மரபு
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கங்கை அற்புத எழிலரசி. மழலையின் குதலைக் குரலெழுப்பி, கன்னித் தமிழின் நித்திய யௌவனப் பொலிவுடன், குழலவிழ, இடைதுவள, நீராடும் கன்னியின் உடற்கவர்ச்சி காட்டி, பரதக்கூத்திடும் நர்த்தகியின் காம்பீரியத்துடன், வற்றாது காலங் காலமாக வளநீர் நிதியைச் சகலருக்கு மளித்த வண்ணம், ஒடிக்கொண்டிருந்தாள். கழிமுகத்திலே, களிப்பின் ஓதை யெழுப்புங் கடல் ராஜன் தனது கருநீலக் கரங்களுக்குள் அணைக்க, அவள் சங்கமித்தாள். தினந் தினம் – நிதம் நிதம் ஓடிப் பாடிச் சங்கமித்துக் கொண்டு, நித்திய சௌபாக்கியவதி யாக வாழ்ந்த அவள் உள்ளத்தில், தற்பெருமையில் முளை கொண் துராசையொன்று விளைந்து கொழுத்தது.
மலைத்தாயின் நிமிர்ந்த மார்பிற் புரளும் சீதள நீரையும். மேகநங்கை துறவறத் தூய்மையைப் பறைசாற்றி விண்ணிற் பறந்து, பருவ ஈர்ப்பில் அலைக்கழிந்து, போராட்டப் புயலிற் சிக்கிக் கனத்துச் சொரியும் நித்திலத் துளிகளாம் மழைத்துளிகளையுஞ் சேமித்துவளம் பெற்றதனால், கர்வம் மிக்கக் கொண்டாள்.
‘வளநீர் வீணே உப்பு நீரிற் கலந்து விரயமாகின்றதே; கடல் ராஜனின் கோரப் பசிக்கு இலக்காகி, உடல் மெலிந்து உருக்குலைகின்றதே..’ என்ற எண்ணப் பொறிகள் தெறித்தன.
அழுக்காறுங் குரோதமும் நெய் யுண்டு, ஜூவாலை கக்கி வளர்ந்தன. அவள் மகா அகம்பாவியானாள்.
விரோதத்தில் மதர்த்த வைராக் கியத்துடன், இறைவனின் தரிசனம் வேண்டி நோன்பு நோற்றாள்.
தவம் பலித்தது. கடவுள் தோன்றினார்.
“கங்கையே! உன் மனக்குறை யாதோ?”
“மலையிலே தவழ்ந்தேன்; நிலத்திற் புரண்டேன்; கழனிகளில் உலவினேன்…ஆடலும் பாடலுமே எனது பொழுதுபோக்கு. சடல் ராஜனின் அதிகாரம் எனக்குப் பிடிக்க வில்லை. என் வளநீரெல்லாவற்றையுந் தனது உப்பு நீர் வயிற்றுக்குள் நிறைத்துக் கொள்ளுகின்றான். அவனுடைய உறவே தேவையில்லை.”
“நித்தியன் நிருமித்த நியமம். இஃது உனது ஊழ். ஒன்றுள் ஒன்றடங்கி, அந்த ஐக்கியத்தில் மறுபடியும் ஜனிப்பதே மரபு. நித்தியமான கடலுடன் சங்கமித்து, உன்னை இழந்து, மீண்டும் நீயாவதே மரபு”.
“கிழட்டுக் கடல் ராஜனை மெத் தப் புகழ்கின்றீர். நீர் அசல் வைதீகம். எனது வழி, புதிய வழி; புதுமை வழி; புரட்சி வழி.”
“குருட்டுத்தனமான புதிய மோகத்திற்கு இடமளித்துவிட்டாய். மயக்கத்தில் மருளுகின்றாய். நியாயம் உன்செவியில் ஏறாது.. உன் தவ வலி மையினால் நீ விரும்பியதைப் பெற் றுக் கொள்ளலாம். கேள்.”
“கடலரக்கன் என்னை விழுங்குங் கழிமுகந் தூர்ந்துபோக வேண்டும். என்னில் ஒரு துமிதந்தானும் கடலுக் குள் செல்லலாகாது”.
தமது பக்தையின் மனோவிகா ரத்தை உணர்ந்த பரமன் குஞ்சிரிப்பு உகுத்தார்.
வேண்டப்பட்டது, நிறைவேறியது.
***
கங்கையில் உபரி நீர் சேர்ந்தது. உண்டி கொழுத்த பருமன். கரைகளை மறைத்து, நீர் மட்டம் உயர்ந்தது. கரை மரபு மறைந்தது! மருங் கெல் லாம் நீர்ப்பரப்பு விரிந்தது; மரங்கள் வேர்பாறிச் சரிந்தன; வீடுகள் அழிந்தன; கழனிகளெல்லாம் ஆற்றுப் படுக்கையாயின! அவளைத் தெய்வ மென அஞ்சலி செய்து வந்த மக்கள், நிந்திக்கத் தொடங்கினர். அவள் நடமாடுஞ் சுவடுகளை அரவக்கிடங்குகளாக அவர்கள் வெறுத்தார்கள்.
கங்கையை மனோவிசாரம் பீடித்தது.
மலைத்தாயை நோக்கி, “என் அவஸ்தை உனக்குத் தெரியாதா? பெற்ற மனம் கல்லோ? உன்மீது புரளும் அருவிகளை என்னிடம் அனுப்பாதே!” எனக் கெஞ்சினாள்.
“நீ ஓர் உன்மத்தை. மேகமகள் என்னிடந்தருவதை நான் உன்னிடம் அனுப்புவது மரபு. இதுதான் ஜீவிதச் சுழல். உன் புதிய போக்கு எனக்குப் புரியவில்லை.”
யூற்றவை பர கங்கை,மேகமகளிடம் முறையிட்டாள்.
“என்ன இருந்தாலும் இந்தக் குரூர மனோ பாவம் ஆகாது. என் தந்தை கடல் ராஜன், நித்திய கல்யாணப்பேறு பெற்றவர். அவருக்காக நான் இல்லறந் துறந்து கன்னி நோன் பிருந்து, அந்தரத்தில் அலைகின்றேன் பலவீன நினைவுகளென்னுங் காற்று என்னைத் தழுவும் பொழுது. பாசங் களை உகுத்துத் தூய்மை பெறுவது என் மரபு. உனது புதிய போக்கு எனக்குப் புரியவில்லை” என்று வினய மாகச் சொல்லி நகர்ந்தாள்.
‘இவள் மேகத்துக்கு எவ்வளவு அகந்தை? கன்னியாம்; விரதமாம். இவள் துய்யளா? குறளி; கணிகை! வெட்கமற்றவள். தன் தந்தையின் காமக்களியாட்டத்திற்கு உடந்தையாக இருக்கிறாள். என்னைப் பழி வாங்கிக்கொண்டு, ஒன்றும் அறியாத வளைப்போல பசப்புகிறாள். உன் செருக்கை அடக்குகிறேன், பார்! என்று பொருமிக் கொண்டு, அமல் னின் அருள்வேண்டிக் கடுந்தவத்தில் மூழ்கினாள்.
பிரமனின் தரிசனம் மீண்டுங் கிட்டிற்று.
“என்ன வேண்டும் கங்கையே?”- அவருடைய கேள்வியில் ஏளனம் புரையோடிக் கிடந்தது. அவள் வெகுண்டாள்.
“ஈஸ்வரா! தாங்களறியாததா? எனது அழகிய கரைகள் எங்கே? ஆண்டாண்டாக, காலங் காலமாக என் மருங்கிற் சடைத்து வளர்ந்து, எனக்கு ஆலவட்டம் விரிக்கும் தோழி களாம் மரங்களெங்கே? என்னைச் சம்பாவனை செய்த மக்கள் எங்கே? என் எழில் குலைந்தது; பெருமை குன்றியது..”
“நியதியைச் சாடினாய். நமது மரபில் வேரூன்றாத புதுமையை நாடினாய். அதனால், வந்த வினையல்லவா? உனது பழைய உருவத்தை யே மீண்டுந் தரட்டுமா?”
“வேண்டாம்… புது வெள்ளத் தைப் பிரசவிக்கும் மேகக்கள்ளியின் சாகசத்தை நான் அறிவேன். அவள் என் கண்ணிற்கு எட்டாத தொலை தூரத்திற்குச் சென்றுவிட்டாற் போதும். என்னிடமுள்ளதே போதும். புதிதாக ஒரு துமிதானும் என் மேனியிற் படலாகாது.
“கங்கையே! நிதானமாக யோசித்துக் கேள்”.
”ஆலோசித்து, உறுதியாகத்தான் கேட்கின்றேன்.”
சிருட்டி கர்த்தா எக்காளமிட்டுச் சிரித்தபடி, வரமருளி மறைந்தார்.
அடுத்த கணம், தனது மாசின்மையைப் பறைசாற்றிய மேக மகள், வெண்மையிலும் வெண்மையாகி மேலே மேலே சென்று, கண்ணுக் கெட்டாத தூரத்திலே போய் மறைந்தான்.
கங்காதேவியின் குருத்துக் குறு மணல் மேனி கறுத்தது; ஒளியிழந்தது. அதன் அங்கத்தில் சேற்றின் துர்நாற்றம் மண்டியது.
மலைத்தாய், கங்கையின் அடங்காப் பிடாரித் தனத்தை இகழ்ந்தாள். இருவருக்குமிடையிற் பேச்சு நின்றது.
பிறந்த வீடும், புகுந்த வீடும் நிராகரித்த அநாதையானாள் கங்கை. மனம் வரண்டு புழுங்கினாள்.
கதிரவன் தினந்தினம் எழுவானில் உதித்துத் தன் வரிகளைக் கிரமமாக வசூலித்து வந்தான்.
”தாமரைநாயகா! நான் எழை. வரி செலுத்த வகையற்றவள்” என்று கங்கை, ஆதவனிடம் முறையிட்டுக் கெஞ்சியழுதாள்.
கங்கை பங்கத்திற் சாம்பினாள்.
“சட்டத்திடம் பாவம் – புண்ணி யம் என்ற வாதத்திற்கு இடமில்லை. நான் இறைமாட்சி தர்மத்தின் பிரதி நிதி. காலத்தை உருட்டிக்கொண்டே. கணமுந்தரிக்காது, கடமையைப் பார்க்கும் எனக்கு, உன் பேச்சைக் கேட்க நேரமில்லை. உனது அவலத்தை இறைவனிடம் முறையிடு” என்று சொல்லி, கதிர் பரப்பி, வரி கொய் யும் நித்திய கடமையிலே தினகரன் ஈடுபட்டான்.
கங்காதேவியின் உருவமே மாறி யது. படுக்கை பாளம் பாளமாக வெடித்துக் கிடந்தது. அயலெல்லாந் தாவர உயிர்கள் கருகிக் கிடந்தன. கன்னக் கதுப்புக்கள் வற்றி, வதங்கி, முதுமைக் கீறல்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. கார்குழல் கொக்கிற காக வெண்மை பெற்றுவிட்டது. கங் கையின் வறுத்தெடுக்கப்பட்ட பாழ் வெளி.. வறுமையின் கோரத் தாண்டவம்…
அவளை எல்லோரும் மறக்கத் தொடங்கினார்கள்.
ஏகாந்தம் – ஏமாற்றம் – ஏழ்மை!
கர்வமும் அகங்காரமும் பொசுங்க, கடுந்தவம் இயற்றினாள்.
நீண்ட பல ஆண்டுகள் தவத்திற் கழிந்தன.
“கங்கையே!”
“தோன்றினீர்களா இறைவா? என்னைச் சாபல்யம் அடையச் செய்யுங்கள்.”
“யாரும் உன்னைச் சபித்ததே யில்லை. ஊழினால் விளைந்த விளைவு… உனக்கு என்ன வேண்டும் ?
“என் பழைய உருவம் – வழக்கமான உருவம்.”
“நிச்சயமாக, நித்தியன் நிருமித்த நியமப்படி நடப்பேன்”.
கடவுள் கடகடவென்று சிரித்தார்.
அவ்விடியோசையில் ஈர்க்கப்பட்ட மேகங்கள் வெண்கேசத்தில் முக்காடிட்டுக் குவிந்தன.
“கருணாமூர்த்தி! ஏளனம் வேண்டாம். எனது அறியாமைக்காக வெட்கப்படுகின்றேன்”.
“கவலைப்படாதே, கங்கை. நீ ஏன் வெட்கப்படவேண்டும்? எதற்குங் கர்த்தா நானே. எனது கருத்துக்களை விளக்க நானே கருவிகளையும் தேர்ந் தெடுக்கின்றேன். நீ என் கையில் கருவியானாய் உன்னிடமுள்ள பழைய நீர் கடலிற் சென்று கழிதலும், புதிய நீர் உன்னிடம் வந்து புகுதலும் மரபு. அதன் தத்துவமாக நீ சிரஞ்சீவியாக ஓடிக்கொண்டிருப்பாய்.”
***
கங்கை மழலையின் குதலைக் குரலெழுப்பி, கன்னித் தமிழின் நித்திய யௌவனப் பொலிவுடன், குழலவிழ இடை துவள, நீராடுங் கன்னியின் உடற் கவர்ச்சி காட்டி, பரதக் கூத் திடும் நர்த்தகியின் காம்பீரியத் துடன், வற்றாது, காலங் காலமாக வளநீர் நிதியைச் சகலருக்கும் அளித்த வண்ணம் ஓடி, கடல் ராஜனுடன் சங்கமித்துக் கொண்டேயிருக்கின்றாள்.
– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.