பயண ரேகை
கதையாசிரியர்: சிங்கை மா.இளங்கண்ணன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2026
பார்வையிட்டோர்: 65
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிராங்கூன் சாலையில் உள்ளது அருள்மிகு வீரம்மா காளியம்மன் கோவில். சிலர் சுண்ணாம்புக் கம்பம் காளியம்மன் கோவில் என்றும் சொல்லுவர். அந்தக் கோவிலுக்கு எதிரில் உள்ள இரண்டடுக்குக் கட்டிடத்தின் காலை நேரநிழல் நீண்டு கிடந்தது. அது நேரம் செல்லச்செல்ல சிறுகச் சிறுகத் தேய்ந்து கரைந்து கொண்டே வந்தது. ஐந்தடியில் சோதிடம் பார்த்துக் கொண்டிருந்த கிளிச் சோதிடரை அந்த இடத்தில் இருந்து விரட்ட வெயிலுக்கு வழி விட்டது.
சோதிடர் எழுந்து வேட்டியை உதறிக் கட்டிக் கொண்டார். காலை முதல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்ததால் கால்கள் இற்றுவிட்டது போல் இருந்தன. காலையில் இருந்து அவருக்கு மனமும் சரியில்லை. ஒரே கவலை. தமிழகத்தில் உள்ள மனைவி மக்கள் நினைவு வந்து விட்டதால் மனம் அவர்களையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஊருக்குப் போக வேண்டும் என்று நினைத்தார். ஆனால் எப்போது போவது என்றுதான் சோதிடராகிய அவருக்கே தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் காசு பணத்தைச் சேர்த்துக் கொண்டால் நல்லது என்று எண்ணிக்கொண்டு இங்கு தனிக்கட்டையாகக் காலத்தை ஓட்டினார்.
எழுந்தவர் காலாற அங்குமிங்குமாக நடந்து நெட்டி முறித்தார். சொக்கு விட்டது போல் இருந்தது; சோர்வு களைந்தது. ஆனால் மனம்? அது இறுக்கமாகவே இருந்தது.
பிறகு கோரைப் பாயைச் சுற்றிக் கக்கத்தில் வைத்துக் கொண்டார். ஒரு கையில் கிளிக் கூண்டு தொங்கியது! அந்தக் கூண்டுக்குள் ஒரு கிளியும் சிறைப்பட்டிருந்தது.
நண்பகலுக்குப் பிறகு அவர் கோவில் ஐந்தடியில் இருந்து சோதிடம் பார்ப்பது வழக்கம். வழக்கம்போல் அன்றும் அவர் கோவில் ஐந்தடியில், மதிற் சுவரை ஒட்டிப் பாயை விரித்தார்.
கிளிக் கூண்டை எடுத்தப் பாய் விளிம்பில் வைத்தார். அதற்கு அருகில் உரிமத்தையும் மயில் தோகையையும் சாய்த்து வைத்தார். சோதிடம் பார்க்க வருவோர் அமர்வதற்குரிய சின்னஞ் சிறு சித்திரக்குள்ள நாற்காலி பாயை ஒட்டி இடம் பிடித்துக் கொண்டது.
கிளிச் சோதிடரின் முறுக்கிவிட்ட மீசை அந்தக் கோவிலுக்குள் உள்ள மதுரைவீரன் சாமியின் மீசையை நினைவு கூர்ந்தது. வெள்ளை வேட்டியும் சலவை மடிப்புக் கலையாத சட்டையும் அவருக்கு எடுப்பாக இருந்தன. கட்டம் போட்ட அகலக் கரை துண்டு அவர் தோளை அணிசெய்தது. நெற்றியில் திருநீறும் குங்குமமும் சித்திரமாய்ச் சிரித்தன.
வெற்றிலையை அசைபோட்டுக்கொண்டே இருந்த அவருடைய வாய் மனைவி மேல் உள்ள அன்பை வெளிச்சம் போட்டுக் காட்டியது; அப்படிச் சிவந்திருந்தது. ‘புளிச்’ என்று எச்சிலைச் சாய்க்கடையில் துப்பிவிட்டுத் தோளில் கிடந்த துண்டுத் தலைப்பால் வாயை ஒற்றித் துடைத்து கொண்டார். மீசையைச் சுட்டுவிரலால் சரிப்படுத்தி முறுக்கிவிட்டுக் கொண்டு கிளிக் கூண்டுக்குப் பக்கத்தில் சம்மணம் கூட்டி அமர்ந்தார்.
அவருக்குக் கிளிச் சோதிடமும் கைரேகையும் தெரியும். ஏதோ கொஞ்சம் பிழைப்பு நடத்தும் அளவுக்குக் கைரேகையைக் கற்று வைத்திருந்தார். யாரிடம் எப்படிப் பேசுவது என்பது அவருக்குக் கைவந்த கலை. சக்திதாசனின் “ரேகை சாஸ்திரம்” எனும் நூல்தான் அவருக்குச் சோதிடக் குரு! அந்த நூல் காட்டிய வழியைப் பின்பற்றிச் சோதிடம் பார்த்து வருகிறார். ஓரளவு வருவாயும் வந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வருவாயில் சேர்த்த பணத்தைக் கொண்டுதான் அண்மையில் வீட்டைக் கட்டினார். இங்கில்லை, ஊரில். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது அவரைப் பொறுத்தவரைப் பொய்யாக இருந்தது! கல் வீடு கட்டும் அளவுக்கு ரேகை சாஸ்திர நூல் அவரை உயர்த்தியது. கண்ணேறு படாமல் இருக்கப் புதிய வீட்டு வாசலில் பூசணிக்காய் கட்ட வைத்தது.
தோளில் கிடந்த துண்டை எடுத்துத் தொடையில் போட்டுக் கொண்டு எதிரே குடிகொண்டிருக்கும் சுண்ணாம்புக் கம்பம் அருள்மிகு வீரம்மா காளியம்மனை மனத்திற்குள் நிறுத்தினர். கைகளைக் கூப்பிக் கும்பிட்டுவிட்டு கிளிக்கூண்டுக் கதவைத் திறந்தவாறு, ‘மணி’ என்று விளித்தார்.
கிளியின் பெயர்தான் மணி!
மணிக்கு எல்லாம் சோதிடர்தான். அவரேதான் உலகமும். மரக்கிளை என்றால் என்ன என்று அது அறியாது.
கொஞ்ச நாளைக்கு முன் மணியுடன் இன்னொரு கிளி இருந்தது. அதைப் பார்த்துத்தான் மணி தொழிலையே கற்றுக்கொண்டது. இப்போது அது இல்லை. பூனை அதற்குக் காலனாக இருந்து உயிரைக் குடித்துவிட்டது.
அந்தக் கிளி செத்த பிறகு மணி தனியாகவே இருந்து வருகிறது. துணைக்கு ஒரு கிளிகூட இல்லை. முற்றிய பயிற்றங்காயையும், பப்பாளிப் பழத்தையும், ஆப்பிள் பழங்களையும் எத்தனை நாளைக்குத் தான் தின்பது? அத்தனையும் புளித்தன. நெல்மணிகூட கசந்தது.
சோதிடர் “மணி” என்று அழைத்ததும் கூண்டை விட்டுக் கிளி வெளியே வந்தது. வரிசையாகப் பரப்பிக் கிடந்த அதிர்ஷ்ட சீட்டுகளை நோக்கித் தத்தித் தத்திச் சென்றது. அவற்றுள் இருபத்தேழு சீட்டுகளுள் ஒன்றை அலகால் கவ்வி இழுத்து எடுத்து அவரிடம் கொடுத்தது. அதற்காக அவர் கொடுத்த நெல் மணியைக் கொறித்தது. அது பிறந்த நேரமோ என்னவோ இதுவே அதன் வாழ்க்கை வட்டமாக இருந்தது.
சோதிடர் சீட்டு எண்ணைப் பார்த்தார். அவருக்கு வியப்பாக இருந்தது. காலையில் எடுத்துப் பார்த்த அதே சீட்டுத்தான். சீட்டின் உள்ளடக்கம் புரிந்தது. அதே நேரத்தில் மனத்தில் பளுவும் அழுத்தியது. ஆகூழ்சீட்டைப் பிரித்தார்.
“கைப்பொருள் இழக்க நேரும். கவலையது வந்து சேரும்…”
கண்களை இறுக மூடிக்கொண்டு, அம்மா தாயே “நீதாம்மா எனக்குத் துணை” என்று வேண்டிக்கொண்டார்.
நெல்லைக் கொறித்துவிட்டு கூண்டுக்குள் போகாமல் வெளியிலேயே நின்ற கிளியைப் பார்த்தார். கிளியும் தலையைச் சாய்த்துக் கொண்டு அவரைப் பார்த்தது.பிறகு தொழில் நடத்துவதற்கு வாங்கி வைத்திருக்கும் உரிமத்தையும் திரும்பத் திரும்பப் பார்த்தது. உரிமையோடு கண்ணாடிச் சட்டத்தை அலகால் பற்றி, கூண்டின் மேல் தாவி ஏறியது. கூண்டுக்கு மேல் வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகப் பெருமானைப் பார்த்துவிட்டு மீண்டும் இறங்கியது. கூண்டு வாயிலை ஒட்டிக் கிடந்த பயிற்றங்காயைத் தின்று பார்த்தது. அது சுவைக்கவில்லை! ஆனால், “கீ…. கீ….” என்ற ஒலி மணிக்குத் தேனாக இனித்தது.
“கீ… கீ…”
வழக்கம்போல் கேட்கும் ஒலி தலைக்கு மேல் கேட்டதும் வேப்ப மரத்தைப் பார்த்தது. மரக்கிளையில் அழகான பச்சைக் கிளி. அதைப் பார்த்ததும் உள்ளம் குளிர்ந்தது, மெய் சிலிர்த்தது. மணி பட்டுச் சிறகைப் படபடவென்று அடித்தது.
“ம்… உள்ளே ·போ. கரும்பூனை சுத்திக்கிட்டுத் திரியுது” என்றார் சோதிடர்.
சோதிடரின் சொல் மந்திரமாக ஒலித்தது. மணி வாலை மடக்கிக் கொண்டு கூண்டுக்குள் சென்றது. சோதிடர் ஒரு நெல்மணியைக் கொடுத்தார்.
அப்போது “சோசியம் பார்க்கணுங்க” என்னும் பெண் குரல் கேட்டது. சோதிடர் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு ஏறிட்டுப் பார்த்தார். எதிரே ஓர்.இளம் பெண்ணும் நாற்பது வயது மதிக்கதக்க அவள் தாயும் நின்றனர். தாய் முகத்தில் கவலை ரேகை ஓடுவது அவருக்குப் பளிச்சென்று தெரிந்தது.
“பார்க்கலாம் உட்காருங்க” என்றவாறு சின்னஞ் சிறு குட்டி நாற்காலியை அவளுக்கு முன் தள்ளி வைத்தார்.
தாய் அந்த நாற்காலியில் அமர்ந்தாள். மகள் கீழே கிடந்த பாயில் மண்டியிட்டு அமர்ந்து “மினிஸ்கேட்” தலைப்பை முட்டிக்கால் மறைய இழுத்துவிட்டபடி அவரைப் பார்த்தாள். வைத்தாற்போல் அப்போது அங்கு
சொல்லி கட்டிளங்காளை ஒருவன் வந்து நின்றான். அவன் கிளிச் சோதிடம் பார்ப்பதாக வந்து நிற்கவில்லை. அவனுக்குக் கிளிச் சோதிடத்தில் நம்பிக்கை இல்லை. அங்கு அமர்ந்து சோதிடம் பார்த்துக் கொள்ளும் பருவக்கிளியைப் பார்ப்பதற்காகவே வந்து நின்றான். பார்த்தான். பலமுறை பார்த்த காதலியின் என்றாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக் முகம் கொண்டிருக்கலாம் போல் இருந்தது. அந்த அழகுச் சிலையைக் கண்குளிரப் பார்த்தான். அவளும் பார்த்தாள்.
அவர்கள் பார்த்துக்கொள்வதைச் சோதிடரும் பார்த்தார்; அவர் கணித்தார். எத்தனையோ பேரை இப்படி பார்த்திருக்கிறார். அவர்களின் சாதகத்தைக் கணித்துக் கொடுக்கவில்லையென்றாலும். அவர்களுக்குக் கிளிச் சோதிடமும் கைரேகையும் பார்த்திருக்கிறார்.
“பெயரையும் பிறந்த நாளையும் சொல்லுங்கம்மா” என்றபடி சோதிடர் தாளில் “உ சிவமயம்” போட்டார். அதற்குக் கீழே பெண்ணின் பெயரையும், பிறந்த நாளையும் அவள் சொல்லியபடி எழுதிக்கொண்டு விரல்களால் கணக்குப் போட்டார்.
“இப்ப உங்களுக்கு இருபத்தைந்து வயசு ஆச்சே!” என்றார்.
அவரையே பார்த்துக்கொண்டிரூந்த தாய் “ஆமாங்க! எப்பக் கலியாணம் நடக்கும்ன்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க” என்றாள்.
அவள் சொல்லியதைக் கேட்டதும் சோதிடர் மனம் குளிர்ந்தது. எதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் முனைந்தாரோ அதைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சி, அவருக்கு! பெருமைப்பட்டுக் கொண்டார். தன் திறமையை மனத்திற்குள் மெச்சிக்கொண்டு,
“வரன் வந்திருக்கணுமே!” என்றார்.
“வந்துச்சு… வரலேன்னு சொல்லலே… ஆனா இதுக்குத்தான் வந்த மாப்பிள்ளைகளில் யாரையுமே பிடிக்கலே. எல்லாரையும் வேண்டாம் வேண்டாம்ன்னு தட்டிக் கழிச்சிடுச்சு!” என்றாள் தாய்.
“எங்கே கையைக் காட்டும்மா!” என்றார் சோதிடர்.
அவள் கையை நீட்டியதும் கையின் அமைப்பைப் பார்த்துவிட்டு, பூதக்கண்ணாடியை எடுத்துக் கையிலுள்ள சிறுசிறு சல்லி ரேகைகளை அளந்தார். ஒவ்வொரு கோளின் நிலையையும் ஆராய்ந்தார்.
விரல்களை வளைத்துப் பார்த்துவிட்டு, புறங்கைத் தோற்றத்தைப் பார்த்தார். விரல்களைச் சேர்த்து ஓட்டைக் கையா என்று நோட்டமிட்டுவிட்டு ஆயுளின் நீளத்தை அளந்தார். ஆயுள் கெட்டியாக இருந்தது. பாச ரேகையைப் பார்த்தார். அதுதான் காதல் ரேகை. அந்த ரேகை நன்கு பதிந்திருந்தது.
ஆராய்ச்சி முடிந்தது.
“இது வரைக்கும் உங்க மகளுக்குக் கலியாணம் ஆகிக் குழந்தை குட்டி பிறந்திருக்கணும். ஆனால் வந்த வரனை வேண்டாம்ன்னு சொல்லியிருக்கிறாங்க. இதுக்குக் காரணம் என்னுன்னு கேட்டா அதுதான் புத்திரேகை! அது ரெண்டுபட்டிருக்கு….!” என்றார்.
“நீங்க சொல்லுறது சரிதாங்க. நல்ல மாப்பிள்ளைகள் வந்துதாங்க கேட்டாங்க. இதுதாங்க சொல் பேச்சுக் கேட்க மாட்டேனுட்டு இருக்கு. இப்ப வயசும் ஏறிக்கிட்டே இருக்கு. நானும் மடியில் தீயைக் கட்டிக்கிட்டு இருக்கிறேன்! வயசு போனா திரும்புமாங்க?” என்றாள் தாய்.
“போனதைப் பற்றி ஏன் கவலைப்படுறீங்க? உங்க மகளுக்குக் கலியாணப் பாக்கியம் இருக்கு. உங்கள் மகள் மனத்துக்குப் பிடித்த நல்ல வரன் இன்னும் இரண்டு மாதத்தில் வரப்போகுது! கவலைப் படாதீங்க!” என்று சிரித்தார்.
அவர் பேச்சு தாய்க்கும் மகளுக்கும் இனித்தது. அருகில் நின்ற இளைஞனின் நெஞ்சமும் குளிர்ந்தது.
“நீங்க சொல்லுறது பலிக்கணுங்க!” என்று தாய் சிரித்தாள்.
“பலிக்கும்! எத்தனையோ பேருக்கு நான் சொல்லியது பலிச்சிருக்கே!” என்றவாறு சோழியை எடுத்தார். கைக்குள் வைத்துப் பொத்திக் கொண்டு எதையோ முணுமுணுத்தார். பிறகு கும்பிட்டுவிட்டுச் சோழியைக் குலுக்கிப் போட்டார். மீண்டும் ஒரு முறை அதைப்போலவே குலுக்கிப்போட்டுப் பார்த்தவர்,
“இரண்டு முறையும் குறி நல்லாவே விழுந்திருக்கு. நீங்க கும்பிடுற தெய்வம் உங்களுக்குப் பக்கத் துணையாக இருக்கு! எல்லாம் நல்லபடியாக நடக்கும்!” என்றார்.
“நல்ல வரனா அமையுமாங்க?” என்று தாய் கேட்டாள்.
“அமையும்! நீங்க கவலைப்படவே வேண்டாம். அம்மனை வேண்டிக்கிட்டு இருங்க!” என்றபடி பார்வையைத் திருப்பினார். கிளிக் கூண்டின் சின்னஞ் சிறு கம்பிக் கதவைத் திறந்தபடி, “மணி” என்றார்.
கிளி ஆடி அசைந்து வந்தது.
தலையைச் சாய்த்துச் சோதிடம் பார்க்க வந்திருந்த பச்சைக் கிளியைப் பார்த்தது. அந்தப் பார்வை, ‘எல்லாருக்கும் சோதிடம் பார்க்கிறார். அவர்கூடவே இருக்கும் எனக்குச் சோதிடம் பார்க்க மாட்டேங்கிறாரே’ என்று சொல்வது போல் இருந்தது.
“மணி ஏன் நிற்கிறே?” என்றார் சோதிடர்.
கிளி தத்தித் தத்திச் சென்று பரப்பிக் கிடந்த ஆகூழ்சீட்டில் ஒன்றை அலகால் கவ்வி சோதிடரிடம் எடுத்துக் கொடுத்தது.
“பார்த்திங்களா அம்பாள் திருவுருவமே வந்திருக்கு. பட்ட துன்பமும் நீங்கும்… பளு குறையும்… பீடையும் பிணியும் விலகும்… இனிமேல் நினைத்தது எல்லாம் நிறைவேறும், தொட்டது துலங்கும், கவலை வேண்டாம்… உங்களுக்கு ஒரு குறையும் வராது!” என்றார்.
தாய் நெஞ்சில் தேன் சிந்தியது. மூன்று வெள்ளியை அவரிடம் கொடுத்துவிட்டு எழுந்தாள். இளைஞன் சிரித்தபடி சின்னஞ்சிறு நாற்காலியில் அமர்ந்தான். அவன் சோதிடம் பார்க்க வேண்டும் எனும் ஆசையில் அமரவில்லை. காதலியின் மனத்தைக் குளிரவைக்க வேண்டும் எனும் ஆசையில் அமர்ந்தான்.
சோதிடர் அவனைப் பார்வையால் அளந்தார். அவன் தோற்றத்தைப் பார்த்து அவனைக் கணிக்கத் தொடங்கினார்.
சோதிடர் அவனுடைய பெயரையும் பிறந்த தேதியையும் எழுதிக் கொண்டு கை அமைப்பைப் பார்த்தார். சுக்கர மேடு உப்பி இருந்தது.
“உங்கள் மனம் ஒரு பெண்ணை நினைச்சுக்கிட்டு இருக்கணுமே!” என்று அவன் என்று அவன் மனத்தில் உள்ளதை மறைமுகமாகக் கேட்டார்.
சோதிடர் கேட்ட கேள்வி அவன் காதில் தேனாகப் பாய்ந்தது. அவன், “ஆமாம்” என்றான்.
“நீங்க கவலைப் படாதீங்க. நீங்கள் விரும்பும் பெண்ணைத் தான் திருமணம் செய்வீங்க! பிள்ளை குட்டிக்கும், பணம் காசுக்கும் குறைவே இருக்காது. ஆமா பெண்ணோட பெயரும் பிறந்த நாளும் தெரியுமா” என்று கேட்டார்.
“தெரியும்” என்று பார்வையைப் பக்கத்தில் நின்றவர்கள் மேல் ஓடவிட்டான். தாயும் மகளும் பார்த்துக் கொண்டு நிற்பது தெரிந்து. பெண்ணின் பெயரைச் சொல்ல அவனுக்குக் கூச்சமாகவும் இருந்தது. சிரித்தபடியே சோதிடர் வைத்திருந்த தாளை வாங்கி அதில் பெண்ணின் பெயரையும் பிறந்த தேதியையும் எழுதி அவரிடம் கொடுத்தான். சோதிடர் படித்துப் பார்த்தார். அதே சுருக்கில் அங்கு தாயுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணைப் பார்த்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பின் உட்பொருள் அவளுக்கும் புரிந்தது! தன் பெயரைத்தான் எழுதிக் என்று கொடுத்திருப்பார் புரிந்துகொண்ட அவள் முகத்திலும் செண்பகப் பூவும் மலர்ந்தது!
சோதிடர் சோழியை எடுத்து இரண்டு முறை குலுக்கிப் போட்டுக் குறி பார்த்துவிட்டு,
“குறியும் நன்றாக விழுந்திருக்கு. எதைத் தொட்டாலும் துலங்கும்” என்றவாறு மணிக் கிளியைத் திறந்துவிட்டார்.
மணி ஆடி அசைந்து வந்தது. சீட்டுக்களுள் ஒன்றைத் தெரிவு செய்து எடுத்தது.
கிளிச் சோதிடர் வழக்கம்போல் ஒரு நெல்மணியை அதற்குக் கொடுத்து விட்டு உறைக்குள் இருந்த சீட்டை எடுத்துப் பார்த்தார்.
மீனாட்சி அம்மனின் திருவுருவப் படம், கையில் கிளியுடன் காட்சியளித்தாள். அந்தப் படத்தை மணிக்கிளியும் பார்த்தது. அம்மனின் கையில் உள்ள கிளியைப் பார்த்ததும் மணிக்கிளியின் மனமும் குளிர்ந்தது.
அப்போது வழக்கம்போல் ஒலிக்கும் கிளி மொழி கேட்டது.
“கீ.. கீ..”
கோவில் மூலையில் நின்ற வேப்பமர உச்சியில் இருந்து “கீ… கீ…” என்று கேட்டது. அந்தக் கிளியின் மொழி மணிக் கிளியின் காதில் தேனாக ஒலித்தது, இனித்தது.
அந்த மகிழ்ச்சியில் மணி மேலே அண்ணாந்து பார்த்துவிட்டு “பட பட” என்று இறக்கையை அடித்தது; பலமுறை அடித்தது; பயன் கிட்டியதால் அடித்துக்கொண்டே இருந்தது. மணியின் முயற்சி வீண் போக வில்லை. உயரச் செல்லச் செல்ல அடித்துக் கொண்டே இருந்தது; மேலெழுந்து பறந்தது. மேலே செல்லச் செல்ல “கீ.. கீ..” என்று அழைத்தது.
மணிக்கு விடுதலை! அது கண்ட கனவும் நிறைவேறியது.
இளைஞனும் பெண்ணும் பார்த்தனர். வேப்பமரத்தில் சோடி சேர்ந்திருக்கும் கிளிகளைப் பார்த்ததும் அவர்கள் மனமும் சிறகடித்துப் பறந்தது:
கிளிச் சோதிடர் பலன் கூறுவதை நிறுத்தி விட்டு அண்ணாந்து பார்த்தார். பறிகொடுக்கக் கூடாததைப் பறிக்கொடுத்துவிட்ட அதிர்ச்சி!
பறந்து சென்ற கிளிக்குப் பாச ரேகை பதிந்திருக்கிறதா என்று அவர் பார்க்கவில்லை. “ச்சே, இறக்கையை வெட்ட மறந்துட்டேனே” என்று ஆற்றாமையால் அலட்டிக் கொண்டார்.
வாய் சிவக்கச் சிவக்கப் போட்டிருந்த வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டுத் தன் வலக்கையை விரித்து சந்திர மேட்டைப் பார்த்தார். சந்திர மேட்டில் குறுக்கிட்ட ரேகை குங்குமச் சிவப்பில் தெரிந்தது.
ஆம், அது பயண ரேகை.
– தூண்டில் மீன், முதல் பதிப்பு: சூலை 2001, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
![]() |
1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அடடா மழைடா… அடைமழைடா?
வளர்கவி
October 24, 2026
வீடு பேசும் நினைவுகள்
கல்பனா ராஜகோபால்
October 24, 2026
அழகு சிரிக்கிறது
இரா.துரைமாணிக்கம்
October 24, 2026
