மண்ணில் தெரியுது…
கதையாசிரியர்: மாத்தளை பெ.வடிவேலன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 8, 2025
பார்வையிட்டோர்: 896
(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பின்னிரவில்; மாலைக்கணையென சரம்கோர்த்து; மலைகளை முற்றுகையிட்டுத் தழுவிக் கிடக்கும் பனிப்புகாரை உதறிவிட்டு இருள் போர்வை வெளிச்சத்திற்கு வழி விடும் முன்னரே தோட்டம் எங்கும் அந்தச் செய்தி பரவி விட்டது!
நேற்று மாலையே ஆளுக்காள் காதைக் கடிக்க….
தோட்டத்தில் மாத்திரமின்றி அண்டிய பகுதியிலும் இனக்கலவரமாய்ப் பரவ…
எல்லோருக்கும் தெரிந்ததாகி விட்டது!
ராக்கப்பன்…
ராக்கப்பன் சிறையிலிருந்து விடுதலையாகி வந்துவிட்டான்! அடர்ந்த கிராப்பு; எடுப்பான கிருதா மீசை, கலர் கலரான ஷேட், பெரிய கட்டம் போட்ட சாரம்; இத்தியாதி கோலத்துடன் புகைக்கும் பீடித்துண்டினை உதடுகளில் படாமல் பல்லிடுக்கில் அழுத்தியபடி கைகளால் தன் பேச்சுக்கு வடிவம் கொடுத்தபடி; பெட்டிக்கடைக்கு முன்பதாக குதிரை ரேஸ் புக்கிபங்கில்’ “குந்தியிருப்போருடன் அனாயசமாக; எவரையும் சட்டை செய்யாது விபரித்துக் கொண்டிருந்த அவனைக்கண்ட போதே பலருக்கு வயிற்றில் புளி கரைப்பதாகிவிட்டது.
பத்து வருடங்களுக்கு முன்னர் ‘தொலைந்தது சனியன்’ என்று நிம்மதியாகப் பெருமூச்சு விட்டு ஆறுதலடைந்து ஏறக்குறைய அந்த சம்பவத்தையே மறந்து போயிருந்த வேளையில்…
“விடுதலை கிடைத்தாலும் இங்கு எங்கே வரப்போகின்றான்? வரமாட்டான்” என்று நினைவிலேயே முடிவு கட்டியிருந்த நிலையில்…..
இன்று….
திடீரென்று அவன் எதுவித கூச்சமுமின்றி; அட்டகாசமாய்ச் சிரித்து; வாட்ட சாட்டமாய் வந்து நிற்கும் போது….
பற்றிக் கொண்டு வருகின்றது…. ‘பாவி! பதறிப் போனார்கள்.’…. ‘கலங்கிப் போனார்கள்!’ ‘கல்லாகிப் போனார்கள்.’
“சாட்சிக் கூண்டிலேறியவர்கள் முதல் சாடை பேசி பழித்தவர்கள்வரை சாய்த்துவிடப் போகின்றான். அதற்குத்தான் ஜெயிலிலிருந்து நேரே இங்கு வந்திருக்கின்றான்! என்ன நடக்குமோ ஏது நடக்குமோ? தலைக்கொரு விதமாய் விமர்சனம் நடந்தது.
மனம் பதைத்தோர் ‘நமக்கேன் வம்பு?’ என்று மெளனத் தளைகளில் மனதைப் புதைத்துக் கொண்டனர்.
தேயிலையின் தொட்டிலான அந்தத் தோட்டத்திற்கு வெள்ளைக்காரனது கம்பெனி பிரியாவிடை கொடுத்து அரை நூற்றாண்டு ஓடி விட்டது.
கம்பெனி நிர்வாகத்திற்குப் பின்னர் தோட்டம் தேசிய முதலாளிகளின் கைகளில் சிக்கி இன்று பத்து ஏக்கரும் ஐந்து ஏக்கருமாக பிரிக்கப்பட்டு ; உளிப்பிடியாகத் தேய்ந்து விட்டது.
நாலாறு கோலமாகப் பிரிந்து கிடக்கும் தோட்டத்திற்கு நாமம் “நாட்டுத் தோட்டம்!”
மலையகத்தில் தாழ் நிலத் தோட்டங்களின் இன்றைய சராசரி தலைவிதி இதுதான்!
எத்தனை பிரிவுகளோ அத்தனை சீரழிவுகள்! சிதறிய நெல்லிக்காயென சிதறல்கள்!
அன்று! கத்தியின்றி ரத்தமின்றி காந்திப்பொறி பறந்த போது, கடல் கடந்த இங்கும் வெள்ளையனின் அடக்குமுறைக்கெதிராக நடேசஐயர் போன்றோர் குடுகுடுப்பைக்காரன், பொட்டணிவியாபாரி உருவில் தோட்டங்களில் பிரவேசித்து தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கி சேவை செய்தனர். இதனால் கட்டுக்கோப்புடன் தொழிற்சங்க இயக்கம் உருவாகியது. ஆனால் காலப்போக்கில் தொண்டாக, சேவையாக ஆற்ற வேண்டிய தொழிற்சங்கப் பணி, இன்று தொழிலாக விசுவரூபமெடுத்த போது…
பிரிந்து கிடக்கும் தோட்டங்களில் குட்டி, குட்டி, சங்கங்கள் காளான்களாக; முளைத்துவிட்டன. வர்க்க ஒற்றுமை ஏற்படுத்த வேண்டியவர்களே சதிராடி பிரிக்க அடிப்படை உணர்வையே தகர்க்கும் முரண்பாடுகளை எரிமலையெனக்கக்க.
சங்கங்கள் சடைத்தன. சந்தா பிசினஸ் வளர்ந்தது. உரிமைக்கு ஒரு சங்கம் வேண்டும்! ஓரணியில் திகழ்ந்தால் மண்ணில் தெரியும் வானம்!
வர்க்க உணர்வை முன்னெடுக்க வேண்டியவர்கள் சங்கபேதம் தலைக்கேற தம்முன்னே முரண்பட்டு; குரோதம்கொண்டு; கொலைக்காரர்களாகி, கோடேறி, வெஞ்சிறைகளில் அல்லறுற… பிளவுதானே மூலாதாரம்.
ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்து கொண்டால்…. மூலதனமில்லாத வியாபாரம் இதுவென்ற அட்சரத்தைப் புரிந்து கொண்டோர் எட்டுப்பேர் சேர்ந்தா அமைச்சிடலாம்! சந்தா தலைக்குப் பத்து ரூபா என்று பாத்தா மாசம் என்னா வரும்? வருசம் சுளையா கறந்திடலாம் பணம் மட்டுமா? பதவி, பவுசுகள், கன தனவான்கள், பிரமுகர்கள் வரிசையில் இன்னும் பத்திரிகை செய்திகள் அறிக்கைகள் அப்பப்பா…. நாவில் ஜலம் ஊற நாலு பேர வச்சி கூட்டம் நடத்தி; அதனைப் படம் பிடித்து வெளிநாட்டில் காட்டி மலையக மக்களின் உயர்விற்காக என்று ஸ்தாபனங்களின் பேரால் அதிர்ஷ்ட தேவதையைத் தம் வீட்டிற்கு கொண்டு வந்துவிடும் நவீன மனித வியாபாரிகளின் அற்புத விளக்கே இந்தப் போர்வைதான்!
லயத்துக்கானை தாண்டாதவர்களெல்லாம் பட்டினங்களிலிருந்தபடியே; பண மூட்டையில் புரளச்செய்யும் ஜீபூம்பாக்களான ஸ்தாபனங்கள் மனித வியாபாரத்தில் புதிய அறுவடை!… வடிங்கள்…
கேட்பது யார்? தடுக்க யாரால் முடியும்? சொல்லுவதற்குக் காரணங்களும்; கத்துவதற்கு கோஷங்களும்; தீக்கோழியெனச் சூடிக்கொள்ள இஸங்களும் சித்தாந்தங்களும் ஏராளமாக இருக்கும்போது; வளைத்துப் பிடிக்க தொழிலாளரா கிடைக்கமாட்டார்கள். சமூக சேவை என்ற அட்சரம்வேறு காலடியில் கிடைக்கும் போது!
சங்கச் சண்டையால்; பகைமையால்; பெற்றோர் உடன் பிறப்புகளின் களியாட்டங்கள் மட்டுமன்றி; ஈமச் சடங்குகளில் கூட கலந்து கொள்ளாத அளவிற்கு வைராக்கியத்தைத் தோற்றுவித்துவிடும் வக்கிரங்களைத் தொழிலாளர் வர்க்கம் இனம் கண்டு தெளிவடையும் போது?
இப்படித்தான் அந்த துர்ப்பாக்கிய சம்பவமும் நடந்தேறியது! மாற்று தொழிற்சங்கத்திலுள்ள தன் ஒன்று விட்ட சகோதரனையே தூண்டுதலின் பேரில் ராக்கப்பனின் தந்தையான சன்னாசி கொலை செய்ய சன்னாசியின் மகன் ராகப்பனும் இரண்டாம் எதிரி என்ற முறையில் பத்து வருட தண்டனையை அனுபவிக்க வேண்டியதாகிவிட்டது. ஆலயத்தின் முன்றலில் பறந்த ஒரு தொழிற்சங்கத்தின் கொடியை யாரோ இரவில் கொளுத்தி விட்டான்.
மூண்டது கலகம். கொடிச்சண்டை தான் கொலைக்கு மூல காரணம்!
“தொட்டதற்கெல்லாம் வெட்டிட்டு வா! சரிச்சிட்டு வா! குத்திட்டு வா! குடலை உருவிட்டு வா!” என்று தொழிலாளருக்கு குறுக்கு வழிகாட்டும் சிலர் பின்னர் பிணை எடுக்க வேண்டும், புரக்டர் பிடிக்கணும், ‘மோசன் போடணும்’ காசு, பணம் கொண்டு வா’ என்று பறித்து இல்லாது விடில் நகை நட்டு இருக்கா? என்று கேட்டு மூக்குத்தி ஒன்னப்பிகளையும் அடகுக்கடையில் ஏற்றிவிட்டுப் பின்னர் வகை தெரியாமல் “வாடுவது” தீட்சண்யம் தொலைநோக்கு இல்லாது வழிகாட்டுவதால் ஏற்படும் பின் விளைவுகள்…
சன்னாசி ஆயுள் தண்டனையும் அவன் மகன் ராக்கப்பன் பத்து வருட கடுங்காவல் தண்டனையும் பெற்று சிறை செல்ல, அந்த சோகத்திலேயே ஏங்கி சன்னாசியின் மனைவி ராசம்மா இறந்து விட்டாள்.
தோட்டத்தில் தினமும் சொல்லம்புகளால் வேதனைப்படுவதை விட இதுமேல் தான்!
பத்து வருடங்கள் கால மாற்ற பிரசவங்கள்; வளர்ச்சியினை மட்டுமன்றி சீரழிவினையும் சுமந்து நிற்க.
அம்மனுக்கு காப்புக்கட்டிய பின்னர் அடுப்பில் எண்ணெய் சட்டியை ஏற்றாத ஊரில் புக்கி ரேஸ் விடுதிகளும் சாராயத் தவறணைகளும் கடை விரித்து காட்சிதர.
சமீபத்தில் தொழிலாளர் விடுதலைக்காக வோட்டுக் கேட்டவரே ‘பாரைத்’ திறந்து ஊருக்குத் தனது கன்னிச் சேவையை நல்கினார். தோட்டம் கெட்டுப்போச்சு’ ‘நாடு கெட்டுப்போச்சு காலம் கலி காலம்’ என்று முணுமுணுக்கும் பெரியோர்கள் கூட நாளடைவில் அடங்கிப் போய்விட்டனர்.
போதாதற்கு ராக்கப்பன் வேறு வந்து நிற்கின்றான். பத்து வருடம் என்று உள்ளே சென்றவன் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே கல்லுப்பிள்ளையாக வந்து காட்சியளிக்கும்போது….
“இவன் ஏன் இங்கு வந்தான். கொலைகாரப்பய…. உள்ள தொல்லைகள் போதாதா? புழுங்கிய மனசுகள் எரிந்து தகிக்கின்றன.
‘ஏதோ பழைய ஞாபகத்திற்கு வந்திருக்கின்றான். விரைவில் போய் விடுவான் நம்ம பொடியன்களை பழக விடாம இருந்தா சரி” முன்னேற்பாடுகள் நடந்தன.
நாட்கள் நகர்ந்தன அவன் போவதாக இல்லை. கையில் வேறு சில்லறை தாராளமாக புரண்டது. இப்போது அவனை சுற்றி ஒரு வட்டம் வளர்ந்து விட்டிருந்தது.
ஆரம்பத்தில் கோயில் பெட்டிக்கடை என்றிருந்த படுக்கை இப்போது லயத்து வரை வந்துவிட்டது. அநேகருக்கு இப்போது இவன் ஒரு விவகாரமே இல்லை.
இந்தப் பிரச்சினை அடங்கிப்போயிருந்த வேளையில் மீண்டும் இவனைப் பற்றிய செய்திகள் ஒட்டு லயத்து மாடத்தியோடு தொடுப்பு என்ற கிசுகிசுப்போடு மீண்டும் முக்கியத்துவம் பெற்றன.
ஒட்டு லயத்தில் ஒன்றிக்கட்டையாக இருக்கும் மாடத்தியின் புருஷன் கொஞ்ச காலத்திலே கண்ணை மூடிவிட்டான். மாடத்தி பார்வைக்கு சுமாராக இருப்பாள். ஊரிலுள்ள பெரிய புள்ளிகளின் சகவாசம் உண்டென்பதெல்லாம் கண்டு கொள்ளாத சங்கதிகள்.
“மாடத்தியைப் படம் பார்க்க ராக்கப்பன் அழைத்துப் போய்விட்டான்” கலவர காலத்தின் மாநிலச் செய்தி என அடிபடுகின்றது.
ஊர்ப் பெரியவர்கள் ஆளுக்கு ஆள் வரிந்து கட்டிக் கொண்டு தர்மாவேசம் பூண்டு நிற்கின்றனர்.
மாலையில் கோயிலை கமிட்டித் தலைவர் தலைமையில் ஒரு கூட்டம் கூடியது. நல்ல காரியங்களுக்கெல்லாம் பிளவுபட்டு சதிராடி நிற்கும் புள்ளிகள் இவன் விடயத்தில் ஒன்றுபட்டு முடிவு எடுத்தனர். ராக்கப்பனை ஊருக்குள் நடமாட விடக்கூடாது. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.
முடிவு.
நடைமுறையில் தான் பலன் இல்லை. ராக்கப்பன் அங்கே தான் இருந்தான் வரிந்து கட்டி நின்றவர்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொதித்தனர்.
இப்போது மாடத்தியுடன் ராக்கப்பனுக்கான தொடர்புவெளிப்படையாகத் தெரியவந்து விட்டது.
ஏறக்குறைய கணவன் மனைவி நிலையில் சாப்பாடு படுக்கை எல்லாம் அங்கேதான். ஆனால், கண்டும் காணாமல் என்ற வகையில் தொடர…
ஒருநாள் நடுச்சாமம் கோயில் கமிட்டித் தலைவர் ஊர்ப்பெரியவர்கள், பெட்டிக்கடை முத்தப்பா மற்றும் புள்ளிகளின் பிரசன்னத்தில் மாடத்தியின் வீட்டுக் கதவு தட்டித் திறக்கப்பட்ட போது,
ராக்கப்பன் கையுமெய்யுமாகப் பிடிபட்டான்.
கூட்டத்தின் கையில் கம்பு, தடிகள், தீப்பந்தம்.
ஆய் ஊய் விசிலடிகள் யாரோ ஒருவன் தகரத்துக்குக் கல்லால் எறிய, ராக்கப்பனை நீங்க உள்ளே இருங்க’ என்று அமர்த்திவிட்டு மாடத்தி வெளியே வந்தாள்.
அவள் தலை குனிந்து மன்னிப்புக் கேட்பாள் என்று எதிர்பார்த்து கூட்டம் எக்காளமிட்டுச் சிரித்திருந்த போது,
‘எல்லோரும் என்னா வேடிக்கை பார்க்கவா வந்தீங்க? இது என்ன உலகத்தில நடக்காத புதுமையா? நான் ராக்கப்பனைத்தான் எடுத்துக்கிட்டேன். நாங்க புருஷன் பெண்டாட்டியா வாழப்போகிறோம். அது யாருக்கும் புடிக்கலையன்னா அவுங்க என்னைய கட்டிக்கிங்க நான் இப்பவே ராக்கப்பனை இந்த வீட்ட விட்டுட்டு போகச் சொல்லிடுறன்”.
கூட்டம் வெல வெலத்தது.
“என் புருஷன் செத்து பத்து வருஷத்துக்கும் மேலாச்சி. ஆனால் இங்க உள்ளவங்க எல்லாம் என்ன வைப்பாட்டியாத்தான் வச்சு நடத்தினீங்க. நீங்க ரகசிய ரகசியமா என் கதவை வந்து தட்டுறதைவிட இதுமேல்; உங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நாளைக்கு முந்தானையை போடுறதை விட நான் ஒருத்தருக்கே போட்டுட்டுப் போறேன். இனிமே யாரும் இந்த கதவை தாண்டலாமுன்னு நினைக்காதீங்க”- மாடத்தி. “மாதவி என்றாலும் மாடத்தி என்றாலும் ஒன்றுதான். காலம் தான் வேறு…
பெரியவர்கள் எங்கே தம் பெயரையும் இழுத்து விடுவாளோ என்று வெலவெலத்துப் போனார்கள். கூட்டம் ‘சண்டாளம்’ என்றபடி கலைந்து பின் வாங்கிவிட்டது. இருந்தாலும் கிராம சேவகர் என்ற “சர்பக்கணையை ஏவியது. மாடத்தி சளைக்க வில்லை. “ஆமாம் ஆராச்சி நல்ல ஆராச்சி இவனெல்லாம் ஒரு ஆராச்சி மாத்தியா சமூர்தி எழுதித் தாங்கன்னு கேட்டதுக்கு “மெனிக்கே வீட்டுல இல்லாத போது வான்னு சொன்ன ஆளு தானே நீ.” மாடத்தி காளியானாள் மீண்டும் கூட்டத்தில் யாரோ ஒருத்தன் விசிலடித்தான்.
“மே குனுகொட அபிட்ட ஒனநே” ஆராச்சியின் கோலயா ஒரு போத்தல் சாராயத்துக்காக வந்த ஆராச்சியை லாவகமாக அகற்றிப்போனான்.
அன்று விடியும் வரை மாடத்தியின் வீட்டில் விளக்கெரிந்தது.
வார இறுதியில் வருடாந்த தேர்த்திருவிழாவுக்காக ஊர்ப் பொதுக் கூட்டம் கூடியபோது திருவிழா ஒழுங்குகளுக்குப் புறம்பாக மாடத்தி ராக்கப்பன் விவகாரமும் அங்கு பேசப்பட்டு திருவிழாவில் கலந்துகொள்ள விடாமல் தடுப்பது என்று முடிவாகியது.
ஊர் முறைமையை மீறியவர்களுக்கு வழங்கிய தண்டனை.
“கரகம் அவன் வீட்டுக்குப் போகக்கூடாது”.
“காவடி அவன் வாசலை மிதிக்காது”.
“கொடை எடுக்கக் கூடாது.”
“துள்ளுமா சீர்கொண்டு வந்து அவள் அம்மனுக்கு அர்ச்சனை செய்யக்கூடாது” ஆளுக்காள் ஆக்ஞை பிறப்பித்தனர்.
ராக்கப்பன் மாடத்தி குடும்பத்தை இவ்வாறு ஒதுக்கித் தள்ளி வைத்தாகிவிட்டது.
திருவிழா
ஊரே களைகட்டி அமர்க்களப்படுகின்றது.
அப்போதுதான் வெடித்துக்கிளம்பியது. இனக்கலவரம், நான்கு பக்கமும் எரிமலையென மூண்ட கலவரத்தில் தோட்டங்களையும் கிராமத்தையும் கொண்ட சிற்றூர் தீப்பற்றிக்கொள்ள,
கொள்ளையடிப்பு, எரியூட்டல், சொத்துக்கள் போனால் பரவாயில்லை உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு காடுகளில் புகுந்து தஞ்சம் அடைய.
அகப்பட்டுக் கொண்டோரின் அவல ஓலம்…
உயிர்ப்பலி,
மாடத்தியும் ராக்கப்பனும் கோயிலுக்கு மிக அண்மையிலுள்ள புல்லுமலையில் ஒளிந்து கிடக்க….
அந்நிய இராணுவமெனப் புகுந்த காடையர் கடைகளைக் கொள்ளையடித்து எரியூட்டி லயத்தை எரித்து கோயிலையும் அண்மித்துச் சூழ. நாளை நடைபெறவிருக்கும் திருவிழாவிற்காக அலங்கரிக்கப்பட்ட ரதம் மங்களகரமாக ஆரோகணித்து எழுந்து நிற்க.
இன வெறியர்களின் தீ வெட்டிகள் ஜூவாலையினைக் கக்க… தேரை நோக்கி….
மாரியாத்தா… மாடத்தி வெதும்புகின்றாள். ராக்கப்பன் மாரியம்மன் கோயிலுக்குள் புகுந்து அம்மனின் வெட்டரிவாளை எடுத்துச் சுழற்றி, சுழற்றி வீசி வெறியர்களுக்கு மத்தியில் தன்னந்தனியனாகத் தாக்கத் தொடங்கினான்.
சில நிமிடங்களில் இரண்டொருவர் சரிந்தனர். கயவன் ஒருவன் தீப்பந்தத்துடன் தேரை நோக்கி விரைய அவனை… நோக்கி
வெட்டரிவாளுடன் ராக்கப்பன் அருச்சுனனின் அம்பெனப் பாய்ந்தான். புல்லுமலையில் தம் தம் குடும்பங்களுடன் ஒளிந்திருப்பவர்களுக்கு தீப்புகைக்குள்ளே ராக்கப்பன் சளைக்காமல் அங்கதனாக தலை சாய்க்காது…
கரும்புகை மேலெழுகின்றது.. குருஷேத்திரக்களம்.
“ஐயோ மச்சன் நானும் வாரேன்….” மாடத்தி சேலையை வரிந்து கட்டிக்கொண்டு கோயிலை நோக்கி ஓடிவர….
புல்லு மலையில் அழும் பச்சிளம் குழந்தைகளின் வாயிலும் துணிகள் புதைந்திருக்க “மானா புல்லு மலையின் கீழ் தொங்கலில் காடையர் சிலர் சருகுகளை குவித்து நெருப்பு வைத்துக் கொண்டிருந்தனர்.
புல்லு மலை புகையைக் கக்கியபடி உச்சி மலையை நோக்கி எரியத்தொடங்கியது.
– கொழுந்து
– அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.
![]() |
சிறுகதை, நாவல், நாடகம், கவிைன ஆகிய இலக்கியத் துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ள வடிவேலன், இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். கதைகள் சில சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. இவர் எழுதி தமிழகத்தில் வெளியான சில கதைகள் அங்கு மறுபிரசுரமும் செய்யப்பட்டன. வடிவேலனின் 12 சிறுகதைகள் அடங்கிய 'வல்லமை தாராயோ!' என்னும் சிறு கதைத் தொகுதி மலையக வெளியீட்டகத்தின் பிரசுரமாக வெளிவரவுள்ளது. 'தோட்டக் காட்டினிலே…' என்னும்…மேலும் படிக்க... |
