கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2026
பார்வையிட்டோர்: 63 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மதிய உணவு நேரம். கணினி மின்னியல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தின் சிற்றுண்டிச் சாலையில் ஒரே இரைச்சல். சீன உணவுக்கடை, இந்திய உணவுக்கடை, குளிர்ப்பானக்கடை, கோப்பிக்கடை என பலவகையான கடைகள் அங்கே இருந்தன. எல்லாக் கடைகளிலும் தேன் கூட்டில் தேனீக்கள் மொய்ப்பது போல் மக்கள் கூட்டம். முதலாளி, தொழிலாளி, உயர்ப்பதவியாளர். சாதாரணமானவன் என்ற வேறுபாடு இல்லாமல், உணவுக் கடைக்கு முன்னால் ஆண்களும் பெண்களுமாக வரிசையில் நின்று உணவு வாங்கிக் கொண்டு நின்றார்கள். அந்த வரிசையில் மணியரசனும் மோகனும் நின்று கொண்டிருந்தார்கள். மணியரசன் அந்நிறுவனத்தின் மேல் அதிகாரி. மோகன் அந்த நிறுவனத்தில் அவனுடன் சேர்ந்து பணியாற்றுபவன். அவர்கள் இருவரும் சிறுவயது முதல் ஒன்றாகப் பழகி, ஒன்றாகப் படித்து வந்தவர்கள். மணியரசன் வேலை செய்யும் அந்த நிறுவனத்தின் சொந்தக்காரர் அவனுடைய தாய்மாமன் தங்கமணி.

சிறுவயதிலேயே மணியரசன் தன் பெற்றோர்களைக் கோர விபத்து ஒன்றில் இழந்துவிட்டதால், கொழுக்கொம்பு அற்று நின்றான். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள் அல்லவா? அனாதையாக நின்ற மணியரசைனைத் தன் கண்களைப் போல் காத்து, வளர்த்து வந்தார் தங்கமணி. அவனை நன்றாகப் படிக்க வைத்து, அவருடைய நிறுவனத்தையே நடத்தும் பொறுப்பினை அவனிடம் கொடுத்தார் தங்கமணி.

மணியரசன். தனக்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் தந்துவரும் தன் மாமாவையும் அத்தையையும் தன் குலத்தெய்வங்களாகவே கருதி நடந்து வருகிறான்.

மாமா தன் பொறுப்பில் விட்டிருக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் பாடுபட்டு, உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறான். அந்த நிலைக்குக் கொண்டுவர. தன்னுடன் படித்த தனது நண்பன் மோகனையும் தனக்கு உதவியாகச் சேர்த்துக் கொண்டான்.

மணியரசனும் மோகனும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்துள்ளார்கள். ஒத்த வயதுடைய அவர்கள் இருவரும் வாடா, போடா என்று தான் பேசிக் கொள்வார்கள். அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள்.

உணவை வாங்கிய அவர்கள் இருவரும் ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டே உணவை உண்டார்கள்.

“நாளைக்கு உனக்கு ஏதேனும் வேலை இருக்கா மோகன்?” என்று மணியரசன் கேட்டான்.

”நாளைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே? எதுவும் வேலை இல்லை. ஏன் கேட்கிறாய்?” என்று மோகன் மணியரசனைப் பார்த்துக் கேட்டான்.

நாளைக்கு என் வீட்டில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. வந்தாய் என்றால் எனக்கு உதவியாய் இருப்பாய் என்று நினைக்கிறேன்.

“அப்படி என்ன நிகழ்ச்சி? உனக்கு என் உதவி தேவைப்படக்கூடிய நிகழ்ச்சி? அதுவும் உன் மாமா வீட்டில்?” என்று கேட்டான் மோகன்.

“நாளைக்கு என் மாமா மகள் சாந்தியைப் பெண் பார்க்க வர்றாங்க.”

ஒரு கணம் எதுவும் பேசாமல் இருந்த மோகன், மணியரசனை நோக்கிப் பார்த்தான்.

“என்ன மோகன் மௌனமாக இருக்கிறாய்?”

“டேய் மணி. உனக்குத் தான் உன் மாமா, அத்தையைவிட சொந்தம் என்று சொல்லிக்க யாருமே இல்லையடா? பிறகு யாருடா உன் சார்பில் பெண் பார்க்க வருவது?” என்று கேட்டான் மோகன்.

“எனக்காக யாரும் பெண் பார்க்க வரலே”

”இப்போ, சொன்னாயே! யாரோ பெண் பார்க்க வருவதாக” என்று இடைமறித்தான் மோகன்.

“நான் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறேன். என் மாமா மகள் சாந்தியைப் பிரபலமான வர்த்தகர் கணபதி குடும்பத்தினர்தான். தன் மகனுக்குப் பெண் பார்க்க வர்றாங்க.”

‘இது என்னடா அதிசயமா இருக்கு?”

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன கதையாக இருக்கிறது” என்றான் மோகன்.

“அப்படி எல்லாம் சொல்லாதே மோகன். சாந்தி நான் தூக்கி வளர்த்த பெண். அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே என் மனதில் என்றும் எழுந்ததே இல்லை அதுமட்டும் இல்லை மோகன். நான் பெற்றுள்ள செஞ்சோற்றுக் கடனை என் மாமாவுக்கு எப்படித் திருப்பிக் கொடுப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் மணியரசன்.

”என்னடா? கடன், சோறு என்று சொல்லிக்கிட்டு இருக்கிறே?”

”சாந்தி யாருடா? உன் மாமா பெண்தானே? அவளைக் கட்டிக் கொள்கிற உரிமை உடையவன்தானேடா நீ? உரிமைக்காரனை விட்டுவிட்டு, யாருக்கோ பெண் கொடுப்பது என்னடா நியாயம்?” என்று மோகன் கொஞ்சம் கோபமாகவே கேட்டான்.

“மோகன் ஆத்திரப்படாதே, கொஞ்சம் அமைதியாய் இரு. நியாயம் அநியாயம் பற்றிப் பேச எனக்கு என்னாடா அருகதை இருக்கு? நான் என்னடா கோடிஸ்வரானா? நீ சொல்ற மாதிரி உரிமையோடு போய் பெண் கேட்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என் மாமா என்னப் பார்த்து, “பிச்சைக்கார நாயே, உனக்கு என் மருமகனாக வர என்னடா தகுதி இருக்கு?” என்று ஒரு வார்த்தைக் கேட்டுவிட்டார் என்றால் என் நிலைமை என்ன ஆகும்? நீயே சொல்லு?” என்று மணியரசன் மோகனிடம் கேட்டான்.

“உன்னிடம் பணம்தானே இல்லை. ஊரிலே இருக்கிறவங்களிடம் உள்ள அத்தனை கெட்டப் பழக்கங்களில் ஒன்றுகூட உன்னிடம் இல்லையே. உன்னிடம் படிப்பு உண்டு. பண்பு உண்டு. உயர்ந்த ஒழுக்கம் உண்டு. எல்லோரிடம் காட்டும் சிறந்த அன்பு உண்டு. அந்தக் கணபதியின் மகன் அவ்வளவு நல்லவன் இல்லை. கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுப்பது போல இருக்குடா” என்று சொல்லிக் கொண்டே எழுந்தான், மோகன்.

அவனைத் தொடர்ந்து எழுந்த மணியரசன், “எல்லாம் என் மாமாவுக்குத் தெரியும். அவர் தன் மகள் வாழ்வு கெட்டுப் போக விட்டுவிடுவாரா? அந்த மாப்பிள்ளை பையனிடம் உள்ள கெட்டப் பழக்கங்கள் திருமணத்திற்குப் பின் போய்விடலாம் அல்லவா? திருமணத்திற்கு முன் கெட்டுப் போகிறவர்களும் உண்டு. திருமணத்திற்குப் பின் திருந்துபவர்களும் உண்டு என்பாங்க பெரியவங்க” எண்ணுவதை நல்லதாகவே எண்ணுவோம். நீ நாளைக்குக் கட்டாயம் வீட்டுக்கு வந்துவிட வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே தன் அலுவலக அறைக்குள் போனான் மணியரசன்.

மறுநாள் மோகன் தங்கமணியின் வீட்டிற்குச் சென்றான். மணியரசனுக்குத் துணையாக இருந்து சில வேலைகளைச் செய்தான். குறிப்பிட்ட நேரத்தில் கணபதியின் குடும்பத்தினர் வந்தார்கள். எல்லாச் சடங்குகளும் சம்பிரதாயப்படி நடந்தேறின. திருமணத்திற்குரிய நல்ல நாளைப் பார்த்து. அதற்குரிய வேலைகள் எல்லாவற்றையும் மணியரசனிடம் ஒப்படைத்தார் தங்கமணி.

பத்திரிக்கை அடிப்பதிலிருந்து பந்தல் அலங்காரம் வரை அனைத்தையும் மணியரசன் கவனித்தான். அவனுக்குத் துணையாக மோகன் இருந்தான்.

பணக்காரர்கள் வீட்டுக் கல்யாணம் அல்லவா? கூட்டம் குறைவாகவா இருக்கும்? மக்கள் வெள்ளம் திருமண மண்டபம் நிறைந்து வழிந்தது.

மணமகள் சடங்கு, மணமகன் சடங்கு எல்லாம் நடந்து கொண்டிருந்தன. மணமகன் ஆடை அலங்காரத்துடன் மணமேடையில் வந்து அமர்ந்துவிட்டான். மாலைகள் நல்லாசி பெறும் ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தன. மணமக்களை வாழ்த்த மஞ்சள் அரிசியும் மலரும் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டன. அந்த நேரத்தில் மணமேடையில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. மணமகள் சாந்தி ஒப்பனை அறையில் மயக்கமுற்று விழுந்துவிட்டதுதான் அதற்குக் காரணம்.

மணியரசன் பதறிப்போய் அங்கே ஓடினான். அவன் அத்தை கலங்கிய கண்களுடன் நின்றார். மாமாவும் தான். சில பெண்கள் கையில் கிடைத்தவற்றைக் கொண்டு சாந்திக்கு விசிறிக் கொண்டிருந்தார்கள்.

“இரைச்சலும், புகையும் தான் சாந்தியின் மயக்கத்திற்குக் காரணமாக இருக்கலாம்” என்று மணியரசன் தன் மாமாவிடமும் அத்தையிடமும் சொல்லி அவர்களுக்கு ஆறுதல் கூறினான்.

அங்கே நின்ற கணபதியும் அவர் மனைவியும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். மணமகனும் எழுந்து வந்துவிட்டான்.

முகத்தில் தண்ணீரைத் தெளித்த பின் மயக்கமுற்றிருந்த சாந்தி லேசாக கண்களைத் திறந்து பார்த்தாள். சுற்றிருந்தோர்களில் மாப்பிள்ளை வீட்டார்களைத் தவிர மற்ற அனைவர்களின் முகத்திலும் மகிழ்ச்சி புன்னகை மலர்ந்தது.

மணியரசன். தன் மாமாவைப் பார்த்து, “சாந்திக்கு ஒன்றும் இல்லை என்று நான் சொன்னது, சரிதானே?” என்று கேட்டான். மாப்பிள்ளையின் கையைப் பிடித்து மணமேடைக்கு அழைத்தான். மணியரசனின் கையை உதறித் தள்ளிவிட்டு, ஓர் உண்மையைத் தெரிந்து கொண்ட பின் தான், தாலி கட்டுவேன்” என்றான்.

“என்ன உண்மை?” என்றான் மணியரசன்.

“மணப்பெண்ணின் மயக்கத்திற்குக் காரணம் தெரிய வேண்டும். அவள் கன்னிக் கழியாதவள் என்று நிறுவிக்கப்பட வேண்டும்” என்றான்.

“இது அநியாயம். என் பெண்ணின் கற்பில் சந்தேகப்படுவதா?” என்றார் சாந்தியின் தாயார்.

“இங்கே பாருங்க சம்பந்தி. சாந்திக்கு முறை மாப்பிள்ளையான இந்தப் பையன் உங்கள் வீட்டில்தான் இருந்து வருகிறார். பஞ்சையும் நெருப்பையும் ஒன்றாக வைத்திருக்கிறீர்கள். உங்க பொண்ணு திடீரென்று மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள். அதனாலே எங்களுடைய ஐயத்தைத் தீர்த்துக் கொண்ட பிறகு தாலி கட்டுவதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் நல்லதாக இருக்கும் என்று கடுகடுப்பாகவே மாப்பிள்ளையின் அப்பா கணபதி கூறினார்.

கொஞ்ச நேரம் அங்கே அமைதி நிலவியது. ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

”அப்பா, உடனே ஒரு டாக்டரை அழைத்து வாருங்கள்” என்றாள் சாந்தி.

‘”அம்மா, சாந்தி” என்றார் தங்கமணி.

‘மடியிலே கனமிருந்தால்தானே நமக்குப் பயம் வேண்டும். தன் மனைவி கற்புடையவள் என்பதை உலகிற்குக் காட்ட. இராமாயணத்தில் ராமர் தன் மனைவி சீதையைத் தீயில் இறங்கச் சொல்லவில்லையா? அது மாதிரி உங்கள் மகள் கன்னிப்பெண்தான் என்பதை இவர்கள் அறிய அழைத்து வாருங்கள் அப்பா டாக்டரை” என்று ஆவேசமாகக் கத்தினாள் சாந்தி.

மணியரசன், உடனே அவ்விடத்தை விட்டு அகன்றான்.

சற்று நேரத்தில் ஒரு டாக்டருடன் அங்கே வந்து சேர்ந்தான். எல்லோரும் அந்த அறையை விட்டு வெளியேற, டாக்டர் சாந்தியைச் சோதனைச் செய்தார். பிறகு அவர் சிரித்த முகத்துடன், அந்த அறையை விட்டு வெளியே வந்தார். அவரைப் பார்த்த மாப்பிள்ளை

”டாக்டர், சோதனை என்ன சொல்கிறது?” என்று கேட்டான்.

“என்ன மாப்பிள்ளை, ஒரு பெண் மயக்கம் அடைந்தால், அவள் கருவுற்றுதான் இருக்க வேண்டுமா? தூக்கமின்மை, களைப்பு, புகை, இரைச்சல் இவற்றால் எல்லாம் மயக்கம் அடையலாம் என்று நீங்க நினைக்கக் கூடாதா? சாந்தி நூற்றுக்கு நூறு கன்னிப் பெண் தான்” என்று கூறினார்.

டாக்டர் கூறியதைக் கேட்ட சாந்தியின் தாயார் ஒரு பெருமூச்சுடன், “முருகா! என் வயிற்றில் பாலை வார்த்துவிட்டாய்” என்றார்.

மாப்பிள்ளையின் அப்பா கணபதி, தன் மகனைப் பார்த்து, “நீ போய் மணமேடையில் உட்கார்” என்றார்.

“சம்பந்தி எங்களுடைய ஐயம் தீர்ந்துவிட்டது. இனிமேல் எந்தவிதமான தப்பு எண்ணமும் ஏற்படாது. தாலி கட்டற நேரம் இன்னமும் இருக்கு. பெண்ணை அழைத்துக் கொண்டு வாங்க” என்றார்.

“கொஞ்சம் நில்லுங்க” என்றாள் சாந்தி.

கணபதி திரும்பிப் பார்த்தார்.

“இந்தக் கல்யாணம் இனிமேல் நடக்காது. நீங்க எல்லோரும் வந்த வழியைப் பார்த்து நடங்க” என்றாள்.

“நீ என்னம்மா சொல்றே?” என்றார் சாந்தியின் அப்பா தங்கமணி.

“அப்பா! எனக்கு வந்த இந்த மயக்கம், கல்யாணத்திற்குப் பிறகு ஏற்பட்டிருந்தால் அவர்கள் என்னை என்ன பாடுபடுத்தியிருப்பாங்க? என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்க. இப்படி ஆரம்பத்திலேயே நடந்து கொண்டவருடன், என்னால் இன்பமாக வாழ முடியும் என்று நீங்க நினைக்கிறீங்களா? சந்தேகம் என்னும் பேய் அவர்கள் மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். என்னை நிம்மதியாக வாழவிட மாட்டாங்க அப்பா! நான் அவங்க வீட்டுக்குப் போய் தினமும் செத்துச் செத்து வாழ்வதைவிட நான் நம்ம வீட்டிலேயே இருந்துவிடுகிறேன் அப்பா” என்று நாத் தழுதழுக்கக் கூறினாள்.

சாந்தியின் தந்தை தங்கமணிக்கு என்ன சொல்வது என்று புரியாமல் தன் மனைவியைப் பார்த்தார்.

”சாந்தி சொல்வதிலும் உண்மை இருக்குங்க. பெண் பார்க்க வந்தபோது மாப்பிள்ளை மணியரசனைப் பற்றி எதுவும் பேசாதவங்க, மயக்கத்திற்குரிய உண்மையான காரணத்தை அறியாமலே மணியரசனை வைத்து ஒரு கதையைக் கட்டிவிட்டுட்டாங்களே. அப்படிப்பட்டவங்க வீட்டிலே சாந்தி நிம்மதியாக வாழ முடியாதுங்க” என்றார் சாந்தியின் தாய்.

“உற்றார்-உறவினர் எல்லோரும் வந்து இருக்கிறாங்க. தாலி கட்டுகிற நேரத்திலே இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டதே. என்ன அவமானம்” என்று எண்ணிக் கொண்டு நின்றார் தங்கமணி.

மாமாவுக்கு ஏற்பட்டுள்ள தலைக்குனிவை அறிந்த மணியரசனும் அவருக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் அங்கே வந்த மோகன்,

“என்னங்க சார்! கையிலே வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையறீங்க நீங்க” என்றான்.

“மோகன் நீ என்ன சொல்கிறாய்?” என்றார் தங்கமணி.

“மாப்பிள்ளையை வீட்டிலே வைத்துக்கிட்டு ஏன் சார் ஊரிலே மாப்பிள்ளைத் தேடி இப்படி மனக்கஷ்டப்பட்டுக் கொண்டு நிற்கிறீங்க? மணியரசனைவிட உயர்ந்த மாப்பிள்ளை யாரும் கிடைக்க மாட்டாங்க சார். வைத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை நடத்துங்க” என்றான்.

”பணம், பணத்தோடுதான் சேர வேண்டும் என்ற தப்பான எண்ணம் கொண்டு, மணியரசனை விட்டுவிட்டு வெளியே மாப்பிள்ளை பார்த்தது எவ்வளவு பெரிய தவறாகப் போய்விட்டது?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு. மணியரசனை அழைத்துக் கொண்டு மணமேடைக்குப் போனார் தங்கமணி.

மோகனின் அகமும் முகமும் மலர்ந்தன. கெட்டி மேளம் முழங்க, மணியரசன் சாந்தியின் கழுத்தில் தாலி கட்ட, வந்திருந்தவர்களின் வாழ்த்து ஒலி மண்டபம் முழுவதும் ஒலித்தது.

– எல்லைக்கோடு (சிறுகதைகள்), பதிப்பாண்டு: 2006, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

இரா.துரைமாணிக்கம் இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *