புயலில் சிக்கிய பூக்கள்..!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 9, 2026
பார்வையிட்டோர்: 6,558 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் – 7

வீட்டிற்கு வந்த சிம்ரன் மெல்ல அம்மாவிடமும் அப்பாவிடமும் விசயத்தை உடைத்தாள்.

“அடிப்பாவி! ஆபத்தைக் கொண்டு வந்துட்டியே!” – தனவள்ளி அலறினாள்.

“வழியே இல்லே. வீட்டைக் காலி பண்ணிட்டு எங்கேயாவது கண்காணாம வெளியூ ர் போக வேண்டியதுதான். கூடாது. அடிச்சுவிட்ட பாம்பு மாதிரி எங்கே போனாலும் துரத்துவான். பாஸ்போர்ட் இருக்கு வெளிநாடு போயிட வேண்டியதுதான்.” தர்மலிங்கம் இப்படியும் அப்படியும் தலையாட்டி தீர்மானமாக சொன்னார்.

“என்னப்பா சொல்றீங்க?”. சிம்ரன் அதிர்ச்சியாக அவரைப் பார்த்தாள்.

“பின்னே! நீ பண்ணின காரியத்துக்கு வழி இதுதான். அன்னையக் கதை அன்னையோட போச்சு. அதுக்கப்புறம் அவனால உனக்கு தொந்தரவு உண்டா?…இல்லை. இப்போ நீயா அவனைத் தொட்டு ஏன் புதுப்பிரச்சனைக் கிளப்பினே? அடிபட்டவன் ஆம்பளை. அதுவும் பேட்டை ரௌடி. சும்மா சும்மா இருப்பானா. இருக்கமாட்டான். அவன் எல்லாத்தையும் விட்ட முரடன். போலிஸ் ஜெயிலெல்லாம் பார்த்து சலிச்சவன். நாளைக்கு வீடு புகுந்து கொலை செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்? செய்வான். குடும்பத்தையேக் கொல்லுவான். யார் வந்து தடுக்கமுடியும்?!” – குதியாய்க் குதித்தார்.

“ஒரே பொண்ணுன்னு உனக்கு செல்லம் குடுத்து வளர்த்தது தப்பாப் போச்சு. விடு. நீ இப்படி செய்யப்போறேன்னு என்கிட்ட சொல்லி இருந்தாலாவது நல்லது கெட்டது யோசிச்சு உன் மனம் சாந்தி அடையிறா போல ஏதாவது செய்ய முடியும். சிறுபுள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது போல எடுத்தேன் கவிழ்த்தேன்னு பின் விளைவுகளை யோசிக்காம முடிச்சுட்டே. நாளைக்கு அவன் கோஷ்டியே நம்மைச் சுத்தினான்னா சமாளிக்க முடியாது.” – அவர் பாட்டுக்குப் பொரிந்தார்.

உண்மையில் இளங்கன்று பயமறியாதுதான். இதைப் பற்றி இவளும் யோசிக்க வில்லை. தோழிகளும் பேசவில்லை. ஹாக்கி மட்டையால நாலு பேர் சேர்ந்துஅடித்தால் எவன் என்னடி பண்ண முடியுமென்று என்று அவர்கள் ஆத்திரத்தைதான் நினைத்தார்களேத் தவிர பின் விளைவுகளை யோசிக்க வில்லை. மூச்சுவிட முடியாம அடிக்கனும். கொஞ்சம்கூட தளரக்கூடாது இதையேத்தான் அவர்களுக்குள் வலியுருத்தி பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இப்போ என்னங்க பண்றது?” தனவள்ளி கையைப் பிசைந்தாள். கண்களில் கலக்கம் தெரிந்தது.

”நான் சொன்ன வழிதான். வேற கெடையாது!” – அவர் முகம் இன்னும் இறுக்கம் விடாமல் சொன்னார்.

“வேற வழி?”

“இவ இனி கல்லுாரிக்குப் போக முடியாது. போக முடியாது”. தீர்மானமாக சொன்னார்.

“ஏங்க?”

தனவள்ளி அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“முன்ன மாதிரி வழி மறைச்சி இவளைத் துாக்கிப் போய் கொன்னே போடுவான்!”

“ஐயோ…ஓ!”

அவளுக்கு அடிவயிற்றில் அமிலம் சுரந்து, அழுகை முட்டியது.

‘ஆசை ஆசையாய் வளர்த்த ஒரே பெண். ஏற்கனவே இடி. வெளியில் எவனுக்குத் தெரிந்தாலும் கட்டமாட்டான். வீண் வம்பை விலைக்கு வாங்கி வந்துட்டியேடீ!’ – இழுத்து வைத்து முதுகில் சாத்த வேண்டும் போல் தோன்றியது.

சிம்ரனக்கும் பின் விளைவுகள் தெரிய கிலி பிடித்தது. வயிற்றைக் கலக்கியது, வருத்தம் கலக்கம் சங்கடமாக தகப்பனைப் பார்த்தாள்.

“இப்போ வருத்தப் பட்டு என்ன பிரயோசனம்?” என்று மகளை முறைத்த தர்மலிங்கம், “உன்னால அந்தப் பொண்ணுங்களுக்கும் வேற ஆபத்து.” – முணுமுணுத்தார்.

அதை நினைத்தும் சிம்ரனக்குக் கலக்கமாக இருந்தது, ‘அவர்களும் வீட்டில் சொல்லி வைத்தால் அங்யேயும் இதேநிலையா?’ – அடிக்கண்ணால் தொலைபேசியைப் பார்த்தாள்.

“உங்கள்ல எவளுக்கும் புத்தி இல்லியா?” – தர்மலிங்கம் முறைத்தார்.

சிம்ரன் அழும் நிலைக்குப் போனாள். பார்த்த தனவள்ளிக்கு தாய்ப் பாசம் பொங்கியது.

“அவளைக் கரிச்சுக் கொட்டினது போதும். நடந்தது நடந்து போச்சு. வர்றதை நாம சமாளிச்சுதான் ஆகனும். இனி பேசி பிரயோசனமில்லே. இப்போ ஏதாவது செய்யுங்க?” என்று கெஞ்சிய தனவள்ளி கணவர் காலைப் பிடிக்காத குறையாய் கையைப் பிடித்தாள்.

தர்மலிங்கமும் கோபத்தை உதறி நடைமுறைக்கு வந்தார். யோசனையிலிறங்கினார். சுலைமானால் ஏற்படும் விளைவுகளை நினைத்துப் பார்க்க நடுக்கமாய் இருந்தது, தன் நடுக்கம் தெரிந்தால் தாயும் மகளும் இன்னும் மிரண்டு அரண்டு விடுவார்கள். என்று உணர்ந்த அவர் அதை வெளிக்காட்டாமல் மறைத்தார்.

“போலிசுக்குப் போகலாமாங்க“

தனவள்ளி தனக்குள் ஏற்பட்ட யோசனையைக் கணவரிடம் பயத்துடன் சொன்னாள்.

“போகலாம். அடிச்சவன் முதல் குற்றவாளி. சிம்ரனைப் புடிச்சி மொதல்ல ஜெயில்ல வைப்பான். சம்மதமா?” – போலிஸ் நடைமுறை தெரிந்தவர் கேட்டார்.

“என்கிட்ட தகராறு செய்தான். அடிச்சிட்டேன். ரௌடி என்ன செய்வானோன்னு பயமா இருக்கு. உசுருக்கு உத்திரவாதம் வேணும் பாதுகாப்பு கொடுங்கன்னு கேட்கலாம்ப்பா.”

கொஞ்ச நேரம் அவள் சொன்னதை அசைப் போட்டதைப் போல் மௌனமாய் இருந்த தர்மலிங்கம். “செய்யலாம். நல்ல யோசனை. ஆனா போலிசு அவன் மேல் சரியான முறையில நடவடிக்கை எடுக்கும்ன்னு சொல்ல முடியாது, அப்புடியே எடுத்தாலும் அவனைச் சுத்தியுள்ள கூட்டம் சும்மா இருக்காது. நம்ம தலைவர் மேல கைவைச்சுட்டாங்க. மொதல்ல யார் காரணமோ அவுங்களைப் போட்டுத் தள்ளுவோம்ன்னு நம்மை துவசம் கட்டுவாங்க.” – நிறுத்தினார்.

‘நம்பளைக் காப்பாத்திக்க வேற வழியே இல்லியா?” – தனவள்ளி அழுதே விட்டாள்.

“பொறு. யோசிப்போம்.“ – தர்மலிங்கம் மனைவியைச் சமாதானப்படுத்தினார்.

“எது செய்ஞ்சாலும் சீக்கிரம் செய்யுங்க. அது நமக்கு நல்லது,” – அவள் புடவை முந்தானையை எடுத்து கண்களைத் துடைத்தாள்.

சிம்ரனுக்குத் தொலைபேசியில் தோழிகளுடன் தொடர்பு கொண்டு எச்சரிக்கவும் அவரவர்கள் வீட்டில் என்ன பிரச்சனை என்று கேட்க எண்ணம் வந்தது. கேட்டால் அப்பா பாய்வாரோ என்று பயமாகவும் இருந்தது,

வெகு நேரம் அப்படியும் இப்படியும் அலைந்து நடந்து யோசனை செய்த தர்மலிங்கத்திற்கு திடீரென்று எம்.எல்.ஏ அனந்தராமன் நினைவிற்கு வந்தார். இருவரும் சிறுவயதிலேயே நண்பர்கள். ‘டா’ போட்டு பேசிக் கொள்ளும் அளவிற்கு நெருக்கம்.

உடனே தொலைபேசியைத் தொட்டார். எம். எல். ஏவே எடுத்தார்.

தர்மலிங்கம் விசயத்தைச் சொன்னார்

“இது ரொம்ப சாதாரண விசயம். அதுக்கென்ன பார்த்துக்கலாம்.” – என்றார் அவர்.

“இல்லைடா. தற்போதைக்கு எங்களுக்குப் பாதுகாப்பு வேணும். எந்த நேரதத்துல எதுவும் நடக்கலாம். அதனால சீக்கிரம் வேணும்.”

“கவலையை விடு. இப்பவே அந்த ஏரியா சப்- இன்ஸ்பெக்டர்கிட்ட பேசி என்ன நிலைமை. எப்படி செய்யலாம்ன்னு ஆலோசனை செய்யிறேன். நீ இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி போன் பண்ணு.” – அவர் போனைத் துண்டித்தார்.

அத்தியாயம் – 8

தர்மலிங்கம் ஹாலில் அங்கேயும் இங்கேயும் நடந்தார். அனந்தராமன் பாதுகாப்பு கொடுப்பானா?!யோசனையாக இருந்தது. என்னதான் நண்பனாய் இருந்தாலும் நடுவில் புகுந்து அரசியல் ஆதாயம் தேட ஏதாவது செய்தால்? கூடவே பயமும் வந்தது.

‘என்ன பெண்! இப்படி செய்து வாழ்வா சாவா நிற்கதிக்குக் கொண்டு வந்துவிட்டாள்!’. மகளை நினைக்க எரிச்சலாக இருந்தது,

“என்னங்க போன் செய்தீங்களா?” – அடுப்படிக்குச் சென்ற தனவள்ளி நிம்மதி இல்லாமல் வெளியே வந்தாள்.

தர்மலிங்கம் மீண்டும் அனந்தராமனுக்கு போன் செய்தார். அவர் எவரிடமோ பேசிக் கொண்டிருந்தார்போல. இணைப்புக் கிடைக்கவில்லை. வைத்தார்.

சிறிது நேரம் கழித்து மறுபடியும் முயற்சி செய்தார்.

கிடைத்தார்.

“என்னப்பா செய்ஞ்சே?” – அவர் அவரை எடுத்ததுமே கேட்டார்.

“டெல்லியில அமைச்சர் ஒருத்தரோட பேசிக்கிட்டிருந்தேன்.”

“சரி. நான் சொன்ன விசயம் என்னாச்சு?”

“நல்லது நடக்கும்!”

“புரியலை?”

“உள்ளே தள்ள ஏற்பாடு பண்ணிட்டேன்!”

“எப்புடி?!” – தர்மலிங்கத்திற்கு ஆச்சரியமாக இருந்தது.

“அவனுங்களைப் புடிக்கக் காரணமா வேணும்!? நாளைக்கு மத்திய அமைச்சர் ஒருத்தர் அரசியல் பேச இங்கே வர்றார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் சில பேர்களைக் கைது பண்ணுவோம். அதுல இவனையும் இவன் கோஷ்டி பத்துப்பேரையும் சேர்த்து கைது பண்றது சுலபம். நாளைக்கு அமைச்சர் வர்றார்ன்னு நிச்சயம் பண்ணிக்கத்தான் உனக்காக அவரோட பேசினேன்” – என்றார்.

‘தன் நண்பன் தனக்காக எவ்வளவு அக்கறை துரிதமாக செயல் பட்டிருக்கான் அவனைப் போய் சந்தேகப் பட்டோமே!‘ – தர்மலிங்கத்திற்கு நினைக்க வருத்தம் வந்தது.

“என்னப்பா பேச்சைக் காணோம்?” – எதிர் முனையில் அனந்தராமன் கேட்டார்.

“ஓ…ஒன்னுமில்லே. எத்தினி நாளைக்கு அவனை உள்ளே புடிச்சி வைப்பீங்க?”

“அமைச்சர் இங்கே ரெண்டு நாள் தங்கறார். மூனு நாள் போடலாம்.”

தர்மலிங்கத்திற்கு கொஞ்சம் நிம்மதி மூச்சு வந்தது, “அதுக்கு மேலே?“

“நீதான் தற்காப்புக்கு ஏதாவது நிரந்தர ஏற்பாடு செய்துக்கனும்!”

தர்மலிங்கத்திற்குச் சொரக்கென்றது.

“பொண்ணுங்களைக் கலாட்டா பண்ணினது, அசிங்கமா பேசினது, அப்புடி இப்புடின்னு பொய்யாய் ஏதாவது ஜோடிச்சு நிரந்தரமா செயிலுக்கு அனுப்ப ஏற்பாடு பண்ண முடியாதா?” கேட்டார்.

“முடியும். ஆனா அவனுக்கும் எதிர் கட்சியில ஒரு எம்.எல்.ஏ இருக்கார். அவரும் தலையிட்டார்ன்னா அது அரசியல் பகையாய் மாறி எனக்குப் பாதகமா கட்சிக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்தற நிலைமை வரும். அடுத்து நானும் ரௌடிங்களை அதிகம் பகைச்சிக்க முடியாது. எனக்கும் பொண்டாட்டி புள்ளைங்க இருக்கு. உயிர் மேல ஆசை உண்டு.” – தன் நிலையை வெளிப்படையாய் பக்குவமாய்ச் சொன்னார்.

தர்மலிங்கத்திற்கும் நண்பன் சொல்வதில் நியாயம் தெரிந்தது. நம் பெண் செய்த தப்பிற்கு அடுத்தவர்களை வருத்துதிலோ நெருக்குவதிலோ பயனில்லை. தெளிந்தார்.

“சரி அனந்தம். நீ இப்பவே சுலைமானைப் புடிச்சி உள்ளாற தள்றதுக்கு ஏற்பாடு பண்ணு. ரெண்டு மூணு நாளையில நான் வேற வழி பார்க்கிறேன“ – சொல்லி போனை வைத்தார்.

அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த தனவள்ளிக்கும் சிம்ரனுக்கும் கொஞ்சம் நிம்மதி மூச்சு வந்தது,

சிம்ரனுக்குத் தோழிகளைச் சந்தித்து விசயம் சொல்ல ஆசை. “நான் நாளைக்கு கல்லுாரிக்குப் போகலாமாப்பா?” – கேட்டாள்.

“போகாம இருக்கிறது நல்லது. போனாலும் ஆபத்தில்லே.”

“என்னங்க அவளைப் போகச் சொல்லி வீண் வம்பை விலைக்கு வாங்குறீங்க?”

“என்னடி?”

“அவளுக்கு சுலைமான் மட்டும் எதிரி இல்லே. அவன் கூட்டாளிங்ககிட்டேயும் போட்டு விட்டிருந்தான்னா அவனுங்களும் எதிரி. எவனாவது ஒருத்தன் வழி மறைச்சு இவளைத் தூக்கிப் போயிடுவான்!” – படபடப்பாக சொன்னாள்.

“அனந்தம் இப்போ அவனுங்களைக் கூண்டோட வளைக்க ஏற்பாடு செய்ஞ்சிருப்பாரு”.

“அப்படி செய்யலைன்னா?”

“எல்லாத்திலேயும் சந்தேகம் கூடாது வள்ளி. என் நண்பன் உடனே டெல்லி வரைக்கும் போன் பண்ணி ரொம்ப பிரயாசைப் பட்டிருக்கான். அதனால அவன் மேல நம்பிக்கை வைக்கிறேன்.“

“நான் ஒன்னும் தப்பா சொல்லலை. கொஞ்சம் காலதாமதமானாலும் சரி. எல்லாரையும் கைது செய்ய முடியாம இரண்டொருத்தனை விட்டிருந்தாலும் ஆபத்து.”

“நானும் உன்னைத் தப்பா சொல்லலை. எதிலும் சந்தேகம் கூடாது, கொஞ்சம் நம்பிக்கை வேணும்ன்னு சொன்னேன். நம்ம மக என்னவோ முன்பின் யோசிக்காம பெரிய புரட்சி செய்யிறதா நெனைச்சி நம்மையும் சேர்த்து இக்கட்டுல மாட்டி விட்டுட்டா. தப்பிக்க ஏதாவது ஒரு வழியில நம்பிக்கை வைச்சு போகனுமேத் தவிர சந்தேகம் கூடாது. ஆபத்துல மாட்டிக்காம. கூடுமான வரை நாமும் ஜாக்கிரதையாய் இருப்போம். அதையும் மீறி நடக்கிறது விதி. என்றவர் மகளைப் பார்த்து நீ கல்லுாரிக்குப் போறதைப் பத்தி என்கு ஆட்சேபனை இல்லே. எந்த நிமிசமும் ஆபத்து உன் தலைமேலே இருக்கிறதுங்குறதை உணர்ந்து விழிப்பா இருக்கனும் நடக்கனும். எந்த இடத்திலேயும் உன்னை எவனாவது பின் தொடர்றது போல தெரிஞ்சா சட்டுன்னு உஷாராயிடு. கண்காணிக்கிறபோல இருந்தாலும் ஜாக்கிரதையாகிடு. நெஞ்சுல தைரியம் வைச்சு உன்னை உன்னைப் பாதுகாத்துக்க முடியும்ங்குற தெம்பு துணிச்சல் நம்பிக்கை இருந்தா தாராளமா போய் வா” என்றார்.

சிம்ரனுக்குக் காதில் தேன் பாய்கிற போல இருந்தது.

“சரிப்பா” – தலையசைத்தாள்.

“என்ன சரிப்பா?” – தர்மலிங்கம் அவளைப் புரியாமல் பார்த்தார்.

“நாளைக்கு நான் எப்போதும் போல கல்லுாரிக்குப் போறேன்!” – என்றாள்.

பெண்ணை பயமுறுத்தி பொத்தி வைக்காமல் பெற்ற தகப்பனே அவளுக்குத் துணிச்சல் கொடுத்து அனுப்பி வைக்கிறாரே! – தனவள்ளிக்கு அடியிற்றைக் கலக்கியது.

அத்தியாயம் – 9

“நாளைக்கு மத்திய அமைச்சர் வர்ற நேரம் எதிர் கட்சியால நமக்கு பிரச்சனை வரும் போலிருக்கு. ஏகாம்பரம்- சுலைமான் கோஷ்டி நீ பெரியவனா நான் பெரியவனாங்குறதைக் காட்ட எந்த நேரமும் அடிச்சுக்க தயாரா இருக்காங்க போல தெரியுது. வர்ற அமைச்சருக்குப் பாதுகாப்பு கொடுக்கத்தான் நம் போலிசுகாரங்க வேலையாய் இருக்கும். அசந்த நேரம் பார்த்து இவனுங்க அடிச்சிக்கிட்டானுங்கன்னா தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங்கு சரியா இல்லேங்குற குறை அமைச்சர் மனசுல ஏற்படும். இது சரி இல்லே. ஆபத்து ” – என்று அனந்தராமன் முதலமைச்சர் காதில் போட்டார்

“என்ன செய்யனும்ங்குறீங்க?” – முதலமைச்சர் தன் மூக்குக் கண்ணாடியைத் துடைத்து இவரைப் பார்த்தார்.

“ரெண்டு கோஷ்டியிலேயும் கிடைச்சவனுங்களைப் புடிச்சி உள்ளாற போட்டா நமக்கு நிம்மதி. ஆட்சிக்கு ஆபத்து கெட்ட பேரில்லே.” – ஆட்சி ஆட்டம் என்கிற கடைசி அஸ்திரத்தை எடுத்து விட்டார்.

அந்த ராம் பானத்திற்கு நல்ல பலன் இருந்தது. முதலமைச்சர் உடனே உள் துறை அமைச்சரை அழைத்தார்.

அவர்களெல்லாம் தலையாட்டிப் பொம்மைகள். வெற்றுத் தாட்களில் கையெழுத்து வாங்கப்பட்டு தன்னுடைய பதவி எந்த நேரமும் பறிக்கப்படுவதை நினைத்து நித்திய கண்டம் பூரண ஆயுசாக இருப்பவர்கள்.

பாதுகாப்பு சட்டத்தின் சட்டத்தின் கீழ் கீழ் முக்கியமாய் இரண்டு கோஷ்டி தலைகள் அடுத்து கிடைத்தவர்களையெல்லாம் பிடித்து உள்ளே போட உத்தரவிட்டார்.

ஒரு மணி நேரத்தில் ஆணை பிறந்தது.

ஆளும் கட்சிக்கு ஆட வேண்டிய கட்டாயம். போலிஸ்காரர்கள் சம்பந்தப் பட்டவர்கள் கதவைத் தட்டி ஓடியவர்களை விரட்டிப் பிடித்து ஒரு மணி நேரத்தில் காரியத்தைக் கச்சிதாமாக முடித்தார்கள் பத்திரிக்கையாளர்கள் மோப்பம் பிடித்து அதை பத்திரிக்கையிலும் ஏற்றினார்கள்.

காலையில் பத்திரிக்கையைப் புரட்டிய தர்மலிங்கத்திற்கு சேதி இனிப்பாய் இருந்தது.

“நான் சொன்னதை மனசுல வைச்சிக்கிட்டு நீ தைரியமா கல்லுாரிக்குப் போம்மா.” – மகளுக்கு உத்தரவிட்டார். சிம்ரன் புறப்பட்டுச் சென்றாள்.

கல்லுாரியில் ஜோதிகா, மாலா, மீனா, சுபாஷிணியைப் பார்த்ததும் இவளுக்குள் ஆனந்தம் பொங்கி வழிந்தது,

உடனே அவர்களைத் தனியே தள்ளிக் கொண்டு வந்து, “உங்க வீட்டுல ஏதாவது பிரச்சனையா?” – விசாரித்தாள்.

“ஒன்னும் கெடையாது. நாங்க வாயைத் திறக்கலை. காலையில அவன் அடிவாங்கினதைப் பத்திதான் பேருந்துல ஜாலியா பேசி அரட்டை அடிச்சிக்கிட்டு வந்தோம்” – சுபாஷிணி உற்சாகமாக சொன்னாள்.

“சத்தம் போட்டு பேசினீங்களா?“

“ஆமாம். ஏன்?”

“இனிமே அதைப் பத்தி வாயைத் திறக்காதீங்க.”

“காரணம்?“

“ஆபத்துடி!” – என்று எச்சரித்த சிம்ரன் தன் வீட்டில் நடந்த அனைத்தையும் சொன்னாள்.

கேட்ட அனைவர் முகத்திலும் திகில் பரவியது. மாலாவிற்கு மட்டும் அந்த பயம் இல்லை.

“அடி போங்கடி. நாம தப்பிக்க வழி இருக்கு” – சொன்னாள்.

“எப்புடிடீ ?” – சுபாஷிணி கேட்க ஆளாளுக்கு அவளை ஆச்சரியமாய் பார்த்தார்கள்.

“எதிர் கோஷ்டி ஏகாம்பரம் எதுக்கு இருக்கான்?! அவன்கிட்ட நாம கால்ல விழுந்து பாதுகாப்பு குடுடான்னா குடுக்கப் போறான்!”

“அவன் ரௌடிடீ” – மீனா நடுங்கினாள்.

“இருக்கட்டுமே! அஞ்சு பேரா போனா ஒன்னும் கடிச்சு தின்னமாட்டான்.”

“உதவி செய்யறேன். நாளைக்கு வா நாளைக்கு வான்னு ஒவ்வொருத்தியாய் அழைச்சான்னா?”

“கற்பனையைக் கன்னா பின்னான்னு ஓட்டாதீங்க. அவன் பெண்கள் சமாச்சாரத்துல யோக்கியம்!”

“உனக்கெப்புடிடீ தெரியும்?”

“நீங்கல்லாம் தினசரியில என்ன படிச்சு கிழிக்கிறீங்கன்னு தெரியலை. முதல் கோஷ்டி தகராறு எப்புடி வந்துதுன்னு அதுல விலாவாரியா எழுதி இருந்தான். சுலைமானும் ஏகாம்பரம் கோஷ்டிதான். பெண்கள் விசயத்துல ஏகாம்பரம் ரொம்ப யோக்கியம் கட்டுப்பாடு கடுமையாய் இருந்ததுனால சுலைமானக்கு ஒத்து வராம பிரிஞ்சுட்டாங்கன்னு எழுதியிருந்தாங்க.” என்றாள்.

‘கல்லுாரி நுாலகத்தில் அமர்ந்து வெறும் கதைகளைப் படித்துத் திரும்பாமல் செய்திகளையெல்லாம் எவ்வளவு உன்னிப்பாக படித்து தெரிந்திருக்கிறாள்!?’ – அனைவருக்கும் வியப்பாய் இருந்தது.

“இது எந்த அளவுக்கு உண்மை?” மீனா தன் சந்தேகத்தை எழுப்பினாள்.

“அப்புறம் பத்திரிக்கையில வர்ற சேதியெல்லாம் பொய் கற்பனைன்னு சொல்வீங்க. அது மாதிரி எல்லாம் கற்பனைன்னா எந்த பத்திரிக்கையுயம் விற்காது.” – மாலா தீர்மானமாக சொன்னாள். எல்லோரும் மௌனமாய் இருந்தார்கள்.

“நமக்கு நிரந்தர பாதுகாப்பு வேணும்ன்னா ஏகாம்பரம்தான் சரியான ஆள். நம்ப அஞ்சு பேரையும் அவனாலதான் காப்பாத்த முடியும். நம்ம எதிரிக்கு எதிரி. பலசாலி.”

“எதிரியும் எதிரியும் சேர்ந்து நம்மளைக் கவுத்துட்டாங்கன்னா?” – மீனா சொல்லி வாய் மூடவில்லை….

“போடி இவளே!” – என்று மாலா அவளைச் செல்லமாக நாக்கைத் துருத்திக் கொண்டு அடிக்க வந்தாள். அவள் லாவகமாக விலகினாள்.

“இந்த நல்ல யோசனையை மொதல்ல என் அப்பாக்கிட்ட சொல்லனும்.” – சிம்ரன் துடித்தாள்.

“ஏன் சொல்லனும்?” – ஜோதிகா கேள்வி கேட்டாள்.

“அவராலதான் நாம் இப்போ நிம்மதியா பேசிக்கிட்டிருக்கோம்.”

“சொல்லிட்டாப் போகுது.” – மாலா சம்மதம் தெரிவித்தாள்.

“அவரும் ஏதாவது ஐடியா குடுப்பார்!” – ஜோதிகா சொன்னாள்.

“அவருக்குப் பிடிக்கலை. இதுனால ஆபத்துன்னு மறுத்தார்ன்னா?” – வழக்கம்போல் மீனா சந்தேகத்தை எழுப்பினாள்.

“அவர்கிட்டேயே யோசனைக் கேட்போம். சரியாய் இருந்தா ஏத்துப்போம். நமக்கு எந்த வழியிலாவது கொழுக்கட்டை வேகனும். வெந்தா சரி.”

“உனக்கு ஏகாம்பரம் இருக்கிற இடம் தெரியுமா மாலா?“ – ஜோதிகா கேட்டாள்.

“தெரியாது !”

“எப்படி கண்டுபிடிக்கிறது?”

“அவன் ஏரியாப் பக்கம் போய் பேரைச் சொன்னா பயந்துக்கிட்டு சொல்லிடப் போறாங்க.”

“அவன் ஏரியா எது?”

“அவன் கைதுன்னு இன்னைய தினசரியில சேதி வந்திருக்கும். படிச்சா தெரியும்!”

என்னவோ முன் யோசனைப் போல எல்லாவற்றிற்கும் டக் டக்கென்று பதில் சொல்கிறாளே! – ஜோதிகாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

“உனக்கு எப்புடிடீ இப்படியெல்லாம் மூளை வேலை செய்யுது?” – கேட்டாள்.

“இன்னைக்கு வெண்டைக்காய் சாப்பிட்டதின் விளைவு.” – அவள் கெத்தாக சொன்னாள்.

“நிஜமாடீ!” – மீனா அப்பாவியாக கேட்டாள். அனைவரும் சிரித்தார்கள்.

“நான் இப்பவே அப்பாகிட்ட சேதி சொல்றேன்!“- சிம்ரன் எழுந்தாள்.

“கல்லுாரி?”

‘விடுப்பு!” – சொல்லி வேகமாக நடந்தாள்.

“ஏய்! நாங்களும் வர்றோம்” – மற்றவர்களும் அவளைத் தொடர்ந்தார்கள்.

பின்னால் வந்த மீனா “எதுக்குடி இவ்வளவு அவசரம்?” – கேட்டாள்.

“நாம தாமதிக்கிற ஒவ்வொரு விநாடியும் எதிரிக்குச் சாதகம். நம்மை நெருங்கறான்” – சொல்லி சிம்ரன் இன்னும் நடையை எட்டிப் போட்டாள்.

மீனாவிற்கு நெஞ்சுக் கூட்டில் பயம் பந்தாக உருண்டது.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *