பிணைப்பு
கதையாசிரியர்: நீர்வை பொன்னையன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 24, 2026
பார்வையிட்டோர்: 50
(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆரம்பத்தில் அந்த அம்மாமீது எங்களுக்கு வெறுப்பு.
எங்களுக்குப் பின்முன் தெரியாத அந்த அம்மா ஒரு நோயாளி.
ஒரு கையும் காலும் செயலிழந்த அம்மாவால் நடமாடமுடியாது. படுத்த படுக்கையாய் கிடப்பு.
குளிப்பு, முழுக்கு, வலசலம் போவது எல்லாமே எங்களுக்குப் பெரும் பிரச்சனை. எங்கள் மடத்தி லுள்ள சிற்றூழியருக்கும்.
ஒரு நாளா? இரண்டுநாளா? மாதக் கணக்கில் அந்த அம்மாவைப் பரா மரிப்பது எங்கள் சிற்றூாழியர் களுக்கு பெரும் தொல்லையா யிருந்தது ஆரம்பத்தில் போகப் போக அந்த நோயாளி அம்மாவிற்கு சேவை செய்வது எமது கடமை என்று உணர்ந்து சேவை செய்து வருகின்றோம். சேவையல்ல அது எங்கள் கடமை என்று சேவையாற்றி வருகின்றார்கள் எமது சிற்றுாழியர்கள்.
அந்த அம்மாவின் சுபாவமும், அவரது நன்றி உணர்வும், அவர் எம்மீது காட்டும் அன்பும், பாசமும் எம்மை அவர்மேல் நெருக்கமான பந்த பாசத்தையும், ஆழமான பரிவையும் எமக்கு ஏற்படுத்திவிட்டது. அது மாத்திரமல்ல அந்த அம்மா எங்களில் ஒருவர் என்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது.
யோகம்மா என்ற அந்த நோயாளிக்கு ஒரேயொரு மகள். தன் மகளுக்கு கொழும்பில் ஒரு பெரிய வீட்டை தனது பெறுமதிமிக்க நல்லுாரிலுள்ள வீடுவளவு விற்ற பணத்தைக்கொண்டு, கொள்வனவு செய்து நன்கொடையாகக் கொடுத்தள்ளார். வீடுமாத்திரமல்ல, ஒரு பெரிய மோட்டார் வாகனத்தையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அதுமாத்திரமல்ல அந்த வீட்டுக்குத் தேவையான விலையுயர்ந்த ‘செற்றி’, மேசை கதிரைகள். கட்டில்கள், மெத்தைகள் போன்றவற்றையும் கொள்வனவு செய்து கொடுத்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த ஐந்து வருடங்களாக உணவு தயாரிக்கும் சமையல் வேலையையும், வீடு,வளவைக் கூட்டி சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பையும் தானே ஏற்று நிறைவேற்றி வருகின்றா.
யோகம்மாவின் கணவர் ஒரு பெரிய தொழிலதிபர். வெளிநாடு களிலிருந்து ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களில் முதன்மையானவர். தொழில்துறையில் மாத்திரமல்ல அரசியல் அரங்கிலும் அவருக்கப் பெரும் செல்வாக்கு.
யோகம்மா பரம்பரைப் பணக்காரரான சிற்றம்பலத்தாரின் அன்பு மனைவி. ஒரு கீழ் மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்தவள் யோகம். அவளுக்கு இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உடன் பிறப்புக்கள். வீட்டு நிர்வாகத்தை யோகம் பொறுப்பேற்று திறமையாக நடத்தி வருகின்றாள்.
சிற்றம்பலத்தார் யோகத்தின் தகப்பனாருடன் நெருங்கிய நண்பர். அடிக்கடி யோகத்தின் தகப்பனாரைச் சந்திக்க அவளுடைய வீட்டக்குச் செல்வார். யோகத்தின் அழகும் அவளின் பொறுப்புணர்வுள்ள செயற்பாடுகளும் சிற்றம்பலத்தாரை பெரிதும் கவர்ந்தது.
எதுவித சீதனபாதனமில்லாமல் சிற்றம்பலத்தார் தன் நெருங்கிய நண்பனின் மகள் யோகத்தைக் கல்யாணம் கட்டினார்.
சிற்றம்பலத்தார் யோகத்தைக் கல்யாணம் கட்டிக் குறுகிய காலத்தில் அவரது செல்வம் உச்சத்துக்குப் பெருகியது. யோகம் சிற்றம்பலத்தாருக்கு கிடைத்த யோகம். வீட்டு நிர்வாகத்தைப் பொறுப்பேற்று திறம்பட நடத்தியும், சிற்றம்பலத்தாரின் பாசமிகு மனைவியாகவுமிருந்து வந்தாள்.
சிற்றம்பலத்திற்கும் யோகத்திற்கும் ஏக புத்திரி செல்வநிதி.
செல்வநிதி பிறந்து ஐந்து வருடங்களில் சிற்றம்பலத்தார் மாரடைப்பால் இறந்துவிட்டார்.
யோகம்மா செல்வநிதியை பாசத்துடன் வளர்த்து, பெரிய இடத்தில் கல்யாணம் கட்டி வைத்தாள்.
தொழில்நிமித்தம் யோகத்தின் கணவர் கொழும்பு வெள்ளவத்தையில் ஒரு பெரிய நிலத்துடன் வீட்டை பெரும்தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்து கொடுத்தார். மேலும் கடந்த ஏழுவருடங்களாக செல்வநிதியின் வீட்டு நிர்வாகத்தையும் திறம்பட நடாத்தி வந்தாள்.
யாழ்ப்பாணம் நல்லுாரிலுள்ள யோகத்தின் சொத்தை,சிற்றம்பலத்தாரின் தம்பியார் பொறுப்பேற்று நிர்வகித்து வந்தார். யோகம்மாவிற்கு திடீரென உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு ஒரு கையும் காலும் உணர்வற்று செயலிழந்து போயிற்று. யோகம்மா மூன்று மாதங்களாய்ப் படுத்தபடுக்கை.
செல்வநிதிக்கு தாயார் யோகம்மா பெரும் சுமையாகிவிட்டார் என்ற உணர்வு மேலோங்கியது.
யோகம்மாவை அவளது மகளும் கணவரும் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு நேத்திக்கடன் நிறைவேற்றப் போவதாகக்கூறி அழைத்துச் செல்கின்றனர்.
அன்று இரவு திருக்கேதீஸ்வர ஆலயச்சூழலில் உள்ள ஒரு மடத்தில் இரவு தங்குகின்றனர். அடுத்தநாள் காலை நேர்த்திக்கடன் நிறைவேற்று வததற்கான ஏற்பாடுகளைச் செய்யப்போவதாக யோகத்திடம் கூறிவிட்டு புறப்பட்டனர்.
அவர்கள் புறப்பட்டது புறப்பட்டதுதான். திரும்பவேயில்லை. புறப்பட்ட அன்றும் மடத்திற்கு திரும்பிவரவில்லை, அடுத்தநாளும் வரவில்லை.
மடத்து நிர்வாகிகள் யோகத்தின் மகளுடன் தொடர்பு கொள்ள முயற் சித்தனர். அவர்களது முயற்சியில் எதுவித பயனும் கிடைக்கவில்லை. காரணம் அவர்கள் கொடுத்த கொழும்பு முகவரியும், தொலைபேசி எண்ணும் போலியானவை.
நாட்கள் மாதங்களாகியும், மாதங்கள் வருடங்களாகியும் யோகம்மாவின் மகளும் அவருடைய கணவரும் மடத்திற்கு திரும்பி வரவேயில்லை.
யோகம்மாவைப் பராமரிப்பது மடத்தின் நிர்வாத்திற்கு பெரும் சிரமமா யிருந்தது. குளிப்பு, முழுக்கு, உடைமாற்றுவது, உணவு கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்வதற்கு ஒரு பெண் ஊழியரை ஈடுபடுத்த வேண்டியிருந்தது மடத்தினருக்கு.
யோகம் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் அவளிடம் உதவிகேட்டு வந்த எவரையும் வெறும் கையுடன் அனுப்பியிருக்கமாட்டாள். உதவி கேட்டு வந்த ஏழைகளுக்கு உணவு, உடை, பணம்கூட கொடுத்தனுப்புவாள். எவருக்கும் அவள் இல்லை என்று சொன்னது கிடையாது.
யோகம்மாவிடம் ஏராளமான நிலபுலங்கள், சொத்துப்பத்து, நகைநட்டு இருந்தது. வங்கியில் பெரும்தொகைப் பணத்தையும் வைப்பிலிட்டு இருந்தாள்.
தன்னிடமிருந்த சொத்தில் அரைவாசியையும் பணத்தையும் தனது ஏக புத்திரிக்குக் கொடுத்துவிட்டாள். மிகுதியை தனக்குப்பின் தன் மகளுக்குச் சேரும்வகையில் ஏற்பாடு செய்திருந்தாள்.
யோகம் தன் மகளுடன் சென்றபின்னர், அவளது கணவனின் சொந்தத் தம்பி மோசடி செய்து கள்ள உறுதி எழுதி, யோகத்தின் நிலபுலம் காணிபூமி அனைத்தையும் அபகரித்தது எவருக்கும் தெரியாது.
இன்று யோகம்மா வெற்றுக் கையுடன். சொத்துக்கள் அனைத்தையும் இழந்தாலும், அன்பு, பரிவு, பாசம் என்ற வற்றாத செல்வம் இருக்கத்தான் செய்தது.
அன்று ஆரம்பத்தில் யோகத்திற்கு கருணை காட்டத் தயங்கிய மடத்தின் நிர்வாகத்தினரும் ஊழியர்களும், இன்று வெற்றுக்கையுடன் படுத்தபடுக்கையாய்க் கிடக்கின்ற யோகத்தை தாங்கு தாங்கென்று தாங்குகின்றனர். காரணம் அவளது இதயபூர் வமான பரிவும் பாசமுமதான்.
ஒரு சிவராத்திரித் தினத்தன்று யோகம் இரவுமுழுவதும் கண் விழித்திருந்தாள். அவளின் வேண்டுதலின்பேரில் மடத்தின் இரண்டு மூன்று ஊழியர்கள் தேவார திருவாசகத்தை மனமுருகிப் படித்தவண்ணமிருந்தனர்.
அடுத்த நாள் உதயத்தின்ஒளி புவியெங்கும் படர்கையில், யோகத்தின் விழிகளில் ஒளி நிலைகுத்திநின்றது.
யோகம்மாவின் மகளும் கணவரும் வானொலிமூலம் மரணச்செய்தி கேட்டு திருக்கேதீஸ்வரத்திற்கு விரைகின்றனர். யோகம்மாவின் மகள் செல்வநிதி யோகம்மாவின் உடலுக்கு உரிமை கோருகின்றாள்.
“நீ ஆர்?”
“நான் யோகத்தின் மகள்”
“உன்ர தாயார் யோகம்மா மூன்று வரியங்களுக்கு முன்னரே செத்துப்போனா”.
“அப்போ இந்த உடல்?”.
“நீ வானொலி மரண அறிவித்தல் சரியாய்க் கேட்டியா?”.
“ஓம் சரியாய்த்தான் கேட்டன்”.
“வானொலிச் செய்தியில என்னெண்டு கூறப்பட்டிருந்தது?”.
“சிற்றம்பலத்தாருடைய அன்பு மனைவி என்றுதான் சொல்லப்பட்டது”.
“செல்வநிதியின் அன்புத் தாயார் என்று அறிவித்தலிலை சொல்லப் பட்டிருந்ததா?”
“இல்லை”.
“சிற்றம்பலத்தாரின் அன்பு மனைவி என்று மாத்திரம்தான் சொல்லப்பட்டது”.
“ஏன் அப்பிடிச் சொல்லப்பட்டது?”
“இது நீங்கள்தான் வேணுமெண்டு என்ரை பெயரை மரண அறிவித்தலில் சேர்க்காமல் விட்டிட்டியள்”.
“செல்வநிதி நாங்களா உன்ரை பெயரை சொல்லாமல் விடேல்லை”.
“அப்போ?”
செல்வநிதி.
“மூண்டு வரியத்துக்கு முன் உன்ரை அம்மா யோகத்தை இந்த மடத்தில் சேத்துப்போட்டு போனீங்கள்தானே?”
“ஓமோம்”.
“நீங்கள் வருவீர்கள் எண்டு உன் தாயார் ஆவலோடை எதிர் பார்த்தா. ஆனால் நீ வரவேயில்லை.”
“அதுக்காக நீங்கள் என்ர பேரைச் சேர்க்காமல் விட்டிட்டியளோ?”
“உன்ர அம்மா யோகம்மாதான் எழுதினா”.
“என்னால இதை நம்பேலாது. இது நீங்கள் வேணுமெண்டு செய்த சதி.”
“இல்லை நாங்கள் ஏன் சதி செய்யவேணும்?”.
“இப்பிடி என்ரை பெயரை மரண அறிவித்தலிலை சேர்க்காமல் விட்டிட்டு இதைச் சாட்டாய் வைச்சுக்கொண்டு யாழ்ப்பாணத்திலுள்ள என்ரை சொத்துக்கள் எல்லாத்தையும் நீங்கள் அபகரிக்கலாம் எண்டு பாக்கிறியளா?”.
“எங்களுக்கு அந்த எண்ணம் எள்ளளவும் இல்லை. உன்ரை அம்மாதான் நீ வரேல்லை எண்டதாலை, அவவை நீ அனாதயாய் விட்டிட்டுப் போனதாலை இந்த மரண அறிவித்தலை தன கையாலேயே எழுதினா. இதோ பார் அந்த மரண அறிவித்தல் செய்தி. இதைக்கூட யோகம் இறக்கிறதுக்கு ஒரு கிழமைக்கு முன்னர்தான் எங்களிடம் ஒப்படைத்தா”.
தனது தாயார் யோகம்மா தன் கையாலேயே எழுதிய மரண அறிவித்தல் ஆவணத்தைப் பார்த்ததும் மலைத்துப்போய் நிற்கின்றாள்.
“செல்வநிதி அம்மா மூண்டு வரியங்களாய் உன்ரை அம்மாவைப் பார்க்க வராத நீ, இப்போ ஏன் உன்ர அம்மாவின்ர உடலுக்கு உரிமை கோரி வந்திருக்கின்றாய் என்ற காரணமும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்”.
“என்ன காரணம்? அப்படியொன்றுமில்லை.”
“நல்லுாரிலுள்ள உன்ரை அம்மாவின்ரை வீடு வளவு, காணி, பூமி எல்லாவற்றையும் எடுக்கவேணுமெண்டதுதான் உன்ரை நோக்கம். அதுக்காகத்தான் மூண்டு வரியமாய் அம்மாவைப் பார்க்க வராத நீ இண்டைக்கு அம்மாவின்ரை உடலுக்கு உரிமை கோரி வந்திருக்கிறாய். அப்பிடித்தானே?”
“அதிலை என்ன தப்பு?”
“நல்லுாரிலுள்ள யோகம்மாவின் சொத்துக்கள் எல்லாத்தையும், உன்ரை அப்பாவின்ரை தம்பியார் இரண்டு வரியங்களுக்கு முன்னரே அபகரிச்சுப்போட்டார்.
இந்த விசயம்கூட யோத்திற்கு ஒரு வரியத்திக்கு முன்னர்தான் தெரியும்.
இது பற்றியும் அவ ஒரு கிழமைக்கு முன்னர் எங்களுக்குச் சொன்னா.
இதுபற்றி தான் எள்ளளவும் கவலைப்படவில்லை என்று கூறினா”
செல்வநிதி?.
– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.
| நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
ஆர்.மணிமாலா
August 28, 2026
மாறாத எழுத்து
ரா.நீலமேகம்
August 28, 2026
பூவரசு பூத்திருக்கு
குரு அரவிந்தன்
August 28, 2026