பூசைக்குள் வரும் பூக்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 23, 2026
பார்வையிட்டோர்: 196 
வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம் – 5

இரண்டு நாட்களாக வீடு பூ ட்டி இருந்ததை வந்து வந்து பார்த்து ஏமாந்து போன ரகு, கணேசன், பாலா, சீனு முகத்தில் இப்போது மகிழ்ச்சி.

“ஏய்! ஆள் வந்தாச்சுடா!” சீனு உற்சாகமாய் சொல்லி அமர…. மற்றவர்களும் மரத்தடியில் அமர்ந்து திறந்திருந்த வாசலையேப் பார்த்தார்கள்.

சிறிது நேரத்தில் மாலா வெளியே வந்து சாலையை ஒரு முறை நோட்டமிட்டுவிட்டு மீண்டும் உள்ளே சென்றாள்.

“பாலா! ஆள் தனியாத்தான் இருக்கா?” அவளைக் கவனித்த கணேசன் மலர்ச்சியாக சொன்னான்.

“ஆமாம். வீட்டுல நொண்டியையும் காணோம். வண்டியைக் காணேம்.!….” அடுத்து சீனு கவனித்து அதை ஊர்ஜிதம் செய்தான்.

“வழக்கம் போல அலுவலகத்துக்குப் போயிருப்பான், இன்னைக்கு நாம வந்தது லேட்டு.” ரகு சொன்னான்.

“அப்படித்தானிருக்கும்.!” என்ற பாலா “ஆமா…. நம்ம ஆளு வெளியே வந்து யாரைப் பார்த்துட்டுப் போறா?!” சந்தேகத்தை எழுப்பினான்.

“என்னைத்தான்!” சீனு நெஞ்சு நிமிர்த்தினான்.

“மூஞ்சி! அவ இந்தப் பக்கம் திரும்பவே இல்லே. வேற யாரையோ பார்த்துட்டுப் போறா. ஒருவேளை வெளியே போன நொண்டி புருசன் வீடு திரும்புறானா!?”

“இல்லே. இது அலுவலகம் விடும் நேரம் இல்லே. அவன் அலுவலகத்துக்குத்தான் போயிருப்பான். இவ விருந்தாளி வேத்தாளியை எதிர்பார்க்கிறாப்போல தோணுது.” தன் ஊகத்தைச் பாலா சொன்னான்.

“விருந்தாளி வேத்தாளின்னா…! வேற யாராவது நமக்கு முன்னாடி டிக்கெட் வாங்கிட்டானா?!“

“ச்சே ச்சே! அப்படியெல்லாம் தப்பா பேசாதீங்க. மாலா இங்கே குடி வந்த மூணு மாசத்துல அவ அம்மா அப்பாகூட வரலை. வேற யாரையோ எதிர்பார்க்கிறா.”

“யார் நமக்கு வில்லன்?!” ரகு அவள் பார்த்துச் சென்ற சாலையைக் கூர்ந்து பார்த்தான்.

“பார்க்கலாம்!” சீனு அழுத்தமாக சொன்னான். நால்வரும் அந்த குடிசையை நோட்டமிட்டார்கள்.

இவர்கள் நடவடிக்கைகளைக் கவனித்த ஆயா…

“இதுங்க என்னைக்கு எவகிட்ட உதை வாங்கப் போவுதோ தெரியலை!”

மாலா வீட்டிற்கு அடுத்து மூன்று குடிசைகள் தள்ளி வாசலில் ஆப்பக்கடை போட்டிருப்பவள் தன் பக்கத்தில் அமர்ந்து இட்லி வியாபாரம் செய்யும் முத்தம்மாளிடம் சொன்னாள்.

“எவளாவது சாணியையும் அதையும் கரைச்சு வைச்சுத்தான் அடிக்கப் போறாளுங்க. அடங்காம அலையுதுங்க.” – முத்தம்மாளுக்கு எரிச்சல் அவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே வியாபாரத்தைப் பார்த்தாள்.

“பொறுக்க முடியலை! அடுத்தவன் பொண்டாட்டி என்கிற துளி நெனப்பு, பயம் இல்லாம அலையுதுங்க!. ஏன்… இந்த மாலா புருசன் பாலு கையாலேயே ஒரு நாளைக்கு வெட்டுப்பட்டு சாவப் போறானுங்க.” ஆயா தன் ஆத்திரத்தைக் கொட்டினாள்.

“ஏன் முத்தம்மா! நீயாவது அந்த பசங்ககிட்ட போய் நல்லது சொல்ல வேண்டியதுதானே!” இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்த அவள் வயது செல்லம்மாள் சொன்னாள்.

“அது கிடக்குதுங்க காலிப்பசங்க. அதுங்ககிட்ட போய் சொன்னேன்னா… ஏன்டி கிழவி உன்னைக் கண்ணடிச்சேனா, உன் பொண்ணைக் கையைப் புடிச்சி இழுத்தேனான்னு வடிவேலு பாணியில என்னையும் கண்ணடிப்பானுங்க. என் பொண்ணையும் கையைப் புடிச்சி இழுப்பானுங்க…கயவாளிங்க. வீண் வம்பு! கோடி வீட்டுக் கோமளம் வெளக்கமாத்தால அடிச்சாப்போல மாலா அடிச்சா திரும்ப மாட்டானுங்க.”

“ஆமாம் ஆத்தா! அந்த பொண்ணைப் பார்த்தா ரொம்ப நல்ல மாதிரி போல தெரியுது. தன் வீடு உண்டு வாசல் உண்டுன்னு இருக்கு. அடுத்தவங்க கிட்ட அநாவசியப் பேச்சு கெடையாது. இவனுங்க அடிக்கிற கூத்து அவ வெளியே தலைகாட்டுறதில்லே. இன்னைக்குத்தான் என்னமோ அதிசயமா ரெண்டு மூணு தடவை வெளியே தலை காட்டிட்டுப் போறா. அம்மா அப்பா வர்றாங்க போலிருக்கு”. இவளும் தன் மனதில் பட்டதைச் சொன்னாள்.

இவர்கள் இப்படியென்றால் கணேசனுக்குத் திடீரென்று வேறொரு சந்தேகம், பயம் தானாக முளைத்தது.

“ஏன் மச்சி! நம்ம தொந்தரவு தாங்கமுடியலைன்னு இவ போலீஸ்ல புகார் குடுத்திருப்பாளா. அவுங்க வர்றாங்களான்னு பார்க்கிறாளா?” லேசான நடுக்கத்துடன் சொன்னான்.

“அப்படி இருந்தா அவனுங்க தலையைக் கண்டதும் நாம அம்பேலாகிடவேண்டியதுதான்!”

“அப்படி ஓடிப் போய் ஒளிஞ்சாலும் போலீஸ்காரன் நம்மைத் தேடிப் புடிச்சு உதைப்பான்.”

“அப்படி ஏதாவது ஒன்னு ஆகி உதை, சிறை இருந்துதுன்னு வைச்சுக்கோ…முழுசும் நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்குன்னு திரும்பி வந்ததும் ராத்திரியோட ராத்திரியாய்ப் புகுந்து நொண்டியை எட்டி உதைச்சு கட்டிப் போட்டு… புருசன் கண்முன்னாலேயே அவளை நாசம் பண்ண வேண்டியதுதான். வேற வழியே இல்லே!” ரகு ரொம்ப சர்வ சாதாதணமாய்ச் சொன்னான்.

“கற்பழிப்புக்கு ஏழு வருச தண்டனை நையினா!” சீனு எச்சரித்தான்.

“ஏழு வருசமென்ன இருபது வருசமானும் அவளை அடையறது அடையறதுதான்!” ரகு உறுதியாக சொன்னான்.

“என்னடா இவன் நாம விளையாட்டுக்குச் சொன்னா ரொம்ப சீரியசா போறான்?!“ பாலா துணுக்குற்றான்.

“எனக்கு எதைப் பத்தியும் கவலை இல்லே. மாலா இப்போ யாரை எதிர்பார்த்து வாசலுக்கு வந்து நடையாய் நடந்துட்டுப் போறாங்குறதுதான் யோசனை!?“ என்ற ரகு வெளியே வந்த மாலாவையும் சாலையையும் சேர்த்துப் பார்த்தான்.

“என்னடி இது! இன்னைக்குக் குட்டிப் போட்ட பூனை போல உள்ளுக்கும் வெளிக்குமாய் அலையுறா!?“ அவள் நடவடிக்கைகளைக் கவனித்த ஆப்பக்கார ஆயாவுக்கு ஆச்சரியம்.

ஆவள் சொல்லி வாய் மூடவில்லை…

அப்போது….ஆட்டோ ஒன்று மாலா வீட்டு குடிசை முன் நின்றது.

மாலா மலர்ச்சியுடன் வெளியே வந்து தலைகாட்டி உள்ளே ஓடினாள்.

ஆட்டோவிலிருந்து மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் பாலு ஒருத்தியுடன் இறங்கினான்.

“என்னடி இது இது?!…” ஆயா இதை எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்தாள்.

“சாரு… உஉ!” ரகு மணப்பெண்ணைப் பார்த்து அலறினான்.

இவர்களின் எந்த நடப்புகளையும் கவனிக்காமல்…

மாலா ஆரத்தி தட்டுடன் வெளியே வந்து அவர்களைக் கிழக்கு முகமாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்தாள். அவர்கள் உள்ளே செல்ல…அதை சாலையோரம் கொண்டு வந்து ரகு கூட்டத்தை ஒரு அலட்சி பார்வை பார்த்து கொட்டினாள்.

ஆயாவாள் தாங்க முடியவில்லை. அவளுக்கு எதுவாய் இருந்தாலும் உடனே கேட்டுவிட வேண்டும். இருந்த இடத்தை விட்டு வேகமாக எழுந்தாள்.

“ஏன்டிப் பொண்ணே! உனக்குப் புத்தி கித்தி கெட்டுப் போச்சா?” பதறி வந்து கேட்டாள்.

“இல்லே பாட்டி. இதுக்கு நான் போதலைன்னு அவளை மேய்ஞ்சுது. இன்னும் போதலைன்னு இந்த ஊர்ல இருக்கிற எவன் அக்கா தங்கச்சியாவது தொட்டுடப்போவுது எதுக்கு வீண் கெட்ட பேர்ன்னு நானே அவளை முழுசா கொண்டு வந்துட்டேன்”. ரகு, கணேசன், பாலா, சீனு காதுகளுக்கு விழுவது போல் கொஞ்சம் உரக்கச் சொல்லி அவர்களை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.

“இது என்னடி அதிசயம்?!” ஆயா பின் வந்த முத்தம்மாளும் இது கேட்டு வியப்பு திகைப்பாய் முணுமுணுத்து தாவங்கொட்டையில் கை வைத்து அப்படியே சிலையாக நின்றாள்.

இளைஞர்களுக்கும் மாலா சொன்னது காதில் விழுந்தது. தங்களைத்தான் குறி வைத்து குத்துகிறாள் புரிந்தது,

“அவ என்ன பேச்சு பேசிட்டுப் போறா பார்த்தியா?!” கணேசன் மெல்ல சொன்னான். அவன் முகத்தில் லேசான கோபக் கோடுகள்.

“விட்டா அவ புருச புருசன் நம்ம அக்கா தங்கச்சிங்களைத் தொடுவான்னு ஜாடைமாடையாய் சொல்லிட்டுப் போறாப் பார்த்தியா?! எவ்வளவு திமிர்!” சீனுக்குள்ளும் கோபம். முகம் சிவந்தான்.

“அதை விடுங்கடா! சப்பாணி லேசுப்பட்டவன் இல்லே போலிருக்கு! நம்ம கனவுலக கன்னி பலானவளையே பொண்டாட்டி சம்மதத்தோட முடிச்சு வந்திருக்கான்னா.. இதுல ஏதோ விசயமிருக்கு!” சொன்னான் ரகு.

“என்ன விசயம்?”

“குட்டிங்க குடிசையில தொழில் போடப் போறாளுங்க போலிருக்கு!”

“ஆங்…”

“நிஜம்ம்மா…”

“வேற வழி இல்லே!” ரகுவிற்குள் குரங்கு புத்தி வேலை செய்தது.

“வேணாம். விளையாட்டு விளையாட்டாய் இருக்கட்டும். யாரையும் தப்பா பார்க்க வேணாம்!” சீனு ரகுவின் முகத்தைப் பார்த்து எச்சரித்தான்.

“ஆமாடா!“ கணேசனும் அதற்கு ஒத்துப் பாடினான்.

“போங்கடா தொடை நடுங்கிங்களா!” ரகு கொஞ்சம் கோபப்பட்டு சட்டென்று எழுந்து நண்பர்களை விட்டு விலகி வேகமாக சென்றான். இவனுக்குப் பிடிக்காத விசயம் சேதியென்றால் கோபம் வரும். இரண்டொரு நாட்களில் தணியும். என்றாலும் நினைத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டான்.

பாலா, சீனு, கணேசன் ஒருவதையொருவர் திகைத்துப் பார்த்தார்கள்.

“இவன் சரிபடமாட்டான்!” அவனை உச்சி முதல் உள்ளங்கால்வரை புரிந்த பாலா முணுமுணுத்தான்.

“ஆமா…” சீனு.

கலைந்தார்கள்.


வம்பே வேண்டாமென்று நான்கு நாட்களாக ஒதுங்கி மாலா வீட்டுப் பக்கம் திரும்பாமல் இருந்தவர்களுக்குத் திடீர் அதர்ச்சி.

ரகு அங்கு….தன்னந்தனி ஆளாய் அமர்ந்து முகம் வாட்டமாய் இருந்தான்.

“டேய்! என்னடா ஆச்சு?” கணேசன் நட்பு பாசத்தில் பதறி பாய்ந்து சென்று கேட்டான்.

அவன் பேசவில்லை.

“ஏன்டா சோகமா இருக்கே?” சீனு.

“சோகம் இல்லே. வேற….”

“என்ன?”

“நான் சாருவைப் பார்த்தேன்!”

“எதுக்கு?”

“எப்படி கலியாணம், என்ன விசயம் விசாரிக்க?”

“என்ன சொன்னா?”

என்னவோ உறுத்த தலைகுனிந்தான்.

“முகத்துல அடிக்கிறாப் போல ஏதாவது சொல்லி செருப்பைக் கழட்டிட்டாளா?”

“ம்ம்…”

“என்ன நடந்துன்னு விலாவாரியா சொல்?” பாலா.

“எப்போ சாரு தனியா மாட்டுவாள்ன்னு தினம் இங்கே வந்து உட்கார்ந்து….நோட்டம் விட்டுக்கிட்டே இருந்தேன். நேத்திக்குக் காலையில பத்து மணி இருக்கும். வீட்டுல மாலா இல்லை போலிருக்கு. வீட்டைப் பூட்டிக்கிட்டு இவள் மட்டும் தனியா ஒயர் கூடையை எடுத்துக்கிட்டு கடைத்தெருப் பக்கம் கிளம்பினாள். நானும் பின்னாலேயே போனேன். யாரும் இல்லாத ஒரு தனி இடத்துல வழி மறைச்சு… இது என்ன புது அவதாரம்…? ன்னேன். குடும்ப அவதாரம்! ன்னு பொறுமையாய் சொன்னாள். அப்பவே அவ முகம் சரி இல்லே. நான் தொடர்ந்து, அப்போ.. பழைய முகம் உண்டா? ன்னு கேட்டேன். உன் அம்மா அக்கா தங்கச்சிக்கு அப்படி உண்டுன்னா எனக்கும் உண்டு…!ன்னு அழுத்தமாய் சொன்னாள். எனக்கு ஆயிரம் செருப்பால அடி வாங்கின ஆத்திரம். ஏய்ய்ய்ய்…! ன்னு கத்தி பல்லைக் கடிச்சேன். அவ அதுக்குத் திருப்பி, ரொம்ப அலட்டாதே! நான் மானம் வித்துப் பொழைச்சவள். எதுக்கும் கவலைப்படமாட்டேன், செருப்பாலடிப்பேன்னு கத்தினாள். அவமானம்!“ கரகரத்தான்.

கேட்ட நண்பர்கள் உறைந்தார்கள்.

“ரொம்பத்தான் திமிர்!” பாலா ஆத்திரப்பட்டான்.

கணேசனுக்கு நண்பனைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

“நான் அப்பவே சொன்னேன். அவகிட்ட விளையாட்டு வேணாம்ன்னு” சீனு சொன்னான்.

“நமக்கு இந்த விளையாட்டு, பொம்பளைங்ககிட்ட பேச்சு ஏச்சு வாங்கிறதெல்லாம் சகஜம். என்னால பொறுத்துக்க முடியும். நமக்குத் தெரிஞ்சு நான் எவ்வளவோ பொறுத்திருக்கேன். அதெல்லாம் உத்தமி, நல்ல பொண்ணுங்க கிட்ட கிடைக்கிற வாழ்த்து, வசைவு. ஆனா… இந்த சாரு சொன்னதைத்தான் என்னால பொறுத்துக்க முடியலை, ஜீரணிக்க முடியலை”. ரகுவிற்கு இன்னும் துக்கம் தொண்டைக்குள் இருந்தது,

“இதெல்லாம் துாசுடா. மற, துாக்கிப் போடு”. கணேசன் அவனைத் தேற்றினான்.

“இல்லைடா. முடியலை!”

“முயற்சி செய்தா முடியாததில்லே”.

“இல்லே சீனு நான் அவளைப் பழி வாங்கனும்.”

“அதெல்லாம் வீண் வேலை. விவகாரம்.”

“என் மனசு துடிக்குது.”

“துடிப்பை அடக்கு.”

“முடியாது!”

“எப்படி வாங்கப் போறே?”

“அதான் யோசனை!”

“ஏடாகூடமா செய்து, மாட்டி… எக்குத்தப்பா உதை வாங்காதே!” சீனு விடாமல் மீண்டும் எச்சரித்தான்.

“பரவாயில்லே!” அவன் சொன்னதைக் காதில் வாங்காமல் எழுந்தான்.

நண்பர்கள் தர்ம சங்கடமாய் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

அத்தியாயம் – 6

ஒரு வாரம் ஊர் சென்று திரும்பிய தகரர் சின்னப்பனுக்கு சேதி அதிர்ச்சியாக இருந்தது. நம்பவே முடியவில்லை.

சாரு தொழிலை விடுவாள். அவளையும் ஒருவன் திருமணம் செய்து கொள்வான். அதுவும் நொண்டி, இரண்டு கால்களும் சூம்பிப் போனவன், ஏற்கனவே திருமணம் முடித்தவனுக்குச் சம்மதிப்பாள்! என்று நினைத்தே பார்க்க முடியவில்லை.

‘எப்படி இது சாத்தியம்?!‘ மலைத்தார்.

அவள் எந்த குருடன், செவிடன், நொண்டி, முடம் ….எவனையாவது திருமணம் செய்து கொண்டு விட்டுப் போகட்டும். தனக்குத் தொழில், வருமானம்…?! நினைக்கத் திக்கென்றது. சாருவைத் தொட்ட நாள் முதலாக இவருக்குக் காசைப் பற்றி கவலை இல்லை. அவளைத் தொழிலில் இறக்கிய பிறகு எப்படியும் இவருக்கு நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் கையில் புரளாமல் போகாது.

வயது வித்தியாசமில்லாமல் … எல்லா ஆண்களும் அவளைத் தேடித்தான் இவரிடம் வருவார்கள்.

அந்த அளவிற்கு அவளுக்கு அழகு, உடல்மொழி, வாடிக்கையாளர்களிடம் ஒத்துழைப்பு, நெளிவு, சுளிவு, குழைவு… எல்லாம்.

“நம்மைப் போல நாலு இடத்துல கையேந்தி பிச்சையெடுக்கிற தொழிலில்லே சின்னப்பருக்கு. ஒருத்தியைப் பிடிச்சாலும் சார் ஒழுங்காப் பிடிச்சார். பணமா கொட்றா..!” இவரைப் போலிருக்கும் சக தொழிலாளர்களுக்குப் பொறாமை. இவரெதிரில் வாய் விட்டே சொல்வார்கள் இவரும் அவளைத் தவிர வேறு எவளுக்கும் ஆள் பிடித்து விடுவதில்லை. அந்த வேலையையும் செய்வதில்லை.

‘இனி….?’ யோசிக்க யோசிக்க… அவருக்கே தான் தற்போது நட்டாற்றில் நாதியற்று நிற்பது போல் தோன்றியது,

“என்ன சின்னப்பா!” அழைத்துக் கொண்டு செல்வசாமி வந்தார். அவரும் இதே குட்டையில் ஊறிய மட்டை.

சின்னப்பன் ஏறிட்டார்.

“சாரு இல்லியே …அடுத்து என்ன செய்யப் போறதா உத்தேசம்?” வெந்தப் புண்ணில் வேலைச் சொருகுவது போல் கேட்டார்.

“தெரியலை!” கவலையாய்க் கையை விரித்தார்.

“வயித்துப் பொழப்புக்கு ஏதாவது செய்துதான் ஆகனும். இனிமே எவளாவது ரயிலடியில நிப்பா, புடிச்சு வந்து இன்னொரு சாரு உருவாக்கிடாலாம்ன்னு பகல் கனவு காணாதே!.. அதெல்லாம் இப்ப முடியாது, சினிமா வாய்ப்புத் தேடி வர்றதுங்க எல்லாம் ஆளோடேயே வருது. இல்லே அம்மா அப்பாவைத் துணைக்குக் கூட்டி வருது, அந்த முயற்சியெல்லாம் இனி கவைக்கு உதவாது. நம்ம பக்கம் வந்தாலும் உனக்குச் சரி வராது. நம்ம கிராக்கிங்கயெல்லாம் பிச்சைக்காரிங்க. உன் ஆளு போல அள்ளி குடுக்க மாட்டாளுங்க.” செல்வசாமி மேலும் சொன்னார்.

சின்னப்பன் பேசாமல் இருந்தார்.

“இதோ பாருங்க சின்னப்பன். எந்த பலான பொண்ணு, பொம்பளைக்கும் இந்த தொழில் கொஞ்ச நாள்ல அலுத்துப்போகும். நமக்குக் கண்டவன் வேணாம். புருசன் புள்ளைக்குட்டி வேணும்ன்னு குடும்ப ஆசை வரும். ஏங்கிக் கிடப்பாளுங்க. அப்படி கிடக்கிறவளுங்ககிட்ட எவனோ ஒரு ஆம்பளை கூன் குருடு செவிடு…. அவ ஆசையைப் புரிஞ்சு நான் திருமணம் செய்துக்கிறேன்னு தட்டிவிட்டுட்டான்னா டப்புன்னு விழுந்திடுவாளுங்க. அப்படி விழுறதுகதான் எவ்வளவு பாதுகாப்பா இருந்தாலும் தொழில் செய்யிற இடத்திலேர்ந்து தப்பிக்கிறது. இதுமாதிரி அழைச்சவனோட ஓடிப் போறதெல்லாம்.”

“நடிகைகளும் இதே கேஸ்தான். சினிமாவுல நடிக்கனும்ங்குற ஆர்வத்துல ஆரம்பத்துல எதுவுமேத் தெரியாது, அடுத்து பணம் காசு சேர்ந்து பெத்தவங்க அவுங்களைப் பணம்காய்ச்சி மரமாய் நினைச்சு ஆட்டி வைக்கும்போதுதான் வருது ஆபத்து. தனக்கு சரியான துணை இல்லையேன்னு ஏங்கறாங்க. குடும்பம் குட்டி இல்லை பின்னால அவஸ்தை வருமோன்னு தவிக்கிறாங்க. அந்த தவிப்புல தவறி விழுறதுதான் இரண்டாம்தாரம், மூன்றாம் தாரம். அந்த மாதிரிதான் உங்க சாருவும் விழுந்திருக்காள். சின்னப்பா ! இதெல்லாம் பெண்கள் பிரசவ வேதனை, வீராப்பு. திருமணம் முடிச்ச நடிகைங்க நான் நடிக்க வரமாட்டேன்ங்குற அறிவிப்பு. அங்கே அடிவிழும்போது திரும்பவும் பழைய இடத்துக்கே வருவாங்க. அதனால நீங்க சாருவைச் சந்திச்சு, உன் கலியாணத்தைப் பத்தியெல்லாம் கவலை இல்லேம்மா தொழில்ல இரு உன் கையிலேயும் கொஞ்சம் காசு இருந்தாத்தான் இவன் நட்டாத்துல விட்டாலும் எதிர் காலத்துல உதவும்னு பக்குவமா சொல்லு வழிக்கு வந்துடுவாள்.” என்றார்.

சின்னப்பன் எல்லாவற்றையும் காதில் வாங்கிக் கொண்டு குனிந்த தலை நிமிரவில்லை.

“வருவாளாங்குற தயக்கம் வேணாம். நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டோம்ன்னா யோசிப்பாள். இளக வாய்ப்புண்டு” நிறுத்தியவர், அடுத்து …

“இன்னொரு யோசனை! ஒரு நல்லவனை நம்பிப் போனா அவன் உழைச்சுப் போடுவான், சாரு தொழிலுக்கு வர மாட்டாள்னு நினைக்கலாம். இவள் சப்பாணியை நம்பிப் போயிருக்காள். முதல் சம்சாரமே வந்து பேசி, அழைச்சிப் போயிருக்காள்ன்னா வந்தவள் சரி இல்லேங்குறது என்னோட கருத்து. புருசன் சரி இல்லே. இவனை ஒப்புக்கு வைச்சு சேர்ந்து தொழில் செய்யலாம் சுகத்துக்குச் சுகம் பணத்துக்குப் பணம்ன்னு சமாதானப்படுத்தி கூட்டிப் போயிருப்பாளன்னு என் மனசுக்குப் படுது. தொட்டுப் பார்த்தால்தான் அங்கே ஒன்னுக்கு ரெண்டு இருக்கு, இல்லே தெரியும். அவளுக்கும் நல்ல உடம்பு. தொழிலுக்கு ஏத்த கட்டை !” நிறுத்தி ஆசை விதையை ஊன்றினார்.

‘அப்படி இருக்குமோ ?!‘ சின்னப்பனுக்குள்ளும் அது துளிர்த்தது. இதுவரை வாடிக் கிடந்த உடலுக்குள் தெம்பு வந்து முகம் மெல்ல மலர்ந்தது.

“வர்றேன்!” செல்வசாமி அகன்றார்.

வெகுநேரம் யோசனையிலிருந்தவரை “வாத்தியாரே!” குரல் கலைத்தது.

ரகு நின்றான்.

“என்ன தம்பி?“ ஏறிட்டார்.

அசட்டு சிரிப்பு சிரித்து நான்கு நுாறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவர் கையில் திணத்தான்.

புரிந்து கொண்ட அவர் “அட! சும்மா இருங்க தம்பி. நானே இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கேன். நீங்க வேற வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க.” நொந்தார்.

“என்ன வாத்தியாரே சொல்றீங்க?” திடுக்கிட்டவன் போல் கேட்டான்.

“கையில அயிட்டம் இல்லே ஓடிப் போய்ச்சு!”

“ஓடிப் போச்சா எங்கே?!“

“எல்லாம் உங்க ஊர் பக்கம்தான்!”

“எங்க ஊர் பக்கமா?!” தெரியாதவன் போல் வியந்தான்.

“ஆமாம்! எவனோ சப்பாணி கட்டி இருக்கானாம்!” தான் கேள்விப் பட்டதைச் சொன்னார்.

“இப்போ அவ எனக்கு வேணுமே!” தவித்து கையைப் பிசைந்தான்.

“அதெல்லாம் முடியாது!”

“முயற்சி செய்தா முடியாதுங்களா?”

“அடி வாங்கலாம்!“

“இதுக்கு ஏன் அடி வாங்குறீங்க? அவ பத்தினி இல்லே. நீங்க போய் வழக்கமா பாருங்க, கேளுங்க. மறுத்தா வர்றதினால உள்ள நட்டத்தைச் சொல்லுங்க. எப்படியும் சம்மதிக்கலாம்!“.

“அப்படியா சொல்றே ?!” என்ற சின்னப்பனுக்குள் யோசனை ஓடியது. கிடப்பது கரியா நெருப்பா என்று பயந்து கொண்டிருப்பதைவிட தொட்டுப் பார்த்தாலென்ன? தோன்றியது.

“சரி தம்பி முயற்சி செய்யறேன். ஆனா முழுசா முடியும்ன்னு சொல்ல முடியாது.” தன் மனதில் பட்டதைச் சொன்னார்.

“ஐயா முடியும்ங்குற நம்பிக்கையில போங்க. எல்லாம் முடியும். இந்தாங்க பணத்தைக் கையில வைச்சுகோங்க” என்று அவர் கையில் திணித்தவன், “எனக்கென்னமோ அங்கே ரெண்டு பொம்பளைங்களும் சேர்ந்து கூட்டா தொழில் பண்ணப்போறாப் போலத்தான் தெரியுது.” அடுத்து அடி கொடுத்தான்.

சின்னப்பனுக்கு இது இரண்டாவது அதிர்ச்சி.

“எப்படித் தம்பி இதைச் சொல்றீங்க?!” துணுக்குற்றார்.

“எவன் பலான பொண்ணைத் தொட்டு கட்டுவான்? என்னதான் கலியாண ஆசை இருந்தாலும் எந்த பொண் ஊனமானவனைக் கட்டிப்பாள்?! எல்லாத்துக்கும் கணக்கு இருக்கு. அந்த இருக்கு அந்த சப்பாணி பொண்டாட்டிக்கு புருசன்கிட்ட திருப்தி இல்லே. மேய ஆசை. வெறுமனே எதுக்குப் போகனும்ன்னு அப்படியே பணம் சம்பாதிக்கவும் திட்டம். சாருவை வலைச்சு புடிச்சிருக்காள். இதுதான் நடந்திருக்கு. இல்லேன்னா தினம் பணம் பார்க்குற சாரு சம்மதிச்சிருக்க மாட்டாள்.“ தன் கற்பனையைக் கலந்து அவர் மேல் விட்டான்.

சின்னப்பனுக்கு இதுவும் சரியாக இருந்தது.

“புருசன் எப்படி சம்மதிச்சிருப்பான்?” கேட்டார்.

“பொண்டாட்டிக்காரி அவன் இயலாமையை எடுத்து வைச்சிருப்பாள். பரிதாபப்பட்டு கட்டிக்கிட்டேன். நீ சம்மதிக்கலைன்னா சாவேன், ஓடிப்போவேன், நீ அனாதையாய் இருந்து செத்துப்போவேன்னு மிரட்டியிருப்பாள். அவன் சம்மதிக்கிறதைத் தவிர வேற வழி ?!” ரகுவிற்கு இவர் மூலம் குடும்பத்தில் குண்டுகள் போட்டு அவர்களை வெளிக்குக் கொண்டு வந்து மாலாவைத் தொட்டுவிட ஆசை. அதனால் அவர் நம்பும்படி தனக்குத் தெரிந்த கதைகளையெல்லாம் சொன்னான்.

சின்னப்பனுக்கு இப்போது சுத்தமாக மனசு தெளிந்தது.

‘சாரு கூட்டுச் சேரக்கூட போயிருக்கலாம்!’ பட்டது.

சின்னமீனைப் போட்டு பெரிய மீனை இழுக்கிறாப் போல். சாரு வழியே மாலா! களித்தவருக்குள் இன்னொரு சந்தேகம் எழுந்தது.

“ஏன் ரகு! அவள் பணம், காசு, வீடு, கை போனெல்லாம் விட்டு சாமியாராய்ப் போயிருக்காள்ன்னு கேள்வி. உண்மையா?!” அவனைக் கேட்டார்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. அதைப் பத்தி நமக்குக் கவலையும் வேணாம். நமக்கு எது தேவையோ அதை முயற்சிப்போம்.” சொன்னான்.

இவருக்குள் ஓரளவிற்கு மனம் திருப்தியானது.

“சரி தம்பி. உங்க மேல பாரத்தைப் போட்டு புறப்படுறேன். பழமாய் இருந்தா நல்லது.” எழுந்தார்.

“முன்னே பின்னே இருந்தாலும் அதட்டி உருட்டியாவது எப்படியும் பழுக்க வைச்சிடுங்க” ரகு அவருக்குத் தைரியம் சொல்லி அனுப்புவித்தான்.

நடந்தார்.

இவர் அந்த வீட்டைத் தொடும்போது கதவு திறந்திருந்தது

“சா..சாரு !” வெளியில் நின்றபடியே…உள்ளே எட்டிப் பார்த்து அழைத்தார்.

வெளியே வந்த அவளுக்கு ஆளைப் பார்த்ததும் திக்கென்றது. சமாளித்து, “வாங்க!” அழைத்தாள்.

உள்ளே நுழைந்ததும் பாலிமலர் நாற்காலி ஒன்றைப் போட்டு அமர வைத்தாள். மாலா இல்லை.

சின்னப்பன் எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாறி…

“பார்ட்டிகிட்ட பணம் வாங்கி வந்திருக்கேன் சாரு….” மெல்ல சொன்னார்.

‘எதுக்கு?’ அவள் கேட்கவில்லை. மாறாய்….

“என்னை விட்டுடுங்க சார்!” கையெடுத்துக் கும்பிட்டாள்.

“இல்லே அது வந்து…”

:நான் சுத்தமாகிட்டேன்!”

“யாரைக் கேட்டு சுத்தமானே?!…” நிறுத்தி நிதானமாக கேட்டு பார்த்தார்.

சாருவிற்குள் திகைப்பு வந்தது. அதிர்வாய் அவரைப் பார்த்தாள்.

“என்னைக் கேட்கனும்! நேத்தைக்குத் திக்குத் தெரியமா நின்ன உன்னை எடுத்து இவ்வளவு துாரம் வளர்த்திருக்கேன். இன்னைக்குப் பிடி கிடைச்சிருக்குற துணிவுல பறந்தா எனக்குப் பாதிப்பு புரிஞ்சுக்கோ.” வார்த்தைகளை நிறுத்தி நிதானமாகச் சொன்னார்.

இப்போது சாரு அதிரவில்லை. ஆளை நிதானமாகப் பார்த்தாள்.

“உங்க பாதிப்புக்கு நான் பலியாக முடியாது!” மெல்ல சொன்னாள்.

“இன்னைக்கு ஒரு பார்ட்டிகிட்டே பணம் வாங்கிட்டேன் வருவான்!”

“வந்தா செருப்பாலடிப்பேன்!” சினம். குப்பென்று கோபம். சட்டென்று கொட்டினாள்.

சின்னப்பனுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். நிறைய மிதி பட்டிருக்கிறார். அதனால்….

“வீண் பேச்சு வேணாம். பணம் வாங்கிட்டேன். பார்ட்டி வருவான்.” தேய்ந்த ரிக்கார்டாய்ச் சொன்னார்.

“வரக்கூடாது!” சாரு குரலில் கண்டிப்பு கடுமை ஏற்றி சொன்னாள்.

“மிரட்டுறீயா?”

“மிரட்டலை சார். உண்மையைச் சொல்றேன். நீங்களும் இனிமே இங்கே வரவேணாம்”. கறாராய்ச் சொன்னாள்.

“இதோ பார். என்னை வெட்டி விட்டுட்டு நீயும் இந்த வீட்டுக்காரியும் சேர்ந்து தனியே தொழில் செய்யிற விசயம் எனக்குத் தெரிஞ்சு போச்சு. வழக்கம் போல நான் உனக்குத் துணை இல்லேன்னா அவ்வளவுதான்!” மிரட்டலாக சொன்னார்.

‘அபாண்டம். மிரட்டல்.’ சாருவுக்குக் கோபம் அதிகமானது.

“அடுத்து பேசினே மண்டையை உடைப்பேன்!” கத்தினாள். முகம் நாக்குத் துறுத்தாத பத்ரகாளி போல் சிவந்தது.

சின்னப்பன் இதை எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அரண்டு போனவராய் வெளியே வந்தார்.

சாரு முடிவு எடுத்தால் எடுத்ததுதான். இன்றைக்கு வேண்டாமென்றால் வேண்டாம்தான்!

பொன் முட்டையிடுகிற வாத்து என்பதால் இவரும் ஆரம்பத்திலேயே அவள் விருப்பத்திற்கே விட்டுவிட்டார். இன்றைக்கு வளையும் என்றால் எப்படி வளையும்?

‘போகட்டும். வயசு வித்தியாசம் பார்க்காமல், இத்தனை காலம் பழகியவன் என்று கூட யோசிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது போல இப்படி பேசி என்ன முடிவு?!‘ நடந்து நினைக்க நினைக்க அவருக்குள் கோபம் எட்டிப் பார்த்தது.

‘என்னைக்கு வந்த வாழ்வு இது ? உனக்கு வைக்கிறேன்டி வேட்டு! உன்னை மடக்குறதுக்கெல்லாம் ஆள் இருக்கான்டி! என்கிட்ட பேசினாப் போல அவன்கிட்ட பேசிப்பாரு. உன்னைக் கையைக் காலை உடைக்கிறானா இல்லையா பாரு. ஊடைக்கிறதோட மட்டுமில்லே… கையைக் காலைக் கட்டி….வந்த நோக்கத்தை நிறைவேத்திப் போவான் பாரு!’ மனதுக்குள் கறுவி கைபேசியை எடுத்து எண்களை அழுத்தினார்.

“வணக்கம் நான் ஏட்டு எத்திராசு பேசறேன் சார்.”

“நான் சின்னப்பன் பேசறேன். சப்-இன்ஸ்பெக்டர் சார்கிட்ட போனைக் குடுங்க.”

“அவர் இல்லை சார்.”

“எங்கே?“

“ஒரு கேஸ் விசயமா பெங்களூர் போயிருக்கார்.”

‘நானும் இல்லே அவரும் இல்லே. ஆள் நேரம் பார்த்துதான் மாறி இருக்காளா !?’

“எப்போ போனார்?”

“போய் ஒரு பத்து நாள் ஆகுது.”

“எப்போ திரும்புவார்?”

“இன்னைக்குத் திரும்பனும் ஒன்னும் தகவல் வரலை.”

“வந்தா நான் ஒரு முக்கியமான விசயமா பேசுனும்ன்னு சொல்லுங்க.”

“சரி.”

அணைத்தார்.

ரகு எதிரில் வந்தான். “என்ன சார் காயா பழமா?” கேட்டான்.

“காய்!”

“என்ன காயா?!“ அவனால் நம்பவே முடியவில்லை.

“தடியாலடிக்க இன்னொரு ஏற்பாடு பண்ணி இருக்கேன்.”

“என்ன?”

“பின்னிப்புடுவாரு பின்னி!” என்று விபரம் சொன்னார்.

“நல்ல ஐடியா! அந்த இன்னொருத்தியையும் சேர்த்து இழுக்கனும்!” ரகு மாலா மேலேயே குறியாக இருந்தான்.

“பண்ணிடலாம்.”

“அந்த சப்பாணியையும் சேர்த்துக்கலாமா?”

“அவன் வேஸ்ட்.! யோக்கியனா இருந்தா ஒதுங்கிப்பான். மானம் இருந்தா துாக்கு மாட்டி தொங்கிப்பான்!”

“சிறு துரும்பும் பல் குத்தும் வாத்தியாரே! அவன் காய் நகர்த்தப் போறான்!”

“அவன் நகர்ந்து நகர்த்துறதுக்குள்ள அடிச்சுப் போட்டுடுடலாம்!”

கைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்த சின்னப்பனுக்கு முகம் மலர்ந்தது. சப்-இன்ஸ்பெக்டர் சாரதி!

“என்ன! போன் பண்ணுணீயா…?” எடுத்ததுமே கேட்டார்.

“ஆமாம் சார்!”

“புதுசா எவளாவது சிக்கிக்கிட்டாளா?” அவர் பூசாரி போல. எந்த புது ஐயிட்டம் வந்தாலும் காவு கொடுக்க வேண்டும்.

“இல்லே சார். உங்க விருப்பப்பாடம் சாருவே இல்லே.”

“என்னய்யா சொல்றே?!” திடுக்கிட்டார்.

“ஆமாம் சார். நீங்களும் நானும் இல்லாத சமயம் பார்த்து கட்சி மாறிட்டா!” என்று எல்லாவற்றையும் ஒப்புவித்த சின்னப்பன், “நீங்கதான் சார் அவளை வழிக்குக் கொண்டு வரனும். கொண்டு வந்தே ஆகனும்!” பாரத்தைப் போட்டார்.

“இவ்வளவுதானே! சரி விடு. நான் கவனிச்சுக்கிறேன்!” அவர் ரொம்ப சுலபமாக சொல்லி தொலை பேசியை அணைத்தார்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *