இவர்கள் ஏன் இப்படி?
கதையாசிரியர்: கோவிலூர் செல்வராஜன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2026
பார்வையிட்டோர்: 6
(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காலைப்பொழுது தென் கிழக்கு லண்டன் மிக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எக்கவுண்டன் மகாதேவா வீட்டுத் தொலை பேசி. ஓயாமல் அலறிக்கொண்டே இருந்தது. ஏதோ அலுவலாக வீட்டின் மேல்மாடியில் இருந்த மகாதேவா, கீழே சமயலறையில் இருந்த மனைவி குமுதாவை அழைக்கிறார்.
“குமுதா கீழே அந்த போன் அடிக்குதம்மா எடுத்து ஆரென்று ஒருக்கால் பாரம்மா” என்கிறார்.
“நான் இங்க குசினிக்குள்ள அலுவலா இருக்கிறனப்பா, நீங்கள் வந்து எடுங்கோவன்”
“இல்லையம்மா நான் இங்க முக்கியமான வேலையா இருக்கிறன். ஒருதரம் எடுத்துக் கேளம்மா ப்ளீஸ்”
“சரி சரி கெதியா வெளிக்கிட்டு வாங்க, நேரமாகிறது தெரியல்லயே..” என்று சொன்ன குமுதா கைவேலையை அப்படியே போட்டுவிட்டு, ஓயாமல் அடித்துக்கொண்டிருந்த போனை எடுத்து பேசினாள்.
“ஹலோ யார் பேசிறீங்க.. ஆ.. சொல்லுங்க.. ஓம் ஓம் காலையில் எழும்பினால் வேலைக்கு வெளிக்கிடும் வரைக்கும் சும்மா பம்பரமாய் சுளன்றுகொண்டல்லே இருக்க வேண்டியுள்ளது. ஓம் அவர் மேலே இருக்கிறார். ஓம் ஓம் இனி வெளிக்கிடத்தான். ஏதும் அவசரமோ… சரி சரி நான் சொல்லிவிடுறன், வைக்கிறன் பை.” கதைத்து முடித்து போனை வைத்துவிட்டு திரும்பிய குமுதாவை பார்த்து கேட்டார் மகாதேவா “யாரம்மா காலங்காலத்தால விடாப்பிடியாக போனை அடிக்கப்பண்ணியது”
”அது நம்ம, நடேசன்தான். அவரும் வேலைக்கு இறங்கவேணுமாம் அதுதான் உங்களிட்ட ஒரு விஷயம் கதைத்துவிட்டு போக எடுத்தவராம். நான் நீங்கள் அலுவலாக இருப்பதாக சொன்னேன். சரி. அண்ணாவை நான் பேந்து கூப்பிடுறன் என்றார்.”
“சரி குமுதா, நீங்க வெளிக்கிடுங்க நான் கெதியில வாறன்” என்றவர் மேலே தன் அறைக்குள் சென்று அலுவலகத்துக்கு கொண்டு செல்லும் கோப்புகள் எல்லாம் எடுத்து தன் கைப்பெட்டிக்குள் வைத்துவிட்டு. உடைமாற்றிக்கொண்டு கீழே இறங்கி, குமுதா செய்து வைத்திருந்த மதிய உணவை எடுத்து கைப்பெட்டியில் வைத்துக் கொண்டார். பின்னர் மேசையிலிருந்த ஓட்ஸ் கஞ்சியை குடித்துவிட்டு வெளியே புறப்படத் தயாரானார்.
“என்னப்பா தண்ணீ குடிக்கயில்லையே.”
“காருக்குள்ள தண்ணிப் போத்தல் இருக்குதம்மா நான் குடிக்கிறன் நீங்க கெதியா வாங்க” என்ற மகாதேவா கதவைத் திறந்து வெளியில் வந்து வீட்டுக்கு முன், ட்ரைவேயில் நின்றிருந்த தனது வொல்வோ காரை திறந்து ஏறி இருந்து என்ஜினை ஸ்டாட் செய்தார். மார்கழிமாத குளிரில் கார் உள்ளுக்குள் சில்லென்று குளிராக இருந்தது. குமுதா வருவதற்குள் காரை கீட் பண்ணிவிட கீற்றரையும் போட்டுவிட்டு, தன் இருக்கைக்குப் பக்கத்திலிருந்த தண்ணிப் போத்தலை எடுத்து குடித்துக் கொண்டார்.
குமுதா வந்ததும் கவனமாக பின்னுக்கு எடுத்து, வீதியில் செலுத்தத் தொடங்கினார். மகாதேவாவின் அலுவலகத்துக்கு போகும் வழியில்தான் குமுதா பணிபுரியும் வைத்தியசாலை இருக்கிறது. ஒவ்வொரு நாளும் குமுதாவை அவர் அங்கு இறக்கிவிட்டுவிட்டே செல்வது வழக்கம்.
காருக்குள் அவரது அலைபேசி சிணுங்கியது. இப்பொழுது புதிய கார்களில் முன்னால் பொருத்தப்பட்டு இருக்கும் டிஜிடல் திரைகளில் பல வசதிகள் இருக்கின்றன. அதில் அலைபேசி உரையாடல்களும் இருக்கின்றன. மகாதேவா காரின் டிஜிடல் திரையை இயக்கி தனக்கு வந்த அழைப்பை இணைத்துக் கொண்டார்.
“ஹலோ மகாதேவா ஹியர்”
“அண்ணா நான் நடேசன் கதைக்கிறன்”
“ஓமடா தம்பி, நீ முந்தியும் எடுத்ததாம். சரி சொல்லு ராசா என்ன விஷயம். ஏதும் அவசரமோ”
“இல்ல இல்ல அப்படியொன்றுமில்லை அண்ணே. நான் ஏன் எடுத்தனான் என்றால், வருகிற சனிக்கிழமைக்கு “ஒளிவிழா” என்று ஒரு விழா இங்கே ஈஸ்ட் லண்டனில் தெரிந்தவர்கள் செய்யிறாங்கள். அதில் நீங்கள் ஒரு கவிதா நிகழ்வு செய்து தரவேணும் அண்ணா. அவர்களும் பாட்டு. நடனம்,பேச்சு என்று வைக்கினம். நீங்கள் செய்தால் அது கனதியாக இருக்கும். அதுதான் உங்களை கேட்பம் என்று எடுத்தனான்
“அட, தம்பி உனக்குத் தெரியும்தானே நான் இப்ப படுகின்ற அவதி. வருசக் கடைசி என்ற படியால் எங்கட கிளைண்ட்ஸ் மாரெல்லாம் தங்களின்ர வியாபாரக் கணக்குகளை கெதியா முடிச்சு தரவேணும் என்று கழுத்துப் பிடியா நிற்கினம். அதைவிடடா தம்பி, இன்னும் சில சமூக வேலைகள் கொத்திலயும், குறையிலயும் கிடக்கின்றன. மற்றது நான் எழுதுகின்ற “தாய் மண்ணின் தார்ப்பரியம்” என்ற காவியம் முடித்து அச்சுக்கு அனுப்பவேண்டும். என்னை என்ன செய்ய சொல்லுறீர்”
“எனக்கு தெரியுமண்ணா உங்களின்ற பிரச்சினைகள். ஆனால் நான் அவர்களுக்கு சொல்லிபோட்டேன். அண்ணாவிடம் எப்படியும் நானும், ஜேம்சும் பேசி ஒரு கவிதா நிகழ்வை ஒழுங்கு செய்கின்றோம் என்று”
“ஜேம்ஸ் என்ன செய்கிறான் அவன் ஏன் இதுக்குள்ள வாறான்.”
“அண்ணா ஜேம்சுக்கும் தெரிந்தவர்கள்தான் இந்த விழாவை நடத்துகிறார்கள். இனி ஒளிவிழா என்னும்போது கிறிஸ்துவின் பிறப்பு சம்பந்தமாக பல நிகழ்சிகளை செய்வார்கள். அதற்கு ஜேம்சும் உதவுகிறார். உங்களால் முடியுமண்ணா ப்ளீஸ் மாட்டன் என்று சொல்லிடாதீங்க”
பக்கத்தில் கேட்டுக்கொண்டிருந்த குமுதாவை திரும்பிப் பார்த்தார் மகாதேவா. குமுதா, ஒரு முறுவலை முகத்தில் பரவவிட்டு, தலையை அசைத்துக் கொண்டாள்.
“சே.சே. நீ என்னடா தம்பி ப்ளீஸ் அது இதென்றுகொண்டு. சரி நான் யோசிக்கிறன் நீங்கள் எல்லாம் என்னோடு எவ்வளவு காலமாக இருந்து என் இலக்கிய ஈடுபாடுகளுக்கு ஒத்துழைப்பும், பங்களிப்பும் செய்கிறீர்கள். சரியடா தம்பி நான் ஒரு தலைப்பை தெரிவு செய்து விட்டு, அதை கவிதை எழுதுபவர்கள் இரண்டு மூன்று பேருக்கு கொடுத்து அவர்களை எழுத கேட்கிறன் அவர்கள் ஓம் என்றால் செய்வோம் சரிதானே.”
“ஓகே அண்ணா அது போதும் அதெல்லாம் சரிவரும். நான் அவர்களிடம் சொல்கிறேன் கவிதா நிகழ்வு கண்டிப்பா இருக்குது என்று”
“சரியடா தம்பி ஆனால் ஒன்றுமட்டும் சொல்லுறன் என்னை நேரத்துக்கு விட்டுவிடவேணும். எனக்கு தலைக்குமேல வேலை இருக்கு. எதற்கும் பின்னேரம் போன் பண்ணிக் கேளு. நான் மற்றவர்களுடன் பேசி அவர்களுக்கும் வசதி வருமா என்று கேட்கிறேன்”
“நல்லதண்ணா நான் பின்னேரம் கதைக்கிறன்”
உரையாடல் நிற்கவும், மகாதேவாவின் கார் குமுதாவின் ஹொஸ்பிட லுக்குள் நுழையவும் சரியாக இருந்தது. காரை விட்டு இறங்கிய குமுதா “சரி நான் போயிட்டு வாறன், நேரத்துக்கு சாப்பிடுங்க என்ன “என்று சொல்லிக் கொண்டே பதிலை எதிர்பாராமல் விறுவிறென்று நடந்து சென்றாள்.
குமுதா செல்வதையே சற்று நேரம் பார்த்துகொண்டிருந்த மகாதேவா, பின் காரை தனது அலுவலகம் நோக்கி செலுத்தினார்.
அலுவலகத்தில் மற்றப் பணியாளர்கள் நேரத்துக்கே வந்து தங்கள் பணியில் மும்முரமாக இருந்தார்கள். மகாதேவாவை கண்டதும் எல்லோரும் அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு தங்கள் வேலையை தொடர்ந்தார்கள். இன்று பல வாடிக்கையாளர்களின் வரிக் கணக்குகள் முடித்துக் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை நேற்றே மகாதேவா அவர்களிடம் சொல்லியிருந்தார்.
மகாதேவவா தனது அறைக்குள் சென்று தனது வேலையை தொடங்கினார். அவர் பணியில் மூழ்கினால் பொழுது போவதே அவருக்கு தெரிவதில்லை. பின்னேரம் குமுதாவையும் பிக்கப் பண்ணிக்கொண்டு வீடு நோக்கி புறப்பட்டுக் கொண்டிருந்தார் மகாதேவா. பல வாடிக்கையாளர் களின் கணக்கு வழக்குகளை முடித்துக் கொடுத்தபின் வந்த களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது. குமுதா அமைதியை கலைத்தா.
“என்னப்பா நேரத்துக்கு சாப்பிட்டியளோ”
“இன்று எக்கச்சக்கமான வேலை.எங்க நேரத்துக்கு சாப்பிடமுடியும். மூன்று மணிக்கு மேல என் அறைக்குள் ஒரு அலுவலாக வந்த சுந்தரம்பிள்ளை அண்ணர்தான் என்ன தம்பி இன்னும் சாப்பிட இல்லையே என்று கேட்டு, ஞாபகப் படுத்தினார் அதன்பிறகுதான் சாப்பிட்டன். நல்லா இருந்தது சாப்பாடு.” என்றவர் நடேசன் சொன்ன ஒளிவிழா நிகழ்வு சனிக்கிழமை இருப்பது பற்றியும். கவிஞர்கள் வேலுமணி, சந்திரபோஸ், சதானந்தன் ஆகியோருக்கும் சொல்லி அவர்கள் சம்மதம் வாங்கிக் கொண்ட தகவலையும்,
“மீண்டும் நீர் வரவேண்டும்” என்ற தலைப்பை கொடுத்த செய்தியும் குமுதாவிடம் சொல்லிகொண்டார்.
சனிக்கிழமை வந்தது..மகாதேவா சற்று தாமதமாகவே எழுந்து கொண்டார். காலைக் கடன்கள் முடித்து மனைவி கொடுத்த பால்கோப்பியை பருகிவிட்டு தன் மேசைக்கு முன்னால் அமர்ந்து கொண்டு பின்னேரம் தான் தலைமை ஏற்கும் கவிதா நிகழ்வுக்குரிய தலைமையுரையை தயார் படுத்த முதலில் ஒரு கவிதை எழுதத் தொடங்கினார்
“மீண்டும் நீர் வரவேண்டும் மேய்ப்பர் இல்லா ஆடுகள் நாங்கள் மேன்மைதங்கிய தேவ மைந்தரே..” என்று சென்றது கவிதை எழுதி முடித்து விட்டு, மற்ற கவிஞர்களுக்கும் நினைவூட்டிக் கொண்டார். சமையலறையிலிருந்து குமுதா சமைக்கும் மணம் காற்றில் கலந்து மகாதேவாவின் மூக்கில் நுழைந்து இவரை கீழே கொண்டு செல்கிறது.
“என்ன குமுதா, சமையல் மணம் ஆளைத் தூக்குது. என்ன உமது மகன் வாறாரோ.”
“ஓமப்பா இன்று அவனுக்கு கொஞ்சம் நேரமிருக்குதாம் பிள்ளை களையும் கூட்டிக்கொண்டு வாறனம்மா” என்று காலையில போன் பண்ணினான். அதுதான் சமைத்துக் கொண்டு இருக்கிறன்.”
“ஓ அப்படியே.. பின்னேரம். அந்த நிகழ்ச்சி இருக்கல்லே.”
“ஓம் ஓம் அது நினைவில் இருக்கிறது. மத்தியானம் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு, பிள்ளைகளை அனுப்பிவிட்டு நாங்கள் நேரத்துக்கு போகவேணும் ஏனென்றால் நீங்க சொன்ன அந்த இடத்துக்கு போக இங்கிருந்து ஒரு மணித்தியாலம் எடுக்கும்.”
“சரி நீங்க சமையலைப் பாருங்க நான் ஒருக்கால் வெளியில போய் பழங்களும், பேரப்பிள்ளைகளுக்கு ஏதும் இனிப்புகளும் வாங்கிக் கொண்டு வாறன்” என்ற மகாதேவா ஏதோ ஒரு உற்சாகம் உந்தித்தள்ள வெளியில் புறப்பட்டார். மகாதேவாவின் மகன் குடும்பம் வந்து சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு போய் விட்டார்கள் இனி இவர்கள் நிகழ்ச்சிக்கு செல்ல ஆயத்தமாகி புறப்பட்டார்கள்.
மகாதேவாவும் குமுதாவும் நடேசன் குறிப்பிட்ட மண்டப. கார் பாக்கிங்கில் தங்கள் காரை பாக் பண்ணிவிட்டு மண்டபம் நோக்கி செல்லும்போது கவிஞர்கள் வேலுமணி, சதானந்தம் ஆகியோரும் இணைந்தார்கள்.
எல்லோரும் மண்டபத்துக்குள் நுழைந்தார்கள். வாசலில் நின்று கொண்டு சில பிள்ளைகள் தங்கள் பாட்டுக்கு பேசிக்கொண்டு நின்றார்கள். ஆனால் இவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. இவர்களை ஒருவரும் வந்து வரவேற்று உரிய மரியாதை செய்யவும் இல்லை. நடேசன் அங்கு காணப் படவில்லை. மகாதேவாவுக்கு தெரிந்த ஜேம்ஸ் மேடையில் தென்பட்டார்.
இவர்களுக்கு பெரிய சங்கடமாக இருந்தது. மேடையில் ஒரு நடனம் நடந்துகொண்டு இருந்தது. அதனால் அது முடியும்வரை இவர்கள் அமைதியாக மண்டபத்தின் பக்கவாட்டில் நின்று கொண்டார்கள். நடனம் முடிந்ததும். ஜேம்ஸ் ஒலிவாங்கியை எடுத்து அடுத்த நிகழ்ச்சிபற்றி அறிவிக்கிறார். அது ஒரு பாடல்.
அந்த நிகழ்ச்சியும் ஆரம்பமாகிறது. விளக்குகள் அணைக்கப்பட, மண்டபத்துக்குள் மீண்டும் இருள். மகாதேவன் மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு பின்னால் ஒரு ஓரமாக அமர்ந்துகொள்கிறார். இதனிடையில் ஒருசிலரை பலர் வந்து வரவேற்று அவர்களை முன் வரிசையில் அமரச்செய்யும் காட்சிகளும் அங்கு அரங்கேறியது. அவற்றையும் மகாதேவா கண்டுகொண்டார். ஆனால் நடேசன். ஜேம்ஸ் ஆகியோர் மகாதேவாவையும், மற்றவர்களையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. ஆனால் அவர்கள் இருவரையும் குமுதாவும், மகாதேவாவும் கண்டுகொண்டார்கள். ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? இவர்களுக்கு என்ன ஆயிற்று? என்ற கேள்விகள் மகாதேவாவின் மனதுக்குள் எழுந்தாலும், சரி பார்ப்போம் என்ன நடக்கிறது என்று அமைதியாக அமர்ந்து இருக்கிறார். பாட்டு, நடனம் என்று நிகழ்சிகள் நடந்து கொண்டு தான் இருந்தன. நேரம் எட்டுமணியை தாண்டி செல்கிறது. எல்லோருக்கும் தாகம் எடுக்கிறது குடிக்கிறதுக்கு தண்ணீர்கூட அங்கு இல்லை. முன்னால் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு மட்டும் மேடையிலிருந்து ஒருவர் குடிக்க ஏதோ கொண்டுவந்து கொடுத்ததை குமுதா கண்டுகொண்டு அதை கணவரின் காதில் போட்டு வைத்தார். அத்தோடு அவர் விடவுமில்லை. கேட்கத் தொடங்கினார்.
“என்னப்பா வந்து இரண்டுமணி நேரமாகிறது இன்னும் ஒருவராவது வந்து உங்களோடு பேசவில்லை. ஒரு உபசரிப்புக் கூட செய்யவில்லை. சரி இவர்களை விடுங்கள். உங்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்த நடேசன் கூடவா உங்களை கண்டுகொள்ளவில்லை. என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த லண்டன் மாநகரில் எத்தனை நிகழ்சிகளை நடத்தி, பல நிகழ்சிகளில் கலந்துகொண்டு பலரின் பாராட்டுகளை, நன்மதிப்பைப் பெற்ற உங்களுக்கு இப்படி ஒரு அவமதிப்பை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. தங்களுக்கு, ஏதும் ஆகவேண்டுமென்றால் அண்ணா. அண்ணா என்று வீடுவரைக்கும் வந்து நிற்பார்கள். காரியம் முடிந்தால் சரி ஊரில் சொல்வார்களே “கண்டால் கட்டாடி காணாட்டால் என்னவோ” என்று, அதுபோல்தான் இருக்கிறது. இந்த ஜேம்ஸ் கூட அங்கு நிற்கிறான் அவன்கூட வந்து உங்களை ஒரு வார்த்தைக்குக் கூட கேட்கயில்ல. கவிதா நிகழ்வு வேண்டும் என்ற நடேசன் என்ன செய்கிறான். உங்களை வேண்டுமென்றே கூப்பிட்டு அவமதிக்கின்றானா? நீங்கதான் இவங்களையெல்லாம் தம்பி, தம்பி என்று அழைத்துக்கொண்டு திரியிறியள். அவர்கள் தெளிவாகத்தான் இருக்கினம்.” என்று குமுதா குமுறினாள்.
“அதுதானம்மா எனக்கும் விளங்குதில்ல. இவர்களில் ஒருவர்கூட வந்து இன்னும் சந்திக்கவில்லை. நான் நடேசனுக்கு சொல்லித்தானே இருந்தேன். என்னை நேரத்துக்கு கூப்பிட்டு நிகழ்ச்சியை முடித்து அனுப்பவேண்டும் என்று. ஆனால் இங்கு ஒரே அவர்களின் நிகழ்ச்ச்சிகள்தானே நடந்துகொண்டு இருக்கின்றன.”
“ஐயா எனக்கென்னவோ எங்களை அவர்கள் இப்போதைக்கு அழைத்து நிகழ்ச்சியை தொடங்க விடுவார்கள் என்று தோன்றவில்லை. அங்கே பாருங்கள் மேடையில் இன்னும் எத்தனை பிள்ளைகள் அடுத்தடுத்த நிகழ்ச்சிக்கு ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று” பக்கத்தில் அமர்ந்திருந்த சதானந்தன் சொன்னான்.
“அப்படிதான் தம்பி எனக்கும் படுகிறது. நேரமும் ஒன்பதே முக்கால் ஆகிவிட்டது. இருந்த சனங்களில் பாதிப்பேர் போயிட்டார்கள். மேடையில் இருக்கின்ற பிள்ளைகளின் நடனம் முடிந்ததும் மீதிபேர்களும் போய்விடுவார்கள். பிறகு நாங்கள் யாருக்கு கவிதை பாடுவது? இங்குள்ள கதிரைகளுக்கா. இது சரிப்பட்டுவராது கிளம்புங்க புறப்படுவோம்” என்ற மகாதேவா எழுந்துகொண்டார். அவரின் முகத்தில் கோபம் வெளிப்பட கண்கள் சிவந்திருந்தன. மற்றவர்களும் அவர் பின்னால் எழுந்து நடக்கத் தொடங்கினர். மண்டப வாயிலை அடைந்து கார் பாக்கிற்கு செல்ல முனைகையில் எங்கிருந்தோ “அண்ணா. அண்ணா” என்று அழைக்கும் சத்தம் கேட்ட நொடிப்பொழுதில் இளைக்க இளைக்க ஓடிவந்து
“அண்ணா, என்ன அண்ணா வந்திட்டியள். அடுத்த நிகழ்ச்சி உங்களின் நிகழ்ச்சிதானே.”நடேசன்தான் வந்து பேசினான்.
“என்ன நடேசன் எங்களை கூப்பிட்டு அவமானப் படுத்த நினைத்தீரோ.. மூன்று மணி நேரமாக தாகத்துக்கு தண்ணீர்கூட இல்லாமல் இருந்திட்டு எழும்பிவாறோம். ஆராருக்கெல்லாமோ அடுக்கெடுக்கிறியள், நாங்கள் என்ன விரும்பியா வந்து நிகழ்ச்சி செய்ய கேட்டோம். நீர் போனுக்கு மேல் போன் போட்டு கேட்டபடியால்தான் இவர் ஒத்துக் கொண்டார். அதுவும் நான் ஓம் என்று சொன்னபடியால்தான். எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு. இன்று என் மகன் குடும்பம் வந்தது. அவர்களைகூட நேரத்தோடு அனுப்பிவிட்டு வந்த நாங்கள்”
“குமுதா கொஞ்சம் பொறும். எடே நடேசா! நான் உனக்கு ஏதும் பிழை செய்த நானோ?”
“அண்ணே… ஏன் அண்ணே இப்படி பேசுறீங்க”
“பின்ன எப்படி பேசவேண்டும். என் மனைவி குமுதா மாதிரி பேசவோடா. நீ கூப்பிட்டுத்தானே நான் இந்த நிகழ்சிக்கு ஒத்துக் கொண்டேன், நான் கூப்பிடுத்தானே இவர்களும் இதில் கலந்துகொள்ள வந்தார்கள். வந்த எங்களை ஒரு சின்ன உபசரிப்பு, ஒரு மரியாதைக்காவது வாங்கோ என்று கூப்பிட்டு வைத்தீர்களா? நா வறண்டு வறண்டு, உதடுகள் காய்ந்து போய் உட்கார்ந்து இருந்தோம் ஒருத்தர்கூட வந்து கேட்கவில்லை. சரி பரவாயில்லை. வந்த நாங்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு போகலாம் என்றால், அதுவும் இல்லை. நீயே மேடையில் நின்று மற்ற நிகழ்ச்சிகள்பற்றி கவனம் செலுத்துகிறாய். ஒருதரம் வந்து என்னை சந்தித்துப் பேசினாயா? “அண்ணா நான் ஜேம்சிடம் சொல்லியிருந்தேன்.அண்ணா வந்தால் கவனித்து பார்த்துக்கொள் என்று. “இங்க பார் நடேசன்.எனக்கு ஜேம்ஸ்பற்றிய விஷயம் தேவையில்லை. நீதான் என்னை கூப்பிட்டாய். நீதான் எல்லாம் செய்திருக்கவேண்டும். அதிலிருந்து நீ தவறிவிட்டாய். சரி நல்லா இரு நாங்கள் வருகின்றோம்”
“இல்ல அண்ணா.. சொறி அண்ணா.. நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்துவிட்டு செல்லுங்கள் அண்ணா. நடந்ததுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.”
“மன்னிப்பது மனித இயல்பு ஆனால் அது எப்படி கேட்கப்படுகிறது? எந்த சூழ்நிலையில் கேட்கப்படுகிறது? என்று இருக்கிறது. ஏதோ வீம்புக்கு எல்லாம் செய்துவிட்டு கண் துடைப்புக்கு கேட்கும் மன்னிப்பும் தவறாகும். அதை மன்னிப்பதும் தர்மத்துக்கு இழுக்காகும். நாங்கள் எல்லாம் உங்களுக்கு இப்போ போடுகாய்களாகப் போனோம். பணமும், பவுசும் உள்ளவர்கள்தான் உங்களுக்கு இன்று பவுத்திரமானவர்கள். இவ சொன்ன மாதிரி எப்படியது… ஆ. “கண்டால் கட்டாடி.காணாட்டால் என்னவோ”என்ற கதையா போச்சு. சரி மகிழ்ச்சி. நல்லா இருங்க. வா குமுதா, வாங்க தம்பிகளே” என்ற மகாதேவா எவரையும் திரும்பிப் பார்க்காமல் தன் கார் பாக் பண்ணி இருந்த இடத்துக்கு நடந்து கொண்டு இருந்தார்.
– கொத்து ரொட்டி (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: ஆடி 2018, லக்கி மீடியா, லண்டன்.
![]() |
கோவிலூர் செல்வராஜன் - ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இலங்கை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும்,பல்துறைக் கலைஞராகவும் இருந்தவர். இவரது இயற்பெயர் செல்வராஜன் இராசையா. இவர் கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் என்னும் ஊரிலே 18.09.1952 ல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும்,பாடசாலைக் கல்வியை திருக்கோவிலில் இருக்கும் தம்பிலுவில் மகாவித்தியாலதிலும் உயர் கல்வியை மட்டக்களப்பிலும், கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ரயில் செல்வியும்… WAP 7 என்ஜினும்…
உரு.வளவன்
September 12, 2026
ராப்பிச்சை
மா.வீ.தியாகராசன்
September 12, 2026
மரணம் நம்மைப் பிரிக்கும் வரை
இரா.துரைமாணிக்கம்
September 12, 2026
