மெய்கண்டாரும் வெள்ளையப்பனும்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 4
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரிலே மெய்கண்டார் என்னும் பெயருடைய முனிவர் ஒருவர் இருந்தார். அவர் தவத்தால் சிறந்து விளங்கினார். அவர் தமது வாக்கால் என்ன சொன்னா லும் அவ்வாறே நடக்கும். அவ்வூரிலே வெள்ளையப்பன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். வெள்ளையப்பனுக்குப் பகைவனாக இருந்த ஒருவன் நாள்தோறும் செல்வம் வளரப்பெற்றுச் சிறந்தோங்கிக் கொண்டிருந்தான். வெள்ளையப்பனுடைய வீட்டில் அவனுடைய உறவினர்கள் அடிக்கடி இறந்து கொண்டிருந்தனர்.
ஒருநாள் வெள்ளையப்பன் மெய்யறிவுச் செல்வ ராகிய மெய்கண்டாரிடம் சென்றான். “பெரியீர்! இவ் வூரிலே என் பகைவனாக உள்ள இன்ன பெயருடைய வன் நாள்தோறும் பொருள் வளரப்பெற்றுச் சிறந்த செல்வனாகிக் கொண்டு வருகிறான். அவன் வறியனாகும் படி நீங்கள் செய்துவிடுங்கள். என்னுடைய வீட்டிலே அடிக்கடி சாவு நேராமலும் இருக்கச் செய்யுங்கள் ; இவ் வாறு செய்வீர்களானால் என் வீட்டிலேயே தங்கட்கு எப்பொழுதும் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் வீடுவீடாகப் பிச்சைக்குப் போகவேண்டிய தொல்லை இராது,” என்று தன்னுடைய தீய எண்ணத்தை ஒருவாறு வெளியிட்டான்.
மெய்கண்டார் வெள்ளையப்பனுடைய நோக்கத்தை அறிந்துகொண்டு, “அப்பா, இந்த எண்ணத்தை விட்டு, விடு. நம்முடைய செயலால் யாதும் நடைபெறுவதில்லை. எல்லாம் இறைவன் திருவுளப்படியும் ஊழ்வினைப் படியுமே நடைபெறுகின்றன,” என்று பலவாறு அறிவுரைகள் கூறினார். வெள்ளையப்பன் தனது மடமைக்கு நாணினான்.
“ஆவாரை யாரே அழிப்பார் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்-ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல்.”
(உரை.) அம்புவியதன்மேல் – அழகிய நிலவுலகத்திலே, மெய் – உண்மையாக, ஆவாரை அழிப்பார் யார் – வாழ்வதற்கு உரியவர்களை அழிக்கவல்லவர்கள் யாவர்; அதுவன்றி – அது வல்லாமல், சாவாரைத் தவிர்ப்பவர் யார் – இறத்தற்கு உரியவரை இறவாமல் நிறுத்தவல்லவர் யார் ?; ஓவாமல் ஒழியாமல், ஐயம் புகுவாரை – பிச்சைக்குச் செல்வோரை, விலக்குவார் யார் தடுக்க வல்லவர் எவர் ?
(கருத்து.) உலகில் நிகழுகிற காரியங்களெல்லாம் ஊழ் வினைப்படி நடைபெறுகின்றன. மனிதர்களின் முயற்சியால் யாதும் நடைபெறுவதில்லை.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026