முதல் குழந்தை
கதையாசிரியர்: சோமு
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 19, 2026
பார்வையிட்டோர்: 88
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே”
என்ற அடிகள் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன மன்னனுக்கு.
சாதாரணமாகத் தினந்தோறும் விளக்கம் செய்கிற முறையிலேதான் புலவர் அன்றும் அந்தப் பாடலை அரச னுக்கு எடுத்து ஓதினார். ஆனால் அன்று இருந்த மனநிலை காரணமாகத்தானோ என்னவோ, அந்த அடிகள் அரச னுக்கு ஏதேதோ நினைவை எழுப்பின.
‘அழிகின்ற தன்மையது உலகம். இதில் அழியாமல் இருக்க ஆசைப்படுகிறான் மனிதன். அதற்கு வழி?- தனது புகழைப் பின்னே விட்டுத் தான் மடிகிறான். எவ் வளவு உண்மை!’ என்று எண்ணமிட்டான் அரசன்.
அன்று புலவரின் தமிழ் விருந்து அத்துடன் நின்றது.
2
பெற்றெடுத்த முதல் குழந்தையை ஒக்கலிலே வைத் துக் கொஞ்சிக்கொண் டிருந்த மனைவியைப் பார்த்துப் பிறைசூடி கேட்டான்:
‘பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டாற்
ருபவூசிப் பையும் பறக்கின்ற வாறே.’
‘இப்படிப்பட்ட புன்புலால் உடம்பு எடுத்த ஒரு குழந்தையைக் கண்டு இத்தனை சந்தோஷமா?’
‘இன்று வேளை சரியில்லை; இவரைத் தனியே சிந்தனை யில் விட்டுவிட்டு உள்ளே செல்வதுதான் புத்திசாலித் தனம்’ என்று நினைத்த மனைவி, குழந்தையை எடுத்துக் கொண்டு, வீட்டுக்கு உள்ளே சென்றுவிட்டாள்.
சிற்பி, பிறைசூடியினுடைய வாழ்க்கையில் அன்றைப் பொழுது அப்படிக் கழிந்தது. அவனுடைய உள்ளம் அழியாத சிருஷ்டியை நாடி நின்றது.
3
“அழிகின்ற இந்த உலகில் அழியாததொரு பெருங் கோயிலைக் கட்டி முடிக்கும் வல்லமையுள்ள கலைஞர்கள் நம் அரசவையில் இல்லையா?” என்று கேட்டான் மன்னன்.
அம்பு பாய்ந்ததுபோல் ‘சுருக்’கென்று எழுந்தான் பிறைசூடி.
“எந்த ஸ்தபதிகள் காமாரி திருக்கோயிலைக் கட்டினார்களோ, அதே ஸ்தபதிகளின் வம்சம் இன்றும் இல்லாமல் போகவில்லை. அரசருடைய ஆதரவு இருக்கும்போது கலைக்கு ஏது அழிவு?” என்றான் அந்த அரசவைச் சிற்பி.
“என்னுடைய முன்னோர்கள் கட்டி நிறுத்திய காமாரி கோயிலையும் மிஞ்சும்படியான புகழ்படைத்த ஓர் ஆலயத்தை நாம் நிர்மாணிக்க முடியுமா?” என்று மன்னன் கேட்டான்.
“முடியும்; ஆணவத்தினால் பேசவில்லை; ஆசையினால் சொல்கிறேன். என் இருதயத்தில் எத்தனையோ நாட்க. ளாக நிரந்தரமான ஒரு சிருஷ்டியை நாடி, எண்ணங்கள் குமைகின்றன. உத்தரவுக்குக் காத்திருக்கிறேன்.”
மட்டற்ற களிப்புடன் அன்று அரசவை கலைந்தது.
4
ஆயிரக்கணக்கான பொன் செலவானது. ஆயிரமாயிரம் மனிதர்கள் பணி செய்தனர். ‘மன்னா உலகத்து மன்னுதல் குறித்த’ இரண்டு இருதயங்கள் பழமையை வெல்லக் கூடிய புதுமையைச் சிருஷ்டிப்பதில் துடித்துக்கொண்டிருந்தன.
மன்னர் மன்னன் கட்டுகிற முதல் கோயில்; சிற்பியர் தலைவன் சமைக்கும் முதல் சிருஷ்டி; நீண்டநாள் தவங் கிடந்து உருவாகிற முதல் குழந்தை அது.
பத்து ஆண்டுகளாக அந்தக் குழந்தை கல்லிலே உருவாகியது. வானமும் பூமியும் அந்த வனப்பைக் கண்டு சொக்கின.
5
“உமக்கு எது மிகவும் பிடித்திருக்கிறது?” என்று மன்னன் அமைச்சரைக் கேட்டான்.
“கோயில் முழுவதுமே ஓர் அமர சாதனை. அதிலும் கோபுரத்தின் பேரழகும் நந்தியின் கம்பீரமும் வீரபத்திரரின் மூர்த்தன்யமும், யாளித் தூண்களின் கோலமெருகும் மன்மத ரதியரின் சுந்தரவடிவும் – என்ன சொல்வது! ஒவ்வொன்றும் கல்லில் உருவாகிய ஓர் இன்னிசைப் பண்! இருதயத்தின் நாதம் அதில் கேட்கிறது!” என்றார் அமைச்சர்.
“அப்படியானால் என்னுடைய முதல் குழந்தை, கலை உலகில் மகுடம் சூடி, அரசு செலுத்தும் என்று சொல்லும்!”
“சந்தேகம் இல்லாமல்! பழமையை வென்று விட்டது புதுமை; நிலையற்ற உலகத்தில் தங்கள் புகழ் நிலைத்து விட்டது!”
6
“உனக்கு எது மிகவும் பிடித்திருக்கிறது?” என்று கேட்டான் பிறைசூடி, தன் சீடனைப் பார்த்து.
“இந்தக் கோயில் என்றும் அழியாத இனிய காவியம். அதிலும் கோபுர வனப்பும், நந்தியின் கம்பீரமும், வீரபத்திரரின் பெருமிதமும், யாளித் தூண்களின் கொல மெருகும், மன்மத ரதியரின் சுந்தர வடிவமும் ஒவ்வொன்றும் கல்லிலே நனவு கொண்ட தெய்வக் கனவு; மரணத்தை வென்று நின்ற நித்தியம்!”
“அப்படியானால் என்னுடைய முதல் குழந்தை, மக்களுடைய இருதயக் கோயிலிலே என்றென்றும் கொலுவிருக்கும் என்றா சொல்கிறாய்?”
“சந்தேகம் இல்லாமல்! பழமையை வென்று விட்டது புதுமை; அழிகிற உலத்தில் அழியாது நின்றது தங்கள் கலை!”
7
‘சிற்பியாரே! இது நீர் உருவாக்கிய முதலாவது கலைச் சிருஷ்டி; நான் கட்டி முடித்த முதலாவது கோயில் நிமித்திகரும் புனித நீராட்டுக்கு நாள் பார்த்துவிட்டார். இந்த மகிழ்ச்சியில் அந்தப் பழைய கோயிலுக்குள்ளே நுழைந்து, ஒரு தரம் பார்த்துவிடலாமே? நம்முடைய இந்தச் சாதனை, அதைவிட எத்தனை சிறந்தது என்பது நிதரிசனமாகத் தெரியும் அல்லவா?” என்று கேட்டான் மன்னன்.
“காத்திருக்கிறேன்” என்று ஆனந்தம் பொங்கப் பிறைசூடி சொன்னான்.
“புறப்படலாமா?” என்றார் அமைச்சர்.
8
“இதென்ன, கோபுரம் இப்படிச் சரிந்து கிடக்கிறது?” என்று மன்னவன் கேட்டான், அந்தப் பழைய கோயிலைப் பார்த்ததும்.
“இடி விழுந்து இப்படி ஆகிவிட்டது. இப்பொழு தெல்லாம் யாருமே இங்கே போவதில்லை. நகரத்தைவிட்டு எட்டி இருக்கிறதல்லவா?” என்று அமைச்சர் கூறினார்.
“நம்முடைய கோபுரம் நிற்கும் கம்பீரமென்ன! இந்தக் கூன் கோபுரத்தின் சரிவு என்ன! பார்த்தீரா சிற்பியாரே?”
மன்னனுடைய அந்த வார்த்தைகளில் அபாரமான மகிழ்ச்சி அலை வீசி வந்தது.
அவர்கள் கோயிலில் நுழைந்தனர்.
“இதென்ன நந்தியா? கன்றுக்குட்டி படுத்திருப்பது போல் இருக்கிறதே!” என்றான் அரசன்.
அமைச்சர்: “கோபுரம் சரிந்ததிலிருந்து வெயிலும் மழையும் நித்திய வாசம் இங்கே. சிலை மழுங்கித் தேய ஆரம்பித்துவிட்டது.”
“அம்மிக் குழவிபோலே ஆகிவிடும் இன்னும் சில நாட்களில்” என்றான் பிறைசூடிக்குப் பின்னால் வந்த ஒரு சீடன்.
அப்பால் நடந்தனர்; அதோ வீரபத்திரர்!
“என்ன இது! ஓங்கிய கை அப்படியே ஒடிந்துகிடக்கிறது. மூக்கை, யார் கொண்டுபோய்விட்டார்கள்?” என்று எக்காளத்துடன் கேட்டான் மன்னன்.
அமைச்சர் சொன்னார்: “யாரோ கலையின்பம் தெரியாதவர்கள் செய்த காரியம்.”
“இராது. இந்த நாட்டில் கலைஞானத்துக்கு ஏது குறைவு?’ என்று மன்னன் சொன்னான்.
“யாரேனும் விஷமிகள் செய்த காரியமாக இருக்கலாமோ?’ என்று வார்த்தைகளை இழுத்தான் பிறைசூடி.
மேலே நடந்தார்கள்.
யாளிச் சிலை தாங்கிய பெரிய தூண். யாளிக்கு வாய் திறந்திருக்கிறது. உள்ளே உருளுகிற கல் உருண்டையைக் காணவில்லை.
“என்ன சிற்பியாரே, நம்முடைய யாளி எங்கே? இந்த வாய் திறந்த பூதம் எங்கே?” என்றான் மன்னன். பிறைகுடி முறுவல் செய்தான். வார்த்தை வரவில்லை.
மேலே நடந்தார்கள்.
மன்மதன் சிலை. கரும்பு வில்லின் வளைவிலே, கணு ஒடிந்து, பாதி வில் மட்டும் நின்றது. ரதி? ரதியினுடைய தலையைக் காணவில்லை. உடல் மட்டும் இருந்தது.
மன்னன் சிரித்தான். பிறைசூடி ஒன்றும் பேசவில்லை; கண் கலங்கியது அவனுக்கு.
“என்ன சிற்பியாரே? நடவும் உள்ளே” என்றான் அரசன். ஒரு குழந்தையினுடைய குதூகலம் அவன் முகத்தில் தவழ்ந்து விளையாடியது.
கர்ப்பக்கிருகத்திற்கு வந்தனர். அத்தனைபேரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார்கள். காரணம், உள்ளே மூர்த்தியைக் காணவில்லை!
“திரும்புவோமா?” என்று கேட்டார் அமைச்சர். தகப்பனுடைய வார்த்தைக்குக் கட்டுப்படுகிற குழந்தையைப்போல அந்த நேரம் ஒன்றுமே பதில் பேசாமல் அரசன் திரும்பினான். பிறைசூடியோ தூண்போல நின்றான்.
“சிற்பியாரே!” என்று கூப்பிட்டுத் தூணுக்கு உயிர் கொடுத்தார் அமைச்சர். அதற்குள் அரசன் எட்டி நடந்து விட்டான். பதறிப்போன சிற்பி, பின் தொடர்ந்தான்.
மறுபடியும் மன்மதன் சிலைக்கு வந்தார்கள். அமைச்சர் கூறினார்: “மன்னர் பெருமானே, உண்மையிலேயே நம்முடைய புதிய மன்மதன் பிரமாதம். அதற்கும் இதற்கும் ஒப்புச் சொல்வதே தவறு.”
அரசன் “ஆமாம்” என்றான்; பாதி மனந்தான் அந்த வார்த்தையில் ஒலித்தது. பிறைசூடியோ அந்தச் சிலையை விட்டுவிட்டுப் பார்வையை யாளியின் பக்கம் செலுத்தினான்.
“இந்த யாளியைப் பார்த்தால், ஏதோ பசி பிடித்த பூதம், வாய் திறந்த மாதிரியல்லவா இருக்கிறது?” என்றார் அமைச்சர். மன்னன் சிரிக்க முயன்றான். சிரிப்பு வர வில்லை. பிறைசூடியோ முகத்தைத் திருப்பி வீரபத்திரரைப் பார்த்துக்கொண்டு நின்றான்.
“பேரிலுள்ள வீரத்தைத் தவிர, மூக்கில் கோரந்தான் தெரிகிறது” என்றார் அமைச்சர்.
அரசன் மேலே நடந்தான். பிறைசூடி எட்டி நடந்து, நந்தியின் அருகே சென்றான்.
மன்னன் மௌனமாக நந்தியைக் கடந்தான். சிற்பி, கோபுரவாசலிலே போய், இடி விழுந்த கோவிலை, அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“சிற்பியாரே!’ என்று அழைத்தான் மன்னவன். கோபுரத்திலே போய்ச் செருகியிருந்த கண்களை, பலவந்தமாக மீட்டு, அரசனை நோக்கினான் பிறைசூடி.
“நம் இருவருடைய உள்ளத்திலும் இந்த விநாடியில் ஒரே எண்ணந்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.”-இப்படிச் சொன்னபோது மன்னனுடைய குரலில் ஒரு நடுக்கம் இருந்தது.
9
அன்று இரவு அரசன் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவிலே, புதிதாகக் கட்டப்பட்டிருந்த கோவிலுக்குள் சென்று, சிற்றுளியால் சிலைகளை யெல்லாம் தகர்த்துக் கொண்டிருந்தான் பிறைசூடி. “காலமும் மனித சமூகமும் சேர்ந்து செய்கிற அநியாயத்தை நானே செய்கிறேன்; அந்த ஒரு திருப்தியாவது எனக்கு இருக்கட்டும்” என்ற சிற்பியின் வார்த்தைகள் உளியிலே சிதறுகிற கற்களின் ஊடே, கோயிலின் மதிற் சுவர்களில் எதிரொலித்தன.
10
அன்று இரவு பிறைசூடி ஒரு கனவு கண்டான். அதிலே, புதிதாகக் கட்டப்பட்ட கோயிலை, பெரிய பெரிய வீரர்களைக்கொண்டு கட்டப்பாரையால் பேர்த்து எறிந்து கொண்டிருந்தான் மன்னவன்! “பின்னொரு நாள் ஆவி யுலகில் இருந்துகொண்டு வடிக்கிற கண்ணீரை இன்றே வடித்துவிடுகிறேன்” என்ற அரசனின் வார்த்தைகள் இடிந்து விழுகிற மதிலிலே போய் எதிரொலித்தன.
11
“என்ன சோகமான கனவு!” என்று கண்களைத் துடைத்தவாறு எழுந்தான் மன்னன்.
“என்ன அதிசயமான கனவு!” என்று சொல்லிக் கொண்டே கண் விழித்தான் சிற்பி பிறைசூடி.
12
காலையில் அரசவை கூடியது.
“என்ன சிற்பியாரே, முகம் எல்லாம் வதங்கியிருக்கிறதே?” என்று மன்னன் கேட்டான்.
“பெற்றெடுத்த முதல் குழந்தையை ஒக்கலில் வைத்துக்கொண்டு கொஞ்சினாள் என் மனைவி. அதைப் பேதைமை என்றேன். ஆனால் நேற்று என்னுடைய முதல் சிருஷ்டியை எண்ணி, நான் பெருமைப்பட்டதும் அப்படித் தான்!” என்றான் பிறைசூடி.
அரசன் சொன்னான்: ‘உண்மை; என்னுடைய மூதாதைகள் மடிகிற மனிதர்கள், நான் மட்டும் சிரஞ்சீவி என்று எண்ணினேன். அதுவும் தவறுதான்!”
அமைச்சர் ஒன்றும் புரியாமல் திகைத்தார். சபையிலே மரணத்தின் மௌனம் வியாபித்தது.
அரச குரு எழுந்தார்: “மன்னனே, உன் ஆட்சியில் நீ முதல் முதலாகக் கட்டி நிறுத்திய இந்தக் கோயிலுக்கு எவ்வித விக்கினமும் இன்றிக் கும்பாபிஷேகம் நடத்திவிட வேண்டும். தாமதிப்பது கேடாகும்.”
அரசன் பிறைசூடியைப் பார்த்தான். அந்த அதிசயச் சிற்பி சொன்னான்: “குழந்தையைப் பெறுவது தாயின் பணி. அது வளர்வதும் நிலைப்பதும் அதன் தலையெழுத்து.”
“அப்படியானால் நம்முடைய முதல் குழந்தை அழியக் கூடியதுதானா?”
“அரசே! முதல் குழந்தை என்பது நம் உள்ளத்தில் உருவான கோயில். கண் முன்னே உருவாகி நிற்பது, அந்தக் கோயிலின் நிழல்தான்! நிழலின் மறைவைப்பற்றி ஏன் சிந்திக்கவேண்டும்? முதல் குழந்தைக்கு ஏது மரணம்? அதற்கு ஜனனந்தான் உண்டு!” என்றான் பிறைசூடி. இரவு கண்ட கனவு அவனுடைய உள்ளத் தில் ஓர் அபூர்வமான தெளிவைக் கொடுத்திருந்தது.
அரச குரு சொல்லுவார்: “மன்னனே, யோசித்துப் பார்த்தால் தோற்றம், மறைவு என்ற இரண்டுமே புற உலகிற்கு மனம் கற்பிக்கும் நினைவுகள் தாம். மனம் என்ற தாயினிடத்தில் பிறக்கும் எண்ணம் என்ற முதல் குழந்தைக்கு மரணம் இல்லை!”
மன்னர் மன்னன் பேராதரத்துடன் கட்டி முடித்த முதல் ஆலயத்திலே, கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிற்பியர் தலைவன் பிறைசூடி, தவங்கிடந்து பெற்றெடுத்த முதல் குழந்தை புனிதநீர் ஆடியது.
– இரட்டைக் கதைகள் (வெள்ளிவிழா வெளியீடு), முதற்பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
பழிவாங்கும் விழிகள்
சாண்டில்யன்
May 16, 2026
நடுத்தெரு நாகரிகம்
கு.ப.ராஜகோபாலன்
May 16, 2026
மங்கலதேவி
சாண்டில்யன்
May 13, 2026