பாவப்பட்ட பிள்ளைகளா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2026
பார்வையிட்டோர்: 10 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சமையலறையில் முருங்கையிலை உருவிக்கொண்டிருந்த அமுதா, வீட்டு வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் மகள் மாளவிகா தான் வருகிறாளோ என்று எட்டிப்பார்த்தாள். வந்தது மகளல்ல. அது அமுதாவின் சொந்தக்காரப்பிள்ளை மாலா. 

“என்ன அக்காச்சி மாளவி வாறாளோ என்று பார்த்தீங்களாக்கும்” “ஓம் மாலா இன்னும் அவளக் காணல்ல. அவளுக்கு நாலுமணிக்கு டியூசன் இருக்கு. அவள் வந்து சாப்பிட்டிட்டு டியூஷனுக்கு போகவேணும். உனக்கு தெரியும்தானே சாப்பிடும்போது என்ன புரளி எடுப்பாள் என்று, அவளுக்கு சாப்பாடு கொடுத்து முடிக்குறதுக்குள்ளே அரைமணித்தியாலம் போயிடும். இனி இவர் அத்தான் தடுபிடி என்று சத்தம்போட்டு கொண்டு இருப்பார் கெதியா வெளிக்கிடுத்தி எடு என்று” 

“அவளுக்கு பிடிச்ச கறிகளச் சமைச்சி வைச்சா பேசாம இருந்து சாப்பிட்டிட்டு போறாள் நீங்களும் செய்வாய், வியாழன், வெள்ளி என்று காய்கறி. இலைகுழைகளை சமைச்சி வைச்சால் அவள் சாப்பிடுவாளா” 

“அதுக்காக ஒவ்வொருநாளும் அவவுக்கு பிடிச்சமாதிரி முடைக் குழம்பும், புரியாணியுமா செய்யிறது.. சரி நீ இந்த தேங்காப்பாதியத் துருவித்தா முருங்கை இலையச்சுண்டி எடுப்பம். இக்கணம் இவர் வேலையால் வந்தாரென்றால் ஒரே பரபரத்துக் கொண்டு இருப்பார் பிள்ளையக்கொண்டு டியூஷன் மாஸ்டரிட்ட விட்டிட்டு வர ..” 

“சரி அக்காச்ச்சி நான் கெதியா துருவித் தாறன்.” என்ற மாலா, தேங்காய் துருவிக் கொண்டே கேட்டாள் 

“இவள் மாளவி நல்லா படிக்கிறாளா அக்காச்சி, திரவியம் டீச்சரின் மகள். எப்ப பார்த்தாலும் புத்தகமும் கையுமாகத்தான் இருக்கிறாள். நான் அங்கு போறநேரமெல்லாம் பார்க்கிறேன் அவளும் மாளவியோடதானே படிக்கிறாள்.” 

“ஓம் ஓம் அவளும் இவளோடுதான். இந்தமுறை இந்த ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையில் எல்லோரையும்விட தன்ர மகள்தான் திறமையா வருவாள் என்று நினைக்கிறா திரவியம். நம்மட மாளவி அவள் விட பள்ளியில், கூட மாக்ஸ் எடுக்கிறாள் என்று பச்ச எரிச்சல் அவவுக்கு. நானும் மாளவிகாவை வெற்றி பெற வைக்க வேணுமெண்டுதானே பாடுபடுறன். ஆனால் அவள் இன்னும் விளையாடுத்தனத்தோடாதான் இருக்காள். என்ன செய்யப்போறாளோ தெரியல்ல ” 

“நீங்க சொல்லுறதைப் பார்த்தா. ஏதோ அவள் ஏழெட்டுப் பிள்ளைகாளோட விளையாடுற மாதிரி அல்லோ சொல்லுறீங்க. ஒண்ணே ஒண்ணு என்று பெத்து வச்சிக்கொண்டு அவளை தனிச்சும் ஏதாவது விளையாடவும் விடுறதில்ல. அவள் என்ன பெரிசா விளையாடுறாள் ஏதாவது கீறிக்கொண்டு இருப்பாள். சிறட்டையில மண்ணெடுத்து அதில் தண்ணீ ஊற்றி கவிட்டுக்கொட்டி குமிப்பாள். நான் வாற நேரமெல்லாம் அன்ரி இந்தப் படம் நல்லா இருக்கா நான் கீறினது. அந்த பூக்கண்டை பாத்தீங்களா நான் நாட்டினது. இதுகள்தான் அவளின் விளையாட்டு” 

“அவளுக்கு விளையாட ஒருத்தருமில்லதான். பாவம்தான் ஆனால் படிப்பு முக்கியமாகவல்லோ இருக்குது. பள்ளிக்கூடத்தில் இவள் அதிக மாக்ஸ் வாங்கிறது சரி, ஆனால் இந்தமுறை நடக்க இருக்கிற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் திரவியம் டீச்சர் மகளைவிட திறமையா பாஸ் பண்ண வேண்டும். அதுக்காகத்தான் நான் அவள படி படி என்று சொல்லுறன். பள்ளிகூடத்தில் படிக்கிறதோட மட்டும் நிறுத்தாமல் டியூஷன் வகுப்புக்கும் அனுப்புறோம்.” 

‘அவள் படிப்பாள் அக்காச்சி. படிச்சி மாகாணத்திலே நம்பர் வண்ணா வருவாள் நீங்க இருந்தா பாருங்க” 

”உன்ர சொல்லு பலிக்கட்டும் புள்ள. துருவிய தேங்காப்பூவை தா இதை சுண்டி எடுப்பம்.” என்ற அமுதா முருங்கை இலையை கழுவி எடுத்து சுண்டல் செய்ய ஆயத்தமானாள். 

ஐந்தாம் வகுப்பு புலமை பரீட்சை என்பது இப்பொழுது பெரிய பிரச்சினை யாகிவிட்டது. பத்துவயசு பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் இந்த பரீட்சை அவர்களுக்கு சவாலாக இருக்கின்றது. இந்த சவால் பெற்றோருக்கு மட்டுமல்ல. அவர்கள் பிள்ளைகளுக்கும்தான். 

ஊர்களிலுள்ள கனிஷ்ட பாடசாலைகளில் இந்த ஐந்தாம் ஆண்டு பரீட்சை இருப்பதால் அங்கு படிப்பிக்கும் ஆசிரியர்களுக்கும் குறிப்பாக ஐந்தாம் ஆண்டு வகுப்பு பிள்ளைகளை படிப்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாணவ, மாணவிகளிடம் அதிக அக்கறையும், கவனமும் எடுக்க வேண்டியுள்ளது . பெற்றோர்களுக்குள்ளும் ஒரு போட்டி மனப்பான்மையை இந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். 

தங்கள் பிள்ளைகள் அதிகூடிய புள்ளிகள் எடுத்து தேசிய அளவில், அல்லது மாகாண மட்டத்தில். அல்லது மாவட்ட ரீதியிலாவது முதன்மை பெறவேண்டும் என்ற வெறித்தனம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் சில பெற்றோர்கள், மற்ற பெற்றோர்களிடத் தில் பேசிக்கொள்வதையும் தவிர்த்துக்கொள்கின்றார்கள். எதிரெதிரே தென்பட்டாலும் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டு பார்க்காத மாதிரி செல்கின்றார்கள். காரணம் ஏதாவது பிள்ளையின் படிப்பு, டியூஷன் பற்றி கேட்டுவிடுவார்களோ என்ற பயம் உள்ளுார அவர்களுக்கு இருக்கிறது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளில் எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகின்றார்கள். 

ஐந்தாமாண்டு படிக்கும் பிள்ளையொன்று இருக்கும் வீட்டில் ஒரே படி படி. அந்த பாடம் படித்தாயா இந்தப்பாடம் படித்தாயா?மாஸ்டர் வீட்டு வேலை தந்தாரா? இன்று டியூசன் கிளாசில் பாஸ்ட் பேப்பர் செய்ததில் எல்லாம் சரியாக செய்தாயா? தெரியாததை புரியாததை மாஸ்டரிடம் கேட்டாயா? என்று கேள்விக்கு மேல் கேள்வி. வீட்டில் எழும். இந்த புலமைப் பரீட்சைக்கு தயார்படுத்துவது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் நுண்கலை வகுப்புகள் வார நாட்களில் பிள்ளைகளுக்கு இருக்கின்றன. இதுதவிர ஆங்கில, சிங்கள பிரத்தியேக வகுப்புகள் உள்ளன. 

அப்பப்பா ஒரு பத்துவயதுக்கு கீழ்ப்பட்ட பிள்ளைகளுக்கு ஓய்வு ஒழிச்சல் கிடையாது. அவர்களுக்கு கூடி விளையாடவோ அல்லது தனித்து விளையாடவோ இப்பொழுது முடிவதில்லை. அவர்கள் விரும்பினாலும் பெற்றோர்களிடமிருந்து அனுமதி கிடைப்பதில்லை முன்பு பத்து வயதுவரை தங்கள் இஷ்டம்போல விளையாடித் திரிந்த பிள்ளைகள் ஊரில் இருந்தார்கள். தேத்திக்கோடு, பிள்ளையார்கட்டை. 

கண்கட்டி விளையாட்டு. நாயும் இறைச்சித்துண்டும். கிட்டிப்பொல், ஊஞ்சல், போன்ற விளையாட்டுகளை கோடை காலத்திலும், தாயம், லூடோ போன்ற விளையாட்டுகளை மாரிகாலத்தில் வீட்டினுள்ளே இருந்தும் விளையாடிய பிள்ளைகள் அந்தக் காலத்தில் இருந்தார்கள். பெற்றோர்களே போய் வெளியில் விளையாடுங்கள்” என்று சொன்ன காலம் ஒன்று இருந்தது. 

ஆனால் இந்தக் காலத்தில் எந்தப்பிளைக்கும் அப்படி ஒரு வாய்ப்பு இல்லையே. தொலைக்காட்சி, ஐபோன், ஸ்மார்ட்போன் போன்றவை இப்பொழுது வசதியுள்ள பிள்ளைகளை திசை திருப்பினாலும் அந்த விளையாட்டுகள் ஊரின் அடையாளமாக இருந்தன. எப்படியும் யாராவது எந்த மூலையிலாவது விளையாட முடியும். ஆனால் இந்த ஐந்தாமாண்டு புலமைப் பரீட்சை வந்தபின் பிள்ளைகள் விளையாடுவதை பார்க்கமுடிவதில்லை. இந்த பிள்ளைகள் பாவப்பட்ட பிள்ளைகளா என்று கேட்கத் தோன்றுகிறது. அமுதாவின் பிள்ளையும் அவர்களில் ஒரு பிள்ளையா? 

அமுதா முருங்கை இலையை சுண்டி இறக்கி எடுக்கவும் வாசல் கேற் திறக்கவும் சரியாக இருந்தது. கதவு திறந்ததும் மாளவிகா அம்மா என்று அழைப்பது வழக்கம் அப்படியே அழைத்தாள். 

“அம்மா. நான் வந்துவிட்டேன். என்ன செய்யுறீங்க” 

“மாளவி வா மகள் அம்மா இங்கே இருக்கிறேன். கெதியா உடுப்பு மாற்றி கைகால் முகம் கழுவி வா சாப்பிட” 

“அம்மா என்ன கறி ஆக்கி இருக்கீங்க” மாளவிகா தாயை கேட்டாள்.

“கத்தரிக்காய் கறி, கரட் சம்பல். புடலங்காயும் பருப்பும் போட்டு பால்க்கறி, முருங்கையிலை சுண்டல். ரசம் எல்லாம் இருக்கு கெதியா வந்து சாப்பிடு அப்பா வந்திடுவார் டியூஷன் வகுப்புக்கு கூட்டிப் போக.” 

“என்னம்மா. முட்டைக்குழம்பு வைக்கல்லையா. எனக்கு வேணாம் சாப்பாடு” என்று சிணுங்கினாள் மாளவிகா. 

”இன்று வெளிக்கிழமை பிள்ள. அதுதான் மரக்கறி சமைச்சிருக்கிறேன். குழப்படி பண்ணாமல் வந்து சாப்பிடு. நாளைக்கு பிள்ளைக்கு சிக்கின் பிரியாணியும், முட்டையும் அவித்து தாறன். 

“இண்டைக்கு முரண்டு பிடிக்காமல் வந்து சாப்பிடு” என்ற அமுதா சாப்பாட்டு மேசையில் சோறு கறிகளை எடுத்து வைத்தாள். அதே நேரம் மாளவிகாவின் அப்பா அருணன் வேலையால் வந்துவிட்டார். அவரை கண்டு கொண்ட அமுதா, பேசினாள் 

“என்னங்க வந்திட்டீங்களா.. சரி வாங்க சமையல் முடிஞ்சு சாபிட்டிட்டு பிள்ளையைக் கொண்டு டியூசனுக்கு விட்டுட்டு வாங்க மாளவிகா சாப்பிட மாட்டன் என்று சொல்லுறாள் என்னெண்டு கொஞ்சம் கேளுங்க” 

“ஏன் என்னவாம் அவளுக்கு பிரச்சினை எங்க அவள், மகள் மகள் மாளவி சாப்பிட வா” என்று அழைக்கிறார் 

“எனக்கு வேணாம் அம்மா எனக்கு பிடிக்காத கத்தரிக்காய் கறி சமைச்சு வச்சிருக்கா” 

“சரி அது பிடிக்காட்டி மற்றக்கறிகளோட சாப்பிடன் ” 

“அதுவும் எனக்கு வேணாம். எனக்கு முட்டை பொரிச்சு தரச் சொல்லுங்க” “சரி வா நேரமாகுது டியூசனுக்கு போகவேணுமல்லா” என்ற மாளவிகாவின் அப்பா அருணன் சமையலறையை பார்த்து சொன்னார் 

“அமுதா, பிள்ளைக்கு ஒரு முட்டை பொரித்து எடுங்க. அவள் அதோட சாப்பிடட்டும்” 

“நீங்கதான் அவளை கெடுத்து வச்சிருக்கிறீங்க. இந்த மரக்கறிகளோட அவளுக்கு சாப்பிட ஏலாதா சாப்பாடு மட்டும் அவளுக்கு நினைச்சமாதிரி வேணும். படிக்கிற விஷயம் எண்டால் கஷ்டம்தான் அவளுக்கு. பார்க்கிறேன் இந்த முறை பள்ளிகூட மார்க்ஸ் பார்த்துட்டுதான் இருக்கு. இன்னும் நாலு மாதத்தில் புலமைப் பரீட்சை வருது. அக்கறையில்லாமல் இருக்கிறாள். நம்மட தெண்டிப்புக்குத் தானே படிக்கிறாள். அவளாக விரும்பி படிக்கிறாளா இல்லையே” 

“அக்காச்சி பேசாதீங்க அத்தான் கேட்டாரென்றால் அவ்வளவுதான், இண்டைக்கு அவள் டியூசனுக்கு போனமாதிரித்தான். கொண்டாங்க. முட்டைய நான் டக்கெண்டு பொரிச்சு கொடுக்கிறேன்.” என்று சமலறையில் நின்ற மாலா முட்டையை வாங்கி பொரிச்சு எடுக்கவும் மாளவிகாவும் அருணனும் சமையலறைக்குள் வரவும் சரியாக இருந்தது. 

இருவரும் சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது அமுதா கேட்டாள். “என்னவாம் அப்பா, டியூஷன் மாஸ்டர் சொல்லுறார். இவள் நல்லா எல்லா பாடங்களும் செய்யிறாளாமா கேட்டீங்களா?” 

“அம்மா நான் நல்லாத்தான் செய்றேன். எல்லா பாடங்களிலும் தொண்ணுறுக்கு மேல் எடுக்கிறேன்” 

“நீ சும்மா பேசாம சாப்பிடு. நான் உன்னிட்ட கேட்ட நானே. எல்லாத்துக்கும் முந்திருவா.” 

“அவளக் கரிச்சிக் கொட்டாட்டி உனக்கு போகாது பொழுது என்ன. அவள் நல்லா படிக்கிறாள். நல்ல மார்க்ஸ் எடுக்கிறாளாம். ஸ்கொலசிப்பில பெரிய வெற்றி பெறுவாள் என்று சொன்னார்.” 

“அப்பிடியா சொன்னார். என்ர மகள் தேசிய அளவில் அதிகூடிய மார்க்ஸ் எடுத்து முதல் மாணவியா வரணும் அதுதான் என்னோட ஆசை”

“உங்கட ஆசை நிறைவேற எங்கட வாழ்த்துகள் இல்லையா மகள்” என்ற அருணன் சாப்பிட்டு முடித்து எழும்பி விட்டார். மாளவிகா ரெடியா நின்றாள். அவளைக்கூட்டிக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் டியூஷன் மாஸ்டர் வீட்டுக்கு புறப்பட்டார். இருவரையும் அனுப்பிவிட்டு அப்பாடா என்று மூச்சு விட்டாள் அமுதா. 

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சை ஒன்று வந்தாலும் வந்தது. நாட்டில் சகல மக்களுக்கும் அமுதா எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. தங்கள் பிள்ளைகளை எப்படியாவது தேசிய அளவில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றே நினைக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளை அதற்காகவே தயார் பண்ண பாடுபடுகின்றார்கள். இதனால் பிள்ளைகள் இயந்திரமயமாக்கப்படுகின்றார்கள். பிள்ளைப் பராயத்தில் அவர்கள் அனுபவிக்கும் ஆனந்தம் இல்லாமல் போனது அவர்களின் துர்ரதிஷ்டமே. 

இதில் கேள்வி என்னவென்றால் புலமைப் பரீட்சை, பிள்ளைகளுக்கு அவசியமா இல்லையா என்பதல்ல. அந்த பரீட்சை ஐந்தாமாண்டுக்கு தேவையா? பத்து வயது பிள்ளைகளை, அவர்களின் சிறுபராயத்தின் இயல்பினை. அவர்கள் அனுபவிக்க துடிக்கும் சுதந்திரத்தை இந்த பரீட்சை முடக்கி போட்டிருகிறதா? என்ற கேள்விதான் உள்ளது. நல்லாட்சி அரசு இந்த பரீட்சையை ரத்துசெய்ய ஆவன செய்வதாகவும் சொல்லி இருந்தது. ஆனால் இன்றுவரை அது நடந்ததாக தெரியவில்லை. பாவம் அந்த பாவப்பட்டபிள்ளைகள். 

– கொத்து ரொட்டி (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: ஆடி 2018, லக்கி மீடியா, லண்டன்.

கோவிலூர் செல்வராஜன் கோவிலூர் செல்வராஜன் - ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இலங்கை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும்,பல்துறைக் கலைஞராகவும் இருந்தவர். இவரது இயற்பெயர் செல்வராஜன் இராசையா. இவர் கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் என்னும் ஊரிலே 18.09.1952 ல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும்,பாடசாலைக் கல்வியை திருக்கோவிலில் இருக்கும் தம்பிலுவில் மகாவித்தியாலதிலும் உயர் கல்வியை மட்டக்களப்பிலும், கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *