பாம்பு சிரித்தது!
கதையாசிரியர்: ரகுராமன் சீனிவாசன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2026
பார்வையிட்டோர்: 152

மூன்று கட்டு வீடு அது! ரெண்டு முற்றம், தாழ்வாரங்கள் நிறைந்த ,பாதிக்கு மேல் சிதிலடைந்து, வாழ்வதற்கே தகுதியற்ற பண்ணை வீட்டில் ,அம்மாவையும் சேர்த்து, நாங்கள் ஏழுபேர்! கூடவே ரெண்டு பசு மாடுகள்!
முன் வாசல் ஒரு தெருவிலும், புற வாசல் மற்றொரு தெருவிலும் முடிகிற அந்த நீண்ட நெடிய…வீட்டின் ஒவ்வொரு மூளையும் எதோ ஒரு இனம்புரியாத அச்சத்தை எப்போதும் உண்டு பண்ணி கொண்டிருக்கும்!
வீட்டில், அதிகாலையில் எழுந்திருக்கும் முதல் மனுஷி அம்மா தான்!
அன்றும் அப்படிதான்! இருள் விலகாத அந்த காலையில், கையில் சிம்னி விளக்கோடு முற்றம் தாண்டி தாழ்வாரம் நோக்கி அம்மா போவதை பார்த்தேன்!
வழக்கமான ஒன்றுதான் இது என்றாலும், அன்று ஏனோ, தூக்கம் கலையாத முகத்துடன், பித்தான் இல்லாத அரை டிராயரை இடுப்பில், சொருகி கொண்டு, ஒடிப்போய் அம்மாவின் முந்தானையை இறுக பற்றி கொண்டேன் !
கையில் சிம்னியோடு என்னையும் இழுத்து அணைத்து கொண்டு நடந்தாள் அவள்!
தாழ்வாரத்தின் மேற்கு மூளையில், நான்கரை அடி உயரமுள்ள மரப்பெட்டியின் மீது கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த அந்த சிறிய மாட்டு தீவன பெட்டியை ஒரு கையால் நிமிர்த்தி கொண்டே, சிம்னி விளக்கை மற்றொரு கையால், உயர்த்தி பிடித்தாள்!
பெட்டிக்குள் சுருட்டிக்கொண்டிருந்த நாகப்பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக, படம் விரித்து, தன் சின்னஞ்சிறிய நாக்கை உள்ளிழப்பதும் வெளியியே நீட்டுவதுமாக..மெல்லிய விளக்கொளியில், அம்மாவையே உற்று பார்த்து கொண்டிருந்தது!
நான் பயத்தில் அலறினேன்!
ஆனால், அம்மா எந்த பதட்டமும் இல்லாமல், நிதானமாக ஒரு கையால் ‘ தீவனப் பெட்டியை எப்படி நிமிர்தினாளோ அப்படியே கொஞ்சம் கொஞ்சாக மூடி கொண்டிருந்தாள்!
நாகமும் எந்த சீற்றமும் இல்லாமல், தன்னை உள்ளிழுத்து கொண்டதை பார்க்கும் போது, பயத்திலும் எனக்கு பிரமிப்பாக இருந்தது!
அடுத்த வினாடிகளில், முற்றத்தில் நடுவில் இருந்த துளசி மாடத்தின் முன்னே அமர்ந்து கொண்டு, அம்மா, கண்மூடி அசைவற்று தியானிக்க தொடங்கினாள்!
நான் அம்மாவையே உற்று பார்த்து கொண்டிருந்தேன்!
இப்போது, இருள் விலகி பகல் வர தொடங்கியிருந்தது!
மெதுவாக கண்களை திறந்த அம்மா , “*பயப்படாதேடா! இது வாழும் பாம்பு , நம்மள ஒன்னும் பண்ணாது*!” என்று சொல்லிய படியே தீவனப் பெட்டியை மறுபடியும் நிமிர்த்தினாள்!
பாம்பு எங்கே போனது என்றே தெரியவில்லை!
விளகொளியில், பாம்பு அம்மாவை ஒரு போடு போட்டிருந்தால், தாயற்ற பிள்ளைகளாகியிருப்போம்!
குடும்பம் அன்றே,சின்னாபின்னமாக ஆகியிருக்கும்!
தூக்கத்திலிருந்து எழுந்து வந்த அப்பா, நடந்த விஷயத்தை என்னவென்று கேட்டு விட்டு ,”அட இந்த வீட்டுல நானே எத்தன தடவ அத மிதிச்சிருக்கேன்… ” என்று சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு வாசல் பக்கம் போய்விட்டார்!
அம்மாவும் தன் பங்குக்கு பாம்பை தெரியாமல் மிதித்து விட்ட, தொட்டு விட்ட கதைகளை நிறைய கூறினாள்!
இது நடந்து 55 வருஷத்துக்கு மேல் இருக்கும்!
அம்மா இன்று உயிருடன் இல்லை!
கிராமத்திலிருந்து, சென்னைக்கு வந்து, நாகவள்ளியை கரம் பிடித்து, 25 வருடங்களுக்கு மேலாகிவிட்டது!
இயற்கை சூழலோடு இருக்க வேண்டும் என்பதால், புற நகரில், ஏரிக்கரையருகே, கிரவுண்டோடு என்னை தனி வீடு கட்ட வைத்து விட்டாள்!
அவள் விரும்பிய படியே வீட்டை சுற்றி செடி, கொடி, மரங்கள்!
அம்மாவை போலவே, இவளும் ஆடி, தை … வெள்ளி கிழமைகளில் புற்றுக்கு பால் தெளிக்கிறாள்!
கேட்டால், வழக்கம் என்பாள்.
நாகவள்ளி என்று இவளுக்கு ஏன் பெயர் வைத்தார்கள்? என்று பல முறை இவளிடமும் அவர்கள் வீட்டிலும் கேட்டுவிட்டேன்!
யாருக்கும் சரியான பதில் சொல்ல தெரியவில்லை!
அது போகட்டும், இங்கும் வீட்டிற்கு டெய்லி ஒரு பாம்பு வருகிறது! அது அட்டன்டெஸ் ரிஜீட்டரில் கையெழுத்து போடாதது ஒன்றுதான் குறை!
ஆறு அடி நீளம்! தடித்த, சாம்பல் நிறம்! பார்தாலே அலற தோன்றும்!
சில பல முறை அதை அடித்து விரட்ட முயற்சி செய்திருக்கிறேன்!
அப்போதெல்லாம், நாகவள்ளி என்னை தடுத்து விடுவாள்!
“அதுக இடத்துலதான் நாம இருக்கோம்! தெரிஞ்சுக்கோ!” – என்பாள்!
போன வாரம் அப்படி தான், தோட்டத்திற்கு வந்த பாம்பு ஜன்னல் வழியாக, வீட்டுக்குள் வந்து விட்டது!
துணிமணிகள் அடுக்கிய அலமாரிக்குள் புகுந்து விட்ட பாம்பை எப்படி வெளியே அனுப்புவது?
“தன்னால அது போய்டும், பேசாம உன் வேலையை போய் பார்!” என்று சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு சமையலறைக்குள் நுழைந்து விட்டாள்!
இவளுக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது?
வீட்டிற்குள் பாம்பு இருக்கிறது என்று தெரிந்த பிறகும் ,அந்த வீட்டில் நிம்மதியாக மனுஷன் தூங்க முடியுமா? அல்லது தூக்கம்தான் வருமா?
என் வீட்டிலிருந்து, வனத்துறை அலுவலகம் 3 கிலோ மீட்டர் தூரம்தான்!
அவள் பதிலுக்கு காத்திராமல், ஹுரோ ஹோண்டாவை ஸ்டாட் செய்தேன்!
பின்னாலேயே ஓடி வந்த அவள் “வேண்டாம் ! நான் *ஸ்ரீ கருட தண்டகம்*, ஸ்லோகம் சொல்ல போகிறேன்! பாம்பு போய்டும்! வா! ” என்றாள்!
இவள் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுகிறாள்!
பாம்பு பால் குடிக்குமா? தெரியாது!
இவள் சொல்லும் ஸ்லோகத்தை செவிகளே இல்லாத பாம்பு எப்படி கேட்கும்? -அதுவும் தெரியாது!
விஞ்ஞானத்தை விடுத்து, மெய்ஞானத்தை நம்பும் இவள் பேச்சை எப்படி கேட்பது?
இனி, நொடியும் காத்திருக்க நான் தயாராக இல்லை!
அரை மணி நேரத்தில், பாம்பு பிடிப்பவனோடு வந்து விட்டேன்!
நாகவள்ளி வீட்டின் வாசலலியே நின்று கொண்டிருந்தாள்!
மெல்லிய குரலில் ஸ்லோகத்தை, அவள் உதடுகள் இன்னமும் முனுமுனுத்து கொண்டிருந்தன!
கூடவே, என்னை பார்த்து, கண் அசைத்து ஜாடை காட்டினாள்!
எதிரே, மரத்தின் மீது பாம்பு சுருட்டி கொண்டு தலை கீழாக தொங்கி கொண்டிருந்தது,
நாகவள்ளி என்னை பார்த்து சிரித்தாள்!
பாம்பும் என்னை பார்த்து சிரிப்பது போல் இருந்தது!
தொடர்புள்ள சிறுகதைகள்
உண்மைச் சுதந்திரம்
அல்போன்ஸ் மோசஸ்
August 25, 2026
கிழக்கின் வெளிச்சம்
தாட்சாயணி
August 25, 2026
அந்த நிமிடம்
சந்திரகௌரி சிவபாலன்
August 25, 2026