மனதை மாற்றிய சூழல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 4, 2025
பார்வையிட்டோர்: 3,037 
 
 

கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய் ஏறக்குறைய என்னுடைய சேமிப்பு முழுவதையும் காந்திபுரத்திலுள்ள வங்கியிலிருந்து எடுத்து, கோவில்பாளையத்தில் உள்ள வங்கியில் போட வேண்டி பாதுகாப்பாய் ஒரு பாலிதீன் பையில் சுருட்டி ஒரு கெட்டியான பையில் வைத்து கையிடுக்கில் வைத்துக்கொண்டு கோவில் பாளையத்தில் உள்ள என் வீட்டிற்கு செல்வதற்கு பேருந்துக்கு காத்து நின்று கொண்டிருந்த எனக்கு அந்த இளைஞனின் செயல் வியப்புக்குரியதாய் தெரிந்தது.

அவனது உடைகள் கூட விலை மலிவானதாகத்தான் இருந்தது. ஒரு சாதாரண காற்சட்டை, அங்கிருந்த ஒரு சுவரின் மீது ஒரு காலை வைத்து ஏதோ எழுதி சட்டைக்குள் இருந்து ஒரு கவரை எடுத்து அதற்குள் எழுதிய தாளை சொருகி மூடி விட்டு பக்கத்தில் அழுக்கு சட்டையுடன் இவனிடம் கையேந்தி நின்று கொண்டிருந்த பையனிடம் கொடுத்து இந்தா பாரு இந்த ரோட்டுலயே போனீயின்னா ஆறாவது கடை ‘திருமுருகன் ஸ்டோர்ஸ்’ அப்படீன்னு வரும், அங்க இந்த லெட்டரை கொடுத்துடு, அவங்க உனக்கு என்ன வேணுமோ அதை கொடுப்பாங்க.

அந்த பையனின் முகம் கொஞ்சம் தெளிவானது, சரிங்க சார், கவரை வாங்கிக் கொண்டு ஓடினான். இந்த இளைஞன் இப்பொழுது என் அருகில் வந்து பேருந்துவிற்காக காத்திருந்தான்.

எனக்கு மனசு கேட்கவில்லை, தம்பி என்னவோ உங்க கிட்ட கையேந்தி நின்ன பையன் கிட்டே கொடுத்து அனுப்பிட்டிருந்தீங்க?

ஒண்ணுமில்லை, ஒரு பையன் வேணுமின்னு அந்த கடைக்காரங்க கேட்டுகிட்டிருந்தாங்க, அதான் இந்த பையன்கிட்டே கேட்டேன், இந்த மாதிரி கையேந்தறதுக்கு ஒரு வேலை வாங்கி தர்றேன் செய்யறியான்னு, சரின்னு சொன்னான், அதான் அவனை அனுப்பிச்சேன்.

எனக்கு ஆச்சர்யம், அந்த பையனை யாருன்னு தெரியாம வேலை கொடுப்பாங்களா? இல்லை இந்த பையன் அந்த கடைக்கு போய் கேப்பான்னு என்ன நிச்சயம்?

இளைஞன் சிரித்துக்கொண்டே அந்த கடையிலே இந்த லெட்டர் பார்த்த உடனே வேலை கொடுத்துடுவாங்க, ஆனா இவன் அங்க போய் சேருவானாங்கற, நிச்சயம் அவன் கிட்டேதான் இருக்கு.

உண்மைதான் தலையசைத்தவன், அதற்கு மேல் எதுவும் பேசாமல் பேருந்துவிற்காக நிற்க ஆரம்பித்தேன்.

நான் செல்ல வேண்டிய பேருந்து வந்தவுடன் பின்புற வழியாக உள்ளே ஏறினேன். நல்ல கூட்டம் என்று சொல்ல முடியாவிட்டாலும் உட்கார இடம் கிடைக்காத அளவுக்கு இருந்தது நகர்ந்து நகர்ந்து முனபக்கமாக சென்றேன். நடுப்பகுதியில் வந்து நின்று கொண்டவன், கண்டக்டர் அருகில் வந்தவுடன் ஒரு

கோவில்பாளையம் கொடுங்க, கண்டக்டர் கொடுத்த டிக்கட்டை வாங்கி சட்டைப்பையில் வைத்து கொண்டேன். கண்டக்டர் என்னை தாண்டி நகர்ந்தார்.

ஐந்து நிமிடத்தில் பின்புறம் ஒரே சத்தம், திரும்பி பார்க்க ஒரு பெரியவர் தம்பி கையில காசு இல்லை, அன்னூரு வரைக்கும் போகணும் கொண்டு போய் இறக்கி விட முடியுமா? கேட்டுக்கொண்டிருக்க, கண்டக்டர் என்ன கோபத்தில் இருந்தாரோ என்னவோ தெரியவில்லை, ‘இந்தா பெரிசு’ முதல்ல வண்டிய விட்டு இறங்கு, இது கவர்ண்மெண்டு வண்டி, என் சொந்த வண்டியின்னா உன்னை சும்மாவே கொண்டு போயிடுவேன்.

தம்பி கொஞ்சம் தயவு பண்ணு, கொண்டு வந்த காசை எவனோ களவாண்டு கிட்டான், அதனால சுத்தமா காசு இல்லை, அவர் சொல்ல கண்டக்டர் விசில் அடித்து விட்டார். இறங்கு, இறங்கு..அவர் சொல்ல கண்டக்டர் அந்த பெரியவர்க்கு நான் டிக்கெட் எடுத்துக்கறேன், முன்புறம் ஒரு குரல் கேட்க எல்லோரும் முன்புறமாக பார்க்க ஒரு சீருடை அணிந்த பள்ளி மாணவி கையில் பணத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவளது உடைகள் சீருடையில் இருந்தாலும் அப்படி ஒன்றும் பளபளப்பான உடைகளாய் காணப்படவில்லை. ஏழை குடும்பத்து மாணவியாகத்தான் தெரிந்தாள். .

உனக்கு தெரிஞ்சவங்களாம்மா? கண்டக்டர் டிக்கெட் கொடுத்து கொண்டே கேட்க, இல்லை, எனக்கு தெரியாது, சொல்லியவள், வேகமாய் வந்து டிக்கெட்டை அவரிடம் கொடுத்து பத்திரமா வச்சுக்குங்க ஐயா, என்று அவர் கையில் திணித்து விட்டு, சட்டை பையில் ஒரு பத்து ரூபாயை திணித்து பஸ்ஸை விட்டு இறங்கி ஏதாவது சாப்பிட்டுட்டு ஊருக்கு போங்க, முன்புறம் வேகமாய் வந்து விட்டாள்.

என்னை தாண்டித்தான் அவள் சென்றாள். அவளை பார்த்தேன், ஏழு அல்லது எட்டு படிக்கலாம், அவ்வளவுதான், ஆனால் என்ன ஒரு எண்ணம் இந்த சிறு பெண்ணுக்கு ! வியப்புடன் நின்றேன்.

பஸ்ஸை விட்டு இறங்கியவன் வீட்டுக்கு வேகமாய் நடந்தேன். இருட்டு கட்டிக்கொண்டு வந்ததை கண்டு பெரிய மழை வரப்போகிறது நினைக்க நினைக்க தூறலாய் ஆரம்பித்து இரண்டு விநாடிகளில் பெரு மழையானது. கையில் வைத்திருந்த பணம் நனைந்து விடுமே என்று தடுமாறி எங்கு வைக்கலாம், அல்லது எங்காவது ஒதுங்கலாமா என்று நினைப்பதற்குள் உடைகள் நனைந்து விட ஒரு நிமிஷம் என்ன செய்வது என்று திகைத்து நிற்க திடீரென்று ஒரு குடை என் தலை மேல் நின்றது.

வாங்க் அங்கிள், அந்த பையை எல்லாம் இப்படி கொடுங்க, வாங்கி அவள் தோளில் போட்டிருந்த பெரிய பையில் திணித்து கொண்டவள் என் அருகே குடையை பிடித்து நடக்க ஆரம்பித்தாள்.

எனக்கு அந்த பெண்ணின் அருகில் நடக்க கூச்சமாய் இருந்தாலும், நல்ல வேளை இந்த பணம் நனைந்திருந்தால் எவ்வளவு கஷ்டம்? நினைத்தவனின் வாய் என்னையும் அறியாமல் ரொம்ப தேங்க்ஸ்ம்மா, சத்தமாய் சொன்னது.

இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ், உங்க வீடு எங்கன்னு சொல்லுங்க? இல்லேம்மா நீ போய்க்கோ, என்னை அந்த கடை ஓரமா விட்டுடு, நோ..நோ…

உங்களை விட்டுட்டு நான் போயிக்கறேன், அந்த பெண் பிடிவாதமாய் நடந்து நான் வழிகாட்டிய சந்துக்குள் வந்தவள் என்னை வாசலுக்குள் நுழைத்து என்னிடமிருந்து வாங்கியிருந்த பணக்கட்டை எல்லாம் கொடுத்து விட்டு

வர்றேன் அங்கிள், கிளம்பினாள். அம்மா நில்லு, ஒரு டம்ளர் காப்பியாவது குடிச்சுட்டு போலாம் சொன்னவனை ரொம்ப தேங்ஸ் அங்கிள், என் வீடு கொஞ்சம் முன்னாடிதான், அப்பா தேடுவாரு, நான் கிளம்பறேன், பை அவள் விறு விறுவென குடையுடன் நடந்தாள்.

உள்ளே நுழைந்தவன் மனசு வெறுமையாய் இருந்தாலும் ஏதோ ஒரு சந்தோஷம் நிறைந்திருப்பது போல் தென்பட்டது.

மழை ஓய்ந்தவுடன் மனைவியிடம் சொல்லிவிட்டு மீண்டும் பணம் கட்டி வைத்த பாலிதீன் கவரை எடுத்துக் கொண்டு நடந்தேன்.

இரண்டு மூன்று தெரு தள்ளி ஒரு சந்துக்குள் நுழைந்தவன் ஒரு வீட்டின் கதவை தட்டினேன். உள் புறமாய் கதவை திறந்தவனின் முகம் என்னை கண்டவுடன் சோகமாய் வாங்கப்பா, என்று அழைத்து விட்டு உள்ளே சென்றது.

உள்ளே நுழைந்தவன் முன்னறையில் சோகமாய் உட்கார்ந்திருந்த மருமகள், அவளின் பெற்றோர்களை பார்த்து விட்டு மருமகளின் கையில் நான் கொண்டு வந்த பணம் சுற்றி வைத்த பையை கொடுத்தேன்.

இந்தாம்மா, இதுவெல்லாம் நான் இத்தனை வருசம் வேலை செஞ்சு வங்கியில சேமிச்சு வைச்ச பணம். இதைய கொடுத்து ‘பிசினஸ் கடனை’ எல்லாம் அடைச்சிடுங்க.

அப்பா, வேணாம்ப்பா இதுவெல்லாம் நீங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்சு வச்ச சொத்து, என் கடனுக்காக…

அப்படி சொல்லாத தம்பி, முதல்லயே நான் உனக்கு கொடுத்து உதவியிருந்தா, நீ இந்த அளவுக்கு கடன்காரனாயிருக்க மாட்டே. நான்தான் பிடிவாதமா இருந்துட்டேன். நான் காந்திபுரத்துல இருந்து கிளம்பற வரைக்கும் கூட உன் கிட்டே இதையெல்லாம் கொடுக்கணும்னு எனக்கு தோணல. அப்படியே வேற எங்காவது ‘டிபாசிட்’ பண்ணிடனும்னு தான் தோணுச்சு. அப்புறம்தான் உன்னைய பத்தி நினைக்க தோணுச்சு. என் புன்னகை புரிந்த முகத்தை வைத்து அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

ரொம்ப தேங்க்ஸ்ப்பா..கண்டிப்பா நான் கடன்ல இருந்து மீண்டு உனக்கு இதே பணத்தை திருப்பி கொடுக்க முயற்சி பண்ணுவேன். அவன் குரலில் இருந்த உறுதி..மனசுக்கு சந்தோஷம் தர அப்பொழுதே அவர்கள் ஏதாவது சாப்பிட சொல்லி வற்புறுத்தியும் மறுத்து வீடு வந்தேன்.

எல்லா பணத்தையும் கொடுத்திட்டீங்களே? அவங்க அதை செலவு பண்ணிட்டா? மனைவியின் கேள்விக்கு எனக்கு பென்சன் வருது, அது போதும், இந்த வீடு ஒண்ணிருக்கு, அதுல இருந்துக்கறோம், அப்புறமென்ன கவலை உனக்கு?

ஆச்சர்யமாய் பார்த்தாள் என் மனைவி. என் பணம், என் பணம், என்று சொல்லிக்கொண்டு திரிந்தவன் எப்படி மாறினான்?

dhamodharan பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *