கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 15, 2026
பார்வையிட்டோர்: 296 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

அந்த கால் டாக்ஸி நாகர்கோவிலிலிருந்து பத்மநாப புரம் பேலஸை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. உள்ளே உட்கார்ந்திருந்த ஜெயமுரளி டிரைவரைப் பார்த்துத் தலையைத் திருப்பி மெல்லக் கேட்டான்.

“உங்களுக்குச் சொந்த ஊர் எது?”

“மினர்வா கார்டன், சிலிகுரி டிஸ்டிரிக்ட். வெஸ்ட் பெங்கால்” என்றான் டிரைவர் ஓட்டுவதில் கவனம் பிசகாமல்.

“ஓ.. ! நீங்க , குடும்பமா இங்க இருக்கீங்களா?”

“இல்லை! குடும்பமெல்லாம் பெங்கால்ல.. நான் என் பிரண்ட்ஸோட அஞ்சுகிராமத்துல ரூமெடுத்துத் தங்கீருக்கேன். மாசாமாசம் சம்பளத்தை ஊருக்கு அனுப்பீடுவேன்” என்றான் முகத்தை இவன் பக்கம் திருப்பாமலேயே..!

“சரி, சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க? எங்க ஊர்ல நெறைய பேருக்கு நீங்கெல்லாம் இங்க எல்லா வேலைக்கும் வந்ததுனால தான் வேலையே போயிடுச்சுன்னு சொல்றாங்களே? நீங்க என்ன நினைக்கறீங்க?”

“அப்படி இல்லை சார், நல்ல வேலைக்காரனுக்கு எங்கிருந்தாலும் வேலையுமுண்டு வாழ்க்கையுமுண்டு” என்றார் டிரைவர்.

பேசிக் கொண்டிருக்கும்போதே எதிரில் ஒரு ஸ்பீடு பிரேக்கர் வந்தது. ரோட்டில் எதிரில் இரண்டு பேர் டூவீலரில் ஒண்ணா பயணித்து வந்தவர்கள் அதை(ஸ்பீடுபிரேக்கரை)க் கவனிக்காமல் ஏறி இறங்கித் தடுமாறி விழுந்து முட்டியைப் பேத்துக் கொண்டு முணகினபடியே எழுந்ததை இவர்கள் பார்த்தார்கள். காரின் வேகத்தை மட்டுப்படுத்தி ஸ்லோவாக்கி டிரைவர் சொன்னார்…” காலங்காத்தால பாத்தீங்களா உங்க ஆளுங்க மப்படிச்சு போதைல விழுந்து தரையில் புறள்றானுக!”

வண்டி அவர்களைத் தாண்டிப் போகையில் ஜெயமுரளி நினைத்தான். இவன் சொல்றது சரிதான். ஆனால், அவன் பேச்சில் நம்மூர்க்காரனுகளை அவன் குத்திக்காட்டும் மட்டம் தட்டும் உரம் தெரிந்தது.

நம்மூர்க்காரங்களில் சிலர் சம்பாதிப்பதில் பாதிக்கு மேல் டாஸ்மாக்கில் காலங்காத்தாலயே செலவு பண்ணீடறாங்கங்கறதை மறுக்க முடியாதுதான்.

டிரைவர் அவனைக் கிண்டினார். “என்ன சார் வாய்டைச்சுப் போயிட்டீங்க? உங்க தப்பு உங்களைக் குத்துதா?” என்றார் நக்கலாக.

“இல்லை நீங்க சொல்றது நியாயம்தான் ஆனா, எனக்கந்த கெட்ட பழக்கமில்லை!” என்றான் கவுரவமாக, ‘தான் எதோ யோக்கியன்’ போல! வண்டி களியக்கா விளை தாண்டி பயணிக்க, ரோட்டின் இருபுறத்திலும் கடைகள்.

டிரைவர் அவனிடம்..

“சார்.. இங்க ஒரு அதிசயம் பாருங்க.. இந்தப் பக்கம் தமிழ்நாடு அந்தப் பக்க கேரளா… கேரளா பகுதியில் லாட்டரி சீட்டு உண்டு எதிரில் தமிழ் நாட்டில் இல்லை” என்றார்.

“நீங்க லாட்டரி சீட்டு வாங்குவீங்களா? லாட்டரி விழுந்தா இப்படி காரோட்டிக் கஷ்டப்பட வேண்டாமில்லே?” என்ற ஜெயமுரளி, “கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க”, லாட்டரி சீட்டு வாங்கும் ஆசை மேலிட ‘இங்க லாட்டரி சீட்டு வாங்கினா விழுமா? இல்ல.. எதாவது ஃபிராடா இருக்குமா’ன்னு கேட்டு, வண்டியிலிருந்து இறங்க எத்தணிக்கையில் டிரைவர் கூலாக…

“சார், குடி மட்டும்தான் மனுஷனுக்கு எதிரின்னு நெனைக்காதீங்க.. லாட்டரி சீட்டுங்கற அதிர்ஷ்டத்தை நம்பற நம்பிக்கையும் அதைவிட மோசமான போதை வஸ்துதான். எனக்கு குடியும் கிடையாது. லாட்டரி சீட்டுல நம்பிக்கையும் கிடையாது. உழைப்பை மட்டுமே நானும் என் நண்பர்களும் நம்பறோம்”னு சொல்லி, வண்டியை ஓரங்கட்டப் போனார் டிரைவன்,

பதறிய ஜெயமுரளி அவசர அவசரமாக “நிறுத்த வேண்டாம்! புரோ! வண்டியை பாலஸுக்கே விடுங்க… அதிர்ஷம் வரும்னு ஜோசியத்தை நம்பி பணத்தைச் செலவழிக்க இருந்தேன். உங்க வாய்வழியா அதிர்ஷ்டமும் ‘போதைனு’ புரிச்சுக்க ஞானம் வந்ததேன்னுன் நினைக்க சந்தோஷமாக இருக்கு!” இறங்க மறுத்து வண்டியை விடச் சொன்னான்.

அதிர்ஷ்டமே…. ‘நீ வருயென நினைத்திருந்தேன். அதிர்ஷ்டமே நீ வந்தாய்…ஞானமாய்!’

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *