முகமணியும் மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 25, 2026
பார்வையிட்டோர்: 424 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் அவனுடைய முகத்தைத் தூக்கிக்கொண்டு போனான். எல்லோரிடமும் இருந்த பலமுகங்களைப்போல அவனிடமிருந்த நான்கில் ஏதாவதொன்று கையில் எப்போதும் இருக்கும். எது இருக்குமென்பதை தீர்மானிப்பது போகும் இடமும், சந்திக்க வேண்டிய நபர்களுமே. எப்போதாவது பலரும் கண்டுகொண்ட முகமானாலும் ஞாபகமிருக்காதவை. அவைகளை வைத்துக்கொண்டு எதுவும் செய்துவிட முடியாதெனவும் கருதி இருந்தான். ஆனாலும் அடையாளப்படுத்திக்கொள்ளவென ஏதாவதொன்று தேவையென்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அதிலும் முழுப்பெயரிடப்பட்ட முகம் கட்டாயம் தேவைப்பட்டது. அதுதான் அடையாள அட்டையில் இருந்தது. 

இவைகளுக்குப் பெறுமதி இல்லையெனக் கருதியவன் அதைப்பற்றி அசைபோட்டுக்கொண்டு முடிவெடுத்த நாளொன்றின் நடு இரவில் வாகனமொன்றில் வந்த ஐந்துபேர் நான்கு முகங்களுடனும் கடத்திக்கொண்டு போனார்கள். அவனுடைய சகல முகங்களுக்கும் தெரிந்திருந்த இன்னொருவர் ஐந்து கோடியுடன் தலைமறைவாகி விட்டதாகவும், அந்த இடம் இந்த முகங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கின்றது எனவும், அதைப்பற்றிய தகவல்களை தங்களுக்கு தெரியப்படுத்தும் படியும் வற்புறுத்தினார்கள். அதிலும் ஒரு முகத்துக்கு அவை தொடர்பான பூரண விபரங்களும் தெரிந்திருக்கின்றதாம். அந்த முகமும் மறைந்த ஐந்துகோடிக்கு பங்காளியாக இருக்கலாமென எண்ணிக்கொள்கின்றார்களாம். விசாரணை தொடர்ந்தது, கிட்டத்தட்ட விடியல் அண்மித்துப்போன மங்கிய ஒளிக்குள் அவனுக்கும், முகங்களுக்கும் விடுதலை அளிக்கப்பட்டது. உண்மையில் விசாரணை முடிந்துபோகவில்லையாம். சகல முகங்களுடனும் உறவாடிக் கொண்டிருந்த சகோதரன் அமைச்சருடன் தொடர்பு கொண்டதனால் விசாரணை முறிக்கப்பட்டதாம். அதன் பின்தான் அந்த முகத்தை அவன் கைகளில் காணமுடியாமல் போனது. அலுமாரியில் உடுப்புக்குக் கீழேயோ, புத்தக அடுக்கில் புத்தகமாகவோ ஒழித்து வைத்திருக்கலாம். அல்லது அவனுக்குள்ளே போட்டு புதைத்தும் வைத்திருக்கலாம். அது பற்றி தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. எப்படியாகிலும், காணமுடியாமல் போயிருந்தது. 

கொஞ்சம் வெளுப்பாயிருந்த அந்த முகத்தில் கண்கோட்டுக்கு சமாந்தரமாக மூக்கு முடிவிடத்துக்கு நேராய் கன்னத்தில் ஒரு கீறு இடப்பட்டிருந்தது. உலோக ஆயுதமொன்றினால் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென நினைத்தேன். அது காகம் கிழித்ததுதானாம். கையில் வைத்திருந்த வடையைப் பறிக்கவந்த காகம் இட்டுப்போன அடையாளம் என்றான். சனியன் பிடித்துக்கொண்டதன் ஆரம்பம் என்றாளாம் அம்மா. 

தன்னால் எதையும் எதிர்கொள்ளமுடியும் என்றும், பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதென்பதும். தீர்வுகாண்பதென்பதும் தனக்கு எப்போதும் விருப்பமானதெனவும் கூறினான். தன்னிடமுள்ள பயத்தை மறைக்கவே இவ்வாறெல்லாம் கூறுகின்றான் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. கோழைத்தனம் என்பது அவனுடைய எல்லா முகங்களிலும் பரவிக்கிடந்தது. தனக்கானவள் ஆத்மா தேவதை என்றெல்லாம் எண்ணி, கிடைக்க வேண்டுமென இரவுகளில் நினைத்தழுத பெண்ணிடம்கூட காதலைச் சொல்லாமல்போன கோழை. இது தற்கொலை வரையும் சென்றது. எல்லோருடைய இயல்புகள் வழியும் செல்ல பழகிப்போயிருந்தான். அவர்களுடைய பிழைகளைச் சுட்டி விவாதித்து பிரயோசனமில்லை என்று கருதிக்கொண்ட பட்சங்களில் ஆமாம் போட்டுக்கொண்டான். நினைப்பதை சொல்லிக்கொள்ள இயலாதிருப்பவனே கோழையாம். – யாரோ கூறிய ஞாபகம். அதனால்தான் அவன்பற்றி உறுதியிட முடிந்தது. ஆனாலும் முகங்களெல்லாம் கணத்துக்குக் கணம் வெவ்வேறு இயல்புகளை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. அழுகை – சிரிப்பு – சோகம் இன்பம் மயக்கம்-தெளிவு எதையும் இனங்கண்டுகொள்ள முடியாமல் இறுகிக்கிடந்தது. இதனால்கூட எந்தத் தரப்படுத்தலுக்குள்ளும் இணைத்துக்கொள்ள முடியாமல் நிராகரிக்கப்பட்டிருந்தது. 

அவனுடைய நான்கு முகங்களைப்பற்றிய செய்திகள் சுவாரசியமானவை தொகுத்து நாவலாக்கக் கூடியதகுதிகள் அவற்றுக்கிருந்தன. நைந்து கூரான முகங்கள் ஒவ்வொன்றும் என் தலைக்குள் சுழன்றுகொண்டிருந்தது. 

1974ல் அவன் பிறக்கும்போது ஒருமுகம் மட்டும் இருந்தது. அதை அழைப்பதற்கான பெயரிடலை. அவன் அப்பா தன் நண்பனின் ஞாபகத்தின் பொருட்டு – இரவீந்திரன் என இட்டிருந்தார். பெயரின் நீளம் காரணமாகவும், வீட்டில் அழைப்பதற்காகவும் 

ஜெனி எனச்சூட்டினாள் அக்கா. அது அவளின் சிநேகிதியினுடையது. இரவீந்திரன் – ஜெனி, ஒரு முகத்துக்கே இரு பெயர்களும் இருந்தாலும் காலப்போக்கில் ஜெனி என்பது தனியான முகமாகவே வளரத்தொடங்கியது. சிரிக்காமலும், அழாமலும் வளரத் தொடங்கியதை எல்லோரும் அடித்துக் கொண்டிருந்தார்கள். குழப்படி காரணமாக இருந்தாலும், அழவேண்டும் என்பதற்காகவே தான்அடிப்பதாக அம்மா சொன்னாள். குழந்தைகள் அழ வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தாள். அதிலிருந்துதான் பசியையும், வலியையும் அறிந்துகொள்ள முடியுமாம். அதற்காகவே முகத்தின்மீது கல்லைத்தூக்கி வைத்தாள் இதனால் குழப்படியும் தடுக்கப்பட்டது. ஒரு கல்லில் இருகாய்கள் அடித்த மகிழ்ச்சி – மூன்றாவது காய் ஒன்றும் கூட விழுந்தது. அப்பாவைப்போல வட்டமாக இருந்தமுகம், கூரானதாக அவளுடையதைப்போல மாறிப்போனது. அம்மாவின் முகம்போலவே வளர்ந்தும் போனது. 

அந்த முகத்தை உறவினர்களிடம் காட்டிக்கொள்வதற்காக வைத்திருந்தான். அவர்களால் மட்டுமே அதன்பெயரை சரியாக உச்சரிக்க முடிந்ததுடன் இனங்கண்டுகொள்ளவும் முடிந்திருந்தது. அழகில்லை என்றாலும் அமைதியானது எனக் கதைத்துக் கொண்டார்கள். 

அதன் வாய்க்குள் முன்பிருந்த பல் விழுவதற்கு தயாராக ஆட்டம் கண்டிருந்தவேளையில், எதையும் தானாகச் செய்ய பழகிக்கொள்ளாத நேரத்திலும் அம்மா அலுமீனியப்பறவையொன்றில் பறந்து போனாள். பறந்து திரிவது அவளுக்கு விருப்பமானதும் கூட, கடன் தொல்லைகளைக் குறைக்க வேண்டுமென்பது அவளின் கூற்று. 

முகத்தில் தாடியும், மீசையும் தானாகவே வளர்ந்துபோன பின்னைய காலமொன்றின் மழைக்கால பிற்பகலில்தான் அவளைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இடைப்பட்ட காலப்பகுதியை அப்பாவுடன் கழித்துக்கொண்டிருந்தான். இதன்போது அந்த முகம் உப்பு நீரால் கழுவப்பட்டிருந்த நாட்களும், ஏக்கங்களில் கரைந்த பொழுதுகளும்தான் அதிகமாக இருந்தது. உவர்த்தன்மையின் செழுமை அவனது முகமெங்கும் படர்ந்திருந்தது. 

எட்டு வருடங்களாக வெள்ளை முகங்களைக் கண்டுகொண்டிருந்தவளுக்கு, சுருங்கி கறுத்திருந்த அவனுடையதை அடையாளங்காண முடியாமல் போயிருக்க வேண்டும். மயிர்கள் முளையாமல் இருந்த பிஞ்சில், விகாரம் தாக்கி இருந்ததால் ஏற்பட்டிருந்த மாற்றங்களும் காரணமாய் இருந்திருக்கலாம். எப்படியோ ஞாபகத்துக்குக் கொண்டுவர முடியாமல் மறந்துபோயிருந்தாள். ‘இது யாருடைய முகம்” அவனிடம். பின்னின்ற அக்காவிடமும் கேட்டு விசாரணை செய்தாள். அதுவரை தொங்கிக்கொண்டிருந்த ஏக்கம், வெறுப்பு, இயலாமை கோபமாகமாற ஆரம்பித்திருந்தது. அப்பாவின் செய்கையினால் அது உச்சக்கட்டத்தை அடைந்தது. 

நோயின்காரணமாக பலம் முழுவதையும் இழந்துபோயிருந்த அப்பா. எழுந்திருக்க முடியாத நிலையில் நாட்கள் போனது. மங்கிப்போன கண், கேளுணர்வு குறைந்த காது. நிம்மதி அவருடைய தேவைமுழுவதுமாக இருந்ததனால் ஜெனி எனப்பட்ட முகத்தை அடகுவைத்துவிட்டு மீட்கமுடியாமல் இறந்துபோனார். 

இப்போதெல்லாம் அடிக்காமலேயே அழுவதற்குப் பழகிப்போனான். அடகு வட்டி எதையும் ஒப்புமைப்படுத்த முடியாதளவு வளர்ந்து குட்டி குட்டியாய் ஈனத்தொடங்கி பெருகி இருந்தது. 

பரந்து பெருக்கெடுத்து மௌனமாய்க்கிடந்த குட்டிகளின் நடுவிலிருந்து தலைவன் எழுந்துகொண்டான். முகத்தினுடைய தந்தை ஊதாரியெனவும், தனக்குக் கிடைத்த பணத்தில் வாழ்க்கையை நடாத்த முடியாமல்தான் தன்னிடம் வட்டிக்கு வாங்கினான் எனவும் கத்தினான். அது தன்னுடைய வருமானத்தின் பாதிப்பங்கெனவும் இதனை இழந்தவனாய்ப் போனால் தன்னால் நீடித்து வாழ்க்கையை நடாத்த முடியாதாம். இவனின் தந்தையின் கடன் உடனடியாக மீளளிக்கப்பட வேண்டும் என்றும், அல்லாமல் போனால் எனது கடையில் பணிசெய்து கழிக்கட்டும் எனவும் உத்தரவிட்டான். மீளளித்துக்கொள்ள பணம் இல்லாததனால் கடைக்குப்போக வேண்டி இருந்தது. அவனை ஆதாரமாய்கொண்ட நான்கு முகங்களில் ஜெனி சுற்றித்திரிந்தாலும், இரவீந்திரன் என்ற முழுப்பெயரிடப்பட்டது வேலைபார்த்தது அதனிடமிருந்து செலவீனங்களுக்கு போதுமான படி பெறப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் வாழ்க்கையை துரத்தும்படிக்கு போதுமானதாயிருந்தது. அதனுடைய வேலையையும் இடைநிறுத்திவிட்டுத்தான் புறப்பட்டுப்போனான். 

அத்தோடுதான் சுயமிழத்தல் ஆரம்பமானது. உணர்வுகளை ஒடுக்கி வைத்து அடிமையாக செயற்பட்டுக்கொள்ள வேண்டி இருந்ததாம். அக்கால கட்டமே ஜெனியின் வரலாற்றில் நிறையலுமே கற்றுக்கொடுத்தது. பணத்தின் தீவிரத்தன்மைக்குள் சகலமும் அடிபட்டுப் போவதாய் கருதிக்கொண்ட பலரை தரிசிக்க முடிந்திருந்தது. இக் கோமான்கள் வியர்வை சிந்தாமல். உழைக்காமல். மூலதனத்தை பெருக்க தெரிந்து வைத்திருந்தார்கள். உண்பதும், குடிப்பதும். உறங்குவதும், பணம்பெருக்க வழிதேடுவதும், அமர்ந்திருப்பதுமாக – கடவுளையும். ஏமாளிகளையும் தேடுவதிலும் கூட. காலத்தை வீணாக்கிக் கொண்டிருந்தாலும், தொந்தியும், சேமிப்பும் மட்டும் பெருகிக்கொண்டு போனது. முகத்தை இழந்து போய் காகிதநோட்டுக்களால் மறைத்துக்கொண்டு திரிந்தவர்களையும், பணத்தின் சீடர்கள் எனப்பட்டவர்களையும். அப்போது அவனால் சரியாக இனங்கண்டுகொள்ள முடிந்திருந்ததாம். அக்காலப் பகுதியிலேயே அழவேண்டும் போலிருந்த நாட்கள் அதிகமிருந்ததாகக் கூறினான். யாருடைய மடியேனும் கிடைத்திருந்தால் அந்த அழுதல்கூட சுகமாக இருந்திருக்கலாம். தனியே வழிந்தோடிய கண்ணீரில் குட்டிகளும், வட்டிகளும் மூழ்கி கரைந்துபோனதன் பின்தான் அங்கிருந்து திரும்பியோடிவர முடிந்ததாம். 

இதுதான் அவனுக்குரியமுகம், இரவீந்திரன், சமூகத்தை இதனூடாகவே எதிர்கொள்ள வேண்டி இருந்தது. உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும் என்பதற்காக அவன் பொருட்டு உள்ளது. 

பாடசாலையிலும், பின் வேலைத்தளத்திலும் காணும்போது அவனிடம் இந்த முகம்தான் இருக்கும். சாந்தமான இந்த முகத்துடன்தான் அறிவைத்தேடி அலைந்தான். ஆனால் காலம் போராட இவனைத்தேடிக் கொண்டிருந்தது. பிடரியில் குதிகால் அடிபட புத்தகங்களைத் தூக்கி வீசிவிட்டு தப்பியோடியதனால், மீண்டும் புத்தகங்களைத் தூக்கி நடக்க முடியாமல் போயிருந்தது. அவனது வகுப்பிலும் சிலரைத்தவிர வேறு யாருக்கும் இந்த முகம் ஞாபகத்துக்கு வந்துவிட முடியாது. பிரகாசமும் இல்லாமல், மங்கலுமில்லாமல் பத்துடன் பதினொன்றாக வகுப்புள் புதைந்து கிடந்தது. முக்கியமாக எந்தக் காலத்திலும் அதன்பின் ஒளிவட்டம் தோன்றியிருக்கவில்லை. ஆனாலும் மற்றைய மூன்றையும் விடவும் அவனில் அக்கறை கொண்டிருந்ததென்னமோ இதுதான். தனிமையைப் புரிந்துகொண்டு எல்லாவற்றுக்குமான துணையைத் தேடி அலைந்தது தோல்விகளையும் சந்தித்தது. 

அம்மா பறந்து போய்விட்டதன் பின்னர் அப்பாவின் கண்டிப்புத்தான் அவனை உயரமாக்கியதாம். வாய்ப்பாட்டையும், இலக்கணத்தையும் இவனுக்குள் திணித்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்திருக்கிறார். அதற்காக திரும்பும் பக்கங்களிலெல்லாம் கொடிப்பிரம்புகளை தொங்கவிட்டிருந்தார். அவைகள் முறைத்த வண்ணமே ஆடிக்கொண்டிருக்கும். அவனையும் மற்றவர்களையும் வளர்ப்பதில் அவற்றுக்கு முக்கிய பங்கிருந்ததனால் பிள்ளை வளர்த்தான் உன்னை எனப்பெயரிட்டிருந்தாராம். நான்தான் உன்னை வளர்ப்பேன் – உன்னை வளர்ப்பேன் – கண்முன் ஆடிக்கொண்டே சொல்லுமாம். கனவில் கூட அதன் ஆட்டத்தை நிறுத்த முயன்று கைகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், அவன் பற்றி முறைப்பாடுகளுக்கெல்லாம் அதுதான் பதில் சொல்லிக் கொண்டிருந்ததாம். அதன் மொழி அவனது காலில் வரியாய் ஓடித்திரிந்ததைக் காட்டினான். அதனிடமிருந்த கட்டுப்பாடு மீறப்பட்ட போதுதான் விடுதியில் அனுமதிக்கப்பட்டானாம். ஒரு கையில் பெட்டியுடனும், மறுகையில் முகங்களுடனும் போய்ச்சேர்ந்தானாம். 

தானாகக் கதைத்து, தானாக அழுது, தானாகத் துடைத்து, தானாகவே ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டிய காலமாக இருந்ததாம். பலகாரங்களுடனும், சீனி மா டின்னுடனும் மற்றைய நண்பர்களின் முகங்களைப் பார்க்க வந்து கொண்டிருக்கும் பெற்றோர்கள் சனி, ஞாயிறுகளிலும், விடுமுறை தினங்களிலும் தவறாது சூரியனை அழுத்தும் வரை நின்றார்கள். உன்னைப் பார்க்க யாரும் வரவில்லை நண்பனோ, வந்தவர்களோ கேட்கும் போது கண்ணீரால்தான் பதில் சொல்ல முடிந்ததாம். 

தனிமைக்குள் இருந்து மீளவேண்டி துணைதேடிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து கொண்டானாம். சோகம் பகிர்ந்து கொள்ளவென இல்லாமல் போனாலும், பொழுதைக் கழிக்கவென மன உழைச்சலில் இருந்து மீறி – சுற்றித்திரிந்ததாகவும் கூறினான். அவர்களுக்கு, சந்தோசமாக இருப்பதாக துடைக்கப்பட்ட முகத்தைக் காட்டிக்கொண்டான். 

சைக்கிளில் சுற்றித்திரிந்தது முகம், சினிமா தியேட்டர் வாசலிலும், பஸ் நிலையத்திலும், இந்த முகத்தைக் கண்டுகொள்ளலாம். ரவி மற்றைய முகங்களிலிருந்து முற்றாக மாறுபடாவிட்டாலும், ரவியுடன் அலையும்போது கொஞ்சமாவது சந்தோசம் இருக்குமாம். 

அதிகமாக மாலை வேளைகளில் மைதானங்களிலும், மங்கிய இருள்கவியும்போது பார்களிலும் காணமுடியும். போதை அவனுக்குத் தேவைப்பட்டது என்பதைவிட மற்றைய முகங்களின் தாக்கம் – ரவீந்திரன், ஜெனி – பீடிக்காமல் இருத்தலே முக்கியமாகப்பட்டதால், சுயநினைவிழந்திருத்தலே சந்தோசம் என்றான். 

அது தனித்திருத்தலுக்கு சந்தர்ப்பம் ஏற்படாமல் போயிருந்ததாகவும், நிறையப்பேர் சூழ்ந்துகொண்டோ, அல்லது சூழ்ந்துகொண்ட கூட்டத்துள் ஒருவனாகவோ நின்றுகொள்ள வேண்டி இருந்ததாம். அதனுடன் ஆத்மாக்கள் எனப்பட்ட ஏழு முகங்கள் சேர்ந்திருந்ததாகவும், ஒன்று கீறல் படும்போது எல்லா முகங்களுக்கும் விழுந்தது போல அவஸ்த்தைப் பட்டுக்கொண்டிருந்ததாகவும், அவர்களுள் சகல திறமைகளும் அடங்கி இருந்ததாக கதைக்கப்பட்ட கூட்ட முகத்தை காலம் திசைக்கொன்றாய்ப் பிரித்து அனுப்பி விட்டதாக நொந்து கொண்டான். அதன் பின்னர் பகலின் மீது கருமேகம் கவிழ்ந்து இருளாக்கியதைப்போல தனிமை சூழ்ந்து கொண்டதாம். அந்த முகத்துடன் உறவாடிக்கொள்ள, துணையாக யாரும் கிடைக்காமல் போனமையால் அந்த முகத்தைத் தொலைத்துவிட தீர்மானம் எடுத்துக்கொண்டபோதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினான். 

மழை தூறிக்கொண்டிருந்த பகல் அவனுடன் கடமையாற்றுபவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். நீ எனக்கு நண்பன், உனது முகத்து ரகசியத்தை நான் அறிந்து வைத்திருக்கின்றேன். ஆனால் உன்னால் எதுவும் இதுவரைக்கும் எனக்கு கூறப்படவில்லை. இனி மேலாவது நல்ல நண்பனாய் இருக்க வேண்டும். அவள் கட்டளையிட்டுப் போனதன் பின்னால் அவளிடம் எல்லாவற்றையும் கூறிவிட முனைந்தானாம். கொஞ்சம், கொஞ்சமாகக் கூறியும் இருந்தான். சமூகக் கட்டுப்பாட்டுள் அந்த நட்பு எதுவரை நீடிக்கும் என்ற சந்தேகம் இருந்ததாகவும், அவன் – ஆண், அவள் – பெண், அவளது அல்லது அவனது திருமணம். அவர்களைக் கடந்து போகும் கண்கள், எதையோ ஊகித்துக் கேட்கும் காதுகள், வீட்டிலுள்ளோரின் வினாக்கள் எல்லாம் அவனின் முன் கேள்விக்குறியாய் வளைந்து நின்றதாகவும், காலம் புரியப் பண்ணும், நீ பயப்படாதே உனக்கொரு அம்மாவைத் தேடித் தருவேன் என்று கூறியிருந்ததையும் நினைத்துக்கொள்வதாகச் சொன்னான். தனக்கு தேவையாகிய மரணத்தைப் பற்றி அவளிடம்தான் மனம் விட்டுக் கதைக்க முடிந்ததாம். கோபத்துடன் அதை நிராகரித்து விட்டு, சாந்தமாய் உயர்ந்து கொள்வதற்கான திடம் பற்றியும் எடுத்துக் கூறினாளாம். இது முழுவதையும் பின்பற்ற முடியாது. – சோம்பேறித்தனம் -இல்லை வரலாறு – வரலாறுதான் பின்னைய கட்டத்தைத் தீர்மானிக்கும் என்பதை நீ அறிவாயா? அன்றுதான் முழுமையாக தரித்திரமான, சரித்திரத்தை சொன்னானாம். இப்போதெல்லாம் அவளால் மட்டுமே அந்த முகத்தை இனங்கண்டுகொள்ள முடியும். மறந்துவிடக்கூடியதல்ல எனவும் சொல்லியிருந்தாளாம். 

அத்தனை காலம் பயணித்த பாதையில் போதை நிலவியதாம். நிழலாற மரம், வரண்ட நாவுக்கு நீர், குளிர் காற்று எதுவும் இல்லா வறட்டு வெளியாகவுமே இருந்ததாம். எந்த முகத்தை மாற்றிக் கொண்டாலும், சில கணம் சகிப்பும், பின் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையுமே எஞ்சியிருந்ததால்தான், சகிப்புத்தன்மை கூடியதும் வேதனையை ஆவியாக்குவதுமான இயந்திர முகத்தை -வீரன்- உருவாக்கிக் கொண்டானாம். அது 1990களில் தான் நடந்தேறியதாம். 

பல குதிரை வலுக்களில் ஓடினான். குழம்படி மணலில் வீசப்பட்டு சிதறிக் கிடந்தது. வித்தியாசமான கோணங்களில் முகம் குரூரத்தைக் காட்டியது. மனதின் உள்ளிருந்ததையெல்லாம் கரைத்துக்கொண்டு பறக்கும்போது நிற்கும் காற்றோ, வீசும் காற்றோ முகத்திலறைந்ததும் தனக்கு அறைவதற்காகவே காத்திருக்க வேண்டும் அல்லது அதற்காகவே வந்திருக்க வேண்டும் எனவே நினைத்துக் கொண்டானாம். அவனின் முகங்களும், ஞாபகங்களும் வேகத்தை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்க வேண்டும். இதுபற்றிய குறிப்புகள் பத்திரிகைகளில் கூட வந்து கொண்டிருந்தது. ஒரு நாள் தொலைக்காட்சியிலும் அந்த முகம் காட்டப்பட்டதாம். ஆனால் ஞாபகத்திற் கொள்ளக்கூடிய அளவிற்கு அதனிடம் தெளிவிருக்கவில்லையென கதையடிபட்டது. மூன்றாம் கை, இரண்டாம் வாயாகவும். தனிமொழியாலுமே அது படைக்கப்பட்டிருந்தது. குரூரமான அந்த முகம் கனவுகளுள் வந்து பயங்கொள்ளச் செய்ததாக பலர் தகவல் தந்தார்கள். 

இம்முகத்துடன் வரும்படி அழைப்பொன்று வந்துகிடந்தது. வருவதனால் தாங்கள் பெருமைப்பட்டுக் கொள்ள முடிவதுடன், முகத்தை அனைவரும் இனங்கண்டு கொள்ளக்கூடியதாக இருக்குமெனவும் குறிப்பிட்டு அனுப்பப்பட்டிருந்ததாம். 

அன்று இரவில் ‘இது அறிமுகப்படுத்திக் கொள்வதற்கோ, இனங்கண்டு கொள்வதற்கெனவோ தோற்றுவிக்கப்பட்டிருக்கவில்லை. பெருமைப்படுவதற்குக் கூட, உப்புக்கரிக்கக்கூடிய மற்றைய முகங்களை நக்கித் துடைக்க அதிகமான எச்சிலும், ஆறுதல்படுத்த கறுப்பு-நீல மையாலான நிறைய வார்த்தைகளும் அதனிடம் உள்ளது. அனுபவங்களே பாடமாக அமைவதோடு, கற்பனையாகவும் பீச்சிடும் என்பதனால் மூன்று முகங்கள் குறித்த சுயசரிதமே இதனுடைய தோற்றத்தின் காரணமாக இருந்தது. இவை பற்றி யாருமே அறிந்திருக்கவில்லை. அவசியமும் இல்லை. அதனால்தான் நான் போய்க்கொண்டே இருக்கின்றேன். முட்கள் கிழித்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கவே என் நான்கு முகங்களும் என்னிடமுள்ளன. அவைகளை பாதுகாக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், சுயம் தேவை. மூக்கை வடித்துக் கொண்டேனும் கிடக்கட்டும் என்னிடமே” நாட்குறிப்பேட்டில் எழுதிவிட்டு கட்டிலில் முடங்கிக் கிடந்தான். டாம் காய்கள் கறுப்புக் கட்டங்களுக்கே மீண்டும் மீண்டும் மாற்றப்படுவதைப்போல இருளுக்குள்ளேயே தூக்கிப் போடப்பட்டான். 

இவற்றைவிடவும் முகத்தினுள் புதைந்து கிடந்த இன்னமுமொரு விடயம் உள்ளது. விண்ணிலிருந்து வரும் தேவதைகள் ஆத்மாக்களுக்கு வழிகாட்டுவார்களாம். 

தோல்விகளைத் தாங்கி இருண்ட வெளிக்குள்ளால் நடந்து கொண்டிருந்தான். எதிரே அதா? அவனா? அவளா? இனங்கண்டு கொள்ளமுடியாத மங்கிய ஒளியாய் மின்னிக் கொண்டிருந்தது ஒரு உருவம். நட்சத்திரங்களைப்போல மின்னி, மின்னி ஒளிர்ந்தது. அவனின் பின்னிருந்து கடந்த வாகனம் ஒளியைப் பீச்சியடித்து காட்சிப்படுத்தியது. அவள் – தேவதை. தேவதை -பெயர் தெரியாத தேவதை. வெற்றி நிறைந்த அன்பான தேவதை அகன்ற விழி, சாந்தமான முகம், மௌன மொழிபேசும் உதடுகள். 

வானம் வெடித்து குதித்து வந்த மீட்பாளியாய் நின்று கொண்டிருந்தாள் என்றும் பேரண்டம் மங்கிப்போகும் ஒளியை வீசிய நெற்றிப்பொட்டு ஒழித்து வைத்திருந்த நான்கு முகங்களையும் ஒரு சேர கொணர்ந்தது என்றும் கூறினான். 

ஒளிக்குவிவில் தோன்றிய வாழைகளுக்கும் வெப்பத்தில் தோளை அழுத்திக் கிடந்த சிலுவை எரிந்து போனதாகவும், மும்புறம் எரிபட்ட திருப்தி இருந்ததாம். எட்டுக் கண்களும், எட்டு உதடுகளும் சிரித்து கண்ணிலிருந்து நீர் உதிர்ந்ததை வர்ணித்தான். அவ்வாறானதொரு அருட்டல் அன்றுதான் அவைகளுக்கு கிடைத்திருக்க வேண்டும் என்றான். 

அவனது கையைப் பற்றிக் கொண்டதும் தாயின் மடியில் தலையை வைத்த நிம்மதி கிடைத்ததாகவும் மோட்சப் பிரயாணம் பற்றி அவள் சொன்ன கதையைக் கேட்டு நான்கு முகங்களுடன் கூடிய தலையை ஆட்டிக் கொண்டிருந்தானாம். வழிகாட்டிக் கொண்டு அவள் பாடிய பாடல் வட்டமிட்டு காதுள் ரீங்காரித்துக் கொண்டிருப்பதாக கூறியவன் தன்னை மறந்து பாடத் தொடங்கினான். 

நம்பிக்கையே உங்கள் அங்கங்கள் 
நீங்களெல்லாம் பூமியில் சிங்கங்கள் 
துன்பங்களை சோதனையாய் கொள்ளுங்கள் 
சோதனையை நம்பிக்கையால் வெல்லுங்கள் 

தேவதைபாடிய தேவகானம் மானிட ரகசியப் பாடலும்கூட கண்களை மூடிக்கொண்டே புலம்பினான். 

அவனிடமிருந்த நான்கு முகங்கள் பற்றி யாருக்கும் தெரிய வந்ததில்லை. எவரும் தெரிந்து கொள்ளவும் விரும்பியிருக்கவில்லை. ஒன்று அல்லது இரண்டு தெரிந்திருக்கலாம். இந்தத் தெரிதல் கூட புரிதலாகியிருக்கவில்லை என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 

அவனுடன் தொடர்புபட்டிருந்த யாதொரு முகத்தைவிடவும் இக்கதைகளை அழகாக எடுத்துச் சொல்லிவிடக்கூடியளவிற்கு எதுவும் இருந்ததில்லை. அதிலும் வீரன் சிறப்பாகப்பட்டது. 

என் சரிதத்தை எனது உறவுகளை என்னைவிட யாரும் அறிந்திருக்க நியாயமிருக்கவில்லை. மேலே மேலே செல்ல வேண்டும். யாரும் இனங்கண்டிருக்க முடியாத என்னைக் காட்டிக் கொள்ள வேண்டும். எவரேனும் நடந்திருக்க முடியாத அந்தரத்தில் என்பாதையின் வரைபடத்தை கீறிக்கொண்டு நடந்தேன். எல்லோரும் கைதட்டி ஆரவாரிக்கும் வண்ணம் விகாரப்பட்ட முகத்தை மறைத்து செதுக்கப்பட்ட வார்த்தையைக் காட்டினேன். தேவதை சொன்ன மானிட ரகசியப் பாடலைப்பாடிக் கொண்டே…

– வெள்ளைத்தோல் வீரர்கள் (சிறுகதைகளின் தொகுப்பு), முதற்பதிப்பு: 26 ஆகஸ்ட் -2004, மூன்றாவது மனிதன் பதிப்பகம், இலங்கை.

எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *