முழுக்க நனைந்த பின்னே..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2026
பார்வையிட்டோர்: 60 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொன்னம்பலத்திற்குத் துப்புரவு செய்யும் வேலை.

மாலையில் தோட்ட வேலையும் செய்து வந்தான்.

தோட்ட வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் குளித்து முழுகிவிட்டுக்கடைக்குச் சென்றான்.

ஒரு ‘சுக்கு மான் குட்டி’யும் (கால் குப்பி சாராயமும்) நிலக்கடலையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

சாராயத்தைக் குவளையில் ஊற்றிக் கண்ணை மூடிக்கொண்டு மருந்தை குடிப்பதைப்போல் குடித்தான். ‘மான் குட்டி’ கசப்பாகவும் காட்டமாகவும் இருந்தது. வயிற்றுக்குள் சென்றதும் துள்ளியது.

அவன் அணிலாக மாறிவிட்டான்.

‘சடக் சடக்’ என்று நிலக்கடலையை உடைத்து வாயில் போட்டுக்கொண்டான்.

வயிறு எரிந்து கொண்டிருந்தது.

அவன் மனைவி காளியம்மை சோறு எடுத்து வைத்துக் கருவாட்டுக் கறியை ஊற்றினாள்.

பொன்னம்பலம் சோற்றைப் பிசைந்து கப கப என்று எரிந்து கொண்டிருந்த வயிற்றுத் தீயை அணைத்துக்கொண்டிருந்தான். உள்ளே இருந்த சூடு வெளியேறிக்கொண்டிருந்தது.

“என்னடி கறி வச்சிருக்கே; சப்புன்னு இருக்கு; சுள்ளுன்னு வச்சா என்னடி?” என்றான்.

“உரைப்பாக வைத்தால் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்களே’ என்று அவன் மனைவி சொல்ல நினைத்தாள்.

ஆனால் அவள் சொல்லவில்லை. “சொன்னால் பாட்டுக்கிடைக்குமே” என்று இருந்துவிட்டாள்.

வாசல் பக்கம் காலடி ஒசைகேட்டது.

சாப்பிட்டுக் கொண்டிருந்த பொன்னம்பலம் திரும்பிப் பார்த்தான்.

வந்துகொண்டிருந்த வெள்ளை வேட்டியைப் பார்த்ததும் அவனுக்குச் சாப்பிட மனம் வரவில்லை.

சாப்பிட்டும் சாப்பிடாமலும் எழுந்து கையைக் கழுவினான். “என்னங்க பொன்னம்பலம், தேடிக்கிட்டு வர வச்சிட்டீகளே! இது உங்களுக்கே நல்லா இருக்கா?” என்றார் வந்திருந்த வெள்ளை வேட்டிக்காரர்; ஆனா, ழானா, மூனா. அவர் பேச்சில் தீ பறந்தது.

கையைக் கழுவிவிட்டு விரைந்து வந்த பொன்னம்பலம், “இப்படி வாங்க” என்றான்.

அவர் வாசல் பக்கம் வந்தார்.

“வந்து பாக்கலாம்ன்னுதான் நினெச்சேன். ஆனா…” என்று இழுத்தான்.

“என்ன ஆனா ஆவன்னான்னு. இரண்டாவது கிஸ்தியிலேயே இப்படி மக்களிச்சிட்டீகளே! மறு மாதமும் ஆகப்போகுதே” என்றார் அவர்.

“எப்படியும் தவணைப் பணத்தைக் கொண்டுகிட்டு வந்து கொடுத்துடுறேன்”

“இப்படி எத்தனையோ தடவை சொல்லீட்டீங்களே!”

“திங்கக்கிழமை கட்டாயம் வந்து பாக்குறேன்!”

“இதோட எத்தனையோ திங்கக்கிழமை ஆச்சே! ஆமா, எப்பப் பாத்தாலும் திங்கக்கிழமை திங்கக்கிழமையின்னு சொல்லுறிகளே ஏன்?”

“இந்தத் திங்கக்கிழமை கட்டாயம் வந்து பாக்கிறேன்”

“வந்து வட்டியவாகிலும் கொடுக்கப் பாக்கணும். இல்லேன்னா அப்புறம் என் மேலே வருத்தப்படக்கூடாது. கோடுநாடுன்னு போகும்படியா இருக்கும்” என்று சொல்லிவிட்டு ஆனா ழானா மூனா நடந்தார்.

பொன்னம்பலம் சுற்றும் முற்றும் பார்வையை ஓடவிட்டான். அண்டை வீட்டுக்காரர் கண்கள் அவனுடைய வீட்ட வாசலை மொய்த்தன.

அவன் மனமும் புண்பட்டது.

“அக்கம்பக்கத்துல உள்ளவங்களெல்லாம் பார்கிறாங்கனுகூட நினைச்சுப்பார்க்காமல் இப்படி கத்துறானே!” என்றவாறு வீட்டிற்குள் சென்றான்.

அவன் மனைவி மீண்டும் சோறு போட்டாள். அவள் நெஞ்சம் திக்திக்என்று அடித்தது.

“கொடுத்தவங்க கேட்கத்தானே செய்வாங்க” என்றாள்.

“அதுக்காக?” என்று அவளை முறைத்துப் பார்த்தான்.

அவன் பார்வை பட்டதும் அடிக்குப் பயந்து அவள் பெட்டிப்பாம்பாகிவிட்டாள். வாயடைத்துவிட்டிருந்த காளியம் மையை அவன் ஏற இறங்க ‘ஏதாகிலும் கிடக்கிறதா’ என்று பார்த்தான்.

தாலியைத் தவிர அவள் கழுத்தில் எதுவும் இல்லை. பொன்னம்பலம் எல்லாவற்றையும் அடகுக் கடையில் பாதுகாப்பாக வைத்திருந்தான்.

‘திங்கக்கிழமை கொடுக்கிறேன்னு முதல்ல வந்திருந்த வங்காளிப் பாய்க்கிட்டே சொன்னாரு. இப்ப இவருக்கிட்டேயும் திங்கக்கிழமைன்னு சொல்லுறாரே! எப்படிக் கொடுக்கப் போறாரோ’ என்று எண்ணியபடி நின்றாள்.

பொன்னம்பலம் சாப்பிட்ட கையைக் கழுவிவிட்டு வெளியே வந்தான்.

மீண்டும் ‘மான் குட்டி’ வாங்கும் கடைக்குச் சென்றான்.

‘மான் குட்டி’யை வாங்கி கால்சட்டைப் பைக்குள் பத்திரமாகப் போட்டுக்கொண்டு சற்று தள்ளி இருந்த காக்கா கடைக்குச் சென்றான்.

ஊதுவத்தியும், சூடம் இரண்டு பொட்டலமும், சாப்பிராணியும் வாங்கிக் கொண்டு திரும்பி வந்தான். எல்லாம் கடனுக்குத்தான்!

வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த பழைய மிதிவண்டி நிலையைக் காலால் ‘டக்’ என்று தட்டிவிட்டபடி வண்டியின் கைப்பிடியைப் பிடித்து ஒடித்துத் திருப்பினான்.

‘பிரேக்’ சரியாகப் பிடிக்காத வண்டி மண்சாலையில் கோடுகள் பதித்துக்கொண்டு பறந்தது.

“இந்த நேரத்துல எங்கேயோ போறாரே” என்று நினைத்தபடி காளியம்மை அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

வண்டி விளக்குக் கம்பத் திருப்பத்தில் போய் மறையும் வரை அவள் பார்வையைத் திருப்பவில்லை.


லிம் சூகாங் இடுகாடு.

வாழ்க்கையில் அமைதி காணாதோர் அமைதி கண்ட இடம்!

அந்த நேரத்தில் அந்த இடம் அமைதியாக இருந்தது.

பொன்னம்பலம் இடுகாட்டை அடைந்தான்.

அப்போது மணி பதினொன்றரை.

குளிர்ந்த நேரமாக இருந்தாலும் பொன்னம்பலத்திற்கு வியர்த்துக் கொட்டியது.

மிதிவண்டியைச் சாலை ஓரத்து மரத்தடியில் நிறுத்திவிட்டு தன் தந்தையின் புதைகுழியை நோக்கி நடந்தான்.

அவன் தந்தையைப் புதைத்திருந்த புதைகுழிமேடு காடு மண்டிக்கிடந்தது. வளர்ந்துள்ள செடிகளையும் புல்லையும் பிடுங்கித் தூய்மைப்படுத்திவிட்டு மீண்டும் மணியைப் பார்த்தான்.

மணி பதினொன்றே முக்கால் ஆகிவிட்டிருந்தது.

தந்தையின் கால் மாட்டில் குந்தி இருந்தபடி வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

“வரவுக்கு ஏத்த செலவு செய்யணும்! கடன் கப்பி வாங்கக் கூடாது! கால் வயித்துக் கஞ்சியானாலும் கடன் இல்லாக் கஞ்சிதான் குடிக்கணும். கடன் வாங்கிக் கடன் கொடுக்காதே. மரம் ஏறிக் கைவிடாதேங்கிற பழமொழியையும் மறக்கக்கூடாது. கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்னு தெரியாமலா சொல்லியிருக்கிறாங்க” என்று அவன் தந்தை சொல்லியிருந்தது அவன் நினைவுக்கு வந்தது.

அவன் கண்கள் கண்ணீரைத் தந்தைக்குக் காணிக்கையாக்கிக் கொண்டிருந்தன.

புதைகுழி மண்ணும் அதை உறிஞ்சி ஏற்றுக்கொண்டது.

மூக்குச் சளியைச் சிந்திவிட்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

“கண்ணியமாக வளர்த்து ஆளாக்கியவருக்குக் கல்லறை கட்டக் கூட முடியலேயே” என்று பக்கத்தில் உள்ள கல்லறைகளைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டான்.

அவனுக்கு அது குறையாக இருந்தது. அடிவானத்தில் மின்னல் பளிச்சிட்டது.

மீண்டும் மணியைப் பார்த்தான்.

பன்னிரண்டு!

சற்றுத் தள்ளிக் கொள்ளிவைத்துக் குடம் உடைத்திருந்த சுவடு தெரிந்தது. அன்றுதான் ஒருவருக்கு அந்த இடத்தில் அமைதி கிடைத்திருந்தது.

அந்த இடத்தில் கிடந்த மண் ஓட்டையும் குச்சிகளையும் எடுத்துக்கொண்டு வந்தான்.

ஓட்டில் குச்சிகளையும், கையோடு கொண்டு சென்றிருநத சுள்ளிகளையும் அடுக்கினான்.

அதற்கு அடியில் சூடத்தை வைத்துத் தீக்குச்சியைக் கொளுத்திப் பற்ற வைத்தான்.

அது பற்றிக்கொண்டதும் வாங்கிச் சென்றிருந்த ‘மான் குட்டி’ யைத் திறந்து தந்தையின் தலைமாட்டில் வைத்தான். அவருக்கும் மான்குட்டி என்றால் விருப்பம்.

வெற்றிலை பாக்கையும் எடுத்துவைத்தான்.

ஊதுவத்தியைக் கொளுத்திப் புதைகுழி மண்ணில் ஊற்றிவைத்துவிட்டுப் பானை ஓட்டில் இருந்த தீயில் சாப்பிராணியை அள்ளிப் போட்டான்.

பனி மூட்டத்தோடு நறுமணப் புகையும் கலந்தது; இடுகாடே மணத்தது.

தாளில் மடித்து கால்சட்டைப் பைக்குள் வைத்திருந்த எண்கள் எழுதப்பட்ட தாள் சுருள்களை எடுத்தான். ஒன்று முதல் ஒன்பதும் பூஜ்யமும் எழுதப்பட்டிருந்தன.

எடுத்து எண்ணிப் பார்த்தான். பத்துச் சுருள்கள் இருந்தன.

குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச்செல்ல அவன் சுருள்களைக் கைக்குள் வைத்துப் பொத்திக்கொண்டு குலுக்கினான்.

அவன் மனத்தில் அவன் தந்தை நிறைந்திருந்தார். அவரை நினைத்துக்கொண்டே குலுக்கிய சீட்டைப் புதைகுழியின் கால்மாட்டில் போட்டு ஒரு சீட்டை எடுத்து விரித்துப் பார்த்தான்.

அவனுக்கு வியப்பாக இருந்தது.

முதலில் எடுத்த எண் தந்தையின் புதைகுழியின் முதல் எண்!

“கடவுளே!” என்றபடி குலுக்கிப் போட்டிருந்த சுருள்களைப் பொறுக்கியெடுத்துக் கைக்குள் வைத்து மீண்டும் குலுக்கிப் போட்டு எடுத்தான்.

அவனுக்கு வியப்புக்கு மேல் வியப்பாக இருந்தது.

புதை குழியின் இரண்டாவது எண் வந்திருந்தது.

மூன்றாவது முறையும் குலுக்கிப் போட்டு எடுத்தான். மேலும் வியப்பு. மூன்றாவது எண்ணும் புதைகுழி எண்ணாக இருந்தது.

“அப்பா! நீங்க தெய்வமாகத்தான் இருக்கிறீங்க அப்பா! புதைகுழி நம்பரெல்லாம் அப்படியே வந்திருக்கப்பா!” என்றான்.

நாலு எண்களுக்கு மேலும் ஓர் எண் தேவைப்பட்டது. புதைகுழி எண் மூன்றுதான்.

“புதைகுழி எண்களை மட்டும் ‘நாலு நம்பர்’ கட்ட முடியாதே! மறுபடியும் குலுக்கிப் போட்டு எடுக்கலாமா வேண்டாமா….” என்று ஆராய்ச்சியில் இறங்கினான்.

மீண்டும் குலுக்கிப்போட்டு எடுப்பதுதான் நல்லது என்று முடிவுக்கு வந்து நாலாவது தடவை குலுக்கிப்போட்டு எடுத்தான்.

பூச்சியம் வந்திருந்தது.

தந்தையின் கால்மாட்டில் மண்டியிட்டு கும்பிட்டான். மண்ணைத் தொட்டு அதைத் திருநீறாக நினைத்து நெற்றியில் இட்டுக்கொண்டு எழுந்தான்.

‘ஊ ஊ’ என்று பேய்க்காற்று வீசியது.

‘சட சட’ என்று மரம் முறிந்தது.

சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்த மிதிவண்டி படாரென்று சரிந்து விழுந்தது.

‘பட பட’ என்று மழைத்துளி நிலத்தில் விழுந்து பள்ளம் பறித்தது.

காற்றை ஊடுருவிக் கொண்டு சாலையை நோக்கி நடந்தான்.

விழுந்துவிடந்த மிதிவண்டியை நிமிர்த்தியதும் ஏறி வீட்டை நோக்கி மிதித்தான். காற்று அவனைப் பின்னுக்குத் தள்ளியது.


வீட்டிலிருந்த அவன் மனைவி, ‘இவ்வளவு நேரம் தங்க மாட்டாரே! எங்கே போயிருப்பார்? மழை வேறே கொட்டுதே’ என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

‘படீர்’ என்று வயிர வாள் வானத்தை வெட்டியது. வானம் இடிந்து விழுந்தது.

காளியம்மை நெஞ்சிலும் இடி விழுந்ததைப்போல் இருந்தது.

‘எங்கேயாகிலும் போய் மனம் வெறுத்து….’ இப்படி அவளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. கவலையோடு நெஞ்சைக் கைகளால் கட்டிக்கொண்டு வாசல் கதவைப் பார்த்தபடி இருந்தாள். அப்போது ‘டொக் டொக்’ என்று கதவைத் தட்டும் ஒலி கேட்டது. விரைந்து சென்று திறந்தாள். அவளுக்குப் போன உயிர் திரும்பிவந்ததைப் போல் இருந்தது.

பொன்னம்பலம் மழையில் தொப்பையாக நனைந்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தான்.

காளியம்மை விரைந்து சென்று கொடியில் கிடந்த துவாலையை எடுத்துக் கொடுத்தாள்.

அவன் தலையைத் துவட்டிக்கொண்டே, “காத்தும் மழையும் பிச்சு வாங்குது! ரெண்டு மூனு இடத்துல ரோட்டுல மரங்கூட விழுந்து கிடக்கு” என்றான்.

“இந்த நேரத்துல, இப்படி மழைகொட்டும்போது எங்கேயத்தான் போயிருந்தீங்க?” என்றாள்.

“இடுகாட்டுக்குத்தான்!”

“இடுகாட்டுக்கா?” என்று பயத்தோடு கேட்டாள்.

அவன் குனிந்து தலையைத் துவட்டிக் கொண்டே அலட்சியமாக, “ம்….” போட்டான்.

“அங்கே ஏனத்தான் போனீங்க?” என்றாள்.

“அப்பா நினைவு வந்துச்சுப் போனேன்!”

“பகலில் போயிருக்கலாமே!”

“பகலில் போய் நாலு நம்பர் குலுக்கி எடுக்க முடியுமா?” என்றான்.

காளியம்மை அவனைப் பார்த்தாள். நாலு நம்பர் பைத்தியம் உங்களைவிடாது போலிருக்கே” என்று சொல்ல நினைத்தாள். சொன்னால் அடி விழும் என்ற பயமும் அவளுக்கு இருந்தது.

மறு நாள் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்தான்.

வரக்கோப்பியைச் சுடச்சுட ஒரு குவளை குடித்து உடம்பைச் சூடாக்கிக்கொண்டு சுற்றுப்புற அமைச்சின் கிளை அலுவலகத்திற்குச் சென்றான்.

பெயரைப் பதிவுசெய்துவிட்டு அவனும் அவன் நண்பர் நாகையாவும் குப்பை வண்டியைத் தள்ளினர். வண்டி”கடகட” என்று ஓடியது.

அவன் நினைவு “நாலு எண்” பரிசுச்சீட்டிலேயே இருந்தது.

“அண்ணே இன்னிக்கு எனக்கு அஞ்சு வெள்ளி வேணும் அண்ணே”

“ஏன்? நாலு நம்பர் எடுக்கவா?”

“ஆமண்ணே”

“எனக்குத்தான் தெரியுமே சனிக்கிழமை வந்தா நாலு நம்பர் பைத்தியம் வந்திடும்ன்னு”

“இந்த நம்பர் இடுகாட்டுல போய் எங்கப்பா புதைகுழியில் குலுக்கி எடுத்த நம்பரு அண்ணே! நீங்களும் அஞ்சு வெள்ளிக்குக் கட்டுங்கண்ணே!”

“இந்தப்பாரு, இதெல்லாம் எனக்கு ஒத்து வராது. உனக்கும் அந்த சுவாப் பயலுக்குந்தான் சரி. அவன் பேச்சைக் கேட்டுக்கிட்டு நீ போய் இடுகாட்டுல நம்பரு குலுக்கி எடுத்திருக்கிறீயே, அந்த நேரத்தில் அந்த இடத்தில் உனக்கு ஏதாச்சும் ஒண்ணு ஆச்சுனா யாராகிலும் உதவிக்கு வர முடியுமா? செத்துத் தெய்வமாக இருக்கிறவருக்கு மரியாதை செய்யுறதை விட்டுட்டு நம்பர் குலுக்கி இருக்கிறீயே! உனக்கு ஏதாச்சும் இருக்கா? பெண்டாட்டி பிள்ளையை நினெச்சுப்பாத்தியா?”

“அவரு செத்துத் தெய்வமாக இருக்கிறதுனாலேதான் அண்ணே போனேன். இந்த நேரத்தில் உதவி செய்வாரு பாருங்க!” என்றான்.

“நீ வேடிக்கையான ஆளா இருக்கிறீயே!”

“குலுக்கி எடுத்த நம்பர் கட்டாயம் வரப்போகுதண்ணே!”

“இந்தப்பாரு பொன்னம்பலம் இதெல்லாம் பைத்தியக்காரத்தனம்! நாலு நம்பரை நம்பாதே! நட்டாத்துல விட்டுடும்! நாலு நம்பரை நம்பிக்கிட்டு நூத்துக்கு இருபது வெள்ளி வட்டி கொடுக்காதே. நல்லது இல்லே!” என்றார் நாகையா.

“ஏதோ வாங்கிட்டேண்ணே. அந்தக் கடனை எப்படியாகிலும் கட்டிவிடணும் அண்ணே” என்றான் பொன்னம்பலம்.

“அதுக்குச் சிக்கனமாகச் செலவு செய். உழைத்து முன்னுக்கு வரப்பாரு!”

“நானும் அப்படித்தானே நினெச்சுக்கிட்டு இருக்கிறேன். இப்ப அஞ்சு வெள்ளி கொடுங்கண்ணே! நீங்களும் எடுங்கண்ணே”

“எனக்கு வேண்டாம். நீயும் கட்ட வேண்டாம்” என்றார் நாகையா.

“அப்புறம் வருத்தப்படுவீங்கண்ணே” என்றான் பொன்னம்பலம்.

பொன்னம்பலம் கெஞ்சிக் கேட்டும் நாகையா மசியவில்லை.

இருவரும் வேலை இடத்தை அடைந்தனர்.

பொன்னம்பலத்திற்கு வேலை ஓடவில்லை.

நண்பர்களைக் கேட்டுப் பார்த்தான். அவர்களும் கை விரித்துவிட்டனர்.

சாப்பாட்டு நேரம் வந்தது.

குப்பை வண்டியை ஓரத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றான்.

“வந்ததும் சோறு போடும்பாரே” என்று காளியம்மை சோறு சமைத்து நெத்திலிக் கருவாடும் உருளைக்கிழங்கும் போட்டுக் கறியாக்கி வைத்திருந்தாள்.

பொன்னம்பலம் வீட்டை அடைந்ததும் வழக்கத்திற்கு மாறாக “அஞ்சு வெள்ளி இருக்கா?” என்று கேட்டான்.

சாப்பாட்டு மங்கு கழுவிக்கொண்டிருந்த காளியம்மை, இல்லையே! என்றாள்.

“நீ எப்பத்தான் இருக்குன்னு சொல்லியிருக்கே. வேலையிடத்திலும் கேட்டுப் பாத்துட்டேன். வறளிப் பயலுங்க இல்லைன்னுட்டானுங்க” என்றான்.

அவன் பார்வை அலமாரிக்கு மேலே வைத்திருந்த பொம்மைச் சேவலில் விழுந்தது.

அந்தச் சேவல் பொம்மை பல முறை அவன் பார்வையில் பட்டும் இருந்தது. ஆனால் இந்த முறை அது தப்புவதாகத் தெரியவில்லை.

அது அவன் கண்ணை உறுத்தியதால் விரைந்து சென்றான்.

எடுத்து முகட்டுச் சட்டத்தில் தட்டினான். கூரையைப் பொத்துக்கொண்டு கொட்டுவதைப் போல் சேவல் பொம்மை உண்டியிலிருந்து காசு கொட்டியது.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய மூத்த மகளுக்குச் சினம் பொத்துக் கொண்டு வந்தது.

“அப்பா! அது நான் சேர்த்த காசு அப்பா!” என்றாள்.

“கவலைப்படாதே! தோடு வாங்கணும்ன்னுதானே காசு சேக்கிறே! நான் திங்கக்கிழமை அன்னிக்கு வாங்கித் தாரேன்” என்று சொல்லிப் பிள்ளையை அமைதிப் படுத்தியபடி காசை எண்ணிப் பார்த்தான்.

பத்துக் காசும், ஐந்து காசுமாக ஏழு வெள்ளிக்கு மேல் சில்லறை இருந்தது. பார்த்துக்கொண்டிருந்த பிள்ளையிடம், ஏதாகிலும் வாங்கித் தின்னு” என்று ஐம்பது காசைக் கொடுத்துவிட்டு நாலு எண் கட்டும் இடத்தை நோக்கி விரைந்தான். அவன் வெளியே சென்ற பிறகு, “கடவுளே இவருக்கு நல்ல புத்தியைக் கொடு” என்றாள் காளியம்மை.


அன்று மாலை.

பொன்னம்பலத்தால் ஓர் இடத்தில் இருக்க முடியவில்லை.

இருப்பதும் நடப்பதுமாக இருந்தான்.

அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். மணி ஆறாகியது.

இருள் கவிந்து பரவியது.

பகல் முழுதும் தூங்கிக் கொண்டிருந்த சாலை விளக்குகளும் கண் விழித்துக் கொண்டன.

‘இனி வந்திடும்’ என்று எண்ணியபடி சாலையை நோக்கி நடந்தான்.

அவன் எதை எதிர்பார்த்துக்கொண்டு சென்றானோ அது அவன் கண்ணில் பட்டது.

சீனச் செய்தித்தாளை ஏற்றிச் செல்லும் மோட்டார் சைக்கிளைப் பார்த்துவிட்டு நடையை எட்டிப்போட்டான்.

“மாப்பிப் போ! மாப்பிப்போ!” என்று சிறுவர்களின் குரலும் கேட்டது.

குறிப்பிட்ட நேரத்தில் விற்க வேண்டும் என்னும் எண்ணத்தில் சிறுவர்கள் சாலையில் குறுக்குமறுக்குமாப் பாடிப் பறந்து விற்றுக் கொண்டிருந்தனர்.

பொன்னம்பலம் விரைந்து சென்றான். சாலைச் சைகை விளக்குக்கு அருகில் சென்றதும் செய்தித்தாளுடன் ஒருவன் ஓடிவந்தான்.

அவனிடம் முப்பது காசைக் கொடுத்துவிட்டு ‘மாப்பிப் போ’ மாலைச் செய்தித்தாளை வாங்கினான்.

முகப்பிலேயே பந்தய முடிவு போட்டிருந்தது. பொன்னம்பலம் ஆர்வத்தோடு பார்த்தான்.

முதல் பரிசுக்குரிய எண் அவன் தந்தையின் புதைகுழி எண்ணாக இருந்தது. அந்த எண்ணைப் பார்த்ததும் தம் தலையில் அடித்துக்கொண்டான்.

தந்தையின் புதைகுழி எண்களுக்குப் பின்னால் இருக்க வேண்டிய பூச்சியம் முன்னால் இருந்தது.

“பூச்சியத்தை முன்னால் போடாமல் விட்டுட்டேனே! இடுகாட்டில் குலுக்கிப் போட்டு எடுத்த போது மூனு நம்பர் விழுந்ததும் அதுக்கு முன்னால் பூச்சியம் போடலாம்ன்னு நினெச்சேனே! பூச்சியத்தை முன்னால் போட்டுக் கட்டியிருந்தா பத்தாயிரம் வெள்ளி கிடைச்சிருக்குமே! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிடுச்சே!” என்று அவன் மனம் ஓலமிட்டது.

அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இரண்டாவது மூன்றாவது பரிசுக்குரிய எண்களைப் பார்த்தான்.

நெருங்கிக்கூட வரவில்லை.

ஆறுதல் பரிசாகிலும் வந்திருக்கிறதா என்று கீழே உள்ள எண்களைப் பார்த்தான்.

மனம் ஆறுதல் அடையவும் வழியில்லாமல் போய்விட்டிருந்தது.

“மாப்பிப் போவும்” அவன் கையிலிருந்து நழுவியது.

அது காற்றுவாக்கில் சாலையில் போய் விழுந்து ஊர்திகளின் சக்கரத்தில் பட்டு நைந்து கொண்டிருந்தது.

அவன் மனமும் நைந்துகொண்டிருந்தது. மாப்பிப் போ, மாப்பிப் போ என்ற சிறுவர்களின் குரலும் தொடர்ந்து ஒலித்தது.

“கறு நாக்குக் காரன் காலையிலேயே சொன்னான்! அஞ்சு வெள்ளி கேட்டதுக்கு அடிக்காதுன்னான். அவன் சொன்னது பலிச்சிடுச்சு!” என்று முணுமுணுத்துக் கொண்டே நடந்தான்.

எதிரே இருந்த விளக்குக் கம்பத்தை அவன் நெருங்க நெருங்க அவனுக்கு முன்னே தெரிந்த அவன் நிழல் அவனை நெருங்கி வந்தது. கம்பத்தை அடைந்ததும் நிழல் தன்னடியில் விழுந்தது. கம்பத்தைக் கடந்து செல்லும்போது மீண்டும் முன்னால் விழுந்தது.

நிலையற்ற நிழலைப்போல் அவன் மனமும் ஒரு நிலையில் இல்லை.

“பூச்சியத்தை முன்னால் போடவில்லையே! பின்னால் போட்டுவிட்டேனே” என்று முணுமுணுத்துக்கொண்டே குடியிருப்பை நோக்கி நடந்தான்.

திங்கட்கிழமையும் வந்தது.

ஆனா ழானா மூனாவும், காவல்கார வங்காளி பாயும் பொன்னம்பலத்தைத் தேடி அவன் வீட்டுக்கு வந்தனர்; வாய்க்கு வந்தபடி பேசினர்.

அண்டைவீட்டுக்காரர்களுக்கும் அவல் கிடைத்தது.

அவர்களின் பேச்சைக் கேட்கும்போது காளியம்மைக்கு வெட்கமாக இருந்தது. “வெளியில் தலைகாட்ட முடியாதே” என்று கவலைப்பட்டாள்.

ஆனால் பொன்னம்பலம் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

அவனுக்குக் குளிர் போய்விட்டிருந்தது; அவன் கையில் “மான் குட்டி”யும் இருந்தது.

– தூண்டில் மீன், முதல் பதிப்பு: சூலை 2001, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Elangkannan 1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய  தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர்     (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *