ற பாக்கியம் ஒன்றே எனக்குப்போதும். விதி கெடுதல்களையும் நன்மைகளையும் கலந்துதான் நமக் குக்கொடுக்கிறது. மாம்பழத்தில் பழரசமும் கொட்டை யும் சேர்ந்துதானே இருக்கிறது. நாம் கொட்டையைத் தூர எறிந்துவிட்டால் மதுரமான மாம்பழ ரசத்தைமட் டும் உண்டு மகிழலாம். அதுபோல துக்கத்தை மறக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் இன்பத்தைமட்டிலும் நன்றாகச் சுவைக்காலம்தானே.
- மோகனா
என் அம்மா எங்கேயோ போய்விட்டாள். அப்பா என்னைக் கொண்டுவந்து இங்கே விட்டுப்போய்விட்டார். நான் இந்த ஆஸ்ரமத்திற்கு வருவதற்கு முதல் நாள் அண் ணனும் அப்பாவும் என்னவோ சொல்லிச் சொல்லி அழுது கொண்டார்கள். அவர் என்னை ஏன் இங்குகொண்டு வந்து விட்டுப்போய்விட்டார்?
இங்கேயுள்ள பெரிய அம்மா, அக்கா எல்லோரும் என்னிடம் பிரியமாகவே இருக்கிறார்கள். என் இஷ்டப் படியே எல்லாம் கொடுக்கிறார்கள். கூடவிளையாடுவதற் கும் எத்தனையோ பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரு நாள் எங்கள் எல்லோரையும் மிருகக் காட்சிச்சாலைக்குக் கூட் டிக்கொண்டு போய் சிங்கம், புலி, கரடி எல்லாம் காண்பித் தார்கள். ன்னொரு நாள் நாடகம் பார்க்க அழைத்துக் கொண்டு போனார்கள். எந்தப் பிள்ளை அழுதாலும் உடனே ஒரு அக்கா ஓடிவந்து ஆறுதல் சொல்லிச் சமா தானப்படுத்துகிறாள். எங்கள் எல்லோருக்கும் ஒரே நிற முள்ள சட்டை பாவாடை. எங்களையெல்லாம் குளிப் பாட்டிவிடுவதற்கு வேலையாட்கள். வரிசையாக உட் கார்ந்துதான் நாங்கள் சாப்பிடவேண்டும். இந்த இடம் எனக்கு ரொம்பப் பிடித்துப்போய்விட்டது.
அப்பாவையும் அண்ணனையும் பார்க்கவேண்டு மென்று சிலவேளை ஆசை தோன்றுகிறது. இதைப்பற்றி இங்குள்ள பெரிய அம்மாவிடம் சொன்னால் வேறு ஏதா வது சொல்லி என்னை ஏமாற்றிவிடுகிறார்கள். பல தடவை இப்படி அவர்கள் ஏமாற்றிவிட்டதனால் எனக்கு அப்பா வையும் அண்ணனையும் மறந்துவிட்டது. நான் நன்றாகப் பாடம் படிக்கிறேனென்று வாத்திச்சி அக்கா எனக்குப் பொம்மையெல்லாம் கொடுத்திருக்கிறாள். எனக்கென்று ஒரு பெட்டிகூடக் கொடுத்திருக்கிறார்கள். அதில் என் சட்டை, பாவாடை, சிலேட்டு, புஸ்தகம், பென்சில் பொம்மை, பாசி, எல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன். சாயந்திரம் தோட்டத்தில் நாங்கள் எத்தனையோ விளை யாட்டுக்கள் விளையாடுவோம். எங்களுக்காக ஊஞ்சல்கள் கட்டிவைத்திருக்கிறார்கள். வாத்தியாரம்மாகூட எங்க ளோடு சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடுவாள். மணி அடித்தவுடன் நாங்கள் எல்லோரும் ஒழுங்காக அவரவர் கள் இருப்பிடத்திற்குப் போய்விட வேண்டும். சில வேளைகளில் எங்களைப் பார்ப்பதற்கு வெளியிலிருந்து ஆட்கள் வருவார்கள். அவர்கள் எங்களுக்கு ஏதாவது தின்பண் டங்கள் வாங்கிவருவதுண்டு. வாத்திச்சி அக்காள் தின் பண்டங்களை ஒவ்வொரு பிள்ளைக்கும் சமமான பங்காக வரிசையாகக் கொண்டுவந்து கொடுப்பாள்.
இங்குள்ள எல்லோருமே என்னிடம் ரெம்பப் பிரிய மாக இருக்கிறார்கள். தினமும் ராத்திரி மீனா அக்காள் எங்களுக்குக் கதை சொல்லுவாள். மீனா அக்காளுக்கு என் மேல் ரொம்பப் பிரியம். என்னை விட்டுப் பிரியவே மாட்டாள். நான்கூட அவளுக்கு கதை சொல்லியிருக் கிறேன். நான் கதை சொல்லும்போது அவள் விழுந்து விழுந்து சிரிப்பாள். நான் கையையும் காலையும் ஆட்டிப் பயங்கரமான கதைகளையெல்லாம் அழகாக அபிநயத்தோடு சொல்லுகிறேனாம். அது அவளுக்கு ரொம்பப் பிடிக்கிற தாம். அதற்காகத்தான் அவள் அப்படிச் சிரிக்கிறாளாம். அடிக்கடி என்னைக் கதை சொல்லச் சொல்வாள். எனக் கும் கதை சொல்வதற்கு ரொம்ப ஆசையாக இருக்கும். இங்கு வந்த நாள் முதல் நான் அழுவதே கிடையாது. அழக்கூட மறந்துபோய்விட்டது. அப்பாவையும் அண்ணனையும் பற்றி இப்பொழுது எனக்கு நினைவே இல்லை.
– தொடரும்…
– வளர் பிறை (நவீனம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1946, கார்த்திகேயினி பிரசுரம், புதுக்கோட்டை ஸ்டேட்.
![]() |
சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம் தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். நன்றியுரை "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
முதுகு
கமலா நடராஜன்
May 13, 2026
ரயிலேறிய மாமா
அம்பாள் ஆர்.முத்துமணி
May 13, 2026
ஜனனி…! ஜெயம் நீ…!
ஜூனியர் தேஜ்
May 13, 2026
